Wednesday, May 29, 2013

ஈஸி கொண்டைக்கடலை, கத்தரிக்காய்-உருளைக் கிழங்கு குழம்பு

தேவையான பொருட்கள்
ஊறவைத்து முளைகட்டிய கொண்டைக்கடலை -1/4கப் 
வெங்காயம்-1
தக்காளி-2
கத்தரிக்காய்-3
உருளைக் கிழங்கு -1
புளிக்கரைசல்-அரைக்கப் 
சர்க்கரை-1/2டீஸ்பூன் 
கடுகு-1/2டீஸ்பூன்
எண்ணெய் 
உப்பு 
கொத்துமல்லி இலை கொஞ்சம் 
அரைக்க
தேங்காய்த் துருவல் -2டேபிள்ஸ்பூன்
சோம்பு-1டீஸ்பூன்
வரமிளகாய்-4
மிளகு -7

செய்முறை 
அரைக்க வேண்டிய பொருட்களை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும். 
வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
கத்தரி-உருளையை நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். [உருளையை பெரிய துண்டுகளாகவும், கத்தரிக்காயை காம்பு நீக்கி, நான்காக பிளந்து வைக்கவும்.]
குக்கரில் எண்ணெய் காயவைத்து கடுகு போடவும். 
கடுகு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி, காய்கள் மற்றும் ஊறிய கடலையையும் சேர்க்கவும். 
சிலநிமிடங்கள் வதக்கிவிட்டு, புளிக்கரைசல்-தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
புளித்தண்ணீர் நன்றாக கொதி வந்ததும், அரைத்த மசாலா-தேவையான தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும்வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ப்ரெஷர் இறங்கியதும் கொத்துமல்லி இலை சேர்க்கவும். சுவையான கொண்டைக்கடலை-கத்தரிக்காய்-உருளைக் கிழங்கு குழம்பு தயார். சாதம்-இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.


குறிப்பு 
இந்த குழம்பை முளை கட்டாத கொ.கடலை, பட்டாணி இவற்றிலும் செய்யலாம். கருப்பு கொண்டைக்கடலையும் உபயோகிக்கலாம். [கருப்பு கொண்டைக்கடலை குழம்பை காண இங்கே க்ளிக் செய்யவும்.] கடலை மற்றும் காய்கள் மசாலாவுடன் ப்ரெஷர் குக் செய்யப்படுவதால் சுவை அலாதியாக இருக்கும். :)
~~~
கொண்டைக் கடலை குழம்புடன் லன்ச் போட்டோ எடுக்காமல் விட்டிருக்கிறேன்.  என் சாப்பாட்டுத் தட்டைப் பார்க்க ஆவலோடு வரும் ரசிகப் பெருமக்களை ஏமாற்றக் கூடாது என்று...

Wednesday, May 22, 2013

டிட்பிட்ஸ்..

சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் கோர்த்து ஒரு பதிவு. மேலே படத்தில் உள்ளதுதான் இங்கே "கசகசா- poppy seed"என்ற பெயரில் கிடைக்கிறது. என் நினைவுப்பதிவுகளைப் புரட்டினால், கசகசா வெள்ளை நிறத்தில் இருந்த மாதிரி ஞாபகம். இண்டியன் ஸ்டோரில் வெள்ளை கசகசா கிடைக்கிறது என்கிறார்கள், ஆனா எனக்கு கரெக்ட்டா அங்கே போகும்போதெல்லாம் மறந்து போகிறது. ஸோ...இந்தப் படத்தில் உள்ள கசகசா-வை வாங்கலாமா...சமையலுக்கு உபயோகிக்கலாமா? என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்? 
~~
ஒரு நாள் கையில் கிடைத்த காய்களை எல்லாம் வெட்டி, ஒரு ஸ்டிர்ஃபிரை செய்து சப்பாத்தியும் போட்டு, தட்டிலும் வைச்சு, சாப்பிடவும் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டதும் எதோ வித்யாசம் தெரிந்தது..என்னவென்று கண்டுபிடிக்க இன்னுமொரு வாய் சாப்பிட்டதும்தான் தெரிந்தது, காயில் நான் உப்பே போடவில்லை என்பது!!! :)))))  இதுக்கப்புறம் என்ன செய்யறது?!! காய்களில் இயற்கையாவே உப்பு இருக்குமாமே..அதை சுவைத்துப் பார்ப்போமே..காயின் ஒரிஜினல் ருசியும் தெரிந்த மாதிரி இருக்கும் என்றெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டு சாப்பிட்டு முடிச்சுட்டேன். ஹிஹிஹி...
ஸோ...இந்த மாதிரி டிரை காய்கள்ல உப்பு போட மறந்துட்டா என்ன செய்து அட்ஜஸ்ட் பண்ணுவது? சஜஸன் ப்ளீஸ்!!
~~
மார்ச் கடைசியில் நட்ட டேலியாக்கள்..மஞ்சள் பூ முதலில் மலர்ந்திருக்கிறது. மற்ற நிறங்கள் ஆன் த வே!
இந்தம்மா அடுத்த கலர்..இலைகளுக்குள் ஒளிஞ்சிகிட்டிருக்காங்க. :)
 என்னவர் எல்லாப் பூக்களுக்கும் பேர் வைச்சு கூப்பிட்டுகிட்டு இருக்கார். இவங்க இலைக்குள்ள மறைந்திருந்ததால் இன்னும் பேரு வைக்கலை! ;) மஞ்சளும் இந்த நிறமும் நாங்க வாங்கி வந்த டேலியாக்கள். தோழி தந்தவை வேறு நிறங்கள். இப்பத்தான் மொட்டுக்கள் அரும்பியிருக்கின்றன. பூத்ததும் இங்கேயும் வரும். 
~~
அப்பார்ட்மெண்டில் சிலபல மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். டாகி வாக் - புனரமைக்கப்பட்டு, விரிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. புதுசாக 2 க்ரில் வைத்திருக்கிறார்கள். டாகி வாக்-ல புற்கள் சதுரம் சதுரமாகக் கொண்டுவந்து பதிக்கப்பட்டது பார்க்க சுவாரசியமாக இருந்தது. :) 
~~
முழுவட்டமாக பஸிஃபிக் கடலில் இறங்கிக்கொண்டிருக்கும் கதிரவன். நேரில் பார்த்தபொழுது இன்னும் மிக அற்புதமாக இருந்தது.  தினம்தோறும் வானம் நிகழ்த்தும் இந்த வண்ணக் கலவரம் நாங்கள் இதே இடத்தில் இருப்பதற்கு இன்னுமொரு காரணம். :) 
~~

உருளைக் கிழங்கு பொடிமாஸ் - கேரட் பொரியல்- சோறு- கீரை மசியல்.  தட்டு கலர்ஃபுல்லா இருக்கவே படமெடுத்து வைச்சேன்,  திவ்யமாச் சாப்பிடுங்க.
நன்றி!
:)  

Friday, May 17, 2013

புடலங்காய் மசாலா பொரியல்

இங்கே இண்டியன் ஸ்டோரில் புடலங்காய்-அவரைக்காய் இவற்றைப் பார்ப்பது மிகவும் அரிது. அதுவும் இப்படியான கல்கட்டிய புடலைகளைப் பார்ப்பது மிக மிக அரிது. குட்டைப் புடலங்காய்கள் எப்போதாவது வந்தாலும் அவ்வளவு ஃப்ரெஷ்ஷாகவும் இருக்காது. மேலும், சின்னக் காய்களை விடவும் இந்த நீளக்காய்கள்தான் ருசியும் நன்றாக இருக்கும். இவ்வளவு முன்னுரைக்கப்புறம் இந்தக் காயைக் கடையில் கண்டால் வாங்காமல் வரமுடியுமா? 2 காய்களை வாங்கிவந்தேன். வழக்கமாகச் செய்யும் முறையை விட சற்றே மாறுதலாகச் செய்யலாம் என்று முயற்சித்ததை இங்கேயும் பகிர்கிறேன்.

தேவையான பொருட்கள்
புடலங்காய் (தோல் சுரண்டி, சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1கப்
வெங்காயம் (சிறியது)-1
கடுகு-1/2டீஸ்பூன்
உளுந்து பருப்பு-1டீஸ்பூன்
மஞ்சள் தூள்-1/8டீஸ்பூன்
உப்பு
அரைக்க
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
பூண்டு-2 பல்
சோம்பு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
தேங்காய்- கொஞ்சம்

செய்முறை
கடாயில் எண்ணெய் காயவத்து கடுகு-உளுந்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய புடலங்காய், தேவையான உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கிளறிவிட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கடாயை மூடி வேகவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை (தண்ணீரில்லாமல்) கொறகொறப்பாக அரைத்து வைக்கவும்.
புடலங்காய் வெந்ததும், அரைத்த கலவையைச் சேர்த்து கலந்து விடவும். 
காயிலுள்ள தண்ணீர் வற்றி, மசாலாவின் வாசனை அடங்கியதும் பொரியலை அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான புடலங்காய் மசாலா பொரியல் ரெடி. எல்லா வகையான சாதங்களுடன் நன்றாக இருக்கும். 
Recipe Source : Here
~~
மேலே படத்திலிருந்த இரண்டாவது புடலை பின்தொடர்ந்த ஒரு வார இறுதியில் புடலங்காய்-கடலைப்பருப்பு கூட்டாக அவதாரமெடுத்து காலியானது.  தட்டில் இடமிருந்து வலம், முட்டைக்கோஸ் பொரியல், புடலங்காய் கூட்டு, மோர் மிளகாய், பச்சைப்பயறு கடைசல், சோறு, ரசம்(படத்தில் வரவில்லை). எங்க ஃபேவரிட் (சிம்பிள்) வீகெண்ட் லன்ச் மெனு! :)  

Tuesday, May 14, 2013

புத்தம் புது..







புத்தம் புது - என்று தொடங்கும் சில இனிமையான பாடல்களும் எங்க வீட்டுப் புத்தம்புதுப் பூக்கள் மற்றும்  பொன்னிற வேளையும்!!

Friday, May 10, 2013

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம்-11/2கப்
தேங்காய்த் துருவல்-1/4கப்
தேங்காய் எண்ணெய்-2டீஸ்பூன்
சமையல் எண்ணெய்-2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
கடலைப் பருப்பு , உளுந்துப் பருப்பு-தலா 1டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை-1டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
வரமிளகாய்-2
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
சாதத்தை உதிரியாக செய்து ஆறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் + தேங்காயெண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, வேர்க்கடலை என்ற வரிசையில் தாளிக்கவும். 
பருப்புகள், கடலை வறுபட்டவுடன் கீறிய பச்சைமிளகாய், கிள்ளிய வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
சர்க்கரை-உப்பு சேர்த்து, கடாயை அடுப்பிலிருந்து இறக்கி தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
நன்றாக கலந்து விட்டு, சாதத்தை கட்டிகளில்லாமல் உதிர்த்து சேர்க்கவும்.
தேங்காய்க் கலவையுடன் சாதத்தை கலக்கி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
சாதம் லேசாகச் சூடேறியதும் அடுப்பை நிறுத்திவிட்டு மேலும் சில நிமிடங்கள் கடாயை அடுப்பிலேயே வைத்திருக்கவும். 

சுவையான தேங்காய் சாதம் தயார். விருப்பமான பக்க உணவு(களு)டன் சாப்பிடலாம். படத்தில் நீங்கள் பார்ப்பது பருப்புச் சட்னி, கேரட் ப்ரோக்கலி பொரியல் மற்றும் அவித்த முட்டை. 
பொதுவாக தாளித்த சாதத்துக்கு வெங்காயம் சேர்க்காமல் செய்வது எங்க வீடுகளில் வழக்கமில்லை. எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளி சாதம் போன்றவற்றில் வெங்காயம் சேர்க்காமலே செய்யலாம் என்று எனக்கு இணையத்தைப் பார்த்த பிறகே தெரிய வந்தது. [ஆரது அங்கே? சத்தமில்லாமச்  சிரிக்கிறது?? கர்ர்ர்ர்ர்ர்!!]  ஆனாலும் வெகு நாட்களுக்குப் பிறகே எலுமிச்சை-தேங்காய் சாதங்கள் மட்டும் வெங்காயம் இல்லாமல் செய்கிறேன். சுவையும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது, வேலையும் குறைவு. ;) :) வெங்காயம் சேர்த்த தே.சாதம் ரெசிப்பி இங்கே.
ப்ரோக்கலி-கேரட்-துவரம்பருப்பு-தேங்காய் என்று கலர்ஃபுல் பொரியல்.  பொரியலுக்கு பெருங்காயம் தாளிப்பது எனக்குப் புதிதாக இருந்தது. செய்து பார்த்தேன், சூப்பரா இருந்தது பொரியல். ஸ்டெப்-பை-ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பியைக் காண இங்கே க்ளிக்குங்க.

ரெசிப்பி கர்ட்டஸி : நாங்களும் சமைப்போமில்ல? வலைப்பூ. 
பின்குறிப்பு 
கடந்த பதிவு நீளம் கொஞ்சம் ஓவராக இருந்ததாக மேலிடத்தில் இருந்து (எங்க ஊட்டுக்காரர்தேன்! ;)) புகார் வந்தது. இந்தப் பதிவு சுருக்கமாப் போடணும் என நினைச்சு அதையும் இறுதியில் கொஞ்சம் இழுத்துட்டேன், அஜீஸ்;) பண்ணிக்குங்கோ!! நன்றி!

Tuesday, May 7, 2013

உடும்புப் பிடி...

பிடிச்சா உடும்புப் பிடிதான் - என்று ஒரு பழமொழி உண்டு. உடும்பு என்ற பிராணி (பல்லி குடும்பத்தைச் சேர்ந்தது என நினைக்கிறேன். :)) எதையாவது வாயால் கவ்விப் புடிச்சதுன்னா அவ்வளவு சீக்கிரம் விடாதாம். அதனால் அந்தக் காலத்தில் திருடர்கள், எதிரி நாட்டினர்கள் உயரமான மதில்கள், கோட்டைச்சுவர்கள் மீது ஏற உடும்பைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உடும்பின் வாலில்/உடலில்  பலமான கயிறு ஒன்றைக் கட்டி மதில் சுவரின் மீது வீசுவார்களாம். அதுவும் உச்சியில் விழுந்ததும் சுவற்றைப் பற்றிக் கொள்ளுமாம். அதன்பிறகு கயிற்றைப் பற்றிக்கொண்டு திருடர்கள்/எதிரிகள் மதில் மீது ஏறித்தாவி உள்ளே குதித்துவிடுவார்களாம். அதாங்க உடும்பு பிடி என்பது!! :)

சரி, அதற்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால்...நான் ஒரு சம்பவத்தைச் சொல்றேன். அதுக்குமிதுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்களே கண்டுபிடிச்சுக்கலாம், சரியா?!
~~~
காட்சி: 1
நாள் : மார்ச் மாதக் கடைசியில் ஒரு சனிக்கிழமை மாலை
இடம்:  வீடுதேன்! :)
பாத்திரங்கள்: கணவர் & மனைவி
இண்டியன் ஸ்டோருக்குப் போய்விட்டு, கை நிறையப் பைகளுடன் வீடு திரும்பும் கணவர். "உஸ்...ஸப்பாடா!!" என்று பைகளை டைனிங் டேபிள் மீது வைக்கிறார். ஸோஃபாவில் மடிக்கணிணியுடன் ஹாயாக உட்கார்ந்திருக்கும் மனைவி உரையாடலைத் துவக்குகிறார்.

மனைவி: "நான் குடுத்த லிஸ்ட்ல இருந்த சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்தீங்களா?"
கணவர்: ஆமாம்மா..லிஸ்ட்ல ஒண்ணு விடாம எல்லாமே வாங்கிட்டேன் மா!
மனைவி(நம்பிக்கை இல்லாத குரலில்): கோதுமை ரவை?!!
க: வாங்கியாச்..(ஒரு 4பவுண்டு பேக்கட்டை எடுத்து காட்டுகிறார்)
ம: ஆஆ!! இதெதுக்கு இவ்ளோ பெரிய பேக்கட் வாங்கினீங்க? சின்ன பேக்கட் வாங்கிருக்கலாம்ல?
க: தேடினேன், சின்ன பேக்கட் இல்லம்மா..இதான் இருந்துச்சு. கோதுமை ரவை உடம்புக்கு நல்லதுதானே..அதான் பெரிய பேக்கட்டா இர்நுதாலும் பரவால்லன்னு வாங்கிட்டேன்.
ம: ம்ம்...அப்புறம் சேமியா? வறுத்ததான்னு பார்த்து  வாங்கினீங்களா?
க: டடா!!! இதோ, 2 பேக்கட் வாங்கிருக்கேன்! (2 சிறிய பேக்கட்டுகளை எடுத்து காட்டுகிறார்)
ம(டென்ஷனாக): இது பெரிய பேக்கட்டா வாங்க குடாது? குட்டி குட்டியா வாங்கிருக்கீங்க?
க(சுருதி குறைய): பெரிய பேக்கட் இல்லம்மா!
ம:ரஸ்க் வாங்க சொன்னேனே, வாங்கினீங்களா?
க:இதோ...
ம:--------- (அதுவும் ஒரு மெகா சைஸ் பேக்கட்...அவ்வ்வ்வ்)
க:கூடவே வேற என்ன வாங்கி வந்திருக்கேன் பாரேன்!!(ஆவலோடு ஒரு பேகை  எடுத்துக் கொண்டு சோஃபாவுக்கு கொண்டு வருகிறார்)
ம:இந்த ஸ்னாக்ஸ் வாங்கறத நிறுத்தவே மாட்டீங்களா நீங்க? இந்தக் கடைங்கள்ல இருக்கற எல்லாமே சிக்கு வாசம்தான் அடிக்கும். அதைப் போய் மறுபடி மறுபடி..(பார்வை பேகுக்குப் போகிறது)...அதுவும் ஒண்ணுகூட இல்ல...2 பேக்கட்டா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!கிர்ர்ர்ர்ர்ர்ர்!
க:கோவப்படாதம்மா..இது என்னன்னு பார்த்துட்டு அப்புறம் பேச்ச கண்டினியூ பண்ணேன்..(ஒரு பேக்கட்டை எடுத்து காட்டுகிறார்)
ம:ஐ...ஸ்வீட் பனானா சிப்ஸ்!! (மனைவியின் முகம் 1000வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசமாகிறது)
க:ஆமாம்..உனக்கு இது ரெம்ப புடிக்கும் இல்ல? கடைல இதையப் பார்த்ததுமே வாங்கிட்டு வந்துட்டேன்.
ம(கோபம், சிடுசிடுப்பு எல்லாம் மறைந்து போன இனிய குரலில்): நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்க. சிப்ஸ் பாக்கட்டை பிரிச்சுக் குடுங்களேன்..
க:ஒரு மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட்டு காரை எடுத்து, இண்டியன் ஸ்டோர் வரைக்கும் போயி, லிஸ்ட்ல இருக்க சாமான் ஒண்ணு விடாம வாங்கிட்டு வந்திருக்கான், அதைப் பாராட்டாம இது ஏன் பெரிய பேக்கட்? அது ஏன் சின்ன பேக்கட்? -நு தொணதொணத்துட்டு..
ம: சாரிங்க..கோவப்படாதீங்க..சிப்ஸ் பாக்கட்ட பிச்சு குடுங்களேன், ப்ளீஸ்!!
{மனைவி கிச்சன் சிஸர்ஸ் எடுத்து பேக்கட்களை கட் பண்ணுவதே வழக்கம். அதற்கு சோஃபால இருந்து எந்திருக்கணுமே!! அதான் இவ்வளவு ஐஸ்!! :) கணவர் பேக்கட்டை பிரித்து மனைவியிடம் கொடுத்துவிட்டு, லேப்டாப்பை வாங்கிக்கொள்கிறார். ஒரு சிப்ஸை எடுத்து வாயில் போட்ட மனைவி ஏமாற்றத்துடன்..}
ம: என்னங்க, இந்த சிப்ஸ் இனிப்பே இல்ல!!
க:அதெல்லாம் இருக்கும்மா..வேற ஒண்ணு எடுத்து சாப்பிட்டுப் பாரு
இன்னும் சில சிப்ஸ்களை அணில் போல கொறித்துப் போட்ட மனைவி..
ம:இல்லங்க...ஒண்ணு கூட இனிப்பே இல்ல..சாதா சிப்ஸ் மாதிரி உப்பாதான் இருக்கு. (பேக்கட்டை முன்னும் பின்னும் திருப்பி பார்க்கிறார்) ஸ்வீட் சிப்ஸ்னு தானே போட்டிருக்கு?
...என்னங்க, நான் சொல்லிட்டே இருக்கேன், நீங்க பேசாம இருந்தா எப்படி?
(லேப்டாப்பில் மூழ்கியிருக்கும் கணவர்..)
க:ம்ம்ம்...என்னம்மா? அப்ப டார்க் கலரா இருக்க சிப்ஸ்-ஐ டிரை பண்ணிப் பாரேன், அது கண்டிப்பா இனிப்பா இருக்கும்.
ம:ம்ம்..எல்லாம் டிரை பண்ணிட்டோம்..இனிப்பே இல்ல.
க:(கிண்டலாக) உனக்கு நாக்கு சரியில்லையோ? ஹஹா!
ம:(கோபத்துடன்) நீங்களே சாப்பிட்டுப் பாருங்க.. {சிப்ஸ் பாக்கட்டை நீட்டுகிறார். கணவரும் சாப்பிட்டுப் பார்த்துட்டு..}
க: அடடே!! ஆமாம்..இனிப்பே இல்ல!!
ம: ஹுக்கும்...இதுக்குத்தான்  சொல்றது!! இங்க இண்டியன் ஸ்னாக் வாங்காதீங்கன்னா கேக்கறீங்களா? ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிட்டு வந்திருக்கீங்க!! கர்ர்ர்ர்ர்ர்ர்!
 க: சரி போனாப் போகுது விடும்மா..டீ போட்டுக் குடேன்!
ம: நானே சிப்ஸ் இனிப்பில்லாம போச்சேன்னு ஏமாந்து போயிருக்கேன், டீ வேணுமா உங்களுக்கு? {கோபமாக பேக்கட்டை திருப்பி தேடுகிறார்}
க:அங்க என்னம்மா தேடறே?
ம: கஸ்டமர் சப்போர்ட்- மெயில் ஐடி இருக்கும்ல...அதுக்கு மெயில் அனுப்பப்போறேன். இத சும்மா விடப்போறதில்ல!
க:(சிரிப்பை அடக்கிக் கொண்டு)...என்னது?
ம:(சீரியஸாக)..ஆமாங்க..எவ்வளவு ஆசை ஆசையா சிப்ஸ் சாப்பிடப் போனேன்? ஸ்வீட் சிப்ஸுன்னு பேரப் போட்டுட்டு பேக்கட்ல சாதா சிப்ஸை போட்டு வச்சிருக்கானுங்க.
இத நான் சும்மா விடமாட்டேன். இப்பவே மெயில் அனுப்பப்போறேன்.
க: போனா போகுதுனு விட்டுட்டு வேலயப் பார்ப்பியா? அத விட்டுட்டு கம்ப்ளெய்ன் பண்ணப்போறேன்..காமெடி பண்ணப்போறேன்னுட்டு...
{மனைவி சிப்ஸ் பேக்கட்டை ஃப்ரண்ட் அண்ட் பேக் 2 படங்கள் எடுத்துவிட்டு, பாக்கட்டில் மேனுபாக்ச்சரிங் டேட்-எக்ஸ்பயரி டேட் தேடுகிறார். அதுவும் காணப்படவில்லை. கோபம் அதிகரிக்க, 2 படங்களையும் இணைத்து அந்த நிறுவனத்தின் கஸ்டமர் சப்போர்ட் பிரிவுக்கு மெயில் அனுப்பிவிட்டே ஓய்கிறார்}
~~~
காட்சி :2
காட்சி ஒன்றுக்கு அடுத்த நாள் ஞாயிறு காலை
மனைவி காலையில் காப்பியுடன் மெயில் பாக்ஸை செக் செய்துவிட்டு,
ம: ஏங்க..நேத்து நான் சிப்ஸுக்கு கம்ப்ளெய்ண்ட் மெயில் அனுப்பினேனே..
க: (கிண்டலாக)ஆமாம், அதுக்குள்ள பதில் வந்துருச்சா? பரவாயில்லயே!!
ம: இல்லங்க...மெயில் அந்த ஐடிக்கு போகவே இல்லன்னு ஃபெயிலியர் நோட்டீஸ் வ்ந்திருக்கு!
க: (இடி இடியென்று கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு) நாந்தான் அப்பவே சொன்னனே..இந்த ஆகாவழி வேலையெல்லாம் விட்டுட்டு ஆகற வேலையப் பாருன்னு!
ம:(ஏமாற்றத்துடன்)...என்னவோ போங்க..நம்ம காசு தண்டமானதுதான் பாக்கி!
.....
சிலமணி நேரங்கள் கழித்து, மறுபடி மெயில் பாக்ஸை செக் பண்ணும் மனைவி அந்த ஃபெயிலியர் நோட்டீஸ் மெயிலை பார்த்து மீண்டும் கடுப்பாகி, அந்த நிறுவனத்தின்  வலைத்தளத்துக்கே போகிறார். அங்கே "காண்டாக்ட் அஸ்" படிவம் மூலமாக, மெயிலில் அனுப்பிய அதே கம்ப்ளெயிண்டை மீண்டும் டைப் செய்து, "இனிப்பே இல்லாம இனிப்பு சிப்ஸ் செய்யும் உங்கள் நிறுவனத்தைப் பாராட்டுகிறேன்" என்று ஒரு சர்காஸ்டிக் பன்ச்சும் வைத்து அனுப்பிவைக்கிரார். மறந்தும் கூட இது பற்றி கணவரிடம் மூச்சு விடவில்லை.
~~~
காட்சி : 3
கம்ப்ளெயின்ட் மெயில் அனுப்பி 3வது நாள்..அந்த நிறுவனத்தில் இருந்து ஒருவர்(மேலாளர்) பதில் அனுப்பியிருக்கிறார். "தங்களுக்கு நேர்ந்த துரதிர்ஷ்ட வசமான அனுபவத்துக்கு வருந்துகிறோம். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஸோ&ஸோ உங்களைத் தொடர்பு கொள்ளுவார் என்ற ரீதியில் மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த ஸோ&ஸோ-வுக்கும் இதே மெயில் காப்பி அனுப்பப்பட்டுள்ளது.
மனைவிக்கு உற்சாகம் தாங்கமுடியவில்லை. உடனே இந்த மெயிலை கணவருக்கும் ஃபார்வர்ட் செய்து விடுகிறார். பிறகு போன் செய்து வேறு இது பற்றி பிரஸ்தாபிக்கிறார். கணவர் பொங்கும் சிரிப்பை மறைத்த படி மனைவியை உற்சாகப்படுத்துகிறார்.
~~~
காட்சி : 4
ஒரு வீகெண்ட்
க: ஏம்மா...சிப்ஸ் கம்ப்ளெயிண்ட் ஏதோ அனுப்பியிருந்தியே, பதிலெல்லாம் கூட வந்துச்சே..காம்பன்ஷேஷன் ஏதோ அனுப்புவோம்னு அந்த ஆள் சொல்லிருந்தார்னு சொன்னே..ஒண்ணும் காணமே?!
ம: அது...அவங்க பிஸியா இருப்பாங்களோ என்னமோ? ஒரு வாரம் தானங்க ஆச்சு? இந்த வாரம் ரிப்ளை வரும் பாருங்க.
க:மனைவிக்கு தெரியாமல் சிரித்துக்கொள்கிறார்.
~~~
காட்சி : 5
இன்னுமொரு வாரக்கடைசி
க: ஹலோ கம்ப்ளெயிண்ட் ஸ்பெஷலிட்..என்னாச்சு உங்க சிப்ஸ் விஷயம்?
ம: ஹும்ம்ம்..ஒரு பதிலுமே காணமேங்க?!
க: அதெல்லாம் அவ்வளவுதாம்மா..நான் அப்பவே சொன்னேன், நீ தான் கேக்கல. ஆ..ஊன்னு சீன் காமிச்சு மெயில் அனுப்பினே..அத்தோட சரி!  ஒரு விஷயம் எடுத்தா சீரியஸா முடிக்க வேணாமா..பேச்சுக்கு ஒரு மெயில் அனுப்பிவிட்டுட்டு அத்தோட அம்போனு விட்டுட்டியே?
ம: அதெல்லாம் இல்லங்க..நான் மறுபடி அவங்களுக்கு மெயில் அனுப்பி என்ன ஏதுன்னு கேக்கப் போறேன்.
க: (கிண்டலாக)கேளு..கேளு! அப்படியே ஒழுங்கா பதில் வரலன்னா கேஸ் போடுவேன்னும் சொல்லு!!
சிரித்தபடி போகிறார்.
~~~
காட்சி : 6
கணவரின் கிண்டலால் ரோஷத்துடன் எழுந்த மனைவி அந்த நிறுவனத்துக்கும், ஸோ & ஸோ-வுக்கும் சேர்த்து ஒரு மெயிலைத் தட்டிவிடுகிறார். "உங்களிடமிருந்து பதில் வந்தது கண்டு மகிழ்வுற்றேன். ஆனால் 2 வாரங்கள் கடந்தபின்னரும் உங்களிடமிருந்து வேறு ஒரு தகவலும் இல்லை. இப்பொழுதுதான் தெரிகிறது, உங்கள் பதில் கடிதம் ஒரு கண்துடைப்பு என்று. என் காசு போனது போனதுதான். கூடவே என் பொன்னான நேரத்தையும் வீணாக்கி "ஃபாலோ-அப்" மெயில் அனுப்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனி மேலாவது உங்கள் பொருட்களின் தரத்தை கவனியுங்கள், வாடிக்கையாளர் சேவையயும் மேம்படுத்துங்கள். இதற்கு முன் நான் அனுப்பிய மெயில் "ஃபெயிலியர் நோட்டீஸ்" உடன் வந்துவிட்டது." என்று எழுதி, அந்த மெயிலையும் இணைத்து அனுப்பிவைத்து விட்டு விஷயத்தை அத்துடன் மறந்துவிடுகிறார்.
~~~
காட்சி : 7
காட்சி 6க்கு அடுத்த நாள், அந்த நிறுவனத்தின் "ஸோ&ஸோ"-விடமிருந்து ஒரு மெயில் வருகிறது. " தாமதத்துக்கு மன்னிக்கவும், நான் தான் தங்களுக்கு காம்பன்ஷேஷன் அனுப்ப மறந்துவிட்டேன். உங்கள் முகவரியைத் தந்தால் உடனடியாக சிப்ஸை அனுப்புகிறேன்" என்ற மெயில் வருகிறது. அதற்கடுத்த நாள் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து இன்னுமொரு கடிதமும் வருகிறது. தடங்கலுக்கு வருந்துகிறோம். உங்கள் புகாரை சீரியஸாக எடுத்துக்கொண்டு எங்கள் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவோம். தயவு செய்து உங்கள் முகவரியை அனுப்பவும்.- என்று.

மனைவியும் முகவரியை அனுப்பிவிடுகிறார். மறக்காமல் நன்றியையும் தெரிவித்துக்கொண்டுதான்! ;) விஷயத்தைக் கேள்விப்பட்ட கணவர், நீ எதற்கு முகவரியை அனுப்பிவிட்டாய்? என்னுடைய லாயர் உங்களைக் காண்டாக்ட் பண்ணுவார் என சொல்லியிருக்கலாமில்ல? கேஸ் போட்டு ஒன் மில்லியன் டாலர் வாங்கியிருக்கலாம். இப்படி மிஸ் பன்ணிட்டியே என கடுப்பேத்துகிறார் மை லார்ட்! :) :)

அதற்கடுத்த வாரத்தில் அந்த நிறுவனத்திடமிருந்து பார்சல் அனுப்பப்பட்டதாய் மெயில் வந்துவிடுகிறது. கூடவே  "ஸ்வீட் பனானா சிப்ஸில் நாங்கள் அடிஷனல் சர்க்கரை ஏதும் சேர்ப்பதில்லை, பழங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வாங்குகிறோம். சீஸனைப் பொறுத்து பழத்தின் இனிப்பு மாறுபடும், அதனால்தான் சிப்ஸின் இனிப்பும் மாறுபடுகிறது" என்ற விளக்கமும் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து வருகிறது. ஏற்கனவே நொந்து நூடில்ஸ் ஆன மனைவி அமைதி காக்கிறார்.

சிலதினங்களில், யு.பி.எஸ்-ல் இருந்து வந்த பார்சலை எடுத்து வீட்டுக்குள் வைத்த கையோடு கணவருக்கு போனைப் போடுகிறார் மனைவி.
ம: என்னங்க..சிப்ஸ் காரங்க பார்சல் அனுப்பிட்டாங்க..வந்து சேர்ந்துருச்சு.
க: அப்படியா? பரவால்லயே..நிசமாவே அனுப்பிட்டாங்க?! ஹ்ம்ம்ம்..நீதான் மில்லியன் டாலரை மிஸ் பண்ணிட்டே! (சத்தமில்லாமல் சிரிப்பதால் மனைவிக்கு போனில் தெரியவில்லை)
ம:பெரிய பெட்டியாய் இருக்குதுங்க..உள்ள எதாச்சும் பாம்(வெடிகுண்டு) வைச்சு அனுப்பிருப்பானுங்களோ? பயமா இருக்குதே?
க: (சிரிப்பை அடக்க முடியாமல்..சிரித்துக்கொண்டே) ஏம்மா, நாங்கொஞ்சம் பிஸியா இருக்கேன், நீயே பிரிச்சுப் பாரு. இல்லன்னா நான் வந்தப்புறம் பார்க்கலாம்.
ம: சரிங்க. நீங்க வந்த பொறகே பிரிச்சுக்கலாம்.
ஒருவழியாக பெட்டியைப் பிரிக்கிறார்கள். உள்ளே இந்த சம்பவத்தின் கதாநாயகனான சிப்ஸ் பாக்கட் இல்லை!! ஹைதராபாதி மிக்ஸர் 2 பாக்கட்டும், கேரளா ஹாட் மிக்ஸர் 2 பாக்கட்டும் இருக்கிறது. அதனைப் படமெடுத்த மனைவி அந்த நிறுவனத்துக்கு படங்களையும் இணைத்து,  பின்வருமாறு மெயில் அனுப்புகிறார்.
"தாங்கள் அனுப்பிய காம்பன்ஷேஷன் ஸ்னாக்ஸ் கிடைக்கப் பெற்றேன், மிக்க நன்றி.மேலாளர் அவர்களுக்கு: தாங்கள் கூறிய பழங்கள்-இனிப்பு பற்றிய விளக்கத்துக்கு நன்றி.   நான் காசு கொடுத்து பொருளை வாங்குகிறேன். பேக்கட்டில் என்ன பெயர் எழுதியிருக்கிறதோ அதே பொருள் பேக்கட்டின் உள்ளே இருக்கவேண்டும் என்பதுதான் என் (போன்ற வாடிக்கையாளர்களின்) எதிர்பார்ப்பு.  இருந்தாலும், பழங்கள்-இனிப்பு பற்றிய தங்கள் பொறுப்பான விளக்கத்துக்கு நன்றி!" 


க: பாவம் அந்த சிப்ஸ் காரங்க...உனக்கு ஒரு பேக்கட்டுக்கு பதிலா 4 பேக்கட் அனுப்பியிருக்காங்க, அப்பவும் விடாம சிப்ஸ்-மாதிரியே பொரிக்கறியே அவங்கள!!??! 
ம: ஆமாம், உங்களுக்கென்ன தெரியும், பேசாம இருங்க..இவங்களுக்கெல்லாம் இப்படி சொன்னாத்தான் ஆகும். பழம் இனிக்குது, இனிக்கலன்னா அது அவன் பிரச்சனை, எனக்கென்ன வந்துச்சு? ஸ்வீட் சிப்ஸுன்னா இனிப்பா இருக்கணும், தட்ஸ் ஆல்!! 
--சுபம்!!--
ஹைதராபாதி மிக்ஸருங்கோ...தைரியமாச்;) :) சாப்பிடலாம்! ரொம்ப மோசமில்ல, சுமாரா இருக்கு! 
நன்றி, வணக்கம்!
By tha way, இது கதையல்ல, நிஜம்!! :) நாலு டாலர் குடுத்து ஒரு பேக்கட் ஸ்னாக்ஸ் வாங்கினாலும் வாடிக்கையாளர் வாடிக்கையாளர் தானங்க? பழம் இனிப்பில்லைன்னா அந்த சீஸன்ல ஸ்வீட் சிப்ஸ் போடாமல் இருக்கலாம் அல்லவா? அதை விட்டுட்டு இப்படி என் போன்ற அப்பாவிகளை ஏமாற்றுவது சரியா? நீங்களே சொல்லுங்க?!



பி.கு. முதல் படத்துக்கும் பதிவுக்கும் தொடர்பில்லைங்க..காமெடியா எதாச்சும் கார்டூன் படம் போடலாமேன்னு போட்டிருக்கேன். குழம்பிராதீங்க.

Friday, May 3, 2013

கேரஞ்ச் ஜூஸ்

தேவையான பொருட்கள்
கேரட் -1
ஆரஞ்சுப் பழம்(சிறியது)-2
சர்க்கரை-11/2டீஸ்பூன்
தண்ணீர்-1/2கப் அல்லது 3/4கப் 

செய்முறை
கேரட்டை கழுவி துண்டுகளாக்கவும். 
ஆரஞ்சுப் பழத்தைத் தோலுரித்து சுளைகளைப் பிரித்து வைக்கவும். [நான் உபயோகித்த பழங்களில் விதைகள் இருக்கவில்லை. எங்கேயோ ஒன்றிரண்டுதான் இருந்தது. :)]
கேரட் -ஆரஞ்சை மிக்ஸியில் இட்டு அரைக்கவும். 
நன்கு அரைபட்டதும் தேவையான [குளிர்ந்த] தண்ணீர், சர்க்கரை சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் அரைத்து வடிகட்டவும். கண்ணாடி டம்ளர்களில் தேவையான அளவு ஜூஸை ஊற்றி பரிமாறவும். 
குளிர்ந்த தண்ணீர் சேர்த்து செய்திருப்பதால் அப்படியே பருகலாம், அல்லது  ஐஸ்கட்டிகள் சேர்த்தும் பருகலாம். 
பி.கு. : பெயர்க்காரணம்
கேரஞ்ச் = கேரட் + ஆரஞ்ச் 
:) :)  

LinkWithin

Related Posts with Thumbnails