வெகுநாட்கள் முன் டைப் செய்து வைத்திருந்த பதிவு..வெளியிடும் நேரம் இன்றுதான் வாய்த்திருக்கிறது. படித்துப்பார்த்து உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்! :)
~~~
ஆனை ஆனையாம்
அழகர் ஆனையாம்
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனையாம்
கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனையாம்
காவிரித் தண்ணிய கலக்கும் ஆனையாம்
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்
~~~
காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டா
காடைக்குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக்கிளியே பழம் கொண்டா
உத்தமராஜா என் கண்ணே
பத்தரை மாற்று பசும்பொன்னே
இன்னும் பாட்டுப் பாடிடுவேன்
கேட்டுக்கொண்டே உறங்கிடுவாய்!
~~~
காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு முட்டாயாம்
ஏண்டியக்கா அழுகறே..
காஞ்சீபுரம் போகலாம்..
கட்டு முட்டாய் வாங்கலாம்..
பிட்டுப் பிட்டுத் தின்னலாம்..
~~~
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு..
சாயக்கிளியே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு..
மயிலே குயிலே சாந்தாடு...
மாடப்புறாவே சாய்ந்தாடு...
மணிப்புறாவே சாய்ந்தாடு!
~~~
கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு..
~~~
************* இதுவரை உள்ள பாடல்கள் சிறு குழந்தைகளுக்கு (ஐ மீன் லயா வயதுக் குழந்தைகளுக்குப் பாடுவது! :)) பிறந்தது முதல் பாடும் பாடல்கள் நிறைய உண்டு. இப்போதைக்கு நினைவில் உள்ளவை இவை மட்டுமே..சிறுகச் சிறுக கிடைக்கும் பாடல்களை எல்லாம் பதிந்து வைக்கும் ஆசையுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.***********அடுத்து வரும் பாடல்கள் பள்ளிப்பருவத்துப் பாடல்கள்! :)
~~~
அடடா அடடா அண்ணாமல
அண்ணாந்து பாத்தா ஒண்ணுமில்ல
போகப் போக ஜவுளிக்கட
போயிப் பாத்தா இட்லிக்கட
இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்துச்சாம்
ஈரோட்டு மாமனுக்கு கொண்டை வந்துச்சாம்!
~~~~
கதை கதையாம்
காரணமாம்
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு தொக்கடவாம்
தொக்கடவில் ஒரு வைக்கப்புல்லாம்
வைக்கப்புல்லைக் கொண்டு போய் மாட்டுக்குப் போட
மாடு ஒரு படி பால் குடுத்துதாம்
பாலைக் கொண்டுபோய் பால்காரனுக்கு ஊத்த
பால்காரன் ஒரு பணம் குடுத்தானாம்
பணத்தைக் கொண்டுபோய்க் கடைக்காரனுக்குக் குடுக்க
கடைக்காரன் ஒரு தேங்காய் குடுத்தானாம்
தேங்காயைக் கொண்டுபோய் சாமிக்கு உடைக்க
சாமி ஒரு பூ குடுத்ததாம்
பூவைக் கொண்டு போய் ஆத்துல விட
ஆறு ஒரு மீன் குடுத்ததாம்
மீனைக் கொண்டுபோய் பொண்டாட்டிகிட்ட குடுக்க
அவ ஆக்கத்தெரியாதுன்னாளாம்
ஆக்கத்தெரியாதவ அப்படிப்போனாளாம்.
திங்கத் தெரியாதவன் இப்படிப் போனானாம்..
~~~~
எங்கம்மா உங்கம்மா
டீச்சரம்மா
எங்கப்பா உங்கப்பா
தகர டப்பா
எங்கண்ணன் உங்கண்ணன்
வெளக்கெண்ணை
எங்கக்கா உங்கக்கா
முருங்கைக்கா
எந்தம்பி உந்தம்பி
கரன்ட் கம்பி
~~~~
கொக்கே கொக்கே பூப்போடு
கோயிலைச் சுத்தி
பூப்போடு
... இந்தப் பாடலை ஆரம்பப் பள்ளியில் படிக்கும் காலத்தில் பாடுவோம். வானத்தில் கருடன் (அ) பருந்து பறப்பதைக் கண்டால் இந்தப் பாட்டைப் பாடுவது ( கோவையில் ஊருக்குள்ள கொக்கு பறந்து நான் பார்த்ததில்லீங்க! :)) ..பாடினால் கை நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் வருமாம், அதாவது கொக்கு வானத்திலிருந்து பூ போடுவது அதுதான்! என்னவெல்லாம் கற்பனைகள்!!
~~~~
மொட்டைப் பாப்பாத்தி
ரொட்டி சுட்டாளாம்
உப்புப் பத்தலையாம்
கடைக்குப் போனாளாம்
காசு பத்தலையாம்
கடைக்காரனைப் பார்த்து கண்ணடிச்சாளாம்!
~~~~
ஐஸ் ஐஸ் ஐஸ்
அஞ்சு பைசா ஐஸ்
ஆப்பிள் ஜூஸ்
நீ ஒரு லூஸ்!
~~~~~
பருப்பாம் பருப்பாம்
பன்னன்டு பருப்பாம்
சுக்கைத் தட்டி
சோத்துல போட்டு
உங்கப்பன் பேர் என்ன?
முருங்கைப் பூ
முருங்கைப்பூ தின்னவனே
முள்ளாங்கஞ்சி குடிச்சவனே
பாம்புக்கைய மடக்கு
மாட்டேன்
மாட்டேன்னா மாட்டேன்
மாதுளங்கா கோட்டை
கோழி குடலைத் தின்னு
குப்பைத்தொட்டி மண்ணைத் தின்னு
தார் தார் மல்லாண்ட
தாமரப் பூ மல்லாண்ட
பூப்பறிக்கிற நோம்பிக்கு
பூமா தேவி கையெடு!
..இந்தப் பாடல் நான்கைந்து பேர் வட்டமாக உட்கார்ந்து, கைகளைத் தரையில் வைத்துக்கொள்ள ஒருவர் ஒவ்வொரு கையாய்த் தொட்டவாறே இந்தப் பாட்டைப் பாடுவது. கடைசி வரி "கையெடு" வருகையில் யார் கையில் பாடுபவர் விரல் இருக்கிறதோ அவர் அந்தக் கையை எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒவ்வொருவராக கைய எடுத்துவிட்டு வரிசையாக நிற்க, பாட்டு பாடி விளையாடியவர் ஏதோ சில கேள்விகள் கேட்பார். அவையெல்லாம் மறந்துபோய்விட்டது. வீட்டில் யாராவதிடம் கேட்டு அப்டேட் செய்ய முயல்கிறேன்.
~~~
மழ வருது மழ வருது
நெல்லு குத்துங்க..
முக்காப் படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க..
ஏரோட்டற மாமனுக்கு எடுத்து வையுங்க..
சும்மா வாற மாமனுக்குச் சூடு வையுங்க..
~~~
குத்தடி குத்தடி ஜைலக்கா
குனிஞ்சு குத்தடி ஜைலக்கா..
பந்தலிலே பாவக்கா..
தொங்குதடி லோலாக்கு..
பையன் வருவான் பாத்துக்கோ..
பணங்குடுப்பான் வாங்கிக்கோ..
சுருக்குப்பையில போட்டுக்கோ
சும்மா சும்மா நடந்துக்கோ!
~~~
...இப்படியாப்பட்ட பாட்டுகளைப் படிச்சு ஆரும் டென்ஷன் ஆகக்கூடாது..அர்த்தம் கேட்கப்படாது...அமைதியா படிச்சு ரசிச்சு(!) விட்டுப் போகோணும் என கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் பாடிய சின்ன வயசுப்பாடல்களைக் கருத்துப் பெட்டியில் பகிருங்கள் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நன்றி, வணக்கம்!
நாங்களும் இப்படி பாடல்கள் பாடிவிளையாடியிருக்கோம் மகி.
ReplyDeleteஅதில்.. எல்லாரும் வட்டமாக அமர்ந்து கைகளை நிலத்தில் வைத்திருப்போம். ஒருத்தர் ஒவ்வொரு கையா தொட்டு பாடுவார். அந்த பாட்டில் கடைசியா "என்ன " என வரும் அந்த சொல் யார் கையில் முடிகிறதோ அவர் நிறத்தின் பெயர் சொல்ல, நிறத்தின் சொல்லை மட்டும் ஒவ்வொரு எழுத்தா கையை தொட்டு சொல்லனும். யாரில் முடிகிறதோ அவர் கையை மடக்கிவைத்திருக்கனும்.யார் 2கையையும் முதலில் மடக்கிறாரோ அவர் வெற்றி பெற்றவர். அந்த பாட்டு.......
ஓர்... அம்மா.... கடைக்கு... போனா..
ஒரு... டஜன்.... பென்சில்... வாங்கி... வந்தா...
அதன்... நிறம்.. என்ன....? சி...வ..ப்..பு
இது புது விளையாட்டா இருக்கே அம்முலு...பகிர்வுக்கு நன்றி! :)
Delete
ReplyDeleteமறந்து போன சிறுவயது பாடல்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவைத்தற்கு பாராட்டுக்கள்.இப்படி பட்ட பதிவைகளை கண்டிப்பாக ஒரு இடத்தில் சேர்த்து வைக்கவேண்டும் இது எல்லாம் பொக்கிஷங்கள்
ஆமாங்க..அடுத்த தலைமுறை அட்லீஸ்ட் படிச்சுப்பார்க்கவாவது இவை தேவை. பல நாளாக நினைத்து ஒரு வழியா ஓரளவுக்கு கலெக்ட் பண்ணீருக்கேன். நன்றிங்க கருத்துக்கு!
Deleteஇனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...
ReplyDelete:) நன்றிங்க டிடி அண்ணா!
Deleteஅருமையான தொகுப்பு. எப்படி மகி? எனக்கே எல்லாம் மறந்து விட்டது.
ReplyDeleteஐ..இப்புடில்லாம் சொல்லி எஸ்கேப் ஆக்க்கூடாது அக்கா..ஒரு பாட்டாவது பாடுங்க.. ;)
Delete/ஐஸ் ஐஸ் ஐஸ்
ReplyDeleteஅஞ்சு பைசா ஐஸ்
ஆப்பிள் ஜூஸ்
நீ ஒரு லூஸ்! /
கிர்ர்ர்.... எதும் பிரச்சினைனா பேசித்தீர்த்துக்குவோம். அதுக்காகப் பதிவெழுதி, இப்படியெல்லாம் திட்டப்படாது... அவ்வ்வ்வ்
கிக்கி...பானு, ஹேப்பி டு சீ யுவர் கமெண்ட்டுங்கோ..டாங்க்ஸூ!
Delete//ஈரோட்டு மாமனுக்கு கொண்டை வந்துச்சாம்! // ஈரோட்டு மாமனுக்கு பொண்ணு வந்துச்சுனுதான் நாங்களாம் பாடுவோம்..
ReplyDeleteசோறு சோறுங்குதாம் சோத்துக்கு எங்கே போறதுங்குதாம்..அம்மாயி (அம்மிச்சி)வீட்டுக்கு போங்குதாம்..அம்மாயி வீடு எங்கேங்குதாம்..அம்மாயி வீடு இங்கேங்குதாம்...கும்மாயம் கும்மாயம் கும்மாயம் அம்மாயி வீட்டுக்கு தடம் போகுது அப்பிடினு சொல்லிக்கிட்டே குழந்தைய கிச் கிச் மூட்டி சிரிக்கவைக்கும் பாடல் ரொம்ப பிரபலம்.
இந்த பருப்பு பருப்பு பாடலை ஒருப்பட்டான் திருப்பட்டன் கொங்கப்பன் பேரென்ன முருங்கப்பூ முருங்கப்பூ தின்னவே முள்ளாங்கைய கடிச்சவனே பாம்பு கைய படக்குனு நீட்டு...அப்பிடினு பாடுவோம்.
சூப்பர் பதிவு மகி. இந்த கும்மாயம் கும்மாயம் பாட்டை லயாக்குட்டிக்கு டெடிக்கேட் பண்றேன் :))))
~~~~
//இந்த கும்மாயம் கும்மாயம் பாட்டை லயாக்குட்டிக்கு டெடிக்கேட் பண்றேன் :)))//நன்றிங்க அனானி! ஸோ ஸ்வீட் ஆஃப் யூ!
Deleteஈரோடு மாமா பாட்டு என் கணவர் சொன்னது..பொண்ணு வந்துச்சு - மேக்ஸ் சென்ஸ் டூ!! :)
உங்க கும்மாயம் பாட்டு வேற மாதிரியும் பாடுவோம். நீங்க சொல்வது போலவும் பாடுவோம், ஆனால் அது சுத்தமா மறந்து போச்சு. அம்மா கிட்ட கேட்டுப்பார்க்கணும். அடுத்து ஒரு பதிவும் ரெடி பண்ணிகிட்டே இருக்கேன். :) நன்றிங்க!
கொக்கே கொக்கே பூ போடுறது கைய நல்லா சுத்தி அதில எச்ச துப்பிட்டு கழுத்துக்கு கீழ வெச்சுக்கணும். ஒருவேளை பூ பூக்கிறதுக்கு தண்ணி வேணும்னு அப்பிடி செய்யறதா இருக்குமோ :)))
ReplyDeleteகண்ணாங் கண்ணா பூச்சி காட்டுத்தல பூச்சி நல்ல மொட்ட தின்னு போட்டு ஊழ மொட்ட கொண்டுக்கிட்டு ஓடறானே ஓடறானே கொள்ளு வெந்து போச்சுனு எலையறுத்துக்கிட்டு..இந்த பாட்ட சொல்லித்தான் ஒளிஞ்சு விளையாடும் விளையாட்டு. தோழியின் கண்ணை கைகளால் பொத்திக்கொண்டு பாடணும். மத்தவங்களாம் ஓடி ஒளிஞ்சுப்பாங்க.....இரசிச்சு, அனுபவிச்சு,சிரிச்சு படிச்சேன். நன்றி மகி.
அதே அனானிதானே நீங்க? :)
Deleteகொக்கு பாட்டுக்கு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எல்லாம் சூப்பர் போங்க!
கண்ணாமூச்சில கொள்ளு வெந்து போனது இல்லாம மத்த லைன்ஸ் மட்டும் பாடி விளையாடிய நினைவிருக்கு. ஞாபகப்படுத்தியதற்கு நன்றிங்க..இதையும் அடுத்த பதிவில் சேர்த்துடறேன். :)
//அதே அனானிதானே நீங்க? :) //அக்காங் அதே அதே!! 3 விஸ்க்கா உங்கூட்ல கை நனச்சிருக்கேன் :))))
Delete//இப்படியாப்பட்ட பாட்டுகளைப் படிச்சு ஆரும் டென்ஷன் ஆகக்கூடாது.// ம்.. ;) //அர்த்தம் கேட்கப்படாது.// அப்படியே ஆகட்டும்! //அமைதியா படிச்சு ரசிச்சு(!) விட்டுப் போகோணும்// ம். :-)
ReplyDeleteஎனக்கு ஒரு பாட்டு தெரியுமே! சின்னச் சின்ன வாத்து... :-)
எனக்கு ஒரு பாட்டு தெரியுமே! சின்னச் சின்ன வாத்து... :-)//// அஸ்கு..புஸ்கு!! ஒரு வரியெல்லாம் பாட்டாகாது! முழுசாப் பாடுங்கோ றீச்சர்!! ;)
Delete:-)
Deleteசின்ன சின்ன வாத்து.. சிங்கார வாத்து
அங்குமிங்கும் ஓடுது தன் அம்மாவை விட்டு
அம்மா பேச்சைக் கேட்காத சின்ன வாத்து
சிறகை விரித்து சிங்காரமாய் பறந்து போனது
காத்திருந்த பருந்தோ விரைந்து வந்தது
சின்ன வாத்தை கொத்திச் செல்ல பறந்து வந்தது
அம்மா வாத்து ஓடி வந்து சண்டை போட்டது.
தோற்றுப் போன பருந்தோ பறந்து போனது. :)))
சூப்பர். ஆனை ஆனையில் மூன்றாவது வரியாக அழகரும், சொக்கரும் ஏறும் ஆனை என்று சேர்த்துச் சொல்வோம்.
ReplyDeleteபருப்பாம் பருப்பாம் பாடலை மீண்டும் நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றிப்பா.
//கம கம லேடி, கமலா லேடி
ஊஞ்சல் ஆடி ஒரு பணம் ஆடி
மஞ்ச மஞ்ச தோப்பில
மணியக்காரன் தோப்பில
நாலு மஞ்ச கன்னெடுத்த நாயக்காரன் தோப்பில
மாவு கல்லுக்கு சாமி வந்து மாவாடுது
திண்டுகல்லுக்கு சாமி வந்து திண்டாடுது
ரெண்டு மாடு தண்ணிக்குள்ள தத்தளிக்குது
உங்க பொண்ணுக்கு எப்ப கல்யாணம்
நேத்து மத்யானம்
சந்தனப்பொட்டும் குங்குமப்பொட்டும் நெத்திக்கு நல்லாயில்ல
காக்கா கொத்தின கொய்யாப்பழம் வாய்க்கு நல்லாயில்ல//
இது ஏழாங்கல் விளையாடும் போது பாடுவோம்...:)
ஆதி, அது டைப் பண்ணும்போது விட்டுப்போச்சுப்பா..இப்ப பாருங்க, சேர்த்துட்டேன், கூடவே இன்னொரு வரியும்! :)
Deleteகம கம லேடி ஜூப்பர்!! அடுத்த பதிவில் சேர்த்துடறேன். பகிர்வுக்கு நன்றிகள்!
//காசு பத்தலையாம்
ReplyDeleteகடைக்காரனைப் பார்த்து கண்ணடிச்சாளாம்/
கட்டை விரலில் கண் மூக்கு வாய் ஸ்மைலி வரைஞ்சு hanky யால் விரலுக்கு முக்காடு போட்டு விளாடுவோம் :)
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்ததாம் ,
தாத்தா தாத்தா மணி என்னா ,
ஓ...கர்ச்சீப்ல விளையாட்டா?? அதெல்லாம் நாங்க செய்ததில்லை அக்கா..ஒன்லி சிங்கிக்! ;) :)
Deleteஅந்த ஒரு குடம் தண்ணி 12 வரை போகுமே...குட் ஓல்ட் டேஸ்! :)
Two little dickie birds,
ReplyDeleteSitting on a wall;
One named Peter,
One named Paul.
Fly away Peter!
Fly away Paul!
Come Back Peter!
Come Back Paul
I wrote a letter to my mother on the way I dropped it
ReplyDeleteSomeone came and picked it up and put it in his pocket
It isn't you? It isn't you ?
ice cream soda sugar in the tart ..tell me the name of your sweet heart ..ABC.D.E
ReplyDeletejump rope/skipping rope songs :)
சின்ன சின்ன தோசை ,
ReplyDeleteமாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் ,
அக்கா, எல்லாப் பாட்டும் அருமை..நீங்க சொன்ன சில பாடல்கள் (டு லிட்டில் டிக்கி பர்ட்ஸ், தோசை, மாம்பழம்) யு டியூபிலும் இருக்கு. அப்படி இல்லாத பாடல்களையும் கலெக்ட் பண்ணனும்னுதான் இதை ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் பாட்டுக்கள் தெரிஞ்சா சொல்லுங்கோ!! நன்றி!
Deleteஅடடா.. அடடா.. அந்த நாள் ஞாபகம்... அடுக்கடுக்கா பல பாட்டுக்கள் சொல்லிட்டீங்க மகி ஆனா நீங்க சொன்ன பாட்டுக்கள் நாம் பாடியதில்லை...
ReplyDeleteஎனக்கு பாடல்களின்.. ஆரம்பவரிகள் வருது தொடரா வருதில்லை...
மண்ணுக்குள் கல்லைப் புதைச்சுப் போட்டு விளையாடுவோம்ம்..
கீச்சு மாச்சு தம்பலம்
கீயா மாயா தம்பலம்
மாச்சு மாச்சு தம்பலம்
மாயா மாயாத் தம்பலம்...
மாமா வீட்டு முற்றத்திலே
ReplyDeleteமாமரம் ஒன்று நிற்கின்றது
பொன்னைப் போலே பூப்பூக்கும்
பவளம் போலே
பழம் பழுக்கும்
மாமா என்னைக் கூப்பிட்டார்
மாம்பழம் தந்தார்
சாப்பிட்டேன், பொய் சொல்ல மாட்டேன் எப்போதும்
பொய் என்றால் என் கையை மணந்து பாருங்கோ..
என நீட்ட மணக்க வருவினம் மூக்கில் அடிச்சுப் போட்டு ஓடுவது:)
மகி,
ReplyDeleteசேத்து வைங்க சேத்து வைங்க, மலரும் நினைவுகள் வரும்போதெல்லாம் வந்து பாடிப் பார்க்க வசதியாய் இருக்கும்.
யோசிச்சு யோசிச்சு பாக்குறேன், ஒரு பாட்டும் ஞாபகத்துல வரமாட்டிங்கிது ! அதுக்கெல்லாம் ரெண்டு, மூனு பேரா சேர்ந்து விளையாடிட்டே பாடினாத்தான் வரும்போல.
ReplyDeleteஇந்த பாடல்களை பார்த்த பிறகு எனது சிறிய வயது ஞாபகங்கள் நினைவில் வருகின்றது
ReplyDeleteஅருமை!
ReplyDelete