Friday, May 20, 2016

மொச்சைக் கொட்டை குழம்பு / Field Beans Kuzhambu

மழை விட்டும் தூவானம் விடாத கதையாக அவரைக்காய்.... தொடர்கிறது. :))) 
முற்றிய காய்களாகப் பொறுக்கி வந்து, உரித்து கர்நாடகா ஸ்டைல்ல குழம்பு வைப்போம் என மனக்கோட்டையுடன் வாங்கிவந்தேன். உரிச்சு, தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊறவத்த பிறகு, அடுத்த ஸ்டெப்புக்கு போவோம் என அடுத்த லேயர் தோலை உரிக்கப் பாத்தா....ஊஹூம்!! கை நகம்தான் வலிக்குதே தவிர வேற ஏதும் நடக்கலை!!! வெறுத்து போய் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் குக்கரில் போட்டு வேகவைத்து எங்கூட்டு ஸ்டைல்ல குழம்பு வச்சேன், சூப்பரா இருந்துச்சு! ஒய் டோண்ட் யு டிரை??! ;) :) 


போன பாராவில் சொன்ன விஷயங்களுக்கு டெமோ, மேலே உள்ள கொலாஜ்!! ஹிஹி...!! :) சரி, இனி குழம்பு வைக்கப்போலாம் வாங்க!

தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை - கொஞ்சம்
பூண்டு - நாலைந்து பற்கள்
தக்காளி -2
உருளைக்கிழங்கு (சிறியதாக) -1
புளிக்கரைசல் -கால் கப்
கடுகு - 1/2டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை 
வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும். பூண்டையும் உரித்து நறுக்கவும். உருளைக் கிழங்கை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டுவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து , கடுகு தாளித்து மேற்சொன்னவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் வேகவைத்த மொச்சை, நீளவாக்கில் நறுக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
தேங்காயை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துவைக்கவும். கிழங்கு வெந்தவுடன் தேங்காய் அரைத்ததைச் சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அரை டீஸ்பூன் சர்க்கரை (விரும்பினால்) சேர்த்து இறக்கவும். 
இந்தக் குழம்பிற்கு நான் உபயோகித்த சாம்பார்பொடி! :) 
ஊரிலிருந்து மொத்தமாக சாம்பார்ப் பொடி, ரசப்பொடிகள் வாங்கி வந்து ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்துகொள்வேன். சமீபத்தில் சாம்பார் பொடி மட்டிலும் காலியாகிவிட்டது. கலிஃபோர்னியாவில் இந்தப்பக்கம் இன்னும் தென்னிந்திய மசாலாப்பொடிகள் அதிகம் வருவதில்லை. சக்தி மசாலாவின் சில பொடிகளும், ஆச்சி மசாலாவும் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. சக்தி சாம்பார் பௌடர் கிடைக்காததால் ஆச்சி வந்துட்டாங்க. சுவை நன்றாக இருக்கிறது. :))) 

Saturday, May 14, 2016

நாஞ்சில் ரசம்

கொங்கு நாட்டு ரசம் (அதாங்க எங்க வீட்டு ரசம்...!! :) ) வைக்கும் முறை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். வெறும் ரசம்னாலும் சரி, பருப்பு ரசம்னாலும் சரி, அதில தக்காளியை வேகவைத்து கரைத்து ஊற்றிதான் செய்வது வழக்கம். பருப்புடன் தக்காளியை வேகவைத்து எடுத்து கரைத்துக்கொள்வேன், அல்லது தனியாக தக்காளி +புளி வேகவைத்து கரைத்து சாறு எடுத்து ரசம் வைப்பேன். தக்காளி நறுக்கி வதக்கி செய்வதெல்லாம் கிடையாது. சில நாட்கள் முன்பு இந்த ரசம் கண்ணில் பட்டது, வித்யாசமாக இருக்கே, ஒரு நாள் செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்களேன்! 

தேவையான பொருட்கள் 
புளிக்கரைசல் - 1/4கப் (கெட்டியான புளிக்கரைசல்)
தக்காளி -2
கடுகு - 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை  - கொஞ்சம் 
பெருங்காயத்தூள் -1/4டீஸ்பூன் 
எண்ணெய் 
உப்பு 
கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள
வரமிளகாய் -1
கொத்துமல்லி விதை/தனியா -1/2டீஸ்பூன்
சீரகம் -1/2டீஸ்பூன்
மிளகு - 7 
பூண்டு - 3 பற்கள் 
கடுகு -1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன் 

செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் இட்டு..
ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும்.
ரசம் வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து அரைத்த ரசமசாலாவைச் சேர்த்து கிளறவும்.
மசாலா லேசாக வதங்கியதும், பெரிதாக நறுக்கிய தக்காளித் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கி மேல் தோல் லேசாக பிரிந்து வரும்போது புளிக்கரைசலை சேர்க்கவும்.
சுமார் ஒன்று -ஒன்றரை கப் தண்ணீரும் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
ரசம் சூடாகி நன்கு நுரை கட்ட ஆரம்பித்ததும்  பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை-கொத்துமல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து ரசத்தை கலக்கி விட்டு இன்னும் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். 

சுவையான, தக்காளி மிதக்கும் ரசம் தயார். :) 

குறிப்பு 
பூண்டுக்கு தலையையும், வாலையும் கிள்ளினால்:) போதும், தோலுரிக்க தேவையில்லை. பூண்டுத்தோல் எண்ணெயில் வதங்கி நல்ல வாசனையைக் கொடுக்கும். 
தக்காளியைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும். ரசத்தில் தக்காளித் துண்டுகள் மிதக்க வேண்டும், ஜாக்கிரதை!! ;) 

ஒரிஜினல் ரெசிப்பி : இங்கே

சாப்பிட வந்த எங்கூட்டுக்காரர் ரசத்தைக் கண்டு ஜெர்க் ஆகி என்னதிது என்று கேட்டு, "ரசம்" என்ற பதிலைப் பெற்று, நம்பிக்கை இல்லாமல் சுவைத்த பிறகு, "நல்லா இருக்கே!" என்ற சர்டிஃபிகேட்டும் கொடுத்து விட்டார். என்ன செய்ய? இத்தனை வருஷமா நாங்க வைக்கிற ரசம் இப்படி இருக்காதுல்ல?? ;) :) இந்த ரசத்தை பற்றி செய்முறை கொடுத்த சாந்தி அக்கா ரொம்பச்சுவையா எழுதிருப்பாங்க. நேரமிருக்கையில் கண்டிப்பாக படித்துப்பாருங்க. 

Tuesday, May 10, 2016

வண்ண வண்ண பூக்கள்!

இந்த வருட வசந்தத்தில் எங்க வீட்டில் பூத்த வண்ணப்பூக்கள் இந்தப் பதிவில்!  :) 








எல்லா வேலையையும் பூக்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று எழுதாமல், வெறும் படங்களை மட்டுமே கொண்டு இந்தப் பதிவு! பார்த்து ரசியுங்க! நன்றி! 

Tuesday, May 3, 2016

அவரைக்காய் பொரியல்

அவரைக்காய், எனக்கு மிகப் பிடித்த காய். யு.எஸ். வந்த இந்த சிலபல வருடங்களில் சுத்தமாக மறந்து போனகாய்..இங்கே அவரைக்காய் எப்பொழுதாவதுதான் கிடைக்கும், அதுவும் கோவையில் ருசித்த அவரைக்காய்க்கு கிட்டத்தில் வரவே முடியாத காய். இந்த 9 வருடங்களில் ஓரிரு முறைதான் வாங்கியிருக்கிறேன். இந்த முறை கொஞ்சம் சுமாராக இருந்ததால் வாங்கிவந்து இங்கே பதிவிட்டு மனதை ஆற்றிக்கொள்கிறேன்! ;) :) 

இணையத்தில் துழாவியபோது கிடைத்த படங்களின் கொலாஜ் அடுத்து வருவது..இதில் முதல் மற்றும் இரண்டாவது படத்திலிருக்கும் அவரைகள் வீட்டில் வளர்த்திருக்கிறோம். மூன்றாவது படத்தில் இருப்பது சற்றே பட்டையான திக்கான அவரைக்காய்.."கோழி அவரை" [பெயர்க்காரணமெல்லாம் கேக்கப்புடாது..எனக்கு தெரியாது...அவ்வ்வ்] என்று சொல்லுவோம், அதுவும் வீட்டில் வளர்த்த நினைவு இருக்கிறது.  கடேசியா இருக்கே, அகலமான அவரைக்காய்...தட் இஸ் மை ஃபேவரிட் யு ஸீ!! :))) 

அவரைக்கொடிகளை வீட்டில் இருந்த வேப்ப மரத்தடியில் ஊன்றி மரத்தைப் பற்றி மேலே ஏறிக்கொள்ளும். பக்கத்துவீட்டிலிருந்த மகேஷை [அது மகேஷ்குமார்...!! ;)] கூப்பிட்டு மரத்தின் மேலே ஏறி காய் பறிக்கச் சொல்லுவாங்க வீட்டில். அவருக்கும் [இப்ப அவன் என்றால், அவன் பையன் என்னை அடிக்க வந்திடுவான்!!  ;)) ] எட்டாத காய்கள் மரத்தில் மேலே கொடியிலேயே தங்கி முற்றி காய்ந்து விதைகள் கீழே உதிரும். தினமும் வேப்ப மரத்தடியில் அவரை விதை பொறுக்கிவைப்போம்.ஹூம்...அது ஒரு அழகிய கனாக்காலம்!! 

இதோ எனக்கு கிடைச்ச அவரைக்காயைப் பாருங்க..
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை!! :p 

தேவையான பொருட்கள் 
அவரைக்காய் - 150கிராம்
வெங்காயம் - கொஞ்சம் 
பச்சைமிளகாய் -2
கறிவேப்பிலை-கொஞ்சம்
கடுகு -1/2 டீஸ்பூன் 
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1/4டீஸ்பூன் 
தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை
அவரைக்காயை கழுவி, தலையையும்-வாலையும் கிள்ளி நார் எடுத்து வைக்கவும். 
சுத்தம் செய்த அவரைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். 
வெங்காயம் - பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு -உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் -ப.மிளகாய் -கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய அவரைக்காயையும் சேர்க்கவும். 
காயைப் பிரட்டி விட்டு, லேசாகத் தண்ணீர் தெளித்து வேகவிடவும். 

காய் வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். சுவையான அவரைக்காய் பொரியல் தயார். சாம்பார் -ரசம்- தயிர் சாதங்களுடன் சரியான ஜோடி!

LinkWithin

Related Posts with Thumbnails