Wednesday, June 30, 2010

ரசித்து ருசித்தவை-1

இன்று மற்ற வலைப்பூக்களிலிருந்து நான் ரசித்து சமைத்து,ருசித்த குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன். வானதி,ஆசியாக்கா,மேனகா,கீதா இந்த சுவையான குறிப்புகளை பகிர்ந்ததற்கு நன்றி!!

இவை எல்லாம் இப்பொழுது அடிக்கடி எங்க வீட்டு சமையலில் இடம் பிடிப்பவை..குறிப்பாக ஆசியாக்காவின் பீன்ஸ் பொரியலும், வானதியின் வாழைக்காய்-கத்தரிக்காய் வறையும் என் கணவருக்கு மிகப் பிடிக்கும்.

வானதியின் முட்டைசொதி


வாழைக்காய்கத்தரிகாய் வறை

குஸ்-குஸ் உப்மா

ஆசியாக்காவின் பீன்ஸ்பொரியல்

அவரது வறுத்தரைத்த பூண்டுகுழம்பும் செய்திருக்கேன்..புகைப்படம் எடுக்கவில்லை..அப்புறம் எம்டி சால்னா ஏற்கனவே தனிபதிவு போட்டுட்டேன்.:)

மேனகாவின் கத்தரிக்காய் சாதம்

கீதாவின் பார்லி இட்லி

கீதாவின் அவசரசாம்பாரும் செய்து ருசித்திருக்கேன்,புகைப்படம் எடுக்கலை..

சமைக்கும் முறை,கைப்பக்குவம் இதெல்லாம் ஆளுக்கு ஆள் மாறுபடும்..அப்படி மற்றவர்களின் சமையல் குறிப்புகளை சமைத்து ருசிக்கையில் ஒரு மகிழ்ச்சி..இந்த குறிப்புகளைத் தந்தவர்களும் சந்தோஷப்படுவார்கள்..அதற்காக இந்தப் பதிவு! :)

Monday, June 28, 2010

ராவணனும்,சனி பகவானும்..



ஜூன் 18ஆம் தேதி..'ராவண்'(ஆமாங்க,ஹிந்திதான்..என்னவரின் ஆபீஸில் பெரும்பாலானவர்கள் வட இந்தியர்கள்..அதுவுமில்லாமல், எங்க வீட்டுப்பக்கத்து தியேட்டரிலும் ஹிந்தியில்தான் ரிலீஸ் பண்ணினாங்க) நூன் ஷோ-விற்கு போனோம். பாடல்களைக் கேட்டு அதிகம் எதிர்பார்த்துவிட்டோம் என்ற உணர்வைத் தந்துவிட்டது படம்..ரசித்து ரசித்து கேட்ட பாடல்கள் ஒன்று கூட முழுதாய் வந்தமாதிரி தெரில..வட இந்திய கிராமப்புறங்கள்,மக்கள் இதுவும் மனதிற்கு ஒட்டல..ஏமாற்றம்..ஏமாற்றம்!!

ஏமாற்றத்துடன் வெளியே வந்தோம்..வீட்டிற்கு போக மனமில்லை..அங்கிருந்து அப்படியே ஒரு பீச்சிற்கு போனோம்..அலையடிக்கும் பஸிபிக் கடலை பார்க்கும்வரை, படம் இப்படி இருந்துட்டதேன்னு புலம்பிட்டே இருந்தேன்.
கடற்கரையில் அரைமணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.ஏமாற்றத்துக்கு மருந்திடுவது போல, ஒரு டால்பின் ஜோடி கடலில் துள்ளித் துள்ளிக் குதித்துச் சென்றது. (கேமரா எடுத்துட்டுப் போகாததால், நோ போட்டோஸ்)

அன்று அருகிலிருந்த ஒரு பார்க்கில் 'அஸ்ட்ரானமி நைட்'. அஸ்ட்ரானமர்ஸ் க்ளப்-ல இருந்து அஸ்ட்ரானமர்ஸ் மாலை ஏழிலிருந்து ஒன்பதரை மணிவரை
தத்தம் டெலஸ்கோப்புகளுடன் வந்து கோள்கள்,நட்சத்திரங்கள் இவற்றையெல்லாம் பொதுமக்கள் பார்க்க உதவுவார்கள்.அங்கு வருபவர்கள் எல்லாருக்கும், குக்கீ,ஜூஸ் என்று கொடுத்தார்கள்..சாப்பிட்டு முடிக்கும்பொழுது மெதுவே இருட்டத் தொடங்கியிருந்தது..ஏழெட்டு பெரிய டெலஸ்கோப்புகளை செட் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

வானில் மேற்கில் வீனஸ்..அதிலிருந்து கொஞ்சம் தொலைவில்(!!??) மார்ஸ்..அடுத்து சாடர்ன், அமாவாசை முடிந்து சரியாக பதினைந்து நாட்கள் ஆனதால் அழகான அரைவட்டமாக நிலவு..இப்படி அணிவகுத்திருந்தன.

இதுவரை நான் இரவு வானத்தில் நட்சத்திரங்களைப் பார்ததில்லை..அதனால் பல தகவல்கள் எனக்கு புதியதாய்த் தெரிந்தன.வானில் நட்சத்திரங்கள் மின்னுமாம்..கோள்கள் மின்னாமல் ஒளி வீசுமாம்.அதை வைத்து கோள்களை அடையாளம் காணலாம் (இது என் கணவர் சொல்லித்தான் எனக்கு தெரியும்.என்னைப்போல அதிபுத்திசாலிகளுக்கு இந்த தகவல்..இது தெரிந்தவங்கள்லாம், முறைக்காம கன்டினியூ பண்ணுங்க.:) )

என்னென்ன பார்க்கப்போகிறோம் என்று ஒரு அஸ்ட்ரானமரிடம்(தமிழ்-ல என்ன சொல்லுவதுன்னு பிடிபடல..அட்ஜஸ்ட் பண்ணிகோங்க) கேட்டோம்..வீனஸ்,மார்ஸ்,சாடர்ன்,மூன் மற்றும் ஒரு சில நெபுலாஸ்(நட்சத்திரக் கூட்டங்கள்) எல்லாம் பார்க்கப்போகிறோம்..ஒரொரு டெலஸ்கோப்பும் ஒரொரு இடத்தில் போகஸ் பண்ணுவோம் என்றார்.

ஜூபிடர்,நெப்டியூன் இவற்றையெல்லாம் பார்க்க முடியாதான்னு கேட்க, அதோ அங்கே பாருங்க,தெரியும் என்று எதிர்புறம் கைகாட்டினார்..நாங்களும் அங்கு ஏதாவது டெலஸ்கோப் இருக்கிறதோ என்று சீரியஸா திரும்பிப் பார்க்க, சிரித்துக்கொண்டே அந்த ப்ளானட்ஸ் எல்லாம் வெகு தொலைவில் இருக்கு..அதிகாலை ரெண்டு மணி வாக்கில்தான் பார்க்கமுடியும் என்று ஜோக் அடித்தார்.(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

அங்கிருந்த அஸ்ட்ரானமர்ஸ் எல்லாரும் குழந்தைகள் முதற்கொண்டு எல்லாரும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாய்,விளக்கமாய் பதில் சொன்னார்கள்..மக்களும் ஒவ்வொரு டெலஸ்கோப் அருகிலும் கியூவில் நின்று ஒவ்வொருவரும் நிதானமாக கோள்களை கண்டுகளித்தார்கள்.

வெள்ளி(வீனஸ்)
விடிவெள்ளி..இது மாலையில் நிலவு தோன்றும் முன்னரே மேற்கில் தோன்றும்,காலையில் சூரியன் உதிக்குமுன்னர் கிழக்கில் தெரியும்..டெலஸ்கோப்பில் பார்த்தபொழுது, அதிக பிரகாசத்துடன் நிலவின் வடிவில்தான் தெரிந்தது.

செவ்வாய்(மார்ஸ்)
ரெட் ப்ளானட் என்று அழைக்கப்படும் இந்த செவ்வாய் டெலஸ்கோப் வழியே பார்க்கும்போது பளீரென்று, கிட்டத்தட்ட ஆரஞ்சு நிறத்தில், ஒரு நிலா சைஸில்தான் தெரிந்தது.

சனி(சாடர்ன்)
வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளான சனி..மாசுமறுவில்லாத வெள்ளை நிறத்தில் ஒரு வட்டம்..அதனைச் சுற்றி வளையங்கள்..வலப்புறமும் இடப்புறமும் இரண்டு நட்சத்திரங்கள் சைஸில் இரண்டு வெளிச்சப்புள்ளிகள்..அவைதான் டெலஸ்கோப்பில் நம்மால் பார்க்க முடியும் இரண்டு நிலவுகள்.
இந்த கிரகத்துக்கு இருக்கும் நிலவுகளின் எண்ணிக்கை 62. இதிலே இரண்டு நிலவுகள்,அதிகபட்சம் மூன்று நிலவுகள் மட்டுமே டெலஸ்கோப்பில் பார்க்கும்பொழுது தெரிகின்றன.மேலதிக தகவலுக்கு இங்கே க்ளிக் பண்ணிப் பாருங்க.

சந்திரன்(மூன்)
சூரியன் மறைந்தபின்னர், தன் பாலொளியால் பூமியைக் குளிப்பாட்டிய நிலவை க்ளோஸ்-அப்ல பார்க்கப்போகிறோம் என்று ஆவலோடு பார்த்தால்..அந்த அரைவட்டம் முழுவதும் சொறி-சொறியாய்(!!) மேடும் பள்ளங்களும்!!

நாங்கள் பார்த்த டெலஸ்கோப் 120 மடங்கு உருப்பெருக்கிக் காட்டும் திறனுள்ளதாம்.வெறும் கண்களால் பார்க்கையில் அழகு பொலியும் நிலா, அருகில் சென்று பார்த்தால்...அத்தனை அழகும் போய் வெறும் வெள்ளைப் பாறையாய்த் தெரியுது.

நெபுலா

இவை பலமில்லியன் நட்சத்திரங்கள் சேர்ந்த நட்ச்சத்திரக்கூட்டங்கள்தான் இந்த நெபுலாஸ்.டெலஸ்கோப் வழியே பார்க்கையில் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன.

அன்றைய இரவின் ஹீரோ சனிபகவான்தான்..ஏனென்றால், வீனஸ்,மார்ஸ் இரண்டு கோள்களுமே சிறிய சந்திரன் வடிவில்தான் தெரிந்தன..நிலா..அதன் மேல் யாரும் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை..தொலைநொக்கி வழியே பார்க்கையில், சுற்றிலும் காற்று வளையங்களுடன், கண்ணைக்கவரும் பால்வெள்ளை நிறத்தில், இரண்டு நிலவுகளோடு காட்சிதந்து சிறுவர்முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது சனிதான்..இப்படி ஒரு கோளிற்கு காக்கை வாகனம் தந்து உருவமும் தந்த நம் முன்னோர்கள் திறமை/ நம் வானசாஸ்திரத்தின் பெருமையை எப்படி சொல்வது என்று தெரியவில்லை..


புதிதாய் ஒரு ப்ளானட்டைப் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தரும் சனி-யின் வித்தியாசமான வளையங்களுடன் கூடிய உருவத்தைத்தான் பெரும்பாலான அஸ்ட்ரானமர்ஸ் ஃபோகஸ் செய்து வைத்திருந்தார்கள். வந்திருந்த எல்லாரும் சனிபகவானைத்தான் ஆர்வம் குறையாமல், வெவ்வேறு கோணங்களில் ரசித்தோம்.

இவ்வளவு பெரிய வளிமண்டலம்..பலகோடி நட்சத்திரங்கள்..பூமியைப் போல பலமடங்கு பரப்புள்ள கோள்கள்..

இந்தப் புகைப்படத்தில் மற்ற கிரகங்களுடன் ஒப்பிடுகையில் பூமி எவ்வளவு சிறியதாய் இருக்கிறது பாருங்கள்! நமது பால்வெளி மண்டலம் போல பலநூறு மண்டலங்கள் கொண்ட இந்த யுனிவர்ஸ்-இன் முன்னே நாம் எவ்வளவு சிறிய தூசு என்பதைப் புரியவைத்த ஒரு நிகழ்வாய் இருந்தது இந்த ஸ்கை வாட்ச்சிங்!

ராவண் பார்த்து புண்பட்ட மனதை சனிபகாவான் சரியாக்கிவிட்டார்.:) ஆனால் இதன் பின்விளைவாக இங்கே ஒருவர் நான் ஒரு பைனாகுலர்,இல்லல்ல,ஸ்பேஸ் டெலஸ்கோப் வாங்கப்போகிறேன் என்றும், நீங்க எப்படி வாங்கறீங்கன்னு பார்த்திடறேன்னு இன்னொருவரும் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு தேவையில்லாத ஒரு அதிகபட்சத் தகவல்.ஹிஹி!
குறிப்பு
பீச் போட்டோ மட்டுமே(முன்பொருமுறை அதே பீச் சென்றபொழுது) எங்கள் கேமராவில் எடுத்தது..மற்ற படங்கள் உதவி:கூகுள் இமேஜஸ்

Thursday, June 24, 2010

சால்ஸா சாஸ்

தேவையான பொருட்கள்
வெங்காயம்(பெரியது)-1
தக்காளி(மீடியம் சைஸ்)-4
பச்சைமிளகாய்-4
காய்ந்தமிளகாய்-2
புதினா-7இலைகள்

தனியா-1ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/4ஸ்பூன்
மல்லித்தூள்-1/2ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
எண்ணெய்-சிறிது
உப்பு

செய்முறை
வெங்காயம்,மிளகாய்,தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
மிக்ஸியில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் போட்டு, நாலைந்து முறை பல்ஸ்-ல் அரைக்கவும். இறுதியாக எண்ணெய் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஸ்பைஸி சால்ஸா ரெடி..சிப்ஸ்,கட்லட்,போண்டா,பஜ்ஜி இவற்றுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.
இதிலே காய்ந்த மிளகாயை தவிர்த்து, காரத்துகேற்ப பச்சை மிளகாயை சேர்த்து,அத்துடன் நாலைந்து ஸ்பினாச் இலைகளையும் சேர்த்து அரைத்தெடுத்தால் க்ரீன் சால்ஸா தயார்.
வெங்காயம்,தக்காளி,மிளகாயை முடிந்தளவு பொடியாக நறுக்கவேண்டும்.அரைத்தெடுக்கும்போது எல்லாப்பொருட்களும் ஒன்றும்-பாதியுமாக மட்டுமே அரைபட்டிருக்கவேண்டும்..இல்லையெனில் சால்ஸா சட்னி ஆகிவிடும்! :)


முக்கிய குறிப்பு
இந்த சால்ஸா-வை ஒவ்வொரு முறையும் செய்வது என் கணவர்தான்.ரெசிப்பியும் அவர் சொல்லியதுதான்.டைப்பிங்,போட்டோஸ் மட்டுமே நான் செய்தது.

(இந்த ரெசிப்பியை நானே தான் அவரிடம் கேட்டு ப்ளாக்ல போட்டிருக்கேன்..அவரா போடச் சொன்னாருன்னு யாரும் தவறா நினைச்சுடாதீங்க... :) :) : ) )

Tuesday, June 22, 2010

வெஜிடபிள் பிஸ்ஸா

டாப்பிங்
பிஸ்ஸா சாஸ் - 1/2கப்
மொஸரெல்லா சீஸ்-1/2கப்
நறுக்கிய வெங்காயம்,தக்காளி,குடைமிளகாய்,வெள்ளரி மற்றும் விருப்பமான காய்கறிகள் - சிறிது

பிஸ்ஸா பேஸ்
ஆல்பர்ப்பஸ் ப்ளோர்-2கப்
ஏக்டிவ் ட்ரை யீஸ்ட்-1டீஸ்பூன்
ஆலிவ் ஆயில்-2டீஸ்பூன்
சர்க்கரை-1டேபிள்ஸ்பூன்
உப்பு-1டீஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர்-1கப்

செய்முறை
ஒரு கப்வெதுவெதுப்பான நீரில் யீஸ்ட்,சர்க்கரை,உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் (சற்றே சூடான இடத்தில்) வைக்கவும்.
மாவுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, நுரைத்திருக்கும் யீஸ்ட் கலவையை சிறிதுசிறிதாக ஊற்றி பிசையவும்.
மாவு கெட்டியாக இல்லாமல், தளர இருக்கவேண்டும். பிசைந்த மாவின்மீது சிறிது ஆலிவ் ஆயில் தடவி,ஈரத்துணியால் மூடி இரண்டு மணி நேரம் (சற்றே சூடான இடத்தில்) வைக்கவும்.
மாவு நன்கு உப்பியிருக்கும்.


மாவிலிருக்கும் காற்று குமிழ்கள் மறையும்படி நன்றாகப் பிசைந்து மீண்டும் ஒருமணிநேரம் வைக்கவும்.மாவு திரும்பவும் சற்றே அதிகரித்திருக்கும். அதனை மீண்டும் நன்றாகப் பிசைந்து, சப்பாத்திக்கட்டையால் தேவையான வடிவத்துக்கு தேய்க்கவும்.
தேய்த்த பிஸ்ஸா பேஸை பேக் செய்யும் பானில்(நான் கேக் பேக்செய்யும் பான்தான் உபயோகித்தேன்) வைக்கவும்.பிஸ்ஸாவின் விளிம்பில், ஒருஇன்ச் இடம் விட்டு, பிஸ்ஸா சாஸை சீராக தடவி, டாப்பிங் பொருட்களை அடுக்கவும்.

இறுதியாக சீஸை பிஸ்ஸா முழுவதும் தூவி, ஓரங்களுக்கு ஆலிவ் ஆயில் தடவிவிடவும்..350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

ஹோம்மேட் பிஸ்ஸா ரெடி!

பிஸ்ஸா சூடாக இருக்கும்போதே கட்செய்துவைக்கவும்.ஆறிவிட்டால் கட்செய்வது கஷ்டம்.

யீஸ்ட் சேர்த்து சமைப்பதுக்கு தைரியம் வராமலே இருந்தது.. இது என் முதல் முயற்சி! :)

Monday, June 21, 2010

கத்தரிக்காய்-உருளைக்கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய்-5
உருளைக்கிழங்கு(சிறியது)-1
வெங்காயம்-சிறிது
பச்சைமிளகாய்-1
மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
தேங்காய்த்துருவல்-2ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
க.பருப்பு,உ.பருப்பு-தலா 1/2ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
கத்தரி,உருளையை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாய் நறுக்கிவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து,கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து, வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கத்தரி,உருளை,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தேவையான உப்பு சேர்த்து,கொஞ்சமாய் தண்ணீர்தெளித்து வேகவிடவும்.

காய்கள் வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்தப் பொரியல் அரிசிம்பருப்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்..பச்சைப்பயறு அல்லது எல்லாவிதமான பருப்பு கடைசலுடன் சாப்பிடலாம்..வெரைட்டி ரைஸ்-க்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு
விரும்பினால் உருளைக்கிழங்கின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.(என்னவருக்கு பிடிக்காது,அதனால் கொஞ்சமாய் சேர்ப்பேன்)
மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்க்காமல், காரத்திற்கேற்ப பச்சைமிளகாயின் அளவை அதிகரித்தும் இந்தப் பொரியலை செய்யலாம்.
சின்னவெங்காயம் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

Wednesday, June 16, 2010

ஒரு பொன்மாலைப்பொழுது..


இது ஒரு பொன்மாலைப் பொழுது..
வானமகள் நாணுகிறாள்..
வேறு உடை பூணுகிறாள்!

இந்தப் பாடலை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது..எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத எவர்க்ரீன் பாடலிது..இங்கே க்ளிக் பண்ணி கேளுங்க! :)

மஞ்சள் வெயில் பூமியைக் குளிப்பாட்டும் ஒரு
மாலைப்பொழுது...
தென்றல் காற்றில் தலையாட்டும் மலர்கள்..கொஞ்சம் மஞ்சள் வெயிலையும் பூசிக்கொண்டு
முகமன் கூறும் ஒரு இனிய மாலைப் பொழுது...

மேற்கில் புதையும் சூரியனின் பொன்னிற ஒளியில் நனைந்து
மரங்கள் தம் நிழலை பூமியில் சாய்த்து
இளைப்பாறும் இரவுக்கு தயாராகும் வேளை...

அந்திசாயும் வேளையில் அங்கங்கே தலைநீட்டும் குட்டி முயல்கள்..

மரத்தில் தாயுடன் சண்டையிடும் காக்கைக் குஞ்சு..

நட்புப்புன்னகையுடன் கடக்கும் தெரியாத முகங்கள்..

கையில் கேமராவுடன் காலாற ஒரு நடை போயிட்டு வரலாம்னு கிளம்பினேன்..என் கேமராவில் சிறை பிடித்த காட்சிகள்தான் இவை.

போட்டோ எடுப்பதற்காகன்னு ஸ்பெஷல் வாக் எல்லாம் போகவே இல்லைங்க..வழக்கமா போறதுதான்..நேற்று மட்டும் மறக்காம கேமரா எடுத்துட்டுப்போனேன்..நம்பிட்டீங்கள்ல?;)

நான் நிதானமா ஒண்ணரை மணி நேரம் நடந்து, வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்..பின்னாலேயே என் கணவரும் வந்துட்டாரு..சிம்பிள் வெஜிடபிள் சேமியா உப்மாவோடு டின்னர் முடிந்தது.

பொறுமையாய்ப் படித்து, எங்க ஊரை சுத்திப்பார்த்ததுக்கு நன்றி!

இன்னும் எங்க ஊரைச் சுற்றிப் பார்க்க ஆவலா? இங்கே வாங்க!

Monday, June 14, 2010

சில்லி காலிப்ளவர்(பேக்ட்)

தேவையான பொருட்கள்
காலிப்ளவர் பூக்கள்-1கப்
சில்லிசிக்கன் மசாலா-1 1/2ஸ்பூன்
தயிர்-1/4 கப்
மிளகாய்த்தூள்-1/2ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது-1ஸ்பூன்
கடலை மாவு-2ஸ்பூன்
ப்ரெட் க்ரம்ப்ஸ்-1/2கப்
எண்ணெய்
உப்பு
செய்முறை
சுத்தம் செய்த காலிப்ளவர் பூக்கள்,தயிர்,மிளகாய்த்தூள்,இஞ்சி-பூண்டு விழுது,சில்லிசிக்கன் மசாலா,உப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்துவிட்டு,ப்ரிட்ஜில் ஆறு மணி நேரம் வைக்கவும்.
ப்ரிட்ஜில் வைத்த காலிப்ளவர் கலவையை ஒரு மணி நேரம் முன்பாக எடுத்து வெளியே வைக்கவும்.

காலிப்ளவர் கலவை அறைவெப்பநிலைக்கு கலவை வந்தவுடன் கடலைமாவை சேர்த்து பிசறி,

ஒவ்வொரு காலிப்ளவர் பூவையும் ப்ரெட் க்ரம்சில் நன்றாகப் புரட்டி,

பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.

அதன் மீது எண்ணெய் தெளித்து 350F ப்ரீஹீட் செய்யப்பட அவன்-ல் 25 நிமிடங்கள் பேக் செய்யவும். தட்டை வெளியே எடுத்து காலிப்ளவரை புரட்டி வைத்து, மேலும் சிறிது எண்ணெய் தெளித்து 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.தட்டை மீண்டும் எடுத்து காலிப்ளவரை புரட்டி வைத்து, ப்ராயில் மோடில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

சுவையான,க்ரிஸ்ப்பி சில்லி காலிப்ளவர் தயார்..ஸ்நாக்-ஆகவும் சாப்பிடலாம்,சாதம் வகைகளுக்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.

Friday, June 11, 2010

பீர்க்கன் தோல் துவையல்


தேவையான பொருட்கள்
மீடியம் சைஸ் பீர்க்கங்காய் ஒன்றின் தோல்(காய் இளசாக இருந்தால் சுவை நன்றாக இருக்கும்
பச்சை மிளகாய் - 3 அல்லது காய்ந்த மிளகாய்-4 (சுவைக்கேற்ப)
தேங்காய்-கால் மூடி
கடலைப் பருப்பு-1 ஸ்பூன்
உளுந்துப் பருப்பு-1 ஸ்பூன்
புளி-கொட்டைப் பாக்களவு
வெங்காயம்-சிறிது(விரும்பினால்)
உப்பு
எண்ணெய்

செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் காயவைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் பருப்பு வகைகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பச்சை மிளகாய்,புளி சேர்த்து வதக்கி, தேங்காய் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வதக்கவும்.
வதக்கியவற்றை ஆறவைத்து, உப்பு சேர்த்து கொற-கொறப்பாக அரைத்தெடுக்கவும்.
சுவையான பீர்க்கன் தோல் துவையல் ரெடி.சாதம்,சப்பாத்தி,இட்லி,
தோசை எல்லாவற்றுக்கும் பொருத்தமாய் இருக்கும்.

இந்த சட்னி ரெசிப்பியை நிதுபாலா-வின் 'பெஸ்ட் அவுட் ஆப் வேஸ்ட்' ஈவன்ட்டிற்கு அனுப்புகிறேன்.


LinkWithin

Related Posts with Thumbnails