Friday, June 17, 2011

ஊருன்னா ஊருதான்,கோயமுத்தூருதான்!

ஸாதிகா அக்கா ஆரம்பித்து வைத்திருக்கும் தொடர்பதிவு.. எங்க ஊரைப்பத்தி எழுதச்சொல்லியிருக்காங்க. எங்கூரு கோயமுத்தூருன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். காந்திபுரம் பஸ்ஸ்டாண்டுல இருந்து ஒரு ஏழெட்டுக் கிலோமீட்டர் தூரத்துல எங்க வீடு இருக்குதுங்க. அதுனால பர்ட்டிகுலரா எங்க கிராமத்தைப் பத்திச் சொல்லாம பொதுவா கோயமுத்தூரைப் பத்தி ஏதோ எனக்குத் தெரிஞ்சளவுக்கு சொல்லிடறேனுங்க.

பொறந்து,வளந்து,படிச்சு,வேலைக்குப் போறவரைக்கும் அங்கயே இருந்தாலும் எனக்குத் தெரிஞ்ச,நான் போய்வந்த இடங்கள்னு பாத்தம்னா ஒரு முப்பது நாப்பது கிலோமீட்டர்தானுங்க. அதுக்கு மேலே எங்கியும் போனதில்ல. எனக்குத்தெரிஞ்ச கோயமுத்தூரை (என் பார்வைல) சொல்லறேன்.
~~~~~~~~~~~~~~~

தமிழகத்தில் வெகுவேகமாக வளர்ந்துவரும் மாவட்டங்களில் முக்கியமானது கோவை. மரியாதையான கொங்குத்தமிழ், சிறுவாணித்தண்ணி, குளு குளு தட்பவெப்பத்துடன் அதிநவீன மருத்துவம், தரமான பள்ளி-கல்லூரிகள், பஞ்சாலைகள், பல்வேறு சாஃப்ட்வேர் கம்பெனிகள், டைடல்பார்க் இப்படி எல்லாத்துறைகளிலும் கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்ற ஒரு நகரம்னே கோவையைச் சொல்லலாம்.

எங்க வீடுகளில் வீட்டுக்கு வந்தவங்களுக்கு "தண்ணி குடிக்கிறீங்களா?"ன்னு கேட்பதெல்லாம் கிடையாது, வந்தவர்களை வாங்கன்னு சொல்லும்போதே ஒரு சொம்பு தண்ணியுடன்தான் இருக்கும் எங்கள் வரவேற்பு & விருந்தோம்பல்! எதுவும் சாப்பிடுவீங்களான்னு விசாரணையெல்லாம் கிடையாது. பலமான கவனிப்புதான். :)

பஞ்சாலைகள்
ஊருன்னா ஊருதான் கோயமுத்தூருதான்,உழைப்பாளி வாழும் ஊருதான்னு எதோ ஒரு சினிமாவுல பாட்டே படிப்பாங்க. கோயமுத்தூருன்னா மொதல்ல நினைப்பு வரது பஞ்சாலைகள்தான். இந்தியாவின் மான்செஸ்டர் பம்பாய்(மும்பை),தமிழகத்தின் மான்செஸ்டர்னு கோயமுத்தூர்னு பள்ளிக்கூடத்துல புவியியல் பாடம் படிக்கையிலே நீங்கல்லாருமே படிச்சிருப்பீங்க. ஆமாங்க,பஞ்சாலைகள் எங்கூர்ல அதிகம் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் வேஸ்ட்காட்டன் மில்கள்,பஞ்சாலைகள் இருக்கும். இப்ப ஒரு சில வருஷங்களுக்கு முன்பு நிறைய ஆலைகளை இழுத்து மூடி, எல்லாத்தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இருந்தாலும் டெக்ஸ்டைல் துறையில் சக்கைப்போடு போடும் திருப்பூரை அடிச்சுக்க ஆள் கிடையாது.

கல்வி
மிகவும் புகழ்பெற்ற பள்ளி-கல்லூரிகள் எங்கூர்ல உண்டு. ஸ்டேன்ஸ்-அவிலா கான்வென்ட்-பாரத் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்,சர்வஜனா பள்ளி, மணி மேல்நிலைப்பள்ளி என்று லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். கல்லூரிகளிலும் அரசு பொறியியல் கல்லூரி,வேளாண்பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. -சி.ஐ.டி. -அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்,கிருஷ்ணம்மாள் கல்லூரி-நிர்மலா கல்லூரி -மருத்துவக்கல்லூரிகள் என்று முடியாத பட்டியல் இருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகம்,சட்டக்கல்லூரி,கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் என்று புகழ்பெற்ற கல்விநிறுவனங்கள் இருக்கு. கோவையிலிருந்து பல்வேறு அரசுப்பணிகள் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றுவோர் பலர்.

மருத்துவம்

பல்வேறு அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் கொண்ட மருத்துவமனைகள் நிறைய இருக்கிறது. ராமகிருஷ்ணா மருத்துவமனை,குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கே.ஜி.ஹாஸ்பிடல்-கே.எம்.சி.ஹெச்.-அரவிந்த் கண் மருத்துவமனை-தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனை இப்படி புகழ்பெற்ற மருத்துவமனைகளும், கைராசிக்கார மருத்துவர்களும் நிறைந்த ஊர் எங்கள் ஊர்.

பேரூர் கனகசபை
கோயில்கள்
சிற்பக்கலையில் பிரசித்தி பெற்ற 'மேலைச் சிதம்பரம்' என்றழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், பூண்டி (எ) வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், மருதமலை இவை கோவையிலிருந்து சற்றே தள்ளி இருக்கும் கோயில்கள். பேரூர்க்கோயில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. கோயில் முழுவதும் சிற்பங்கள் நிறைந்திருக்கும். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் நடராஜர் நர்த்தனம் புரியும் கனகசபை. அங்கே பிரம்மாண்டமான சிற்பங்கள் தத்ரூபமாக இருக்கும். கோயில் முழுவதுமுள்ள சிற்பங்களை ரசித்துப் பார்க்க ஒரு நாள் போதாது.

ஈஷா தியானலிங்கம்

பூண்டியில் சித்திரா பவுர்ணமி மிகவும் விஷேஷம். ஏழு மலை ஏறி வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க மக்கள் வெள்ளம் அலைமோதும். ஈஷா யோகமையம் வெள்ளிங்கிரி அருகிலேயே இருக்கிறது. அங்கிருக்கும் தியானலிங்கம் மிகவும் நன்றாக இருக்கும். பெரிய ரவுண்டு பவுலை கவிழ்த்து வைத்த மாதிரி ஒரு கட்டிடம்,நடுவில் பிரம்மாண்டமான தியானலிங்கம், சுற்றிலும் அமர்ந்து தியானம் செய்ய குட்டிக் குட்டியா அறைகள் என்று அழகாக இருக்கும். (பவுல் வர்ணனையைப் படித்து திட்டிராதீங்க, ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய உவமானம் அது!!ஹிஹி).

கோனியம்மன், தண்டுமாரியம்மன் ,காமாட்சியம்மன்,ஈச்சனாரி வினாயகர்,சாரதாம்பாள் இவர்களெல்லாம் டவுனுக்குள்ளேயே இருப்பவர்கள். கொஞ்சம் தள்ளிப்போனீங்கன்னா, அவினாசியில் இருக்கும் அவினாசிலிங்கீஸ்வரர்-கருணாம்பிகை அம்மன் கோவில். பரந்து விரிந்து கிடக்கும் இந்தக்கோயிலிலும் மிகவும் அழகான சிற்பங்கள் இருக்கு. தென்திருப்பதி, காரமடை, மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோயில் என்று பல்வேறு திருத்தலங்கள் இங்கே உண்டு. (மற்ற மதம் சார்ந்த வழிபாட்டுத்தலங்களும் உண்டு, எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லாததால் தெரியவில்லை)

பொழுதுபோக்கு- சுற்றுலா

பொழுதுபோக்கு என்று பார்த்தால் திரையரங்குகள், சிதம்பரம் பூங்கா, வேளாண் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பொட்டானிகல் கார்டன் இதெல்லாம் ஊருக்குள்ளேயே இருப்பவை.கோவையில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் ப்ளாக்தண்டர் என்ற வாட்டர் தீம்பார்க்,சிறுவாணி மெய்ன் ரோடில் ஒரு வாட்டர் தீம்பார்க்கும் இருக்கிறது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் வந்ததால் வைதேகி சுனை என்றே பெயர்பெற்ற சுனை, கோவை குற்றாலம் அருவி, பொன்னூத்து (இது எங்கவீட்டுப்பக்கதில் இருக்கும் பிக்னிக் ஸ்பாட்..அதிகம் பேருக்கு தெரியுமா என்று சந்தேகம்தான்) என்ற சுனை இதெல்லாம் இயற்கை அமைத்துத்திருக்கும் தீம்பார்க்குக்கள்! :) வருடமொருமுறை கோடை விடுமுறை சமயத்தில் சிறைச்சாலை மைதானத்தில் பொருட்காட்சி போடுவார்கள். சூப்பராக இருக்கும்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தொடக்கத்தில் இருக்கும் ஆனைகட்டி என்ற இடம்..அங்கே இருக்கும் வேதாத்ரி மகரிஷி அவர்களின் வாழும் கலைப்பயிற்சி மையம், பறவைகள் சரணாலயம் என்று இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும். கோவையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டரில் ஊட்டி..ஊட்டியின் புகழ் உங்களனைவருக்குமே தெரியும்,நான் சொல்லவேண்டியதில்லை.

கோவையிலிருந்து சிலமணி நேரப்பயணத்தில் வரும் திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயிலும், அற்புதமான நீர்வீழ்ச்சியும் அசத்தலான பிக்னிக் ஸ்பாட்ஸ்! அப்படியே கொஞ்சம் மேலே(!) போனம்னா வால்பாறை-பாலாஜி கோயில் என்று கூலான இடங்கள் நிறைய! பொள்ளாச்சி பக்கம் நான் அதிகம் போனதில்லை. கோபி-சத்தியமங்கலமெல்லாம் நிறைய சினிமா படம் எடுத்திருக்காங்க. கண்ணுக்கு விருந்தளிக்கும் வயல்வெளிகள்-தோப்புகள் நிறைய இருக்கும்.

ஷாப்பிங்
எல்லாத்தையும் சொல்லியாச்சு, நம்ம ஷாப்பிங் பற்றி சொல்லைன்னா எப்படி?ராஜேஸ்வரி ஹால், நல்லி சில்க்ஸ், மஹாவீர்ஸ், ஸ்ரீதேவி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், பி.எஸ்.ஆர்.சில்க்ஸ், எஸ்.கே.ஸி., போத்தீஸ் என்று பிரபலமான துணிக்கடைகள்..ஆண்டுக்கொருமுறை ஆடித்தள்ளுபடி என்ற பேரில் சிறப்பு விற்பனை!! டவுன்ஹால்-உக்கடம்-பெரியகடை வீதி -உப்புக் கிணறு சந்து -க்ராஸ்கட் ரோடு-ஆர்.எஸ்.புரம் D.B.ரோடு என்று ஷாப்பிங் செய்ய ப்ளாட்ஃபார்ம் கடை முதல் ப்ராண்டட் ஷோரூம் வரை கோவையில் கொட்டிக்கிடக்கும். டவுன்ஹாலில் நகைக்கடைகள் -பாத்திரக்கடைகள்-தினசரி மார்க்கெட் -உணவகங்கள் என்று எல்லாமே உண்டு.

பேருந்துகள்

எங்கூர்ல ப்ரைவேட் பஸ்கள் நிறைய இருக்கும். ஒவ்வொரு பஸ்சுக்கும் பேர் இருக்கும்..தங்கராஜா, சங்கீதா, S.T., அமுதசுரபி, தங்கமயில் இப்படிப் பலபெயர்கள்!! ப்ரைவேட் பஸ்னு இல்ல, கவர்மென்ட் பஸ் உட்பட எல்லா பஸ்ஸுமே பளபளன்னு புத்தம்புதுசா இருக்கும்.(சென்னைவாசிகள் மன்னிக்க, ஒரே ஒருமுறை சென்னைப் பேருந்தில் பயணம் செய்த அனுபவம் இந்த வரிகளை எழுதவைத்தது.:)) கிட்டத்தட்ட எல்லா பஸ்ஸிலும் ரேடியோ-டேப் ரெக்கார்டர் இருக்கும். எஃப்.எம். ரேடியோக்கள் வந்ததிலிருந்து என்னேரமும் பஸ்ஸில் ரேடியோப் பாடல்கள்தான். இவைதவிர அங்கங்கே கிராமங்களுக்குள் செல்ல மினிபஸ் உண்டு. மினி பஸ் கண்டக்டர்-ட்ரைவர்கள் எல்லாம் பயணிகளுடன் சொந்தபந்த ரேஞ்சுக்கு நட்பாக இருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட பஸ்ஸிலேயே செல்லும் கல்லூரி இளசுகள் பஸ் டே
என்ற பெயரில் கேக்வெட்டி, எல்லாருக்கும் ஸ்வீட்-காரம்-கேக் எல்லாம் கொடுத்து கலக்குவாங்க.

உணவு

கோவை என்றாலே நினைவுக்கு வருவது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா!! அப்புறம் அன்னபூர்ணா-கௌரிஷங்கர் ஹோட்டல். சுவையான உணவகங்களுக்கு இங்கே குறைவில்லை. அன்னலக்ஷ்மி என்ற உணவகம் உண்டு, இங்கே விரும்பிய உணவைச் சாப்பிட்டுவிட்டு நம் விரும்பிய தொகையை வைத்துவிட்டு வரலாம்.அந்தப்பணம் ஒரு சேவை நிறுவனத்துக்கு செல்வதாக சொல்வார்கள். அங்கே சேவைநோக்கில் பணிபுரிபவர்கள் எல்லாரும் வசதியான பெண்மணிகள் என்று சொல்வார்கள். எங்க வீட்டருகிலேயே அன்னலக்ஷ்மியின் ஒரு ப்ரான்ச் உண்டு, ஆனால் நான் அதிகம் சென்றதில்லை. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இருக்கும் லாலா கடையில் இனிப்பு காரம் சூப்பரா இருக்கும். பஸ் ஸ்டாப் தவறாமல் மஹாலக்ஷ்மி பேக்கரி (அ) அரோமா பேக்கரி இருக்கும். எந்நேரம் போனாலும் சுடச்சுட டீயும் தேங்காபன்னும் சாப்பிடலாம். :) அதுமட்டும் இல்லை, பல பேருந்து நிறுத்தங்களில் தள்ளுவண்டிகளில் சில்லி காலிஃப்ளவர்-சில்லி மஷ்ரூம்-பானிபூரி-பேல்பூரி விற்பாங்க பாருங்க, ஆஹாஆஆஆ!! அந்தசுவையை வார்த்தைகளில் சொல்ல முடியாது,சாப்பிட்டுத்தான் உணரணும்.

எழுத எழுத தீர மாட்டீங்குது எங்க ஊர்க்கதை!! நினைவுக்கு வந்தவற்றை எழுதியிருக்கிறேன். இந்தத் தொடர் பதிவைத் தொடரும்படி சிலரைக் கூப்பிட்டுடறேன்.

1.பாலாஜி சரவணா (கொஞ்சநாளா ஆளையே காணோம்..ஊருக்குப் போயிட்டீங்களா?? )
2.சித்ரா (நீங்க விடுமுறை சொல்லியிருப்பது தெரியும்,சீக்கிரம் லீவை முடித்துவிட்டு வந்து எழுதுங்க ஆச்சி!;) )
3. காம்ப்ளான் பாய் சிவா (ஏற்கனவே சொல்லிருக்கீங்க, ஸ்டில் தொடரலாம்..சிங்கப்பூரைப் பத்தி சொன்னாலும் சரி.)
4.அப்பாவி தங்கமணி( அம்மணி, என்ர பதிவுல விடுபட்டுப்போன பாயின்ட்டுகளை நீங்க கரெக்க்ட்டா புடிச்சிருவீங்கள்ல? அதுக்குத்தேன்!!!;) )
5.சாருஸ்ரீராஜ் (சாரு,எங்கே போனீங்க? பசங்களுக்கு லீவு விட்டப்புறம் பார்க்கவே முடியலை,வந்து தொடருங்க.)

இப்போதைக்கு இந்த 5 பேருடன் நிறுத்திக்கறேன், இன்னும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நினைவு வந்தால் கண்டிப்பாக இந்தப்பதிவைத் தொடருவேன்.ஜாக்கிரதை!!! ;)

சூடா டீயும் மஷ்ரூம் பஃப்ஸும் சாப்பிடுங்க. பஃப்ஸ் ரெசிப்பி அடுத்தபதிவில்! :)
நன்றி!

45 comments:

  1. That was a very cool post abt kovai.... and nice of u to offer some coffe and mushroom puffs it was delicious,thank you..

    ReplyDelete
  2. நிறைய இன்ஃபார்மேஷன்ஸ், தாங்ஸ் மகி. அடுத்த இந்தியா ட்ரிப்ல கோவை இருக்கு. அந்த கோவில் கட்டாயம் போகணும். நீங்க போறப்ப சொல்லுங்க. அப்போ வந்தா உங்களையும் பார்த்துட்டு வந்துருவேன்.

    ReplyDelete
  3. நானும் கோவையில் 4 வருஷம் இருந்திருக்கேனுங்கோ,
    //கவர்மென்ட் பஸ் உட்பட எல்லா பஸ்ஸுமே பளபளன்னு புத்தம்புதுசா இருக்கும்//
    ஒத்துக்கறேனுங்கோ,வடவள்ளி - ஒண்டிப்புதூர் பஸ் ரூட் தானுங்க நம்மது,வேளான் கல்லூரியும் அதனைச்சார்ந்த 800 ஏக்கர் நிலத்தையும் சைக்கிளிலேயே சுற்றியலந்த காலமும்,R.S.புரம் தான் எங்க அவுட்டிங் ஸ்பாட்,எங்க லேடீஸ் ஹாஸ்டலில் இருந்து சைட் வழியாக பொட்டானிக்கல் கார்டனுக்கு தாவி போய் தினமும் மாலை நேரம் படிக்க,இன்ஸெக்ட் கலெக்‌ஷன் என்று அலைந்த காலம்,சுற்றியுள்ள அழகிய கிராமமத்தில் வில்லேஜ் ஸ்டேஜ் ப்ரோகிராம்,மற்றும் கிராமம் எல்லாம் சினிமா சூட்டிங் ஸ்பாட்,கோவையை தென்னகத்தின் மான்செஸ்டர், இன்னும் சொல்லிகிட்டே போகலாம்,
    நான் தனி பதிவாக போடற அளவிற்கு விஷயம் தெரியுமுங்க,
    என்னதான் இருந்தாலும் அம்மணி இவ்வளவு சுருக்க முடிச்சிருக்கபப்டாதுங்கோ.
    அருமையாக சொல்லிப்புட்டீங்க,
    நானும் எங்க ஊரைப்பற்றி எழுதனுமுங்கோ..

    ReplyDelete
  4. Aaahhh mahi, asatheteenga. ennakku oorukku poitu vantha maathiri irrukku:) romba azhaga ezhuthi irukeenga:) super..
    Reva

    ReplyDelete
  5. am on leave....:)

    nan enga varavey ellai...

    ReplyDelete
  6. Enga Amma ippo Kovailathan irrukkanga. Naan leavekku ange than sendren. Perur kovil super! Very informative post!

    ReplyDelete
  7. கோயமுத்தூரைப் பற்றி அரசல் புரசலாக மட்டுமே கேள்விப்பட்டிருக்கேன் மஹி. உங்க பதிவில் நிறைய விஷயங்களை சுருக்கமா சொன்னாலும் தேவையான அனைத்தையும் சொல்லிட்டீங்க. எப்படியும் ஒருமுறையாவது வந்து பார்க்கணும். ஒரு சொம்பு தண்ணீரோடு வரவேற்பீங்கதானே? ;))

    ReplyDelete
  8. ஒரே ஒருதரம் எர்ணாகுளத்திலிருந்து கோவை வந்துவிட்டு, மருதமலை போய் தரிசனம் செய்ததும், அன்ன லட்சுமியில் சாப்பிட்டதும் ஞாபகம் வருகிறது. அருமையான ஊர் .நிறைய பார்க்க இடம் இருக்கு. நீங்களெல்லாம், எழுதுவதைப் பார்த்தால், படிததால் எனக்குப் போதும் என்று தோன்றுகிறது..

    ReplyDelete
  9. உங்க ஊரை பற்றி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்! அடுத்த முறை இந்தியா போகும்போது நல்லா சுற்றி பார்த்துவிட்டு வரணும்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  10. உங்க ஊர் பற்றி விலாவாரியா எழுதி இருக்கிறீங்க. ஒரு முறை கோயமுத்தூர் போயிருந்தோம் ஆனால் எதுவும் பார்க்க, ஷாப்பிங் போக ( என் அப்பாவுக்கு ஷாப்பிங் என்றாலே அலர்ஜி ) நேரம் கிடைக்கவில்லை. நல்ல பதிவு, மகி.

    ReplyDelete
  11. ஆஹா... மஹி.. அழகாகச் சொல்லி முடிச்சிட்டீங்க ஊர்ப்பெருமை பற்றி..

    ...................

    ஸாதிகா அக்கா.. கொலரைக் கொஞ்சம் தூக்கிவிடுங்க, நீங்க ஆரம்பித்த தொடர் ஓஹோஓஓஓஓஓ... என கொடிகட்டிப் பறக்குது.
    ......................

    அந்தச் சிவலிங்க சூப்பராக இருக்கு மஹி, எனக்கு முன்பு ஒருதடவை கொஞ்சம் சிவலிங்கப் படங்கள் கொசுமெயிலுக்கு வந்தது.... ரொம்ப அழகு, அது இதுதானோ தெரியவில்லை.

    ReplyDelete
  12. ஒண்ணை விட்டுவிட்டீங்களே மஹி, கோயம்புத்தூர் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது குளுகுளு வெதர்தான்... அதை மறந்திட்டீங்களே?.

    பஸ் ஸ்ரொப் அருகிலேலே சுடச்சுடக் கடைகளோ? சூப்பர் சூப்பர்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நாவூற வைக்குது.

    ReplyDelete
  13. எங்கள் ஸ்கூல் பஸ் கண்டக்ரர் றைவராக்களும் ரொம்பாஆஆஆஆ நல்லவங்க... அதில் ஒருவருக்கு “செல்லம்” என்றே பெயர் வைத்திருந்தோம்... அவ்ளோ செல்லம் தருவார்... மலரும் நினைவுகளைக் கொண்டுவந்திட்டுது உங்கள் பஸ் கதை...

    ஓக்கே.... ஒரு செம்பு பச்சைத்தண்ணி கிடைக்குமோ?:) சீயா மீயா.

    ReplyDelete
  14. கோவைக்கு ஒரு மினி ட்ரிப் போயிட்டு வந்த மாதிரி இருக்கு மஹி!..:)) குசும்புக்கும் உங்க ஊர் தானே பேமஸ்??..:P

    ReplyDelete
  15. கோவையை அழகா சுத்திக்காட்டி
    டீங்க.

    ReplyDelete
  16. மகி உங்கள் ஊரை அருமையா சுற்றி காட்டிவிட்டீர்கள்.கோவைக்கு வந்து சென்று அனைத்தையும் பார்த்தாற் பொன்ர ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு.நன்றி மகி.

    ReplyDelete
  17. Ooh Coimbatore makkale always attatched to Coimbatore ...;)
    Mushroom puffs paaka nallarku...recipe soon pls...

    ReplyDelete
  18. @ Raks adukalai - //Mushroom puffs paaka nallarku...recipe soon pls...// raji akka, yeppa paathalum recipeyee padichundu irunthaa bore adikkathaa? konjam maththa vishayamum read pannungoo!!..;P (jst kdng, adikka vanthudatheengo!)

    ReplyDelete
  19. உங்க ஊர் அறிமுகத்துக்கு நன்றி மகி.. மேப்ல இனிமேத் தான் தேடிக் கண்டுபிடிக்கணும் :)) ஊரைப்பத்தி நெறைய விஷயம் இருக்குது போல?

    ReplyDelete
  20. Super post, Mahi. Namma Koyamuthur rocks!

    ReplyDelete
  21. கோவைன்னாலே P.S.G.தானே ஞாபகம் வரும்... நல்ல பதிவு...

    அப்புறம் இரண்டு வாழ்த்துக்கள்... அவள் விகடனில் உங்கள் கவிதைப்பூக்கள் கட்டுரை வெளியானதுக்கு...

    இன்னொன்று... ஓட்டுனர் உரிமம் பெற்றதுக்கு...

    ''மஹியோட வண்டி வருது..வண்டி வருது..ஓரம்போ..ஓரம்போ...'' அட... உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்...ஓரம்போ..;)

    ReplyDelete
  22. ippo mall ellam vandhiruchungoo .. brookfields mall .. lifestyle,pantaloons ellam irukkungoo ..

    ReplyDelete
  23. வாவ்... நம்ம ஊரை பத்தியா? சொல்ல சொல்ல இனிக்குதம்மானு பாட தோணுது... ஆனா ரெம்பவும் ஊர் ஞாபகம் வந்துடுச்சு போங்க மகி...:(((

    அம்மணினு சொன்னாலே சும்மா அதிருதில்ல... ஹா ஹா....:))

    என்னோட ஒரு காலேஜ்(PG படிச்சது) பேரு சொல்லிட்டீங்க... இன்னொன்னு இதுல இல்ல... சரி, நான் சொல்லிடறேன்..:))

    //ராமகிருஷ்ணா மருத்துவமனை// - எனக்கு நெறைய மெமரிஸ் உண்டு இங்க... ஜாலி மெமரிஸ் தான்... hospital ல என்ன ஜாலி மெமரிஸ்னு டென்ஷன் ஆகரீங்களோ...ஹா ஹா...:)

    //ஈசா யோகாமையம்// - வாவ்... எவ்ளோ நாளாச்சு இங்க போய்... ஹ்ம்ம்... அடுத்த முறையாச்சும் போகணும்..

    //பத்திரகாளியம்மன் கோயில்// - Reminded me of my fun trips with my cousins...hmmm..

    //பொன்னூத்து (இது எங்கவீட்டுப்பக்கதில் இருக்கும் பிக்னிக் ஸ்பாட்..அதிகம் பேருக்கு தெரியுமா என்று சந்தேகம்தான்)//
    எனக்கு நல்லாவே தெரியும்... ஏன்னா எங்க அம்மாவின் பிறந்த வீட்டில் இருந்து நடந்து போகும் தூரம் தான்... ரெம்பவும் பக்கம் இல்ல... ஆனா நடந்து போலாம்... உங்க ஊர் எதுன்னு கிட்டதட்ட கண்டுபிடிச்சுட்டேன்... ஹா ஹா... . நீங்களும் அந்த பக்கம் தானா? ஒகே ஒகே... அம்மாகிட்ட இந்த வாரம் பேசும் போது சொல்லணும்... உங்கூர் அம்மணி இங்க இருக்காங்கனு...:))

    அன்னபூர்ணா காலிப்ளவர் ரோஸ்ட்'ம், ஆர்யாஸ் பரோட்டாவும்... ஹ்ம்ம்... பெருமூச்சு தான் வருது போங்க...:)

    //ஷாப்பிங்// - அடடா... உப்பு கிணறு சந்து, மறந்தே போச்சுங்க மகி... சுடிதார் material சும்மா குவிஞ்சு கிடக்கும் காட்சி தான் நினைவுக்கு வருது...:))

    // S.T., பஸ் // - ஆஹா...எங்க பஸ்... இப்படி தான் அலப்பறை பண்ணுவோம் காலேஜ் நாட்கள்ல... நிஜமா ST தான் காலேஜ் போறப்ப என்னோட ரெகுலர் பஸ்... "ST யும் வந்தாச்சு சிக்னலும் தந்தாச்சு போய்யா" னு பாட்டு ரீமிக்ஸ் எல்லாம் கூட பண்ணுவோம் அப்ப... எங்க அம்மா "என்ன உன் பேருக்கு எழுதி குடுத்துட்டாங்களா பஸ்'ஐ?" னு கிண்டல் பண்ணுவாங்க... அதெல்லாம் ஒரு காலம்...:))

    //எங்க வீட்டருகிலேயே அன்னலக்ஷ்மியின் ஒரு ப்ரான்ச் உண்டு,//
    இப்ப புரிஞ்சு போச்சு உங்க வீடு எங்கனு... ஒகே...:))

    //4.அப்பாவி தங்கமணி( அம்மணி, என்ற பதிவுல விடுபட்டுப்போன பாயின்ட்டுகளை நீங்க கரெக்க்ட்டா புடிச்சிருவீங்கள்ல? அதுக்குத்தேன்!!!;) //
    நீங்களே பெரும்பாலும் கவர் பண்ணிட்டேங்க... சரிங்க... எனக்கு தெரிஞ்ச மாதிரி நானும் மொக்க போடறேன்...:))

    ReplyDelete
  24. ஹாய் மகி, எப்படி இருக்கீங்க? ஒரு மாசம் லீவ்ல ஊருக்கு போயிட்டு வந்தேன். அதான் ப்ளாக் பக்கமே வரல. மறுபடியும் ஆரம்பிக்கணும், பார்க்கலாம்.
    தொடர் பதிவுக்கு என்னை அழைத்த உங்க அன்புக்கு மிக்க நன்றி மகி! :)
    எனக்கு பிடிச்ச கோவை பத்தி டீடெயிலா சொல்லியிருக்கீங்க. சூப்பர்!
    இப்ப நான் லீவுக்கு போனப்ப கூட கோவை போயிட்டு வந்தேன். திருப்பூர் மற்றும் கோவைல அக்காஸ் இருக்காங்க. அப்படியே ஒரு சின்ன ட்ரிப் மருதமலை, காரமடை மற்றும் தென்திருப்பதி போயிட்டு வந்தோம். காரமடை & தென்திருப்பதி இது தான் முதல் தடவை. தென் திருப்பதி விட்டு வர மனசே இல்லை, வெரி நைஸ் பிளேஸ் :))) செம கிளைமேட்.
    சிறுவாணி தண்ணி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ், லாலா கடை மிளகு சேவு, கையேந்தி பவன் சில்லி மஷ்ரூம் என்னோட ஃ பேவரிட் இன் கோவை :)
    எனக்கு பிடிச்ச லிஸ்ட்ல கோவை எப்பவும் இருக்கும். :)

    ReplyDelete
  25. சித்ரா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    /அந்த கோவில் கட்டாயம் போகணும்./
    இமா,பத்தாவது வரை தமிழ்ல பிழை திருத்துக-ன்னு ஒரு கேள்வியே வரும் எக்ஸாம்ல,அதிலே இது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி!! அது கோ'யி'ல், கோ'வி'ல் இல்லை ;)

    நான் பல கோயில்களை சொல்லிருக்கேன்,நீங்க எந்தக் கோயிலைச் சொல்றீங்க? ;)

    நாங்க போறப்ப கட்டாயம் சொல்லறேன்,ஆனா கண்டிப்பா வந்துடணும் நீங்க,ஓக்கே?
    நன்றி இமா!

    ஆசியாக்கா,1C-ய ஒரு கலக்கு கலக்கிறிருக்கீங்கன்னு சொல்லுங்க அப்ப!;)

    சுருக்கமா முடிச்சிட்டமாதிரிதான் எனக்கும் ஒரு ஃபீலிங் இருக்கு. சீக்கிரம் போஸ்ட் பண்ணனும்னு அவசரக்கோலத்தில், வெறும் பெயர்களாச் சொல்லி ஓவர்டோஸ் ஆக்கிட்டேனோன்னும் ஒரு நினைப்பு இருக்கிறது. அதனாலதான் விரைவில் தொடர்வேன்னு சொல்லிருக்கேன்.:)
    உங்க கமென்ட்டைப் பார்த்து ரொம்ப சந்தோஷம் ஆசியாக்கா! நன்றி!

    ReplyDelete
  26. ரேவா,செலவில்லாம மறுபடி ஒருமுறை ஊருக்கு கூட்டிட்டுப்போயிருக்கேன்னு சொல்லுங்க! :)
    தேங்க்ஸ் ரேவா!

    சிவா,எங்கப்பா குதிருக்குள்ளே இல்லைங்கற மாதிரி வந்து கமென்ட் போட்டுட்டு 'நான் இங்கே வரவே இல்லை'-யா? ஹாஹா!! என்ஜாய் தி வெகேஷன்!

    காயத்ரி,பேரூர் போயிருந்தீங்களா? அடுத்தமுறை மத்த இடங்களையும் பாருங்க. நன்றிங்க,வருகைக்கும் கருத்துக்கும்.

    அஸ்மா,என்ன இப்படி கேட்டுட்டீங்க? எப்ப வரீங்கன்னு சொல்லுங்க,ஒரு சொம்பு தண்ணி மட்டுமில்ல, விருந்தே போட்டு ஜமாய்ச்சிரலாம்! :) முடிந்தால் அடுத்தமுறை குறைந்த பெயர்-நிறைய தகவல்களுடன் எழுதுகிறேன். நன்றிங்க!

    காமாட்சிம்மா,ஒரு முறைதான் வந்திருக்கீங்களா கோவைக்கு? படிக்கிறதெல்லாம் இருக்கட்டும்,இன்னொருமுறை ஒரு லாங் ட்ரிப் வாங்க எங்கூருக்கு! நன்றிமா!

    ப்ரியா,கட்டாயம் கோவைக்கு போக முயற்சி செய்யுங்க. நான் ஒருமுறை பாண்டிச்சேரி வந்திருக்கேன்,ஆனா எந்த இடமும் பார்க்கலை.வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கனும்.நன்றிங்க!

    விலாவாரியா எல்லாம் எழுதலை வானதி,சுமாரா எழுதியிருக்கிறேன். எப்ப வந்தீங்க கோவைக்கு? சொல்லியிருந்தா அப்பவே சந்திச்சிருக்கலாமே?;) :)
    தேங்க்ஸ் வானதி!

    ReplyDelete
  27. அதிராவுக்கு ஸ்பெஷலா சுட்டாறிய தண்ணி எடுத்துவச்சிருக்கேன்,பச்சைத்தண்ணி கேட்டா எப்புடி? :)

    ஈஷா சிவலிங்கமாகத்தான் இருக்கும் அதிரா,நேரில் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். கோயிலுக்குள் நுழைந்ததுமே மனது அமைதியாகிடும்.கோவை சென்றால் மிஸ் பண்ணிடாதீங்க இதை.

    செல்லமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கில்லி படத்தில் ப்ரகாஷ்ராஜ் சொல்லும் செல்லம் நினைவுவருது!:) :)

    ஊரைப்பத்தி பேசினா நேரம் போவதே தெரியாது.அதுக்கு வாய்ப்புத்தந்த ஸாதிகா அக்காவுக்கு நன்றி. ரசித்து படித்து கருத்து சொன்ன உங்களுக்கும் நன்றி!

    /குசும்புக்கும் உங்க ஊர் தானே பேமஸ்??..:P/ தக்குடு,குசும்புக்கு எங்க ஊர் பேமஸ்தான்,ஆனா எங்க ஊர்தான் பேமஸ் என்பதை ஒத்துக்க முடியாது. குசும்புக்காரா எங்க வேண்ணாலும் இருப்பா,இந்த போஸ்ட்ல தக்குடுவின் கமென்ட்ஸ்-ஐப் பார்த்த எல்லாரும் இதை ஒத்துப்பா!! ;) ;)

    போஸ்ட்டின் நீளம் அதிகமாய்ட்டதால் மினி ட்ரிப்பா போச்சு,சீக்கிரம் ஒன் வீக் டூர் அழைச்சிண்டு போறேன்,சரியா? தேங்க்ஸ் தக்குடு!

    லஷ்மிம்மா,வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றிமா!

    ஸாதிகாக்கா,எப்ப வரீங்க எங்க ஊருக்கு? தொடர்பதிவை ஆரம்பித்து வைத்ததுக்கு உங்களுக்கு ஒரு சபாஷ்!
    வாய்ப்புக்கு நன்றி!

    ராஜி,கோயமுத்தூர் மக்கள்னு இல்ல,யாருக்குமே சொந்த ஊர் மேல பாசம் இருக்கறது வழக்கம்தானே? :)
    தேங்க்ஸ் ராஜீ!

    தக்குடு,கை கால் வால் எல்லாம் பத்திரமா இருக்கோன்னோ?;) (ஜஸ்ட் கிடிங்..ப்ரொஃபைல் போட்டோ பார்த்துதான் கேக்கிறேன்!:) )

    சந்தனா,/மேப்ல இனிமேத் தான் தேடிக் கண்டுபிடிக்கணும் :))/இப்புடி அண்டப்புளுகு-ஆகாசப்புளுகு புளுகக்குடாது!;)

    எங்கூரு உனக்குத் தெரியாதா..ம்ம்,சரிசரி, மேப்ல பளிச்னு தெரியறமாதிரிதான் இருக்குது.கண்டுபிடிச்சாச்சா,இல்லையா??

    மஹேஸ் அக்கா, பூமார்க்கட்டெல்லாம் சொல்ல விட்டுப்போச்சு..யோசிக்க யோசிக்க நிறைய விஷயங்கள் நினைவு வருது.:)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    என்றென்றும் 16, எப்படி இருக்கீங்க? பெரிய பெரிய துரை,பெரிய துரை,சின்னத்துரை, துரைசாணி(நீங்கதேன்,ஹிஹி) எல்லாரும் நலம்தானே? :)
    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    பாட்டெல்லாம் நல்லாவே பாடறீங்க,அப்படியே ரெகார்ட் பண்ணி அனுப்புங்க, கார்ல போட்டு சத்தமா பாடவச்சிட்டே வண்டி ஓட்டறேன்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பவித்ரா,2 வருஷத்திலே இவ்வளவு மாற்றங்கள் வந்திருச்சா..நீங்க சொன்ன இடமெல்லாம் இந்த முறை ஊருக்குவரும்போதுதான் பார்க்கணும். நன்றிங்க!

    ReplyDelete
  28. அப்பாவி, /hospital ல என்ன ஜாலி மெமரிஸ்னு டென்ஷன் ஆகரீங்களோ...ஹா ஹா...:)/,ச்சே,ச்சே இல்லைங்க,கட் ஷூ-கட்டாத நாயெல்லாம் இருந்திருக்கே, அப்புறம் ஜாலி மெமரீஸ் இல்லாம இருக்குமா? ஹிஹி!

    உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நான் பொன்னூத்து போனதே இல்ல!;) நான் தக்குணூண்டா இருக்கைல கூட்டிட்டு போயிருக்காங்களாம். எங்களுக்கும் அவ்வளவு பக்கம்னு சொல்லமுடியாது,பட் ஸ்டில் பக்கம்தான்! :)

    அம்மா ஊர் ப...டை??! ;) பக்கத்திலே வந்துட்டோம்,அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லுங்க.

    ஓ..நீங்கதானா இப்படியெல்லாம் பாட்டுப்பாடி அதிரவைச்சிட்டு இருந்தது?? கேள்விப்பட்டேன்! (ஹிஹி,சும்மா ஒரு பில்டப்புதான்..அப்பல்லாம் நாங்க ப்ரீகேஜி போயிட்டு இருந்தமாக்கும்! )

    வீடெங்கேன்னு ண்டுபிடிச்சுட்டீங்க,அடுத்தமுறை கண்டிப்பா வந்துடுங்க,சரியா?
    சீக்கிரம் எழுதுங்க. எல்லாரும் உங்க வார்த்தைகள்ல நம்மூரை தெரிந்துக்கட்டும்.நன்றி புவனா!

    பாலாஜி, நான் இன்னும் தென்திருப்பதி போகலைங்க,அடுத்தமுறை கண்டிப்பா போய்ட்டு வரணும். உங்களுக்குப் பிடிச்ச ஊர்னு கோவையை சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம்,எனக்கு பிடிச்ச சாப்பாட்டு கடைகளாவே சொல்லிருக்கீங்க! :P :P நன்றி!

    ReplyDelete
  29. //அம்மா ஊர் ப...டை??! ;) பக்கத்திலே வந்துட்டோம்,அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லுங்க//


    ரெம்ப சரி மகி...அம்மா ஊர் அது தான்.... ரெம்ப கிண்டல் பண்ணி வெறுபேத்துவோம் எங்க அம்மாவை... ஆனா, கடைசீல ரங்க்ஸ் அதே ஊர்காரரா போனது தான் சூப்பர் anti-கிளைமாக்ஸ்
    ஹா ஹா... உங்க ஊர் செங்கல்'க்கு பேமஸ் ஊருன்னு நினைக்கிறேன், கரெக்டா?...:))

    ReplyDelete
  30. புவனா,நீங்க வேற ஊரை சொல்றீங்கன்னு நினைக்கிறேன்..எங்க (என்னவர்) ஊர் திங்கக்கிழம சந்தைக்கு ஃபேமஸ் புவனா! அம்மா வீடு அங்கருந்து ஒரு 2-3 கிலோமீட்டர்தான். :)

    இதான்..இதான்..அநியாயத்துக்கு கிண்டல்பண்ணக்கூடாதுன்றது. அம்மாவுக்கு இப்போ அது அம்மா ஊர்தான்,ஆனா உங்களுக்கு உங்க ஊரா ஆகிருச்சே! ஹ்ஹாஹாஹா!! காமெடிதான் போங்க!

    ReplyDelete
  31. ஓ... ஒகே மகி... புரிஞ்சு போச்சு... புரிஞ்சு போச்சு... எங்க ஊர் (பிறந்த வீடு)ஞாயிற்று கிழமை சந்தைக்கு பேமஸ்...:))

    ஆமாம் மகி... எனக்கு மட்டுமில்ல என் தங்கைக்கும் அதே ஊர் அமைஞ்சது எங்க அம்மாவுக்கு ஒரே சந்தோஷம்... எங்களுக்கு செம பல்பு... ஹா ஹா... :)

    ReplyDelete
  32. நீங்க 102A -வைப் பத்தி எழுதும்போதே உங்க ஊர் வடக்கேதான் இருக்குன்னு புரிஞ்சுபோச்சு. சந்தோஷம் புவனா! :)

    உங்க தங்கையும் அதே ஊரா?? செம பல்பு இல்ல, உங்க ரெண்டுபேருக்கும் 1000W பல்பூ!!!!! :))))))))

    ReplyDelete
  33. @ இட்லி மாமி & மஹி - உங்க ஊருக்கு தெற்கால போற வண்டி எல்லாம் இப்ப உங்க ஊருக்கு வடக்கால போகுதாமே?? உங்க ஊருக்கு கிழக்கால இருக்கும் ஊர்ல எனக்கு ஒரு ஜோடாகடைகாரரை தெரியும் அவர்தான் சொன்னார்...:PP

    //உங்க ஊர் செங்கல்'க்கு பேமஸ் ஊருன்னு நினைக்கிறேன்// ஆமா, அவங்க ஊர்ல செங்கல் & மஹி செய்யும் மைசூர்பா பேமஸ். உங்க ஊர்ல செங்கல் மாதிரி இருக்கும் உங்களோட இட்லி பேமஸ்..:)))

    ReplyDelete
  34. ரெண்டு பேரு கொஞ்சம் சாவகாசமா பேசிக்கக்கூடாதே,உடனே மூக்கு வேர்த்துடுத்தே தக்குடுவுக்கு? :)

    எங்கூர்ல தெக்கால போற வண்டியெல்லாம் ரிடர்ன் போகும்போது வடக்காலதானே காலங்காலமா போயிட்டு இருக்கு? அதைய சொல்ல ஜோடாக்கடைக்காரரை கேக்கணுமா தக்குடு?? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    நான் இதுவரைக்கும் ஒரே ஒருமுறைதான் மைசூர்பா செய்திருக்கேன்,இப்போ ஸ்பெஷலா ஒரு தடவை செய்து டொரன்டோ அனுப்பறேன்,அங்கே இட்லியும் ரெடியானதும் இட்லி& மைசூர்பா சூப்பர் எக்ஸ்ட்ரீம்லி ஸ்பீட் போஸ்ட்லே(!!) தோஹாவுக்கு பறந்துவரப்போகுது,ஜாக்ரதை!

    ReplyDelete
  35. ஊர் பேரை சொல்லி பேசிண்டா பரவாயில்லைனு விடலாம். என்னவோ கள்ளகடத்தல் கோஷ்டி மாதிரி ஞாயிற்று கிழமை சந்தை, 29A பஸ் போகும்னு பரிபாஷைல பேசினா நாங்களும் அதே மாதிரி பேசுவோமாக்கும்!!..:))

    கனடால இட்லி பண்ணர்துக்கு முதல்ல மாவு போங்கனும்!! மாவு பொங்கி இட்லி ரெடி ஆகர்துக்குள்ள லோக்பால் மசோதாவே வந்துடும்...:PP

    ReplyDelete
  36. /ஊர் பேரை சொல்லி பேசிண்டா பரவாயில்லைனு விடலாம்./ஆஹா,ஊர் பேரை பப்ளிக்லே சொல்லி பேசுவோமாம்,இவர் கண்டுக்காம விட்டுடுவாராம்,நல்லாவே காது குத்த ட்ரை பண்ணறே அம்பி! எங்களுக்கெல்லாம் பதினோரு மாசத்திலேயே மொட்டை போட்டு(அஃப்கோர்ஸ் கெடா வெட்டலை!:))காது குத்திட்டா!!

    இன்டர்னெட்லே தக்குடு மாதிரி துப்பறியும் சாம்புகள் நிறைய பேர் சுத்திண்டு இருக்கான்னு தகவல் வந்தது,அதான் நாங்க எங்களுக்குப் புரியற பரிபாஷைலே பேசறோம். "கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை" மாதிரி புரிந்தும் புரியாம என்சொய் பண்ணுங்கோ! ;)

    கனடாலே இப்போ peak ஸம்மர்! இட்லி மாவு அரைச்ச அடுத்த நொடியே பொங்கிடுதாம்! அதுமட்டுமில்லை,இட்லிய ஆவிலே வேகவைக்கத்தேவையே இல்ல, கண்ணாலே பார்த்தாலே இட்லி ரெடியாம்! அதனாலே ஜாக்ரதையா இருந்துக்கரது பெட்டர்!

    ReplyDelete
  37. //நீங்க 102A -வைப் பத்தி எழுதும்போதே உங்க ஊர் வடக்கேதான் இருக்குன்னு புரிஞ்சுபோச்சு. சந்தோஷம் புவனா//
    அவ்ளோ Famous'aa எங்க ஊர்... ஒகே ஒகே...:))

    //என்னவோ கள்ளகடத்தல் கோஷ்டி மாதிரி ஞாயிற்று கிழமை சந்தை, 29A பஸ் போகும்னு பரிபாஷைல பேசினா நாங்களும் அதே மாதிரி பேசுவோமாக்கும்//
    ஹா ஹா ஹா... செம...ஆபீஸ்ல இனிமே உன்னோட போஸ்ட் கமெண்ட் எதுவும் படிக்க கூடாது தக்குடு....:)) இரு இரு, உங்க வீட்ல இனி இட்லி பொங்குதா இல்ல நீ பொங்கறையானு பாக்க தானே போறோம் தக்குடு...:))

    //இட்லியும் ரெடியானதும் இட்லி& மைசூர்பா சூப்பர் எக்ஸ்ட்ரீம்லி ஸ்பீட் போஸ்ட்லே(!!) தோஹாவுக்கு பறந்துவரப்போகுது,ஜாக்ரதை//
    Well said Mahi...:)))))

    //"கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை"//
    மகி.... நீங்க எங்கயோ போயிட்டீங்க...:)))

    ReplyDelete
  38. தக்குடு கமென்ட்டை நைட் 11 மணிக்குப் பார்த்து உடனே உடனே ரிப்ளை பண்ணிட்டு இருந்தேன்,நான் சிரிச்ச சிரிப்பைப் பார்த்து என்னவரும் வந்து படிச்சு சிரிச்சார்! :) :)

    புவனா நான் எங்கேயும் போகலைங்க.இங்கயேதான் இருக்கேன்! ;)

    தேங்க்ஸ் புவனா!

    ReplyDelete
  39. @ மஹி - அனேகமா நான் 3 வாரம் போஸ்ட் போடாததுக்கு சேர்த்து வச்சு அதிகபட்சமா கமண்ட்ல வம்படிச்சது உங்களோட இந்த போஸ்ட்லதான்னு நினைகிறேன். தக்குடுவோட 'தத்துபித்து' கமண்டை பார்த்து சிரிச்ச உங்களுக்கும் உங்க ஆத்துக்காரருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி!! ஆபிஸ்ல வச்சு 'குபீர்'னு சிரிச்ச நம்ப புவனா அக்காவுக்கும் தான்!

    ReplyDelete
  40. //தக்குடுவோட 'தத்துபித்து' கமண்டை பார்த்து சிரிச்ச உங்களுக்கும் உங்க ஆத்துக்காரருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி!! // கண்டிப்பா சொல்லிடறேன் தக்குடு..தக்குடு-ன்ற பேர் ரொம்ப வித்யாசமா இருக்கேன்னு கேட்டார்,உன் ப்ரோஃபைல் போட்டோவைக் காட்டினேன்,அமைதியாய்ட்டார்! :):)

    இங்கே ப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் இந்த "தத்துப்பித்து" உரையாடலை அடிக்கடி சொல்லறார். வீட்டிலிருக்கரவாளை எல்லாம் கண்டுக்காம ப்ளாகர்ஸ் எல்லாம் ஒரு தனி உலகில் சஞ்சாரம் பண்ணிண்டு இருக்கோமாம்!;)

    ReplyDelete
  41. அடடே !!!லேட்டா வந்துட்டனே .இந்த பதிவ முதல்ல படிச்சிட்டு தான் நான் என் தொடர் பதிவை ஆரம்பிச்சிருக்கணும் (கண்ண தொடச்சிக்கறேன்)
    பரவாயில்லை விடுமுறைக்கு அப்புறம் பார்ட் டூ எழுதிடறேன் .
    இத்தனை நாளா உங்க வலைபூ எப்படி என் கண்ல படாம போச்சி .
    i really enjoyed reading this post .

    ReplyDelete
  42. @angelin - மேடம், ஒன்னும் பீல் பண்ணவேண்டாம்! நீங்களும் "உங்க ஊர்ல தானே தக்காளி சந்தை பேமஸ்? 141A பஸ்ல எங்க ஊர்லேந்து ஏறினா உங்க ஊருக்கு 3.25 ரூபா டிக்கெட்டு கரெக்டா? பஸ் ஸ்டாண்டுல இறங்கின இடத்துலேந்து மூனாவது முக்குசந்துல ஒரு டீ கடை வருமே, அங்கேந்து பாத்தா உங்க வீட்டு மாடி ஜன்னல் தெரியுமா?" இந்த மாதிரி ஒரு 4 பிட்டை போட்டேள்னா நம்ப மகி வந்து இதுக்கு சரிக்குசரியா அவங்க 4 அடையாளம் சொல்லுவாங்க!...:)))

    ReplyDelete
  43. wow
    Mahi.........
    Enakku eppave Coimbatore pokanum pole irrukku.
    Ama Chidambaram poonga, exhimision(yes yes exhimision than) ellam vittu poche.
    viji

    ReplyDelete
  44. Thanks mahi,

    kovaiyaipparru niraiya therinjukittom....

    ReplyDelete
  45. @ தக்குடு - சிரிச்சு சிரிச்சு பல்லு சுளுக்கினா dentist பில் உனக்கு தான் அனுப்புவேன்...:))

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails