Tuesday, December 24, 2013

வாழ்த்துக்கள்!

மலரப்போகும் 2014 அனைவருக்கும் நலம்-வளம்-மகிழ்ச்சியை அனுதினமும் அள்ளி வழங்க எங்களின் இனிய வாழ்த்துக்கள்!
~~
Wish You All a Very Happy New Year! 
~~


கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் இயேசு பாலன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
~~

Saturday, December 21, 2013

நன்றி..

கண்மூடிக் கண் திறப்பதற்குள்...
நான்கு லட்சம் என்ற எண்ணிக்கையைக் 
கடந்திருந்த பார்வையாளர் வருகை
ஐந்து லட்சங்களைக் கடந்துவிட்டது! :) 
அடிக்கடி வலைப்பக்கம் வராத காரணத்தால்
5,00,000 என்ற எண்ணை கேமராவில்
பிடிக்க முடியவில்லை!  அதனாலென்ன..
எண்கள் கண்ணாமூச்சி விளையாடினாலும் 
மகிழ்ச்சி மாறாதது!! 
வடை-பாயசத்துடன் நன்றி! :)
~~~
சமீபத்தில் வீடு மாறியிருக்கிறோம். ஜீனோவுக்குப் புதுவீடு மிகப்பிடித்துவிட்டது. அவர் ஓடி விளையாட நிறைய இடமிருப்பதால் தலை தெறிக்க ஓடிப்பிடித்து விளையாடினார்கள்..
பால் காயுது..
பால் பொங்கியாச்சு! 
அன்பேக்கிங் வேலைகள் நடக்கின்றன. நாளும் பொழுதும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடுகின்றன. வலைப்பூவை உயிரோட்டத்துடன் வைக்க வேண்டி கையில் கிடைத்த படங்களுடன் ஒரு பதிவைத் தேத்தியிருக்கிறேன். ஹிஹி...
~~~
பாப்புவின் சைல்ட்-ஸீட் வீடு வந்தபோது ஜீனோவின் வரவேற்பு...
குட்டித் தங்கையின் சின்னச் சத்தங்கள் க்யூரியஸ் ஜீனோவின் க்யூரியாஸிட்டியை இன்னும் உச்சத்துக்குக் கொண்டுபோகின்றன! :) 
வீடு மாற்றம், புதுவரவு என்று நாங்கள் எல்லாரும் கொஞ்சம் பிஸியாக இருக்கவே ஜீனோ தன் இடத்தை தானே தெரிவு செய்து கொண்டார். அவ்வ்வ்வ்!
க்ரிஸ்லி: பாவம் குட்டிப் பையன், என்ர மடில வந்து படுத்துகிட்டான், அவனும் இன்னும் பேபிதானே? 
அப்புச்சி:ஆமாமாம், சின்னப்புள்ள, ஏங்கிப் போயிருமல்ல? 
டெடி:சரி, சரி....ரொம்ப சென்டிமெண்ட் போடாம எல்லாரும் அமைதியா இருங்கப்பா! ஜீனோ கொஞ்சம் தூங்கட்டும்! 
இந்தாட்களின் கலாட்டாக்களை இன்னும் படிக்க விரும்பினால்,  டாய் ஸ்டோரி, டாய் ஸ்டோரி- 2, டாய் ஸ்டோரி-3 இவற்றை படித்து பாருங்க. நன்றி! 

Wednesday, December 11, 2013

ரசித்த பாடல்கள்..

கோவை வானொலியில் தினமும் காலை 6 மணி முதல் 6.45 வரை "பக்தி இசை" ஒலிபரப்பாகும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் பாடல்கள் தலா ஒவ்வொன்று ஒலிபரப்புவார்கள். அப்படி வரும் பாடல்களில் ஒன்றுதான் இது. பின்னணி இசையோ, வேறு எந்த இசைக்கருவிகளோ இல்லாமல், எஸ்.பி.ஷைலஜா அவர்களின் தேன் போன்ற குரலில் இனிமையானதொரு பாடலிது. பாடலைக் கேட்கையில் மனதில் ஒரு அமைதியையும் நிறைவும் தோன்றுமெனக்கு. பலநாட்களாக இணையத்தில் தேடியும் ஒலி வடிவமோ, வரி வடிவமோ அகப்படவில்லை! என் அதிர்ஷ்டம்,  ஊரிலிருந்து மாமா-அத்தை வந்தவர்கள் மனதில் மனப்பாடமாக இருந்த பாடல் வரிகள் கிடைத்தன! :) நான் ரசித்தவற்றை பகிர்வது வழக்கம் என்ற வகையில், நீங்களும் ரசிக்க அந்த வரிகள் இதோ...

அழகெல்லாம் தவழ்கின்ற அற்புதமே வணக்கம்..
அன்னை கன்யாகுமரி கண்மணியே வணக்கம்!

தாமரைத் தாள்களையே ஏழை மனம் நினைக்கும்..
செண்பகப்பூ மணக்கும் அம்பிகையே வணக்கம்!

காலிலிரு கிண்கிணிச் சதங்கைமணி ஒலிக்கும்..
தாளலய பேதமதில் கோலங்கள் பிறக்கும்!

இடைதுவள சிற்றாடை எழில் காட்டும் உன்னை..
இருவிழிகள் இமையாது பருகுவதும் உண்மை!

வளைகுலுங்க வளைந்தசைந்து அலைபுரளும் கரங்கள்..
வரமளிக்க அருகழைக்கும் நவமணிச் சரங்கள்!

கொத்துவட முத்துக்கள் கொஞ்சுகின்ற மார்பு..
கொடுக்கின்ற குளிர்ச்சியல்லால் வேறேது சால்பு?

கற்றைஒளி ரத்தினங்கள் கழுத்தாட ஆடும்..
காதணியைக் கண்கள் என்று கருவண்டு தேடும்!

மாணிக்க மூக்குத்தி மஞ்சள்முகம் மின்ன..
தேனிதழ்கள் விரிந்திருக்கும் செம்பவளம் என்ன?

-----
பாடல் வரிகளில் ஒரு சில வார்த்தைகள் மாறியிருக்க வாய்ப்பிருக்கலாம். சிலவரிகள் காணவில்லையா, அல்லது முழுப் பாடலும் இதுதானா என்ற கேள்வியுமிருக்கிறது. தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். சொல்வீர்கள் என நம்புகிறேன்! :)
-----
அடுத்து வரும் பாடல் பி.சுசீலா அவர்கள் குரலில் இன்னொரு இனிய பாடல்..

"என் மூச்சில் சுவாசிக்கும் புல்லாங்குழல்"- வந்தபின் அவளுக்காய்த் தேடியபோது சிக்கிய இசைமுத்துக்கள் இவை..என் மனப்பெட்டகத்தில் சேமித்ததுடன் வலைப்பெட்டகத்திலும் சேர்த்துவைக்கிறேன்! :)

அப்பா பாசத்தை அழகாய்ச் சொல்லும் சில பாடல்கள்...
இளையராஜாவின் இனிய இசையில் இன்னொரு இனிமையான தாலாட்டு...

எனக்குப் பிடித்த பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!  

LinkWithin

Related Posts with Thumbnails