
பூரி என்றால் அதற்கு உருளை கிழங்கு மசாலா-தேங்காய் சட்னி காம்பினேஷன் தான் எங்க வீட்டில என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதை தனி ரெசிப்பியாக போஸ்ட் பண்ண இப்பதான் நேரம் கூடி வந்திருக்கிறது. :)
உருளைகிழங்கு மசால் -
தேவையான பொருட்கள்வேகவைத்த உருளைக்கிழங்கு -2
பொடியாக நறுக்கிய கேரட் - 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்(மீடியம் சைஸ்)-1
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
வரமிளகாய்-1
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை- கொஞ்சம்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
தண்ணீர்- 3/4கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை வெந்த உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு கடுகு-சீரகம்-கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாய்,கிள்ளிய வரமிளகாய்,கேரட்,தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
உதிர்த்த கிழங்கு,தேவையான உப்பு சேர்த்து கிளறிவிட்டு தேவையான தண்ணீர் (1/2கப் to 3/4கப் சேர்த்திருப்பேன்) விட்டு கொதிக்கவிடவும்.
மசால் வெகுநேரம் கொதிக்கத் தேவையில்லை, ஒரு கொதி வந்ததும், சர்க்கரை சேர்த்து, நறுக்கிய மல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான உருளைகிழங்கு மசால் ரெடி. சப்பாத்தி-பூரிக்கு நல்லா மேட்ச் ஆகும்.
பூரி -
தேவையான பொருட்கள்கோதுமை மாவு/ஆட்டா மாவு -11/2கப்
தண்ணீர் -1/2 கப்
உப்பு-1/4டீஸ்பூன்
செய்முறைபொதுவாக சப்பாத்திக்கு மாவின் அளவில் பாதி தண்ணீர் ஊற்றி பிசைந்தால் சரியாக இருக்கும், ஆனால் பூரிக்கு மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்,அதனால் தண்ணீர் கொஞ்சம் குறைவாக ஊற்றினாலே சரியாக இருக்கும்.
மாவுடன் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்து, காற்றுப்புகாத பாத்திரத்தில் அரைமணி நேரம் வைக்கவும்.
பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

பூரி புஸ் என்று வருவது உருண்டைகளை சீராக தேய்ப்பதில் ( திரட்டுவது
/பரத்துவது..அவிங்கவிங்க ஊர்ல என்ன சொல்லுவீங்களோ, அந்த வார்த்தையைப் போட்டுக்குங்கப்பா! எங்க வீட்டுல தேய்ப்பதுன்னுதான் சொல்லுவோம். :) ) அதனால் பூரிக்கு உருண்டையே சின்னதாக பிடித்துக்கொண்டால் சிறு பூரிகளை தேய்ப்பதும் சுலபமாக இருக்கும். பொரிப்பதற்கும் அதிகம் எண்ணெய் தேவையில்லை,கொஞ்சம் எண்ணெயிலே சுட்டு எடுத்துவிடலாம்.

மைதா அல்லது அரிசிமாவு அல்லது எண்ணெய் தொட்டுக்கொண்டு பூரிகளை வட்டமாகத் தேய்த்து வைத்துக்கொள்ளவும்.

மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து பூரிகளை ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும். எண்ணெயில் போட்டதும் கரண்டியால் பூரியை லைட்டாக அழுத்திவிட்டால் புஸ்ஸென்று உப்பி வரும். அதன்பிறகு திருப்பி விட்டு இரண்டுபுறமும் பொன்னிறமானதும் எடுத்து பேப்பர் டவலில் எண்ணெய் வடியவிட்டு சூடாக மசால் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். தேங்காய் சட்னி ரெசிப்பி பலகாலம் முன்பே குடுத்திருக்கிறேன். அதற்கான லிங்க்
இங்கே.
இது விடுமுறை நாட்களில் ப்ரேக்ஃபாஸ்டுக்கு செய்யலாம், சாப்புட்டதும் சூடா ஒரு கப் காஃபி/டீ குடிக்க மறந்துராதீங்க!:)