Wednesday, April 27, 2016

பாசிப்பருப்பு பாயசம்

பாயசம் செய்யும்போதெல்லாம் பெரும்பாலும் எங்க வீட்டில் செய்யப்படுவது இந்த "பருப்பு பாயசம்" தான்..எனக்கு எந்த பாயசமாக இருந்தாலும் பிடிக்கும், ஆனால் இன்னொருவருக்கு பருப்புப் பாயசம் மட்டும்தான் பிடிக்கும், அதனால் சேமியா/ஜவ்வரிசி பாயசம் செய்யலாமா என்ற கேள்விக்குப் பதிலே கிடைக்காமல் போய்விடும். பலநாட்களாக மறந்து போயிருந்த கேள்வி, தமிழ்ப் புத்தாண்டுக்குத் தலைதூக்க, கேள்வியைக் கேட்காமலே நானாக பதிலை ஊகித்து பாயசம் வைத்தாயிற்று. பருப்பு வேகவைத்த பிறகுதான், இது நம்ம வலைப்பூ-வில பகிர்ந்திருக்கிறோமா என்ற சந்தேகம் வர...படமெடுத்து, இங்கேயும் வந்துவிட்டது பாயசம். 

சாதாரணமான ரெசிப்பிகளாக இருந்தாலும் வீட்டுக்கு வீடு சிறு வித்யாசங்கள் இருக்கும், ஏன் சமைக்கும் ஆளுக்கு ஆள் வித்யாசங்கள் இருக்கும்..எங்க வீட்டு செய்முறை இப்படி..நீங்களும் ஒரு முறை செய்து பாருங்களேன்..! 

தேவையான பொருட்கள் 
வேகவைத்த பாசிப்பருப்பு -1/2கப் 
வெல்லம் - 2 அச்சு (படம் பார்த்தறிக... :)) 
தேங்காய்ப்பால் பொடி - 1டேபிள்ஸ்பூன் (அ) தேங்காய்ப்பால் -1/4கப் 
ஏலக்காய் -2
திராட்சை முந்திரி - கொஞ்சம் 
நெய் - 1 டேபிள்ஸ்பூன்  

செய்முறை
பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஆறியதும் லேசாக மசித்து வைக்கவும்.
ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.
வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கரையவிடவும்.
கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும். 
வெல்லக் கரைசலுடன் வெந்த பருப்பை சேர்க்கவும். 
பருப்பு வெல்லத்துடன் கலந்து நன்கு கொதித்ததும் தேங்காய்ப்பால் பொடியைச் சேர்த்து கட்டிகளில்லாமல் கலக்கி விடவும். அடுப்பின் தணலை குறைத்து வைக்கவும். 

தேங்காய்ப்பால் பாயசத்துடன் நன்கு கலந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்ப் பொடியைச் சேர்க்கவும்.
சிறு கரண்டியில் நெய்யை சூடாக்கி, முந்திரி சேர்க்கவும், பொன்னிறமானதும் திராட்சையைச் சேர்க்கவும்.
 
உடனே பரிமாறுவதாக இருந்தால் பாயசத்தில் கலந்து பரிமாறலாம். அல்லது தனியே வைத்திருந்து பரிமாறும்பொழுது  வறுத்த முந்திரி திராட்சையைக் கலந்துவிட்டு பரிமாறலாம்.

எளிமையான, கொஞ்சம் பொருட்களைக் கொண்டு விரைவில் செய்யும் இனிப்பு. சுவையும் அருமையாக இருக்கும். செய்து பாருங்க. நன்றி! 

Monday, April 18, 2016

மாங்காய் பச்சடி

தேவையான பொருட்கள்
மாங்காய் -1
வெல்லம் - 25கிராம்  (சுமாராக)
எண்ணெய் - தாளிக்க
கடுகு -1/2டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
வரமிளகாய் -2
கறிவேப்பிலை - கொஞ்சம் 
உப்பு - ஒரு சிட்டிகை 

செய்முறை
மாங்காயைக் கழுவி தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மாங்காய்த் துண்டுகள், கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். மாங்காய் வெந்ததும் கரண்டியால் மசிக்கவும். 

ரொம்பவும் மைய மசிக்காமல் ஒரு சில துண்டுகளை விட்டு மசித்திருக்கிறேன். 
வெல்லத்துடன் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து கரையவக்கவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதனுடன் மசித்த மாங்காய்க் கலவையைச் சேர்க்கவும். வெல்லக் கரைசலும் மாங்காயும் நன்கு கலந்து சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். 

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை, கிள்ளிய வரமிளகாய் தாளித்து பச்சடியில் சேர்க்கவும். கலந்து விட்டு பரிமாறவும். 
சுவையான மாங்காய் பச்சடி தயார். 
குறிப்பு 
வெல்லத்தின் அளவை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். ஒரு அச்சு வெல்லக் கட்டியில் பாதியை சேர்த்திருக்கிறேன். 
வேப்பம்பூ கிடைத்தால் அதனையும் தாளிப்பில் சேர்த்து தாளித்து கொட்டலாம். எனக்கு கிடைக்காததால் சேர்க்கவில்லை. 
மாங்காயை நறுக்குவதற்கு பதில் காய் துருவியில் துருவியும் செய்யலாம். குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்தும் வெல்லத்துடன் சேர்க்கலாம், அப்படி செய்கையில் மாங்காய் ஜாம் -பக்குவத்தில் பச்சடி கிடைக்கும். :)

Recipe Courtesy : HERE

Monday, April 11, 2016

மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்
பஜ்ஜி மிளகாய் - 6
பஜ்ஜி மாவு - 1/2கப் 
எண்ணெய் - பொரிக்க 
நறுக்கிய வெங்காயம் - 2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - கொஞ்சம் 
எலுமிச்சை சாறு - அரை எலுமிச்சம் பழத்திலிருந்து. 

செய்முறை
பஜ்ஜி மாவுக்கு தேவையான தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
மிளகாய்களை கழுவி, துடைத்துவிட்டு நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். சில மிளகாய்கள் காரம் இல்லாமல் இருக்கும், சிலது நல்ல காரமாக இருக்கும். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைப்போர் மிளகாய் விதைகளை நீக்கிக்கொள்ளவும். :)
எண்ணெய் காயவைத்து நறுக்கிய மிளகாய்களை பஜ்ஜி மாவில் துவட்டி எண்ணையிலிட்டு பொரிக்கவும்.
பொன்னிறமாக பொரிந்ததும் பேப்பர் டவலில் எண்ணெய் வடியவைத்து எடுத்து வைக்கவும்.
நறுக்கிய வெங்காயத்துடன் பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை (என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை), எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
பஜ்ஜிகள் மீது வெங்காயக் கலவையப் பரப்பி பரிமாறவும்.
சுவையான பஜ்ஜி + சூடான டீ!! மழை பெய்யும் மாலை நேரத்துக்கு சரியான ஜோடி!! :)
குறிப்பு 
பஜ்ஜி மிக்ஸ் இல்லையெனில் கடலை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, உப்பு சேர்த்து கலக்கி உபயோகிக்கலாம். 

Friday, April 1, 2016

இஞ்சி பூண்டு சட்னி

தேவையான பொருட்கள் 
பூண்டு - 7 முதல்10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு
இஞ்சி - கட்டை விரல் அளவு
[யாரோட கட்டை விரல், யாரோட பற்கள் இப்படியான கோக்கு மாக்கான கேள்விகளைத் தவிர்க்கும் பொருட்டு படம் இணைக்கப்பட்டுளது மக்காஸ்!! படம் பார்த்துப் பொருளறிக! ;):) ]
புளி - சிறு துண்டு
வரமிளகாய் -1 
உப்பு 
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
உ.பருப்பு - 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து 

செய்முறை 
இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும்.
இஞ்சி பூண்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் காயவைத்து இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கியதும் புளி, வரமிளகாயைச் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்து ஆறவைக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வதக்கும்போது இருக்கும் எண்ணெயையும் சேர்த்து அரைக்கவும்.

ஒரு டீஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
இட்லி - தோசை- சப்பாத்திக்கு பொருத்தமான சட்னி ரெடி.
ஈஸ்டருக்கு வீட்டுக்கு வந்த டைனோஸர்கள் டைனிங் டேபிளில் இளைப்பாறிக்கொண்டிருந்தன. இட்லி-சட்னியைப் பார்த்ததும் பறந்தோடி வந்து ருசி பார்க்க காத்திருக்கும் டைனோஸர்கள்! :) :)

LinkWithin

Related Posts with Thumbnails