Tuesday, April 11, 2017

Super Bloom, 2017


இந்த வருஷம் வருணபகவான் கலிஃபோர்னியாவிற்கு அபரிமிதமாக வருகை தந்து மண்மகளை குளிரக்குளிரக் குளிப்பாட்டியதில், பூமிப்பெண் மனங்கனிந்து மனிதர்கள் கண்ணுக்கு மலர்விருந்து படைத்திருக்கிறாள்!! :) :) 

காணும் குன்றுப்பகுதிகள், மலைப்பகுதிகள் யாவும் பச்சைப்பட்டுடுத்தி காட்சியளிக்கின்றன. பச்சை என்பதை விடவும், எங்கெங்கிலும் மலர்ந்திருக்கும் மஞ்சள் மலர்கள் பசுமையுடன் கலந்து அற்புதமான இயற்கையின் மலர்க்கண்காட்சி!! 
 
 மஞ்சள் மலர்களில் பெரும்பாலானவை கலிஃபோர்னியாவின் மாநில மலரான " பாப்பி / Poppy " மலர்களே! ஆனால் இவை மலர்வது மனித நடமாட்டம் குறைந்த மலைப்பகுதிகளில்தான்!!
எங்கெல்லாம் இம்மலர்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் சென்று பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்களும் கூட்டம் கூட்டமாக டிஎஸ்எல்ஆர் கேமராக்கள், டிரைபாட் என்று எடுத்துச்சென்று மண்மகளின் எழிலைச் சிறைபிடித்து வருகிறார்கள்.
மஞ்சள் மலர்களில் இன்னுமொரு வகை..இவை போக, சாலையோரங்களிலெல்லாம் "  black eyed susan" மலர்களும், மற்றும் பெயர்தெரியாப்பூக்களும் சிரிக்கின்றன. இதுவரை வந்த படங்களெல்லாம் இணையத்திலிருந்து எடுத்தவை. இனி வருபவை எங்கள் கேமரா படங்கள்! 
~~~
 கணவரும், நண்பர்களும் வழமையாகச் செல்லும் ஹைக்கிங் ட்ரெய்ல் எங்கிலும் கடுகுப்பூக்கள்...!!
 இருமருங்கிலும் வரிசைகட்டிப் பூத்திருக்கின்றன.  ஏரியின் பின்னணியில் மஞ்சள் மலர்கள்!
மஞ்சள் மலர்கள் "மட்டுமே" வந்திருக்கின்றன என்று யாரும் எண்ணாமலிருக்க, கொஞ்சம் பர்ப்பிள் பூக்களும்!! ;) :) 
இந்த முறை எங்கள் இல்ல இரண்டுகால் பூக்கள் அரும்பாகவும், மொட்டாகவும் இருப்பதால் என்னால் எங்கும் சென்று சூப்பர் ப்ளூம்-ஐ கண்டு ரசிக்க இயலவில்லை.  வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ஃபேஸ்புக்கில் வரும் படங்களைத் தவறாமல் கண்டு களித்தாச்சு!! வரும் ஆண்டுகளில் இன்னொரு சூப்பர் ப்ளூம் வராமலா போய்விடப்போகிறது? அப்போ பாத்துக்கலாம்!! 
:) <3 :="" p="">
~~~~~~~~~~~~
கல்லைக்கண்டால் பைரவரைக் காணோம், பைரவரைக் கண்டால் கல்லைக் காணோம் கதையாக என் கண்ணில் லேப்டாப் படுவதே அரிது, அப்படியும் பட்டால் பவர் இல்லாமல் பல்லைக்காட்டும். எல்லாம் சரியாக இருந்தால் நான் பெற்ற செல்லக்கிளி கீச் கீச் என கத்த  ஆரம்பிப்பா!! அப்படி இப்படின்னு, பிப்ரவரிக்கப்புறம் ஏப்ரல்ல ஒரு பதிவு போட்டாச்சு..இனிமேலாவது அடிக்கடி லேப்டாப், பவருடன் என் கையில் கிடைக்கோணும்னு எல்லாரும் வேண்டிக்குங்க.. (என்னடா இது கஷ்டகாலம்? என்றெல்லாம் முணுமுணுக்கக்கூடாது...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!) நன்றி, வணக்கம்! 

Thursday, February 2, 2017

ஐவரானோம்..!!

38 திங்களுக்கு முன்னம் 
எங்களுக்கு ஒரு பதவி உயர்வைத் தந்து 
எங்கள் வாழ்வென்னும் இசைப்பயணத்தில் 
லயம் இணைந்தது! 
:) 
நாட்களும் வருடங்களும் கணப்பொழுதில் ஓடி மறைய...
என் கைக்குள் அடங்கியிருந்த குட்டிக்கை மெல்ல மெல்ல
ஓடி ஆடித் திரிந்து..
சின்னஞ்சிறு குழந்தை 
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து..
எனக்கு நல்லதொரு நட்பாய்ப் பரிமாணமெடுக்க...
இதயத்தின் ஒரு மூலையில் என் குட்டிப் பெண்,
 குழந்தைமை மறைந்து சிறுமியாய் மாறுகிறாளே என்ற சிறு ஆதங்கம் மெல்லியதாய்த் தோன்ற ஆரம்பிக்கையில்..
உன் ஏக்கத்தைப் போக்குகின்றேன்..
உங்கள் வாழ்க்கையில் லயத்துடன் ஸ்வரமும் சேரட்டும் 
என்று இறைவன் புன்னகைக்க..
எங்கள் குடும்பத்தில் தன் குட்டிப்பாதங்களைப் 
பதித்திருக்கின்றாள் எங்கள் இரண்டாவது தேவதை!!!
ஒருவர் இருவரானோம்..
எங்கள் நாலுகால்ப் பிள்ளையுடன் மூவரானோம்...
லயாவுடன் நால்வரானோம்..
இப்போது, 
ஸ்வரா-வுடன் ஐவராகி இருக்கிறோம்!!! 
:)))))) 
மழையின் துளியில் லயம் இருக்குது..
துளிகள் இணைந்து ஸ்வரம் பிரிக்குது!! 
வாழ்க்கை இனி இன்னும் இனிக்கப்போகுது!! 
:))))) 
We are Blessed with Another Beautiful Girl!! 
~~~~~
வழமை போல உங்களனைவரின் ஆசிகளை நாடி..
லயா, ஸ்வரா, ஜீனோ, அருண் 
மகி 

Friday, January 27, 2017

ப்ரோக்கலி


அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு "Raised Bed" Garden -ஐ உருவாக்கி, காய்கறிகள் வளர்க்கலாம் என ஆர்வத்தோடு செடிகள் வாங்கபோனால்...இந்தியக்காய்கறிகள் எல்லாம் கோடை விரும்பிகள், குளிர்காலத்தில் வரும் காய்கறிகள்தான் இப்போது வளர்க்கவேண்டும் என உரைத்தது. ;) :)  சரி பரவாயில்லை என்று வாங்கி வந்து அப்படி இப்படி என்று அவையும் வளர்ந்து அறுவடையும் செய்த பின்னர் ஒரு பகிர்வு.  

மேலே படத்தில் நர்ஸரியிலிருந்து வந்து மண்ணில் நட்ட உடன், நாற்றுகள்..வலப்புற ஓரத்தில் இருப்பதுதான் ப்ரோக்கலி நாற்றுகள். சுமார் ஒரு மாதம் ஆனபின் செடிகள் உயிர் பிடித்து வளர ஆரம்பித்த போது..

அடுத்த ஒரு மாதமும் கடந்தது..செடிகள் செழித்து வளர்ந்தன. காய் பிடிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவரவில்லை...
திடீரென்று ஒரு நாள் காலை பார்க்கையில்..
நட்டிருந்த அரை டஜன் ப்ரோக்கலி நாற்றுகளிலும் குட்டிக்குட்டியாய்ப் ப்ரோக்கலி மொட்டுக்கள் வந்திருந்தன..!! :) :D :) 

நாட்கள் நகர நகர ப்ரோக்கலி மொட்டுக்கள் அழகான :) ப்ரோக்கலி-யாக வளர ஆரம்பித்தன..
இன்னுங்கொஞ்சம் ப்ரோக்கலி மொட்டுக்கள் பெரிதானதும், கட்டுக்கள் போட்டு,  காய் முற்றும் வரை பத்திரப்படுத்துவோம் என நினைத்திருந்த நேரம் ..
மழை வந்தது..வெளியே கால் வைக்க முடியாத அளவு சேறு, குளிர்..எல்லாம் காய்ந்து எட்டிப்பார்க்கையில்...
அணில்பிள்ளைகள் வந்து தம் கைவரிசையைக் காட்டிப்போயிருந்தார்கள்!! :( :) :( 

மீதமிருந்த காய்களை செடியின் இலைகளால் மூடி ரப்பர் பாண்ட் போட்டு கட்டி வைத்தோம்..அடுத்த நாள் பார்க்கையில், 
அழகாக ரப்பர் பாண்டை- பிரித்து உள்ளே இருந்த ப்ரோக்கலிப் பிஞ்சு சுவைக்கப்பட்டிருந்தது!!! :) :) :( :)  இலைகளும் விட்டு வைக்கப்படவில்லை!! அவ்வ்வ்வ்வ்......!! 
ஆக மொத்தம் அணில்களும் நாங்களுமாக  50-50அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு, ஆளுக்கு மூன்று என்ற வகையில் ப்ரோக்கலிகளைப் பிரித்துக்கொண்டோம். மூன்றில் ஒரு ப்ரோக்கலி, முழுவதுமாக முற்றுமுன் பொங்கலுக்கு அறுவடை செய்யப்பட்டது. மீதமிருந்த இரண்டு காய்கள்..

நேற்று ஒன்றை பறித்து ...
வளைச்சுக்கட்டி ஃபோட்டோ எடுத்துட்டு...
சமைச்சுச் சாப்பிட்டாச்சு!! :)))) 
கடைகளில் வாங்கும் ப்ரோக்கலியை விட அருமையான சுவையில் சூப்பராக இருந்தது. நம்ம வீட்டில வளர்த்து, அணிலுக்கும் கொடுத்து நாமும் சாப்பிடும் சுவையே தனிதான்!! 
அக்டோபர் முதல் வாரம் நட்டு, ஜனவரி 26ஆம் தேதி அறுவடை செய்திருக்கிறோம், இன்னுங்கொஞ்சம் முன்னதாகவே பறித்திருக்கலாம்! ரீசண்ட்டாக  (எங்களுக்கு) அறிமுகமான ஒரு காயை வீட்டிலேயே வளர்த்து சமைச்சு சாப்பிடுவது ரொம்ப சந்தோஷமான அனுபவம்!! :)  உங்களுக்கு முடியுமெனில் முயற்சித்துப் பாருங்களேன்!! 


Monday, January 16, 2017

பொங்கல் 2017

இந்த வருஷ பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள்...!  


கோலங்கள் கோவையில் அம்மா வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் போடப்பட்டவை. வாட்ஸப் உபயத்தில் சுடச்சுட அமெரிக்கா வந்த கோலங்கள் இப்ப இங்கேயும் வந்தாச்சு! :) 
~~~~~
அறுவடைத் திருநாளுக்கு எங்க வீட்டுத் தோட்ட அறுவடை..கத்தரிக்காய், ப்ரோக்கலி, எலுமிச்சை,  ஒரு தக்காளி, இரண்டு குட்டிப் பழ மிளகாய்கள்! :)))  + சர்க்கரைப் பொங்கல் & வெண்பொங்கல்!  
சாமி கும்பிடும் குட்டிச்சாமி!! ;) 
 நீங்க எல்லாரும் சந்தோஷமா பொங்கல் கொண்டாடி இருப்பீங்க என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கலாம்..நன்றி! 

LinkWithin

Related Posts with Thumbnails