Sunday, January 31, 2010

ஆப்பம்



தேவையான பொருட்கள்
பச்சரிசி(சோனா மசூரி அரிசி) - 2 கப்
தேங்காய் - கால் மூடி
சர்க்கரை - 2 ஸ்பூன்
பழைய சாதம் - 2 கைப்பிடி
உப்பு

செய்முறை

பச்சரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து, பழையசாதம் தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.

சர்க்கரை, உப்பு சேர்த்து கரைத்து மாவைப் புளிக்க வைக்கவும்.(12 மணி நேரம்)

ஆப்ப சட்டியை காயவைத்து இரண்டு கரண்டி மாவை ஊற்றி சட்டியை சுழற்றவும். மாவு சீராகப் பரவியதும் மூடி போட்டு வேக விடவும்.



ஆப்பம் வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.

இதற்கு தேங்காய்ப்பால் மிகவும் பொருத்தமான சைட் டிஷ். காரம் விரும்புவோர் தேங்காய் சட்னி, வெஜிடபிள் ஸ்டூ உடன் சாப்பிடலாம்.



Friday, January 29, 2010

இனிய வார இறுதி!

மார்பிள் கேக்



நான் ஏற்கனவே தமிழ்குடும்பம்.காம் -இற்கு அனுப்பிய ரெசிப்பி இது ..கோவிச்சிக்காம இந்த கேக்-ஐ சாப்பிட்டுட்டு, ரெசிப்பிய இங்கே போய் பாருங்க,ப்ளீஸ்!! :)


இது கடந்த முறை நான் செய்த மார்பிள் கேக்...

பேக் செய்த கேக் முற்றிலுமாக ஆற சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் எடுக்கும். அது வரைக்கும் பொறுமையாக :) காத்திருக்கணும்.

இது அவன்-லிருந்து எடுத்தவுடன்...


பொறுமையாக காத்திருந்து கேக்கை பானிலிருந்து எடுத்து கட் செய்து இப்படி அழகாகவும் சாப்பிடலாம்..


இல்லைன்னா..எங்க வீட்டு எலி:) சாப்பிட்டிருக்கு பாருங்க..அப்படியும் சாப்பிடலாம்!

சாப்பிடுவது உங்க வசதி! :)))))))


நன்றி :தமிழ்குடும்பம்.காம்

Thursday, January 28, 2010

போண்டா



தேவையான பொருட்கள்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை -சிறிதளவு.
இஞ்சி - 1 இன்ச் துண்டு
சீரகம் - 3/4 ஸ்பூன்
சர்க்கரை - 1/2 ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
பஜ்ஜி மாவு - 1 கப்
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு.



செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் உதிர்த்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.



மசாலாவை மூணு நிமிடம் மிதமான தீயில் வதக்கி கொத்துமலை இலை, சர்க்கரை தூவி இறக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.




பஜ்ஜி மாவில் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.



கிழங்கு உருண்டைகளை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


சூடான போண்டா ரெடி!



தேங்காய் சட்னி அல்லது டொமாட்டோ கெச்சப்புடன் பரிமாறுங்கள்.



குறிப்பு
  • பஜ்ஜி மாவு இல்லையென்றால் ஒரு கப் கடலை மாவு + காரத்திற்கேற்ப மிளகாய்த்தூள் + கால்ஸ்பூன் பெருங்காயத்தூள் + அரை ஸ்பூன் சீரகத்தூள் + இரண்டு சிட்டிகை ஆப்பசோடா + உப்புசேர்த்து தேவையான நீர் விட்டு கரைத்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பின்னர் மீண்டும்கட்டியில்லாமல் கரைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.
  • ப்ளெய்ன் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு பதிலாக, கிழங்குடன் பொடியாக நறுக்கி வேக வைத்த கேரட்,பீன்ஸ், பட்டாணி இவற்றையும் சேர்த்து வெஜிடபிள் போண்டாவாகவும் செய்யலாம்.
  • மசாலாவில் இறுதியாக அரை ஸ்பூன் கரம் மசாலா தூவி, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் போண்டா வழக்கத்தை விட மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

இடியப்பம் - முன்கதை


கோவையில் நான் இடியப்பம் சாப்பிட்டதே இல்லை..அங்கே சந்தகை தான் பிரபலம்..குறிப்பாய் திருமணம் முடிந்து முதன்முதலில் பெண்வீட்டுக்கு வரும் மாப்பிளைக்கு டிபன் சந்தகை தான்..கூடவே இனிப்பிற்கு ஒப்பிட்டு (போளி) செய்வார்கள். எங்க வீட்டில் சந்தகை எப்படி செய்வோம் என்றால்,


தரமான புழுங்கல் அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேக வைக்கவேண்டும். இட்லிகள் வெந்ததும் சந்தகை மிஷினில் சூடான இட்லிகளைப் போட்டு பிழிய வேண்டும். அவ்வளவுதான், சந்தகைரெடி!


முதலில் மரத்தில் தான் இந்த சந்தகை பிழியும் மிஷின் இருக்கும்..பின்னர் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்-இலும் வந்துவிட்டது. குறைந்தது ஓரடி உயரம் இருக்கும்..ஒரு ஈடுக்கு அதிகபட்சம் நான்கு இட்லிகள் போட்டுப் பிழியலாம்..அதற்குள் மற்ற இட்லிகள் ஆறிவிடும்.வெறும் அரிசி மாவு இட்லிகள் என்பதால் ஒவ்வொரு இட்லியும் பாறை மாதிரி இறுகிப் போய்விடும்...ஆறிய இட்லிகளைப் பிழிவதற்குள், அப்பப்பா..ரொம்ப கஷ்டம்! ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மிஷின் வந்ததில் இருந்து சந்தகை பிழியும் வேலை கொஞ்சம் சுலபமாகிவிட்டது.


இனிப்பு சந்தகை என்றால் சைட் டிஷ் தேங்காய்ப்பால் அல்லது சர்க்கரை,தேங்காய்த்துருவல். கார சந்தகை என்றால் வெங்காயம்,மிளகாய் போட்டு தாளித்து விடுவார்கள்.அதிலே லெமன் ஜூஸ் சேர்ப்பது, அல்லது தக்காளி சேர்த்து வதக்குவது எல்லாம் நம் வசதிப்படி செய்து கொள்ளலாம்.


காலம் மாற,மாற ரைஸ் சேவை என்று கடைகளில் விற்பனைக்கு வந்தது..முதலில் காய வைத்து சேமியா போன்ற வடிவில் பாக்கெட்களில் வந்தது..பின்னர், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பிரெஷ்-ஆக சந்தகை விற்பனைக்கு வந்தது..இப்பொழுதெல்லாம் ஒரொரு சாலை முனையில் இருக்கும் பெட்டிக்கடையிலும் பிரஷ் சந்தகை கிடைக்கும்! முன் போல மாவரைத்து, கை வலிக்கப் பிழியவேண்டிய அவசியமில்லை.

என்னிடம் இருக்கும் குட்டியூண்டு முறுக்கு அச்சில் சந்தகை செய்யும் ரிஸ்க் எல்லாம் எடுக்க தைரியம் வரவில்லை..அதுவுமில்லாமல், இங்கே நிறைய தோழிகள் இடியப்பம்செய்வதைப் பார்த்து ஒரு ஆர்வக்கோளாறில் இடியப்பம் செய்ய ஆரம்பித்தேன்.

ரொம்ப கதை சொல்லி போரடித்துட்டேனா?? ஓகே,ஓகே..இவ்வளவு நேரம் நீங்க பொறுமையா படிச்சதுக்கு நன்றிகள் சொல்லிக்கொண்டு, இடியப்பத்திற்கு நான் செய்யும் சைட் டிஷ் ஒன்றைப் பற்றியும் சொல்லிடறேன். இந்த ரெசிப்பி என் தோழி ஒருவருடையது..செய்து பார்த்து சொல்லுங்க!


ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பியைக் காண இங்கே செல்லுங்கள்..

நன்றி : வானதி :)

Wednesday, January 27, 2010

பச்சைப்பயறு கடைசல்

தேவையான பொருட்கள்
பச்சைப் பயறு - 1/4 கப் (சுமார் 60 கிராம்)
வெங்காயம் - பாதி
தக்காளி - 1
பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப
பூண்டு - 2 பல்
கொத்துமல்லி விதை - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு















செய்முறை


பச்சைப் பயறை வெறும் கடாயில் மிதமான சூட்டில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து கொத்துமல்லி,சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய், பூண்டு,தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சைப்பையறை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரை வேக விடவும்.

ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து தேவையான உப்பு மற்றும் கொத்துமல்லி இலை சேர்த்து பச்சைப்பையறை கடையவும்.


சுவையான பச்சைப்பயறு கடைசல் ரெடி!















குறிப்பு

  • சூடான சாதத்துடன் தேங்காயெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, இந்தப் பச்சைப்பயறு சேர்த்துப்பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதற்கு மோர் மிளகாய் / ஊறுகாய் பெஸ்ட்காம்பினேஷன்.
  • இதே போல் துவரம் பருப்பு, தட்டைப் பயறு,கொள்ளு,பச்சைத் துவரைவிதை, லென்டில் போன்ற தானியங்களையும் கடையலாம்.
  • பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் சுவை மிக நன்றாக இருக்கும்.

Tuesday, January 26, 2010

பான் கேக்



தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் ப்ளோர் - 1 கப்
முட்டை - 1
பால் - 1 டம்ளர் [ 270 ml.]
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1 1/2 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்



செய்முறை
ஆல் பர்ப்பஸ் மாவு (அ) மைதாவுடன் சர்க்கரை, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக சலித்து வைக்கவும்.



முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும். அத்துடன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.



பால் + முட்டை கலவையுடன் சலித்து வைத்த மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.




மாவுக்கலவை தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்..கெட்டியாக இருப்பதாகத் தோன்றினால் சிறிது பால் சேர்த்து கரைத்துக்கொள்ளலாம்.




தோசைக்கல்லை காயவைத்து இரண்டு (சிறிய) கரண்டி மாவை ஊற்றவும். மாவு தானே பரவிக்கொள்ளும். [தோசை ஊற்றுவது போல கரண்டியால் வட்டமாக தேய்க்கக்கூடாது.]



ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போடவும். பான் கேக் இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.





சூடான பான் கேக்குகள் மீது அரை ஸ்பூன் வெண்ணெய் வைத்து மேப்பிள் சிரப் (அ) தேன் ஊற்றி பரிமாறவும்.

சாஃப்ட்டான பான் கேக் தயார்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்..முட்டை, பால் சேர்ப்பதால் சத்துள்ளதும் கூட.



குறிப்பு
  • பான் கேக் மிக்ஸ் [ மாவு + சர்க்கரை + உப்பு + பேக்கிங் பவுடர் ] மொத்தமாக தயாரித்துவைத்துக்கொண்டால் அவ்வப்பொழுது கரைத்து ஈஸியாக செய்துகொள்ளலாம்.
  • இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகளுக்கு படத்திலுள்ள அளவில் 8 பான்கேக்குகள் செய்யலாம்.
  • மாவு மீந்துவிட்டால் பிரிட்ஜில் வைக்காமல் பான் கேக்குகளாகவே சுட்டு பிரீசரில் வைக்கவும். தேவையான போது எடுத்து சூடு செய்து சாப்பிடலாம்.

Monday, January 25, 2010

பீட்ரூட் சட்னி

தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1 (மீடியம் சைஸ்)
வெங்காயம் - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 5 அல்லது உங்கள் காரத்திற்கேற்ப
கடலைப் பருப்பு & உளுந்துப் பருப்பு - தலா 1 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
புளி - கொட்டைப்பாக்களவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு



செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி, துருவிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பை பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.

பின்னர் வெங்காயம்,மிளகாய்வற்றல், புளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பீட்ரூட் துருவல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி ஆறவைக்கவும்.




ஆறியதும் தேவையான உப்பு,சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.



பீட்ரூட் சட்னி தயார்!

குறிப்பு
  • இந்த சட்னி சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி,தோசை , சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும்.
  • ப்ரெட் ஸ்லைஸ்களில் தடவி சாண்ட்விச் ஆகவும் சாப்பிடலாம்.
  • இதே போல் முட்டை கோஸ், குடை மிளகாய் போன்ற காய்களிலும் செய்யலாம்.

Friday, January 22, 2010

வெஜிடபிள் சேமியா உப்புமா


தேவையான பொருட்கள்
சேமியா - 1 கப்
கேரட் - 1 (சிறியது)
பட்டாணி(ப்ரோசன்) - 1/4 கப்
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப
மிளகாய் வற்றல் - 2
இஞ்சி - சிறு துண்டு
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப் பருப்பு, உளுந்துப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை , கொத்துமல்லி இலை - சிறிதளவு
சர்க்கரை - 1/2 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை
சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

கேரட்டை பொடியாக நறுக்கி அரை கப் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் நான்கு நிமிடங்கள் வேக வைத்துக்கொள்ளவும்.

சேமியாவை ஒரு மைக்ரோவேவ் ஸேப் பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நான்கு நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இவற்றை வதக்கவும். தேவையான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

வேகவைத்த கேரட் மற்றும் ப்ரோசன் பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

இறுதியாக வேக வைத்த சேமியாவை சேர்த்துக் கிளறி மூன்று நிமிடங்கள் குறைந்த தணலில் வைக்கவும். நறுக்கிய கொத்துமல்லி இலை தூவவும்.

சுவையான,உதிர்-உதிரான சேமியா உப்மா ரெடி! தேங்காய் சட்னி/ ஊறுகாய் இதற்கு பெஸ்ட் காம்பினேஷன்.



குறிப்பு
மைக்ரோவேவ்-ல் சமைக்கும் பொழுது ஸ்டேண்டிங் டைம் மிக முக்கியம்..உதாரணத்துக்கு நான்கு நிமிடங்கள் வேக வைத்தால், நான்கு நிமிடம் முடிந்து மைக்ரோவேவ் ஆப் ஆனவுடனே மைக்ரோவேவ்-ஐத் திறக்கக் கூடாது. இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே திறக்க வேண்டும்.
சேமியாவை தனியாக வேக வைத்து சேர்ப்பதால் குழைந்து போகாமல் பொல-பொலவென்று இருக்கும்.
இந்த உப்மாவில் உங்கள் கற்பனைத்திறனை உபயோகித்து:) பல்வேறு விதமாகச் செய்யலாம்.
  • தாளிக்கும்போது சிறிது சீரகம், கொஞ்சம் தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.
  • காய்கறிகள் சேர்க்காமல் ப்ளைன் சேமியா உப்மா செய்யலாம்.
  • பச்சை மிளகாய் அளவைக் குறைத்துக்கொண்டு மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கலர்புல்லாக செய்யலாம்.
  • காய்கறிகளில் பீன்ஸ், கார்ன்,குடை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இறுதியாக சிறிது லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பட்டை-கிராம்பு சேர்த்து சேமியா பிரியாணியாகவும் செய்யலாம்.
சேமியாவை மொத்தமாக வறுத்து வைத்துக்கொண்டால் உப்மா செய்கையில் வசதியாக இருக்கும்.

என் சமையலில் பெரும்பாலும் எல்லாவற்றிலும் இறுதியாக சர்க்கரை சேர்த்துவிடுவேன்..இது என் மாமியாரிடமிருந்து என்னைத் தொற்றிக்கொண்ட பழக்கம். சாம்பார் முதல், உப்மா வரை எல்லாவற்றிலும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

Thursday, January 21, 2010

இடியப்பம்













தேவையான
பொருட்கள்
அரிசிமாவு - 1 1/2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் / நெய்- 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை
தண்ணீருடன் உப்பு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதி வந்தவுடன் எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு, அரிசி மாவில் ஊற்றி, ஒரு ஸ்பூனால் கலக்கி பாத்திரத்தை, (குறைந்தது) அரை மணி நேரம் இறுக்கமாக மூடி வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து பாத்திரத்தைத் திறந்து மாவை நன்றாகப் பிசையவும். மாவு முறுக்கு மாவு பதத்திற்கு வரும். இடியப்ப அச்சில் மாவைப் போட்டு பிழிந்து இட்லித்தட்டுகளில் வேகவைத்து எடுக்கவும்.






























சுவையான இடியப்பம் ரெடி!
குறிப்பு
எங்க வீட்டில் [எங்க வீடு என்பது என் அம்மா வீடு, மாமியார் வீடு இரண்டுமே :) ], இடியப்பமெல்லாம் செய்ததே இல்லை..யு.எஸ்.வந்தபின்னரும் பலநாள் ப்ரோசன் இடியப்பம்தான் வாங்கிக்கொண்டிருந்தேன்.சமீப காலமாக ப்ரோசன் உணவு வகைகள் வாங்குவது கிட்டத்தட்ட நின்று போய், நானே வீட்டில் எக்ஸ்பெரிமென்ட் செய்து கொண்டிருக்கிறேன். இடியப்பமும் ஒரு வெற்றிகரமான சோதனை முயற்சியாகி, எங்க வீட்டு டிபனில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. :)

Wednesday, January 20, 2010

தஹி பூரி


பூரி - தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
மைதா மாவு / ஆல் பர்ப்பஸ் ப்ளோர் - 3 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர்

செய்முறை
ரவையுடன் எண்ணெய், உப்பு சேர்த்து கலக்கவும். தண்ணீரை சிறிதளவு தெளித்து நன்றாக பிசையவும்.

ரவையும் தண்ணீரும் நன்கு கலந்தவுடன் மைதாவை சேர்த்து ,தேவைப்பட்டால்,மிகக் குறைவான தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு ( கெட்டியாக) பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை பத்து நிமிடங்கள் காற்றுப் புகாத பாத்திரத்தில் மூடி வைக்கவும்.

பத்து நிமிடங்கள் கழித்து மாவை சற்றே பெரிய உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். குக்கீ கட்டர் அல்லது பாட்டில் மூடியைக் கொண்டு சிறிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

எண்ணெயை மிதமான சூட்டில் காய வைத்து பூரிகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

கிரீன் சட்னி - தேவையான பொருட்கள்
புதினா - 1 கப்
கொத்துமல்லி இலை - 1 கப்
பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப)
சீரகம் - 1/2 ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
உப்பு
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்

செய்முறை
எலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
இறுதியாக எலுமிச்சை சாறு கலக்கவும்.
கிரீன் சட்னி தயார்.

ஸ்வீட் சட்னி - தேவையான பொருட்கள்
உலர் திராட்சை - 15
பேரீட்சை - 10
வெல்லம் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 3/4 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
புளிக்கரைசல் -1/4கப்
உப்பு

செய்முறை
அனைத்துப் பொருட்களுடன் 1 அல்லது 11/2கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைத்து, ஆறிய பின்னர் மிக்சியில் அரைத்தெடுக்கவும்.

தஹி பூரி
தேவையான பொருட்கள்
பூரிகள் - 12
தயிர் - 1 கப்
ஸ்வீட் சட்னி - 1/4 கப்
கிரீன் சட்னி - 1/4 கப்
வேக வைத்த கொண்டைக்கடலை - 1/2 கப்
வேக வைத்த உருளைக் கிழங்கு - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி, கொத்துமல்லி இலை - 1/4 கப்
சாட் மசாலா - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்
பூந்தி - சிறிதளவு
சர்க்கரை - 1 ஸ்பூன்

செய்முறை
தயிருடன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு நீரும் சேர்த்து நன்றாக கலக்கவும். தயிர் மீது மிளகாய்த்தூள் & சீரகத்தூளைத் தூவி வைக்கவும்.

வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு தட்டில் 6 பூரிகளை அடுக்கி, ஒவ்வொரு பூரியின் ஒரு பக்கத்தையும் சிறிதாக உடைத்து விட்டு சிறிது தயிர், உருளைக் கிழங்கு, கொ.கடலை,ஸ்வீட் சட்னி,கிரீன் சட்னி, வெங்காயம்,தக்காளி,கொத்துமல்லி இலை இவற்றை வைக்கவும்.

அதன் மீது மீண்டும் சிறிதளவு ஸ்வீட் சட்னி மற்றும் கிரீன் சட்னியை ஊற்றி, சாட் மசாலா தூவி, பூந்திகளைத் தூவி மேலும் சிறிது கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

ஸ்டஃபிங் இதே வரிசையில் இருக்க வேண்டியதில்லை..உங்கள் விருப்பப்படி பூரிகளை நிரப்பிக் கொள்ளலாம். :)






குறிப்பு
பூரிகள்,கிரீன் சட்னி,ஸ்வீட் சட்னி எல்லாவற்றையும் மொத்தமாகத் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். சட்னிகளை பிரிட்ஜில் ஒரு மாதம் வரை வைக்கலாம். பூரிகளையும் ஏர் டைட் டப்பாக்களில் வைத்து உபயோக்கிக்கலாம்.

Thanks to : http://vahrehvah.com/

LinkWithin

Related Posts with Thumbnails