Sunday, September 29, 2013

புதினா-வெங்காய சாண்ட்விச் / Mint Onion Sandwich

தேவையான பொருட்கள்
புதினா சட்னி 
சுத்தம் செய்யப்பட்ட புதினா இலைகள்-1/4கப்
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப) 
தேங்காய்த் துருவல்-1டேபிள்ஸ்பூன்
புளி-சிறிது
உப்பு
எண்ணெய் 
வதக்கிய வெங்காயத்திற்கு
நீளமாக நறுக்கிய வெங்காயம்-1
சீரகம்-1/4டீஸ்பூன்
கறிமசாலாதூள்-1/2டீஸ்பூன்
மல்லித்தூள்-1/8டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/8டீஸ்பூன்
உப்பு 
எண்ணெய் 
வீட் ப்ரெட் (அ) விருப்பமான ரொட்டித் துண்டுகள்-6
ஆலிவ் ஆயில்-2டீஸ்பூன்

செய்முறை 
கடாயில் சிறிது எண்ணெய் காயவைத்து பச்சைமிளகாயை வதக்கவும். அதனுடன் புதினா இலைகள், புளி சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கி எடுத்துவைக்கவும். 
ஆறியதும் இவற்றுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைத்தெடுக்கவும்.
புதினா வதக்கிய கடாயிலேயே இன்னும் சிறிது எண்ணெய் சூடாக்கி, சீரகத்தை பொரியவிடவும். 
நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சுவைக்கு உப்பும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய்-மல்லி-கறிமசாலாப் பொடிகளைச் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்.
க்ரில்லில் லேசாக எண்ணெய் தடவி, சூடாக்கிக் கொள்ளவும்.
ரொட்டித் துண்டுகளில் ஒரு புறம் புதினா சட்னியைத் தடவி, அதன் மேல் வதக்கிய வெங்காயத்தை வைத்து..
இன்னொரு ரொட்டித் துண்டை அவற்றின் மீது வைத்து, ஆலிவ் ஆயில் கொஞ்சம் தெளித்து விட்டு..
க்ரில்லை மூடி வைக்கவும்.
2 அல்லது 3 நிமிடங்களில் சுவையான புதினா-வெங்காய சாண்ட்விச் ரெடியாகி இருக்கும்.
கத்தியால் முக்கோணமாக நறுக்கி, சூடாகப் பரிமாறவும்.
சுடச்சுட சாப்பிட காரசாரமான  சுவையான மொறுமொறு "மின்ட்-ஆனியன் சாண்ட்விச்" ரெடி!
ஈவினிங் டீ-யுடன் சூப்பர் ஜோடி இந்த சாண்ட்விச்! :) 
க்ரில்-லிற்கு பதிலாக ப்ரெட் துண்டுகளை தோசைக்கல்லிலும் வாட்டி எடுக்கலாம். இங்கே கொடுத்துள்ள அளவிற்கு 6 முதல் 8 ரொட்டித்துண்டுகள் உபயோகித்து 3 அல்லது 4 சாண்ட்விச்கள் செய்யலாம். 

Recipe Inspiration: Here

Wednesday, September 25, 2013

3 இன் 1 ஓட்ஸ் ரெசிப்பிகள்

ஓட்ஸ் எலுமிச்சை உப்மா,  ஓட்ஸ் தக்காளி உப்மா, ஓட்ஸ் தேங்காய் உப்மா
ஓட்ஸ் எலுமிச்சை உப்மா/ லெமன் ஓட்ஸ் 
தேவையான பொருட்கள்
ரோல்ட் ஓட்ஸ்-1கப்
தண்ணீர்-11/2கப்
எலுமிச்சை-1
வெங்காயம்-பாதி
பச்சைமிளகாய்-2
வரமிளகாய்-1
கறிவேப்பிலை- கொஞ்சம்
கடுகு-1/2டீஸ்பூன்
வேர்க்கடலை-1டேபிள்ஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
உப்பு
நல்லெண்ணெய்

செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கவும். வரமிளகாயை கிள்ளி வைக்கவும். 
ஓட்ஸை வெறும் கடாயில் வாசனை வர வறுத்து ஆறவைக்கவும். 
ஒண்ணரைகப் தண்ணீரை கொதிக்க வைத்து வறுத்த ஓட்ஸை சேர்த்து வேகவிடவும். ஓட்ஸ் சில நிமிடங்களில் வெந்துவிடும். [தண்ணீர் அதிகம் இருப்பதுபோல தோன்றினால் ஓட்ஸை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும், அடுத்த முறை செய்கையில் கவனமாக, குறைவாக தண்ணீர் கொதிக்கவைத்து ஓட்ஸை வேகவைக்கவும். :) ]
கடாயில் நல்லெண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு தாளித்து, பருப்புகள் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், வெங்காயம், பச்சைமிளகாய், வரமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் வதங்கியதும் சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு, வெந்த ஓட்ஸையும் சேர்க்கவும்.
தீயைக் குறைத்துக்கொண்டு ஓட்ஸ் நன்கு சூடானதும் எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான ஓட்ஸ் எலுமிச்சை உப்புமா, லெமண்ட் ஓட்ஸ் ரெடி. அவல் உப்புமா போலவே ருசி பிரமாதமாக இருக்கும். ஃபைனல் டச்- ஆக chia seeds-தூவி சாப்பிடலாம்.
~~~
ஓட்ஸ் தக்காளி உப்மா/டொமட்டோ ஓட்ஸ்  
தேவையான பொருட்கள் 
ரோல்ட் ஓட்ஸ்-1கப்
தண்ணீர்-11/2கப்
தக்காளி-2
வெங்காயம்-பாதி
பச்சைமிளகாய்-2
வரமிளகாய்-1
கறிவேப்பிலை- கொஞ்சம்
இஞ்சி-சிறுதுண்டு
பூண்டு -ஒரு சிறிய பல்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கவும். வரமிளகாயை கிள்ளி வைக்கவும். இஞ்சி-பூண்டைத் தட்டி வைக்கவும். 
ஓட்ஸை வெறும் கடாயில் வாசனை வர வறுத்து ஆறவைக்கவும். 
ஒண்ணரைகப் தண்ணீரை கொதிக்க வைத்து வறுத்த ஓட்ஸை சேர்த்து வேகவிடவும். ஓட்ஸ் சில நிமிடங்களில் வெந்துவிடும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு தாளித்து, பருப்புகள் பொன்னிறமானதும் நசுக்கிய இஞ்சி-பூண்டைச் சேர்த்து கிளறவும். 
கறிவேப்பிலை, மஞ்சள்தூள், வெங்காயம், பச்சைமிளகாய், வரமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். 
சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு, வெந்த ஓட்ஸையும் சேர்க்கவும். தீயைக் குறைத்துக்கொண்டு ஓட்ஸ் நன்கு சூடானதும் உப்மாவை அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான தக்காளி ஓட்ஸ் உப்புமா ரெடி.
~~~
ஓட்ஸ் தேங்காய் உப்மா/கோக்கனட் ஓட்ஸ் 
தேவையான பொருட்கள் 
ரோல்ட் ஓட்ஸ்-1கப்
தண்ணீர்-11/2கப்
வெங்காயம்-பாதி
பச்சைமிளகாய்-2
தேங்காய்த் துருவல்-2டேபிள்ஸ்பூன் 
கறிவேப்பிலை- கொஞ்சம்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் (விரும்பினால் தேங்காயெண்ணெய் உபயோகிக்கலாம்)

செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கவும். வரமிளகாயை கிள்ளி வைக்கவும்.  
ஓட்ஸை வெறும் கடாயில் வாசனை வர வறுத்து ஆறவைக்கவும். 
ஒண்ணரைகப் தண்ணீரை கொதிக்க வைத்து வறுத்த ஓட்ஸை சேர்த்து வேகவிடவும். ஓட்ஸ் சில நிமிடங்களில் வெந்துவிடும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு தாளித்து, பருப்புகள் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் வதங்கியதும், சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு, வெந்த ஓட்ஸையும் சேர்க்கவும். தீயைக் குறைத்துக்கொண்டு ஓட்ஸ் நன்கு சூடானதும் தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்து,  உப்மாவை அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான தேங்காய் ஓட்ஸ் உப்புமா ரெடி.
~~~
இன்றைய இலவச இணைப்பு 
எனது இரண்டு ச்ச்ச்ச்ச்வீட் செல்லக் கரடிக் குட்டிகள்! 
:) 

Saturday, September 21, 2013

கீன்வா-ப்ரவுன் ரைஸ் பணியாரம்


தேவையான பொருட்கள்
கீன்வா(Quinoa)-1/2கப்
ப்ரவுன் ரைஸ்-1கப் 
வெந்தயம்-1/2டீஸ்பூன் 
உருட்டு உளுந்து-1/4கப்
உப்பு
எண்ணெய்
 செய்முறை
அரிசி, கீன்வா, வெந்தயம் இவற்றை 2-3 முறை நீரில் களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். 
மூன்று மணி நேரம் கழித்து, உளுந்துப் பருப்பையும் இரண்டு, மூன்று முறை கழுவிவிட்டு, அரிசி-கீன்வாவுடன் சேர்த்து ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும்.
அளவு கொஞ்சமாக இருப்பதால் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்திருக்கிறேன். அதிகமாகப் போடுவதாக இருந்தால், அரிசி-கீன்வா இவற்றை 4 மணி நேரங்களும்,  உளுந்தைத் தனியே 11/2 மணி நேரமும் ஊறவைத்துக்கொள்ளலாம். 

கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு மாவை அரைத்து, உப்பு சேர்த்து கலந்துவைக்கவும்.

8 மணி நேரங்கள் கழித்து மாவு பொங்கி வ(ழி)ந்திருக்கும். ;) 

[அரைத்த மாவை கன்வென்ஷனல் அவன் -ல்  விளக்கைப் போட்டு  உள்ளே வைத்தேன், காலையில் பொங்கி வழிஞ்சிருந்தது..ஹிஹிஹ்ஹி! :) நல்லவேளையா பேக்கிங் டிரேயில கிண்ணத்தை வைச்சேனோ, தப்பிச்சேன்! இல்லன்னா சிந்திய மாவைச் சுத்தம் செய்யறதுக்குள்ள ஒரு வழியாகிருப்பேன். அவ்வ்வ்வ்வ்வ்! ;) ]

பணியாரக் கல்லை காயவைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடாக்கவும். கல் சூடானதும் மாவை ஊற்றி வேகவிடவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பி விட்டு வேகவிடவும்.  
 சூடான, சுவையான, ஸாஃப்ட்-ஆன பணியாரம் ரெடி. 
 பணியாரம்-மதுரை சட்னி-கொத்துமல்லி சட்னி
இதே மாவை கீன்வா-ப்ரவுன் ரைஸ் தோசையாகவும் செய்யலாம்.

தோசை சீக்கிரம் சிவந்துவிடும், கவனமாக கருகவிடாமல் எடுக்கவேண்டும்.

பணியாரத்தை வைத்து என்னவர் செய்த இன்னொவேட்டிவ் ப்ரேக்ஃபாஸ்ட் அடுத்து வரும் கொலாஜில்! :)
பணியாரத்தை இரண்டாக நறுக்கி, ஒரு புறம் கொத்துமல்லி சட்னியைத் தடவி, மறுபுறம் நறுக்கிய அவகாடோ துண்டுகளை வைத்து, பக்கத்தில் மதுரை சட்னியை வைத்துச் சாப்பிட்டார், விரும்பினால் நீங்களும் முயற்சிக்கலாம் என்பதற்காக இந்த கொலாஜ்!
:)))
~~~

Thursday, September 19, 2013

கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு & கத்தரிக்காய் சாம்பார்

--------------------------
இது கத்தரிக்காயைப் பொரிச்சு ஒரு ஶ்ரீலங்கா ஸ்பெஷல் குழம்பாக்கும்! இதுக்கு இங்கத்தைய பெரிய கத்தரிக்காய்தான் சரி.. ( ஒபஜின்) .. இரண்டாகப் பிளந்துபோட்டு , மூன்று துண்டாக வெட்டுங்கோ.. அதாவது பெரிய பெரிய பீஸாக...

நன்கு பொரித்தெடுங்கோ, பின்னர் உங்கட முறையில் தாளிதம் அனைத்தும் சேர்த்து வெங்காயம் மிளகாய் வதக்கி, கறித்தூள் போட்டு வதக்கி, பழப்புளி கரைத்து விடோணும்.. கொஞ்சம் புளித்தன்மையாக 
இருப்பின்தான் சுவை அதிகம்.

பின்னர், அளவுக்கு தண்ணி, விரும்பினால் கொஞ்சம் பால் சேர்த்து கொதித்ததும், இக்கத்தரிக்காய்களைப் போட்டு இறக்குங்கோ..
--------------------------
என்று குத்துமதிப்பாகக் கிடைத்த ரெசிப்பியை, என் ருசிக்கேற்ப டெவலப் பண்ணி, சுவையான குழம்பாக மாற்றி, வெற்றிகரமாக போட்டோக்களும் எடுத்து இங்கே பகிர்கிறேன். கத்தரியை டீப் ஃபிரை செய்வதற்கு பதிலாக கொஞ்சம் எண்ணெய் நிறைய:) விட்டு ஷாலோ ஃபிரை செய்துவிட்டேன். விரும்பினால் கொஞ்சம் பால் சேர்த்து என ரெசிப்பி தந்தவர் குறிப்பிட்டதால், நானாகவே கெட்டியான பசும்பாலைச் சேர்த்துச் செய்திருக்கிறேன்! ;)

Authentic Sri Lankan Recipe-வேண்டுவோர், நல்லெண்ணெயில் கத்தரிக்காயை முறுகலாகப் பொரித்தும், தேங்காய்ப்பால் சேர்த்தும், கெட்டியான குழம்பாகச் செய்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். கருத்துப் பெட்டியில் ஒரு நட்பு பல்வேறு டிப்ஸ்கள் கொடுத்திருக்காங்க, அதையும் கவனித்துக்கொள்ளவும். :)
--------------------------------
தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய் -2
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
புளிக்கரைசல்-1/4கப்
கறிப்பொடி-2டீஸ்பூன் [நான் தோழி கொடுத்த கலவை மிளகாய்ப்பொடி உபயோகித்திருக்கிறேன், நீங்க வசதிப்படி சாம்பார் பொடி (அ) மிளகாய்த்தூள்+மல்லித்தூள் (அ) கறிமசாலாத்தூள் சேர்த்துக்கலாம்.]
ஹாஃப் & ஹாஃப் மில்க்/ கெட்டியான பசும்பால்-3டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/4டீஸ்பூன்
வெந்தயம்-5
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
உப்பு 
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்  

செய்முறை
கத்தரிக்காயைக் கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். 
வெங்காயம்-பச்சை மிளகாயையும் நறுக்கி வைக்கவும். 
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, நறுக்கிய கத்தரித் துண்டுகளைச் சேர்க்கவும்.
மிதமான தீயில் கத்தரிக்காயை முறுவலாக வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். 
அதே கடாயில் வெந்தயம்-சீரகம் சேர்க்கவும். அவை பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம்-மிளகாய் சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, கறிப்பொடி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 
புளிக்கரைசல் பச்சைவாசம் போக கொதித்து வற்றியதும் பொரித்த கத்தரிக்காய் துண்டுகளைக் குழம்பில் சேர்க்கவும். குழம்பு கெட்டியாக இருந்தால் கால் கப் கொதிநீரும் சேர்க்கலாம். 
சில நிமிடங்கள் கழித்து, தீயைக் குறைத்துக்கொண்டு பாலைச் சேர்க்கவும். 
நன்றாக கலந்து விட்டு குழம்பு சூடானதும், சர்க்கரையைச் சேர்த்து அடுப்பை ஆஃப் செய்யவும். குழம்பு அடுப்பின் சூட்டிலேயே சில நிமிடங்கள் இருக்கட்டும். 
ஐந்து நிமிடங்கள் கழித்து குழம்பை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். சுவையான கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு ரெடி.  
பொங்கலும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் சூப்பர் காம்பினேஷன்! தேங்க்ஸ் பூஸக்கா ஃபார் தி ரெசிப்பி! :) 
 கோ-இன்சிடென்டலாக நானும் காலை உணவுக்கு வெண்பொங்கல்தான் செய்திருந்தேன்! :) அது என்ன கோ-இன்சிடென்ஸ், யாரந்த பூஸக்கா:) என அறிய விரும்புவோர் இங்கே கையை வையுங்கோ! மறக்காமல் அந்தப் பதிவின் கருத்துக்களையும் படிக்கணும். :) 
~~~
கத்தரிக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய்-1 (அ) சின்னக் கத்தரிக்காய்கள் -4
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை, கொத்துமல்லி- கொஞ்சம்
துவரம் பருப்பு-1/4கப்
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
சாம்பார்பொடி-1டீஸ்பூன் 
உப்பு
எண்ணெய்
செய்முறை
பருப்புடன் தக்காளி,  2 துளி எண்ணெய், கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைத்து எடுக்கவும். 
கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். 
வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கி கொள்ளவும். 
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
பிறகு கத்தரிக்காய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். 
வெந்த பருப்பு & தக்காளியை கரைத்து கத்தரிக்காயுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் சாம்பார்பொடி, தேவையான உப்பு சேர்த்து குறைவான  தீயில் 4-5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். 
கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். 
 
காரம் குறைவான, புளி சேர்க்காத, சுவையான சாம்பார் தயார். சாதம், இட்லி தோசை இவற்றுக்கு பொருத்தமாக இருக்கும்.  

Monday, September 16, 2013

தொட்டித் தோட்ட அறுவடை..

தொட்டியில் வளரும் செடிகள் கொடுக்கும் சிறு விளைச்சல்களும் நமக்குப் பெரிய அறுவடைதானே? :) அப்படி சின்னச் சின்னதாகக் கிடைத்த பழம்-காய்-கீரைகளின் தொகுப்பே இந்தப் பதிவு. அவ்வப்பொழுது எடுத்து வைத்த படங்களைத் தேதி வாரியாகப் பிரித்து தொகுத்து ஒரு பதிவைத் தயாரிக்க சுணங்கிக்கொண்டே பலநாட்களை ஓட்டிவிட்டேன். ஒருவழியாக எங்க வீட்டுத் தோட்டம் உங்களைக் காண வந்துவிட்டது. 
~~~
மணத்தக்காளிச் செடியை பூச்சிகளிடமிருந்து காப்பாற்றுவதை மட்டும் ஒழுங்காகச் செய்துகொண்டே இருந்தேன், வேறு எதுவும் செய்யவில்லை (அதாவது காய்-கீரை இப்படி எதையும் பறிக்கவில்லை! ;)) செடி தன் நன்றியைப் பழங்களாகக் கொடுத்தது! :) 
தினமும் கால் கப் பழம் எனப் பழங்கள் பழுக்க ஆரம்பித்தன. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதாக பழம் தின்னும் ஆசை குறைந்துபோனதெனக்கு..
அம்மாவுடன் தொலைபேசுகையில் இதைப் பற்றி சொல்ல, காய்களைப் பறித்து குழம்பு வைத்துவிடேன் எனச் சொன்னார். ஒரு நாள் பழங்களுடன் சேர்த்துச் செடியில் காய்த்திருந்த காய்களனைத்தையும் சேர்த்துப் பறித்துவிட்டேன். 
இன்னும் ஒரு கிண்ணம் பழம் ஃப்ரிட்ஜில் பத்திரமாக இருக்கிறது. காய்களைப் புளிக்குழம்பு வைத்தாயிற்று. 
மணத்தக்காளிக் காய் புளிக்குழம்பு 
ஏற்கனவே போஸ்ட் செய்திருக்கும் சுண்டக்காய் வத்தக்குழம்பின் அதே ரெசிப்பி, சுண்டை வற்றலுக்குப் பதிலாக ஃப்ரெஷ் மணத்தக்காளிக்காய்/சுக்குட்டிக்காய் உபயோகித்திருக்கிறேன். 
~~~
அடுத்தபடியாக வருவது வெந்தயக்கீரை..கீரையையும் கொஞ்சம் முற்ற விட்டுவிட்டேன். 
கீரையை முழுவதுமாகப் பறிக்காமல் வேரை விட்டு தண்டுகளை மட்டும் வெட்டியெடுத்தால் அப்படியே மீண்டும் தழையும் என்று சொன்னார்களே..முயற்சிப்போம் என வேரை விட்டு செடிகளை மட்டும் கத்தரியால் வெட்டி எடுத்தேன். முதல் முறை மேத்தி ரொட்டி, பிறகு வெந்தயக்கீரை கூட்டு, வெந்தயக்கீரை பருப்பு என கீரை காலியானது.  கீரை மீண்டும் தழையவில்லை! வேர்கள் அப்படியே வறண்டு போயின..ஒருவேளை செடி நன்றாக வளர்ந்துவிட்டதால் மீண்டும் தழையவில்லை போலும். 
கத்தரி..மூன்று டாலருக்கு வாங்கிய செடி மூணு மூணு காயாகவே காய்க்கிறது! :) மேலே படத்திலிருக்கும் காய்கள் கத்தரிக்காய் மசாலா பொரியலில் நீங்க ஏற்கனவே பார்த்தவை.  அதன்பிறகும் பூச்சிகளின் தொந்தரவு தொடரவே இலைகள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு பிஞ்சுகளை மட்டும் விட்டிருந்தேன்.
ஞாயிற்றுக் கிழமை 3 காய்களையும் பறித்தாயிற்று. மூன்றில் ஒரு காயை போட்டு ஒரு அவசரசாம்பார் சண்டே லன்ச்சுக்கு ரெடியானது.
அப்பளம்-பூசணிக்காய் தயிர் பச்சடி-மோர் மிளகாய்-முருங்கை கீரை பொரியல்-கத்தரிக்காய் சாம்பார்
சாம்பார் ரெசிப்பி விரைவில்..
~~~
இனி வருபவை எல்லாம் இதர செடிவகைகள்!! :)  கேரட் விதைகள்  வாங்கும்போது ஒரு "யெல்லோ ஸ்க்வாஷ்" விதைப் பேக்கட்டும் வாங்கிவந்தேன். (படத்தில் கையில் இருப்பவையே கேரட் விதைகள்.)
கேரட்டும் ஸ்க்வாஷும் ஒரு தொட்டியில் வளர்க்கலாம் என தொட்டியில் விதைத்தும் விட்டேன். என்னவர் தோட்டத்தை செப்பனிட வந்தபோது சிலபல செடிகள் வீடு:) மாறின. அவற்றில் கேரட்-ஸ்க்வாஷ் விதைத்த தொட்டியில் ஏற்கனவே மண்ணுக்குள் போன விதைகளைத் தேடமுடியாது என அப்படியே விட்டுவிட்டு வேறொரு செடி குடியேறியது. 

சிலநாட்கள் கழித்து ஸ்க்வாஷ் விதைகளில் ஒன்று மட்டும் துளிர்த்து வளர்ந்துகொண்டிருக்கிறது. மற்ற விதைகள் மூச்சுவிடக்காணோம். வரும்வரை வரட்டும் என ஸ்க்வாஷ் நாற்றை அப்படியே விட்டிருக்கேன். மஞ்சள் ஸ்க்வாஷ் காய்க்குமா என பார்க்கலாம்! :)   
கொலாஜில் கீழே புதினாவும் குடைமிளகாயும்! வேருடன் நட்ட புதினா கும்மென்று தழைய, புதிதாக நட்ட புதினாக்கள் ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக வந்துகொண்டிருக்கின்றன. குடைமிளகாயில் ஒரு பிஞ்சு வந்து காய் வளர்ந்துகொண்டிருக்கிறது. பச்சைக் குடைமிளகாயாகவே பறிக்கலாம் அல்லது பழுக்க விட்டு சிவப்பாகவும் பறிக்கலாம். பறித்ததும் சொல்கிறேன், பச்சையா சிவப்பா என! :) 
~~~
செடிகளைக் காட்டுகிறேன் என பதிவுமுழுக்க கொளுத்தும் வெயிலில் பால்கனியிலேயே சுத்திட்டோம், ஜில்லுன்னு அகர் அகர் சாப்பிடுங்க. 

Wednesday, September 11, 2013

(ரொமானோ)பீன்ஸ் பொரியல்/பீன்ஸ் மெழுகுப்பிரட்டி

கோடையின் இறுதி என்பதால் இன்னும் இங்கே வெயிலின் தாக்கம் குறையவில்லை. ஆனால் இப்போது 2-3 நாட்களாக கொஞ்சம் சூடு குறைந்து இருக்கிறது. மீண்டும் வியாழன் முதல் டெம்பரேச்சர் ஏறுமுகம்தான்! :) பீன்ஸ் பொரியலுக்கும் ஸம்மர் பொலம்பலுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறீங்களா? அது ஒண்ணுமில்லைங்க..இந்த விளக்கமெல்லாம் அடுத்து வர புகைப்படம் பதிவில் இடம்பெற்றதுக்கு ஒரு சால்ஜாப்பு/சாக்கு/ஜஸ்டிஃபிகேஷன் குடுக்கறதுக்காகத்தான்!! ;)))
வெயிலுக்கேற்ற ஜில்ஜில் கூல்கூல் ஃபலூடா ஐஸ்க்ரீம்! எல்லாரும் எடுத்துக்குங்க. இந்த பிங்க் கலருக்கும் பதிவில் இடம்பெறும் ரொமானோ பீன்ஸுக்கும் ஏதோ தொட்டகுறை விட்டகுறை போல ஒரு நிறத்தொடர்பு இருக்கு! அதுதான் ஐஸ்க்ரீமையும் பீன்ஸையும் சேர்த்துவைச்சிருக்கு. :) பச்சை நிற காயில் ஆங்காங்கே பிங்க் நிறத்தில் புள்ளிகள், கோடுகள் என அட்ராக்டிவ்-ஆக இருந்த இந்த ரொமானோ பீன்ஸை நான் வாங்கியது எங்கூரு ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில்! 
கொஞ்சம் பட்டையாகவும், பார்க்கும்போதே வாடிப்போனது போன்ற தோற்றத்தில்(கொளுத்தற வெயில்ல கூடாரத்தில போட்டு வைச்சாத் தெரியும்னு பீன்ஸ் பொருமுறது உங்க காதுல கேக்குது?! ;)) இருந்த பீன்ஸை வாங்கிட்டு வந்துட்டேன். புதுகாய் என்பதால் புதுசா எதாச்சும் ரெசிப்பி செய்வோமே என முயன்றதுதான் இந்த மெழுகுப்பிரட்டி! இந்தப் பெயர் ஏன் வந்தது என உறுதியாத் தெரியலைன்னாலும் உத்தேசமாவாவது ஒரு பதிலைச் சொல்லிவைக்கிறேன். ;) எண்ணெய் கொஞ்சம் அதிகமா விட்டு சமைச்சு, பொரியலைப் பார்க்கையில் காய் அப்படியே மெழுகு மாதிரி மினுமினுங்கறதால "மெழுகுப்பிரட்டி"ந்னு பேரு வந்துச்சாம்! ;)) :) அதுக்காக இந்தப் பதிவில் ரொமானோ பீன்ஸ் மினுங்கலையேன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேக்கப்படாது..நார்மல் பீன்ஸில் செய்த மெழுகுப்பிரட்டியப் பாருங்க, ச்ச்ச்ச்சும்மா மின்னுதுல்ல?!
இது காய் கொஞ்சம் புதுசு, நறுக்கியதும் அவரைக்காய் போலவே இருந்தது. மெழுகுப்பிரட்டிக்கு சரி வருமா என சந்தேகத்திலயே சமைச்சேன். காய் பாதி வெந்துகிட்டிருக்கும்போது, மிக்ஸி ஜார் எங்கேயோ போய் ஒளிஞ்சுகிட்டது தெரிய வந்தது. மிக்ஸியைத் தேடி எடுத்து அரைச்சு முடிக்கறதுக்குள்ள ரொமானோ பீன்ஸ் கொஞ்சம் குழஞ்சே போச்! அவ்வ்வ்வ்! அதனால நீங்க கரெக்ட்டா காயை வேகவைச்சுக்குங்க என அன்போடு கேட்டுக்கொண்டு ரெசிப்பிக்கு அழைத்துப் போகிறேன். டொட்டொய்ங்ங்ங்ங்!!! :)))
~~~
தேவையான பொருட்கள்
ரொமானோ பீன்ஸ் -1/4கிலோ
சின்ன வெங்காயம்-10
வரமிளகாய்-3 (காரத்துக்கேற்ப) அல்லது மிளகாய்ப்பொடி- காரத்துக்கேற்ப
பூண்டு-3 பற்கள்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை- கொஞ்சம்
தேங்காயெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை
பீன்ஸை கழுவிவிட்டு,  தலையையும் வாலையும் கிள்ளி:) நாரிருந்தால் எடுத்துவிட்டு,  பொடியாக நறுக்கவும்.
கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, தேவையான உப்பும் சேர்த்து குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
சின்ன வெங்காயம், பூண்டு, வரமிளகாய்(அ) மிளகாய்த்தூள் இவற்றை மிக்ஸியில் இட்டு கொறகொறப்பாக அரைத்துக்கொள்ளவும். 
கடாயில் தேங்காயெண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த வெங்காயக் கலவையைச் சேர்த்து பச்சைவாசம் போகும் வரை வதக்கவும். 
பிறகு வெந்த பீன்ஸைச் சேர்த்து கிளறிவிட்டு, மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான ரொமானோ பீன்ஸ் மெழுகுப்பிரட்டி/ பீன்ஸ் பொரியல் தயார். 

Monday, September 9, 2013

விநாயகர் சதுர்த்தி

இனிப்புக் கொழுக்கட்டை, மோதகம், உப்புக் கொழுக்கட்டை, உப்மாக் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, உளுந்துக் கொளுக்கட்டை, அம்மணிக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, ராகி கொழுக்கட்டை, மல்டி-க்ரெய்ன் கொழுக்கட்டை, ஹெல்த்தி கொழுக்கட்டை, ஹவ் டு ஷேப் மோதகம், ஹவ் டு மேக் பாசிப்பருப்பு இனிப்பு கொழுக்கட்டை, ஹவ் டு மேக் கடலைப் பருப்பு இனிப்புக் கொழுக்கட்டை, ஹவ் டு மேக் எள்ளுக் கொழுக்கட்டை, சுண்டல் வகைகள், ஹெல்தி சுண்டல் வகைகள் என்று (எனக்குப் பரிச்சயப்பட்ட) வலையுலகமே விநாயகர் பர்த்டே ஃபீவரில் தகித்துக் கொண்டிருப்பதால்...Lets take, "the Road not taken!" :))) 
கடந்த வருடம் கோவையில் எங்கள் வீட்டுப்பக்கத்துப் பிள்ளையார் கோயிலில் நடந்த பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டத்தின் படங்கள் இந்தப் பதிவில்!
~~~ 
கோவையில் சில வருடங்கள் முன்பிருந்து ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் ஒவ்வொரு சிற்றூரின் விநாயகர் கோயிலிலும் பலமான கொண்டாட்டங்கள் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. ஐந்தடி விநாயகர், ஏழடி விநாயகர், ஒன்பதடி விநாயகர் என பிரம்மாண்டமான, விதவிதமாகச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கோயில்களில் 5 நாட்கள், 7 நாட்கள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளங்கள், ஆறுகளில் கரைக்கப்படும்.  அப்படிச் செய்யப்பட்ட விநாயகர்தான் மேலே படத்தில் இருக்கிறார். 

சதுர்த்தி அன்று கோயிலில் கேரளா ஸ்பெஷல் செண்டை மேளத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  கொளுத்தி எடுத்த வெயிலில் மக்கள் கூட்டம் செண்டை மேள இசையை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரசித்தார்கள். :) 

ஒரு சின்ன க்ளிப் இங்கே..சற்றே பெரிய 2 நிமிட வீடியோ பதிவில் இறுதியில்!


கோயில் சிறிது, கூட்டமோ பெரிது! விநாயகருக்கு அழகாக அலங்காரம் செய்திருந்தார்கள்.

கூட்டம் கொஞ்சம் குறைந்த பிறகு காற்றாட அமர்ந்திருந்த பிள்ளையார்! :)
கோயிலில் வந்து தரிசிக்க முடியாத மக்களுக்கு...
அவரவர் வீட்டுக்கு அவராகவே செண்டை மேள  ஊர்வலத்துடன் வந்து...
தரிசனம் தந்த விநாயகர்! :) 
~~~
சற்றே நீளமான செண்டை மேள இசை..

~~~
ஐந்து கரத்தனை 
ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை  
ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவமே!
~~~
பாலும், தெளிதேனும், பாகும், பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன், 
கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா! 
~~~
ஹேப்பி பர்த்டே கணேஷா! :)

~~~

LinkWithin

Related Posts with Thumbnails