Saturday, August 18, 2018

உருளைக்கிழங்கு, பனீர் பராத்தா / Paneer, potato Paratha

தேவையான பொருட்கள் 
கோதுமைமாவு - 2கப் 
வேகவைத்த உருளைக்கிழங்கு(மீடியம் சைஸ்) -1 
துருவிய பனீர் - 1/2கப் 
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன் 
கரம்மசாலத்தூள் - 1/2டீஸ்பூன் 
சீரகப்பொடி -1/2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் -1/4டீஸ்பூன் 
தயிர்- 2டேபிள்ஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை 
வெந்த உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் உதிர்த்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், தயிர், பொடிவகைகள், உப்பு எல்லாம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். 
அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் விட்டு பிசைந்துகொள்ளவும்.
பிசைந்த மாவின்மீது ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவி, அரைமணி முதல் ஒரு மணி நேரம்  ஈரத்துணியால் மூடி வைக்கவும். 


மாவு ஒரு மணி நேரம் ஊறியதும், சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்திகளாக தேய்த்து சுட்டெடுக்கவும்.  குழந்தைகளுக்கு என்பதால், சப்பாத்தி தேய்த்து கொஞ்சம் நெய் தடவி, மீண்டும் அதை உருட்டி சுட்டிருக்கிறேன். :)
 சுவையான ஆலூ பனீர் பராத்தா, தயிருடன் சூடாக பரிமாறவும்.

குறிப்பு 
  ஸ்டஃபிங்கை மாவினுள் வைத்து செய்யும் முறை ஏற்கனவே செய்திருந்தாலும், இந்த முறை குழந்தைகளுக்கு கொடுக்க சுலபமாக இருக்கிறது. மசாலா பொடிகளும் அதற்கேற்ப குறைவாகவே சேர்த்திருக்கிறேன். உங்கள் விருப்பப்படி நறுக்கிய பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை அல்லது கசூரி மேத்தி, மற்றும் விருப்பமான மசாலாக்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

Saturday, August 4, 2018

வரகரிசி சாம்பார் சாதம் / Kodo millet sambar sachem

தேவையான பொருட்கள் 
வரகு - 1/2கப் 
துவரம்பருப்பு - 1/4கப்பிற்கு கொஞ்சம் அதிகம் 
காய்கறிகள் - 1 முதல் 1.5கப் (கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், கொத்தவரங்காய், உருளைகிழங்கு, பட்டாணி) 
குடைமிளகாய் - பாதி 
வெங்காயம் -1 
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - கொஞ்சம் 
தக்காளி -2
புளிக்கரைசல் - 1/4கப் 
சாம்பார் பொடி - 1.5 டேபிள்ஸ்பூன் 
பெருங்காயத்தூள் - 1/4டீஸ்பூன்
வெல்லம் (பொடித்தது) - 1டேபிள்ஸ்பூன் 
கடுகு -1/2டீஸ்பூன்
சீரகம் -1/2டீஸ்பூன்
உப்பு 
எண்ணெய் 
நெய் 

செய்முறை 
வரகு மற்றும் பருப்பை நன்றாக களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, குக்கரில் போட்டு 3கப் தண்ணீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நாலைந்து விசில் வரும்வரை வேகவைத்து கொள்ளவும். 

காய்கறிகளை கழுவி, பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும். வெங்காயத்தில் பாதியை பெரிய துண்டுகளாவும், மீதியை நீளவாக்கிலும் நறுக்கிவைக்கவும். குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியையும் நறுக்கிகொள்ளவும்.

குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு பெரிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நறுக்கிய காய்கறிகள், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, வெல்லப்பொடி சேர்த்து 2 விசில் வரும்வரை வேகவைக்கவும்.  

ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். குடைமிளகாய் லேசாக வதங்கியதும் குக்கரில் வேகவைத்த காய்களை சேர்க்கவும். 
காய்கறிகள் சேர்த்தவுடன், குக்கரில் வேகவைத்த வரகரிசி-பருப்பு கலவையையும் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி கலந்து விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். தேவையானால் அரைக்கப் சுடுநீர் சேர்த்து தளர கலந்துவிடலாம். சாம்பார்சாதம் கொதிவர ஆரம்பித்ததும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். 
கடைசியாக  சாம்பார் சாதத்தின் மேல்  ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சூடாக பரிமாறவும்..சிப்ஸ், பூந்தி, வறுவல் வகைகளுடன் நன்றாக இருக்கும்.
குறிப்பு
இதில் நான் மறந்துபோன விஷயங்கள் - நீங்கள் மறக்காமல் இருக்க...  :)
முருங்கைக்காய் சேர்க்க மறந்தேன், பச்சைக் கடலைக்காய் சேர்க்க மறந்தேன்..இரண்டுமே சாம்பார்சாதத்தில் நன்றாக இருக்கும்.
சின்ன வெங்காயம் சேர்த்தாலும் சுவை அதிகரிக்கும்.
சாம்பார்பொடிக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, கொஞ்சம் கொத்துமல்லி விதை, சீரகம், வரமிளகாய், தேங்காய் வதக்கி அரைத்து சேர்த்தால் ஃப்ரெஷ் சாம்பார்பொடி சுவை வித்யாசம் தெரியும்.
தாளிக்கும்போது பட்டை கிராம்பு சேர்த்து தாளித்தால் கர்நாடகா பிஸிபேளேபாத் சுவையும் வித்யாசமாக இருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails