Wednesday, December 31, 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பிறக்கும் 2015 அனைவருக்கும் நன்மை பயப்பதாக அமைய வாழ்த்துக்கள்! 


தத்தித் தத்தித் தளர்நடை போடும் தங்கப்பாப்பாவுடன் எங்கள் வாழ்க்கையும் இந்த வருடம் வேகம் எடுக்கிறது! :) 
புத்தாண்டைக் கொண்டாடுங்கள்..மீண்டும் சந்திப்போம், நன்றி!


Sunday, December 28, 2014

பூனையாரே, பூனையாரே.. போவதெங்கே.. சொல்லுவீர்!!




பூனையாரே பூனையாரே போவதெங்கு சொல்லுவீர்
கோலி குண்டு கண்களால் கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்
பஞ்சுக் கால்களாலே நீர் பையப்பையச் சென்றுமே என்ன செய்யப் போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?
அங்கே இங்கே போகிறீர்..அடுப்பங்கரையை நோக்கியா?
சட்டிப்பாலைக் குடிக்கவா சாது போல செல்கிறீர்?
சட்டிப்பாலும் ஐயைய்யோ ஜாஸ்தியாய் கொதிக்குதே
தொட்டால் நாக்கை சுட்டிடும், தூர ஓடிப் போய்விடும்!
~~~
லயாவிற்காக பார்க்க ஆரம்பித்த பாடல்கள், இப்பொழுது வரிகள் அனைத்தும் வெகு பரிச்சயமாகிப் போய்விட்டன! :) குழந்தைகளுக்கான வீடியோக்கள் என்றாலும் ஒவ்வொரு சின்னச் சின்ன டீடெய்லும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள் இந்தப் பாடல்களில். தமிழ்ப்பாடல்கள் அர்த்தமுள்ள, தெளிவான பாடல்களாகவும் இருக்கின்றன.

3 little kittens
they lost their mittens
...
தமிழுக்கு சற்றும் இளைப்பில்லை காண் என்று போட்டி போடும் ஆங்கிலப்பாடல்கள்! எண்ணற்றவை இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும் எங்களுக்குப் பரிச்சயமான, பிடித்த பாடல்கள் இவை. 

இந்தப் பாடலில் வரும் மூன்று பூனைக்குட்டிகள், பூனையம்மா, அவர்களின் வீடு - சமையலறை -பாத்திரங்கள்- மைக்ரோவேவ் அவன் - ட்யூலிப் பூங்கொத்துக்களால்  அலங்காரம் என்று என்னைக் கவர்ந்த விஷயங்கள் ஏராளம். ஆக மொத்தம் லயா பார்ப்பதை விடவும் நான் பார்ப்பது அதிகம். ஹிஹ்ஹி!



எலியம்மா எலியம்மா எட்டி பாரம்மா
இனிமையான பண்டம் இங்கே இருக்குதே அம்மா..
....
இந்தப் பாட்டில் பூனையார் வில்லனாகவும், எலியம்மா புத்திசாலியாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். பூனை ஏதேதோ காரணங்கள் சொல்லி எலியை வளையை விட்டு வெளியே இழுக்கப்பார்த்தாலும் சாமர்த்தியமான எலியம்மா தப்பிவிடுவார்! :)

5 little speckled frogs
Sat on a speckled log..
Eating some most delicious bugs..yum, yum!!
...
5 தவளைகள் குளத்தில் மிதக்கும் மரக்கட்டை மீது அமர்ந்திருப்பதாகவும், பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அவை ஒவ்வொன்றாக குளத்தில் குதிப்பதாகவும் பாடல்.

குளத்தில் குதிக்கும் தவளைகள் ஈஸி சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பதும், கூல் டிரிங்க்ஸ் குடிப்பதுமாக அதகளம் செய்கின்றன! க்யூட்! :)

அன்னை மொழி எத்துணை முக்கியமானது, அன்னை சொல்வதைக் கேட்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதைச் சொல்லும் அடுத்துவரும் இந்தப் பாடல்..

குருவி ஒன்று மரத்திலே...
கூடு ஒன்றை கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றினை அதில் வளர்த்து வந்தது
நித்தம் நித்தம் குருவியும்
நீண்டதூரம் சென்றிடும்..
கொத்தி வந்து இரைதனை குஞ்சு தின்ன கொடுத்திடும்..
...
அழகழகான குருவிகள், பூக்கள், கருத்து என்று அழகான பாட்டு இது. இவை மட்டுமல்ல, இந்தத் தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடல்கள் பல உள்ளன. ஒரு மணி நேரம் ஓடும் ப்ளே லிஸ்ட்டுகளைப் பார்த்தால் நேரம் போவதே தெரியாது. நேரமிருப்பவர்கள் ரசியுங்களேன். நன்றி! :) 

Wednesday, December 24, 2014

ஹேப்பி ஹாலிடேஸ்!

கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்!!
பெரும்பாலான நாட்களில் இப்படிப் பளிச்சென, நீலப்புடவையில் வெள்ளை மேக டிஸைனுடன் :) :) மின்னும் எங்களூர் வானம்..
கடந்த சில பல நாட்களாக அழுக்குச் சேலை போல சாம்பல் நிறத்தில் அழுது வடிந்தது. 
வானிலை அறிவிப்பில் என்ன சொல்கிறார்கள் என்று பக்க்க்க்கத்தில் நின்று பார்க்கும் எங்க வீட்டு வெண்மேகம்! ;) 
அறிவிப்பில் சொன்னபடி வானம் சில நாட்கள் பொத்துக்கொண்டு ஊற்றியது..
பெரும் மழை இங்கு- என்று சொல்ல முடியாவிட்டாலும்..

சூரியனின் முகம் பார்க்காமலே கழிந்தன தினங்கள்..
வான் ஒழுகியதில், என் மகளின் மூக்கிலும் அருவி கொட்ட, எங்கள் தினங்கள் இன்னும் சுவாரசியமாகக் கழிந்தன. கிறிஸ்மஸும் வந்துவிட்டது. :)
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..ஹேப்பி ஹாலிடேஸ்! புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல நேரம் அனுமதிக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறோம். நன்றி!!



Tuesday, December 9, 2014

ஓட்ஸ் கஞ்சி

தேவையான பொருட்கள்
ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats)-1/2கப்
கேரட்- சிறியதாக 1
பீன்ஸ் - 2
பச்சைப் பட்டாணி - 1கைப்பிடி
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 1
கறிவேப்பிலை
சாம்பார் பொடி-1/2டீஸ்பூன் (காரத்துக்கேற்ப)
சீரகம்-1/2டீஸ்பூன்
கடுகு-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
தண்ணீர் - 21/2கப்
செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாய், கேரட்-பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கேரட்-பீன்ஸ் -பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து 21/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.
மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.
கஞ்சியை அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் (அதாங்க..serve warm!! :)) பரிமாறவும்.
குறிப்பு
கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் அபாயம் உள்ளது, அதனால பாத்து பதமான சூட்டில பரிமாறுங்கோ! :)
quick cooking oats என்றால் தண்ணீர் அளவு குறைத்துக்கொள்ளவும். விரைவாகவும் வெந்துவிடும்.

Saturday, December 6, 2014

கார்த்திகை தீபம் & கோலங்கள்

அனைவருக்கும் திருக்கார்த்திகை தீப வாழ்த்துக்கள்! 

தீபங்களால் அலங்கரிக்கத் தயாராய்க் கோலங்கள்..
~~~ 
பொதுவாக எங்க வீடுகளில் பொரி உருண்டை செய்யும் வழக்கம் இல்லை. தீபத்துக்கு வீடெல்லாம் சுத்தம் செய்து மெழுகிவிட்டு, மாலையில் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று இரண்டு விளக்குகளை ஏற்றிவைத்து சாமி கும்பிட்டுவிட்டு வந்து வீட்டில் கோலமிட்டு விளக்குகள் வைத்து அலங்கரிப்போம். வாசல் கோலத்தில், வாசற்படிகளில், திண்ணையில், அம்மிக் கல், ஆட்டுக்கல், உரல், கிணறு இப்படி எல்லா இடங்களிலும் விளக்குகள் வைப்போம்.
இந்தப் பொரி உருண்டை  தோழி ப்ரியா ராம்  வீட்டிலிருந்து அனுப்பியது. எல்லோரும் எடுத்துக்கோங்க.. :)
~~~~
இந்தக் மாக்கோலங்கள் அம்மா வீட்டிலிருந்து...
 11 புள்ளி, இடைப்புள்ளி 6 வரை..
15 புள்ளி, இடைப்புள்ளி 8 வரை..
வெளி வாசலில் உள்ள கோலம், 15 புள்ளி-இடைப்புள்ளி 8 வரை..
 15புள்ளி, நேர் புள்ளி 1 வரை..
5 புள்ளி, நேர் புள்ளி 1 வரை.. 
கோலம் போட்டு முடித்த பின்  அக்கா இடைப்புள்ளிகள் வைத்திருக்கிறார். அதனால் புதிதாகப் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் குழம்பும். முடிந்தால் நாளை இடைப்புள்ளிகள் இல்லாமல் (பேப்பரில் வரைந்து) இணைக்கப்பார்க்கிறேன். 
இந்தக் கோலம் 5, 7,9,11 என ஒற்றைப்படை எண்களில் விரிவாக்கிக்கொண்டே போகலாம். :) 
7 புள்ளி-3 வரிசை, நேர் புள்ளி 1 வரை.  
ஏழு வரிசைப் புள்ளிகளில் இரண்டாம் வரிசையில் இரண்டு புறமும் ஒரு புள்ளி மட்டும் வைத்துக்கொள்ளவும். இந்தக்கோலமும் ஒற்றைப்படை எண்களில் விரிவாக்கிக்கொண்டே போகலாம்.  இக்கோலம் சேலை முந்தானை போல வடிவம் எனத்தோன்றும் எனக்கு! :) 
என் அக்கா சிவில் எஞ்சினியர், வெகு அழகாக எழுதுவார், அழகாக வரைவார், கோலங்களும் அழகாகப்  போடுவார், அதற்கு சான்று இந்தக் கோலங்களே! இந்தப் பூக்கள் இலைகள் கொண்ட பார்டர் எனக்கு ரொம்பப் பிடித்தது. :) 
~~~
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இன்றைய பதிவு அதே தான்..!! :) 
அம்மா வீட்டிலும், மாமியார் வீட்டிலும் இருந்து வந்த படங்களின் உபயத்தால் இன்று இன்னொரு பதிவு.. இந்தப் படங்கள் யாவும் (எனது) காலையில் வாட்ஸ்ஸப்பில் வந்தவை. ஹி..ஹி..ஹி! ;)
 ~~~
ஏற்கனவே ஒரு முறை இந்தப் பாடலைப் பகிர்ந்திருந்தாலும்...இன்றைய பதிவுக்குப் பொருத்தமானதாலும், எனக்குப் பிடித்த பாடல் என்பதாலும் மீண்டுமொருமுறை...
தீபங்கள் பேசுகின்றன.. :) :) :) 


LinkWithin

Related Posts with Thumbnails