Saturday, July 4, 2015

சிறுவர் சிறுமியர் பாடல்கள் - பகுதி 2


மலரும் நினைவுகளின் தொடர்ச்சியாக அடுத்த பகுதி...எங்க வீட்டுக் குட்டிப்பூவின் வளர்ச்சியால் முழுமை பெறாமல் அவ்வப்போது டபக்கு டபக்குன்னு பப்ளிஷ் ஆகி, நிறையப் பேர் படித்து ஒரு சிலர் கருத்தும் தந்துவிட்டார்கள். சரி, பாடல்களைப் பார்க்கலாம்!
~~~
அகத்திக்கீர புண்ணாக்கு..
அத்த கொஞ்சம் நெய்யூத்து!'
பிஞ்சுக் கத்திரிகாயிக்கு
பின்னியுங் கொஞ்சம் நெய்யூத்து!!
... இந்தப்பாடல் இடது உள்ளங்கையில் வலது ஆள்காட்டி விரலால் தொட்டுக்கொண்டே பாடுவது..ஏழெட்டு மாதக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து நாம் பாடினால் அவர்கள் சைகை செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்! :)
~~~
பிறந்த குழந்தைகள்  முதல் 3-4 மாதங்களுக்குப் பிறகு, நம் முகம் பார்த்துச் சிரிப்பதும், ஆ...ஊ...என பேசுவதும் ( நாயம் பேசறது என்போம், எங்கூருத் தமிழில்! :)) ஆரம்பிக்கும். அப்பொழுது பாடும் பாடல்கள் இனி வருவன..

உங்கு..உங்கு..உங்கு..
இது உங்கு குடிக்கிற சங்கு..
ஊறுகா திங்கிற வாயி..
உனக்கு
~~~
ஆத்தாச் சக்கர வாச்சி...
உனக்கு அடியில முறிச்ச கரும்போ..
கொம்பிலிருக்குந் தேனோ
கோர்த்த மல்லிகப்பூவோ..
~~~
தங்கமே தாராவே
நீ தடத்துல வழியில போகாதே
தட்டாங் கண்டாப் புடிச்சிக்குவான்
தங்கமுன்னு சொல்லி உன்னத்
தராசுல வச்சு நிறுத்துக்குவான்
பொன்னுன்னு சொல்லி உன்னைப்
பொட்டியில வச்சுப் பூட்டிக்குவான்..
~~~
கொஞ்சம் வளர்ந்த (11/2 வயது, அதற்கும் மேலும்) குழந்தைகளுடன் விளையாட இந்தப் பாடல்..

சோறு சோறுங்குதாம்
கொழம்பு கொழம்புங்குதாம்
ரசம் ரசங்குதாம்
காயி காயிங்குதாம்
மோரு மோருங்குதாம்
எல்லாம் ஒண்ணாப் போட்டு
கும்மாயங் கும்மாயம் பண்ணி
அம்மாவுக்கொரு வாயி
அப்பாவுக்கொரு வாயி
அண்ணனுக்கொரு வாயி
அக்காளுக்கொரு வாயி
ஜிம்மி-க்கொரு வாயி..
நிலாவுக்கொரு வாயி...
கழுவிக் கழுவிக் காக்காயிக்கூத்து..
நண்டூறுது..நரியூறுது..
நண்டூறுது,,நரியூறுது..!!!

இது குழந்தையின் உள்ளங்கையைப் பிடித்து கட்டைவிரல் முதல் (சோறு) சுண்டுவிரல் (மோரு) வரை சொல்லி, 5 விரல்களையும் மடக்கி உள்ளங்கையில் கொட்டி (எல்லாம் ஒண்ணாப் போட்டு) பாடுபவரின் முழங்கையால் குழ்ந்தையின் உள்ளங்கையில் அழுத்தி, (கும்மாயங் கும்மாயம் பண்ணி), வீட்டிலுள்ளோருக்கும் நிலாவுக்கும் ஓரொரு வாய் ஊட்டுவதாக அபிநயித்து, உள்ளங்கையைக் கழுவிக் காக்காய்க்கும் ஊத்துவதாக அபிநயிக்கவேண்டும். பிறகு "நண்டூறுது, நரியூறுது..மாமியார் ஊட்டுக்குத் தடம் போகுது" என்று சொல்லி, உள்ளங்கையிலிருந்து தோள்பட்டை வரை இரு விரல்களால் நடந்து(!) சென்று "கிச்சு கிச்சு" பண்ணுவது.. இந்தப் பாட்டிற்கு குழந்தைகள் சிரிப்பு சூப்பரா இருக்கும்.

இந்தப்பாட்டிலேயே இன்னொரு வர்ஷன் அனானி சொல்லிருக்காங்க..
~~~
சோறு சோறுங்குதாம்
சோத்துக்கெங்கே போறதுங்குதாம்..
அம்மிச்சி வீட்டுக்குப் போங்குதாம்..
அம்மிச்சி வீடு எங்கேங்குதாம்..
அம்மிச்சி வீடு இங்கேங்குதாம்..
கும்மாயம்..கும்மாயம்..
அம்மிச்சி வீட்டுக்குத் தடம் போகுது
அப்படின்னு சொல்லிகிட்டே குழந்தைய கிச்சு கிச்சு மூட்டிச் சிரிக்கவைப்பது.

~~~
எல்லாரும் வட்டமாக உட்கார்ந்து கொண்டு ஒருவர் காதை அடுத்திருப்பவர் பிடித்துக்கொண்டு இந்தப் பாட்டைப் பாடுவதாம். இந்தப் பாடலைச் சொல்லியவரின் விளக்கம் இது.
கடுக்கு முடுக்கு நாட்டுச் சக்கர டம்மா டம்மா டை...
அஸ்கனக்கடி கோக்கனக்கடி கொய்!!
~~~
வெகு ஆர்வமாக ஆரம்பித்து முதல் பகுதியை எழுதி, இரண்டாம் பகுதி இரண்டு முறை தானாக வெளியாகி அப்படி இப்படின்னு ஒரு வழியா நிறைவு செய்தாச்சு. நன்றிங்க! :)

LinkWithin

Related Posts with Thumbnails