Thursday, May 16, 2019

மா, பலா - மலரும் நினைவுகள்!


மாம்பழம், பலாப்பழம் என்றால் உடனே என் நினைவில் வருவது பள்ளிப்பருவத்து கோடைவிடுமுறை காலங்கள் தான்!! 8ஆம் வகுப்பு வரையிலும் கோடை விடுமுறை வந்தால் பள்ளி முடிந்த அடுத்தநாள் சித்திகள் வந்து என்னை ஊருக்கு (வீட்டிலிருந்து 2 பஸ் மாற்றி போகவேண்டும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொண்டாமுத்தூருக்குப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம்.) என்னவோ ஏழு கடல் தாண்டி போகிற மாதிரி இருக்கும். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் 56-ஆம் நம்பர் பேருந்துக்கு காத்திருந்து பஸ் வந்தவுடனே எல்லாரும் இறங்க காத்திருந்து ஓடிப்போய் ஏறி இடம் பிடித்து உட்கார்ந்தால் என்னவோ ஒரு பெரிய அச்சீவ்மெண்ட் போல இருக்கும். :))))

ஊரில் பஸ் விட்டு இறங்கி, வீடு சேரும்வரை பார்க்கும் ஆட்கள் எல்லாம் "டவுன் புள்ளை"களை நலம் விசாரிக்க வீடு வந்து சேருவோம். அப்புறம் லீவு நாட்கள் எல்லாம் பக்கத்து வீட்டு வாண்டுகளுடன் "பாண்டிங்குழி (பல்லாங்குழி) ஆடுவதும், புளியங்கொட்டைகளைப் பரப்பி வைத்து "ஒட்டி" விளையாடுவதும், தாயக்கட்டம் போட்டு தாயம் ஆடுவதும், மாலையானால் மல்லிகை மொக்குகளை பறித்து கோர்த்துவைப்பதுமாகக் கழியும்.

அப்புறம்  சித்தி ஒரு நாள் உக்கடம் வந்து மாம்பழம், பலாப்பழம் எடுத்துவருவார். எனக்கு நினைவில் இருப்பது  பாலக்காட்டு மாம்பழம், நீல மாம்பழம், கிளிமூக்கு மாம்பழம்!!! அல்போன்ஸா எல்லாம் கேள்விப்பட்டது கூட இல்லை! ஹிஹி...போகவர மாம்பழங்களை எடுத்து கழுவி கடித்து தின்று, கையெல்லாம் மாம்பழச்சாறு வடிய வடிய சுவைத்தது எல்லாம் மன அடுக்குகளில் அழியா நினைவுகளாய்!!!


பலாப்பழத்தை சுத்தம் செய்து சுளைகளை எடுக்கும் வரை பொறுமையாய்க் காத்திருக்க வேண்டும். வீடெல்லாம் மணக்கும், சுத்தம் செய்த பழங்களை சீக்கிரம் தீர்த்திடுதல் நலம். இல்லையென்றால் கோடைச்சூட்டிற்கு ஒரு நாளுக்கு மேல் தாங்காது. அக்கம் பக்கம் வீடுகளுக்கெல்லாம் பகிர்ந்து விட்டு மீதமிருப்பதை வெல்லம் சேர்த்து வதக்கியும் வைப்பார்கள். பலாக்கொட்டைகளை "தண்ணி அடுப்பில்" (குளிப்பதற்கு தண்ணீர் காயவைக்கும் அடுப்பு) போட்டு சுட்டெடுத்து சுவைப்போம். பலாச்சுளைகளை ஓவராகத் தின்று வரும் வயிற்றுவலிக்கு இந்த சுட்ட பலாக்கொட்டை நல்லது என்பார்கள். எவ்வளவு சுளைகளை வயித்துக்குள் அமுக்கினாலும், 2-3 சுட்ட பலாக்கொட்டைகள் தின்றுவிட்டால் எல்லாம் நலமே!!! :)

எதுக்கிந்த மலரும் நினைவுகள் என்றால்..தமிழ்ப்புத்தாண்டுக்கு வாங்கிய பலாப்பழமும், சமீபத்தில் வால்மார்ட்டில் சுகந்தமான மணம் வீசிக்கொண்டிருந்த மாம்பழங்களை வாங்கிவந்து கத்தி கபடா எல்லாம் உபயோகித்து நறுக்கி நளினமாகச் சாப்பிடாமல், சும்மா கழுவிட்டு, தோலை உரித்து துப்பிவிட்டு சுவைத்து தின்னும்போது இதெல்லாம் நினைவு வந்ததுதான். :))))

நன்றி, மீண்டும் சந்திப்போம்! 

9 comments:

 1. இனிய நினைவுகள் ...

  ReplyDelete
 2. மாம்பழங்களை அப்படியே கடித்து ருசித்த குழந்தைப் பருவக் காலங்கள் நினைவுக்கு வந்தன. பலாக் கொட்டைகளை குளிப்பதற்கான வென்னீர் அடுப்புக்குள் சுட்டு எடுப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!! பொதுவாக இங்கே கிடைக்கும் மாம்பழங்கள் அவ்வளவு இனிப்பிருக்காது..அதிசயமாக சிலது இனிப்பாக இருக்கும், அப்படியொன்று மனதுள் உறைந்து கிடந்த இனிய நினைவுகளைக் கிளறி எடுத்துவந்ததே இப்பதிவு! :) பலாக்கொட்டைகளை நாங்களும் நீங்க சொன்னமாதிரிதான் சுட்டுச் சாப்பிடுவோம்.

   Delete
 3. ஆஹா.. வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் மலரும் நினைவுகளைக் கிளப்பிவிட்டுட்டீங்க.. கூடவே ஏக்கத்தையும். இங்கே மாம்பழம் கிடைக்கிறது ஆனால் ருசியில்லை. பலாப்பழம் கிடைப்பதே இல்லை. ஊருக்கு வரும்போதோ சீசன் இருப்பதில்லை. :((

  ReplyDelete
  Replies
  1. அதே..அதே..நான் ஊருக்குப்போகும்போதும் மா-பலா சீஸன் இருக்காது..இங்கே பலாப்பழம் சைனீஸ் மார்க்கெட், இண்டியன் ஸ்டோர்ஸில் கிடைக்கிறது. மாம்பழம் லோக்கல் ருசியில் இருக்கும்..கோடைக் காலத்தில் இந்தியாவிலிருந்து அல்போன்ஸா மாம்பழங்கள் இறக்குமதி செய்து விற்பார்கள்..இப்போல்லாம் இணையம் மூலமாக பங்கனப்பள்ளி, சிந்தூரம் வகைகளும் கிடைக்கிறது..விலைதான் கொஞ்சம் ஜாஆஆஆஆஸ்தி!! ;) :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கீதாக்கா!

   Delete
 4. படிக்க, எனக்கு மாமரத்தின் மேல் அமர்ந்து மாம்பழம் சாப்பிட்ட காலம் நினைவுக்கு வருகிறது. ;(

  ஆசையாக தொட்டியில் ஒரு மாமரம் வளர்க்கிறேன். மாவிலைத் தோரணம் கட்டவாவது உதவும். ;)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails