இந்த வருஷம் வருணபகவான் கலிஃபோர்னியாவிற்கு அபரிமிதமாக வருகை தந்து மண்மகளை குளிரக்குளிரக் குளிப்பாட்டியதில், பூமிப்பெண் மனங்கனிந்து மனிதர்கள் கண்ணுக்கு மலர்விருந்து படைத்திருக்கிறாள்!! :) :)
காணும் குன்றுப்பகுதிகள், மலைப்பகுதிகள் யாவும் பச்சைப்பட்டுடுத்தி காட்சியளிக்கின்றன. பச்சை என்பதை விடவும், எங்கெங்கிலும் மலர்ந்திருக்கும் மஞ்சள் மலர்கள் பசுமையுடன் கலந்து அற்புதமான இயற்கையின் மலர்க்கண்காட்சி!!
மஞ்சள் மலர்களில் பெரும்பாலானவை கலிஃபோர்னியாவின் மாநில மலரான " பாப்பி / Poppy " மலர்களே! ஆனால் இவை மலர்வது மனித நடமாட்டம் குறைந்த மலைப்பகுதிகளில்தான்!!எங்கெல்லாம் இம்மலர்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் சென்று பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்களும் கூட்டம் கூட்டமாக டிஎஸ்எல்ஆர் கேமராக்கள், டிரைபாட் என்று எடுத்துச்சென்று மண்மகளின் எழிலைச் சிறைபிடித்து வருகிறார்கள்.
மஞ்சள் மலர்களில் இன்னுமொரு வகை..இவை போக, சாலையோரங்களிலெல்லாம் " black eyed susan" மலர்களும், மற்றும் பெயர்தெரியாப்பூக்களும் சிரிக்கின்றன. இதுவரை வந்த படங்களெல்லாம் இணையத்திலிருந்து எடுத்தவை. இனி வருபவை எங்கள் கேமரா படங்கள்!
~~~
கணவரும், நண்பர்களும் வழமையாகச் செல்லும் ஹைக்கிங் ட்ரெய்ல் எங்கிலும் கடுகுப்பூக்கள்...!!இருமருங்கிலும் வரிசைகட்டிப் பூத்திருக்கின்றன. ஏரியின் பின்னணியில் மஞ்சள் மலர்கள்!
மஞ்சள் மலர்கள் "மட்டுமே" வந்திருக்கின்றன என்று யாரும் எண்ணாமலிருக்க, கொஞ்சம் பர்ப்பிள் பூக்களும்!! ;) :)
இந்த முறை எங்கள் இல்ல இரண்டுகால் பூக்கள் அரும்பாகவும், மொட்டாகவும் இருப்பதால் என்னால் எங்கும் சென்று சூப்பர் ப்ளூம்-ஐ கண்டு ரசிக்க இயலவில்லை. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ஃபேஸ்புக்கில் வரும் படங்களைத் தவறாமல் கண்டு களித்தாச்சு!! வரும் ஆண்டுகளில் இன்னொரு சூப்பர் ப்ளூம் வராமலா போய்விடப்போகிறது? அப்போ பாத்துக்கலாம்!!
:) <3 :="" p="">3>
~~~~~~~~~~~~
கல்லைக்கண்டால் பைரவரைக் காணோம், பைரவரைக் கண்டால் கல்லைக் காணோம் கதையாக என் கண்ணில் லேப்டாப் படுவதே அரிது, அப்படியும் பட்டால் பவர் இல்லாமல் பல்லைக்காட்டும். எல்லாம் சரியாக இருந்தால் நான் பெற்ற செல்லக்கிளி கீச் கீச் என கத்த ஆரம்பிப்பா!! அப்படி இப்படின்னு, பிப்ரவரிக்கப்புறம் ஏப்ரல்ல ஒரு பதிவு போட்டாச்சு..இனிமேலாவது அடிக்கடி லேப்டாப், பவருடன் என் கையில் கிடைக்கோணும்னு எல்லாரும் வேண்டிக்குங்க.. (என்னடா இது கஷ்டகாலம்? என்றெல்லாம் முணுமுணுக்கக்கூடாது...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!) நன்றி, வணக்கம்!
No comments:
Post a Comment