Thursday, February 27, 2014

வர்க்கி-பொட்டு தொட்டி-வானம்

முன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு "வர்க்கி" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஊட்டி செல்பவர்கள் எல்லாரும் குறைந்தது ஒரு பேக்கட் வர்க்கி இல்லாமல் வரமாட்டார்கள்! :) அதனால் கோவையிலும் பெரும்பாலான பேக்கரிகளில் வர்க்கி செய்து விற்பனை செய்கிறார்கள்.  காசுக்கேத்த தோசை மாதிரி (முன்பெல்லாம்) நாலணாவிற்கு ஒன்று என்பதிலிருந்து பெட்டிக்கடைகளிலேயே கூட கிடைக்கும். ஆனால் அந்த வர்க்கிகள் எலும்பு மாதிரி:) கடிக்கச் சற்றே சிரமமாக இருக்கும். பொதுவாக வர்க்கி என்பது காபி அல்லது டீ-யில் நனைத்து உண்ணப்படுவதால் அந்த எலும்பும்;) நன்றாகவே இருக்கும்.

பேக்கரிகளில் விற்பனை செய்யப்படுவது "நெய் வர்க்கி" என்று செல்லமாக அழைக்கப்படும். அளவில் சிறியதாக, பொறுபொறுப்பாக, வாயில் போட்டாலே கரைந்துவிடும். காலை காபி அல்லது டீ-யுடன் வர்க்கி சாப்பிடத் தொடங்கினா ப்ரேக்ஃபாஸ்ட்டே முடிந்த மாதிரி வர்க்கிய சாப்பிடலாம்! (ஓகே,ஓகே.. நான் சாப்பிடுவேன்! ;))) ) கடந்த முறை ஊரிலிருந்து வர்க்கி வாங்க மறந்துவிட்டார்கள். அதனால இந்த முறை வாய்ப்புக் கிடைத்தபோது நான் அனுப்பிய லிஸ்ட்டில் முதலாக "வர்க்கி" என்றுதான்  இருந்தது! [என்னே ஒரு தி.ப. என்று நீங்க மெய் சிலிர்ப்பது தெரியுது! ஹிஹிஹி...என்ன பண்றதுங்க..அப்படியே பழகிப்போச்ச்ச்ச்ச்! ;)]
ஸோ, துடியலூர் ராகம் பேக்கரியில் இருந்து வந்த 'நெய் வர்க்கி' உங்க பார்வைக்கு! :)
இன்னொரு பேக்கரியில்தான் ரெகுலராக வாங்குவோம். அந்தக் கடை இப்போது இழுத்து மூடப்பட்டதால் ராகம் பேக்கரி வர்க்கி வந்தது. இதில் அந்த சுவை இல்லை என்றுதான் சொல்லணும். பழைய கடை வர்க்கியில் எந்த எஸன்ஸும் சேர்க்காமல் சும்மா நெய் மணக்க வாயில் போட்டால் கரையும்படி இருக்கும்.  ராகம் பேக்கரி வர்க்கியோ வெனிலா எஸன்ஸ் வாசத்துடன் சுமாராகத்தான் இருந்தது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல அதையே அஜீஸ்;) பண்ணி சுவைத்தேன், வேறுவழி?! நீங்களும் பார்த்து ரசியுங்க, வாய்ப்புக்கிடைத்தால் சுவையுங்க! 
~~
அடுத்தபடியாக கோவை ஸ்பெஷலில் இடம்பிடிப்பது "பொட்டுத் தொட்டி". பாப்புவுக்கு ஸ்பெஷலாக ஆர்டர் செய்யப்பட்டு பூண்டி மலைப்பகுதியிலிருந்து கலிஃபோர்னியா வந்தது இந்தப் பொட்டு. மலைவாழ் மக்களிடம் சொல்லிவைத்தால் "வேங்கை" மரத்தின் பாலை சுத்தம் செய்த தேங்காய்த் தொட்டியில் பிடித்துக் காயவைத்து தருவார்கள்.  பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பொட்டுத்தான் வைப்பது எங்க வீட்டுப்பக்கம் வழக்கம். 

என் சித்தி வீட்டில் சொல்லி, மலைவாழ் மக்களிடம் ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து:) கலிஃபோர்னியா வந்து சேர்ந்த பொட்டுத்தொட்டி...
தொட்டியில் சில சொட்டுக்கள் தாய்ப்பால் அல்லது தண்ணீர் விட்டு குழைத்து குழந்தையின் நெற்றி, வலக்கன்னம், இடதுகாலில் பொட்டுக்கள் வைப்பது வழக்கம்.
காத்து கருப்பு அண்டாது, திருஷ்டி படாது, எந்த பக்கவிளைவுகளும் இல்லாதது என பல்வேறு நல்ல குணங்கள் இந்த வேங்கைப்பால் பொட்டுக்கு உண்டு. வேங்கைப் பால் என கூகுள் செய்தபோது பல தகவல்கள் கொட்டின, உதாரணத்துக்கு இந்த ஒரு லிங்க்.
~~~
வீடு மாறியபின் ஒரு நாளில் என்னவர் க்ளிக்கிய ஃபிப்ரவரி மாதத்திய சூரியஸ்தமனம். இப்போது பால்கனி வழியாக அந்திவானம் பார்க்கும் வாய்ப்பில்லை, ஆனால் ஒரு சாளரம் வழியே வேறு ஒரு கோணத்தில் வானம் தெரிகிறது. அவ்வப்போது எடுக்கும் படங்களைப் பிறிதொரு பதிவில் பகிர்கிறேன்.
~~~
பி.கு. என்னான்னு டைட்டில் வைக்க என்று ரூம் போட்டு யோசிச்சாலும் எதும் க்ளிக் ஆகாத காரணத்தால் இப்படி ஒரு டைட்டில் இந்தப் பதிவுக்கு வழங்கப்பட்டுள்ளது என புரிந்து கொண்டமைக்கு நன்றி! ;) 

15 comments:

  1. அழகான வீட்டுப்பக்கம் வழக்கம்... சூரியஸ்தமனம் படம் மிகவும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஸ்பெஷல்களின் தொகுப்பு..அருமை..

    ReplyDelete
  3. // "பொட்டுத் தொட்டி"// நாங்க பொட்டுச் சிரட்டை என்று சொல்லுவோம்.

    வேங்கையில் இருந்து சிவப்பு சாந்துப் பொட்டு (வேங்கைப் பிசின் + எலுமிச்சை!) என்று நினைத்திருந்தேன். எப்போதோ விகடனிலோ குமுதத்திலோ படித்த ஞாபகம். கருப்புப் பொட்டுக் கிடைக்கும் என்று தெரியாது.

    நாங்கள் சவ்வரிசி கருக வறுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டுக் காய்ச்சுறது. மினுக்கத்துக்கு கொஞ்சமாக ஆமணக்கெண்ணெய் விடுவம். சிரட்டை... முன்னமே ஷேப்பானதாக எடுத்து தண்ணீரில ஊற வைக்க கருப்பாக வரும். தும்பைச் சுரண்டி காய வைக்க வேணும். அந்தச் சிரட்டையில காய்ச்சின சவ்வரிசிக் கரைசலை ஊற்றி சிரட்டையைச் சுழற்றி வெயிலில காய வைக்கிறது.

    அந்திவானம் அழகோ அழகு.

    ReplyDelete
  4. Ooty varki, tasted it once, pottu thotti, ippothan kelvi padaren..

    ReplyDelete
  5. எங்க வீட்டிலும் இப்படி பொட்டு நாங்களே தயாரிப்பதுதான். ஆனால் வேங்கைபால் அல்ல. வேறுமுறை.
    சூரிய அஸ்தமனம் அழகாக இருக்கு மகி.நன்றி.

    ReplyDelete
  6. ஊட்டி வர்க்கிக்கு ஈடு இணை ஏது...:) எவ்வளவு வருடங்கள் ஆச்சு வர்க்கி சாப்பிட்டு.... அதன் சுவையே அலாதி. வரிசையா உள்ள போய்க்கிட்டே இருக்கும்...:)) நினைவூட்டியமைக்கு நன்றி.

    இந்த பொட்டு தொட்டி திருச்சியிலும் விக்கறாங்க.

    வானம் அழகாக இருக்கு..

    பாப்பாவுக்கு உடனே திருஷ்டி சுத்தி போடுங்க...:))

    ReplyDelete
  7. ஊட்டி வர்க்கியின் சுவையை இப்பொழுது படம் காட்டி கிளறிவிட்டீர்கள அருமை.

    ReplyDelete
  8. வர்கி பிள்ளைகளுக்கு பாலில் ஊறவைத்து கொடுப்போம் , பார்க்கும் போது இப்பவே சாப்பிடனும் போல் உள்ளது

    ReplyDelete
  9. மகியின் வலையில் மகிழ்வான பதிவுகள் அத்தனையும் அருமை

    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. வர்க்கி.. காப்பி , டீக்கு தொட்டு சாப்பிட நல்லா இருக்கும்.இது எப்பவும் வீட்டில் வாங்கி வைத்திருப்பேன். ஏன்னா இது ஸ்கூபி பயலுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாந்து பொட்டு பள பளக்க ... குழந்தைகளுக்கு இதுதான் நல்லது. அலர்ஜி இல்லாமல் இருக்கும் .. நானும் இதை முன்பு விட்டில் செய்வேன் மகி.ரொம்ப ஈஸியா அழிந்து விடும்.

    ReplyDelete
  11. எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படியே கை, காலுன்னு காட்டிகாட்டி போரடிக்குதுன்னு, ஒரு நாளைக்கு 'டடாஆஆஆ'னு முகத்தை காட்டப்போகிறாள், பார்த்துக்கோங்க !!

    'டீ ரஸ்க்'கைத்தான் நாங்க 'வரிக்கை'னு சொல்லுவோம். ம்ம்ம் .... இப்போ ஞாபகம் வந்தாச்சு, எங்க ஊர் பக்கம் குட்டிகுட்டியா இட்லி ஷேப்ல‌ மொறுமொறுன்னு ஒன்னு விக்கும். அதுதானோ இது ? எப்போதாவது கோயமுத்தூர் பக்கம் தலைகாட்டினா ஞாபகமா இந்த 'வர்க்கி'யை வாங்கி டெஸ்ட் பண்ணி பார்க்கிறேன்.

    'மரிக்கொழுந்து' வச்சு இந்த பொட்டு செய்வதா சொல்லுவாங்க. நாங்க 'வசம்பு'தான் பயன்படுத்தினோம். அந்திவானம் அழகு !

    ReplyDelete
  12. Yummy varki. Like imma said, we use tapioca pearls to make pottu. Kutty's feet looks very cute.

    ReplyDelete
  13. As imma said we also use tapioca pearls but with coconut oil and rose petals or panner (for fragrance). It does not take time.

    ReplyDelete
  14. Good to hear about pottu thotti mahi. we also have separate procedure to make pottu. But for new born babies, we use vasambu pottu only. Happy to know about different traditions. kutti's cutie feet looks very lovely. Awaiting to see her mahi. Take care.

    ReplyDelete
  15. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் அன்பான நன்றிகள்! ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நன்றி சொல்லவேண்டும் என நினைத்து நினைத்தே நாட்கள் ஓடிவிட்டன, அதனால் பொதுவான நன்றி ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். :)

    ஜவ்வரிசி பொட்டுதொட்டியைப் பற்றிய தகவல்கள் புதிதாக இருக்கு எனக்கு. வசம்பு பொட்டும் நான் கேள்விப்பட்டதில்லை, தகவல்களைப் பகிர்ந்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails