Monday, February 27, 2012

பூரி,கிழங்கு & சட்னி

பூரி என்றால் அதற்கு உருளை கிழங்கு மசாலா-தேங்காய் சட்னி காம்பினேஷன் தான் எங்க வீட்டில என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதை தனி ரெசிப்பியாக போஸ்ட் பண்ண இப்பதான் நேரம் கூடி வந்திருக்கிறது. :)

உருளைகிழங்கு மசால் -தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு -2
பொடியாக நறுக்கிய கேரட் - 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்(மீடியம் சைஸ்)-1
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
வரமிளகாய்-1
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை- கொஞ்சம்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
தண்ணீர்- 3/4கப்
உப்பு
எண்ணெய்

செய்முறை
வெந்த உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு கடுகு-சீரகம்-கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாய்,கிள்ளிய வரமிளகாய்,கேரட்,தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
உதிர்த்த கிழங்கு,தேவையான உப்பு சேர்த்து கிளறிவிட்டு தேவையான தண்ணீர் (1/2கப் to 3/4கப் சேர்த்திருப்பேன்) விட்டு கொதிக்கவிடவும்.
மசால் வெகுநேரம் கொதிக்கத் தேவையில்லை, ஒரு கொதி வந்ததும், சர்க்கரை சேர்த்து, நறுக்கிய மல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான உருளைகிழங்கு மசால் ரெடி. சப்பாத்தி-பூரிக்கு நல்லா மேட்ச் ஆகும்.

பூரி -தேவையான பொருட்கள்
கோதுமை மாவு/ஆட்டா மாவு -11/2கப்
தண்ணீர் -1/2 கப்
உப்பு-1/4டீஸ்பூன்

செய்முறை
பொதுவாக சப்பாத்திக்கு மாவின் அளவில் பாதி தண்ணீர் ஊற்றி பிசைந்தால் சரியாக இருக்கும், ஆனால் பூரிக்கு மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்,அதனால் தண்ணீர் கொஞ்சம் குறைவாக ஊற்றினாலே சரியாக இருக்கும்.

மாவுடன் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்து, காற்றுப்புகாத பாத்திரத்தில் அரைமணி நேரம் வைக்கவும்.

பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

பூரி புஸ் என்று வருவது உருண்டைகளை சீராக தேய்ப்பதில் ( திரட்டுவது
/பரத்துவது..அவிங்கவிங்க ஊர்ல என்ன சொல்லுவீங்களோ, அந்த வார்த்தையைப் போட்டுக்குங்கப்பா! எங்க வீட்டுல தேய்ப்பதுன்னுதான் சொல்லுவோம். :) ) அதனால் பூரிக்கு உருண்டையே சின்னதாக பிடித்துக்கொண்டால் சிறு பூரிகளை தேய்ப்பதும் சுலபமாக இருக்கும். பொரிப்பதற்கும் அதிகம் எண்ணெய் தேவையில்லை,கொஞ்சம் எண்ணெயிலே சுட்டு எடுத்துவிடலாம்.

மைதா அல்லது அரிசிமாவு அல்லது எண்ணெய் தொட்டுக்கொண்டு பூரிகளை வட்டமாகத் தேய்த்து வைத்துக்கொள்ளவும்.

மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து பூரிகளை ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும். எண்ணெயில் போட்டதும் கரண்டியால் பூரியை லைட்டாக அழுத்திவிட்டால் புஸ்ஸென்று உப்பி வரும். அதன்பிறகு திருப்பி விட்டு இரண்டுபுறமும் பொன்னிறமானதும் எடுத்து பேப்பர் டவலில் எண்ணெய் வடியவிட்டு சூடாக மசால் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். தேங்காய் சட்னி ரெசிப்பி பலகாலம் முன்பே குடுத்திருக்கிறேன். அதற்கான லிங்க் இங்கே.

இது விடுமுறை நாட்களில் ப்ரேக்ஃபாஸ்டுக்கு செய்யலாம், சாப்புட்டதும் சூடா ஒரு கப் காஃபி/டீ குடிக்க மறந்துராதீங்க!:)

38 comments:

 1. சூப்பரா இருக்கு. பூரி செய்யும் ஆசையை தூண்டி விட்ட மகிக்கு என்ன தண்டனை குடுக்கலாம்????

  ReplyDelete
 2. நான் இப்ப சொல்றதை கவனமா கேட்டுக் கொள்ளுங்கள் எல்லோரும். எனக்கு வடை, ஆயா எதுவுமே வேண்டாம். அல்லாத்தையும் அதிராவுக்கும், ஜெய்க்கும் குடுத்திடுங்கோ.

  ReplyDelete
 3. அட பூரி...வடை போச்சே

  ReplyDelete
 4. எனக்கு மிகவும் பிடித்த டிபன்.மசால் இன்னும் கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டுமோ?

  ReplyDelete
 5. பூரி,பொங்கல் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு நினைக்காம இருக்கேன் நீங்க வேற ஆசையை கிளப்புறீங்க...

  ReplyDelete
 6. என் மகளுக்கு பூரி ரொம்ப பிடிக்கும் .தக தகன்னு அழகா இருக்கு மகி .

  ReplyDelete
 7. உருட்டி வச்சிருக்கிற மாவில் இரண்டை எடுத்து மேல் ஒன்று கீழ் ஒன்று வைத்து பத்து பீசாக உடைத்த ஸ்பகெட்டி மீசையாக ஒட்டவும் கண்களுக்கு இரண்டு மிளகு ஒட்டவும் /வாய் செய்ய ஒரு காரசாரமான ரெட் மிளகாய் ஒட்டவும் .புஸ புஸ பூஸ் ரெடி

  ReplyDelete
 8. My daughter loves, I think all kids and many adults like me also love this..

  ReplyDelete
 9. அவ்வ்வ்வ்வ்வ் இண்டைக்கு எல்லாமே போச்சே:))..

  இப்பத்தான் எனக்குத் தெரியும் கோதுமை மாவிலும் பூரி செய்வதென்பது அவ்வ்வ்வ்வ்வ்:)).. இனிமேல் இதிலதான் ட்ரை பண்ணப்போறேன், நான் பூரி செய்வதில்லை, ரெடிமேட்தான், சப்பாத்தி மாவிலதான் அம்மா செய்வா.

  என் கணவருக்கு பூரியும் கிழங்கு வித் பீஸ் கறி எனில்.... சொர்க்கம் தெரிவதுபோல இருக்கும்:))

  ReplyDelete
 10. அந்த சட்னி சூப்பர்:)..

  ReplyDelete
 11. //angelin said...
  உருட்டி வச்சிருக்கிற மாவில் இரண்டை எடுத்து மேல் ஒன்று கீழ் ஒன்று வைத்து பத்து பீசாக உடைத்த ஸ்பகெட்டி மீசையாக ஒட்டவும் கண்களுக்கு இரண்டு மிளகு ஒட்டவும் /வாய் செய்ய ஒரு காரசாரமான ரெட் மிளகாய் ஒட்டவும் .புஸ புஸ பூஸ் ரெடி//

  என்னாது பூஸ்ஸ் ரெடியா? அவ்வ்வ்வ்:)).. இப்போ எதைப் பார்த்தாலும் பூஸ்போலவே தெரியுதுபோல:).

  ReplyDelete
 12. Iam feeling hungry now!all ur fault:-)

  ReplyDelete
 13. சொல்ல மறந்துட்டேன் மகி பூரி புஸ் புஸ்னு பூஸ் மாதிரியே குண்டு குண்டா வந்திருக்கு

  ReplyDelete
 14. ///angelin said...
  சொல்ல மறந்துட்டேன் மகி பூரி புஸ் புஸ்னு பூஸ் மாதிரியே குண்டு குண்டா வந்திருக்கு///

  karrrrrrrrrrrrrrrr:))).. நான் இண்டைக்கு காலை ஒருவரோடு ஃபோனில் கதைத்தேன்... டயட், எக்ஸசைஸ் பற்றி, பின்பு இப்போ கொஞ்சம் முன்புதான்.. மனதில ஒரு முடிவெடுத்தேன்... ஒரு மாதத்துக்கு சீரியலும் சூப்பும் மட்டும் சாப்பிட்டு, டெய்லி அரை மணித்தியாலம் வோக்கும் போகலாமென:))

  என்னோடு ஆரெல்லாம் ஜொயின் பண்ணுறீங்க?... உண்மையாத்தான்.. முடியுமோ எனத் தெரியேல்லை, ஆனாலும்.. செய்யோணும் ஏனெனில் இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு:)).. ஏன் என இப்போ கேட்கப்பூடா:)) பின்புதான் சொல்வேன் ஏன் என:)).

  எங்கட மாமி ஒருவர் சொல்லுவா... புஸு புஸு என இருந்தால்தான் அழகு மெலியகூடாதென:))).. அவ்வ்வ்வ்வ்வ்:)).

  ReplyDelete
 15. That looks delicious...

  Aarthi
  http://www.yummytummyaarthi.com/

  ReplyDelete
 16. மகி,
  பூரி,கிழங்கு நல்லாருக்கு.கிழங்கு மசால் சற்று வித்தியாசமாக உள்ளது. பூரிக்குத் தேங்காய் சட்னி & கிழங்கில் சர்க்கரை சேர்ப்பது புதிதாக உள்ளது.

  ReplyDelete
 17. அட கொஞ்சம் லாட் ஆகிடு
  பூரி எல்லாம் காணும் எல்லாம் கொண்டு போயிட்டாங்கள எனக்கு பார்சல் 10 POORI....

  ReplyDelete
 18. அட பூரி மசாலுடன் சட்னியுமா?யம்மி..

  ReplyDelete
 19. அட ஏன் கேட்கீறீங்க மகி.
  எங்க வீட்டிலும் இதே கேஸ், பூரி வாரத்தில் ஒரு கண்டிப்ப பையன்களுக்கு சட்னி, சாம்பார், எனக்கு கிழங்கு.

  சில நேரம் அன்னபூரானா, ஆச்சி, சரவனபவா பூரி ஆர்டர் செய்து 4 செட்டில் இரண்டு செட்டுக்கு
  பூரி சட்னியும் , பூரி சாம்பாராரும் , மீதி இரண்டுக்கு கிழங்குன்னு ஆர்டர் செய்ததுமே ஆர்டர் எடுப்பவர் உடனே விட்டு விலாசத்த சொல்லிடுவார், அந்த அளவுக்கு பிரியம் சட்னி மேல் என் பசங்களுக்கு..

  ReplyDelete
 20. ஆகா வடை போச்சே நான் கமெண்ட் எ சொல்லலே. பூரி ரேசிபீயும் நான் படம் :)) எடுத்து வெச்சிருக்கேன் பதிவு போட. அதுக்குள்ளே நீங்க போட்டுட்டீங்க ஆனா என் ரெசிபி கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் சோ அதையும் போட்டுறலாம்

  ReplyDelete
 21. //எங்க வீட்டுல தேய்ப்பதுன்னுதான் சொல்லுவோம். :)//  எங்க வீட்டுலயும் தேய்க்கிரதுன்னு தான் சொல்லுவோம். பரத்தறது அரிசி கழுவி காய வைக்கறத சொல்லுவோம்

  ReplyDelete
 22. பூரி பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு மகி.... ராம்க்கு ரொம்ப ரொம்ப புடிச்ச டிபன்...

  ReplyDelete
 23. உங்க பூரி எல்லாம் ரொம்ப நல்லா உப்பி இருக்கு மகி. எங்க வீட்டுல என் பையனுக்கு மூணு வேளை கொடுத்தாலும் சாப்பிடுவான். ஆனா நான் மாதம் ஒரு தடவை தான் பண்ணுவேன். deep fry சாப்பாடு கொடுத்து பழக்க வேண்டாமுன்னு எங்க வீட்டைய்யா:)) ஆர்டர்

  ReplyDelete
 24. //இப்பத்தான் எனக்குத் தெரியும் கோதுமை மாவிலும் பூரி செய்வதென்பது அவ்வ்வ்வ்வ்வ்:)//

  பூஸ் இத கிண்டலா சொல்லுறாங்களா இல்லே நெஜமா சொல்லுறாங்களா? சப்பாத்தி மாவுதான் கோதுமை மாவும். ஐயோ என்னைய கொழ்ப்பாம விட மாட்டாங்க போல இருக்கே ?

  ReplyDelete
 25. //எனக்கு வடை, ஆயா எதுவுமே வேண்டாம். அல்லாத்தையும் //  அதெல்லாம் ஒத்துக்க முடியாது வான்ஸ்! நீங்க வேண்டாமுன்னு சொன்னாலும் ஆயா வித் பாயா உங்களுக்குத்தான். ஜெய் கூடவே எப்பவும் போய் ஆயாவுக்கு போர் அடிக்குதாம்

  ReplyDelete
 26. //ஒரு மாதத்துக்கு சீரியலும் சூப்பும் மட்டும் சாப்பிட்டு, டெய்லி அரை மணித்தியாலம் வோக்கும் போகலாமென:))//  பூஸ் drastic diet பண்ணா ஒடனே உடம்பு கொறையுற மாதிரி தெரியும் ஆனா நீங்க நோர்மல் சாப்பாடு சாப்பிட்ட ஒடனே முன்னே இருந்ததா விட வேய்ட் போட்டு விடும். நான் நெறையா பேர இந்த மாதிரி பார்த்து இருக்கேன்.  அதனால நோர்மல் சாப்பாட அளவு கொறைச்சு சாப்பிட்டு எக்செர்சைஸ் பண்ணுங்கோ. மெதுவா தான் எடை குறையும் ஆனா லாங் lasting நான் இதைதான் பண்ணுவேன். நான் diet அப்படின்னா கேக் குக்கீ மற்றும் ஸ்நாக்ஸ் எடுப்பதில்லை நிறைய பழங்கள் அத்துடன் நோர்மல் சாப்பாடு இதுதான் தாரக மந்திரம். இத தொடர்ந்து செஞ்சிட்டு வாங்க அப்புறம் எத்தன வருஷம் ஆனாலும் வேய்ட் பெரிதாக மாறாது!  சரி சரி கன்சல்டேஷன் பீஸ் ஒரு நூறு பவுன் அனுப்பி வெச்சிடுங்கோ;))

  ReplyDelete
 27. கிரி, இலங்கை மொழியில் கோதுமை மா - all purpose மா. பூரி மாவை ஆட்டா மா என்போம்.
  இருங்க ஆயாவை ஆட்டோவில் ஏத்திட்டு வாறேன். போற வழியில் தேம்ஸில் தள்ளி விடணும்.

  ReplyDelete
 28. my son's all time fav. love to have this gundu poris with masala any time

  ReplyDelete
 29. It will be nice if you could post the recipes in english or add google transliterian tool for those who donot know tamil.

  ReplyDelete
 30. Amitha, I do have a cooking blog in English. You can find it on the top right corner of this blog.Here is the URL..

  http://mahiarunskitchen.blogspot.com/

  Thanks for stopping by and leaving a comment! :)

  ReplyDelete
 31. kamatchi.mahalingam@gmail.comFebruary 28, 2012 at 10:03 PM

  பசியாயிருக்கச்சே பார்த்தேன். அப்படியே நேரே வரலியேயென்று தோன்றியது.நாங்கள் இடுவது என்று சொல்லுவோம்.கிரேவியோடு கிழங்கு நல்ல ஜோடி. பூரியை அழகுப் போட்டிக்கு அனுப்பலாம்.சட்னி எங்கும் நிறைந்த ஜோதியாக இருக்கு. எல்லாம் நம்பர் ஒன்.

  ReplyDelete
 32. poori patha udane pasi kilapindu varudu mahi... endrum en favourite poori than...poori masal arumai!!

  ReplyDelete
 33. பூரி சூப்பர் மகி!. செஞ்சு ரொம்ப நாளாச்சு. திரும்பவும் செய்யணும்.

  ReplyDelete
 34. irst time here ... glad to follow you ... very yummy poori and curry ...
  visit my blog
  www.sriyafood.blogspot.com

  ReplyDelete
 35. /பூரி செய்யும் ஆசையை தூண்டி விட்ட மகிக்கு என்ன தண்டனை குடுக்கலாம்????/ ஹாஹா! வானதி,குடுகுடுன்னு கிச்சனுக்குப் போயி பூரி செய்து அழகா பேக் பண்ணி, இங்க அனுப்பிவிடுங்க. அந்த "தண்டனையே" போதுமானது! ;)))
  நன்றி வானதி!
  ~~
  /மசால் இன்னும் கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டுமோ?/ஸாதிகாக்கா,அது அவரவர் ருசிக்கேற்ப மாறுமில்லையா? எங்களுக்கு இப்படி இருந்தால்தான் பிடிக்கும். :)
  வடை போனாலும் அசராமல் ரெண்டு முறை கருத்துக்கள் பதிந்தமைக்கு மனமார்ந்த நன்றி அக்கா! ;) :)
  ~~
  மேனகா,நானும் ரொம்ப நாள் கழிச்சுதான் செய்திருக்கேன்,அடிக்கடி செய்வதில்ல. ஒன்ஸ் இன் அ ப்ளூ மூன்,நீங்களும் செய்யுங்க. :)
  நன்றி!
  ~~
  ஏஞ்சல் அக்கா,வருகைக்கும் பூஸ் செய்முறை விளக்கத்துக்கும் நன்றி!
  ~~
  ஹேமா,பூரி பிடிக்காதுன்னு சொல்லும் விதிவிலக்குகளையும் நான் பார்த்திருக்கேன். :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  /கோதுமை மாவிலும் பூரி செய்வதென்பது அவ்வ்வ்வ்வ்வ்:))./அதிரா,ஆல் பர்ப்பஸ் மா-வில் செய்தா அது "பட்டூரா" ஆகிரும், ஆட்டா மாவில்தான் பூரியாகும்! :) பூரியும் ரெடிமேடா?? அவ்வ்வ்...

  என்னவருக்கு peas-ஐப் பார்த்தால் peace போயிரும், அதனால் நான் பட்டாணியை சேர்ப்பதில்லை! ;) அதுவும் சேர்த்தால் மசாலா இன்னும் கலர்ஃபுல்லாக இருக்கும்.
  நன்றி அதிரா!
  ~~
  /// Iam feeling hungry now!all ur fault:-)//அஸ்கு,புஸ்கு! இப்படில்லாம் சொல்லி எஸ்கேப் ஆகமுடியாது.சீக்கிரம் பூரி செய்து சாப்பிடுங்க ரம்யா!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~

  ReplyDelete
 36. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆர்த்தி!
  ~~
  அதிரா,உங்க டயட் & எக்ஸர்ஸைஸ் ப்ளானுக்கு ஆல் த பெஸ்ட்! ஆனா அரைமணித்தியாலமெல்லாம் போதாது. வெக்கு-வெக்குன்னு ஒரு மணி நேரமாவது நடக்கோணும்,சரியா? ;)

  /புஸு புஸு என இருந்தால்தான் அழகு மெலியகூடாதென:))).. அவ்வ்வ்வ்வ்வ்:))./இப்புடிச் சொல்லிச்சொல்லியே நம்ம ஊர்ல எல்லாரையும் புஸுபுஸுப் பூஸு;) ஆக்கிட்டாங்க! :)))
  ~~
  சித்ரா மேடம்,பூரி-தேங்காச்சட்னி சாப்பிட்டுப் பாருங்க,உங்களுக்கே தெரியும்! :P:P
  மசாலில் சர்க்கரை சேர்ப்பதும் சுவையைக் கூட்டும்.:)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  சிவாத்தம்பி, லேட்டா வந்தது பரவாயில்ல,ஆனா தமிழைக் கடிச்சுத் துப்புவது சரியில்லை..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இனிமேல் ஒழுங்கா நிதானமா கமென்ட் போட்டாதான் பார்சல் அனுப்புவேன்னு சொல்லுவேன்! ;)
  நன்றி சிவா!
  ~~
  ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  ஆஹா,ஜலீலாக்கா உங்கூர்ல போன்லயே பூரி ஆர்டர் பண்ணலாமா? சூப்பர் போங்க! ;) நான் சாம்பார் வைச்சு சாப்பிட்டதில்ல! குட்டீஸ் எல்லாருக்கும் பிடிச்ச உணவுவகையாச்சே பூரி,அப்புறம் சொல்லணுமா?
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  கிரிஜா,/என் ரெசிபி கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்/பூரியவும் ஹெல்த்தியா "கிரில்"பண்ணி வைச்சிருக்கீங்களோ?? அவ்வ்வ்வ்....வ்வ்வ்..! ம்ம்..போட்டுத்தாக்குங்க,சீக்கிரம்!

  நானும் டீப் ஃப்ரைட் டிஷஸ் அதிகம் செய்யமாட்டேங்க. எப்பவாவது ஒரு நாள் ஆசைக்கு செய்யறது.:)

  /இத கிண்டலா சொல்லுறாங்களா இல்லே நெஜமா சொல்லுறாங்களா? /சீரியஸாத்தான் சொல்லிருக்காங்க போல,வானதி கமென்ட்டைப் பாருங்க. நானும் ரெசிப்பிலயும் ஆட்டாமாவுன்னு சேர்த்துட்டேன். :)

  உங்க தாரக மந்திரத்தை:)ப் பகிர்ந்ததுக்கு நன்றிங்க கிரிஜா! /கன்சல்டேஷன் பீஸ் ஒரு நூறு பவுன் அனுப்பி வெச்சிடுங்கோ;))/ பீஸ் பூஸுக்கு மாத்திரம்தானே? பவுண்டாவது பரவால்ல,ஆனா வெவரமா "நூறு பவுன்" கேக்கறீங்களே!! :))))
  ~~
  ப்ரியா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!
  ~~
  வானதி,விளக்கத்துக்கு நன்றி.எனக்கு இந்த "மா" பற்றி நீங்க பேசுவது புரிவதில்லை,ஆட்டாமாவு/சப்பாத்தி மாவு எல்லாமே கோதுமைமாவுதான் எங்க ஊர்ல.:)
  ~~
  ஜெயஸ்ரீ,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  காமாட்சிம்மா,படங்களை ரசித்துப் பார்த்திருக்கீங்கனு தெரியுது! நன்றிமா!:):)
  ~~
  வித்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. உங்களூக்கும் பூரி-மசால் பிடிக்குமா? சேம் பின்ச்! :)
  ~~
  சுகந்திக்கா,பார்த்து(!) ரொம்ப நாளாச்சு! உங்க தோட்டமெல்லாம் எப்படி இருக்குது? :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  ஷ்ரியா,முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க. சீக்கிரம் உங்க வலைப்பூ பக்கம் வரேன்.
  ~~

  ReplyDelete
 37. ஆசையைத் தூண்டி விடுறீங்க. எங்க வீட்ல தலைவர் இல்லாதப்பதான் பூரி. இருந்தாலும் இதைப் படித்த பிறகு, நாளை மறுநாள் பண்ணிரலாம் என்று இருக்கிறேன்.

  பூரில்லாம் ஒரே சைஸா அழகா இருக்கு.

  பி.கு
  உங்க ஃப்ரெண்ட்ஸ் என்னமோல்லாம் பேசறாங்க. ஒண்ணும் புரியல. ஒருவேளை அடிக்கடி வந்தா புரியுமோ?

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails