Wednesday, April 27, 2016

பாசிப்பருப்பு பாயசம்

பாயசம் செய்யும்போதெல்லாம் பெரும்பாலும் எங்க வீட்டில் செய்யப்படுவது இந்த "பருப்பு பாயசம்" தான்..எனக்கு எந்த பாயசமாக இருந்தாலும் பிடிக்கும், ஆனால் இன்னொருவருக்கு பருப்புப் பாயசம் மட்டும்தான் பிடிக்கும், அதனால் சேமியா/ஜவ்வரிசி பாயசம் செய்யலாமா என்ற கேள்விக்குப் பதிலே கிடைக்காமல் போய்விடும். பலநாட்களாக மறந்து போயிருந்த கேள்வி, தமிழ்ப் புத்தாண்டுக்குத் தலைதூக்க, கேள்வியைக் கேட்காமலே நானாக பதிலை ஊகித்து பாயசம் வைத்தாயிற்று. பருப்பு வேகவைத்த பிறகுதான், இது நம்ம வலைப்பூ-வில பகிர்ந்திருக்கிறோமா என்ற சந்தேகம் வர...படமெடுத்து, இங்கேயும் வந்துவிட்டது பாயசம். 

சாதாரணமான ரெசிப்பிகளாக இருந்தாலும் வீட்டுக்கு வீடு சிறு வித்யாசங்கள் இருக்கும், ஏன் சமைக்கும் ஆளுக்கு ஆள் வித்யாசங்கள் இருக்கும்..எங்க வீட்டு செய்முறை இப்படி..நீங்களும் ஒரு முறை செய்து பாருங்களேன்..! 

தேவையான பொருட்கள் 
வேகவைத்த பாசிப்பருப்பு -1/2கப் 
வெல்லம் - 2 அச்சு (படம் பார்த்தறிக... :)) 
தேங்காய்ப்பால் பொடி - 1டேபிள்ஸ்பூன் (அ) தேங்காய்ப்பால் -1/4கப் 
ஏலக்காய் -2
திராட்சை முந்திரி - கொஞ்சம் 
நெய் - 1 டேபிள்ஸ்பூன்  

செய்முறை
பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஆறியதும் லேசாக மசித்து வைக்கவும்.
ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.
வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கரையவிடவும்.
கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும். 
வெல்லக் கரைசலுடன் வெந்த பருப்பை சேர்க்கவும். 
பருப்பு வெல்லத்துடன் கலந்து நன்கு கொதித்ததும் தேங்காய்ப்பால் பொடியைச் சேர்த்து கட்டிகளில்லாமல் கலக்கி விடவும். அடுப்பின் தணலை குறைத்து வைக்கவும். 

தேங்காய்ப்பால் பாயசத்துடன் நன்கு கலந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்ப் பொடியைச் சேர்க்கவும்.
சிறு கரண்டியில் நெய்யை சூடாக்கி, முந்திரி சேர்க்கவும், பொன்னிறமானதும் திராட்சையைச் சேர்க்கவும்.
 
உடனே பரிமாறுவதாக இருந்தால் பாயசத்தில் கலந்து பரிமாறலாம். அல்லது தனியே வைத்திருந்து பரிமாறும்பொழுது  வறுத்த முந்திரி திராட்சையைக் கலந்துவிட்டு பரிமாறலாம்.

எளிமையான, கொஞ்சம் பொருட்களைக் கொண்டு விரைவில் செய்யும் இனிப்பு. சுவையும் அருமையாக இருக்கும். செய்து பாருங்க. நன்றி! 

6 comments:

  1. மிக சிம்பிளான பாயாசம். நான் இதுவரை செய்ததில்லை. செய்துபார்க்கிறேன் மகி.நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து படமும் காட்டியதற்கு நன்றி ப்ரியா! :)

      Delete
  2. பாயசம் சூப்பரா இருக்கு ! எங்க வீட்டிலும் ஏறக்குறைய இதேதான்.

    வீட்டுக்கு வீடு, ஆளுக்குஆள் மட்டுமில்ல மகி, இப்பல்லாம் ஒருஒரு தடவ செய்யும்போதும் செய்முறை மாறிப்போயிடுது :)))

    ReplyDelete
    Replies
    1. //ஒருஒரு தடவ செய்யும்போதும் செய்முறை மாறிப்போயிடுது :)))// :))))) சத்தம் போட்டு சொல்லாதீங்க சித்ராக்காவ்!! ;))))

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  3. நல்ல ஈசி குறிப்பு..அம்மா இது போலதான் செய்வாங்க அக்கா..

    ReplyDelete
    Replies
    1. அபியும் செய்து சாப்பிட்டு பார்க்கலாமே!! :) ;) நன்றி அபி!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails