Saturday, May 14, 2016

நாஞ்சில் ரசம்

கொங்கு நாட்டு ரசம் (அதாங்க எங்க வீட்டு ரசம்...!! :) ) வைக்கும் முறை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். வெறும் ரசம்னாலும் சரி, பருப்பு ரசம்னாலும் சரி, அதில தக்காளியை வேகவைத்து கரைத்து ஊற்றிதான் செய்வது வழக்கம். பருப்புடன் தக்காளியை வேகவைத்து எடுத்து கரைத்துக்கொள்வேன், அல்லது தனியாக தக்காளி +புளி வேகவைத்து கரைத்து சாறு எடுத்து ரசம் வைப்பேன். தக்காளி நறுக்கி வதக்கி செய்வதெல்லாம் கிடையாது. சில நாட்கள் முன்பு இந்த ரசம் கண்ணில் பட்டது, வித்யாசமாக இருக்கே, ஒரு நாள் செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்களேன்! 

தேவையான பொருட்கள் 
புளிக்கரைசல் - 1/4கப் (கெட்டியான புளிக்கரைசல்)
தக்காளி -2
கடுகு - 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை  - கொஞ்சம் 
பெருங்காயத்தூள் -1/4டீஸ்பூன் 
எண்ணெய் 
உப்பு 
கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள
வரமிளகாய் -1
கொத்துமல்லி விதை/தனியா -1/2டீஸ்பூன்
சீரகம் -1/2டீஸ்பூன்
மிளகு - 7 
பூண்டு - 3 பற்கள் 
கடுகு -1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன் 

செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் இட்டு..
ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும்.
ரசம் வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து அரைத்த ரசமசாலாவைச் சேர்த்து கிளறவும்.
மசாலா லேசாக வதங்கியதும், பெரிதாக நறுக்கிய தக்காளித் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கி மேல் தோல் லேசாக பிரிந்து வரும்போது புளிக்கரைசலை சேர்க்கவும்.
சுமார் ஒன்று -ஒன்றரை கப் தண்ணீரும் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
ரசம் சூடாகி நன்கு நுரை கட்ட ஆரம்பித்ததும்  பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை-கொத்துமல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து ரசத்தை கலக்கி விட்டு இன்னும் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். 

சுவையான, தக்காளி மிதக்கும் ரசம் தயார். :) 

குறிப்பு 
பூண்டுக்கு தலையையும், வாலையும் கிள்ளினால்:) போதும், தோலுரிக்க தேவையில்லை. பூண்டுத்தோல் எண்ணெயில் வதங்கி நல்ல வாசனையைக் கொடுக்கும். 
தக்காளியைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும். ரசத்தில் தக்காளித் துண்டுகள் மிதக்க வேண்டும், ஜாக்கிரதை!! ;) 

ஒரிஜினல் ரெசிப்பி : இங்கே

சாப்பிட வந்த எங்கூட்டுக்காரர் ரசத்தைக் கண்டு ஜெர்க் ஆகி என்னதிது என்று கேட்டு, "ரசம்" என்ற பதிலைப் பெற்று, நம்பிக்கை இல்லாமல் சுவைத்த பிறகு, "நல்லா இருக்கே!" என்ற சர்டிஃபிகேட்டும் கொடுத்து விட்டார். என்ன செய்ய? இத்தனை வருஷமா நாங்க வைக்கிற ரசம் இப்படி இருக்காதுல்ல?? ;) :) இந்த ரசத்தை பற்றி செய்முறை கொடுத்த சாந்தி அக்கா ரொம்பச்சுவையா எழுதிருப்பாங்க. நேரமிருக்கையில் கண்டிப்பாக படித்துப்பாருங்க. 

8 comments:

  1. இது நாஞ்சில் ரசமா? இது எங்கூட்டு ரசம்.. நாங்களும் இப்படி தான் வைப்போம்..
    மசாலா அரைக்கும் போதே தக்காளியை சேர்த்து ஒரு சுத்து சுத்துவோம்.. இதே செய்முறை இதே பொருட்கள் தான்..
    ஒவ்வொரு நாள் மசாலாவை வதக்காம புளி தண்ணீர்ல கரைச்சு வைப்பேன்.. அதுவும் நல்லா இருக்கும்.. படங்கள் அருமை..

    ReplyDelete
    Replies
    1. :) அபி, நாஞ்சில் ரசம்னுதான் சாந்தி அக்கா சொல்லியிருந்தாங்க. எனக்கு எங்க வீட்டு ரசம் தவிர மத்ததெல்லாமே புதுசுதான், மதுரை ரசமும் இப்படிதான்னு நீ சொல்லி தெரிஞ்சுகிட்டேன். தேங்க் யூ!! :)

      Delete
  2. ஆஹா.. சூப்பர்.. நானும் சாந்தியின் பதிவைப் பார்த்துவிட்டுதான் இம்முறையில் ரசம் வைத்தேன். வழக்கமான ரசத்தின் ருசியை விடவும் வேறுபட்டு சுவையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. :) நீங்களுமா?? ரசவடையும் செய்து பார்த்தீங்களா? எனக்கு அதற்கு பொறுமை இல்ல, நேரமும் கூடி வரல, அதனால ரசத்தோட நிறுத்திகிட்டேன். :)
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா அக்கா!

      Delete

  3. எங்க வீட்டு ரசம்லாம் டக்குனு முடிஞ்சிடும்.

    நல்ல கமகம ரசம் வாசனை இங்க வரைக்கும் வருதே !! இப்படியெல்லாம் செஞ்சு சுடச்சுட யாராவது ஒரு கிண்ணம் ரசம் கொடுத்தா ..... எவ்ளோ சூப்பரா இருக்கும் !

    ReplyDelete
    Replies
    1. இப்பல்லாம் ரசம் வைக்கிறதே குறைஞ்சு போச்சு சித்ராக்கா, எப்பவாவது வைக்கும்போது கொஞ்சம் மீதியானாலும் வேஸ்ட் பண்ணாம சாப்பிடணும் என ஃப்ரிட்ஜ்ல எடுத்து வைப்பேன்.. பட்!! எல்லாம் வேஸ்ட்தான் ஆகும். ரசமெல்லாம் வைச்ச உடனே சாப்பிட்டாதான் டேஸ்ட்டு! வாட் யூ ஸே??! ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

      Delete
  4. //அதில தக்காளியை வேகவைத்து கரைத்து ஊற்றிதான் செய்வது வழக்கம்.// சீனியை விட்டுட்டீங்க!! ;))

    ReplyDelete
    Replies
    1. சீனி- என்று நாங்க சொல்ற வழக்கமே இல்லை இமா! சக்கரை, அஸ்கா சக்கரை- இப்படித்தான் பேரு! ;) :) அது எல்லா உணவுவகையிலுமே சேர்க்கறதால இப்பல்லாம் பெரிய விஷயமா சொல்லிக்கிடறதில்லை..!! :v

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails