முன்னெச்சரிக்கை: பதிவின் நீளம் கொஞ்சம் அதிகம். இன்னமும் சொல்லவேண்டியவை இருந்தாலும், வாசிப்போர் நலன் கருதி:) அவற்றை அடுத்த பதிவுக்கு ஒத்தி வைத்திருக்கிறேன். அவசரமாய் ஓடிவந்து எட்டிப்பார்த்துவிட்டு கம்பி நீட்டாம, நிதானமா வந்து படிங்க என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :)
எல்லாருக்கும் இந்த வாரம் இனிய வாரமாகத் தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன். எங்க வீட்டில் பலநாட்கள் தவணையாய் இருந்த ஒரு வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. வசந்தம் முடிந்ததுமே பழைய செடிகளை அகற்றி புதிதாகச் செடிகள் நட்டிருக்கவேண்டும், நாட்கள் நீண்டு கோடையின் இறுதியே வந்துவிட்டது. ஆனாலும் பரவாயில்லை, Its better late than never-என்பதாக தொட்டிச்செடிகளை தொடர்ந்து சில மணி நேரங்கள் கவனித்தோம். யெஸ், யு ஆர் ரைட்! பால்கனித் தோட்டம் பற்றிய (படங்களால் நிறைந்த) பதிவிது. :)
டேலியா-வின் சீஸன் முடிந்து, பூக்கள் சிறுத்துப் போயின, கூடவே பூச்சித் தொற்றும் வந்துவிட்டது. ஆனாலும் செடிகளைப் பறிக்க மனமில்லாமல், அப்படியே விட்டிருந்தோம். மனதைத் தேற்றிக்கொண்டு நானே(!) செடிகளை மண்ணிலிருந்து சில இன்ச் உயரத்தில் நறுக்கிவிட்டேன். வறண்டுபோன அவற்றை நீக்கிவிட்டு, தொட்டியிலிருந்து கிழங்குகளை எடுத்து வைத்திருக்கிறோம். அடுத்த வசந்தத்தில் அவை மீண்டும் முளைக்குமா இல்லை வராதா என எனக்கும் என் கணவருக்கும் போட்டி! நான் கிழங்குகள் தழைக்கும் என்கிறேன், பார்க்கலாம்![நீங்க எந்தக் கட்சி?! என் கட்சியா, இல்ல எதிர்க்கட்சியா? ;) :)]
மற்றும் சில தொட்டிகளில் பூக்கள் இல்லாமல் இருந்த செடிகளின் இலைகளை நறுக்கி, ரோஜாக்களிலும் பூத்து முடிந்த தண்டுகளை நறுக்கி..ஒழுங்கு செய்து நிமிர்ந்து பார்த்தால், ஏதோ தானே எல்லா வேலையையும் செய்து முடித்ததுபோல சோம்பல் முறித்தார் [கொலாஜில் முதல் படம்! ;) ] திருவாளர் ஜீனோ! :))))
டாலர் ஷாப்பில் இருந்து சில தொட்டிகள், சில பூக்கள் வாங்கி வந்திருந்தேன், அவற்றையும் நட்டு, மண் குறைந்த மற்ற தொட்டிகளில் மேலும் மண்ணிட்டு நிரப்பி(னார்)னோம்! ;) [நாந்தான் பிஸியா போட்டோ புடிச்சுகிட்டிருந்தேனே!..ஹிஹி]
புதினாவை நட்டு வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. அதனை நீக்கிவிட்டு புதிதாக வளர்ப்போம் என நினைத்திருந்தேன். புதினாத் தொட்டியைக் கவிழ்த்து, செடியை வெளியே எடுத்தால்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்....மண்ணே இல்லாமல் தொட்டியின் வடிவில் வேர்விட்டு இருந்தது புதினா!! நல்லவேளை இப்போதாவது ஞானோதயம் வந்ததே நமக்கு என நினைத்துக்கொண்டு, சில தண்டுகளை பறித்து புதுத்தொட்டியில் நட்டுவிட்டு, இதனை எறிந்துவிடலாம் என என்னவரிடம் சொன்னேன். அவர் அதிர்ச்சி ஆகிவிட்டார்! ;) என்னது...ஏன் இதை வீசணும்? வேறு தொட்டியில் வைப்போம் என்றார். அப்படி வருமா என எனக்குச் சந்தேகமாக இருந்தது. இருந்தாலும் முயற்சிப்போம் என சற்றே பெரிய கருப்புத் தொட்டியில் மண் நிறைத்து இந்த புதினா மரத்தை வைத்திருக்கிறோம்! :)
ஒரு வாரம் கழிந்தபின் பார்த்தால், பச்சைத்தொட்டியை விட கருப்புத் தொட்டியில் வைத்த புதினா மரம்தான் நன்றாக துளிர்த்திருக்கிறது! ;)
அடுத்து வருபவர் கொஞ்சம் ஸ்பெஷல்!! பலநாட்கள் பழம் பறித்து வந்து விதை போட்டபோதெல்லாம் முளைக்காமல் ஏமாற்றினார். ஒரு நாள் சம்பந்தமே இல்லாமல் ஒரு தொட்டியில் தானாகவே முளைத்திருந்தார். அந்தத் தொட்டியிலிருந்த மற்ற செடிகளனைத்தும் வறண்டு போன நிலையில் இவர் மட்டும் சிறு செடியாக, பசுமையாக நின்றிருந்தார்!! எனக்கென்னமோ சந்தேகத்தில் இருக்கட்டும் என விட்டுவைத்து காத்திருந்தேன். இந்தமுறை என்னை ஏமாற்றவில்லை, அவர் மணத்தக்காளிச் செடியேதான்! :))))
ஜெரேனியம் பூக்கள் உள்ள படத்தில் பாருங்கள், அப்போதுதான் சிறு நாற்றாக வளரத்துவங்கியிருந்தது. பிறகு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது சுக்குட்டிச் செடி! [கோவையில் இதன் பெயர் சுக்குட்டிச் செடி-சுக்குட்டிக் காய்-சுக்குட்டிப் பழம்! :)]
பூக்கள் வந்தன, பூக்கள் பிஞ்சாகிக் காயாகிப் பழமும் ஆனது. கீரையைப் பறிக்கலாம், பறித்துச் சமைத்தால் ஒரு ஸ்பூன் கீரைதான் கிடைக்கும்! ;) எனக்குள் ஒளிந்திருந்த சிறுமி, பறிக்காதே...பறிக்காதே என கட்டளையிட நானும் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தேன். இறுதியாக சிறுமிக்கு அவள் வேண்டியது கிடைத்துவிட்டது. ஆமாங்க, கை நிறைய சுக்குட்டிப் பழம்! :))))
செடியில் நிறையப் பழங்கள் பழுத்தபிறகும் சின்னக் குழந்தை மாதிரி பறிக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டே சிலநாட்கள் விட்டுவிட்டேன். பின்னொரு சுபயோக சுபதினத்தில்(!) பழங்களைப் பறித்து கழுவி ருசித்தாயிற்று. :)
இன்னும் காய்கள் இருக்கின்றன செடியில். ஆனால் பாருங்க, சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாக ஹோம் டிப்போ-வில் இருந்து ஆர்கானிக் மிளகாய்ச்செடிகள் வாங்கிவந்தேன், [அவற்றில் அப்போதே பூச்சிகள் இருந்தன] அந்தச் செடிகளிலொன்றை மணத்தக்காளித் தொட்டியில் வைக்க, அங்கிருந்து இங்கே பூச்சிகள் பரவிவிட்டன. நிறைய இலைகளைப் பறித்துப் போட்டேன். சிலவற்றில் பச்சை நிறப் புழுக்களும் தெரிகின்றன. வேப்பிலைப் பொடி கிடைத்தால் தூவிவிடவேண்டும் அல்லது சோப் தண்ணீர் தெளிக்கவேண்டும் என தெரிந்தாலும், இப்போதைக்கு அவற்றையெல்லாம் செய்யாது பூச்சி அரித்த இலைகளைக் கிள்ளியெறிந்துகொண்டிருக்கிறேன்.
ஹோம் டிப்போவில் ஒரு தக்காளியும் சில மிளகாய்ச்செடிகளும் வாங்கிவந்த வாரம் எங்க ஊர் உழவர் சந்தைக்குப் போனேன், அங்கே நர்ஸரியில் சிவப்பு குடைமிளகாய்ச் செடி கிடைத்தது. இந்த வகை நன்றாக வளரும் என முன்பதிவுகளில் கருத்துக்கள் சொல்லியிருந்தார்கள், அதனால் அதை வாங்கியாயிற்று.
ஃபார்மர்ஸ் மார்க்கட் நர்ஸரியில் இன்னுமொரு ஆச்சர்யம்...கறிவேப்பிலை மரம்! :) நல்ல ஆரோக்கியமான சிறு மரக்கன்றுகளாகவே விற்பனைக்கு வைத்திருந்தார்கள். தரையிலிருந்து சுமார் 11/2 உயரம் வளர்ந்திருந்தன கறிவேப்பிலைக் கன்றுகள். விலைதான் கொஞ்சம் அதிகம் போல தோன்றியது..$25!! வாங்கலாமா வேண்டாமா என குழம்பி அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துவிட்டு குடைமிளகாயை மட்டிலும் வாங்கிவந்தேன்.

நர்ஸரியில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்ததில் கிடைத்த சில தகவல்கள்..கறிவேப்பிலை வளர்க்க மணல்தான் நல்லது, அல்லது உரங்கள் கலக்காத potting soil உபயோகிக்கலாம். மிராக்கிள் க்ரோ போன்ற உரமூட்டப்பட்ட மண்ணில் நடுகையில் செடி முதலில் நன்றாக வளர்ந்தாலும் ஒன்றிரண்டு வருஷங்களில் வாடிப் போகுமாம். குளிர் காலங்களில் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், கறிவேப்பிலை குளிர் தாங்காதாம்! :) கூடவே இன்னொரு விஷயமும் சொன்னார், இப்போது நீங்கள் இந்தச் செடியை வாங்கிப் போனாலும், உடனே இதிலிருக்கும் கறிவேப்பிலையை உபயோகிக்கக் கூடாது. இலைகள் மீது சில ரசாயனங்கள் தெளித்திருக்கிறோம். அதனால், மரக்கன்றை வீட்டில் நட்டபிறகு புதிதாகத் தளிர்க்கும் கறிவேப்பிலைதான் சமையலுக்கு உகந்தது- என்றார்! அப்படி கறிவேப்பிலை நட்டு, தழைந்து, இலை முற்ற சுமார் ஒரு வருஷமாவது ஆகுமாம்!
எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதனால் வாங்காமல் வந்துவிட்டேன். என்னை விட என்னவருக்கு நிறைய்ய ஏமாற்றம்! ஏன் வாங்காமல் வந்தே என எனக்கு ஒரே அர்ச்சனை! ;)
யு.எஸ்.-ல் தோட்டம் போட்டிருக்கும் நட்புக்கள் யாராவது கறிவேப்பிலை வளர்த்திருக்கிறீர்களா? மரக்கன்று இவ்வளவு விலைதானா? நம்பி வாங்கி வளர்க்கலாமா என தெரிந்தவர்கள் யாரேனும் சொன்னால் வரும் வாரங்களில் வாங்கலாமா என முடிவு செய்ய உதவியாக இருக்கும். செய்வீர்களா?
~~~
தோட்டத்தில் நிறைய வேலை செய்ததால் சமைக்க நேரமில்லை, அதனால் பழங்களை நறுக்கி மதிய உணவுக்கு வைத்தாயிற்று!
எனக்கு பழங்களை அப்படியே சாப்பிடத்தான் விருப்பம். ஆனால்....
சிலருக்கு உப்பு-மிளகாய்ப்பொடியெல்லாம் தூவிச் சாப்பிட விருப்பமாய் இருக்கும். :)
ஒரு பாதி ஸ்பைஸி ஃப்ரூட்ஸ், மறு பாதி ப்ளெய்ன் ஃப்ரூட்ஸ்...ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்!
அந்த ஞாயிறு சமைக்காமல் டிமிக்கி கொடுத்தாலும், உங்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக...
ஒரு சிம்பிள் லஞ்ச்!
தக்காளி சாதம்,
தயிர் சாதம்,
கேரட் பொரியல், அப்பளம், மோர் மிளகாய்.