Tuesday, August 17, 2010

கடவுளும் நானும்..


இது அப்பாவி தங்கமணி அழைத்த தொடர்பதிவுக்காக...

அனேகமா புவனா கூப்பிட்ட லிஸ்ட்ல கடைசியா எழுதுவது நானாகத்தான் இருக்கணும்..மற்றவங்க எல்லாரும் எழுதிட்டாங்க.:)
~~~
கடவுளும் நானும்...
எனக்கு கடவுள் நம்பிக்கை நிறையவே உண்டு.பெண்தெய்வங்கள் அனைவரும் எனக்கு மிகப்பிடித்தமானவர்கள்.காமாட்சி,மீனாட்சி,சமயபுரத்தம்மன்,கோனியம்மன்,எல்லைமாகாளி,பத்ரகாளி,தண்டுமாரி,கருணாம்பிகை,விஸ்வநாயகி,பகவதி,அங்காளபரமேஸ்வரி இப்படி நீண்டுகொண்டே போகும் லிஸ்ட் உண்டு என்னிடம்.கோவையில் இருந்தவரை வெள்ளிக்கிழமை தவறாமல் கோனியம்மனைப் பார்க்கச்செல்வது வழக்கம்.

பள்ளிப்படிப்பு முடியும்வரை எனக்கு மற்ற மதத்தோழிகள் யாருமே இல்லை.அதன்பின்னர் கிறிஸ்தவக்கல்லூரியில் படித்ததால் ஜீஸஸ் கொஞ்சம் பரிச்சயமானார். முஸ்லிம் தோழிகள் கடந்த ஒருவருடமாகத்தான் தெரியும்,அதனால் அல்லா-வை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.என்ன பெயர் சொன்னால் என்ன? நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது..அதற்கு அவரவர் விருப்பப்படி உருவங்களும் பெயர்களும் கொடுத்து, வசதிப்படி வணங்குகிறோம்.அவ்வளவுதான்.

எனக்கு இது வேண்டும்,அது வேண்டும் என்று கடவுளைக் கேட்டது ஒரு காலம்..இப்பொழுதெல்லாம், "என்னை சரியான வழியில் வழிநடத்து..வரும் பிரச்சனைகளைத் தாங்கும் சக்தியை,அவற்றை கடந்து செல்லும் வலிமையைக் கொடு" என்று கேட்பதோடு என் ப்ரார்த்தனைகள் முடிவடைந்துவிடுகிறது.

இந்தப்பதிவில் என் மனதில் உறைந்த சில நினைவுகளை பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.(மொக்கை ஆரம்பம். விரும்புவோர் தொடரலாம்.:))
~~~
நான் இளங்கலை படித்தது ஒரு கிறிஸ்தவக்கல்லூரி..அதன்பின்னர் அந்த மூன்று வருஷங்களும் கல்லூரியிரிலிருக்கும் chaple-க்கு போவது, அருகிலிருக்கும் புலியகுளம் அந்தோணியார் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் செல்வது என்று ஆனது.நீளமான க்யூவில் நின்று கடவுளர்களைத் தொட்டு ப்ரேயர் செய்தது..அந்தோணியார் பாதத்திலிருந்த உப்பு-மிளகு பிரசாதத்தை ருசித்தது, அங்கே தரும் தேங்காயெண்ணெய் பிரசாதம் வாங்கியது என்று பழைய நினைவுகள் அலைமோதுகிறது. கோவிலிலிருக்கும் ஜீஸஸை இன்றும் என் மனக்கண்ணில் காணமுடிகிறது.நான் செல்லும் மற்ற கோயில்களுக்கும் அந்தோணியார் கோயிலுக்கும் பெரிய வித்யாசம் தோன்றவில்லை.

அப்பொழுது புலியகுளத்தில் ஒரு பெரீய்ய பிள்ளையார் சிலை வைத்து ஒரு கோயில் கட்டினார்கள்.ஈச்சனாரி விநாயகர்தான் அதுவரை கோவையிலேயே பெரிய ஆளாய் இருந்தார். ஆனால் புலியகுளம் விநாயகர் அவரை விடப் பெரியவர். பிரம்மாண்டமான உருவம்..மிகவும் லட்சணமாக இருப்பார். விவரிப்பதற்கு வார்த்தைகள் வரவில்லை..அது ஒரு அனுபவம். கோவை செல்கையில் வாய்ப்பு கிடைத்தால் அவரை நேரில் பார்த்துவாருங்கள்.

கூகுள் இமேஜஸில்ல் தேடினேன்..ஒரு படம் கிடைத்தது.

(பிள்ளையாருடன் படத்திலிருக்கும் பெரியவர் யார்னு தெரியாதுங்கோ.)
~~~
பிரதோஷம் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்தது முதுநிலை படிக்கையில்தான். அப்பொழுதிருந்து, ஒரு பீரியட் ஆஃப் டைம்..ஒரு சில வருஷங்கள் ரொம்பவுமே பக்திமானாய்:) இருந்திருக்கிறேன்.ஒரு தோழி மூலம் சஷ்டி விரதம்-பிரதோஷ விரதம் இதெல்லாம் தெரியவந்தது.அதுவரை அமாவாசை-கிருத்திகை மட்டும்தான் தெரியுமெனக்கு. பிரதோஷ விரதம் இருந்து, அருகிலிருக்கும் விருந்தீஸ்வரர் கோவிலுக்குப் போய்வருவோம். உடன் பணிபுரிந்த மேடம், 'இவங்க துள்ளி-துள்ளிதான் வருவாங்க,ஏன் தெரியுமா? அவங்க ஒரு பக்திமான்" என்று கிண்டல் செய்தது நினைவு வருகிறது!:)).

ம்ம்..அது ஒரு அழகிய கனாக்காலம். பிரதோஷம் விடுமுறை நாட்களில் வந்தால் பூமார்க்கட்டில் இருந்து அரளிப்பூக்கள் வாங்கிவந்து மாலையாகக் கோர்த்து கொண்டுசெல்வோம்..ஒரு சிலநாட்களில் அருகம்புல் பறித்து மாலைகட்டி கொண்டுசெல்வோம். நந்தி தேவருக்கு அபிஷேகம் நடப்பதைப் பார்ப்பதற்கே அவ்வளவு நன்றாய் இருக்கும். கரும்பு சர்க்கரையில் ஆரம்பிக்கும் அபிஷேகம், பால்-தயிர்-இளநீர்-பழங்கள்-தேன்-மஞ்சள்-விபூதி இப்படி ஒவ்வொன்றாய் அபிஷேகம் செய்வார்கள்..கருங்கற் சிலைக்கு மஞ்சளில் அபிஷேகம் செய்கையில் அருமையாக இருக்கும்.பூஜை முடிந்ததும், விருந்தீஸ்வரரை பூரண அலங்காரத்தில் பார்க்கையில் எனக்கு அவரிடம் கேட்க நினைத்ததெல்லாம் மறந்து போய்விடும்.கேட்பதற்கு ஒன்றுமே இல்லை என்பது போல இருக்கும். அமைதியா அவரை கண்கொள்ளும் மட்டும் பார்த்துவிட்டு வந்துடுவேன்.

பிரதோஷ பிரசாதம்..யம்ம்ம்ம்!! அபிஷேகமான பால் தீர்த்தம்,வெண்பொங்கல்,காப்பரிசி,பஞ்சாமிர்தம்,சுண்டல்,தயிர்சாதம்..ஆஹா,அப்படி ஒரு ருசியா இருக்கும்.
~~~
மார்கழி மாதத்தில் எல்லா நாட்களும் எங்க அக்காக்கள்,பக்கத்துவீட்டு அக்காக்கள் எல்லாம் தினமும் காலையில் பிள்ளையார் கோயிலுக்குப் போயிட்டுவருவாங்க..வீட்டில் பெரிய கோலங்கள் போட்டு, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து, எல்லாப் பிள்ளையார்களுக்கும் திருநீறு-குங்குமம்-பூ வைத்து கோலத்தில் அடுக்கி வைப்பாங்க. மார்கழி முதல்நாள் ஒரு பிள்ளையார்-(அருகம்புல் மட்டுமே வைக்கவேண்டும்,மற்ற பூக்கள் அன்று வைக்கக்கூடாது.) என்று ஆரம்பிக்கும் எண்ணிக்கை 3,5 என்று ஒற்றைப்படையில் அதிகரித்துக்கொண்டே போகும். கிட்டத்தட்ட போட்டி போட்டுக்கொண்டு பிள்ளையார்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போவார்கள். அதிகபட்சம் 101-க்கும் மேலே போயிருக்கும்.

திருமணத்துக்கு முன்பு வரை நானும் ஒரு மார்கழி விடாமல் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றியிருக்கிறேன்.(அந்தப் புண்ணியம்தான்,உனக்கு நான் கிடைத்திருக்கேன்என்று என்னவர் காலரைத் தூக்கி விட்டுக்கிறார்:)..100% உண்மைதாங்க அது!) காலை நாலரை மணிக்கு எழுந்து குளித்துவிட்டு,தண்ணீர் குடத்துடன் கோயிலுக்குப் போய், கோயிலை கூட்டி,வாசல் தெளித்து,கோலம் போட்டு, பிள்ளையாருக்கு 3 குடம்,5 குடம்,7 குடம்னு தண்ணீராய் சுமந்து அபிஷேகம் செய்திருக்கிறோம்.அப்புறம் வீட்டுக்கு வந்து கோலம் போட்டு, பிள்ளையாரை வைத்து,பூஜையும் முடித்து எல்லைமாகாளியம்மன் கோயிலுக்கு போவோம்.அங்கே அம்மனுக்கு முப்பது நாளும் அருமையாக அலங்காரம் செய்வார்கள். இட்லி-சாம்பார்,எள்ளுசாதம்,சர்க்கரைப்பொங்கல்,கேசரி இப்படி தினமும் ஒரு பிரசாதம்.(சாப்பிடுவது மட்டும்தான் வழக்கமான்னு கேக்காதீங்க. நாங்களும் சமைத்து கொண்டுபோவோம்.)
~~~
தை மாதம்..தைப்பூசம். என் அண்ணா ஒவ்வொரு வருஷமும் பழனி-க்கு காவடி எடுத்துக்கொண்டு நடந்து போவார்.இன்னமும் போய்க்கொண்டு இருக்கிறார்.வீட்டிலிருந்து ஒரு மூன்று மைல் இருக்கும் ஒரு தோட்டத்தில்தான் காவடிகள் கட்டுவார்கள்.அங்கிருந்து நடைப்பயணம் ஆரம்பிக்கும். கூட்டமாக சேர்ந்து போவாங்க.மூன்று நாட்களாகும் பழனி போய்ச்சேர.மலையேறி, காவடியை செலுத்திவிட்டு, ஒரு கலயம் சர்க்கரையை எடுத்துக்கொண்டு வருவாங்க. அடிவாரத்தில் ஒவ்வொரு கூட்டத்தாரும் ஒரொரு மடம் வாடகைக்கு எடுத்திருப்பாங்க.. எல்லாரும் கொண்டுவந்த கலயங்களிலிருந்து சர்க்கரைய,மற்ற பொருட்கள் சேர்த்து பஞ்சாமிர்தமா செய்து, காவடி எண்ணிக்கைக்கு ஏற்ப பஞ்சாமிர்தத்தை பிரித்து தருவாங்க. அங்கேயே எல்லாருக்கும் உணவு..ஓய்வெடுத்துவிட்டு, பழனியில் தங்கத்தேரோட்டம் பார்த்துவிட்டு,கடைவீதில விற்கும் பொம்மைகள்,கம்மல்,வளையல் இப்படி ஒரு ஷாப்பிங்கும் செய்துட்டு வீட்டுக்கு வருவாங்க.

பாதயாத்திரையில், மடத்துக்குளத்தில் இரண்டாவது இரவு தங்கி, அடுத்த நாள் சண்முகநதியில் குளித்து பழனி போய்ச் சேருவாங்க.எட்டாவது படிக்கையில் ஒருமுறை நானும் என் கஸின் ஒருவரும், பக்கத்துவீட்டு அண்ணாவுடன் மடத்துக்குளம் வரை பஸ்ல போயி காவடி கூட்டத்துடன் இணைந்து கொண்டோம்.அந்ததூரத்தை நடந்ததே ஒருபெரிய விஷயமா இருந்தது. அந்தமுறை கோயிலில் படிபூஜை(ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றுவது) செய்தோம்.
~~~
இன்னும் இதுபோல நினைவுகள் நிறைய இருக்கு. ஆனா,இதுக்கும் மேல மொக்கை போட்டா படிப்பவர்கள் நொந்து போயிடுவீங்க.
(இனி யாரும் என்ன தொடர்பதிவுக்கு கூப்புடுவீங்க?? மகி-யா?அவங்க ஆரம்பிச்சா நிறுத்தாம டைப் பண்ணுவாங்களே?-ன்னு தெறிச்சு ஓடிருவீங்கள்ல?? ஹிஹிஹி)
~~~
ஜோக்ஸ் அபார்ட், நாக்கடியில் கற்கண்டாக(நன்றி:வைரமுத்து) இனிக்கும் இந்த நினைவுகளை தட்டி எழுப்ப உதவிய புவனாவுக்கு நன்றி!!!விருப்பமிருக்கும் தோழமைகள் தொடருங்களேன்!!

17 comments:

 1. ஐ இம்முறை கடவுளின் பலனெல்லாம் எனக்குத்தான்... கேட்டதெல்லாம் கிடைக்கப்போகுதூஊஊஊஊஉ

  ReplyDelete
 2. ஆகா.... ரொம்ப ஸ்பீட்டா.... அனுப்பினேன்.... எல்லாம் எனக்கே எனக்குத்தான்.

  மஹி, உங்கள் பக்தியைக் கண்டு பரவசமாகிவிட்டேன்.

  சமயபுரத்து மாரியம்மனை எனக்கும் ரொம்பப் பிடிக்கும், நேரில் பார்த்ததில்லை.

  நானும் சில வருடங்கள் திருவெம்பாவை 10 நாளும் நத்தியாவட்டை மாலை கட்டி அதிகாலையில் போய் கோயிலில் திருவெம்பாவை பாடியிருக்கிறேன்... அது ஒரு அழகிய நிலாக்கலம்.... இப்பவும் திருவெம்பாவையை மறப்பதில்லை....

  ReplyDelete
 3. திருமணத்துக்கு முன்பு வரை நானும் ஒரு மார்கழி விடாமல் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றியிருக்கிறேன்.(அந்தப் புண்ணியம்தான்,உனக்கு நான் கிடைத்திருக்கேன்என்று என்னவர் காலரைத் தூக்கி விட்டுக்கிறார்:)..100% உண்மைதாங்க அது!)//
  :-) Mahi..pillayarukku kudam kudam-ma abishegam pannineenkala illayanu enakku theriyathu...aana Arun thalai-la oru periya ice kattiya thukki vachuteenka:-)

  nalla pathivu..

  ReplyDelete
 4. மெய்யாலுமே நீங்க பக்திமான் தான் மஹி :)

  //"வரும் பிரச்சனைகளைத் தாங்கும் சக்தியை,அவற்றை கடந்து செல்லும் வலிமையைக் கொடு"//

  நாமெல்லாம் விவரமானவங்க இல்ல :) பிரச்சனயே கொடுக்காதன்னு இல்ல வேண்டிக்குவோம்...

  ReplyDelete
 5. /பிரச்சனயே கொடுக்காதன்னு இல்ல வேண்டிக்குவோம்.../பிரச்சனையே வராம இருக்கறதெல்லாம் நடக்கற காரியமா? :)
  நாங்கள்லாம் ப்ராக்டிகலாதான் வேண்டிக்கறது அம்மணி!

  நித்து,உண்மையச் சொன்னா ஐஸ்கட்டி அது-இதுன்னு!கர்ர்ர்ர்ர்ர்ர்!நான் பிள்ளையார்க்கு அபிஷேகம் பண்ணினதும் நிஜம்தான்,இதுவும் நிஜம்தான்.நம்புங்க நித்து.:)

  அதிரா,எனக்கு திருப்பாவை-திருவெம்பாவை தெரியாது..ஆனால் இந்த மார்கழி மாதம் ரொம்பபிடிக்கும்.

  நன்றி அதிரா,நித்து&சந்தனா!

  ReplyDelete
 6. அருமையாக எழுதி இருக்கின்றிங்க மகி...எனக்கும் அப்படியே நினைவுகளை ஏற்படுத்தி விட்டிங்க...நானும் அந்த பிள்ளையாரை பார்க்க வேண்டும் என்று விரும்பம் இருந்தாலும் இன்னும் பார்க்க முடியவில்லை...நீங்களூம் பிளையாருக்கு தண்ணீர் ஊற்றி இருக்கிங்களா......

  ReplyDelete
 7. //மெய்யாலுமே நீங்க பக்திமான் தான் மஹி :) //

  நீங்க பக்தி மான் இல்ல பக்தி பழம் . அப்படிதான் இருக்கனும் . இறை நம்பிக்கை ஒன்றே பல விஷயங்களை ஈஸியா கடந்து வர மன சக்தியை கொடுக்கிறது .

  ReplyDelete
 8. //தொடருங்கள் என்று யாரையும் கூப்பிட பயமாக இருக்கிறது. கடந்தமுறை ஒருவரை தொடர்பதிவுக்கு கூப்பிட்டு, அவர் என் ப்ளாக் பக்கம் வருவதையே நிறுத்திவிட்டார்.//


  நீங்க கூப்பிட்டது ரொம்ப கஷ்டமான தொடர்தானே ..பாவம் என்ன செய்வாங்க அவங்க ..ஹி..ஹி..(( எனக்கே 3 தொடர் பாக்கி இருக்கு அவ்வ்))ஆனா நான் ஓடிட மாட்டேன்.

  ReplyDelete
 9. மகி நான் அந்த ஏரியாவில project பண்ணிட்டிருந்தப்போதான் புலியகுளம் கோவில் கட்டிட்டு இருந்தாங்க!! போன முறை இந்தியா போனப்போதான் அந்த பிள்ளையாரை போய் பார்க்க முடிஞ்சது. பிரமாண்டமான பிள்ளையார். எனக்கும் நிறைய நினைவுகளை கிளரி விட்ட பதிவு!!!

  ReplyDelete
 10. மஹி நானும் இதே மாதிரி தான் , ஆனால் நான் படித்த பள்ளிகூடம் கிறுஸ்துவ பள்ளி , தினமும் காலைல ஸ்கூல் குள்ள எண்டர் ஆனவுடன் சர்ச் போகாமல் கிளாஸ் போகமாடேன், வியாழன் காலைல ராகவேந்திரர் , மாலை பள்ளிவாசல் என்று எல்லா கோவிலுக்கு போயிருக்கிறேன் நாள் தவறாமல் செல்வதுண்டு... (கமெண்ட் ரொம்ப பெரிசா எழுதி இருக்கிறேன்)....

  ReplyDelete
 11. Mahi, ennai maranthudaatheenga, bhuvana list la naanum irikkean, innum ezhuthalai, seekkiram ezhutha try panren, romba nalla ezhuthi irukkeenga, naanum koniyamman & pillayar bakthai

  ReplyDelete
 12. மகி பிள்ளையாருக்கு தண்ணி ஊத்தி அபிஷேகம் செய்திருக்கிங்களா?? ஒரு குடுப்பினைதான் உங்களுக்கு..சுவராஸ்யமாக இருந்தது படிப்பதற்க்கு...

  ReplyDelete
 13. மகி, நல்லா இருக்கு உங்கள் பதிவு.
  நீங்கள் ஒரு பக்தி மான் .... நல்லா/பொருத்தமா இருக்கு அவங்கள் உங்களுக்கு சூட்டிய பெயர்.

  ReplyDelete
 14. கொயினிAugust 19, 2010 at 8:54 AM

  மகி கடவுளும் நீங்களும் நல்லா எழுதியிருக்கீங்க.....படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது.....இதௌவெல்லாம் மொக்கை இல்லைப்பா.....நல்லா இருக்கு.

  ReplyDelete
 15. /நானும் அந்த பிள்ளையாரை பார்க்க வேண்டும் என்று விரும்பம் இருந்தாலும் இன்னும் பார்க்க முடியவில்லை/கீதா,புலியகுளம் பிள்ளையாரையா சொல்லறீங்க,இல்ல எங்க வீட்டுப்பக்கத்து பிள்ளையாரையா?:)
  இங்கே வந்தபின்புதான் மார்கழி கோயிலுக்கும் போவது முடியாமல் போச்சு.அதுவரை போயிட்டுதான் இருந்தேன்.
  நன்றி கீதா!
  ~~
  //( எனக்கே 3 தொடர் பாக்கி இருக்கு அவ்வ்))ஆனா நான் ஓடிட மாட்டேன்.//ஜெய் அண்ணா,நான் அதை டெலிட் பண்ணி முடிக்கவும் உங்க கமெண்ட் வரவும் சரியா இருந்தது.:)

  //நீங்க கூப்பிட்டது ரொம்ப கஷ்டமான தொடர்தானே .//இருக்கலாம்..தொடர்வதும் தொடராமல் இருப்பதும் அவரவர் வசதி..அதை இங்கே குறிப்பிட்டது சரியாப்படலைன்னுதான் எடுத்திட்டேன். நன்றி அண்ணா!
  ~~
  ஓ..அங்கதான் ப்ராஜெக்ட் பண்ணினீங்களா? எல்லாரும் அக்கம்பக்கத்துலதான் இருந்திருக்கோம் அப்ப:) நன்றி சுகந்திக்கா!
  ~~
  /(கமெண்ட் ரொம்ப பெரிசா எழுதி இருக்கிறேன்)..../அதுக்கென்ன சாரு?இன்னும் பெரியகமெண்ட் கூட போடுங்க..கருத்துக்களைப் பகிர்ந்துக்கதானே இதெல்லாம்?
  நன்றி சாரு!
  ~~
  உங்கள மறந்துட்டேனே வேணி? அப்ப நான் கடைசிக்கும் முன்னால பதிவா? :)
  நன்றிங்க!
  ~~
  /ஒரு குடுப்பினைதான் உங்களுக்கு/மேனகா நீங்க இப்படி சொல்றீங்க.எனக்கென்னமோ விக்கிரகங்களுக்கு அபிஷேகம்-அலங்காரம் செய்யும் பூசாரிகளைப்பாத்துதான் இப்படி தோணும்.

  அரசமரத்தடிப்பிள்ளையாரா இருந்தா நாமே தண்ணி ஊத்தி,பொட்டு-திருநீறு வைத்து கும்பிடலாம். சாமி கும்பிட்டு கண்ணைத் திறக்கைலயே அடுத்த ஆள் விநாயகரைக் குளிப்பாட்டியிருப்பாங்க.:)))
  ~~
  வானதி,நன்றி வானதி! பதிவு முழுக்க இறந்தகாலத்துலதான் இருக்கு..அதை யாருமே கவனிக்கலை.ஹிஹி!
  ~~
  கொயினி,வெகு நாளைக்கபுறம் உங்களை அங்கங்க பார்க்கமுடியுது.:)
  நன்றீங்க!

  ReplyDelete
 16. ரெம்ப நன்றி மகி... என்னோட அழைப்பை ஏற்று எழுதினதுக்கு...அந்த புலியகுளம் கோவில் பத்தி நானும் கேட்டு இருக்கேன்... அடுத்த முறை போறப்ப கண்டிப்பா போய் பாக்கணும்... அழகா உங்க நினைவுகள தொகுத்து சொல்லி இருக்கீங்க... சூப்பர்

  ReplyDelete
 17. நன்றி புவனா!கட்டாயம் போயிட்டு வாங்க.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails