Friday, January 31, 2014

எடிபிள் கம் லட்டு/கோந்து லட்டு

ஒரு சில வருடங்கள் முன்பாகத்தான் "எடிபிள் கம் / சாப்பிடக்கூடிய கோந்து" பற்றி கேள்விப்பட்டேன், அதுவரை கோந்து என்றால் வேப்பமரத்தில் கத்தி கொண்டு கஷ்தப்பட்டு சுரண்டி எடுத்துவந்து நீர் ஊற்றி ஊறவைத்து 'கோந்து வாசனை'யுடன் உபயோகிக்கும் கோந்தும், பிறகு வந்த 'கேமல்' கம்-மும்தான் தெரியும்! :)
மராட்டி நண்பர்கள் வாயிலாகப் பெயர் அறிமுகமானாலும் இதனைப் பார்த்ததோ, சுவைத்ததோ கிடையாது. உடலுக்கு மிகவும் நல்லது, குளிர்காலத்தில் சாப்பிட உகந்தது (உடலுக்கு சூட்டைத் தரும் குணமுடையது இந்த கோந்து), இளம் தாய்மார்களுக்கு முதல் 40 நாட்கள் கட்டாயம் தருவோம். இடுப்பெலும்பு பலமாகவும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் வல்லது இந்த கோந்து  என்ற தகவல்களெல்லாம் தோழிகள் மூலம் அறிந்து கொண்டேன்.  என்னவரிடம் கோந்து வாங்கி வாங்க வாங்க வாங்க வாங்க என்று சொல்லி, ஒரு வழியாக எடிபிள் கம்மை கண்ணால பார்த்து, லட்டும் செய்து சுவைத்துவிட்டேன்! :))))    

உலர் பழங்கள், முந்திரி, பாதாம், வால்நட் மற்ற நட்ஸ் வகைகள், மக்கானா- என்ற பாப்கார்ன் போன்ற ஒரு பண்டம், ஏலக்காய், வெந்தயம் இப்படி ஊட்டச்சத்து மிக்க பொருட்கள், கூடவே தாராளமாக..ஏராளமாக நெய் இவற்றுடன் கடலைமாவு அல்லது கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதே இந்த லட்டு. கடலைமாவு ஜீரணிக்க கடினம் என்பதால் கோதுமை மாவு உபயோகித்து தோழியொருவர் லட்டு செய்துதந்தார் எனக்கு. [அதற்கு முன்பாக ரெசிப்பி கேட்கிறேன் பேர்வழி என்று முக்காமணி நேரம் நான் கேட்ட கேள்விகளில் நொந்து நூடில்ஸ்;) ஆகி அவராகவே லட்டைப் பிடித்துக் கொண்டுவந்து என் வாயை அடைத்தாரா என்பது அந்த "ஊப்பர்வாலா"-வுக்கே வெளிச்சம்! ஹிஹ்ஹிஹி..]

நேரடியாகக் கிடைத்த மீனைச் சாப்பிட்டுப் பசியாறிவிட்டே இருந்தால் எப்படி? நானும் மீன்பிடிக்கப் பழகவேண்டுமே? :) அதனால் வீட்டிலிருந்த பொருட்களோடு களமிறங்கினேன். அங்கங்கே ஷார்ட்கட்ஸ் போட்டு டெஸ்டினேஷனை ஒரு வழியாக ரீச் பண்ணினேன், ஆனால் ஏலக்காய், வெந்தயமெல்லாம் போட மறந்தாச்சு, அதனாலென்ன "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று மனசைத் தேத்திகிட்டு  வாங்க லட்டு செய்யப்போலாம்.. 
தேவையான பொருட்கள்
எடிபிள் கம் - 2 டேபிள்ஸ்பூன்
உலர் பழங்கள், நட்ஸ் வகைகள் -3/4கப்
கோதுமை மாவு-11/4கப்
சர்க்கரை-3/4கப்
நெய்-1/2கப்

செய்முறை
மிதமான சூட்டில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை காயவைத்து கோந்தைப் பொரித்து எடுக்கவும். [கோந்து பார்க்க பனங்கல்கண்டு போல இருக்கிறது, (வேப்ப மர கோந்தைப் போலவும்தான் இருக்கிறது, ஹிஹி..)பெருங்காயம் பொரிவது போல, பாப்கார்ன் பொரிவது போல பொரிகிறது இந்த கோந்து..கவனமாக எல்லாப் பக்கமும் பொரிந்து வரும்படி பொரித்தெடுக்கணும்! ]  
பாதாம்-வால்நட் இவற்றையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். 
திராட்சையையும் வறுத்து எடுக்கவும். 
பேரீட்சையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். 
பொரித்த பண்டங்கள் ஆறியதும், அவற்றுடன் நறுக்கிய பேரீட்சையையும் சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துவைக்கவும்.

கடாயில் இன்னுமிரண்டு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கோதுமைமாவைச் சேர்த்து வாசனை வர வறுக்கவும்.
[இதுக்கப்புறம்தான் நம்ம ஷார்ட்கட் போறோம்..யூஷுவலாக அடுப்பிலேயே வெகுநேரம் மாவை வறுத்துதான் லட்டு செய்வாங்க. நாம மைக்ரோவேவ் யூஸ் பண்ணிக்கலாம்! ;)]
மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் வறுத்த மாவு, சர்க்கரை சேர்த்து கலந்து மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கலந்து 4 நிமிடங்கள் சமைக்கவும். உடனே மைக்ரோவேவ்-ஐத் திறக்காமல் 3-4 நிமிடங்கள் விட்டு பிறகு திறந்து லட்டு கலவையை வெளியே எடுத்து நன்றாக கலந்து விடவும்.

பொடித்த நட்ஸ்-உலர் பழ கலவையைச் சேர்த்து கலந்து மீண்டும் 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
2-3 நிமிடங்கள் கழித்து மைக்ரோவேவ்-லிருந்து லட்டு கலவையை எடுத்து ஆறவிடவும்.
கலவை கை பொறுக்கும் சூட்டுக்கு ஆறியதும் லட்டுகளாகப் பிடித்துவைக்கவும்.
[குறிப்பு: இரண்டு கைகளிலும் நெய் தடவிக்கொண்டு லட்டுக்கள் பிடித்தால் அழகாக வரும். என்னைப் போல அவசரக் குடுக்கை + நளினமாக ஒரே கையில் பிடித்தால் படத்திலிருப்பது போல கோக்குமாக்கான உருண்டைகள் கிடைக்கும்! ;) அது உங்க வசதி!! :)]

தினம் ஒன்று என்ற வீதத்தில் இந்த உருண்டைகளை உண்ணலாம். அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால் கூடவே ஒரு கப் பாலைக் குடித்து லட்டுகளின் சூட்டைத் தணித்துக் கொள்ளவும். நன்றி, வணக்கம்! :)) 

16 comments:

  1. அடடா... இது மிகவும் தேவையான ஒன்றே.... செய்து பார்ப்போம்.... நன்றி...

    ReplyDelete
  2. கேள்வி பட்டதே இல்லை. இன்று தான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  3. இப்போ தெரிந்து கொண்டேன்....:)) லட்டின் மகிமையை..:)

    கோந்தில் லட்டு... வித்தியாசமா தான் இருக்கு...

    ReplyDelete
  4. இதனை பாதாம் கோந்து என்று சொல்வார்கள்.. இரவில் சில துண்டுகளை நிறைய நீரில் ஊறப்போட்டால் காலையில் மல்லிகைப்பூப்போல் மலர்ந்து பாத்திரம் நிரம்பிக்காணப்படும்..

    தண்ணீரை வடித்துவிட்டு பால் சர்க்கரை சேர்த்து காலையில் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பார்கள்..

    இதனுடன் ஐஸ்கிரீம் கலந்து ஜில்ஜில் ஜுகர்தண்டா
    என்றும் சாப்பிடலாம்..!

    ReplyDelete
  5. மகி நலமா.. பாப்பா , ஜீனோ, எப்பிடி இருக்காங்க.. இந்த லட்டு புதுசா இருக்கு. நல்லா டேஸ்ட்டா இருக்கும் போல.. பாதம் பிசின் , கடல் பாசின்னு சொல்வாங்களே.. அதுபோல தெரியுது. ஜிகர்தண்டாவுக்கு யூஸ் பண்ற பிசின்தானே இது.. இல்ல வேறயா..

    ReplyDelete
  6. Never heard of this gum. Recipe looks yummy.

    ReplyDelete
  7. ம்ம்...புதுசுபுதுசா என்னென்னமோ சுட்றீங்க. சத்து நிறைந்த லட்டுபோல் தெரிகிறது. கடைக்குப் போனால் எடிபிள் கம் எப்படி இருக்குன்னு பார்த்துவிட்டு வருகிறேன்.

    எங்க வீட்ல ஒரேமாதிரி இருப்பவைகளைவிட இந்த கோக்குமாக்கா இருப்பவைதான் முதலில் காலியாகும்.

    ReplyDelete
  8. தனபாலன் சார், தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள், செய்து தரச் சொல்லுங்க வீட்டில்!
    ~~
    அமுதா கிருஷ்ண, இது மதுரைப் பக்கம் இருக்கிறது போல, நானும் சமீபத்திலதான் எடிபிள் கம் பற்றி அறிந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஆதி, உங்க கருத்துதான் என்னை இன்னும் கொஞ்சம் தகவலறியச் செய்தது! :) நன்றிங்க!
    ~~
    இராஜராஜேஸ்வரி மேடம், நான் ஜிகிர்தண்டா கேள்விப்பட்டதுடன் சரி, செய்ததோ ருசித்ததோ இல்ல, பாதாம் பிசின் கேள்விப்பட்ட பெயராகத் தெரியுது!
    தகவலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
    ~~
    ராதாராணி, நாங்க எல்லாரும் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? ஸ்கூபி வளர்ந்துட்டானா? நான் நலம் விசாரித்தா சொல்லுங்க! :)
    ஜிகர்தண்டாவுக்கு யூஸ் பண்ணும் பாதாம் பிசினேதானாம் இது, இராஜி மேடம் சொல்லிருக்காங்க பாருங்க. கடல் பாசி இது இல்ல, அது வேறு. லட்டு சுவையாத்தான் இருக்கும். செய்து பார்த்து சொல்லுங்க! நன்றி!
    ~~
    வானதி, கம் கிடைக்குதான்னு பாருங்க உங்க ஊர்ல, இல்லன்ன அது இல்லாமயும் செய்யலாம். குழந்தைகளுக்கு தினமும் ஒண்ணுன்னு குடுங்க, ரொம்ப நல்லது!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    சித்ராக்கா, கட்டாயம் உங்க ஊர்ல எடிபிள் கம் இருக்கும். வாங்கி டேஸ்ட் அண்ட் டெஸ்ட் பண்ணீப் பார்த்து சொல்லுங்கோ! :)
    //கோக்குமாக்கா இருப்பவைதான் முதலில் காலியாகும்.// அட, என்னைப் போலவே இருக்கீங்க போல வீட்டில எல்லாரும்? ;) :)
    கருத்துக்கு நன்றி அக்கா!
    ~~

    ReplyDelete
  9. Yeah Mahi. it is very good and is a special sweet given for new mothers as mentioned by you. Available commonly in all good sweet shops here. Hope you are taking it regularly.

    ReplyDelete
  10. மஹி இந்தக் கோந்து உபயோகித்து நேபாலில் செய்யும் திரட்டுப்பால் நன்றாக இருக்கும். பேரு குந்த்பாக். வேறெ ஒன்றும் இல்லை. கோந்தையும் பொரித்துப் பொடிசெய்து கலந்திருப்பார்கள். வெல்லம் சேர்த்த மாதிரி கலர் இருந்தாலும்
    சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும்.
    பிரஸவத்திற்குப் பின் வறுத்தரவை,மருந்துப்பொடிகள்,உலர் பழ,வகைகள்,கசகசா,முந்திரி பாதாம்,டால் மக்னியில் போடும் வறுத்த மக்நி, நெய் வெல்லம் எல்லாம் சேர்த்து,
    சாப்பிடக் கொடுப்பார்கள் நேபாலில்.
    உடம்பிற்கு நல்லது என்று சொல்லுவார்கள். ருசி பார்த்து இருக்கிறேன்.
    நல்ல குறிப்பு உன்னுடயது. உனக்கும் சாப்பிட நல்லது.
    எடிபிள் கம் லட்டு பாக்கி இருக்கா. தவராது சாப்பிடவும். அன்புடன்

    ReplyDelete
  11. I have never tried this Mahi, very new to me, I don't know if badam pisin used in jigirthanda and this edible gum are the same..

    ReplyDelete
  12. புதுசு புதுசா எல்லாம் ட்ரை பண்ணுறீங்க. கலக்குங்க. :-)

    ReplyDelete
  13. மீரா, எனக்கு சொன்னவர்களும் மும்பை-புனே தோழிகள்தான். அங்கே கடைகள்லயே இருக்குமா? பரவால்லயே!
    அடுத்த ரவுண்டு லட்டு செய்ய நேரம் வந்துவிட்டது. இந்த முறை இன்னும் கொஞ்சம் வித்யாசமா செய்யப்போறேன். :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    காமாட்சிம்மா, ரவை போட்டுகூட செய்யலாமா என யோசித்தேன், சாப்பிட்டதில்ல இதுவரை..முதல்ல செய்து கொடுத்த தோழியும் கோதுமை மாவில்தான் செய்து தந்தாங்க, அதனால அப்படியே கண்டினியூ செய்துட்டேன். கசகசா கூட போடலாமாம்மா? இந்த முறை சேர்த்துடறேன்.
    திரட்டுப்பால்ல கோந்து? இன்ட்ரஸ்டிங்! எடிபிள் கம் படத்தில இருக்கு பாருங்க, அந்த பாக்கட் அப்படியே இருக்கு. கட்டாயம் சாப்பிடறேன்மா! கருத்துக்கு அன்பான நன்றிகள்!

    ReplyDelete
  14. ஹேமா, கர்நாடகாவிலும் இந்த லட்டு செய்வாங்களாம், "ஏதோ ஒரு 'உண்டே' " என பேர் சொன்னாங்க, மறந்துட்டேன். கடைகள்ல கோந்து கிடைக்கும் என நினைக்கிறேன், வாங்கி டிரை பண்ணிப் பாருங்க. சூப்பரா இருக்கு டேஸ்ட், உடம்புக்கும் நல்லது!
    ~~
    இமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! // கலக்குங்க. :-)// ஓக்கே, கலக்கிடறேன்! :)

    ReplyDelete
  15. நான் ஒரு முறை கோந்து வாங்கி கையில் அகப்பட்டதெல்லாம் சேர்த்து லட்டு செய்து சாப்பிட்டேன். எனக்கு குட்டிகுட்டி உருண்டைகளாகப் பொரிந்து வந்தது.

    ReplyDelete
  16. இப்போதானே பார்த்தேன். இது லயாஸ் ரெசிபியா?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails