
நேத்துத்தான் 10த் ரிஸல்ட் வந்திருக்கு,இன்னிக்கு இப்படி ஒரு போஸ்ட் வந்திருக்கேன்னு பார்ப்பீங்க. எனக்கு இன்னும் ஸ்வீட் 16கூட ஆகல, இப்பதான் 10த் பாஸ் பண்ணிருக்கேன்னு சொன்னா நம்பவா போறீங்க? என் அக்கா பையனும் அண்ணன் பொண்ணும் 10த் எழுதியிருந்தாங்க. நேத்து மார்க்-ஐப் பார்க்கும்போது எனக்கு BP வராத குறைதான்! ரெண்டு பேருமே நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டாங்க. :)
நான் பாஸாகிட்டேன்னு சொன்னது எங்கூரு ட்ரைவிங் லைஸென்ஸ் எக்ஸாம்லே. யெஸ்,25-ஆம் தேதி புதன்கிழமை வெற்றிகரமா ரோட் டெஸ்ட்டை க்ளியர் பண்ணி லைஸென்ஸ் வாங்கிட்டேன்!!:)))))))) அதைப் பற்றி சொல்லத்தான் இந்தப் பதிவு. கிட்டத்தட்ட 2 வருஷக்கதை சொல்லப்போறேன். எல்லாரும் பெட்ஷீட்,தலகாணி, குடிக்கத்தண்ணி எல்லாம் எடுத்துட்டு வந்து கம்ப்யூட்டர் முன்னாடி உக்காருங்க,சரியா? :)
யு.எஸ்.ல பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் ஒரு சில இடங்களைத்தவிர மத்த இடங்களில் அவ்வளவு வசதியா, frequent-ஆ இருக்காது. கார் இல்லாமல் இருப்பது கஷ்டம். என்னவரும் இங்கே வந்து நாலு நாள்லயே காரை ரென்ட் பண்ணிட்டார். இன்டர்நேஷனல் ட்ரவிங் பர்மிட் வைத்து இருந்ததால், 2 ட்ரைவிங் க்ளாஸ் போனதுமே இந்த ஊர் ட்ரைவிங் பழகிட்டார். அதை வைத்தே பலநாட்கள் ட்ரைவ் பண்ணிட்டு இருந்தார். சால்ட் லேக் சிட்டில இருக்கும்போதுதான் திடீர் ஞானோதயம் வந்து அவர் லைஸென்ஸ் வாங்கினார். அதுவரை லைசென்ஸ் வாங்கணும்னு எண்ணமெல்லாம் இல்லாத நானும் ஒரு உத்வேகம் வந்து எழுத்துத்தேர்வுக்குப் போனேன்.
இண்டியன் லைஸென்ஸ் (ஒரிஜினல்) இருந்தா, சால்ட் லேக்ல எழுத்துத்தேர்வு ஓபன் புக் டெஸ்ட்தான். DMV ஆபீஸ்ல போய் பந்தாவா எங்கிட்ட இருந்த லைசென்ஸ்-ஐக் குடுத்ததும்,அந்தாளு அதையத் திருப்பித்திருப்பிப் பாத்துட்டு இது ஒரிஜினல் இல்லையே?-ன்னாரு. அதுவரைக்கும் நானும் கவனிக்கல,அப்பத்தான் பாக்கிறேன், துரதிர்ஷ்டவசமா என்னிடம் இண்டியன் லைசென்ஸின் போட்டோ காப்பிதான் இருந்திருக்குது.(ஒரிஜினல் பத்திரமா இருக்கோணும்னு ஊருல வைச்சுட்டு வந்திருக்கேன்னு அப்பத்தான் தெரிஞ்சுது!!)
பொறகென்ன? இதெல்லாம் செல்லாதும்மா,நீ ஓபன் புக் டெஸ்ட் எழுதமுடியாது, நார்மல் டெஸ்ட் வேணா எழுது-ன்னாங்க. அந்த போட்டோ காப்பியத்தான் அவ்ளோ நாளா ஐடி-யா யூஸ் பண்ணிட்டு இருந்தேன்,அதை வச்சு சிலபல முறைகள் காரை ஓட்டியும் இருக்கேன். டெஸ்ட் எழுத அலவ் பண்ணாட்டி பரவால்ல, என்னோட இண்டியன் லைஸென்ஸை திருப்பிக் குடுத்திருங்கன்னு கேட்டேன். ஒரு முறை முறைச்சுட்டு, அதெல்லாம் குடுக்க முடியாது. போட்டோ காப்பிய எங்கயுமே யூஸ் பண்ணக்கூடாது, பண்ணினா அது ஃபோர்ஜரி! -ன்னு சொல்லிட்டு ரெண்டா-நாலா கிழிச்சு குப்பைத்தொட்டில போட்டுட்டாங்க. எனக்குப் பொக்குன்னு போச்சு போங்க!! :-|
சரி, இன்னொருநாள் வந்து எழுதிக்கலாம்னு சொன்னா என்னவர் இவ்வளோ தூரம் வந்துட்டோம்(வீட்டில இருந்து மூஊஊஊஊணு மைலுங்க!!) சும்மா ஒரு ட்ரை பண்ணிப்பாருன்னு கம்பல் பண்ணினார். புக் பாத்து பதில் எழுதறதுதானேன்னு சும்மா நுனிப்புல் மேய்ஞ்சுட்டு போயிருந்தேன், இருந்தாலும் ஏதோ எழுதினேன். எதிர்பாத்தமாதிரியே ஊத்திகிச்சு!!!
என்னையப் பாத்து ஃபோர்ஜரி பண்ணறேன்னு சொல்லிப்போட்டாங்களே இந்த யூட்டா கவர்மென்ட்டு? இந்த ஸ்டேட்லயே லைசென்ஸ் வாங்கி காட்டறேன்னு சூளுரை எல்லாம் எடுத்துகிட்டு அடுத்த சிலநாட்கள்லயே, (கரெக்ட்டா டிசம்பர் 31-ஆம்தேதி) எழுத்துத் தேர்வை க்ளியர் பண்ணிட்டேன். ஒரு வருஷத்துக்கு லர்னர்ஸ் பர்மிட் குடுத்தாங்க. DMV-ல இருந்த ஒரு அம்மா உங்க மோதிரம் ரொம்ப அழகா இருக்கே,எங்கே வாங்கினது? எவ்ளோ விலை? இந்தமாதிரி அதிமுக்கிய டீடெய்ல் எல்லாம் கேட்டாங்க, அவங்களோட கொஞ்சநேரம் அரட்டை அடிச்சிட்டு சந்தோஷமா பர்மிட்டோட வெளியே வரேன், வின்டரோட முதல் பனிப் பொழிவு ஆரம்பமாகி, பனி கொட்டிட்டு இருக்கு அங்கே!
அதுக்கப்புறம் நாலஞ்சு மாசம் மாதம் ஏகத்துக்கும் ஸ்னோவா இருக்கும். நல்லா வண்டி ஓட்டறவங்களே அந்த ஸ்னோல தடுமாறுவாங்க, என்னை மாதிரி கத்துக்குட்டியெல்லாம் என்ன செய்யமுடியும்? அதுவும் இல்லாமல் என்னவருக்கும் அங்கே ப்ராஜெக்ட் முடிந்து இடம்மாற வேண்டிய சூழ்நிலை வந்தது. லைஸென்ஸ் வாங்கற ஐடியாவை மூட்டை கட்டி கார்லயே போட்டுகிட்டு மே மாதம் இங்கே வந்து சேர்ந்தோம்.
