Friday, February 22, 2013

வயலட் காலிஃப்ளவர் குருமா

முன்பே ஒரு பதிவில் உழவர் சந்தைக்குப் போய் வயலட் காலிஃப்ளவர் (purple cauliflower) வாங்கிவந்தது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். வண்ணமயமான காலிஃப்ளவர் கிடைக்காவிட்டாலும், சாதா காஃலிப்ளவரிலும் இதே போன்ற குருமா செய்யலாம். நான் இதுவரை வெள்ளை-பச்சை-வயலட் மூணு கலரில் காலிஃப்ளவர்கள் வாங்கியிருக்கிறேன். இந்தக் காய் புதிதாக இருந்ததால் ருசி மிகவும் நன்றாக இருந்தது. இன்று காலிஃப்ளவரை எப்படி குருமாவில் உபயோகிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க. :)
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் பூக்கள் -7 (படம் 1-ல் உள்ள அளவு)
வெங்காயம்-1
தக்காளி-1
பச்சைமிளகாய்-1
இஞ்சி-பூண்டு தட்டியது - 1டீஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி -1/4டீஸ்பூன்
கறி மசாலா பொடி-11/2டீஸ்பூன்
கரம் மசாலா பொடி-1/2டீஸ்பூன்
Half &Half milk -2 டேபிள்ஸ்பூன் (அல்லது) க்ரீம்-2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி- கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைக்க
தேங்காய்த் துருவல் - 2டேபிள்ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு - கொஞ்சம்

செய்முறை
காலிஃப்ளவர் பூக்களை சுத்தம் செய்து அலசிவைக்கவும். பெரிய பூக்கள் எனில் ஒரே அளவான துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கிவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு, கடுகு பொரியவிடவும்.
நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தட்டிய இஞ்சி-பூண்டு சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து, குழையும் வரை வதக்கவும். 
நறுக்கிய காலிஃப்ளவர் பூக்களை சேர்த்து பிரட்டவும்.
 
அரை கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.காய் முக்கால் பாகம் வெந்ததும்(சீக்கிரமாய் வெந்துவிடும், 4-5 நிமிடங்கள் கொதித்தால் போதுமானது) அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
குருமா நன்றாக கொதித்ததும் half & half milk -ஐச் சேர்க்கவும். தீயைக் குறைத்து சர்க்கரையையும் சேர்த்து கலந்துவிடவும்.
2-3 நிமிடங்களுக்குப் பிறகு கரம் மசாலா பொடி மற்றும் மல்லித்தழை தூவி குருமாவை அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான க்ரீமி காலிஃப்ளவர் குருமா தயார். சப்பாத்தி, மற்றும் சாத வகைகள், இட்லி-தோசை எல்லாவற்றுக்கும் பொருத்தமான குருமா இது.
~~~
Sending this recipe to "Passion on Plate" event happening at "En Iniya Illam"
~~~

13 comments:

  1. இன்றிரவு சப்பாத்திக்கு குருமா செய்ய பட்டாணி, காலிஃப்ளவர்தான் எடுத்து வைத்திருக்கிறேன். இப்போது குருமா செய்துகொண்டு எதற்கு சிரமம், அப்படியே செய்ததை அனுப்பிடுங்க,சாப்பிட்டு பார்த்து சொல்கிறோம்.

    இந்த காலிஃப்ளவர் வாங்கியதில்லை.பால்,சர்க்கரை சேர்த்தும் செய்ததில்லை.புது காமிராவில் படங்கள் சூப்பரா வந்திருக்கு மகி.

    ReplyDelete
  2. சித்ராக்கா, குருமா தானே? இதோ,..பார்ஸல் அனுப்பிட்டேன்! :)

    ஹாஃப் & ஹாஃப் வாங்கி க்ரேவி-குருமால சேர்த்து பாருங்க, நல்ல ரிச் க்ரீமி டேஸ்ட் கிடைக்கும். சர்க்கரை கொஞ்சமே கொஞ்சம்! நல்ல ஒரு "கிக்" குடுக்கும்! ;):)

    அப்புறம், படங்கள் எல்லாம் ஸோனி ரிப்பேர் ஆகுமுன் எடுத்தவை சித்ராக்கா..புது கேமராவில் அதிகம் கிச்சன் படங்கள் எடுக்கலை. புதுசா இன்னொரு ஸோனி பாயின்ட் &ஷூட் கேமராவுக்கு அடிபோட்டுட்டு இருக்கேன், கிடைச்சுட்டா ஜாலிதான்! :))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  3. கோவை ஸ்டைலில் சர்க்கரையை இதிலும் சேர்த்திட்டீங்க மகி.. குருமா பார்க்க அசைவ குருமா மாதியே இருக்கு. இந்த கலர் காலிபிளவர் இங்க கிடைக்காது. ஆனாலும் வெள்ளையில் செய்து பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி. ஆமா...சர்க்கரை சேர்க்கிறது குருமாக்கு நல்லா இருக்குமோனு ஒரு சின்ன டவுட்..நீங்க வைக்கிற சர்க்கரை சேர்த்து செய்யிற சாம்பார் எல்லாம் நல்ல டேஸ்ட்.. செய்து பார்த்திருக்கிறேன்..

    ReplyDelete
  4. உங்கள் குருமா செய்து பார்க்கிறேன்.
    சர்க்கரை சேர்த்தால் தித்திப்பாகி விடாதோ?

    passion on plate contest இல் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  5. ஆஹா சூப்பர் வெற்றிபெற வாழ்த்துக்கள்... வெள்ளைக்கும் இக்கலருக்கும் சுவையில் ஏதும் வித்தியாசம் இருக்கோ மகி?(ஹொலிபிளவரில).

    ReplyDelete
  6. Yummy, Thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you

    ReplyDelete
  7. Is there any difference in taste Mahi, definitely the more colorful, more nutritious..

    ReplyDelete
  8. சூப்பர் மகி, நேரில் நின்று குருமா சமைத்ததைப் பார்த்தது போல் இருக்கு பகிர்வு.

    ReplyDelete
  9. கலர்புலா இருக்குமோ படத்தை பார்த்தவுடன் சாப்பிடனும் போல் இருக்கு ம்ம்ம்ம்ம் ..யமி செய்யனும்

    ReplyDelete
  10. கருத்துக்கள் தந்த வானதி, ஆசியாக்கா, மலர்,ராஜி மேடம், அதிரா,ஹேமா, ஃபாயிஸா, ராதாராணி...அனைவருக்கும் மனமார்ந்த நன்றீகள்!

    @அதிரா & ஹேமா, வயலட் காலிஃப்ளவருக்கும் சாதா காலிஃப்ளவருக்கும் சுவையில் பெரிய மாறுதல்கள் இல்லை.கலர் மட்டுமே வேறு. இது ப்ரெஷ்ஷாக இருந்ததால் நல்ல சுவையாக இருந்தது.

    @ராஜி மேடம் & ராதா ராணி, இவ்வளவு குருமாவிற்குமாக சர்க்கரை ஜஸ்ட் ஒரு கால்டீஸ்பூன் தானே சேர்க்கிறோம்? அதனால் இனிப்புச் சுவையெல்லாம் அப்பட்டமாகத் தெரியாது. In fact,'சர்க்கரை சேர்த்திருக்கேன்' என்று நீங்களாச் சொன்னாதான் சாப்பிடுபவர்கள் கண்டேபிடிப்பாங்க. அதனால் தைரியமாகச் சேர்க்கலாம். :) செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

    ReplyDelete
  11. மஹி, உங்க ப்ளாக்-ல சொல்ல கூடாது இருந்தாலும் சொல்றேன். உங்க குர்மா சும்மா சிக்கன் குர்மா மாதரியே இருக்கு. Especially last picture :D :) Would love to taste it with தோசை.

    ReplyDelete
  12. மீனாக்ஷி, சொல்லக்கூடாதுன்னெல்லாம் இல்லை, தாராளமாச் சொல்லலாம்! எங்க வீட்டில நான் மட்டும்தான் சைவம். :)

    தோசைக்கு சூப்பரா இருக்கும், செய்து பாருங்க! நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails