Tuesday, August 6, 2013

ஆறு வகை பொரியல்

சமீப காலத்தில் காய்களுக்கும் எனக்கும் ஏதோ ஸ்பெஷல் கனெக்‌ஷன் வந்தது போல ஒரு உணர்வு!   தினமும் ஒரு பொரியல் செய்யவே அலுத்துக்கொண்டது போய், ரெண்டு பொரியல் சர்வ சாதாரணமாகப் போய்விட்டது! அதன் விளைவு?? கேமராவில் நுழைந்து, லேப்டாப்புக்குள் புகுந்த படங்களும், இணையத்தின் உதவியால் உங்களை வந்து சேரப் போகும் இந்தப் பதிவும்!  :):):) 

1.சுரைக்காய் பொரியல்
அவ்வப்பொழுது மதிய உணவைப் பொழுதுபோக்காகப் படமெடுத்து வைத்ததை ஒரு நாள் புரட்டிப் பார்த்ததில் சுரைக்காய் பொரியல் பலநாட்கள் என் தட்டில் இடம் பிடித்திருந்தது. இங்கே இண்டியன் ஸ்டோரிலும், நான் வழக்கமாக காய்கறி வாங்கும் மிடில் ஈஸ்டர்ன் ஸ்டோரிலும் நல்ல ஃப்ரெஷ்ஷான இளசான சுரைக்காய்கள் ரெகுலராகக் கிடைக்கின்றன. இதற்கு என் தோழி தந்த "மதுரை ஸ்பெஷல் சாம்பார் பொடி" உபயோகிப்பேன். சிம்பிள் அண்ட் ருசியான பொரியல். செய்து பாருங்க, உங்களுக்கே தெரியும்! 
தேவையான பொருட்கள்
நறுக்கிய சுரைக்காய் -1 கப் [காய் புதுசாகவும் இளசாகவும் இருப்பதால் நான் தோல் சீவுவதோ, விதைகளை நீக்குவதோ இல்லை. காயை நன்றாகக் கழுவி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்குவேன்]
நறுக்கிய வெங்காயம்-1டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு - உ.பருப்பு-தலா 1/2டீஸ்பூன்
மஞ்சள்ப்பொடி-1/8டீஸ்பூன்
சாம்பார் பொடி (அல்லது) மிளகாய்ப் பொடி -1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் வெங்காயம்-பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் வதங்கியதும் காயைச் சேர்த்து, மஞ்சள்ப்பொடி, சாம்பார்ப்பொடி சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
சுரைக்காய் விரைவில் வெந்துவிடும். பதமாக வெந்ததும் தேவையான உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.   
~~~
2.வெண்டைக்காய் புளிக்கறி 
கடையில் இருந்து வாங்கிவந்த உடனே காலி செய்ய வேண்டிய காய்களில் முக்கியமானது வெண்டைக்காய். ஃப்ரிட்ஜில் வைத்தாலும் முற்றிப் போகும் அல்லது கொழ-கொழவென அழுகிப் போகும்.
ஸோ, மறக்காமல் வாங்கிவந்த இரண்டு நாட்களுக்குள் இந்தப் புளிக்கறி செய்து சாப்பிடுங்க. பொரியல் செய்த பிறகு, கிண்ணத்திற்கு மாற்றிவைக்கையில் கொஞ்சூண்டு வெண்டைக்காயை கடாயில் விட்டு, அதில வெறுஞ்சோறு போட்டு பிசைந்து உருட்டி சாப்பிட்டுப் பாருங்க..சூப்பரா இருக்கும்! :P

இது என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிப்பி. "வெண்டைக்காப் புளி" என செல்லமாக கூப்பிடுவாங்க இந்தப் பொரியலை! :) 
தேவையான பொருட்கள்
நறுக்கிய வெண்டைக்காய்-11/2கப் [வெண்டைக்காயை நறுக்கும்போது ஒரு டிஷூ பேப்பரைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு ஒரொரு காய் நறுக்கியதும் கத்தியை டிஷூவில் துடைத்துவிட்டு நறுக்கினால் வழுவழுப்பு குறைகிறது. இணையத்தில் பார்த்து முயற்சித்தேன், நிஜம்தான்! நீங்க செய்து பார்த்துச் சொல்லுங்க. ]
தக்காளி-1
புளிக்கரைசல்-1/4கப்
நறுக்கிய வெங்காயம்-1டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு - உ.பருப்பு-தலா 1/2டீஸ்பூன்
மஞ்சள்ப்பொடி-1/8டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி -1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் 
செய்முறை
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து, மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
காய் முக்கால் பாகம் வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்ப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும். 
புளித்தண்ணீர் சுண்டி காய் நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து, காயை சுருளக் கிளறி, தேங்காய்த்துருவல் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். 

குறிப்பு: தேங்காய் சேர்க்காமல் செய்தால் ரூம் டெம்பரேச்சரிலேயே 2-3 நாட்கள் பொரியல் நன்றாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தால் பலநாட்கள் வைத்திருக்கலாம். அப்படி செய்வதாக இருந்தால் எண்ணெய் கொஞ்சம் "தாராளமாக" ஊற்றி செய்யவும். ;) 
~~~
3.கேரட் பொரியல்
படுவேகமாகச் செய்துவிடும் பொரியல் இது! கேரட்டை துருவினமா, தாளிச்சு விட்டோமான்னு திரும்பி பார்ப்பதற்குள் செய்துவிடலாம். :)
தேவையான பொருட்கள்
துருவிய கேரட்-1/2கப் 
நறுக்கிய வெங்காயம்-1டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு - உ.பருப்பு-தலா 1/2டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், வெங்காயம்-பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் வதங்கியதும் துருவிய கேரட்டைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேகவிடவும். 
 3-4 நிமிடங்கள் கழித்ததும் தேவையான உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.   

குறிப்பு: கேரட் சில நிமிடங்களில் வெந்துவிடும்,  அதிக நேரம் வேகவிடவேண்டாம். கேரட்டை மூடி வைக்காமல் சமைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். 
~~~
4.பாகற்காய் பொரியல் 
பாகற்காய் கசக்கும் என்பார்கள், ஆனால் இந்த முறையில் செய்கையில் தக்காளி, வெங்காயம், சர்க்கரை இவையெல்லாம் சேர்ந்து காயின் கசப்பை அமுக்கிவிடும். :)
தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய பாகற்காய் - 1கப் [முற்றிய விதைகள் இருந்தால் நீக்கிவிடவும்.]
நறுக்கிய வெங்காயம்-1டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு - உ.பருப்பு-தலா 1/2டீஸ்பூன்
மஞ்சள்ப்பொடி-1/8டீஸ்பூன்
சாம்பார் பொடி  -1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் நறுக்கிய பாகற்காயைச் சேர்த்து, மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
காய் முக்கால் பாகம் வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் தேங்காய்த் துருவல், சாம்பார்ப்பொடி, உப்பு சேர்த்து பொடியின் வாசம் போகும்வரை வதக்கவும்.
இறுதியாக சர்க்கரை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
~~~
5.மேரக்காய் பொரியல்/சௌ-சௌ பொரியல் 
இதுவரை இந்தக் காயை பொரியலாகச் செய்ததில்லை. கூட்டு, சாம்பார், சட்னி இப்படித்தான் செய்திருக்கிறேன். ஒரு முறை தோழி ஒருவரிடம் ஆன்லைனில் பேசிக்கொண்டிருக்கையில் இந்தப் பொரியல் செய்ததாகச் சொன்னார். உடனே ரெசிப்பியைக் கேட்டு செய்து பார்த்தேன். வழக்கமாக செய்வதை விடவும் புதிதாக ஏதாவதுன்னா இன்ட்ரஸ்டிங்-ஆக சமைப்போமில்ல?! ;) ரெசிப்பிக்கு நன்றி ப்ரியாராம்!
தேவையான பொருட்கள்
மேரக்காய்/சௌ-சௌ -1
காய்ந்த மிளகாய்-2
கறிவேப்பிலை
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு - உ.பருப்பு-தலா 1/2டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
மேரக்காயை இரண்டாக நறுக்கி, விதையை எடுத்துவிட்டு தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் கறிவேப்பிலை-கிள்ளிய வரமிளகாய் சேர்க்கவும். சில நொடிகளில் நறுக்கிய காயைச் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
காய் வெந்ததும் தேவையான உப்பு மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு: சௌ-சௌ அல்லது பெங்களூர் கத்தரிக்காய் என்பது இந்தக் காயின் பொதுவான பேராக இருந்தாலும் கோவைப் பக்கம் இதன் பெயர் "மேராக்காய்/மேரக்காய்"தான்!! ;) 
~~~
6.பீட்ரூட் பொரியல்
பீட்ரூட் எனக்கு பிடித்தமான காய்தான் என்றாலும் அதனை நறுக்கும்போது கையில் சிவப்பு நிறம் படிந்துவிடும் என்ற பயம்(!), எக்ஸ்ட்ரா கேர்ஃபுல்னெஸ் எனக்கு ஆதிகாலத்தில் இருந்தே உண்டு. ஊரில் என்றால் யாராவது நறுக்கித் தருவார்கள், சமையல் மட்டும் நம்ம செய்துக்கலாம், ஆனால் இங்கே?!! யூஸ் அண்ட் த்ரோ க்ளவுஸ் வாங்கி வைத்துக்கொண்டேதான் இவ்வளவு காலம் பீட்ரூட் சமைத்துக் கொண்டிருந்தேன். அதுவுமில்லாமல் இனிப்பான காய்கள் என்னவருக்கு அதிகம் பிடிக்காது என்பதால் பீட்ரூட் வாங்குவதும் குறைவு.  

திடீரென ஒரு நாள் பீட் ரூட்டை துருவி இந்த பொரியல் செய்து மோர் சாதத்துடன் ருசித்ததில் இருந்து   ருசி கண்ட பூனை கதை ஆகிவிட்டது! :)  ஒருமுறை ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் ஃப்ரெஷ்ஷாக ஒரு கொத்து பீட்ரூட்டை கீரையுடன் வாங்கி வந்து சமைக்கவும் எடுத்த பிறகு பார்த்தால் க்ளவுஸ் பேக்கட் காலி! :) 

ஆனது ஆகட்டும் என வெறும் கையிலேயே பீட்ரூட்டை தோல் சீவி, துருவி பொரியல் செய்தேன். [ஆஹா..என்ன ஒரு சாதனை?!! யாராவது பொன்னாடை போர்த்துங்களேன்!!;)))] நான் பயந்தது போல் கை செக்கச்செவேர் எனவெல்லாம் நீடிக்கவில்லை. 2-3 முறைகள் சோப்பு போட்டு கழுவியதும் கை வழக்கமான நிறத்துக்கு திரும்பிவிட்டது. ஹிஹிஹ்ஹிஹி!!! 
தேவையான பொருட்கள்
பீட்ரூட் -1
நறுக்கிய வெங்காயம்-1டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்-2 (அ)3 (காரத்துக்கேற்ப)
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு - உ.பருப்பு-தலா 1/2டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
பீட்ரூட்டை (தைரியமாக வெறும் கையால் பிடித்தே!!;)) தோல் சீவி, துருவிக் கொள்ளவும்.
கடாயில் துருவிய பீட்ரூட், தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேகவிடவும். 
பீட்ரூட்டும் சில நிமிடங்களிலேயே வெந்துவிடும். அதனை இறக்கிவிட்டு தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து,  க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், வெங்காயம்-பச்சைமிளகாய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனை எடுத்து வெந்த காயில் கொட்டி, தேங்காய்த் துருவலும் சேர்த்து, கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு: இதே போல கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற காய்களையும் உப்பு சேர்த்து தனியே வேகவைத்து எடுத்து, பிறகு தாளிதத்தையும் தேங்காயையும் சேர்க்கலாம். சுவை மிகவும் நன்றாக இருக்கும். 
~~~
அவ்ளோதாங்க...இப்போதைக்கு இவ்வளவு பொரியல்கள்தான் கைவசம் இருக்கு. மற்றவை ஏற்கனவே போஸ்ட் செய்திருப்பேன் என நினைக்கிறேன். ஏதாவது மிஸ் ஆனாச் சொல்லுங்க, செய்துடலாம்! 
:))
6 இன் 1 கொலாஜ்! 
:) 

19 comments:

  1. ஆறு சுவை மாதிரி ஆறு வகை பொரியல்... ம்ம்ம்.. ஒவ்வொன்றும் ஒரு சுவைதான்.மேராக்காய் பேர் நல்லாருக்கு. கோவையில் சௌ சௌ எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் போல அதான் "மேரா " காய்னு பேர் வச்சிட்டாங்க போல..:)

    ReplyDelete
  2. பொரியல் அனைத்து வகைகளும் அருமை

    ReplyDelete
  3. சிம்பிள் அண்ட் ருசியான பொரியல் வகைகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. ஓரே பதிவில் கலர்புல்லான பொரியல்கள் மகி.அனைத்தும் அருமையாக இருக்கு.
    சுரக்காய்,செளசெள‌ இங்கு கிடைப்பது அரிது.பாகற்காய் செய்ததில்லை.கேரட், பீட்ரூட் பொரியல்செய்வதுண்டு.வெண்டைக்காய் புளிக்கறி புதிது.உங்க குறிப்புகளை செய்துபார்க்கிறேன் மகி. 6 இன் 1அழகு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. 6 in 1 romba azhagaa irukku paarkka... Bangalore kathirikkaai try panneengalaa... Pudichchu irundhadha ??? Ellaa kaai la yum onion Pottu irukeenga... Naan onion podaama pannuveen...vendaikkaai pulikkari pudhusu...
    Colorful post.. :)

    ReplyDelete
  6. மகி அருமையாக இருக்கு ஓரே பதிவில் கலர்புல்லான பொரியல்கள் ....

    ReplyDelete
  7. மகி உங்க வேறு முறை - எண்ணெய் இல்லாமல் வேர்க்கடலை+மிளகாய் பொடித்து சேர்த்து சுரைக்காய் செய்வது தான் எப்போதும் எங்கள் வீட்டில்.நன்றி.

    ReplyDelete
  8. Colorful aana poriyalgal.. paarkave azhaga irukku!

    ReplyDelete
  9. vendaikai puli kari recipe romba puthusa iruku, pavakaila next time sarkarai serthu seithu parkiren...
    neenga chow chow seivathu polavae , pumpkin(orange) seithu parunga, supera irukum..:)

    ReplyDelete
  10. பாகற்காயில் நான் புளியில் வேக வைத்து செய்வேன். மிகவும் ருசியாக இருக்கும். உங்களுடைய அறுசுவை கரி வகைகள் மிக மிக சுவையாக இருந்தன.

    ReplyDelete
  11. ம்ம்..கலர்கலரா கலக்குறீங்க. பார்த்ததும் 'பொற்காலம்' படத்து பாட்டுதான் நினைவுக்கு வருது. ஒரு விஷயம் மட்டும் உறுதி, 'என்னத்த சமைச்சுப் போட்டன்னு?', யாரும் நம்மைப் பார்த்து கேட்க முடியாதுல்ல.

    "பொரியல் செய்த பிறகு, கிண்ணத்திற்கு மாற்றி வைக்கையில் கொஞ்சூண்டு வெண்டைக்காயை கடாயில் விட்டு, அதில வெறுஞ்சோறு போட்டு பிசைந்து உருட்டி சாப்பிட்டுப் பாருங்க..சூப்பரா இருக்கும்!"_____ இதைத்தான் பல நாட்களாக சேர்த்து, ஒரு பதிவா தேத்தி வச்சிருக்கேன்.கூடிய சீக்கிரமே வரும்.

    ReplyDelete
  12. Hi fi Mahi.

    Me too having lots of pictures in my system which are yet to be posted

    Surakai poriyal - never tried this way. I used to make other dishes but not his type. Going to try it next time when i buy lauki.

    Good option of having more of vegetables. colourful post.

    how is geno doing?

    ReplyDelete
  13. கலர்கலரா இருக்கே பொரியல்கள் ...எனக்கும் ரொம்ப பிடிக்கும் ..

    பீட்ரூட் :)) நானும் சமைப்பேனே ஆனா என் கையில் கலர் படாது :))
    பிக்காஸ் எங்க வீடலவெங்காயம் /மிளகாய் காய்கறி நறுக்க ஒருவர் இருக்கார் :))

    ReplyDelete
  14. @ராதாராணி, // கோவையில் சௌ சௌ எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் போல அதான் "மேரா " காய்னு பேர் வச்சிட்டாங்க போல..:)// அடடா! சூப்பர் விளக்கம், பொருத்தமா இருக்குங்க! :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்!
    ~~
    @ஜலீலாக்கா, நன்றி!
    ~~
    @இராஜேஸ்வரி மேடம், நன்றி!
    ~~
    @அம்முலு, சௌசௌ வீட்டில வளர்த்துருங்களேன்! :) சுரைக்காய் இங்கே எக்கச்சக்கத்துக்கும் கிடைக்குது. வாங்கி அனுப்பி விடட்டா? :) வெண்டைக்காய் புளிக்கறி செய்து பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்முலு!
    ~~
    @ப்ரியா, எங்க வீட்டில வெங்காயம் இல்லாம சமையலே இல்லைன்னு வைங்களேன்! :) நீங்க சொன்னதால அந்த காய்க்கு மட்டும் வெங்காயம் சேர்க்கலை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!
    ~~
    @விஜி, நன்றிங்க!
    ~~
    @சௌம்யா, //வேர்க்கடலை+மிளகாய் பொடித்து சேர்த்து சுரைக்காய் செய்வது தான் எப்போதும் எங்கள் வீட்டில்.//இங்கே என்னவருக்கு இப்படி செய்தாதான் பிடிக்கும், அதனால் எனக்கு மட்டும் செய்யும்போது அந்த முறையிலும் செய்வேன். :) நன்றிங்க!
    ~~
    @ப்ரியா, சாப்பிடவும் சுவையா இருக்கும், செய்து பாருங்க! நன்றி!
    ~~
    @சுமி, //pumpkin(orange) seithu parunga, supera irukum..:)// மஞ்சள் பூசணியும் செய்வேங்க, என்னன்னா என்னவருக்கு இனிப்பான காய்கள் கொஞ்சம் அலர்ஜி! அதனால் அதிகம் தலைகாட்டாது அரசாணிக்கா(கோவையில் இதேன் பேர் மஞ்சள் பூசணிக்கு)..இங்லிஷ் ப்ளாக்ல ம.பூசணி பொரியல் போஸ்ட் பண்ணியிருக்கேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுமி!
    ~~
    @ராஜி மேடம், அடுத்த முறை உங்க மெதட்ல பாவக்காய் செய்து பார்க்கிறேன், நன்றிங்க!
    ~~
    @சித்ராக்கா, //'என்னத்த சமைச்சுப் போட்டன்னு?', யாரும் நம்மைப் பார்த்து கேட்க முடியாதுல்ல.// ஹஹாஹா! ஜூப்பர்ர்ர்ர்! கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க! :)

    //இதைத்தான் பல நாட்களாக சேர்த்து, ஒரு பதிவா தேத்தி வச்சிருக்கேன்.கூடிய சீக்கிரமே வரும்.//பார்த்தேன், பலவித பொரியல் நீங்களும் போஸ்ட் பண்ணிருக்கீங்க, நிதானமா மறுபடி வாரேன். :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
    ~~
    @மீரா, சுரைக்காய் சீக்கிரமா வெந்துரும், இந்த மெதட்ல செய்துபாருங்க. சுவை சூப்பரா இருக்கும்.
    என்னிடமும் நிறையப் படங்கள் சேர்ந்ததாலதான் 6 இன் 1 ஆகிருச்சு! :)
    ஜீனோ நல்லா இருக்கான், லேட்டஸ்ட் பதிவு பாருங்க!
    நன்றி மீரா!
    ~~
    @வானதி, நன்றி!
    ~~
    @ஏஞ்சல் அக்கா, //எங்க வீடலவெங்காயம் /மிளகாய் காய்கறி நறுக்க ஒருவர் இருக்கார் :))//ஹும்ம்ம்...குடுத்து வைச்ச மகராசி! :) என்ஜாய்!! எங்க வீட்டில ஏதாவது பார்ட்டின்னா மட்டும் வெங்காயம் தக்காளி நறுக்கித் தருவார்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா!
    ~~

    ReplyDelete
  15. எனக்கு 6 பார்சல் ப்ளீஸ். :)

    ReplyDelete
  16. 6 நாள் கிடைக்கற மாதிரி 6 தனித்தனி பார்சல் அனுப்பிட்டேன். வழியில டிரிக்ஸி லவட்டி சாப்டுட்டா கம்பேனி;) பொறுப்பேற்காது. ஹிஹி! :)

    ReplyDelete
  17. சுரைக்காய் பொரியல் அருமை

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails