Wednesday, November 7, 2012

கோலங்கள், கோலங்கள்!

  பள்ளிக் காலத்திலிருந்தே தினமும் காலையில் வாசலில் கோலமிடுவது வழக்கம்.  மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை எழுந்து கோயிலுக்குப் போய் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கோலமிட்டு, சாணப்பிள்ளையார் பிடித்து, அவருக்குப் பொட்டு வைத்து பூக்கள் சூட்டி, கோலத்தின் நடுவில் வைத்து, ஒரு குட்டிப் பூஜையும் செய்து வழிபட்டது... அது ஒரு அழகிய கனாக்காலம்! :) 

கோலத்தில் வைக்கப்படும் பிள்ளையார்கள் ஒற்றைப்படை  எண்ணிக்கையில்தான் இருக்கவேண்டும். மார்கழி ஒன்றாம் தேதி ஒற்றைப் பிள்ளையார், அருகம்புல்தான் வைக்கவேண்டும் அவருக்கு, வேறு பூக்கள் வைக்கக் கூடாது. அடுத்து வரும் நாட்களில் 3,5,7,9 என எண்ணிக்கையை அதிகரிக்கலாம், அரசாணிப்பூ, செம்பருத்திப் பூ, நந்தியாவட்டைப் பூ, தங்கஅரளிப் பூ, மற்றும் வேலிகளில் பூக்கும் எந்தப் பூவும் வைக்கலாம் அவருக்கு. என் அக்காக்கள் எல்லாம் சின்னதாக இருக்கையில், யார் வீட்டில் அதிக எண்ணிக்கையில் பிள்ளையார் வைக்கிறாங்க என்று போட்டியெல்லாம் உண்டாம்! 101 பிள்ளையார்கள் வரை வைச்சிருக்காங்க! :) 

சரி..சரி, வழக்கம் போல ட்ராக்-ஐ விட்டு வேறபக்கம் போயிருச்சு ட்ரெய்ன், கொஞ்சம் கஷ்டப்பட்டு கோலத்துக்கே திரும்பிடலாம் வாங்க! :) ஒவ்வொரு முறை ஊருக்குப் போகையிலும் ஆசை  தீர வாசலில் கோலம் போட்டுவிடுவேன். இது போனவருஷம் சென்றபோது போட்ட கோலங்கள்..
 
 தினமும் கோலம் போட்டாலும், அதை போட்டோ எடுக்கவேண்டும் என்று பலநாட்கள் தோன்றவில்லை, திடீர்னு போட்டோ எடுக்க ஆரம்பித்து சில கோலங்களை மட்டும் எடுத்திருக்கேன், எப்படி இருக்கு எங்க வீட்டு கோலங்கள்? கொலாஜில் கடைசி 2 கோலங்கள் அக்காவின் கைவண்ணம்! :)

அடுத்து வருவது இந்த முறை சென்றபொழுது எடுத்த கோலங்களின் படங்கள். எங்க வீட்டு மாடியில் குடியிருக்கும் இந்தக் குட்டிப் பெண்ணுக்கு கோலம் போடுவதில் அவ்வளவு ஈடுபாடு! தினமும் காலை, மாலை என இருவேளையும் அவளே வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போடுவாள்.
ரங்கோலி, புள்ளிக்கோலம் இரண்டுமே நிமிஷமாய்ப் போட்டுவிடுவாள்.வேகமாய்ப் போட்டாலும் கோலங்கள் அத்தனை அழகாய் இருக்கும். மேலே உள்ள கோலங்கள் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழா அன்று அவள் போட்டவையே.

இவை அம்மா வீட்டில் நான் போட்டிருந்த கோலங்கள். காரை வாசலில் போடும் கோலங்கள் ஒரு மாதிரி அழகு என்றால், மண் வாசலில் போடும் கோலங்கள் ஒரு மாதிரி அழகு! ஒரு நாள் போட்ட கோலத்தை மறுநாள் கூட்டித் தள்ளி, தண்ணீர் தெளித்தால் மண் வாசல் சூப்பர் ஃப்ரெஷ் ஆகிவிடும், அதுவே காரை வாசலில் அது கொஞ்சம் கஷ்டம்! :)
இது வீட்டருகில் இருந்த ஒரு பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியன்று எடுத்த படம். காவியெல்லாம் கட்டி சூப்பரா ரங்கோலி போட்டிருந்தார்கள்.
இவை  பவளமல்லிப் பூவுடன் படத்தில் புகுந்த கோலங்கள்! :) :)
 பூதான் ஹைலைட் ஆகிருக்குன்னாலும் பின்னால கோலமும் தெரிகிறது என்பதால் இந்தப் படங்களும் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன!
மறுபடியும் படங்களை வைத்தே ஒரு  பதிவு தேத்தியாச்சு, கோவிச்சுக்காம கோவை அன்னபூர்ணா-வின் வெண் பொங்கல் & காபி சாப்பிட்டு போங்க! :)

நன்றி, வணக்கம்! 
:)))

35 comments:

 1. அவ்வ்! சூப்பர் கோலங்கள் மஹி. உங்கள் கோடுகள் எல்லாம் சீராக வந்திருக்கிறது. நானும் அழகா போடுவேன். ;))))
  //அரசாணிப்பூ// !! பூசணிப்பூ வைக்கிறது இல்லையா பிள்ளையாருக்கு!!
  ம்.. மார்கழி வந்தால் ஊர் ஞாபகம் வரும். இங்கு வந்ததில் மிஸ் பண்ணுபவற்றில் திருவெம்பாவையும் ஒன்று. ;(

  ReplyDelete
 2. Nice to see these pretty kolams ...in these days of sticker kolams...

  ReplyDelete
 3. நீங்க அழகா கோலங்கள் போட்டிருக்கிறீங்க‌ மகி.அந்த குட்டிப்பெண்ணின் கோலங்களும் அழகாக இருக்கு. மார்கழி மாதத்து நினைவுகளை வரவழைத்துவிட்டீங்க. எனக்கு அந்த விடிகாலையில் கோவில் மணி ஓசை பாடல்கள், பனிக்குளிர். நினைத்தால் கவலையா இருக்கும். திரும்ப வரமாட்டுதே. நீங்க சொன்னதுமாதிரி அது ஒரு அழகிய கா(கோ)லங்கள்.

  ReplyDelete
 4. மகி, கோலம் எல்லாம் அழகாக இருக்கு.... அது என்ன ? ஒரு ஒரு கோலம் மேலயும் சங்கு, சக்கரம் எல்லாம் வரைந்து இருக்கீங்க ? டெய்லி வரைவீங்களா ?
  நீங்க பட்டையாகவும் அழகா போட்டு இருக்கீங்க, மெலிசாகவும் அழகா போட்டு இருக்கீங்க... எங்க அக்கா கூட சூப்பர் ரா போடுவா....

  ReplyDelete
 5. அழகான கோலங்கள்.சூப்பர்.
  நானும் கூட கோலங்கள் போடுவேன் நோட்டில்.சிறுவயதில் என் வகுப்பில் கோலம் போட எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தது நினைவு வருது.கோலத்திற்கென்று தனி நோட்டு வைத்து இருந்தேன்.அப்படியே அந்த ப்லேட்டை இப்படி தள்ளுங்க,பொங்கல் என்றால் எனக்கு உடன் மெதுவடையும் வேணுமே!

  ReplyDelete
 6. மகி !!!!!!!!!!கோலங்கள் கண்ணை கவருது
  நானும் கோலம் போடுவேன் ..மண் வாசலில் தண்ணி தெளிச்சு அந்த மண் வாசனையை ஸ்மெல் பண்ணிக்கிட்டே கோலம் போடுவது தனி சுகம் .
  அன்னபூர்ணா காபி டபரா செட்ட பார்த்ததும் நினைவு வருது ..என் பொண்ணு அந்த மாதிரி வேணும்னு கேட்டா ..அடுத்த முறை கண்டிப்பா வாங்கணும்
  அதில் காபி குடிச்சா பேஷ் பேஷ் சூப்பர்

  ReplyDelete
 7. ம்ம்...அழகு கோலங்கள்...டெய்லி போடும் கோலத்தை போட்டோ எடுத்தா ஒரு போஸ்ட் வந்துடுமோ...ஹை...நல்ல ஐடியா...

  ReplyDelete
 8. ஓவ்வொரு போஸ்ட்லயும் சாப்பிடற மாதிரி எதாச்சும் காமிச்சு பசிய கிளப்பி விடறீங்க....அன்னபூர்ணா க்கு இப்போ நான் எங்க போவேன்????

  ReplyDelete
 9. I am too poor when it comes to put kolams. Somehow i struggle to put a straight line using a scale!! U did everything perfectly

  ReplyDelete
 10. இந்த கோலங்களைப் பார்த்தால் எப்படித்தான் நீட்டா ஸ்கேல் இல்லாம கோடு போடுறாங்களோன்னு நினைக்கிறதுண்டு... உங்க கோலங்கள் அழகாயிருக்கு மகி....

  ReplyDelete
 11. மலரும் நினைவுகள்...மார்கழி மாதம் மட்டும் மாலை வேளைகளில் மட்டும் தான் கோலம் போடுவேன்.மீதி நாள் அம்மா அல்லது அக்கா போடுவாங்க....உங்க அளவுக்கெல்லாம் கோலத்தை அழகாலாம் போடமாட்டேன்.இந்த கோலத்தை பார்க்கும் கோலங்கள் நாடகம் ஞாபகம் வந்துவிட்டது.

  ReplyDelete
 12. அழகா போட்டிருக்கீங்க மகி.. மார்கழி மாதம் வந்தாச்சுன்னா இங்கே கலர் பொடி கோலம் யார் கோலம் அழகு என்பதில் ஒரு போட்டியே தினம் தினம் நடக்கும். இதை பார்பதற்காகவே வாக்கிங்போகாதவர்கள் எல்லாம் வாக்கிங் போவார்கள்...:) கோலப்பொடி கோடு பிசிறு இல்லாமல் அழகா நேரா போட்டிருக்கீங்க.. காலையில் குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் நல்ல உடற்பயிற்ச்சியும் கிடைக்கும் மகி..

  ReplyDelete
 13. // மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை எழுந்து கோயிலுக்குப் போய் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கோலமிட்டு, சாணப்பிள்ளையார் பிடித்து, அவருக்குப் பொட்டு வைத்து பூக்கள் சூட்டி, கோலத்தின் நடுவில் வைத்து, ஒரு குட்டிப் பூஜையும் செய்து வழிபட்டது... அது ஒரு அழகிய கனாக்காலம்! :)
  //

  உண்மையே... அந்த அதிகாலையில் எங்களைப் பார்க்கவெண்டே சில அண்ணாக்கள், கும்பிடவென கோயிலுக்கு வந்து நிற்பதையும் மறக்க முடியாது:)))...

  அந்தப் பத்து நாளும் ஒரு சொல்ல முடியாத இன்பக் காலங்கள்.. அதிகாலையில் குளிச்சு, இரவிரவாக் கட்டி வச்ச மாலையைக் கொண்டு போய்க் கொடுத்து,பூஜை பார்த்துக் கும்பிட்டு வந்து, ஹொட்டா ஒரு ரீ குடிக்கும்போது என்னா சொல்லும் ஆஆஆஆஆஆஆ.....

  ReplyDelete
 14. // தினமும் கோலம் போட்டாலும், அதை போட்டோ எடுக்கவேண்டும் என்று பலநாட்கள் தோன்றவில்லை, திடீர்னு போட்டோ எடுக்க ஆரம்பித்து சில கோலங்களை மட்டும் எடுத்திருக்கேன், ///

  நம்பிட்டோம்ம்ம்:)

  ReplyDelete
 15. எங்க வீட்டு மாடியில் குடியிருக்கும் இந்தக் குட்டிப் பெண்ணுக்கு கோலம் போடுவதில் அவ்வளவு ஈடுபாடு! //

  என்னாது அவ குட்டிப் பொண்ணா?:)) என்னைப்போல இருக்கிறா.. நாம சுவீட் 16 என்றால் மட்டும் அடிக்க வராய்ங்க:)) இது என்ன கொடுமை ஜாமீஈஈஈஈஈ:))

  ReplyDelete
 16. //சரி..சரி, வழக்கம் போல ட்ராக்-ஐ விட்டு வேறபக்கம் போயிருச்சு ட்ரெய்ன், கொஞ்சம் கஷ்டப்பட்டு கோலத்துக்கே திரும்பிடலாம் வாங்க! :) //

  நோஒ மீயும் அஞ்சுவும் திருவெம்பாவையிலதான் நிற்போம்:)

  ReplyDelete
 17. எங்கள் நாட்டில் தினமும் கோலம் போடும் பழக்கமில்லை. பொங்கலன்று முற்றத்தில் கோலம் போட்டுப் பொங்குவோம்.

  மற்றும்படி கோலம் போடவெண, ஸ்பெஷல் ஆட்கள் இருப்பினம், ஏதும் விஷேஷங்களுக்கு அவர்களைக் கூப்பிட்டு கோலம் போடுவோம், பணம் கொடுத்து.. திருமணம், குடிபுகுதல்.. இப்படி.

  ஆனா வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை நான் எங்கள் ஊர் வீட்டுக் ஹோலில், வாசலில் ஒரு மாக்கோலம்.. அதாவது மாவைக் கரைத்துப் போட்டேன்... அது 2,3 மாதங்கள் வரை அப்படியே இருந்துது. அழகாக, அழிந்திடாமல் மொப் பண்ணி விடுவேன், பழபழவென மின்னிக் கொண்டிருக்கும்.

  வீட்டுக்கு வந்து போன அனைவரும் பாராட்டினர்.. ஏனெனில் ஒரு வீட்டிலும் கோலம் போடும் பழக்கமில்லாததால்ல்..

  ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூச் சக்கரையாம்:))).. அப்போ நான் வரட்டா.. மீக்கு வெண் பொங்கல் வாணாம்ம்... ஆனா அந்தக் கோப்பி குடிக்கோணும்போல இருக்கு.. விரத நேரத்தில மட்டும் எப்பவாவது பிரவுன் கோல்ட் கலர் கோப்பி குடிப்பதுண்டு.

  ReplyDelete
 18. தீபாவளி வருவதற்குள் பொங்கல் வந்தமாதிரி இருக்கு.எல்லாக் கோலங்களும் அச்சில் வார்த்தது போலவே அழகா இருக்கு.கோலங்களைப் பார்க்கும்போதே ஒரு சந்தோஷம்.காரை வாசல்னா சிமெண்ட் போட்டதா?

  பொங்கல்கூட வேண்டாம்,நுரையோடு கூடிய அந்தக் காஃபி மட்டும் போதும். இந்த வெதருக்கு சூப்பரா இருக்கும்.

  ReplyDelete
 19. //காரை வாசல்னா சிமெண்ட் போட்டதா?// அதே, அதே! :) சாரி, கொங்குத் தமிழ்ல எழுதிட்டேன்! ஆனாலும் கரெக்ட்டாப் புரிஞ்சுகிட்டீங்க சித்ராக்கா!

  கோலங்களைப் பார்ப்பதே ஒரு சந்தோஷம்தான் இல்லையா? அதுவும் வேறு யாராவது கோலம் போடுகையில் தள்ளி உட்கார்ந்து ரசிப்பதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

  ஆமாம், அடிக்கிற/அடிக்கப்போற குளிருக்கு இதமா இருக்கும் காஃபி, எடுத்துக்குங்க! :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
  ~~
  அதிரா, கோவையில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் தினமும் காலையில் கோலம் போடுவதுண்டு. பண்டிகை-விஷேஷம்னா பெரீய்ய கோலங்கள் வித் கலர்ப்பொடி! :) மாக்கோலம்(பச்சரியை ஊற விட்டு அரைத்து) வீட்டினுள், திண்ணையில் போடுவோம். நானும் ஓரளவு சுமாரா மாக்கோலம் போடுவேன் யு ஸீ?! ;)
  நீங்களும் அந்தக் காலத்திலயே கலக்கிருக்கேள்? வெறி:) குட்!

  உங்களுக்கும் பொங்கல் வாணாமா? ஒரு டபரா காப்பி DHL-ல அனுப்பிட்டேன்! பத்திரமா வாங்கி சூடாறுமுன் குடிச்சிருங்க.

  //நோஒ மீயும் அஞ்சுவும் திருவெம்பாவையிலதான் நிற்போம்:)// ரெம்ப நேரம் நின்னா கால் வலிக்கும், ஜாலியா உட்கார்ந்துக்கோங்கோ, I don't have any problem yaa! ;)

  //என்னைப்போல இருக்கிறா.. நாம சுவீட் 16 என்றால் மட்டும் அடிக்க வராய்ங்க:)) // ஆஆஆ...கேட் காட் தி பொயின்ட்டூ! :) அந்தப் பெண் இன்னும் கை;)ஸ்கூலே போக ஆரம்பிக்கல்லே அதிராவ். நீங்க மெத்தப் படிச்சுட்டீங்கள்ல அதான் உங்கள ரவுண்டு கட்டி அடிக்க வராய்ங்க! ஜாக்கிரதையா இருங்கோ!

  //நம்பிட்டோம்ம்ம்:) // நன்றீஈஈஈஈஈஈஈஈஈஈஈ! ;)

  //அந்தப் பத்து நாளும் ஒரு சொல்ல முடியாத இன்பக் காலங்கள்.. // ஏனோ? மீதி 20 நாட்களையும் விட்டுவிட்டீங்க? நாங்க மார்கழி பூராவும் கோயிலுக்குப் போய், தை ஒன்றாம் தேதி பொங்கலோடுதான் நிறைவு செய்வோம் அதிரா.அதுவரை தினமும் வீட்டில் வைத்த சாணப்பிள்ளையார்களை காலை 10 மணி போல எடுத்து கூரையில் போட்டுவிடுவோம். தை பிறந்த ரெண்டாம் நாள் அல்லது மூன்றாம் நாள் கூரை மேல இருக்க பிள்ளையார்களை எல்லாம் எடுத்து ஒரு பூசை செய்து ஆற்றில்/கிணத்தில் கொண்டு விட்டுவிடுவோம். இப்ப எல்லாம் இதெல்லாம் நடக்கிற மாதிரியே தெரியலை. எல்லாரும் பிஸியோ பிஸி!

  //அந்த அதிகாலையில் எங்களைப் பார்க்கவெண்டே சில அண்ணாக்கள், கும்பிடவென கோயிலுக்கு வந்து நிற்பதையும் மறக்க முடியாது:)))...// ஆஹா,அதானா சங்கதி? அண்ணாக்கள் என்று நீங்க அடிக்கடிசொல்லியது இவர்களைத்தானோ? ;) :)

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மியாவும்:) நன்றி அதிரா!


  ReplyDelete
 20. Mahi kolagal ellamey romba super ra iruku.. Rangoli round a poduragaley athu eppadi sariyaga round il varukerathu?

  ReplyDelete
 21. கோலங்கள்! கண்களுக்கும் மனதுக்கும் நல்ல விருந்து..:)

  அழகழகான கோலங்கள். கொடுத்துச்சவனீங்கள் மகி. அப்பப்ப ஊருக்குப்போயாவது இப்படி ‘டச் ‘ விட்டுப்போயிடாமல் போட்டுப் பார்த்து அனுபவிச்சிட்டு வாறீங்கள்....;)

  மகி..உங்களுக்கு நல்ல மெல்லிய கைவிரல்களோ..:) நீங்கள் போட்ட கோலங்கள் மெல்லிய கோடுகளாக அத்தனை நேர்த்தியாக அழகாக இருக்கிறது. அசத்துறீங்க. சகலகலாவல்லீஈஈ..;)

  எல்லாவற்றையும் பார்க்கும்போது எனக்கும் அந்தநாள் ஞாபகங்கள் வருகுது...
  மார்கழி என்றில்லாமல் தினமும் எங்கள் வீட்டில் முற்றம் பெருக்கி, சாணத்தண்ணீர் தெளித்து, கோலமேடை மெழுகி (- இதுக்கென களிமண்ணினால் நில மட்டத்திலும் சற்று உயரமாக சிறிய மேடைபோட்டு மெழுகி வைத்திருப்போம் - ) மாவினால் விதவிதமாக கோலம் போட்டு நேரம் போவது தெரியாமல் அழகு பார்த்து பின்னர் ஐயோ நேரம் போச்சேன்னு பாடசாலைக்கு பதறிக்கொண்டு ஓடுவதும்....
  அதுவும் ஒரு காலம்தான்.

  அருமையான பகிர்வு. மிக்க நன்றி மகி...:))

  ReplyDelete
 22. அருமையான கோலங்கள்...

  படங்கள் சூப்பர்ப்...

  நன்றி...

  ReplyDelete
 23. சாரு, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாரு! நாங்க நல்லா இருக்கோம், நீங்க எப்படி இருக்கீங்க?

  //பூசணிப்பூ வைக்கிறது இல்லையா // மஞ்சள் பூசணியைத்தானே சொல்றீங்க? அதுதான் அரசாணிப்பூ இமா! வெள்ளை பூசணிப் பூவும் வைக்கலாம். திருப்பாவை-திருவெம்பாவை காலை நேரம் ரேடியோவில் போடுவாங்க..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இமா!

  உஷா மேடம், அபார்ட்மென்ட்களில் ஸ்டிக்கர் கோலம்தான் போட்டாக வேண்டியிருக்கு. வேற வழியில்லையே! ஆனாலும் ஒரு சில வீடுகளில் பெரிய வாசல் இருக்கறமாதிரியும் வைக்கிறாங்க இப்பல்லாம்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!

  அம்முலு, கடந்த காலங்கள் திரும்ப வரப் போவதில்லை, அதனால் கவலைப் படாமல் அப்பப்ப அந்த இனிய நினைவுகளை அசை போட்டுக்க வேண்டியதுதான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்முலு!

  //ஒரு ஒரு கோலம் மேலயும் சங்கு, சக்கரம் எல்லாம் வரைந்து இருக்கீங்க ? டெய்லி வரைவீங்களா ?// ஆமாம் ப்ரியா, அதென்னமோ ரொம்ப நாளா வரையும் வழக்கம். ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது, ஆனா கோலத்துடன் அதுவும் இருப்பது வழக்கம். :)
  //எங்க அக்கா கூட சூப்பர் ரா போடுவா....// அப்ப நீங்க? :)
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா!

  ஆசியாக்கா, என்னிடமும் ஒரு கோலநோட்டு இருக்கு! அடுத்தமுறை ஊருக்குப் போகையில் மறக்காமல் எடுத்துட்டு வரணும். பொங்கல்+வடை சூப்பர் காம்பினேஷன்! ஆனா அன்று பொங்கல் மட்டும்தான் சாப்பிட்டேன், அதான் வடை இல்லை, அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ஆஹா, ஏஞ்சல் அக்கா! டபரா செட் வாங்கணும்னு எனக்கும் இதுவரை தோணவே இல்லையே..ஷெரனுக்கு தாங்க்ஸ் சொல்லிருங்க. :) நானும் அடுத்தமுறை டபராசெட் வாங்கிட்டு வந்துடறேன். நீங்களும் கோலம் ஸ்பெஷலிஸ்ட்டா? சூப்பரப்பு! ;) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 24. //டெய்லி போடும் கோலத்தை போட்டோ எடுத்தா ஒரு போஸ்ட் வந்துடுமோ...ஹை...நல்ல ஐடியா... // கோமதி, சைலண்ட்டா கவனிச்சுட்டுப் போயி, உங்க ப்ளாக்ல ஒரு போஸ்ட்டைத் தேத்துவீங்களா, அத விட்டுப்புட்டு..இந்தமாதிரி பப்ளிக்ல சொல்லி குட்டை உடைக்கக் கூடாது! ;) :))))

  //ஓவ்வொரு போஸ்ட்லயும் சாப்பிடற மாதிரி எதாச்சும் காமிச்சு பசிய கிளப்பி விடறீங்க...// என்னோட ப்ளாக் url-ஐ ஜஸ்டிஃபை பண்ணவேணாமா பின்னே? :)) சரி,சரி, காதைக் குடுங்க, இன்னொரு ரகசியமும் சொல்றேன், மக்கள் நம்ம மொக்கையத் தாங்கிகிட்டு மறுபடியும் வாசகர்கள் இங்க வரோணுமல்ல..அதுக்குத்தான் இப்படி சாப்பாட்டு ஐட்டம் ஏதாவது ஒண்ணைப் போடறது! :)
  ..மூச்.... ரகசியமெல்லாம் ஆருக்கும் சொல்லீராதீங்க! ;) ;)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ஜெயஸ்ரீ, நம்பவே முடியலைங்க! பொதுவா உங்க வீடுகள்லதானே சூப்பரா கோலம் போடுவாங்க? ஊரில எங்க பக்கத்து வீட்டு மாமி, அப்படியே கண்ணில ஒத்திக்கலாம்-ங்கற மாதிரி அவ்வளவு நீட்டா, அழகழகா கோலம் போடுவாங்க. :)
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயஸ்ரீ!

  //எப்படித்தான் நீட்டா ஸ்கேல் இல்லாம கோடு போடுறாங்களோன்னு நினைக்கிறதுண்டு.// சித்திரமும் கைப் பழக்கம் மாதிரிதானுங்க பானு! ஆரம்பத்தில் சிரமமா இருக்கும், ஆனா சில நாட்கள்லயே கை பழகி, கரெக்ட்டா வந்திரும்.:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  //மார்கழி மாதம் மட்டும் மாலை வேளைகளில் மட்டும் தான் கோலம் போடுவேன்.// நீங்க சொல்வது காலையா,மாலையா மேனகா? எங்கூர்ல மாலை நேரம் கோலம் பொதுவா இருக்காது, ஏதாவது விஷேஷம்னா மட்டும்தான் போடுவோம். :)
  //உங்க அளவுக்கெல்லாம் கோலத்தை அழகாலாம் போடமாட்டேன்.// இப்படியெல்லாம் சொல்லாதீங்க, கோலம் எப்படிப் போட்டாலும் அழகுதான்! :)
  நன்றி மேனகா!

  //வாக்கிங்போகாதவர்கள் எல்லாம் வாக்கிங் போவார்கள்...:)// :))) ஆமாங்க..மாதம் முழுக்க இதே கதையாய்த்தான் இருக்கும்..பொங்கலுக்கு கோலப்போட்டியெல்லாம் கூட நடக்குமே! 30நாட்களும் பெரிய பெரிய கோலங்கள் போட்டாலும், பொங்கலுக்கு கலர்ப்பொடி வைத்து போடும் வண்ணங்கோலங்கள்தான் முத்தாய்ப்பாக இருக்கும்.

  //கோலப்பொடி கோடு பிசிறு இல்லாமல் அழகா நேரா போட்டிருக்கீங்க..// தேங்க்யூ! தேங்க்யூ! :)

  //காலையில் குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் நல்ல உடற்பயிற்ச்சியும் கிடைக்கும் மகி.. // காமெடி கீமடி பண்ணலையே என்ன வைச்சு? அவ்வ்வ்வ்வ்வ்வ்..அந்த கொலாஜில இருக்க கோலங்கள் எல்லாம் சின்னக்கோலங்கள்..அதும் நாலு புள்ளி கோலமெல்லாம் போட்டிருக்கேனுங்க! ;)

  பெரீய்ய வாசல் இருந்து, காலையில் நேரமும் இருந்தா நீங்க சொல்வது ந்ல்லதொரு உடற்பயிற்சிதான்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க!

  ReplyDelete
 25. சிநேகிதி, எல்லாமே ப்ராக்டீஸ் தாங்க..தினமும் கோலம் போட்டுகிட்டே இருப்பதுவும், ட்ராயிங் நன்றாகப் போடும் திறமை இருப்பதுவும் ரங்கோலி வரைய முக்கியமான விஷயங்கள். ஒரு சிலருக்குதான் ஃப்ரீ ஹேண்ட் ரங்கோலி அழகா வரும். நான் முதலில் ரங்கோலி எல்லாம் போடுவேன், இப்ப கொஞ்சநாளானதால் டச் விட்டுப் போயிருச்சு, அதான் அதை ட்ரை பண்ண தைரியம் வரலை! ;) :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஃபாயிஸா!

  //மகி..உங்களுக்கு நல்ல மெல்லிய கைவிரல்களோ..:) // :))) ஆமாங்க இளமதி! முன்பொருமுறை நான் எங்க தோட்டத்துத்(!) தக்காளிப்பழங்கள் போட்டோ போட்டப்ப ஏஞ்சல் அக்காவும் அதிராவ்வ்வும்:) என் விரல்கள் பற்றி ஆராய்ச்சி பண்ணினாங்களே, கவனிக்கலையா நீங்க? :D :)

  //அசத்துறீங்க. சகலகலாவல்லீஈஈ..;)// இது கொஞ்சம் டூ மச்சாத் தெரியுது..ஏற்கனவே எனக்கு ஜலதோஷம்! :) ;)

  கோலத்துக்கு தனியே மேடை இருக்குமா? அதையெல்லாம் பார்க்கக் குடுத்து வைச்சிருக்கணுமே..நீங்க சொல்லியிருப்பதைப் படிக்கவே அவ்வளவு நல்லா இருக்கு.போட்டோஸ் இருந்தா ஷேர் பண்ணுங்களேன்!

  அழகான கருத்துக்கு மிக்க நன்றிங்க இளமதி!

  தனபாலன் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 26. அழகு கோலங்கள். நான் கோலம் போட்டதில்லை. இந்தியாவில் இருந்தபோது பக்கத்து வீடுகளில் பார்த்து ரசிப்பதோடு சரி. காலையில் எழுந்து கோலம் போட பயம். எங்கள் ஏரியாவில் பா....பு அதிகம். அதுகளை எதுக்கு டிஸ்டர்ப் செய்யணும் என்று நினைச்சு போடுவதில்லை.

  ReplyDelete
 27. ஊருக்கு போயிட்டு வந்து இந்த மாதிரி பழைய ஞாபகங்கள் கிளறி விடுவீங்கன்னு சொன்னது சரியாத்தான் போச்சு:)) ஊரில் அக்கா கோலம் போடுவாங்க நான் நீட்டா போட மாட்டேன்னு சொல்லியே அவங்களுக்கு திருமணம் ஆகும் வரை என்னை கோலம் போட விட்டதில்லை. அப்புறம் அந்த குறைய எல்ல்லாம் சேர்த்து ஏதோ சுமாரா கோலம் போட்டுட்டோம் இல்லே? ஆனா உங்க அளவுக்கு எல்லாம் வராது மகி

  ReplyDelete
 28. Mahi. ennai Coimbatorekke kootitu poidada chellam.
  Maddupongal annaki, ella sani pillayarayum eduthu, Parur noil athukkupoi, oliakka kondaiyela orukoodai thalampoo ellam padi..kanni pongal 7 kali kolambu panni.....
  mmmmmmmmmmmmm kanvathan pochuuda.
  viji

  ReplyDelete
 29. வானதி,கிரிஜா,விஜிமா வருகைக்கும் ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி!

  ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ--பாட்டு கேட்டமாதிரியே இருக்குவிஜிமா! அப்படியே அந்தக்கால நினைவுகளில் மூழ்கி எந்திரிச்சுட்டீங்க போலிருக்கு! :)

  ReplyDelete
 30. கோலங்கள் நல்லா இருக்கு.

  ReplyDelete
 31. Thanks for reminding me the culture of kolam. Lovely work, kudos Mahi. I just walked down the memory lane of my childhood...how obsessed I was once in collecting kolam notebooks for my Mommy, who never-ever practiced kolam, anyway. Its so nice to see the clicks...keep up the good work, dear. :)

  ReplyDelete
 32. அன்புடையீர்,

  உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

  http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_10.html

  தங்கள் தகவலுக்காக!

  நட்புடன்

  ஆதி வெங்கட்
  திருவரங்கம்

  ReplyDelete
 33. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_10.html?showComment=1389315005846#c2955171709299752664

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 34. புதுகைத் தென்றல் & மலர் காந்தி, உங்க வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் நன்றிகள்!

  ஆதி, வலைச்சர அறிமுகத்துக்கு மிக்க நன்றிங்க! இதுவரை என் வலைப்பூவில் கோலங்கள்தான் அதிகம் பார்வையிடப்பட்ட பதிவு. அதையே சுட்டி நீங்களும் அறிமுகப்படுத்தியது ரொம்ப சந்தோஷம். நன்றிங்க!

  ரூபன், தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails