Sunday, July 21, 2013

பொன்னரளி & தங்க அரளி..

சிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் ,  இலவு காத்த கிளி போல "அரளி காத்த இமா"-வின் உலகிலும் நடந்தது. கலிஃபோர்னியா வந்த புதிதிலேயே அரளிப்பூக்கள் சாலையோரங்களிலும், நெடுஞ்சாலைகளின் நடுவிலும் கூட வளர்க்கப்படுவதை  கவனித்திருந்தேன். முன்பே "ஒரு பொன்மாலைப் பொழுது.." பதிவிலும் பகிர்ந்திருந்தேன். இப்போது அரளிப்பூக்கள் தூசு தட்டப்பட்டதும், என் கேமராவில் உறங்கிக் கொண்டிருந்த சில படங்களையும் தூசு தட்டி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். :) 

மேலே முதல் படத்தில் இருப்பது செவ்வரளி. இதிலேயே ஓரடுக்கிற்குப் பதிலாக பல அடுக்குகளுடன் லேசான இளஞ்சிவப்பு வண்ணத்திலும் அடுக்கரளிப் பூக்களுண்டு. 
வெண்மை நிறத்திலும் அரளி உண்டு. இவையெல்லாம் பொதுவாக கோயில்களில் வளர்க்கப்படும். ஸ்வாமி விக்ரஹங்கள், ஸ்வாமி படங்களுக்கு மட்டுமே அணிவிக்கப்படும். மகளிர் தலையில் சூடப்படுவதில்லை. மேலும் அரளியின் படங்கள் இங்கே. 

அடுத்து வருவது பொன்னரளி..இந்தப் பூவுக்கு எங்க ஊர்ப்பக்கம் பொன்னரளி என்றுதான் பெயர். வேலிக்காக வளர்க்கப்படும் மரங்களாக இருக்கும். ஆட்காட்டி விரல் நீளத்திற்கு குழல் போல பூக்கள், பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் மலரும். வாசனையும் அருமையாக இருக்கும். ஆனால் இந்த மரத்தின் இலைகள், தண்டுகளில் இருந்து வரும் பால் விஷத்தன்மை கொண்டது. அதே போல இந்த அரளியின் விதைகளும் மிக மிக நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளி விதையும் கீழேயுள்ள படத்தில் தெரிகிறது பாருங்கள். 
சிறுவயதில் மண் வீடுகட்டி விளையாடும்போது எங்க வீட்டு வேலிகளில் இருக்கும் இந்தப் பூவைப் பறித்து தென்னை ஈர்க்குகளில் வரிசையாகச் செருகி, வீட்டுக்கு அலங்காரம் செய்வோம்! :) இந்த மஞ்சள் பூவின் உள்ளே பார்த்தால் "ஹமாம்" சோப்பின் விளம்பரத்தில் முன்காலத்தில் ஒரு பூ வருமே, அதே பூ இருக்குமாக்கும்! ;)) ஹமாம் சோப்பை தேடினேன், இப்பல்லாம் விளம்பரங்கள் உட்பட எல்லாமே மாறிப்போச்சுங்க! 
இந்தப் படங்கள் போனவருஷம் கோவை போயிருந்தபொழுது செம்மேட்டில் எங்க சித்தி வீட்டுத் தோட்டத்தில் எடுத்தவை. 
சாலையோரம் வேலியாக நட்டிருந்தார்கள். பொன்னரளி பொதுவாக கண்ணைக்கவரும் பளீர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். பச்சை மரத்தில் மஞ்சள்ப் பூக்கள் வெகு அழகாக இருக்கும். பெங்களூரில் "பன்னர்கட்டா ஜூ" சென்றிருந்தபோது அங்கே யானைக் குளியலை ரசித்துக் கொண்டிருக்கையில் இந்த நிறப் பூக்களும், மரமும் என் கருத்தைக் கவர்ந்தன.
மஞ்சளுக்குப் பதில் வெண்பழுப்பு நிறத்தில் பொன்னரளி..மரம், இலைகள் எல்லாம் ஒன்று போலவே இருந்தாலும் பூக்கள் மட்டும் நிறம் வேறாக இருந்தன. :) 
~~
அரளி வரிசையில் அடுத்து வருபவர் "தங்க அரளி"..இதற்கும் வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்கள் இருக்கலாம். இதுவும் ஒரு அழகான மஞ்சள்ப் பூ! ஊரில அம்மா வீடு இருக்கும் இடம் டெவலப்பிங் ஏரியா-வாக இருப்பதால் கட்டப்பட்ட எல்லா வீடுகளிலும் இந்தத் தங்க அரளியும்,  ஜாதி மல்லிப் பூச்செடியும் தவறாமல் இடம் பிடித்திருக்கும். :) 
இந்தச் செடி பொன்னரளி அளவிற்கு விஷம் கிடையாது. பார்வைக்கும் அழகாய் இருப்பதால் எல்லா வீடுகளிலும் முன்வாயில் கதவோரங்களில் அழகாய்த் தலையாட்டும் இந்த மலர்கள்!
இந்தப் படத்தில் தெரிகிறதே சிறு மொட்டு, அதைப் பறித்து நெற்றியில் அடித்தால் பட்டென்று உடையும்! அது ஒரு விளையாட்டு! :))))
இந்த மலர்கள் சரமாகத் தொடுக்கப்பட்டு தெய்வங்களுக்குச் சாத்தப்படும். சில நேரங்களில் பூக்களுடன், செடியின் இலையையும் சேர்த்து வைத்து சரமாகத் தொடுப்பார்கள். பச்சை-மஞ்சள் காம்பினேஷன் கண்ணை அள்ளும், சரமும் நீளமாகக் கிடைக்கும். ஒரே கல்லில ரெண்டு மாங்கா! :) நான் கூட அப்படி ஒரு சரம் தொடுத்தேன் என நினைக்கிறேன், மீண்டும் படக்கோப்புகளைத் துழாவிப் பார்த்துப் படம் கிடைத்தால் இணைக்கிறேன். 
~~
இன்றைய பதிவின் இணைப்பு, பன்னர்கட்டா  ஜூ-வில் மரத்தின் மெலே உட்கார்ந்து கொய்யாவை ருசிக்கும் மகா கனம் பொருந்திய, மேன்மை தாங்கிய குட்டிக் குரங்கார்! :) 
பின்னே, நம்ம முன்னோர்களுக்கு மரியாதை கொடுக்க வேணாமா? இல்லனா கொய்யாப்பழத்த விட்டுப்புட்டு நம்மளப் புடிச்சுக் கடிச்சுர மாட்டாரா? அவ்வ்வ்வ்!

12 comments:

  1. தூசு தட்டிய படங்கள் நன்று... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அடுக்கு அரளிய இப்போதான் பார்க்கிறேன். பச்சை பின்புலத்தில்,மஞ்சள் பூ, பொன்னரளி அழகோஅழகு. படம் சூப்பரா வந்திருக்கு.படங்களைத் தேடிப்பிடித்து, ஏறக்குறைய எல்லா அரளிகளையும்பற்றி எழுதி அசத்திட்டீங்க.

    எங்க ஊர் பக்கமும் ஒரு செம்மேடு இருக்கு மகி. பெயருக்கேற்ற மாதிரி மண் செம்மண்ணாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கேன்.

    குரங்கார் யாரைப்பற்றியும் கவலையில்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அழகா போஸ் கொடுக்கிறார்.

    ReplyDelete
  3. ஒரு பெரிய உதவி மகி. உங்க blog-ல் இருந்து நிறைய கற்றுள்ளேன் . சாம்பார், சில பொரியல்கள், இட்லி, cakes எல்லாம் உங்கள் பாணியில் தான் 3-4 வருடங்களாக செய்கிறேன். ஆனால் தயிர் மட்டும் உங்களின் முறை 5-6 முறை பின்பற்றியும் வரவில்லை :-(. பாதி தயிர் பாதி பால் போலவே உள்ளது. ஏதாவது டிப்ஸ் தாங்களேன் ப்ளீஸ் .

    ReplyDelete
  4. அரளியின் வகைகளை அழகாய் ஒரு கவிதை போல் வடித்துள்ளீர்கள் . கொள்ளை கொள்ளும் அழகு மஹி

    ReplyDelete
  5. இந்த இருவகைப்பூக்களும் எங்க ஊரிலும் உண்டு.எங்க வீட்டுக்கு முன் இந்த இரு அரளிகளும் இருக்கிறது.முதலாவதை நாங்க தங்க அரளி என்போம்.2வது நாங்க‌ நொச்சிப்பூ எனக்கூறுவோம்.
    //இந்தப் படத்தில் தெரிகிறதே சிறு மொட்டு, அதைப் பறித்து நெற்றியில் அடித்தால் பட்டென்று உடையும்! அது ஒரு விளையாட்டு! :))))// நாங்களும் செய்வோம்.
    ///பின்னே, நம்ம முன்னோர்களுக்கு மரியாதை கொடுக்க வேணாமா? இல்லனா கொய்யாப்பழத்த விட்டுப்புட்டு நம்மளப் புடிச்சுக் கடிச்சுர மாட்டாரா? அவ்வ்வ்வ்!// ஆமாம்மா.அழகான கு(ட்டி)ரங்கார்

    ReplyDelete
  6. படங்கள் அழகு மஹி.. வீட்டு காம்பவுண்ட் ஓரத்திலேயே முதல் இரண்டு படத்தில் இருக்கிற அரளி இருக்கு(ஓரடுக்கு மற்றும் அடுக்கு அரளி).. ஆனா இது செவ்வரளியான்னு தெரியல..எதிர் வீட்டுல சிவப்பு கலர்ல இருக்கு(ஓரடுக்கு).
    அடிக்கடி வரமுடியல..இனி முயற்சி பண்றேன் மஹி.

    ReplyDelete
  7. @சௌம்யா, தயிர் ப்ரச்சனைக்கு சரியான காரணம் தெரியலையேங்க! வெயில் காலத்தில் நல்லாவே புளிச்சிடுமே! நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? சமீபத்தில தயிர் பற்றிய அலசல்கள் சில இடங்கள்ல நடந்தது. நிறைய பேர் பல உபயோகமான தகவல்கள் கொடுத்திருக்காங்க, இந்த லிங்க்-ஐப் பாருங்க.
    http://kovai2delhi.blogspot.com/2013/07/blog-post.html
    இந்தப் பதிவில் கருத்துப் பகுதியில பல்வேறு டிப்ஸ் இருக்கு.

    பாலைப் பிறை ஊற்றி, ஒரு மிளகாயைப் போட்டு வைத்தாலும் நல்லா தயிர் ஆகிறது என்று மேனகா சொல்லியிருக்காங்க.
    http://sashiga.blogspot.com/2013/07/homemade-curd.html

    பால் விரல் பொறுக்கும் சூடில் இருக்கும்போதே தயிரை விட்டு ஸ்பூனால் நன்றாக கலக்கி, ஒரு இடத்தில் (அடுப்பு பக்கத்தில் அல்லது சூடான ஒரு இடத்தில்) வைத்து அப்படியே விட்டுருங்க. 8-9 மணி நேரம் கழித்து திறந்து பாருங்க, இடையில் திறக்க வேண்டாம். இந்த விளக்கங்கள் உதவியா இருக்கும்னு நினைக்கிறேன். டிரை பண்ணிப் பாருங்க சௌம்யா!

    ReplyDelete
  8. @தனபாலன் சார், வருகைக்கும் கருதுத்க்கும் நன்றி!
    ~~
    @சித்ராக்கா, //அடுக்கு அரளிய இப்போதான் பார்க்கிறேன்.//ஓ!! இது இங்கே எங்க வீட்டுப் பக்கத்தில எடுத்த படம்தான்! :)

    //பெயருக்கேற்ற மாதிரி மண் செம்மண்ணாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கேன். // ஆமாம், கரெக்ட்! செம்மண் பூமிதான்! :)

    //குரங்கார் யாரைப்பற்றியும் கவலையில்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அழகா போஸ் கொடுக்கிறார்.// ஆஹா!! அவர் போஸ் குடுக்கிறாரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...கஷ்டப்பட்டு அண்ணாந்து பார்த்து நான் போட்டோ எடுத்திருக்கேனாக்கும்! :)))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சித்ராக்கா!
    ~~
    @ராஜலக்‌ஷ்மி மேடம், வருகைக்கும் ரசித்து கருத்துச் சொன்னதற்கும் மனமார்ந்த நன்றிகள்!
    ~~
    @அம்முலு, நொச்சிப்பூ- புதிய பேராக இருக்குங்க! தங்க அரளி - பொன்னரளி இரண்டும் பொருள் ஒன்றே இருந்தாலும் கோவையில இப்படித்தான் பேரு! :)
    குட்டிக் குரங்காரை ரசித்தமைக்கும், கருத்துக்கும் நன்றிகள் அம்முலு!
    ~~
    @தர்ஷினி, உங்க பதிவைப் பார்த்து சந்தோஷம்! நேரம் கிடைக்கும்போது வாங்க. செவ்வரளி சில இடங்களில் நல்ல சிவப்பாவே இருக்கும். சில இடஙக்ளில் இப்படி இளம்சிவப்பும் இருக்கு. :)
    நன்றி தர்ஷினி!
    ~~

    ReplyDelete
  9. mahi oor naabagam varavechuteenga enga amma veettula ponnarailyum thanga araliyum Dallas poothu kulungum daily parithu swamikku vaippom poojaikku araiye mangalamaga irukkum. adhuvum thanga araliyai saamaaga katti periya swamipadangalukku poduvom.thanga arali padathai parthavdan antha mottai udaippadhu manasula vanthadhu antha variyil neenga adhaiye eluthiyirukkeenga. ippave oorukku poganum polar irukku photos salaam palichunu irukkupap mahi.ooruku poganum cameravudan suthuveengalaappa nalla intrestaana aaluthampa neenga.vaalthukkal.

    ReplyDelete
  10. மகி மிக்க நன்றி. எனக்காக கொடுத்த link-ல் எதை செய்வது என குழம்பி கடைசியில் நீங்கள் சொன்னது போல செய்து ஒரு கீறிய பச்சை மிளகாயை மட்டும் போட்டேன். சொன்னது போலவே கட்டியாக வந்துவிட்டது. பெரிய நன்றி.

    ReplyDelete
  11. கொயினி, எனக்கும் ஊருக்கே போயிட்டு வந்த மாதிரிதான் இருக்கு உங்க கமெண்ட்டைப் படிச்சதும்! :) ரசித்துப் படித்து கருத்து சொல்லிருக்கீங்க, ரொம்ப சந்தோஷம் + நன்றிப்பா! :)

    ஊருக்கு போனப்பவும் கையில் கேமராவுடந்தான் சுத்தினேன்! முதலில் எல்லாரும் சிரித்தாங்க, பிறகு சரியாப் போச்சுங்க! :)

    ReplyDelete
  12. சௌம்யா, தயிர் ஆகிருச்சா? அப்பாடா!! ரொம்ப சந்தோஷங்க! :))) இந்த டிப்ஸெல்லாம் மறக்காம நினைவும் வைச்சுக்குங்க. உங்களால நானும் நிறைய டிப்ஸ் புடிச்சிட்டேன், தயிர் பண்ண! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails