Monday, February 22, 2010

வெஜிடபிள் ரவா கிச்சடி


தேவையான பொருட்கள்
வறுத்த ரவை - 1கப்
கேரட் -1
பீன்ஸ் - 7
பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி
வெங்காயம் - 1
தக்காளி - சிறியது 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 இன்ச் துண்டு
முந்திரி - 7
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்துப் பருப்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை - சிறிதளவு
உப்புசர்க்கரை - 3/4ஸ்பூன்
தண்ணீர்-21/2 கப் (அ) 3 கப் [ரவைக்கேற்ப தண்ணீர் அளவு மாறும். சிலது நிறைய தண்ணீர் பிடித்து வேகும்]
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1ஸ்பூன்

செய்முறை

வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கேரட் பீன்ஸ்-ஐ பொடியாக நறுக்கி, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மைக்ரோவேவில் நான்கு நிமிடம் வேகவைக்கவும். பின்னர் அத்துடன் பச்சைப்பட்டாணியைச் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு,உ.பருப்பு, முந்திரி, சீரகம் தாளிக்கவும்.

பக்கத்து அடுப்பில் 2கப் தண்ணீரை சூடாக்கவும்.

பருப்புகள் பொன்னிறமானதும் வெங்காயம்,பச்சைமிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை , மஞ்சள்தூள்,தக்காளி, உப்பு,சர்க்கரை சேர்த்து குழைய வதக்கவும்.

எல்லாம் நன்கு வதங்கியதும், தீயைக் குறைத்து ரவையை சேர்த்து மூன்று நிமிடங்கள் வறுக்கவும்.

வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

இதற்குள் பக்கத்து அடுப்பில் வைத்த தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும்..ரவை இருக்கும் அடுப்பின் தணலை மிகவும் குறைவாக வைத்துக்கொண்டு இந்த கொதிநீரை சேர்த்து கிளறவும்.

எல்லாம் நன்கு சேர்ந்தது வந்ததும் நெய் சேர்த்து கிளறி,மல்லி இலை தூவி இறக்கவும்.

வெஜிடபிள் ரவா கிச்சடி ரெடி..தேங்காய் சட்னி/சாம்பார் இதற்கு பொருத்தமாய் இருக்கும்.

குறிப்பு
ரவையை வெங்காயம் மிளகாயுடன் சேர்த்து வறுத்து விடுவதால் கட்டி தட்டும் வாய்ப்பு குறையும்.
கொதி நீரை ஊற்றும்போது ரவை வெந்து அங்கங்கே தெறிக்கும்..அதற்குதான் அடுப்பை குறைத்து வைப்பது. பின்னர் தணலை கொஞ்சம் அதிகரித்து இரண்டு நிமிடம் கிளறினால் போதும்.கிச்சடி ரெடி.

Saturday, February 20, 2010

பாட்லக் பார்ட்டி


பாட்லக் --- பொதுவாக வெளிநாடுகளில் இருபவர்களுக்கு இது பரிச்சயமான பெயராய்த்தான் இருக்கும். இருந்தாலும் அது என்னன்னு சொல்லிட்டே அப்புறம் ப்ளேடை தொடர்கிறேன்.

இரண்டு மூன்று பேமிலி சேர்ந்து அவரவர் வீட்டில் செய்த உணவுகளை எல்லாம் ஒரு நண்பர் வீட்டுக்கு கொண்டு சென்று, எல்லாரும் சேர்ந்தது ஜாலியாகப் பேசி சிரித்து, கேம்ஸ் விளையாடி, சாப்பிட்டு சில பல மணி நேரங்களை செலவுசெய்துவிட்டு வருவது தாங்க பாட்லக்.

இங்கே என் கணவர் அலுவலக நண்பர்கள் குடும்பம் எல்லாம் சேர்ந்தது பத்து-பதினைந்து பேர் தேறுவோம்..ஆண்கள் எல்லோரும் ஆபீசில் டிஸ்கஸ் செய்து எப்பொழுது யார் வீட்டில் பாட்லக் என்று முடிவு செய்துடுவாங்க..நாங்களெல்லாம் வானேஜ்/காம்காஸ்ட் புண்ணியத்துல மணிக்கணக்கா அரட்டை அடிச்சு யாரார் என்னென்ன டிஷ் செய்து கொண்டுவரதுன்னு டிசைட் பண்ணிக்குவோம்.

இது கடந்த பாட்லக்-குக்கு நான் செய்தது (சப்பாத்தி,கத்தரிக்காய் கிரேவி,தால்)


குறிப்பிட்ட தினத்தன்று (பொதுவாக வீக் எண்ட்தான்) எல்லாரும் ஒரு வீட்டில் கூடி அரட்டைக் கச்சேரி ஆரம்பிச்சா டைம் போறதே தெரியாது..டம்ஷரர்ஸ், சீட்டுக்கட்டு, மாஃபியா (இது ஒரு க்ரூப் கேம்..இது என்னன்னு இங்க இருக்குங்க)ன்னு விளையாடிட்டு இருப்போம்.

குட்டீஸ் எல்லாம் ஒரு ரூமுக்கு போயி அவங்க விளையாட்டைத் தொடர்வாங்க. யாரவது ஒருத்தருக்கு வயித்துக்குள்ள அலாரம் அடிக்கும்.. அம்மாக்களெல்லாம் பொறுப்பா குழந்தைங்களுக்கு சாப்பாடு குடுத்து முடிச்சுடுவாங்க..அப்புறம் சாப்பாட்டுக் கடைய விரிச்சு எல்லாரும் சாப்பிட்டு முடிப்போம்.

இந்த வாரம் எங்க வீட்டு கான்ட்ரிப்யூஷன்...





ஸ்டஃப்ட் கேப்சிகம்










ஆலு பராத்தா


















ஆரஞ்ச் கப்கேக்












அப்புறம்
தான் வருங்க, ட்ரெஷர் பாக்ஸ்!! வேற ஒண்ணுமில்லை,போக்கர் பாக்ஸ் தான்.போக்கர்னா என்னன்னு தெரியாத (என்னை மாதிரி) அப்பாவிங்கள்லாம் சிரமம் பாக்காம இங்கே ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திடுங்க.

எப்படியும் யாராவது ஒருத்தர் கொண்டு வந்திடுவாங்க..எங்க கேங்-ல சும்மா வெறுமனே போக்கர் சிப்ஸ் வைத்து விளையாடரதில்ல..தலைக்கு அஞ்சு டாலர்/பத்து டாலர் வைச்சுதான் வெளையாடறது..பதினோரு மணி வாக்குல போக்கர் ஆரம்பிச்சா டைம் போறதே தெரியாது..குறைந்தது காலை மூணு மணி இல்லாம யாரும் எந்திரிக்க மாட்டாங்க..இடையிடைல சூடா காபி -டீ, இல்ல பாட்லக்-ல வந்திருக்க ஸ்வீட்னு எதாவது அப்பப்ப உள்ளே தள்ளிட்டு தெம்பா(!!) விளையாடுவாங்க.



எங்க வீட்டுல எப்பவும் இவர்தான் விளையாடுவார்.(பேலன்ஸ் ஆன மாதிரி ஒரு முறை ஜெயிச்சா அடுத்த முறை தோத்துடுவார்) இந்த வாரம் வெள்ளிக்கிழமை பக்கத்துல ஒரு பிரென்ட் வீட்டுல பாட்லக்..எல்லாரும் வந்து சேரும்வரை மோனோபாலி விளையாடிட்டு, அப்புறம் சாப்பிட்டு முடிச்சுட்டு பதினொன்னரை மணிக்கு போக்கர் பாக்ஸ்-ஐத் திறந்தாங்க..வழக்கம் போல பத்து டாலர் பெட்.

நான்
ஓரமா, எங்காளு பின்னால இருந்த சோபா-ல உக்காந்துகிட்டேன்..நேரம் ஆக ஆக அப்படியே கண்ணசந்துட்டேன்..விருக்குனு முழிச்சுப் பாத்தா மணி ஒண்ணேகால்..அப்புறம் சுறுசுறுப்பா எழுந்து உக்காந்து கேம்-ஐ கவனிக்க ஆரம்பிச்சேன்..இவர் கிட்ட இருந்த சிப்ஸ் எல்லாம் கிட்டத்தட்ட காலி..வர கார்டும் ஒண்ணும் உருப்படியா வர மாதிரி தெரில..ரெண்டு மணி வரை முழிச்சிருந்துட்டு நான் மறுபடி தூங்கிட்டேன்..திருப்பி எழுந்தப்போ மணி நாலேகால்..எல்லாரும் காபி, கோக்-னு குடிச்சிட்டு, இடத்தை மாதி உட்கார்ந்துட்டு தெம்பா விளையாடிட்டு இருக்காங்க.

எங்க வீட்டு ஐயாவுக்கு இடம் மாறினதும் அதிர்ஷ்ட தேவதை கடைக்கண் பார்வை பட்டுடுச்சு போல..சுமாரா ரெக்கவர் ஆயிருந்தாரு.யாரும் எந்திரிக்கற மாதிரி தெரில..தூங்கி வழிஞ்சிட்டு உக்காந்திருந்த என்னை கன்சிடர் பண்ணி அஞ்சரை மணியோட கேம்-ஐ முடிச்சுக்கலாம்னு ஏகமனதா முடிவெடுத்தாங்க..அப்புறம் கேம்-ஐ க்ளோஸ் பண்ணி எல்லாரும் அவங்கவங்க பங்கு லாபம்/நஷ்டத்தை செட்டில் பண்ணி எழுந்தப்போ கிட்டத்தட்ட ஆறுமணி.

மிச்சம்
மீதி இருந்த பூரி, ஆலூ பராத்தாவை எல்லாம் காலி பண்ணிட்டு, "தூக்கமா..அப்புடின்னா என்ன?"ங்கற ரேஞ்சுல எல்லாரும் செம பிரஷ்ஷா டாட்டா சொல்லிட்டு கார் ஏறும்போது மணி சரியா ஆறு. இங்கே ஒருத்தர், இன்னும் சன்லைட் வரல..இருட்டாத்தான் இருக்கு'ன்னு சொல்லிக்கிறாரு.. என்ன கொடுமை?!!!

என்னதான் சொல்லுங்க..பெற்றோர்,சொந்த பந்தம், நண்பர்கள் இப்படி எல்லாரையும் பிரிந்து இவ்வளவு தூரம் வந்து தனியாய் இருக்கிறோம்..அங்கங்கே கிடைக்கும் நண்பர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இருப்பதும் ஒரு சுகம்தானே?

Thursday, February 18, 2010

ஆல்மண்ட் & சாக்லட் பிஸ்கோட்டி


தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் ப்ளோர் - 2கப்
சர்க்கரை - 3/4 கப்
ஆல்மண்ட்(பாதாம்) - 1கப்
முட்டை - 2
வெனிலா எஸ்சென்ஸ் - 2ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 1/2ஸ்பூன்
செமி ஸ்வீட் சாக்லட் சிப்ஸ் - 1/4 கப்
எண்ணெய் - 1/4கப்

செய்முறை
முட்டையை இரண்டு மணி நேரம் முன்பு பிரிட்ஜ்-லிருந்து வெளியே எடுத்து வைக்கவும்.

மிதமான சூட்டில் பாதாம்களை வறுத்து எடுத்து வைக்கவும். (சூடு மிகக் குறைவாக இருக்க வேண்டும்..சுமார் 5 நிமிடங்களில் பாதாம் வறுபட்டு வெடிக்க ஆரம்பிக்கும். அப்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்)

ஆல் பர்ப்பஸ் ப்ளோர் உடன் பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு முறை சலித்துக்கொள்ளவும்.

முட்டைகளை உடைத்து அத்துடன் வெனிலா எஸ்சென்ஸ் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கவும்.

அத்துடன் எண்ணெயை சேர்த்து கலக்கவும்.

முட்டை கலவையுடன் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும்வரை கலக்கவும்.

இத்துடன் சலித்து வைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

வறுத்து வைத்த பாதாம்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.

மாவு தூவிய டேபிள்டாப்பில் பிஸ்கோட்டி கலவையை எடுத்து வைக்கவும். கைகளில் மாவு தொட்டுக்கொண்டு, மாவுக்கலவையை நீளமாகத்தட்டவும். பின்னர் மாவுக்கலவையை இரண்டாகப் பிரிக்கவும்.

ஒரு பகுதியில் சாக்லேட் சிப்ஸ்-களை பதித்து, எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் மாவுக் கலவைகளை வைக்கவும்.

350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் வைத்து 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

பிஸ்கோட்டியை அவன்-ல் இருந்து வெளியே எடுத்து வைக்கவும். சுமார் 7 நிமிடங்கள் கழித்து பேக்கிங் ட்ரே-யில் இருந்து எடுத்து கத்தியால் தேவையான அளவிற்கு நறுக்கவும்.

நறுக்கிய பிஸ்கோட்டிகளை பேக்கிங் ட்ரேயில் அடுக்கி மீண்டும் 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.

பேக்கிங் ட்ரேயை வெளியே எடுத்து பிஸ்கோட்டிகளை திருப்பி அடுக்கி மேலும் 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.

பிஸ்கோட்டிகள் தயார்! காபி, டீ அல்லது பாலுடன் பரிமாறுங்கள்.

எக்லெஸ் பிஸ்கோட்டிக்கான செய்முறை காண இங்கே க்ளிக் செய்யவும்.


குறிப்பு
  • பிஸ்கோட்டிகளுடன் விருப்பமான நட்ஸ் வகைகள் சேர்த்து பேக் செய்யலாம்.
  • சாக்லேட்டை மெல்ட் செய்து இறுதியாக பிஸ் கோட்டிகள் மீது ஊறி, பிரிட்ஜில் குளிரவைத்துஉபயோக்கிகலாம்.
  • கேக் செய்வது போல பல்வேறு சுவைகளில் இந்த பிஸ்கோட்டிகளையும் செய்யலாம்.

தேங்காய்ப்பால் முறுக்கு


கோவையில் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒரு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செய்ன். அங்கேதான் நாங்கள் மளிகைசாமான் வாங்குவோம். அங்கிருக்கும் ஸ்னாக்ஸ் வகைகளில் ஆரஞ்ச் கப் கேக், எள்ளுருண்டை அப்புறம் தேங்காய்ப்பால் முறுக்கு இவை மாதம் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வரும் ஸ்னாக்ஸ் வகைகள். வெள்ளை வெளேரென்று, தேங்காய் எண்ணெய் மணத்துடன் தேங்காய்ப்பால் முறுக்கு சூப்பராக இருக்கும்.

திடீரென்று இந்த முறுக்கின் நினைவு வந்தது..வீட்டில் இருந்த சாமான்களை வைத்து செய்துவிட்டேன்.. தேங்காய் எண்ணெயிலெல்லாம்
பொரிக்கவில்லை,கனோலா ஆயிலில் தான் பொரித்தேன். அப்போது சாப்பிட்ட அளவு டேஸ்ட் இல்லாவிட்டாலும் ஏதோ சுமாராக வந்தது..எங்க வீட்டு எலி மிகவும் ரசித்து ருசித்தது.(நானும்தான்..:) ) நீங்களும் செய்து பாத்து சொல்லுங்க.

தேவையான
பொருட்கள்
அரிசி மாவு - 1கப்
உளுந்து மாவு - 1/4கப்
வெண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப்பால் பொடி - 4ஸ்பூன்
உப்பு
தண்ணீர்
எண்ணெய்

செய்முறை
அரிசிமாவு,உளுந்து மாவு, தேங்காய்ப்பால் பொடி, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். அத்துடன் வெண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கவும்.

சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

மிதமான சூட்டில் எண்ணெயைக் காயவைக்கவும். முறுக்கு அச்சில் மாவைப் போட்டு டைரக்ட்டாக எண்ணெயில் பிழிந்து விடவும்.

முறுக்குகளை திருப்பி விட்டு கலைத்து விடவும்.எண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் எடுத்துவிடவும்.


சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு ரெடி!



குறிப்பு

  • உளுந்து மாவிற்கு, 1/4 கப் உளுந்தை வெறும் வாணலியில், குறைந்த சூட்டில் வறுக்கவும். பருப்பு நிறம் மாறாமல் வறுக்கவேண்டும். இரண்டு மூன்று நிமிடங்களிலேயே நல்ல வாசனை வரும். அப்போது அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.
  • எண்ணெய் குறைந்த சூட்டில் காய வேண்டும்..இல்லையெனில் முறுக்குகள் நிறம் மாறிவிடும்.

Tuesday, February 16, 2010

அரிசி-பருப்பு சாதம்


தேவையான பொருட்கள்
அரிசி - 1டம்ளர்
துவரம் பருப்பு - கால் டம்ளர்
வெங்காயம் - 1(மீடியம் சைஸ்)
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 3 பல்
தேங்காய்த் துருவல் - 3ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை

குக்கரில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.



வெங்காயம் தக்காளி வதங்கியதும் அரிசி-பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.


தேவையான
தண்ணீர் சேர்த்து, மல்லி இலை தூவி குக்கரை மூடி, மூன்று விசில் வைக்கவும்.



பிரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மெதுவாக கிளறிவிட்டு பரிமாறவும்.



குறிப்பு

இது ரொம்ப பேசிக் மெத்தட்..இதில்
  • கடுகு தாளிக்கும்போது சிறிது சீரகமும் சேர்த்து தாளிக்கலாம்.
  • காய்ந்த மிளகாயைத் தவிர்த்து தனி மிளகாய்த்தூள் சேர்த்தால் ஒரு சுவை.
  • மிளகாய்த்தூளுக்கு பதிலாக சாம்பார்த்தூள் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்தால் ஒருசுவை.
  • தேங்காயைப் பல்லுப் பல்லாகப் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.தேங்காய் போடாமலும் செய்யலாம்.
  • கத்தரிக்காய்- உருளைகிழங்கு பொரியல் இதற்கு பெஸ்ட் காம்பினேஷன்..வேறு எந்தப்பொரியலும் செய்து கொள்ளலாம். அல்லது வெறும் ஊறுகாய் போதும்.
  • தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
  • சாதம் பழசானால் இன்னும் சுவையாக இருக்கும்.

Monday, February 15, 2010

பருப்பு சட்னி


தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்துப் பருப்பு - 1ஸ்பூன்
கடலைப் பருப்பு -1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 (அ) காரத்திற்கேற்ப
வெங்காயம் - சிறிது
பூண்டு -2 பல்
தேங்காய்த் துருவல் - 3ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் - 2ஸ்பூன்
உப்பு

செய்முறை

கடாயில் எண்ணெய் காயவைத்து கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பருப்பு வகைகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

வெங்காயம், பூண்டு ,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கவும்.

இறுதியாக தேங்காய் சேர்த்து மிதமான தீயில் மூன்று நிமிடம் வதக்கி ஆறவைக்கவும்.

தேவையான உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.

பருப்பு சட்னி ரெடி..இது இட்லி-தோசை,சப்பாத்தி மற்றும் கலந்தசாத வகைகளுக்கும் பொருத்தமாய் இருக்கும்.

Wednesday, February 10, 2010

கடலைப்பருப்பு போளி

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு -1கப்
வெல்லம் - 1கப்
ஏலக்காய் -3
மைதா - 1கப்
ரவை - 2 ஸ்பூன்
அரிசிமாவு - 1 ஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய்

செய்முறை
மைதாவுடன், ரவை, அரிசிமாவு, உப்பு சேர்த்து கலக்கவும்.

அத்துடன் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து, தேவையான நீர் தெளித்து மாவை நன்றாகப் பிசைந்து[பரோட்டா மாவு போல சற்று தளர இருக்கவேண்டும்] கால் மணிநேரம் மூடி வைக்கவும்.

கடலைப்பருப்பை குக்கரில் வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்..பருப்பு ஆறியதும், அத்துடன் ஏலக்காய் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். [அரைப்பதற்கு தண்ணீர் தேவைப்படாது.]

வெல்லத்தைப் பொடித்து சிறிது நீர் சேர்த்து அடுப்பில், மிதமான சூட்டில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும், அரைத்து வைத்த பருப்பு,ஏலக்காய் கலவை சேர்த்து கிளறவும்.

எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்ததும் இறக்கி ஆறவைக்கவும். நன்கு ஆறியதும், எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

மைதாவையும் அதே போல சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

ஒரு மைதா உருண்டையை எடுத்து, வட்டமாகத் தட்டி, பூரணத்தை அதனுள் வைத்து மூடவும். பின்னர் மீண்டும் வட்டமாகத் தட்டவும். [கையில் எண்ணெய் தொட்டுக்கொண்டு தட்டவும்.]

தோசைக்கல்லை காயவைத்து போளிகளை சுட்டெடுக்கவும். நெய் விரும்புவோர் நெய் ஊற்றி சுடலாம்..இல்லையெனில் எண்ணெய் ஊற்றியே சுட்டு எடுக்கலாம்.

கடலைப்பருப்பு போளி தயார். இதனை மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து உபயோக்கிக்கலாம்.



Tuesday, February 9, 2010

புதினா சட்னி

தேவையான பொருட்கள்
புதினா - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3(அ) காரத்துக்கேற்ப
கொத்துமல்லி இலை - கால் கட்டு
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்துப்பருப்பு - 1ஸ்பூன்
வெங்காயம் - கால் வாசி
புளி - நெல்லிக்காயளவு
தேங்காய் துருவல் - கால் கப்
எண்ணெய்
உப்பு

செய்முறை
புதினாவை சுத்தம் செய்து அலசி, இலைகளை தனியாக எடுத்து வைக்கவும்.
மல்லி இலை,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய வைத்து கடலைப்பருப்பு, உளுந்துப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், மிளகாய்,புளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புதினா இலை மற்றும் மல்லி இலையை சேர்த்து வதக்கவும்.
இறுதியாக தேங்காய் சேர்த்து மூன்று நிமிடம் குறைந்த தணலில் வதக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

இந்த சட்னி இட்லி,தோசை,பணியாரம்,சப்பாத்தி,பூரி, சுடு சாதம், தாளித்த சாதம் எல்லாவற்றுக்கும் சூப்பராய் மேட்ச் ஆகும்.

Monday, February 8, 2010

கார சட்னி

பொதுவாக கார சட்னிக்கு மிளகாய் வற்றல் சேர்த்துத்தான் அரைப்போம்..இந்த சட்னி, என் தோழியின் செய்முறை..அவருக்கு இன்னொரு தோழி சொன்னது..ஆக மொத்தம் நதி மூலம்,ரிஷி மூலம் எங்கே என்று தெரியவில்லை.:)

வழக்கமான சட்னிகளே ஒவ்வொரு முறையும் செய்வதற்கு பதிலாய் இப்படி சின்னச் சின்ன மாற்றங்களுடன் செய்யும்போது என்னவோ ஒரு புது சட்னிவகை செய்வதாய் ஒரு மகிழ்ச்சி..நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க..


தேவையான பொருட்கள்
வெங்காயம்(பெரியது) - 1
தக்காளி (மீடியம் சைஸ்)- 1
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் (அ) காரத்துக்கேற்ப
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு

செய்முறை
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கி ஆறவைக்கவும்.

ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும்.

காரசாரமான கார சட்னி தயார். இது இட்லி ,தோசை, பணியாரம் இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.

வெஜிடபிள் கட்லெட்

தேவையான பொருட்கள்
வேக வைத்த உருளை கிழங்கு - 1
பொடியாக நறுக்கி வேகவைத்த கேரட்,பீன்ஸ் மற்றும் பட்டாணி - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 இன்ச் துண்டு
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
மைதா (அ) ஆல் பர்ப்பஸ் மாவு - 3 ஸ்பூன்
ப்ளெய்ன் ப்ரெட் க்ரம்ஸ் - 1 கப்
உப்பு


செய்முறை

வேகவைத்த காய்கறிகள், சீரகம்,பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்துமல்லி,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

உங்களுக்கு விருப்பமான வடிவில் கட்லெட்டுகளை செய்து வைக்கவும்.

மைதாவுடன் அரை டம்ளர் நீர் சேர்த்து நீர்க்கக் கரைத்துக்கொள்ளவும்.

செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா கரைசலில் தோய்த்து ப்ரெட் க்ரம்சில் நன்றாகப் புரட்டி வைக்கவும்.

மிதமான சூட்டில் எண்ணெயை காயவைத்து கட்லெட்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

டேஸ்ட்டான ஈவினிங் ஸ்னாக்ஸ் தயார்! டொமாட்டோ கெச்சப், கிரீன் சல்ஸாவுடன் பரிமாறவும்.

குறிப்பு

  • காய்கறிகளுடன் பீட்ரூட், மற்றும் கார்ன் சேர்த்தும் செய்யலாம். கூடவே சிறிது முந்திரிப் பருப்பும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருப்பின், பச்சை மிளகாயைத் தவிர்த்து மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
  • கட்லெட்டுகளை எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக அவன்-ல் வைத்து பேக் & ப்ராயில் செய்யலாம். ஆனால் அவன்-ல் செய்ய நேரம் அதிகமாகும். குறைந்தது முக்கால் மணி நேரம் பேக் செய்யவேண்டும். பின்னர் கால் மணி நேரம் ப்ராயில் செய்ய வேண்டும்.
  • மைதாவில் தோய்த்தெடுப்பதற்குப் பதிலாக முட்டையின் வெள்ளைக்கருவிலும் கட்லெட்டுகளை டிப் செய்து ப்ரெட் க்ரம்சில் புரட்டிக் கொள்ளலாம்.



Friday, February 5, 2010

கோக்கனட் மக்ரூன்ஸ்


தேவையான பொருட்கள்
ஸ்வீட்டன்ட் கோக்கனட் ப்ளேக்ஸ் - 14 Oz பேக்கட் ஒன்று ( 396 கிராம்)
ஸ்வீட்டன்ட் கண்டென்ஸ்ட் மில்க் (அ) மில்க்மெய்ட் - 14 Oz கேன் ஒன்று ( 396 கிராம்)
வெண்ணெய் - 1 ஸ்டிக் ( 115 கிராம்)
முட்டை - 3



செய்முறை
முட்டையையும்,வெண்ணையையும் மூன்று மணி நேரங்கள் முன்பாக ப்ரிட்ஜ்-லிருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
முட்டைகளை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாகப் பிரிக்கவும்.



எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு வெள்ளைக்கருக்களை நன்றாகக் கலக்கவும்.





வெள்ளைக்கரு கனமில்லாமல் சோப்புநுரை போல வரும் வரை கலந்து வைக்கவும்.




வெண்ணெயை பீட்டரால் கலக்கவும்.



வெண்ணெயுடன் இரண்டு ஸ்பூன் கலர் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும். ( சர்க்கரை சேர்ப்பது கட்டாயமில்லை, கலர்புல்லாக இருக்குமே என்று சேர்த்திருக்கிறேன்..:) )



கண்டென்ஸ்ட் மில்க்-ஐ வெண்ணெயுடன் சேர்க்கவும்.




விஸ்க் மூலம் மெதுவாக கலக்கவும்.


கோக்கனட் ப்ளேக்ஸ்-ஐயும் சேர்த்து விஸ்க்கால் கலக்கவும்.



ஏற்கனவே கலக்கி வைத்திருக்கும் முட்டையின் வெள்ளைக்கருவையும் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும்.







வெண்ணெய் தடவிய கப் கேக் பானில் மக்ரூன் கலவையை வைக்கவும். ( ஒரொரு கப்பிலும் பாதியளவு வரும்வரை வைத்தால் போதும்)



350 F ப்ரீஹீட் செய்த அவன் - இல் வைத்து முப்பது நிமிடங்கள் பேக் செய்யவும்.
பின்னர் வெளியே எடுத்து இரண்டு மணி நேரம் ஆற வைத்து, மக்ரூன்களை பானிலிருந்து எடுக்கவும்.


சுவையான மக்ரூன் ரெடி!


நேரமிருப்பவர்கள் இங்கேயும் சென்று பாருங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails