Friday, March 26, 2010

நன்றி,விரைவில் சந்திப்போம்.






குலாப் ஜாமூன்

காலா ஜாமூன்

மில்க் பவுடர் குலாப் ஜாமூன்

இத்தனை ஸ்வீட் எதுக்குன்னு பார்க்கறீங்களா? ஜஸ்ட் ஒரு ஸ்வீட் பார்ட்டிதான்! எடுத்து சாப்பிடுங்க..

ஆசியா அக்காவும் விஜியும் மகி'ஸ் கிச்சனுக்கு சன்ஷைன் ப்ளாக்னு அவார்ட் குடுத்திருக்காங்க..அதனை இனிப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இருவருக்கும் நன்றி! (ரெண்டுபேரும் ஒரே அவார்ட குடுத்துப் போட்டீங்களே? இப்போ எனக்கு ஒரு அவார்ட் தான் கிடைச்சிருக்கா? ;) ) ஒரு அவார்டுதான் கிடைத்திருக்கான்னு நான் காமெடியா கேட்ட அன்றே, மேனகா அவர்கள் எனக்கு இந்த அவார்டை குடுத்திருக்காங்க..மிக்க நன்றி மேனகா!


ஸாதிகா அக்கா இந்த ராணி கிரீடத்தை குடுத்திருக்காங்க..மிக்க நன்றி ஸாதிகா அக்கா! :)


இதுவரை நான் பகிர்ந்துகொண்ட ரெசிப்பிகளை/எழுதுகிறேன் பேர்வழி என்று நான் போட்ட மொக்கைகளை தவறாமல் வந்து பார்த்து, பின்னூட்டம் தந்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்புள்ளங்களுடனும் இந்த விருதுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மகி கிச்சனில் புதிய குறிப்புகள் தொடரும். ஆதரவளிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றி.. விரைவில் மீண்டும் சந்திப்போம்!

Thursday, March 25, 2010

சுரைக்காய்-தட்டைப்பயறு குழம்பு


தேவையான பொருட்கள்
தட்டைப்பயறு -1/4கப்
சுரைக்காய் -100கிராம்
புளிக்கரைசல்-1/4கப்
தேங்காய் விழுது-3ஸ்பூன்
தக்காளி-1
வெங்காயம்-பாதி
பூண்டு-3பல்
பச்சைமிளகாய்-௧
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது
எம்.டி.ஆர்.மெட்ராஸ் சாம்பார் பவுடர்-1 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
சீரகம்-1/2ஸ்பூன்

செய்முறை
தட்டைப்பையறை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் மூன்று விசில் வைத்து(பயறு குழைந்து போகாமல்) வேக வைக்கவும்.

சுரைக்காயை தோல்நீக்கி சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்(காய் இளசாக இருந்தால் தோலுடனே போடலாம்).

வெங்காயம்,மிளகாய்,தக்காளியை நறுக்கிவைக்கவும். பூண்டை தோல் உரித்து (பெரிய பற்களாய் இருந்தால்)நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம் தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,பூண்டு,தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சுரைக்காய்,புளிக்கரைசல்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

காய் வெந்ததும் வேக வைத்த தட்டைப்பயறு, தேங்காய் விழுது,சாம்பார் பொடி சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.

லேசாக எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். இந்தக் குழம்பு சுடு சோற்றுடன் சாப்பிட சுவையாய் இருக்கும். தோசைக்கும் நன்றாக மேட்ச் ஆகும்.




குறிப்பு
தேங்காய் விரும்பாதவர்கள் தவிர்த்து விடலாம்.
தேங்காய் அரைத்து ஊற்றுவதற்கு பதில், பல்லுப்பல்லாக நறுக்கிப் போட்டாலும் நன்றாக இருக்கும்.

Wednesday, March 24, 2010

பரோட்டா


பரோட்டா...பலமுறை முயற்சி செய்து ஓரளவிற்கு செய்து பழகிட்டேன்.அதிலிருந்து ப்ரோசன் பாராட்டா வாங்கறதில்ல..மொத்தமா செய்து பிரீஸ் பண்ணிடுவேன்.

பரோட்டா செய்யும்போது ஆல் பர்ப்பஸ் மாவு யூஸ் பண்ணறதுக்கு பதிலா இண்டியன் ஸ்டோர்ல கிடைக்கும் 'மைதா மாவு' யூஸ் பண்ணினால் பரோட்டா ஸாஃப்ட்டா இருக்கு..ஆல் பர்ப்பஸ் ப்ளோர்ல செஞ்சா கொஞ்சம் ரப்பர் மாதிரி ஆயிடுது..இது ஒரு இணைய தளத்துல பாத்த டிப்ஸ்..ரெண்டு மாவுலயும் செய்து பார்த்தப்போ நல்லாவே வித்யாசம் தெரியுது. ஸோ, வெளிநாடுகள்ள இருக்கறவங்க நம்ம ஊர் கடைல கிடைக்கும் மாவுல ட்ரை பண்ணுங்க.

இது கடந்த முறை ஆல் பர்ப்பஸ் மாவுல செய்த பரோட்டா..



இந்த முறை திருமதி. அப்சரா அவர்கள் கொடுத்திருந்த ரெசிப்பியைப் பார்த்து, மைதா மாவுல செய்தேன்..அவங்க சொல்லியிருந்த அளவுக்கு பேக்கிங் பவுடர் சேர்க்க பயம்ம்மா :) இருந்ததால, அரை ஸ்பூன்தான் சேர்த்தேன்.பரோட்டா சூப்பரா வந்தது!! என் கணவர் எனக்கு 'பரோட்டா மாஸ்டர்'னு பட்டமே குடுத்துட்டார் போங்க. :D


அப்சரா,ஈசியான ரெசிப்பி தந்ததற்கு நன்றிங்க! :)

Tuesday, March 23, 2010

சேனை கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்
சேனைகிழங்கு - 350கிராம்
அரைக்க
தேங்காய் - கால் மூடி
பூண்டு -3பல்
பட்டை,பிரிஞ்சி இலை - சிறிது
கிராம்பு - 2 (சிறியது)
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
தனியா - 1ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் -2ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
சர்க்கரை -1/2ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை - சிறிது

செய்முறை
சேனைக் கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை
கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைய அரைத்துவைக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளித்து அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சர்க்கரை சேர்த்து வேக வைத்த கிழங்கையும் சேர்த்து பிரட்டிவிடவும்.
மிதமான சூட்டில் மசாலாவின் தண்ணீர் சுண்டும்வரை கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான சேனைக் கிழங்கு வறுவல் ரெடி.

Sunday, March 21, 2010

என்னைக் கவர்ந்த பத்து பெண்கள்

என்னைக் கவர்ந்த பத்து பெண்கள்..மகளிர் தினத்தின் ஸ்பெஷல் தொடர்பதிவாக துவங்கி சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டிருக்கிறது..ஒவ்வொருவருக்கும் தன்னைப் பெற்று வளர்த்த தாயிலிருந்துதான் உலகமே தொடங்குகிறது.என் தாயும், என் மூத்த சகோதரியும் எனக்குப் பிடித்த பெண்கள் பட்டியலில் முதலிடம் பெறுவார்கள். ஆனால் உறவினர்கள் இந்த லிஸ்ட்ல வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தத் தொடர் பதிவு வந்திருக்கு..எனவே அவர்களை எண்ணிக்கையில் சேர்க்காமல் என்னைக் கவர்ந்த பத்து பெண்கள் பட்டியல்..இப்போதைக்கு நினைவிற்கு வரும் பெண்மணிகள் இவர்கள்..நிறையப் பேர் இந்தப் பதிவை எழுதிட்டாங்க, அவர்கள் பதிவில் வந்தவர்கள் என் பதிவிலும் ரிபீட் ஆகக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எழுதிருக்கேன்..ஹேப்பி ரீடிங்! :)



கோனியம்மன்
இவங்க எங்க ஊர்ல பிரசித்தமான பெண் தெய்வம்..கோவை மாநகரின் காவல் தெய்வம் என்பது மருவி கோனியம்மன்னு பெயர் வந்திருக்குன்னு சொல்லுவாங்க.இந்த அன்னையின் முகத்தைப் பாத்தாலே மெய் மறந்துபோகும்.கோனியம்மன் மட்டுமில்லாமல், எங்கள் கல்லூரியில் இருக்கும் நிர்மலமாதா, அருகிலேயே புலியகுளம் புனித அந்தோணியார் கோயில் மேரி மாதா உட்பட எல்லாப் பெண் தெய்வங்களையும் எனக்குப் பிடிக்கும்.

டெய்சி டீச்சர், சிஸ்டர் லிண்டா
டெய்சி டீச்சர்..நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கையில் என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை.. என் வயதிலேயே அவர்களுக்கும் ஒரு மகன்.என்னையும் தன் மகள் போலவே ஸ்பெஷல் அன்புடன் நடத்தியவர்..வருடங்களாகியும் இன்னும் நினைவில் நிற்கும் ஆசிரியை.
சிஸ்டர் லிண்டா..நான் பி.எஸ்.சி. படிக்கையில் தமிழ் போதித்த சகோதரி..மிகவும் பொறுமையான குணம்..அவர் விளக்கம் தரத்தர அத்தனையையும் கட- கடவென குறிப்பெடுத்துக் கொண்டது நினைவு வருகிறது.

சிவகாமியின் சபதம் சிவகாமி

கல்கியின் இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்து முடித்தவுடன் எனக்குள் எழுந்த கேள்வி சிவகாமி எடுத்த முடிவு சரியா இல்லையா என்பதுதான்..புலிகேசி சிவகாமியை சிறை வைத்திருக்கும் மாளிகைக்கு வரும் மாமல்லர் சிவகாமியைத் தன்னுடன் வந்துவிடுமாறு கேட்கையில், 'இப்படி ஒளிந்து வரமாட்டேன்..உலகறிய படை திரட்டி வந்து என்னைச் சிறை எடுத்தவனை அழித்து என்னை சிறை மீட்டுப் போ' என்று கூறிய சிவகாமியின் சுய மரியாதை என்னைக் கவர்ந்த ஒன்று. ஆனால் ஒருத்திக்காக இரு நாடுகள் போரிட்டு பலர் உயிரிழந்து, சிவகாமி விடுதலையாகி இறைவனுக்கு தொண்டு புரியப் போகையில், அவளது சுயமரியாதையின் விலை மிக அதிகமோ என்றும் தோன்றுகிறது!!


ரமணி
சந்திரன்

இவரது நாவல்கள்ள நான் முதல் முதலில் படித்த நாவல் 'மயங்குகிறாள் ஒரு மாது' ..விவரம் தெரியாத வயதிலேயே ரொம்ப பிடித்த எழுத்தாளரா மாறிட்டாங்க..இப்பல்லாம் இவரது கதைகளைப் படிக்கும்பொழுது கொஞ்சம் காமெடியா இருந்தாலும், இன்னும் இவங்க எழுத்துகள்ள எனக்கு இருக்கும் மயக்கம் முழுவதும் தெளியவில்லை. எல்லாக் கதைகளையும் சுபமாகவே முடிப்பாங்க.

டாக்டர்.ஜெயா ஸ்ரீதர்
எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி பரவ ஆரம்பித்த புதிதில் ஜூனியர் விகடன்ல "எய்ட்ஸ் எரிமலை" என்ற தொடரை எழுதியவர்..இப்பொழுதும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சேவை செய்துவருகிறார். நடிகர் ஜெமினி கணேசனின் மகள். நினைவெல்லாம் நித்யா என்ற படத்தில் ஹீரோயினா நடிச்சிருக்காங்க.

எல்லன் டி ஜெனரஸ்
இவர் ஒரு காமெடியன்,நடிகை, டிவில டாக் ஷோ நடத்துபவர். பைண்டிங் நீமோ படத்துல டோரி என்ற பெண் மீன் கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்திருக்காங்க...2007 -ஆம் வருட ஆஸ்கர் அவார்ட் விழாவைத் தொகுத்து வழங்கியிருக்காங்க..இந்த வருடம் அமெரிக்கன் ஐடல்- நடுவர்கள்ள ஒருத்தர்.எனக்கு இவரது காமெடி டாக் ஷோ மிகவும் பிடிக்கும்.


பின்னணிப்
பாடகி சித்ரா

கேரளாவிலிருந்து தமிழ்த் திரையுலகிற்கு பறந்து வந்த சின்னக்குயில்..இவரது சிரித்த முகமும்,இனிமையான குரலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சிம்ரன்
தமிழ்த் திரையுலகில் பிடித்த நடிகைகள் பலர் இருந்தாலும், இப்ப,இந்த நிமிஷம் நினைவுக்கு வரது இவர்தான். :)

தன்னம்பிக்கை பெண்கள்
வாழ்க்கையில் வரும் சிறு சிறு பிரச்சனைகள் முதல் எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ,உடைந்து போகாமல், இன்னொருவரை எதிர்பார்க்காமல்,பிறருக்கு கஷ்டங்கள் தராமல், நலிந்தோருக்கு உதவி புரிந்து, ஒரு முறை வாழக் கிடைத்த வாழ்வை அர்த்தமுள்ளதாய் வாழ்ந்து முடித்த,வாழ்ந்து கொண்டிருக்கின்ற,வாழப்போகும் அனைத்து தன்னம்பிக்கைப் பெண்களையும் எனக்குப் பிடிக்கும். இவர்களை பத்து பெண்கள் என்று சிறிய எண்ணிக்கையில் அடக்க முடியாது..ஏனென்றால் உலகெங்கும் கோடிக்கணக்கில் இவர்கள் இருக்கிறார்கள்..சிலர் பிரபலங்களாக,பலர் குடத்திலிட்ட விளக்குகளாக...

இந்தத் தொடர் பதிவு எழுதும்படி என்னை அன்புடன் அழைத்த தோழி விஜிக்கு என் நன்றிகள். தொடர் பதிவைத் தொடருங்கள் என்று நான் அழைப்பது..
திருமதி.ஆசியா உமர்

Friday, March 19, 2010

என் கிச்சனில் நுழைந்த எலி..


போன வாரம் பாட்லக்ல இவர் கொலீக் மனைவி ஒருத்தங்க நான்வெஜ் கொண்டுவந்திருந்தாங்க..(எங்க வீட்டுல நான் வெஜ்...இவர் நான்வெஜ்) அன்னிக்கு மட்டன் கிரேவிய ரொம்ப ரசித்து ருசித்து சாப்பிட்டு, அதோட கான்சிக்வென்ஸா இந்த வாரம் லேம்ப் வாங்கிட்டு வந்து அதே மாதிரி மட்டன் கிரேவி செய்யப்போறேன்னு எலி ரெடியாச்சு. மட்டனை மேரினேட் பண்ணி வைக்கப் போறேன்னு கைக்கு கிடைச்சதெல்லாம் எடுத்து ஒரு பவுல்ல போட்டப்புறம், திடீர் ஞானோதயம்..'நான் அந்தக்காக்கு போன் பண்ணி, எப்படி செஞ்சாங்கன்னு ரெசிப்பி கேட்டு அதே போல செய்யறேன்'-னு!! அந்தக்கா சொன்னது,
மசாலா அப்பப்ப ரெடி பண்ணிப்பேன்..நான்வெஜ்-க்கு தயிர் எப்பவுமே சேர்க்கமாட்டேன்..மசாலாக்கு லவங்கம்,ஏலக்காய்,பட்டை,கிராம்பு எல்லாம் சின்ன கிரைண்டர்ல அரைச்சுக்கணும்..வெங்காயம் தாளிச்சு,ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி மட்டன்,உப்பு சேர்த்து அரை மணி நேரம் வதக்கி, அப்புறம் தண்ணி ஊத்தி வேக வைப்பேன்.
[நான் வெஜ் சாப்பிடறவங்க யாருக்கும் இந்த ரெசிப்பி யூஸ் ஆகுமேன்னு,விலாவாரியா சொல்லிருக்கேன்...செஞ்சு பாத்து சொல்லுங்க]
போன்ல பேசினது இவரேதான்..என்னை பேசவே விடல்ல..அந்தக்கா தெலுங்குகாரங்க, ஸோ எல்லா கான்வர்செஷனுமே இங்கிலிஷ்ல..பேசி முடிச்சிட்டு ஓகே,ஓகே-ன்னு சொல்லி போன்-ஐ கட் பண்ணிட்டார்..என்னங்க சொன்னாங்க?ன்னு கேட்டா ஙே-ன்னு
முழிக்கிறாரு! எ.கொ.ச.இ? ரேஞ்சுல கொஞ்சம் உலுக்கி இந்த உலகத்துக்கு கோண்டு
வந்து சொல்ல வைத்த ரெசிப்பிதான் மேல சொல்லிருப்பது.

பொதுவா எங்களுக்குள்ள என்ன ஒப்பந்தம்னா அவர் சமைக்கும்போது நான் கிச்சன்ல
நுழைய மாட்டேன்.( கிச்சன்ல அவர் பண்ணற அலப்பரைய பாத்து எனக்கு
பி.பி.எகிறிடும்..அதனால இந்த ஒப்பந்தம்!!)

இவருக்கு லவங்கம்னா என்னன்னு தெரில..சின்னமன் ஸ்டிக்னா என்னன்னு
தெரில..அதெல்லாம் எடுத்துக் கொடுத்துட்டு வந்துட்டேன்..மசாலா கூட
பச்சை மிளகாய்,புதினா இதையும் சேர்த்து அரைச்சிட்டார். அதுல தண்ணி ஊத்தி
அரைக்கனுமா,ஊத்தாம ட்ரையா அரைக்கனுமான்னு பத்து நிமிஷம் குழப்பம்.ஒரு
வழியா மசாலா அரைச்சாச்சு.

வெங்காயம், பொடியா(அநியாயத்துக்கு பொடியா இருந்தது!) நறுக்கி குக்கர்லையே வதக்கினார்..இவர் எப்படி அரைமணி நேரம் பொறுமையா மட்டனை வதக்கப் போறாருன்னு
நானும் ஆர்வமா வேடிக்கை பாத்துட்டு இருந்தேன். பத்து நிமிஷம் வதக்கறதுக்குள்ளயே
பொறுமை போயிடுச்சு..நான் போயி இன்னொரு அஞ்சு நிமிஷம் வதக்கிருப்பேன், நீ ஹாலுக்குப் போன்னு என்ன துரத்திட்டார். அதை கொதிக்க வைச்சு தண்ணியெல்லாம் கொஞ்சம் சுண்டவைச்சு...

மட்டன் கிரேவி ரெடி!! அந்தக்கா கொண்டு வந்த அதே கலர்,அதே டேஸ்ட்..இவருக்கு ஒரே குஷியாயிடுச்சு..அவங்களுக்கும் கொண்டுபோய் குடுத்துட்டு வந்திருக்கார்.
இதுல இன்னொரு காமெடி என்னாச்சுன்னா,மேரினேட் பண்ணப்போறேன்னு இவர் எடுத்து வைச்ச திங்க்ஸ்.அத என்ன செய்யறதுன்னு தெரில.

தயிரு
,உப்பு,மிளகாப்பொடி,மஞ்சப்பொடி,மிளகு,சீரகம்,தனியா,சோம்பு-இப்படி கையில அகப்பட்டது எல்லாத்தையும் பவுல்ல போட்டு வைச்சிருந்தார்.அத்தனையும் வேஸ்ட் பண்ண எனக்கு மனசு வரல.அப்பத்தான் வாங்கிவந்த பிரெஷ் ப்ரோக்கலி இருந்தது,அதை எடுத்து இந்த மேரினேஷன்ல புரட்டி ஒன் அவர் ஊறவைச்சுட்டேன்.
அப்புறம் கடுகு தாளிச்சு, ஊறவைச்ச ப்ரோக்கலி சேர்த்து கொஞ்சம் வதக்கி கொஞ்சம் தண்ணி ஊத்தி வேக வைச்சேன்..காய் வெந்தப்புறம் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிரேவி நல்லா ட்ரை ஆகறவரை லோ ஹீட்ல ப்ரை பண்ணி, கொத்துமல்லி இலை தூவி இறக்கினா..சூப்பர் டேஸ்ட்ல ப்ரோக்கலி ரெடி!


சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சூப்பரா இருந்தது. ஆகமொத்தம், ஒரே பதிவுல ரெண்டு ரெசிப்பி குடுத்துட்டேன்..செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

Wednesday, March 17, 2010

தக்காளி சட்னி


தேவையான பொருட்கள்
தக்காளி-4
வெங்காயம் -பாதி
பச்சை மிளகாய்-2
மிளகாய்த்தூள் -1ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
சீரகம்-1/2ஸ்பூன்
சர்க்கரை -1/2ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி -சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை
தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு சீரகம் தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஓரிரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் 1 1/2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து சட்னி பதம் வந்ததும் சர்க்கரை சேர்த்து இறக்கி கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.
இந்த சட்னி கோதுமை தோசையுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இட்லி,தோசைக்கும் நன்றாக இருக்கும்.

Tuesday, March 16, 2010

வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ்

தேவையான பொருட்கள்
பஃப் பேஸ்ட்ரி ஷீட் -2
கேரட் - 2
பீன்ஸ் -10
உருளைகிழங்கு - 1
ப்ரோஸன் பச்சைப் பட்டாணி -1/4கப்
மிளகாய்த்தூள் -1 1/2ஸ்பூன்
மல்லித்தூள் -1ஸ்பூன்
சீரகத்தூள் -1/2ஸ்பூன்
சோம்புத்தூள் -1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது -2ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
கொத்துமல்லி இலை -சிறிது
சீரகம் - 3/4ஸ்பூன்
எண்ணெய் -1ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
உப்பு
முட்டை -1




















செய்முறை


கேரட்,பீன்ஸ்,உருளைக் கிழங்கு,பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

பேஸ்ட்ரி ஷீட்டை முக்கால் மணி நேரம் முன்பாக பிரீசரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.


குக்கரில் நறுக்கிய காய்கறிகள்,பட்டாணி,பச்சைமிளகாய்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள், மஞ்சள்தூள்,சர்க்கரை,உப்பு சேர்த்து முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைக்கவும்.பிரெஸ்சர் அடங்கியதும் குக்கரைத் திறந்து காய்களை மசித்து வைக்கவும்.

எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து மசித்த கலவையை சேர்த்து தண்ணீர் வற்றும்வரை கிளறவும்.இறுதியாக கொத்துமல்லி இலை தூவி இறக்கி ஆறவைக்கவும்.

மாவு தூவி பேஸ்ட்ரி ஷீட்-ஐ சதுரமாகத் தேய்த்துக் கொள்ளவும்.காய்கறி கலவையை பேஸ்ட்ரி ஷீட்டில் வைத்து (நான்கு ஓரங்களிலும் ஒரு இன்ச் இடம் விட்டு) சமமாகப் பரப்பவும்.


பேஸ்ட்ரி ஷீட்டை ஒரு முனையிலிருந்து இறுக்கமாகச் சுற்றவும். ஷீட்டின் இறுதியில் சிறிது தண்ணீர் தடவி ஒட்டவும்.


ரோல் செய்த பேஸ்ட்ரி ஷீட்டை கிளியர் ராப் பேப்பரில் வைத்து சுற்றி பதினைந்து நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்.
முட்டையை உடைத்து ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிவைக்கவும்.
பேஸ்ட்ரி ரோல்-ஐ பிரீசரில் இருந்து எடுத்து முட்டையை ரோல் முழுவதும் தடவவும்.

பின்னர் கத்தியால் வேண்டிய வடிவத்தில் நறுக்கி
பேக்கிங் ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும்.

350F ப்ரீ ஹீட் செய்த அவன்-ல் வைத்து பேக் செய்யவும்.
பத்து நிமிடம் கழித்து ட்ரேயை எடுத்து பேஸ்ட்ரி வீல்களை திருப்பி அடுக்கி மீண்டும் பத்து நிமிடம் பேக் செய்யவும்.டேஸ்ட்டி வெஜ் பேஸ்ட்ரி வீல் ரெடி!


குறிப்பு
முட்டை விரும்பாதவர்கள் எக்வாஷ்-க்கு பதிலாக சிறிது வெண்ணையை உருக்கி ரோல் மீது தடவி பேக் செய்யலாம்.
பேஸ்ட்ரி ரோலை எக் வாஷ் கொடுத்து நறுக்குவதை விட, நறுக்கிய பின்னர் எக் வாஷ் செய்தால் ஈசியாக இருக்கும்.
ஸ் டஃபிங் அவரவர் விருப்பபடி, வெஜ் அல்லது நான்வெஜ் கலவை வைத்துக்கொள்ளலாம். சீஸ் விரும்புவோர் சீஸ் வைத்தும் பேக் செய்யலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails