Friday, July 27, 2012

Hi there!

படத்தில இருக்க குருவியேதான் பேசறேன்..எப்படி இருக்கீங்க எல்லாரும்? நலம்தானே? நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். குருவிக்கு எப்படி பேசத்தெரியும்னு யோசிக்காதீங்க. நான் பாதிநாள் மகி அக்கா வீட்டு மாடியிலதான் குடியிருப்பேன். அவிங்க எங்களோட பேசிப் பேசிப் பேசிப் பேசி...எங்களையும் உங்களோட பேச வைச்சுட்டாங்க. ;)

ஒரு நாள் காலையில்..சுத்தபத்தமா;) குளிச்சு முழுகி...டென்னிஸ் விளையாடப் போலாமா, இல்ல துணி துவைக்கப் போலாமா, சறுக்கு விளையாடலாமா, ஜிம்மி-யக் கூட்டிட்டு வாக் போலாமான்னு யோசிச்சுட்டே இருந்தேன்.

..இருங்க, ஏதோ சத்தம் கேட்குது! அதோ...அந்தப் பக்கம்தான் மகிஅக்கா வீடு இருக்குது, அக்காதான் வாறாங்கனு நினைக்கிறேன்.
ஆஹா...டென்னிஸ் விளையாட இன்னொரு கை சேர்ந்துருச்சுன்னு உற்சாகமா டென்னிஸ் கோர்ட் பக்கமா போய் உட்கார்ந்துகிட்டேன்.

அக்கா வரதுக்குள்ள டென்னிஸ் கோர்ட் ரூல்ஸ் எல்லாம் படிச்சு விரல் நுனியில வைச்சுக்கலாம்னு எல்லா ரூல்ஸையும் ஒன் பை ஒன்னா கவனமா படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம்தான் காமெடியே ஆரம்பிச்சுது.

அக்கா வந்தாங்க, ஆனா அக்காவுக்கும் டென்னிஸுக்கும் பலகாத தூரம் இடைவெளியாம். டென்னிஸ் ராக்கெட்லாம் எனக்குப் பிடிக்காது, ஸ்பேஸ் ராக்கெட்தான் புடிக்கும் அப்படினு பந்தா பண்ணிகிட்டாங்க. ஹிக்,ஹிக்,ஹிக்!! [விக்கல் இல்லீங்க, இது எங்க சிரிப்பு! ஹிக்,ஹிக்,ஹிக்! :) ]

அக்காவைப் பார்க்கற அவசரத்தில குளிச்சு முழுகி, டர்க்கி டவல்-ல சரியா உடம்பு துவட்டிக்காம ஓடியாந்திட்டேன். வெயில் வேற கொளுத்துச்சா, அப்படியே சில்லுன்னு சொகம்ம்ம்மா இருந்துச்சு.
தென்றல் காற்றில் றெக்கை காய்ஞ்சிருச்சா...தலை காஞ்சுருச்சா..கன்னாபின்னான்னு இல்லாம, சிறகெல்லாம் அயகா ;) படிஞ்சிருச்சா...அப்படின்னு அங்க இங்க இடம்மாறி உட்கார்ந்து உடல் உலர்த்த ஆரம்பிச்சேன்.
அக்கா அமைதியா உட்கார்ந்து என்னமோ பண்ணிகிட்டே இருந்தாங்க..நானும் அப்படியே சேர் பக்கத்தில போய் எட்டிப் பார்த்தா.... ஏதோ மும்முரமா மடிக்கிறதும், கிழிக்கிறதுமா பிஸியா இருந்தாங்க. ஐ, கலர் பேப்பர்! :) கத்தரி கொண்டுவர மறந்துட்டாங்க போலும்! ;))))) இப்படி ஒரே மாதிரியா கிழிக்கிறீங்களே? வேற வேற டிசைன்ல கிழிக்கலாமுல்ல? அப்படின்னு ஒரு கேள்வி கேட்டேன். இல்லையாம், இப்படி ஒரே சைஸிலதான் இருக்கோணுமாம்.

இது எனக்கு போரடிக்கிற வேலை, பேப்பர் ஸ்டாண்ட், பேப்பர் வெயிட்டா இருக்கற ஐட்டங்களை குடுத்தீங்கன்னா கொஞ்ச நேரம் என்ஜாய் பண்ணிக்குவேன்னு சொன்னேன், கல்லெடுத்து அடிக்கவந்திட்டாங்க. ஹாஹாஹா! இது சரிப்படாதுன்னு ஒரு பெரிய ஆலமரத்தைத் தேடிப் போனேன்..அங்க போனா, ஒரு அழகான ஜோடி காதல் அந்தாதி பாடிட்டு இருக்காங்க..அந்தாதிப் பாடல்- ஒரு வரி முடியும் வார்த்தையில் அடுத்தவரி ஆரம்பிக்கும்.

ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம், கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்..

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம், ஓசையின்றி பேசுவது ஆசையென்னும் வேதம்..

வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும், மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்..

நாடும் உள்ளம் ஓடும் எண்ணம் பேசும் மொழி மௌனம், ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்..
-இப்படியாகத் தொடரும் பாடல் முழுவதும், கவனித்திருப்பீங்க! என்னது இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்! மறுபடி கவனமாக் கேளுங்க.

ஆடிவெள்ளிக்கிழமைக்கேத்த பாட்டாப் போயிருச்சு, நீங்களும் கேளுங்க. வாய்ப்புக் கிடைச்சா, மகி அக்கா வீட்டு மாடியிலிருந்து அப்பப்ப இங்கயும் எட்டிப் பார்ப்பேன். அதுவரைக்கும், sit tight, be good, and come here regularly, okie?!
~~
நேயர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு இந்தப் பாடலும் இணைக்கப் படுகிறது. :)

Tuesday, July 24, 2012

பேப்பர் க்ராஃப்ட்ஸ் - பகுதி 1

மாடுலர் ஓரிகாமி/3D ஓரிகாமி/கோல்டன் வென்ச்சர் ஃபோல்டிங் - அறிமுகம்
ஓரிகாமி என்பது சதுரவடிவிலான காகிதத்தை பலவாறு மடித்து உருவங்கள் செய்யும் ஜப்பானில் உருவான ஒரு கலை என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். கோல்டன் வென்ச்சர் ஃபோல்டிங் [Golden Venture Folding] என்பது ஓரிகாமியில் ஒரு வகை, சீனர்களால் உருவாக்கப்பட்டது. ஒரே ஒரு சதுர வடிவ காகிதத்துக்குப் பதிலாக நூற்றுக்கணக்கான செவ்வகக் காகிதத் துண்டுகளை மடித்து, இணைத்து உருவங்கள் உருவாக்கும் மாடுலர் ஓரிகாமியின் இந்தப் பிரிவு , 3D ஓரிகாமி என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்
வண்ணக் காகிதங்கள் [A4 பேப்பர்கள் சரியான அளவாக இருக்கும், கன்ஸ்ட்ரக்ஷன் பேப்பர் என்ற பெயரில் கிடைக்கும் காகிதங்களை நான் உபயோகித்திருக்கிறேன்.]

ஒரு காகிதத்தை இரண்டாக மடிக்கவும், அதனை நான்காக, எட்டாக, பதினாறாக மடித்து ( :)))) படத்தைப் பாருங்க, ஒரு பேப்பரை மடிச்சுப் பாத்தால் சுலபமாகப் பிடிபடும். :) ) கத்தரிக் கோல் அல்லது க்ராஃப்ட் கத்தியால் பிசிறில்லாமல் நறுக்கிக் கொள்ளவும். அடுத்து முக்கோணங்கள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செவ்வகத்தை (நீளப்பக்கத்தில்) சரிபாதியாக மடிக்கவும். (1 & 2) அதனை மீண்டும் சரிபாதியாக மடிக்கவும். (3) இப்போது அதனை விரித்தால் நடுவிலிருக்கும் கோடு தெரியும், அதனை மையமாக வைத்து, பேப்பரின் இரண்டு முனைகளையும் முக்கோணங்களாக மடக்கவும். (4 & 5) மடக்கிய முக்கோணத்தை மறுபுறம் திருப்பவும்.(6) இரண்டு கால்கள்:) தெரியும், அவற்றை நுனிப்பகுதியில் உட்புறமாக மடித்து விடவும்.(7) இப்போழுது இரண்டு கால்களையும் உட்புறமாக மடிக்கவும். (8) பிறகு நடுக்கோட்டின் இரு புறமும் உள்ள முக்கோணங்களை மடிக்கவும். (9)

இந்த ஸ்டெப்ஸ் முடிந்ததும் இரண்டு pockets உள்ள ஒரு செங்கோண முக்கோணம் உங்களுக்குக் கிடைத்திருக்கும், இதாங்க ஒரு யூனிட்! பல விதமான உருவங்கள் செய்ய இது போல நூற்றுக்கணக்கான முக்கோணங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் இணைக்க வேண்டும்.

டாலர் ஷாப்பில் வாங்கியகன்ஸ்ட்ரக்ஷன் பேப்பரில் ஒவ்வொரு கலரிலும் 5 பக்கங்கள் இருந்தன, ஆக 80 முக்கோணங்கள் கிடைத்தன ஒவ்வொரு வண்ணத்திலும்!

நூறைக் கூட எட்டாத இந்த முக்கோணங்களைக் கொண்டு என்ன செய்வது?ஹ்ம்ம்ம்...முதலில் மடிப்போம், பிறகு பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன். மடித்த முக்கோணங்களை காமா-சோமான்னு போட்டு வைக்காம, ஒன்றுடன் ஒன்று இணைத்து வைத்தால் கலையாமல் நேர்த்தியாக இருக்கும் என்று...

கலர் கலராக மடித்து கோர்த்து வைச்சிருக்கேன், இவற்றைக் கொண்டு எளிய வடிவங்கள் செய்யும் முறைகளை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

*************
முக்கோணங்கள் மடிப்பது குழப்பம் போல இருந்தாலும், மிகவும் சிம்பிளான ஒன்றுதான். ஆர்வம் இருந்தால் போதுமானது. ஓய்வு நேரங்களில் மடித்து வைத்துக்கொண்டால், இணையத்தின் உதவியுடன் அழகழகான பொருட்கள் செய்யலாம். முக்கோணம் மடிப்பது பற்றிய என்னோட விளக்கம் தலைய சுத்த வைக்குதா?! ;) இந்த வீடியோவைப் பாருங்க..ரொம்ப ஈஸியான செய்முறைதான். :) இனி என்ன? முதலில் வீட்டில் இருக்கும் பழைய பேப்பர்களை வைத்து மடித்துப் பாருங்க. பிறகு வண்ணக் காகிதங்கள் வாங்க ஆட்டோமேடிக்-கா கிளம்பிருவீங்க! கோடை விடுமுறையில் இருக்கும் குட்டிப் பசங்களுக்கும் நல்லதொரு பொழுதுபோக்கா இருக்கும் இந்த பேப்பர் க்ராஃப்ட்ஸ்..
ரெடி... ஸ்டார்ட்...
ஒன், டூ, த்ரீ...
ரவா டோக்ளா சாப்டுட்டு தெம்பா பேப்பரை கிழிங்க! :)))))))
*********
பேப்பர் க்ராஃப்ட்ஸ்-பகுதி 2 : பூ ஜாடி செய்முறை காண இங்கே க்ளிக் செய்யுங்க.

Friday, July 20, 2012

உழவர் சந்தை - பகுதி 2

கடந்த பதிவில் லோக்கல் ஃபார்மர்ஸ் மார்க்கட் போக முடியவில்லை என்று சொல்லியிருந்தேன். இன்று பக்கத்திலிருக்கும் தோழி "ஃபார்மர்ஸ் மார்க்கெட் போலாமா?" என்று கேட்டு போன் பண்ணினார். பிறகென்ன..கடகடன்னு கிளம்பி, குடுகுடுன்னு :) போயிட்டு வந்துட்டோம்.

முற்பகல் 11 மணி..கொளுத்தும் வெயில்! காய்-கனி-கீரை இவற்றோடு சேர்ந்து வியாபாரிகளும் வாடி வதங்கியபடி வாடிக்கையாளர்களுக்காய் காத்திருக்கிறார்கள். கூட்டம் நிறைய என்று சொல்ல முடியாவிட்டாலும் மக்கள் இருந்தார்கள்.

கோடைக்கேற்ற பீச், ப்ளம்ஸ், ஸ்ட்ராபெரி, கேன்டலூப், தர்பூசணி என்று விதவிதமாக நிறையப் பழவகைகள் பெரும்பான்மையான கடைகளில் இருந்தன. வெள்ளரி, மக்காச்சோளமும் நிறைய கண்ணில் பட்டது.

ஃப்ரெஷ் ஹெர்ப்ஸ் செடிகள் விற்பனைக்கிருந்த இடத்தை கேமராவில் க்ளிக்க...கடைக்காரர் ஆர்வமாக(!) வந்து, 'சோளக்கொல்லை பொம்மை' போஸ் கொடுத்தார்! :))

அழகழகான மலர்கள்..சூரியகாந்தி, ரோஜா, ஜின்னியா, செவ்வந்தி என்று அணிவகுத்து நிற்கின்றன..
மார்க்கட்டின் ஒரு ஓரத்தில் கேக், ப்ரெட் வகைகள், பாதாம்-முந்திரி போன்ற நட்ஸ், பாப்கார்ன் கடைகள் என்று உணவுப் பொருட்கள் ஏரியாவாக இருந்தது. மெக்ஸிகன் சாப்பாட்டுக் கடைகள் கூட இருந்தன.
காய்கறி கடைகளில் வெள்ளரி, மக்காச் சோளம், வெங்காயம், தக்காளி, காலிஃப்ளவர், ப்ரோக்கலி, முட்டைக் கோஸ்..வெய்ட், வெய்ட்!! லிஸ்ட் போட்டுகிட்டே போனா??!! லிஸ்ட் முடியலையே..."எல்ல்ல்ல்ல்லாக் காய்கறிகள்"-னு ஒரே வார்த்தையில் சொல்லிரலாம்ல? படிக்கிற உங்களுக்கும் போரடிக்காது! ;)

ஸோ....எல்ல்ல்ல்ல்ல்லாக் காய்கறிகள், ஃப்ரெஷ் பேஸில், கொத்துமல்லி, kale, என்று நிறைய இருந்தன. ஒரே ஒரு கடையில் மட்டுமே வெண்டைக்காய், பீர்க்கங்காய், பாகற்காய் இருந்தன. கத்தரியில் ஒரு வித்யாசமான வகையும், குட்டிப் பாகற்காயும் என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணிருச்சு! :)
காய்களை எடுத்துக்கொண்டு தராசுக்குப் பக்கத்தில் வந்தால்...முருங்கைக் கீரை அழகா pack பண்ணி வைச்சிருந்தாங்க..அதையும் எடுத்தாச்சு! மேலே உள்ளது மார்க்கட்டில் உள்ள காய்களின் படங்கள்..கீழுள்ளது வீட்டுக்கு வந்த காய்களின் படங்கள்..
எப்படி இருக்குங்க எங்கூர் மார்க்கட்?! :))))))

ஷாப்பிங் போயாச்சு..வெயிலுக்கு இதம்மா, சில்லுன்னு பழங்கள்..

சிறு துண்டுகளாக நறுக்கிய peach/plums/ peach+plums இரண்டும் சேர்ந்த மிக்ஸ் பழங்கள் வித் டூத்பிக்..அப்படியே ஸ்டைலா எடுத்துச் சாப்பிடுங்கோ! :))

ஹேவ் எ நைஸ் வீகென்ட் எவ்ரிபடி!

Tuesday, July 17, 2012

உழவர் சந்தை


இந்த முறை உங்களை எல்லாம் ஒரு உழவர் சந்தைக்கு கூட்டிப்போறேன், வாங்க! வெயில் கொஞ்சம் அதிகமாய் இருக்கு, சன்ஸ்கிரீன் லோஷன் பூசி, சன் க்ளாஸஸ் எல்லாம் மறக்காம எடுத்துகிட்டு வந்துருங்க. கடைக்குள்ள போகும்வரை சூரியனிடம் இருந்து எஸ்கேப் ஆகவேணாமா?! :) :)

இங்கே உழவர் சந்தைகள் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில்/நேரத்தில் நடைபெறும். கடைகளை விட விலைகள் சற்றே அதிகமாய் இருந்தாலும் காய்கறி-பழங்கள்- கீரை வகைகள் எல்லாமே ப்ரெஷ்ஷாக இருக்கும். இடைத்தரகர் இல்லாமல், டாக்ஸ் இல்லாமல் விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கும். :) சித்ரா சுந்தர் அடிக்கடி ஃபார்மர்ஸ் மார்க்கெட் போய்வந்து, படங்களைக் காட்டி டெம்ப்ட் பண்ணி விட்டுட்டே இருக்காங்க! :) கூகுளாண்டவரிடம் விசாரித்தபோது, எங்கூர் மார்க்கெட் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் 1 மணிவரை என்று தகவல் தந்தார். வார இறுதி என்றால் சந்தைக்குப் போக வாய்ப்புக் கிடைக்கும், வெள்ளிக் கிழமை எங்கே போக என்று விட்டாச்சு.

இப்படி இருக்க ஒருநாள் சனிக்கிழமை சப்-வே சென்று ஒரு சாண்ட்விச் வாங்கிச் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது, பக்கத்துக் கடை இந்த "Sprouts Farmers Market"! பொதுவாக உழவர் சந்தை என்றால் திறந்த வெளியில், டென்ட் போட்டு கடைகள் வைத்த சந்தைகள் போலதான் இருக்கும், ஆனால் ஸ்ப்ரௌட்ஸ் அப்படி இருக்காது என்பதால் நான் அதை ஃபார்மர்ஸ் மார்க்கட் ஆகவே கன்ஸிடர் பண்ணவில்லை, போகவேண்டும் என்று நினைத்ததும் இல்லை. அன்று என்ன தோன்றியதோ, உள்ளே நுழைந்துவிட்டோம்.

காய்கறிகள்-பழங்கள் பகுதி பெரிதாக என்னைக் கவரவில்லை, எல்லாம் வழக்கம் போலவேதான் இருந்தது. அசுவாரஸ்யமாய் நடந்து கொண்டிருக்கையில் என்னவரின் உற்சாகக் குரல் என்னை அழைத்தது. என்னன்னு பார்த்தால்...!!

பொருட்கள் எல்லாம் பெரிய பெரிய பேரல்களில் கொட்டி வைத்திருக்கிறார்கள். நமக்குத் தேவையான அளவு கவரில் எடுத்துப் போட்டுக்கலாம். ஆங்காங்கே எடை போட தராசுகளும், ப்ளாஸ்டிக் கவர்களும், அவற்றை சீல் செய்ய காகிதங்களும் இருந்தன. கவரில் பொருட்களைப் எடுத்து, சீல் செய்ததும், அருகிலேயே இருக்கும் பேனாவை எடுத்து அந்தப் பொருளின் code number-ஐ மறக்காம எழுதிக்கணும். அதைப் பார்த்து பில் போட்டு தந்துவிடுகிறார்கள்.

ஓட்ஸில் பலவகைகள், தானியங்களில் பல வகைகள், கார்ன் மீல், மாங்காயில் இனிப்பு-காரம் சேர்த்து ப்ரிஸர்வ் செய்தது, தேங்காய், மெக்ஸிகன் கடலை, அரிசியில் பலவகைகள்...இப்படி பலப்பல பொருட்கள்~~ மசாலாப் பொடிகளும் விதிவிலக்கில்லை..அவற்றை தனியாக ஒரு ஷெல்ஃபில் வைத்திருந்தார்கள்.

வெளியே செடிகளும் விற்பனைக்கு இருந்தன. அதில் என்னைக் கவர்ந்தது குட்டியாய் இருந்த ஒரு பைனாப்பிள் செடி/மரம்?! தக்குணூண்டு இருந்த செடியில் அப்பவே பைனாப்பிள் பிஞ்சு தெரிந்ததுதான் ஹை லைட்டே! :)) [ஒருவேளை நான்தான் ஓவர் ஹைப் குடுக்கிறனோ!! என்னனாலும், பைனாப்பிள் செடியை என் வாழ்க்கையில் முதன் முறையா பார்த்திருக்கேன், இது கூட சொல்லலன்னா எப்பூடி!?! ;) ;)))]

மினி ரோஸ்-கார்ன் மீல்-ஸ்னாக்ஸ் என்று ஷாப்பிங்-கை முடிச்சுட்டு வந்து...கார்ன் மீல் இட்லியும் செய்து சாப்பிட்டாச்சு. யெல்லோ கார்ன் மீல்...மஞ்சள் நிற ரவை போலவே இருநதது. 3:1 என்ற ரேஷியோவில் கார்ன்மீல் : உளுந்து மற்றும் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 3-4 மணி நேரம் ஊறவைத்து (உளுந்து +வெந்தயத்தை மட்டும்) அரைச்சு, கடைசியாய் ஊறவைச்ச கார்ன் மீலையும் போட்டு 2 சுத்து விட்டு எடுத்து..
......
....
ஒரு நிமிஷம் இருங்க, மூச்சு வாங்கிக்கறேன்! :)))))))))

ஆங்...எங்க விட்டேன்??! மாவை அரைச்செடுத்து, புளிக்கவைச்சு, இட்லி சுட்டு சாப்பிடவேண்டியதுதான்! ரவா இட்லி போலவே இருந்தது.

ரெசிப்பி கர்ட்டஸி: கீதா ஆச்சல்

Thursday, July 12, 2012

வெங்காயத் தாமரை

வெங்காயத்தை நறுக்கி தட்டில் வைத்ததும் பார்க்கிறேன், தாமரை தெரிந்தது! பச்சைமிளகாயை நறுக்கி, தண்டாக வைத்துவிட்டேன்! எப்படி இருக்கு என் வெங்காயத் தாமரை? :)))

இன்னிக்கு ஒரு நார்த் இண்டியன் ஸ்டைல் மீல்... ஸ்பூன், ஃபோர்க், பவுல், ப்ளேட், நாப்கின் எல்லாம் எடுத்துக்கோங்க...ரெடி..ஸ்டெடி...
ஒன்..
டூ..
த்ரீ...!

தட்டில் ஜீரா ரைஸ் - புல்கா ரொட்டி - பக்கத்தில மட்டர் பனீர் எடுத்து வைச்சுக்குங்க. பவுல்ல, தால் எடுத்து ஊத்திக்கோங்க. அப்படியே தட்டில் இருக்கும் வெங்காயத்துண்டுகள், பச்சைமிளகாய்த் துண்டுகளும் கொஞ்சம் எடுத்துக்கோங்க. வசதியா உட்கார்ந்து சாப்பிட்டு முடிங்க. :)

புல்கா - எண்ணெயில்லாமல் செய்யப்படும் வட இந்திய ரொட்டி வகை. புல்காவை தோசைக்கல்லில் போட்டு, மறுபுறம் திருப்பி போடும்போது கேஸ் ஸ்டவ்-ல் டைரக்ட் ஆக தணலில் காட்டினால் பூரி போல உப்பி வரும். என்னிடம் எலக்ட்ரிக் ஸ்டவ் என்பதால் அதற்கு வழியில்லை. சப்பாத்தியை சீராகத் தேய்த்து, காய்ந்த தோசைக்கல்ல போட்டு, சில விநாடிகளில் திருப்பி விட்டு..பேப்பர் டவலால் மென்மையாக அழுத்திவிட்டால்...

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று பொங்கிவரும் புல்கா ரொட்டி! :)
அடுத்து
ஹோம் மேட் பனீரில் செய்த மட்டர் பனீர்..
பொதுவாக வட இந்திய உணவு வகைகளுடன் இப்படி வெங்காயம் - பச்சைமிளகாய் பரிமாறப் படுவதுண்டு. நான் அதிகம் சாப்பிடமாட்டேன், ஆனால் என்னவர் உணவகங்களுக்கு போகையில் இதை கேட்டு வாங்கி சாப்பிடுவார். அதனால் இப்பொழுது வீட்டிலும் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

பச்சை மிளகாயை விதையை நீக்கிவிட்டு மெல்லியதாக நறுக்கி, வெங்காயத்தையும் நீளமாக நறுக்கி, கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு, ரொட்டி-தால் சாப்பிடும்போது இடையில் ஒரு வாய் இதையும் கடிச்சுகிட்டா.. யம்,யம்!! :) ;)

டிஸர்ட்டுக்கு பசும்பால் சேர்த்து ஏலக்காய் வாசனையுடன் கூடிய கடல்பாசி! டபுள் கலர் போட்டு டபுள் டக்கர் பஸ் மாதிரி டூயல் கலர் அகர்-அகர்~~ ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்! :)
~~
இது கோயம்புத்தூரில் பூத்த மூக்குத்திப் பூ,வெட்டுக்காயப் பூடு...கள்ளிப் பூட்டாந் தழை.. தாத்தா தாத்தா காசு குடு பூ!!

சம்பந்தமே இல்லாம சாப்பாட்டுக் கூட இந்தச் செடியும் பூவும் எதுக்கு என நீங்க யோசிக்கலாம்..என் மொக்கையப் பொறுக்க முடியாம உங்க தலைய பக்கத்தில இருக்க சுவரில்/டேபிளில் மோதி உங்களுக்கு இப்ப வெட்டுக்காயம் ஆகலாம், அல்லது முன் எப்பவாவது ஆகியிருக்கலாம், அல்லது எதிர்காலத்தில் ஆகக் கூடும்! எப்படியாப்பட்ட வெட்டுக் காயம்னாலும் இந்த கள்ளிப்பூட்டாந் தழையை கசக்கி சாறு பிழிந்தால் காயம் விரைவில் ஆறிவிடும். அதனால அனைவருக்கும் பயன் தரும் வகையில் இந்தப் படம் இங்கே வந்திருக்கிறது. எப்பவுமே மக்களுக்கு உபயோகமான பதிவாப் போடவேண்டும் என்பதே என் லட்சியம்! :)))))) [ஆஆஆஆவ்...என்னது இது? டுமீல்...டமார்! அவுச்ச்ச்ச்ச்! $$$$&&!!***###....
ஜோடா பாட்டில் பறந்து வருது?!! ஸ்பீச் முடிஞ்சதும் ஜோடாவை பதமா ஒடச்சு அயகா கையில் குடுக்கோணும், இப்பூடி விட்டெறியப் படாது! ;)]

நீளமான காம்புள்ள இந்தக் கள்ளிப்பூட்டாஞ்செடிப் பூவினை சின்னப்பசங்க பாட்டுப் பாடியவாறே, வெடுக்வெடுக்-னு பிடுங்கிப் போடுவாங்க. :) ஸோ...வெட்டுக்காயம் எதுவும் ஆகலன்னா, நீங்களும் இந்தப் பூவை ரசிங்க..குழந்தைத்தனமான மனமிருந்தா..
" தாத்தா...தாத்தா...காசு குடு!
குடுக்க மாட்டேன்.
குடுக்கலன்னா தலய வெட்டுவேன்! "
என்று பாடியவாறே பூவைப் பிச்சுப் போடுங்க. ;) கொஞ்சநாட்கள் முன் ஏஞ்சல் அக்கா ப்ளாகில் இது பற்றி பார்த்ததும், கடந்த ட்ரிப்பில் நான் போட்டோ எடுத்து வந்தது நினைவில் வந்து இங்கே போஸ்ட் பண்ணிட்டேன். :)

Sunday, July 8, 2012

ஃபனல் கேக்கும், பட்டாசும்!

ஜூலை 4 -ஆம் தேதி வந்த (அமெரிக்க) சுதந்திரதினத்தை ஒட்டிய பதிவு இது என்று தலைப்பைப் பார்த்தே கண்டுபிடிச்சிருப்பீங்க! :))) ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் இங்கே ஒவ்வொரு சிட்டியிலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வருஷாவருஷம் fair நடக்கும். ரெண்டு-மூணு சாலைகளை மறித்து, சாலைகள் முழுக்க கடை-கண்ணி, குழந்தைகள் விளையாடும் ride-கள் இப்படி ஜேஜேன்னு நம்ம ஊர் திருவிழா போல இருக்கும். பகல் முழுக்க அலைமோதும் மக்கள் கூட்டம், சூரியன் மறைந்ததும் நடக்கும் ஃபயர்வொர்க்ஸ்-ஐயும் பார்த்துவிட்டு கிளம்புவாங்க.

இந்த வருஷம் எங்க ஊர்த் திருவிழாவுக்கு(!) செல்கையில் கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. 9 மணிக்கு ஃபயர்வொர்க்ஸ் என்று சொல்லியிருந்தாங்க, நாங்க கரீக்ட்டா 8.30க்கு போனோம், அதிர்ஷ்டவசமாக பார்க்கிங் சீக்கிரம் கிடைத்தது. [இல்லைன்னா, fair நடக்கும் இடத்திலிருந்து ஒரு மைல் ரெண்டுமைல் தள்ளிதான் பார்க் பண்ண இடம் கிடைக்கும், அவ்வ்வ்! ] கூட்டத்துக்குள் மெல்ல ஊடுருவி, நீந்தி கடைகளை பார்த்துக்கொண்டே சென்று டார்கெட்டை அடைந்துவிட்டோம். ;) வெனிஸ் பீச் பதிவில ஃபனல் கேக் பத்தி சொல்லிருந்தேன், இந்த முறையும் fair-ல ஃபனல் கேக் சாப்பிடவேண்டும் என்று ப்ளான் பண்ணிதானே கிளம்பினதே! ;))

கடையில் கேக்குக்கு காசுகுடுத்து டோக்கன் வாங்க ஒரு கியூ, டோக்கனை குடுத்து கேக்கை வாங்க ஒரு கியூ என இரண்டு வரிசை. டோக்கன் வாங்க காத்திருந்த நேரத்தில், சைக்கிள் கேப்ல கேக் சுடுவதையும் முடிந்த அளவு கேமராவில் சுட்டுட்டேன்! :)

ஒருவர் ஃபனல் கேக்கை கொதிக்கும் எண்ணெயில் ஊற்ற, நிமிஷமாய் வெந்துவிடுகிறது. இன்னொரு ஆள், கேக்கைத் திருப்பிவிட்டு, எண்ணெயிலிருந்து எடுத்து பேப்பர் தட்டில் வைக்கிறார். அதை கவுன்ட்டருக்கு கொண்டுவந்து பவுடர் சுகர் தூவி, மேலே விரும்பிய டாப்பிங்-ஐ வைச்சு குடுக்கறாங்க!

ராஸ்பெரி, சாக்லேட், ஸ்ட்ராபெரி..கூடவே விப்ட் க்ரீப் [whipped cream] என்று விதவிதமா டாப்பிங்க்ஸ் இருந்தது. ப்ளெய்ன் ஃபனல் கேக்கையே சூடு ஆறும் முன் சாப்பிடாவிட்டால் திகட்டும், இதில டாப்பிங் வேறயா?! நாங்க ப்ளெய்ன்-தான் வாங்கினோம்.

கேக்கை பிச்சு பிச்சு;) ருசித்தவாறே, பல கடைகள், ம்யூஸிக் கார்னிவல், பாப் கார்ன் கடை, நம்ம ஊர் ஊதுபத்தி - வாசனைப் பொருட்கள் கடை என்று பலகடைகளையும், வெள்ளை-கருப்பு-ப்ரவுன் நிற மக்கள் கூட்டத்தையும் கடந்து ஃபயர்வொர்க்ஸ் நடக்கும் இடத்தை அடைந்தோம்.

நம்ம ஊரில் தீபாவளிக்கு பட்டாசு களைகட்டும், மீதமானதை கார்த்திகை தீபத்தில் தீர்ப்பாங்க. கிரிக்கெட் மேட்சில் ஜெயிச்சா பட்டாசு...அரசியல் தலைவர்கள் பிறந்தநாளுக்கும் பட்டாசு, சிறையிலிருந்து விடுதலையானாலும் பட்டாசு என்று நினைத்தபோதெல்லாம் பட்டாசு வைக்கலாம். இங்க அப்படி இல்லை, வருஷத்திற்கு இரண்டுமுறைகள்[நியூ இயர் & இண்டிபென்டன்ஸ் டே] மட்டுமே பட்டாசுகளுக்கு அனுமதி.

விரும்பியபடி லட்சுமி வெடி, ஓலைவெடி, பாம்புவெடி, அணுகுண்டு எல்லாம் வாங்கி கொளுத்த முடியாது. வீடுகளில் விற்கவென்று ஸ்பெஷலா(!) இருக்கும் சாதா-சோதா;) பட்டாசுகள் மட்டுமே வாங்கமுடியும். மற்றபடி ஒவ்வொரு சிறு நகரத்திலும் அரசாங்கமே ஃபயர்வொர்க்ஸ்-ஐ நடத்தும். தீயணைப்பு வண்டிகள், முதலுதவிக் குழு, காவல்துறை இப்படி எல்லாவற்றையும் பக்காவா அரேஞ்ச் பண்ணி, மைதானங்களில் ஒரு 20 நிமிஷம் பட்டாசுகள் கொளுத்துவாங்க.

ஃபயர் வொர்க்ஸ் முடிந்ததும் மக்கள் கூட்டம் மொலுமொலு-ன்னு கலைந்து நடக்க ஆரம்பிப்பார்கள். கடைகள் எல்லாம் பிரிச்சு pack பண்ணுவாங்க.. கடைக்காரர்கள், நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் என்று அத்தனை பேர்களையும் அழகா guide செய்து தள்ளு-முள்ளு இல்லாம எல்லாரையும் பத்திரமா அனுப்பி வைக்கும் யு.எஸ். காவல்துறை! :)சும்மா சாம்பிளுக்கு ஒரு வீடியோ... என்சாய்! :)

Tuesday, July 3, 2012

தயிர் சாதம்&கரண்டி முட்டை

"வாக்கணம்"...இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருக்கீங்களா? :)))) நிறையப் பேருக்கு பரிச்சயம் இல்லாத சொல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் 'வாக்கண முட்டை' கரண்டி முட்டையாக அவதாரம் எடுத்திருக்கு! ;)

தாளிப்புக் கரண்டி என்பதைத்தான் எங்க வீட்டுப் பக்கம் வாக்கணம் என்று சொல்லுவோம். வாக்கணம் இரும்பில்தான் செய்திருப்பாங்க. நாட்கள் ஓட ஓட இப்பல்லாம் எவர் ஸில்வர், இண்டாலியம், இவற்றிலும் வர ஆரம்பித்துவிட்டது.

வாக்கணம், கொஞ்சம் பெரிய சைஸ் கரண்டி போலவே இருக்கும், ஆனால் கைப்பிடி நல்ல நீஈஈளமாக இருக்கும். இப்போ கைப்பிடியில் ப்ளாஸ்டிக் ஹேண்டில் எல்லாம் போட்டு மாடர்னா வருகிறது. தாளித்துக்கொட்ட, சீரகமிளகு வறுக்க, ஏலக்காய் வறுக்க இப்படி வேலைகளுக்கு பெரும்பாலும் அதைத்தான் உபயோகப் படுத்துவார்கள். முட்டையை உடைத்து தோசைக்கல்லில் ஊற்றுவதற்கு பதிலாக இந்த வாக்கணத்தில் ஊற்றி சுட்டு எடுப்பாங்க..சூப்பரா இருக்கும். :P ஒருமுறை ஊருக்கு போனபோது தேடிப் பிடிச்சு வெள்ளைவெளேர்னு ஒரு இண்டாலியம் வாக்கணம் வாங்கிவந்தேன், சமைச்சு சமைச்சு கலரே மாறிப்போச்சு இப்ப! கண்டுக்காதீங்க! ;)

நானும் அவ்வப்பொழுது வாக்கணத்தில் முட்டையை ஊத்தி பொரிப்பது உண்டுன்னாலும், சிலகாலமாக சுத்தமாக மறந்தே போய்விட்டது. சமீபத்தில் வலைப் பூக்களில் இந்த கரண்டி முட்டை-கான்சப்ட்டை பார்த்ததில் இருந்தே செய்யவேண்டும் என்று நினைச்சிருந்தேன், திடீரென்று ஒரு நாள் என்னவருக்கும் இந்த ஸ்டைல் முட்டை நினைவு வந்துவிட்டது, அப்புறம் என்ன? ஒரு வீகென்ட் லன்ச்சுக்கு செய்தாச்சு. சைவப் பிரியர்கள் அப்படியே திரும்பி போயிடலாம்னு நினைக்காதீங்க, உங்களுக்கு ஒரு சூப்பர் அன்ட் ஈஸி உருளை வறுவலும் இருக்குது! அப்படியே அலேக்-கா இந்த ஒரு போட்டோவை மட்டும் தாவி குதிச்சு:) தயிர் சாதத்துக்கு போயிருங்க. :))))

பொதுவாக முட்டையை உடைச்சு, அப்படியே ஊற்றி, உப்பு தூவி பொரிச்சு எடுப்பதுதான் வழக்கம். நம்ம விருப்பப்படி, கலர் குடைமிளகாய், கொத்துமல்லி-கறிவேப்பிலையை பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம். தக்காளி கூட போடறதுன்னா போட்டுப் பாருங்க. கரண்டி முட்டை குட்டியாக, வட்டமாக, குண்டா கொழு கொழுன்னு...அழ.....கா இருக்கும்! செய்து பாருங்க. :)
  • ஆம்லெட்டுக்கு செய்வது போல வெங்காயம், பச்சைமிளகாய் அரிந்து போட்டு முட்டையை உடைத்து ஊற்றி, உப்பும் போட்டு கலக்கி, வாக்கணத்தில் ஊற்றி சுட்டு எடுத்திருக்கேன். ஒரு முட்டையில் மட்டும் மேலாக மிளகுப் பொடியும் தூவியிருக்கேன்.
அடுத்ததா தயிர்சாதம் செய்யப் போலாம்! :)

மதியத்துக்கு குக்கரில் சாதம் வைத்து, அதற்கு என்ன குழம்பு செய்வது என்று யோசிச்சு, யோசிச்சு, யோசிச்சு...திடீர் முடிவா தயிர்சாதம் செய்யலாம்னு களமிறங்கினேன். சிம்பிள் அன்ட் சீக்கிரமா செய்து முடிப்பது எப்படின்னுதான் சொல்லிருக்கேன். பார்ட்டிகளுக்கெல்லாம் செய்வதுன்னா இன்னும் ரிச்ச்ச்சா செய்யலாம். இது ஜஸ்ட் அனதர் டே லன்ச் ரெசிப்பி! ;)
  • வழக்கமா சாதம் வைப்பதுபோல ஒரு கப் அரிசியை சோறாக வைத்து ரெடி பண்ணிக்கோங்க. சூடான சாதத்தை கரண்டியால நல்லா மசிச்சு விட்டுருங்க. பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் - இஞ்சி-கொத்துமல்லித் தழை- உப்பு சேர்த்து மசித்த சாதத்துடன் கலந்து ஆறவையுங்க.
  • சாதம் நல்லா ஆறினதும், ஒருகப் தயிர், கால்கப் பால் சேர்த்து கலக்குங்க.
  • வாக்கணத்தில:) எண்ணெய் காயவைச்சு, கடுகு தாளிச்சு பெருங்காயம்-உளுந்துப் பருப்பு-கடலைப்பருப்பு-கறிவேப்பிலை -வரமிளகாய் தாளிச்சு தயிர் சாதத்தில் கொட்டுங்க.
  • தாளிதத்தை சாதத்துடன் கலந்துவிட்டு விருப்பமான சைட் டிஷ்-உடன் வெளுத்துக் கட்டுங்க. :)))
முட்டை சாப்பிடாத ஆட்களுக்கு ஒரு சிம்பிள் அன்ட் ஸ்பைஸி பொட்டட்டோ ஃப்ரை..இதுவும் சீக்கிரமா செய்துடலாம். தயிர்சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும்.

  • ரெண்டு உருளைக் கிழங்கை, நறுக்கி தண்ணியில் நல்லா கழுவிருங்க.
  • கடாயில் எண்ணெய் காயவைச்சு, கடுகு தாளிச்சு உருளைக் கிழங்கை சேர்த்து வதக்குங்க. (நல்லா ஹை ஹீட்-ல வைச்சு வதக்கணும். )
  • 4-5 நிமிடங்கள் கிழங்கு நல்லா வதங்கணும்..கடாயை மூடி வைச்சு, இடையிடையே கிளறிவிட்டு வதக்குங்க.
  • கிழங்கு முக்கால்வாசி வெந்ததும், தீயை மீடியம் ஃப்ளேமுக்கு குறைச்சுட்டு தேவையான உப்பும் சாம்பார் பொடியும் சேர்த்து இன்னும் சில நிமிஷங்கள் வதக்குங்க.
  • அதுக்குள்ளயே கிழங்கு நல்லா முறுகலா வதங்கியிருக்கும், சாம்பார் பொடி பச்சைவாசனையும் போயிருக்கும். இல்லைன்னா, தீயை நல்லா குறைச்சு இன்னும் ரெண்டு நிமிஷம் வைச்சு இறக்கிருங்க.
quick n easy உருளை வறுவல் ரெடி!

LinkWithin

Related Posts with Thumbnails