Showing posts with label பேக்கிங். Show all posts
Showing posts with label பேக்கிங். Show all posts

Monday, June 5, 2017

வெஜிடபிள் பஃப்ஸ்

தேவையான பொருட்கள் 
பஃப் பேஸ்ட்ரி ஷீட் - 1 
உருளைக்கிழங்கு -1
கேரட் -1
பீன்ஸ் - 7
பச்சைப்பட்டாணி - 1கைப்பிடி 
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
இஞ்சி-பூண்டு விழுது -1டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - கொஞ்சம்
சீரகம் - 1/2டீஸ்பூன்
தக்காளி, சிறியதாக -1
மிளகாய்ப்பொடி - 1/2டீஸ்பூன்
கறிமசாலா பொடி - 1டீஸ்பூன் 
கரம் மசாலா பொடி -1/4டீஸ்பூன்
சர்க்கரை -1/2டீஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை 
பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை ஒரு மணி நேரம் முன்பாக ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
உருளை கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
கேரட்-பீன்ஸ் இவற்றை கழுவி, பொடியாக நறுக்கி, மைக்ரோவேவ்-ல் வேகவைத்து வைக்கவும். (நான் பச்சைப்பட்டாணி சேர்க்கவில்லை, சேர்ப்பதாக இருந்தால் கேரட் பீன்ஸ் முக்கால் பதம் வெந்ததும் பட்டாணியையும் சேர்த்து ஒரு நிமிடம் மைக்ரோவேவ்-ல் வைத்து எடுத்துக்கொள்ளவும்)
வெங்காயம்- பச்சைமிளகாய் -தக்காளியை பொடியாக நறுக்கிவைக்கவும். இஞ்சி பூண்டை தட்டிக்கொள்ளவும். 

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து  சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள், கறி மசாலாதூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும். 
பொடிகள் பச்சை வாசம் போனதும், மசித்த உருளைக்கிழங்கு, வேகவைத்த காய்கறிகள் (நீரை வடித்துவிட்டு) சேர்த்து கிளறவும். மசாலாவுடன் காய்கள் கலந்ததும் கரம் மசாலா பொடி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். 

அவன்(oven) - ஐ 400F அளவுக்கு ப்ரீஹீட் செய்யவும். அறை வெப்பநிலைக்கு வந்திருக்கும் பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை மாவு தூவி இன்னும் கொஞ்சம் பெரியதாக தேய்த்துக்கொண்டு 9 துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். [இங்கே நான் யூஸ் செய்திருப்பது Pepperidge form puff pastry sheet ]. 

நறுக்கிய சதுரங்களில் கொஞ்சமாக மசாலா வைத்து, ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டவும். அலுமினியம் ஃபாயில் விரித்த பேக்கிங் டிரேயில் ஒட்டிய பஃப்ஸ்களை அடுக்கவும். இதற்குள்ளாக அவன் ப்ரீஹீட் ஆகி தயாராக இருக்கும். தட்டில் அடுக்கிய பஃப்ஸ்கள் மீது சிறிது பால் அல்லது தண்ணீரை  (முட்டை சாப்பிடுவீங்கனா ஒரு முட்டைய உடைத்து சிறிது நீர் கலந்து நன்றாக கலக்கி அதை..) சீராகப் பூசிவிட்டு அவன் - ல் வைக்கவும். 
சுமார் 20 நிமிடங்கள் பேக் செய்து பஃப்ஸ்கள் பொன்னிறமானதும் எடுக்கவும். 16 நிமிடங்களுக்குப் பிறகு அவன் -ஐ கவனித்து தேவைப்பட்டால் பேக்கிங் டிரே-யை திருப்பி வைக்கவும். பஃப்ஸ்கள் எல்லாம் ஒரே நிறமாக வெந்ததும் அவன் -ல் இருந்து வெளியே எடுத்து சூடான டீ அல்லது காஃபியுடன் பரிமாறவும்.
குறிப்பு 
பஃப்ஸ்-களை இன்ன வடிவில்தான் ஒட்ட வேண்டும் என்ற வரையறை இல்லை...விருப்பமான வடிவத்தில் ஒட்டுங்க..கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம், மசாலா வைத்து பஃப்ஸ்கள ஒட்டும்போது மசாலா வெளியே வராதபடி ஒட்டவேண்டும். இல்லையெனில் பஃப்ஸ் பேக் ஆகும்போது மசாலா வெளியே எட்டிப்பார்த்து கருகிவிடும். :) 
அதே போல, மசாலா கொஞ்சம் காரமாக செய்தால் நன்றாக இருக்கும், பஃப்ஸ் பேக் ஆகி, அந்த லேயர்களுடன் சாப்பிடுகையில் காரம் சரியாகிவிடும்!! ;) 

Monday, July 15, 2013

ஆனியன் பஃப்ஸ்

கோவையில் பெரும்பாலானா பேக்கரிகளில் மாலை நேரங்களில் சூடான பஃப்ஸ் பல சுவைகளில் கிடைக்கும்.  வெஜ் பஃப்ஸ், காலிஃப்ளவர் பஃப்ஸ், எக் பஃப்ஸ், ஆனியன் பஃப்ஸ் இப்படி பலசுவைகள், நான்வெஜ் பஃப்ஸும் உண்டு. பலநாட்களாக இந்த வெங்காய பஃப்ஸ் செய்ய நினைத்திருந்தேன். இங்கே ரெடிமேட் பஃப் பேஸ்ட்ரி ஷீட்ஸ் கிடைப்பதால் இது ஜஸ்ட் அரை மணி நேர வேலைதான். ஸ்டஃபிங்-ம் வெறும் ஆனியன் என்பதால் அதுவும் ஐந்து நிமிஷத்தில் தயாராகிவிடும்.

தேவையான பொருட்கள்















பஃப் பேஸ்ட்ரி ஷீட்-1 [நான் சதுர வடிவிலான சிறிய பேஸ்ட்ரி ஷீட்ஸ் உபயோகித்திருக்கிறேன். மேலே படத்திலுள்ள பெரிய பேஸ்ட்ரி ஷீட்என்றால் தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக நறுக்கி உபயோகிக்கவும்]
உலர்ந்த மாவு-சிறிது
பால்-1டேபிள்ஸ்பூன்
வெங்காயம்-1
சோம்பு-1/2டீஸ்பூன்
கறிவேப்பில, கொத்துமல்லி இலை -சிறிது
கறிமசாலாதூள்-3/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
பேஸ்ட்ரி ஷீட்-ஐ ப்ரீஸரில் இருந்து வைத்து அறை வெப்பநிலைக்கு கொண்டுவரவும்.

வெங்காயத்தை கனமான நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து சோம்பு தாளித்து, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயத்துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு, கறிமசாலாதூள் சேர்த்து வெங்காயம் முக்கால் பாகம் வதங்கும் வரை வதக்கி கொத்துமல்லி இலை தூவி ஆறவைக்கவும்.
பேஸ்ட்ரி ஷீட்டை விருப்பமான வடிவில் நறுக்கி..

மாவு தூவிக்கொண்டு, சப்பாத்திக் கட்டையால் லேசாகத் தேய்த்து..
ஒவ்வொரு ஷீட்டிலும் வெங்காயக் கலவையை வைத்து, ஓரங்களை தண்ணீர் தடவி ஒட்டவும்.
சீல் செய்த பஃப்ஸ்கள் மீது பாலைத் தடவி, 400F ப்ரீஹீட் செய்த அவன் - ல் சுமார் 20 நிமிடங்கள் அல்லது பஃப்ஸ் பொன்னிறமாகும் வரை bake செய்து எடுக்கவும்.
சூடான சுவையான மொறு மொறு ஆனியன் பஃப்ஸ் ரெடி! 

Sunday, March 3, 2013

சின்னமன் சிப் ஸ்கோன் - Cinnamon Chip Scone

 
தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் மாவு / மைதா மாவு - 11/2 கப் + 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -1/4கப்+2டேபிள்ஸ்பூன்
பேக்கிங்  பவுடர்-11/4டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1/4டீஸ்பூன்
உப்பு-1/4டீஸ்பூன்
Half &Half milk / கெட்டியான பால்-3/4கப்
எலுமிச்சை ஜூஸ்- அரை பழத்திலிருந்து
[மோர் இருந்தால் நேரடியாக 3/4 கப் சேர்க்கலாம், என்னிடம் இல்லாததால் பால்+ எலுமிச்சை ஜூஸ் சேர்த்தேன்]
குளிர்ந்த வெண்ணெய்- 6டேபிள்ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
வெண்ணெயை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த உடனே சிறு துண்டுகளாக நறுக்கி உபயோகிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, வெண்ணெய் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.
விரல்களால் அவற்றைக் கலந்து கொள்ளவும். வெண்ணெய்த் துண்டுகள் மிளகு அளவுக்கு வந்து, கலந்த மாவு கிட்டத்தட்ட மணல் போல crumble ஆகியிருக்க வேண்டும். 
பாலுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை மாவுடன் கலக்கவும். 
பால் சேர்த்து மாவு ஒன்றாக சேரும் வரை கலந்தால் போதுமானது. அதிகமாகப் பிசையக் கூடாது.
பிறகு சின்னமன் பேக்கிங் சிப்ஸை மாவுடன் சேர்த்து பிரட்டவும்.
உலர்ந்த மாவு தூவிய சமமான இடத்தில் ஸ்கோன் மாவை மாற்றி, லேசாகப் பிசையவும். (அதிகபட்சம் 10 முதல் 12 முறை மாவைத் லேசாகத் திருப்பிப் போட்டாலே கையில் ஒட்டாத பதம் வந்துவிடும். சப்பாத்தி மாவு போல அடித்துப் பிசைந்தா:) ஸ்கோன் கடினமா ஆகிவிடும், அதனால் கோ ஈஸி! :))

மாவை 2 பங்காகப் பிரித்து, 1/4 இன்ச் திக்னஸ் உள்ள வட்டங்களாகத் தட்டிக் கொள்ளவும்.  [இந்நிலையில் ஒரு பகுதியை ப்ரீஸரில் வைத்துக்கொண்டு தேவையான பொழுது எடுத்து bake செய்யலாம்.]

வட்டமாகத் தட்டிய மாவை கத்தியால் ஆறு சமபகுதிகளாக வெட்டி, பேக்கிங் ட்ரேயில் வைக்கவும்.
உருக்கிய வெண்ணெயை ஸ்கோன்கள் மீது தடவி, மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை தூவிவிடவும்.
425F ப்ரீஹீட் செய்யப்பட்ட oven-ல் சுமார் 10-13 நிமிடங்கள் bake செய்து எடுக்கவும். 
 
டடா! சி.சி.ஸ்கோன் ரெடி!
சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும், ஆறிய பிறகும் சுவையாக இருக்கும். ;) தேவையான போது oven-ஐ 200F ப்ரீஹீட் செய்து, 10 நிமிஷங்கள் oven-ல் வைத்தெடுத்தும் ருசிக்கலாம். :) 
~~
பகுதி -1 இல் சொல்லியது போல, பகுதி-2இல் மோரில் ஆரம்பிச்ச தடங்கல், பால்+லெமன் ஜூஸ் என அஜீஸ்;) ஆச்சுங்க..அப்புறமா கேமராக்கள் சதி!! இருந்த ஒரு சின்னக் கேமரால மெமரி ஸ்பேஸ் இல்லை..பெரிய கேமரால லென்ஸை மாத்தணும், எப்படி மாத்தன்னு தெரிலை, ஆத்துக்காரரும் வீட்டிலில்லை..பிறகு ஆப்பிள் ஐபோன் கை கொடுக்க ஸ்கோனை பேக் செய்த ஸ்டெப்ஸை பதிவும் செய்தேன். அதனால கொலாஜ்ல ஒவ்வொரு படமும் ஓரொரு சைஸில் இருக்கும். நீங்களும் அஜீஸ் பண்ணிக்குங்க. 
பி.கு. இப்பல்லாம் கேமரால லென்ஸ் மாத்த கத்துகிட்டாச்சு. ஹிஹி! :)
~~

Monday, December 31, 2012

தேங்காய் பிஸ்கட் / Eggless Coconut Biscuit

தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் மாவு/ மைதா மாவு - 11/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
வெண்ணெய்-115கிராம்
பேக்கிங் பவுடர்-1/2டீஸ்பூன்
ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ் - 1/2கப்

செய்முறை
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

வெண்ணெய் அறை வெப்பநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
மைதா + பேக்கிங் பவுடர் சேர்த்து 2-3முறை சலித்து வைக்கவும்.

இனிப்பு தேங்காய்த் துருவல் இங்கே கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. ஒரு அவன் ப்ரூஃப் தட்டில் அலுமினியம் ஃபாயில் விரித்து, கோக்கனட் ஃப்ளேக்ஸை அதில் வைக்கவும்.
Oven-ஐ 300F ப்ரீஹீட் செய்து தேங்காய்த்துருவல் தட்டை  வைத்து 10-15 நிமிடங்கள் (நல்ல பொன்னிறமானால் போதும், பத்து நிமிடங்களுக்குப் பின் அவ்வப்பொழுது பார்த்து கவனமாக எடுக்கவும். தே.துருவல் சீக்கிரம் கருகிவிடும், ஜாக்கிரதை! :)) bake செய்யவும்.

வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து எலக்ட்ரிக் பீட்டர் அல்லது விஸ்க்-ஆல் சில நிமிடங்கள் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை  சேர்த்து கலக்கவும்.

வெண்ணெய்+ சர்க்கரை கலவை க்ரீமியாக வரும்வரை நன்றாக கலக்கவேண்டும். கிட்டத்தட்ட உளுந்துமாவு போல fluffy-ஆக ஆகும்வரை கலக்கவும்.

பிறகு அதனுடன் சலித்துவைத்த மாவு+பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து விரல்களால் மிருதுவாக கலந்துவிடவும்.(அழுத்திப் பிசையவேண்டாம்).
தேங்காய்த் துருவலையும் மாவுக்கலவையுடன் சேர்த்துப் பிசிறிவிடவும்.

இப்பொழுது மாவு கிட்டத்தட்ட புட்டுமாவு போல, உருட்டினால் உருண்டை சேரும், உதிரி-உதிரியாகவும் இருக்கும்
பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் விரித்துக் கொண்டு, மாவுக் கலவையை விருப்பமான வடிவில் பிடித்து வைக்கவும். (இந்த ஷேப் எனக்கு ஈஸியாக வருவதால் "கொழுக்கட்டை" போல பிடித்திருக்கிறேன், உங்க வசதிக்கேற்ப உருண்டையாகவோ, சதுரமாகவோ,செவ்வகமாகவோ, கனசதுரமாகவோ செய்துக்கலாம். :))))

எல்லா பிஸ்கட்டுகளையும்  செய்து அடுக்கியபிறகு பேக்கிங் ட்ரேயை 15நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.
Oven-ஐ 350F ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.
பிஸ்கட் ட்ரேயை oven-ல் வைத்து 15 நிமிடங்கள் bake  செய்யவும்.

பிஸ்கட்டுகள் வெந்து இப்படி நிறம் மாறி இருக்கும், oven-ல் இருந்து எடுத்து நன்றாக ஆறவைக்கவும். சுவையான கோக்கனட் பிஸ்கட் தயார். காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.   

என்னைப் பொறுத்தவரை இந்த பிஸ்கட் ஒரு fool proof ரெசிப்பி. பலமுறைகள் செய்திருக்கிறேன். போனவருஷத்தில் ஒரு முறை செய்தபொழுது மிகவும் அழகான வடிவம் & texture கிடைத்தது. என்னவரின் ஆஃபீஸுக்கு கொடுத்தனுப்பினேன், எல்லாரின் பாராட்டுக்களும் கிடைத்தது. :) 

விரும்பினால் முந்திரி-பாதாம்-வால்நட் போன்ற nuts-ஐ பொடித்து தேங்காய் கலவையுடன் சேர்த்தும் bake  செய்யலாம். தேங்காய் சுவை மட்டுமே போதும் என்றால் ப்ளெய்னாகவும் செய்யலாம். இனிப்பு தேங்காய்த் துருவல் இல்லையென்றால் சும்மா dry coconut flakes சேர்க்கலாம், ஆனால் சர்க்கரையின் அளவை சரிபார்த்து, தேவையென்றால் அதிகம் சேர்க்கவேண்டும்.

Tuesday, December 20, 2011

ப்ரோக்கலி பஃப்ஸ் & முட்டை பஃப்ஸ்

தேவையான பொருட்கள்
முட்டை - 2
*பஃப் பேஸ்ட்ரி ஷீட்
வெங்காயம்-1
தக்காளி -1
பச்சைமிளகாய்-1
கரம் மசாலா -1 டீஸ்பூன்
எண்ணெய்-1டீஸ்பூன்
பால்-1டேபிள்ஸ்பூன்
உப்பு


செய்முறை
தண்ணீரை கொதிக்கவிட்டு,கால் டீஸ்பூன் உப்புப் போட்டு, முட்டைகளை 8 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். வெந்த முட்டைகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்து, உரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.

பேஸ்ட்ரி ஷீட்டை ஃப்ரீஸரில் இருந்து அரைமணி நேரம் முன்பாக வெளியே எடுத்துவைக்கவும்.

வெங்காயம்,மிளகாய்,தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும்.
கடாயில் காயவைத்து நறுக்கியவற்றை சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் உப்பு,கரம்மசாலா சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

பேஸ்ட்ரி ஷீட்டை சப்பாத்திக்குழவியால் லேசாகத் தேய்த்து சதுரங்களாக நறுக்கவும். ஒவ்வொரு சதுரத்திலும் கொஞ்சம் வெங்காயமசாலாவை வைத்து முட்டைகளை (நறுக்கிய பக்கம் கீழே இருக்கும்படி) வைக்கவும்.

பேஸ்ட்ரி ஷீட்டின் ஓரங்களை தண்ணீர் தடவி, ஸ்டஃபிங் வெளியே தெரியாதவாறு ஒட்டவும். ஒட்டிய பஃப் மீது கொஞ்சம் பாலைத் தடவி, 400F ப்ரீஹீட் செய்த அவனில் சுமார் 20நிமிடங்கள்
பேக் செய்து எடுத்தால் முட்டை பஃப்ஸ் ரெடி!

வெங்காய மசாலா வைப்பது ஆப்ஷனல்..வெறுமனே வேகவைத்த முட்டை மீது உப்பு - மிளகாய்ப்பொடி தூவி bake செய்தாலும் எக் பஃப்ஸ் நல்லாவே இருக்கும்.

பேஸ்ட்ரி ஷீட் இங்கே ரெடிமேடா கிடைப்பது ரொம்ப ரொம்ப வசதியா இருக்கு!
நினைச்ச அரைமணி நேரத்தில சுடச்சுட பஃப்ஸ் செய்து சாப்பிடலாம்! :P :P ஸ்டஃபிங் எல்லாம் ஒரு விஷயமே இல்ல..வெறுமனே பேஸ்ட்ரி ஷீட்டை bake செய்தாலே டேஸ்ட் சூப்பரா இருக்கும்,அதனால் ஸ்டஃப்பிங் நம்ம வசதிப்படி பண்ணலாம்.

ஒருமுறை பேஸ்ட்ரி ஷீட்டை வெளியே எடுத்து வைச்சப்புறம் ஸ்டஃபிங் செய்ய சோம்பலா இருந்ததால் டின்னருக்கு செய்த ப்ரோக்கலி பொரியலை (!) ஸ்டஃப் பண்ணி bake பண்ணினேன். "ப்ரோக்கலியில பஃப்ஸ்-ஆ??? சூப்பரா இருக்குது..வெரி இன்னொவேட்டிவ்!"-னு என்னவர் புகழ்ந்துகிட்டே சாப்ட்டார்! ;) நம்ம லேஸி கதையெல்லாம் சொல்லிடுவோம என்ன?? கெத்தா பாராட்டை வாங்கிட்டு பஃப்ஸ் சாப்பிட்டேன்! :D

அதேபோல பேஸ்ட்ரிஷீட்டை நீட்டா சதுரமா,முக்கோணமா,வட்டமா எல்லாம் ஷேப் செய்ய எனக்கு பொறுமை இருப்பதில்லை..அப்படியே கைக்கு வந்தமாதிரி இழுத்து தண்ணியவைச்சு ஒட்டிடுவேன், என்னமாதிரி ஒட்டினாலும், ஸ்டஃபிங் வெளியே தெரியாம இருந்தாச் சரி! bake ஆகி வரப்ப பஃப்ஸ் பார்க்கவே சூப்பரா இருக்கும். நீங்களே சாப்பிட்டுப் பாருங்களேன், எப்படி இருக்கு பஃப்ஸ்...ஓக்கேவா?? :)

எக் பஃப்ஸ்-டொமாட்டோ கெட்ச்-அப் & டீ!

***Pepperidge farm பேஸ்ட்ரிஷீட் என்றால் ஒரு ஷீட்டுக்கு 6 பஃப்ஸ் செய்யலாம். நான் வாங்குவது சிறிய சதுரங்களா கிடைக்கும் மிட் ஈஸ்டர்ன் பேஸ்ட்ரிஷீட்..ஒரு சதுரத்தில் 2 பஃப்ஸ் செய்யலாம்.

Tuesday, November 15, 2011

ரஸ்க்

தேவையான பொருள்: ஸ்வீட் பன்

செய்முறை
அவன்-ஐ 275F ப்ரீஹீட் செய்யவும்.

பன்களை நீளமான துண்டுகளாக நறுக்கவும்.

நறுக்கிய பன்துண்டுகளை பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.

பேக்கிங் ட்ரேயை அவன்-ல் வைத்து 60-70 நிமிஷங்கள் பேக் செய்யவும்.

மொறுமொறுன்னு வாயில் போட்டதும் கரையும் டேஸ்ட்டி ரஸ்க் ரெடி!

சூடான டீ & ரஸ்க்!
என்ஜாய்!
:)))
~~***~~ ~~***~~ ~~***~~
இப்ப உங்களுக்கு ஒரு சந்தேகம் வரணும், இவ்ளோ சூப்பரா இருக்கற பன்னை அப்புடியே சாப்பிடாம எதுக்கு ரஸ்க் பண்ணனும்?-அப்படின்னு!! :)

போனவாரம் இந்த பன்களை கடையில் இருந்து என்னவர் வாங்கிட்டு வந்தார், பொதுவா இது வாங்கினா டீ-காபி கூட அப்புடியே சாப்பிடறதுதான் வழக்கம். சும்மா சாப்பிடவே சூப்பரா இருக்கும். இந்த வாட்டியும் அழகா இருந்தது. ஆர்வமா பேக்கட்டை பிரிச்சு ஒரு பன்னை எடுத்தா...

பன் மேலே நல்லா இருக்கு, உள்ள சரியா bake ஆகவே இல்ல!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ரெண்டு ஆப்ஷன் இருக்கு, ஒண்ணு திருப்பியும் கடையில கொண்டுபோய் ரிடர்ன் பண்ணலாம், அல்லது அதையே சரி பண்ணி edible-ஆ மாத்தலாம். இதிலே முதல் ஆப்ஷன் ப்ராக்டிகலி கொஞ்சம் கஷ்டம்!

பொதுவாவே எந்தப்பொருளையும் ரிடர்ன் பண்ணுவது என்னவருக்கு ஆகாத விஷயம், அதிலும் இந்தமாதிரி perishable ஐட்டங்களை எல்லாம் திருப்பி கொண்டுபோய் ரிடர்ன் பண்ணுவது அவ்வளவா நல்லாவும் இருக்காது, அதனால் இப்படி ஸ்லோ bake செய்து ரஸ்க்கா மாத்தியாச்சு. :)

பன்னும் வேஸ்ட் ஆகலை, நம்ம ஹெல்த்தும் ஸ்பாயில் ஆகல! கரெக்ட்டுதானே..நீங்க என்ன சொல்றீங்க?!

பி.கு. கடை..கடைன்னு பொதுவா சொன்னா எப்புடி? அது எந்த கடைன்னு கேக்கறீங்களா...US மக்கள் கண்டுபிடிச்சுருவாங்கன்னு நினைக்கிறேன். guess பண்ணுங்க, இல்லன்னா நாளைக்கு சொல்றேன்!

Tuesday, June 21, 2011

மஷ்ரூம் பஃப்ஸ்

தேவையான பொருட்கள்
பேஸ்ட்ரி ஷீட்
மஷ்ரூம்-100கிராம்
வெங்காயம்(சிறியது)-1
கரம் மசாலாத்தூள்-1/2டீஸ்பூன்
கொத்துமல்லி இலை-சிறிது
உப்பு
எண்ணெய்
சோம்பு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
பால்-2ஸ்பூன்

செய்முறை
காளானை சுத்தம் செய்து நறுக்கவும்.வெங்காயம்-கொத்துமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் காயவைத்து சோம்பு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் காளானை சேர்த்து கிளறி, கடாயை மூடி 3 நிமிடங்கள் வேகவிடவும்.
உப்பு,கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து, கடைசியில் கொத்துமல்லி இலை சேர்த்து இறக்கி ஆறவைக்கவும்.பஃப்ஸ்-க்கான ஸ்டஃபிங் ரெடி.

பேஸ்ட்ரி ஷீட்டை அரைமணி நேரம் முன்பாக ப்ரீஸரில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்.
உலர் மாவு தூவி, சப்பாத்திக் கட்டையால் லேசாகத்தேய்த்து, விரும்பிய அளவில் நறுக்கிக் கொள்ளவும். ஒவ்வொரு பேஸ்ட்ரி துண்டிலும் கொஞ்சமாக ஸ்டஃபிங் வைத்து, ஓரங்களில் நீர் தடவி ஸ்டஃபிங் வெளியே தெரியாதவாறு மடிக்கவும்.

மடித்த பஃப்ஸ்கள் மீது பாலைத் தடவிவிட்டு, 425F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

மாலை நேரத்தில் சட்டென்று செய்து சுவைக்க மஷ்ரூப் பஃப்ஸ் ரெடி!

இந்த காளானின் பெயர் Mushmaru Mushrooms. போனவாரம் சைனீஸ் மார்க்கெட் போயிருந்தபோது வாங்கிவந்தது. படத்திலிருப்பது ஒரு bunch. அழகா ப்ளாஸ்டிக் பேப்பர்ல ராப் பண்ணி, இன்னொரு ப்ளாஸ்டிக் கவர்ல பேக் செய்து இருந்தது. [அதுக்காகவெல்லாம் நான் வாங்கிட்டு வரலை, நிஜமாவே நல்ல ருசியாக இருந்தது. :) ]

இந்தக்காளான் பிரியாணிக்கெல்லாம் நன்றாக இருக்குமா என்று தெரியல, ஒரு பன்ச்சை பஃப்ஸ் பண்ணிட்டேன்,இன்னொரு பன்ச்சை குழம்பு செய்தேன்,சூப்பரா இருந்தது. காளான் குழம்புக்கு ரெசிப்பி இங்கே .

Wednesday, May 18, 2011

வெஜிடபிள் கேக்

ப்ரியாவின் ஈஸி & டேஸ்ட்டி ரெசிப்பீஸ் வலைப்பூவில் இந்த சேவரி கேக் ரெசிப்பி பார்த்தேன். செய்து பார்க்கணும்னு நினைச்சு, போன வியாழக்கிழமை சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேலே தேவையான சாமானெல்லாம் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சேன்.(எங்க வீட்டுல ஃப்ரிட்ஜுல இருந்துதான்,ஹிஹி!)

முட்டை -தயிர்-பால்-மைதா எல்லாம் எடுத்து வெளியே வைச்சுட்டு ப்ரோக்கலி,கேப்ஸிகம்,வெங்காயம் நறுக்கி எண்ணெயிலே வதக்கினேன், அதிசயமா என்னவர் நேரத்துலயே வீட்டுக்கு வந்துட்டார். அவர் வருவதுக்கு முன்னாலயே இந்த மாதிரி எக்ஸ்பெரிமென்ட் எல்லாம் செய்து முடிச்சுடுவேன், அதனால், இந்த baking-ஐ அப்படியே ஸ்டாப் பண்ணிட்டு, அரிசிம்பருப்பு சாதம்,கத்தரிக்கா-உருளைக்கிழங்கு பொரியல் செய்து இரவு உணவும் சாப்பிட்டாச்சு. இவர் மும்முரமா எலக்ஷன் ரிஸல்ட் பார்த்துட்டு இருந்தார், கேக் செய்ய திங்க்ஸ் எடுத்து வெளியில் வைச்சது நைட் 10 மணிக்கு திடீர்னு நினைவு வந்தது!

ஆரம்பிச்ச வேலைய பாதில விடமுடியுமா என்ன? மறுபடி ஆரம்பிச்சேன். எலக்ட்ரிக் பீட்டர்ல முட்டை+ஆயிலை beat பண்ணும்போது சத்தம் பலமா வர்ர மாதிரி எனக்கு ஒரு பயம்! "ரொம்ப சவுண்டா இருக்கா?"-ன்னு இவர்கிட்ட கேட்டேன். ஒண்ணுமே சொல்லல. நான் சொன்னதை கவனிக்காம டிவி பார்க்கறார் போலன்னு beating-ஐ தொடர்ந்தேன், உடனே சொல்லறார்,"இப்பதான் சத்தம் கேக்குது"-அப்படின்னு!!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதுக்கப்புறம் சத்தம் யாருக்கு கேட்டா என்னன்னு வேலையைத் தொடர்ந்து கேக்-ஐ அவன்-ல வைத்தேன். அப்பவே மணி 11-க்கு மேலே ஆகிட்டது.

நல்லா தூக்கம் வருது,ஆனா கேக் அவன்-ல இருக்கு. கஷ்டப்பட்டு முழிச்சிட்டு இருந்தேன். 35 நிமிஷம் கழிச்சு எடுத்துப் பார்த்தா, வேகலை. மறுபடி பத்துப்பத்து நிமிஷமா தூங்கி முழிச்சு, தூங்கி முழிச்சு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கப்புறம் கேக் ரெடியாச்சு! அந்நேரம் அம்மா அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றியடைந்து, டிவி-ல எல்லாருக்கும் லட்டு விநியோகம் செய்து வெற்றியைக் கொண்டாடிட்டு இருந்தாங்க. நாங்க சுடச்சுட கேக்கை வெட்டி சாப்பிட்டு தூங்கிட்டோம்! :)


தேவையான பொருட்கள்
மைதா (ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர்)-11/4கப்
கார்ன் ப்ளோர்-1/4கப்
பேக்கிங் பவுடர்-1/2டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1/4டீஸ்பூன்
மிளகுத்தூள்-1/2டீஸ்பூன்
உப்பு-1/2டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
முட்டை-2
எண்ணெய்(கனோலா ஆயில்)-1/4கப்
பால்-1/3கப் + தயிர்-2/3கப் (ஒரிஜினல் ரெசிப்பில மோர் சேர்த்திருந்தாங்க. என்னிடம் மோர் இல்லாததால் இப்படி அட்ஜஸ்ட் செய்துகிட்டேன்.மோர் இருந்தால் ஒரு கப் மோர் சேர்த்துக்கலாம்.)

பொடியாக நறுக்கிய- ப்ரோக்கலிப் பூக்கள்-1/2, கேப்ஸிகம்-1,வெங்காயம்-1,
பச்சைமிளகாய்-1,கொத்துமல்லி இலை-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி நறுக்கிய மிளகாய்-கொத்துமல்லி இலை-ப்ரோக்கலி-கேப்ஸிகம்-வெங்காயத்துண்டுகளை 3-4 நிமிடங்கள் வதக்கி ஆறவைக்கவும்.

மைதா-கார்ன் ஃப்ளோர்-பேக்கிங் பவுடர்-பேக்கிங் சோடா-மிளகுத்தூள்-உப்பு-சீரகம் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பாலையும் தயிரையும் நன்றாக கலந்துவைக்கவும்.

முட்டை+எண்ணையை எலக்ட்ரிக் பீட்டரால் நுரை பொங்க கலக்கவும். இதனுடன் தயிரை சேர்த்து விஸ்க்கால் மெதுவாக கலக்கவும். வதக்கிய காய்களையும் சேர்த்து கலக்கவும்.


காய்கள் நன்றாக கலந்தபின்னர் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

வெண்ணெய் தடவிய பேக்கிங் பானில் கேக் கலவையை ஊற்றி மீதமிருக்கும் காய்களை மேலாகத்தூவி..
350F ப்ரீஹீட் செய்த அவனில் 55 முதல் 60 நிமிடங்கள் பேக் செய்யவும்.

கேக் பான்-ஐ அவன்-லிருந்து எடுத்து கொஞ்சநேரம் ஆறவைத்த பின்னர்தான் கேக்கை பானிலிருந்து தனியே எடுப்பது வழக்கம். இந்த கேக் அவனிலிருந்து வெளியே வரும்போதே நடுஇரவு! அதுக்கும் மேலே வெயிட் பண்ண நேரமில்லாததால் அப்பவே எடுத்தேன். அழகாக முழுசா வந்துட்டது. :)

இனி என்ன? துண்டுகளாக வெட்டி...

ருசிக்க வேண்டியதுதான்!
:)
~~~~~~~~~~~
பி.கு. போனவாரத்தில் ப்ளாகர் டவுனா இருந்த நேரத்தில் கேக் செய்ததால் ரெசிப்பியில் எனக்கு வந்த சந்தேகங்களை தீர்த்துக்க முடியல. அதனால் ப்ரியாவின் ரெசிப்பியில் என் வசதிப்படி ஒரு சில மாற்றங்களுடன் செய்திருக்கிறேன்.

Friday, April 1, 2011

கார பன்

இந்த குறிப்பு Sharmi's Passions தளத்திலிருந்து சிலமாற்றங்களுடன் செய்தது. தேங்க்ஸ் பார் தி ரெசிப்பி ஷர்மி!

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு(ஆட்டா மாவு) -11/2கப்
மைதா மாவு-1/2கப்
இன்ஸ்டன்ட் ஈஸ்ட்(Rapid Rise Yeast)-1டீஸ்பூன்
முட்டை-1
சர்க்கரை-1டீஸ்பூன்
உப்பு-1டீஸ்பூன்
பச்சைமிளகாய்-2
கொத்துமல்லி இலை-சிறிது
மிளகாய்த்தூள்-1/2டீஸ்பூன்
பூண்டு-6 பற்கள்
வெள்ளை எள்-1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
தண்ணீர்-1/2கப்

செய்முறை
1/4கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட்-சர்க்கரை-உப்பு சேர்த்து நன்றாக கரைத்து (ஈஸ்ட் கரைந்து நுரைக்கட்டும்வரை) 5நிமிடங்கள் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மாவுகள்,பொடியாக நறுக்கிய ப.மிளகாய்,மிளகாய்த்தூள்,நசுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக கலந்துகொண்டு,

ஈஸ்ட் கலவை மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மாவைப் பிசையவும். பின்னர் மீதியிருக்கும் தண்ணீரை தேவையான அளவு ஊற்றி நன்றாக பிசையவும்.

மாவு சப்பாத்திமாவைப் போல வந்ததும், ஆலிவ் ஆயிலையும் ஊற்றி நன்றாக பிசைந்து எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாவை வைக்கவும்.

மாவின் மேல்பகுதி முழுவதும் எண்ணெய் தடவி, க்ளியர் ராப் பேப்பரால் பாத்திரத்தைக் கவர் செய்து, மூடி வைக்கவும்.
மாவுப்பாத்திரத்தை சற்றே சூடான இடத்தில் வைக்கவும். 2 மணிநேரம் கழித்து மாவு நன்றாக உப்பியிருக்கும்.
அதனை மீண்டும் நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் வைத்து உருண்டைகளின் மீதும் சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, முட்டையின் மஞ்சள் கருவுடன் கொஞ்சம் நீர் சேர்த்து கலந்து பன்களின் மீது தடவிவிட்டு, எள்ளை தூவிவிடவும்.

375F ப்ரீஹீட் செய்யப்பட்ட அவன்-ல் சுமார் 30-35 நிமிடங்கள் பேக் செய்யவும்.
சுவையான காரபன்கள் ரெடி!
கதைகளில் "அன்ட் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்"னு சுபம் போடுவது மாதிரி "டீயுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்"-னு இந்தக்கதையை முடிப்பேன்னு பார்க்கறீங்களா? இல்லையே!!!
அடுத்த பகுதி விரைவில் தொடரும்.வெய்ட் அன்ட் ஸீ!!

:))))))))))


LinkWithin

Related Posts with Thumbnails