Showing posts with label ட்ரிப்ஸ். Show all posts
Showing posts with label ட்ரிப்ஸ். Show all posts

Monday, January 13, 2014

புத்தாண்டு-புகைப்படத்தொகுப்பு..


புது வருடத்தில் கோயிலுக்குப் போகலாம் என எண்ணி, பலநாள் தவணையாக இருந்த ஒரு கோயிலுக்குப் போயிருந்தோம். அங்கு எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு! வீட்டிலிருந்து அரைமணி நேரப் பயண தூரத்திலே இருந்தும், என்னவர் தினமும் இதே வழியிலேயே அலுவலகம் சென்றும், இந்த ஸ்வாமிநாராயண் மந்திருக்குச் செல்ல எங்களுக்கு நான்கு வருடங்கள் பிடித்திருக்கின்றன. :) சரி வாருங்கள், என் பார்வையில் கோயிலை ஒரு சுற்று வரலாம்! 
ஶ்ரீ ஸ்வாமி நாராயண் என்பவர் ஒரு விஷ்ணு பக்தர், ஞானஷ்யம் பாண்டே என்ற பெயரில் உத்தர்ப்ரதேஷ் மாநிலத்தில் பிறந்து சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, 7 வருடங்கள் இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து குஜராத் மாநிலத்தில் கோயில் அமைத்தவர். அவரது இயக்கம் BAPS (Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha)  என்ற பெயரில்  பல இடங்களில் வேர்விட்டுப் பரவியிருக்கிறது. குஜராத், நியூடெல்லியில் மிக பிரம்மாண்டமான ஆலயங்கள் உள்ளன. இது மட்டுமில்லாமல் லண்டன், ஹூஸ்டன், ஷிகாகோ, அட்லாண்டா போன்ற இடங்களிலும் இவரது கோயில்கள் உள்ளன.  சலவைக்கற்களாலும், க்ரானைட் கற்களாலும் இழைத்து அழகழகான சிற்பங்களுடன் பார்த்த விழி பூத்துப்போகும்படி அழகான கட்டக்கலையுடன் மிளிர்கிறது இந்தக்கோயில். 

பார்க்கிங் லாட்-ல் காரை நிறுத்திவிட்டு வருகையில் முதலில் நம்மை எதிர்கொள்கிறது "ஹவேலி" என்ற பெயருடன் விசிட்டர் சென்டர்! கட்டிடத்தின் உள்ளேயும் கேரளத்தில் மரவேலைப்பாடுகளை நினைவுபடுத்தும் நுணுக்கமான சிற்பங்களுடன் உள்ளது. இங்கே அழகிய சிற்பங்கள், கைவினைப்பொருட்கள், மற்றும் இந்திய மளிகைப் பொருட்கள், இனிப்புகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.  


இங்கிருந்து நாங்கள் வாங்கிவந்தது ஒரு யானையும், பூந்தி லட்டுவும்! லட்டு காலியாகிட்டதால் யானையார் மட்டும் உங்களைக் காண வந்துள்ளார்! :)

ஶ்ரீ ஸ்வாமி நாராயண் மந்திர் - பளிங்காலும் க்ரானைட் கற்களாலும் இழைத்து கட்டப்பட்ட கோயிலின் முன்னால் நட்சத்திரவடிவில் ஒரு செய்குளம் உள்ளது. அவ்வப்போது நீரூற்றுகள் நட்சத்திரக்குளத்தில் ஆங்காங்கே எழுந்து நடனமாடி அமைதியாகின்றன. நாங்கள் சென்றது ஒரு பொன்மாலைப் பொழுதாகப் போனதால் நிறையப் படங்கள் எடுக்கும்முன் இருள் கவிழ்ந்துவிட்டது.
இருளானாலும் விளக்கு வெளிச்சத்தில் கோவில் தகதகவென ஜொலித்தது.  படிகளில் ஏறி கோவிலின் உள்ளே நுழைகையிலேயே, "ப்ளீஸ் மெய்ன்டெய்ன்  சைலன்ஸ்" என்ற பலகைகள் வரவேற்கின்றன. உள்ளேயும் ஆங்காங்கே "சைலன்ஸ் ப்ளீஸ்" என்ற போர்டுகளைப் பிடித்தவண்ணம் ஆட்கள் நிற்கிறார்கள். ஆனாலும் நம்மூர் ஆட்களை கன்ட்ரோல் செய்ய இயலுமா? ;)

ஸ்வாமி நாராயண் அவர்களின் திருவுருவங்கள், ராதா-கிருஷ்ணர், ராமர்-சீதை-லக்‌ஷ்மணர், சிவன் - பார்வதி இவர்களையெல்லாம் தரிசித்துவிட்டு, கோயிலினுள்ளே உள்ள சிற்பங்களை வாயைப் பிளந்து பார்த்துவிட்டு,  உடன்வந்த இரண்டு நண்பர் குடும்பத்துடனும் இருட்டுக்குள்ளேயே ஃபோட்டோஷூட்-ஐ முடித்துவிட்டு கிளம்பினோம்.
விசிட்டர் சென்டர் அருகிலேயே உணவகம் இருக்கிறது. பூண்டு-வெங்காயம் சேர்க்காத உணவுகள் குறைந்தவிலையில் விற்பனை செய்கிறார்கள்.  நீளமான க்யூவில் நின்று பராத்தா, பனீர் கறி, கமன் டோக்ளா, ஸ்வீட், லஸ்ஸி, ஃப்ரைட் ரைஸ் என்று ஆளுக்கொரு ப்ளேட் வாங்கி ருசித்துவிட்டு, லட்டும் யானையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினோம். ஆக மொத்தத்தில் புத்தாண்டு ஒரு புதிய விதமான கோயிலில் துவங்கியிருக்கிறது. :) 
~~~
இந்தக் கோயில் மாலிபு பாலாஜி கோயில்! கிறிஸ்துமஸ் அன்று சென்றிருந்தோம், அழகாக வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தார்கள். என்னவர் எடுத்த படத்தை உபயோகிக்காமல் இருந்தால் எப்படி? மஹி'ஸ் ஸ்பேஸ்னு பேரடிச்சு பப்ளிஷும் பண்ணிட்டேன்! ;)
~~~
Holliday Bakes, Butter Biscuit & Coconut Biscuit
எல்லாரும் எடுத்துக்குங்க, அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! 

பி.கு. ஸ்வாமி நாராயண் மந்திர் பற்றிய மேலதிகத்தகவல்கள் அறியவிரும்பினால் அங்கேயே இரண்டு இடங்களில் இணைப்பு கொடுத்திருக்கிறேன், க்ளிக் செய்து பார்க்கவும்.  நன்றி! 

Tuesday, June 11, 2013

வானம் எனக்கொரு போதிமரம்..

வானம் எனக்கொரு போதி மரம்.. - நாளும்
எனக்கது சேதி தரும்!

அதுக்காக நான் புத்தர் அளவுக்கு பெரிய ஆளெல்லாம் இல்லீங்க! :))))  சிலநாட்கள் முன்பு சென்று வந்த ஒரு பயணத்திலிருந்து ஒரு சில படங்களை இங்கே பகிர்கிறேன்.

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!!
தனிமை நாடி ஏகாந்தமாய் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் காதல் ஜோடி... [அவங்களையும் விடாம படம் எடுத்தியான்னு நீங்க பல்லக் கடிக்கிறது கேக்குது, ஆனா நான் வெகு தூரத்திலிருந்துதானுங்க எடுத்தேன், ப்ராமிஸ்! ;) ]
சூரியன் பஸிஃபிக் கடலில் அமிழும் நேரம், வானத்தில் மேகங்கள் நடத்திய ஊர்வலம் அற்புதமாய் இருந்தது!
ட்ரை பாட் சகிதம் என்னவர் கேமராவுடன் பிஸியாய்... 
கடந்து செல்வோரெல்லாரையும் பார்த்து குரைத்துத் தள்ளும் ஒரு அன்புத்தொல்லையோடு நான் அல்லாடிக்கொண்டு...
கையிலிருந்த ஐஃபோனில் எடுத்த படங்கள் இவை...இனிமேல் வருபவை என்னவர் கேமராவில் எடுத்தது.

இந்த இடம் ஏற்கனவே நீங்க பார்தத்துதான். சன்செட் க்ளிஃப்ஸ் நேஷனல் பார்க், சான்டியாகோ..முன்பு சென்றிருந்தபோது அலை ஓசையை வீடியோ எடுத்து வந்து பகிர்ந்திருந்தேன். இந்த முறை கேமரா என் வசம் இல்லாததாலும் கூடவே ஜீனோவை கட்டி மேய்க்கும் பொறுப்பும் சேர்ந்து கொண்டதாலும் கொஞ்சம் அடக்கி வாசிக்க :) வேண்டியதாகிப் போனது! :) :) 
சில மைல் தூரத்திற்கு கடலோரம் எல்லாம் இப்படியான உயரமான பாறைகள் நிற்கின்றன. பாறையை ஒட்டி சாலை..சாலையின் மறுபுறம் வீடுகள். தினமும் அங்கே சூரியன் மறைவது ஒரு அழகான காட்சி.
நாங்கள் சென்றிருந்த அன்று சூரியனுக்கு நாணம் மிகுந்துவிட்டது! மேகங்களின் பின்னால் ஒளிந்தவாறே நைஸாக கடலுக்குள் இறங்கிவிட்டார்! :) 
மேகத்திரை விலக்கி வெளியே வருவார் என காத்திருந்தோம்..காத்திருந்தோம்!!
திரை விலகாமலே மேகங்களுக்குள்ளே மூழ்கியவாறே மேற்கில் அஸ்தமித்த சூரியன்..கொஞ்சமாய் தலைநீட்டிய ஏமாற்றத்தை மறைத்தவாறே நாங்களும் கிளம்பினோம். 

புகைப்படங்களை ரசித்தமைக்கு நன்றி! 

Tuesday, February 26, 2013

Lost & Found மற்றும் இன்ன பிற!

இன்று காலை பத்தரை மணி சுமாருக்கு வாக் போகலாம் என்று கிளம்பினேன். ரொம்ப குளிரும் இல்லாமல் சுள்ளென்ற வெயிலும் இல்லாமல் குளுகுளு தென்றல் அவ்வப்போது முகத்தில் செல்லமாக மோத இதமாக இருந்த நடையை ரசித்தவண்ணம் போய்க்கொண்டே இருந்தேனா....
..................
...........
......
...திடீரென மேலே படத்திலுள்ளவர் சாலையோரமாக நின்றிருந்தார். அருகில் ஆட்கள்  யாரையும் காணோம். அருகிலுள்ள வீடுகளைச் சேர்ந்தவரா, இல்லை வெறெங்காவதிருந்து இங்கே வந்தவரா எதுவும் தெரியவில்லை. "பக்கத்தில் வா!" என்று கூப்பிட்டதும், கொஞ்சம் பயப்பட்டாலும் சிறிது நேரங்கழித்து அருகில் வந்தார்.  கழுத்தில் ஒரு காலர் இருந்தது, எங்கிருந்தோ தொலைந்துதான் போயிருக்கிறார் என அவர் முகம் மற்றும் நடை-பாவனைகளில் இருந்து தெரிந்தது. 

நானோ நடந்து போயிருக்கிறேன். இவரை என்ன செய்வது..காரில் போயிருந்தால் கூட அப்படியே அமுக்கி:) காரில் அடைத்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று பார்த்திருக்கலாம். அப்படியே அம்போவென விட்டுப் போக மனம் வரவில்லை..என்ன செய்வதென விளங்கவும் இல்லை. உடனே என்னவருக்கு ஒரு தொலைபேசினேன், அதிசயமாக அவரும் போனை எடுத்தார். என்ன செய்வதுன்னு மறுபடியும் குழம்பி..சரி அருகில் இருக்கும் அனிமல் ஷெல்டருக்குத் தகவல் கொடுப்போம் என முடிவானது.
அதற்குள்ளாக இவர்(ரிக்கி) எனக்கு முன்னால் கொஞ்சம் நடப்பதும், பின்னால் போய் மறுபடி என்னிடம் நடந்து வருவதுமாக இருந்தார். பின்னங்காலில்  ஒன்று ஏதோ வலி இருக்கும் போலும், அவ்வப்போது 3 காலிலும் நடந்தார். இப்படியாக இருவரும் நடந்து நடந்து வால்மார்ட் அருகில் வந்துவிட்டோம். அதற்குள் அருகில் இருந்த அனிமல் ஷெல்டருக்கு போன் அடித்து பேசினால், லொகேஷன் கேட்டதும் அவர்கள் " நீங்க ஆரஞ்ச் கவுன்டி அனிமல் ஷெல்டருக்கு போன் பண்ணுங்க, இது  எங்க ஏரியா இல்லை" என்று சொல்லி தொலைபேசி எண்ணை கொடுத்தார்கள்.

இத்தனைக்கிடையிலும் எங்க நடை  நிற்கவில்லை..சாலைகளைத் தாண்டுகையில் ரிக்கி அகஸ்மாத்தாக சிக்னல் எல்லாம் கண்டுக்காம அவர் இஷ்டத்துக்கு ஓடினார். நான் பக்-பக்னு துடிக்கும் இதயத்தை வாய்வழியே வெளியே கொண்டுவந்திரக்கூடாதேன்னு கஷ்டப்பட்டு சாலையைக் கடந்தேன். பிறகொருமுறை சமர்த்தாக என் பக்கத்தில் வந்து, சிக்னல் விழுந்ததும் பவ்யமாக என்னுடனே நடந்தார். அப்படியே வால்மார்ட் பார்க்கிங் லாட் பக்கம் வந்ததும், ஒரு காரில் இருந்த பெண்மணி அவசரமாக "இஸ் இட் யுவர் டாக்" என கேட்டவாறே ஓடிவந்தார். தான் சிலமைல்கள் தள்ளி குடியிருப்பதாகவும், அவர் வீட்டருகில் ஒரு நாய்க்குட்டி காணமல் போனதாகவும் சொன்னார். தொலைந்து போன ஆள்தான் இந்த ரிக்கி!

இருவருமாகச் சேர்ந்து ரிக்கியை கேட்ச் பண்ணி;) அந்தப் பெண்ணின் காரில் உட்காரவைத்தோம். அவன் கழுத்தில் இருந்த காலரை செக் செய்து அதிலிருந்த எண்ணுக்கு தொலை பேசினால் அது fax number! grrrrrrrr! பிறகு தானே கூட்டிச் சென்று ரிக்கியை வீட்டில் சேர்த்து விடுவதாக கூறி சென்றுவிட்டார். ரிக்கி வீட்டுக்குப் போயிட்டார். சுபம்! :)
 ~~
சரி, ரிக்கிதான் வீட்டுக்குப் போயிட்டானே, வாங்க நம்ம பக்கத்தில் இருக்கும் டாலர் ஷாப்-கு போவோம். :) வாக்கிங் வருகையில் இந்தக் கடைக்குள் நுழைஞ்சு கொஞ்சம் டைம் பாஸ் பண்ணிட்டுப் போறது வழக்கம். ஹிஹி!
 வண்ண வண்ணமாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த பூஜாடிகள் கண்ணைக் கவர்ந்தன. க்ளிக்கிட்டேன். :) 

அப்படியே அந்தப் பக்கம் வந்தா...என்னடா இது, வெள்ளை வெள்ளையா இருக்கேன்னு உத்துப் பாத்தேன். கரும்பு...ஆஹா! :)
என் கண்களையே நம்ப முடியாம கண்ணைக் கசக்கிப் பார்த்தேன்..ஆமாங்க, கரும்பேதான்! PEELED SUGAR CANE என்று எழுதி சிறு பாக்கட்களாக போட்டு வைச்சிருந்தாங்க. ஒருமுறை ஆசையா கரும்புன்னு வாங்கி, அது தோசியாப் போனதால் ரிஸ்க் எடுக்கலை நானு. போட்டோ மட்டும் எடுத்துகிட்டு நடையக் கட்டினேன். ;) :)
வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும்..முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்!! :)))
 ஆனால் எங்க ஊரில்,
வரும் வழியில் இளவெயிலில் புதுமலர்கள் தினம் நனையும்..முகிலெடுத்து முகம் துடைத்து மாலை வரை நகை புரியும்!! :)))


வைரமுத்துவின் வைரவரிகளோடு, SPB-யின் இனிய குரல்..இதயம் வரை நனையும் பாடல்..பயணங்கள் முடிவதில்லை-படத்திலிருந்து! கீழே படத்தில் எங்க வீட்டுப் பால்கனியில் "விழாக் காணும் வானம்"! :)
 உலாப் போகும் மேகம் கனாக் காணுமே..
விழாக் காணுமே வானமே! 
வான வீதியில் மேக ஊர்வலம்..
காணும் போதிலே ஆறுதல் தரும்!

Sunday, February 3, 2013

அனுவாவி - நிறைவுப் பகுதி

கடைசி சிலபல படிகள் சற்றே நெட்டுக் குத்தாய் இருக்கும் என்று அங்கே இளைப்பாறிக் கொண்டிருந்தோம், வாங்க..ஒரே மூச்சாய் ஏறிப் போயிரலாம்! :)
 
படிகள் ஏறியதும் ஒரு சமதளப் பகுதி..அங்கிருந்து இடப்பக்கம் சென்றால் தண்ணீர்க்குழாய்கள், மடப்பள்ளி இருக்கின்றன, வலப்பக்கம் கோயிலின் அலுவலகம் இருக்கிறது. சில்லென்ற அனுவாவி தண்ணீரில் முகம் கைகால் கழுவி, ஆசைதீர நீரையும் பருகிவிட்டு மீதமுள்ள கொசுறுப் படிகளும் ஏறினால் சுப்பிரமணியரின் தரிசனம் கிடைக்கிறது.
கோயிலின் உள்ளே படங்கள் எடுக்க அனுமதியில்லை என்பதால் அப்படியே வெளியே எடுத்த சிலபடங்கள் உங்கள் பார்வைக்கு..
 
படியேறி கோயிலுக்கு வந்தோம் அல்லவா, ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், நவக்கிரக தரிசனங்கள் முடிந்து ஆஞ்சநேயர் சந்நிதிக்கருகில் இருக்கும் படிகளில் ஏறி மடப்பள்ளியின் மேல்தளத்திற்கு வரலாம். அங்கிருந்து எடுக்கப்பட்ட படம்தான் மேலே...
மடப்பள்ளியின் மேல்தளத்திலிருந்து செல்லும் பாதையின் ஒரு பக்கமாய் அனுவாவி சுனை இருக்கிறது. சுனையில் தண்ணீர் நிறைய இருந்து நான் பார்த்ததில்லை, பேருக்கு கொஞ்சம் ஓடிக் கொண்டிருக்கும். அங்கிருந்து சற்றே வலப்புறம் சென்றால் மேற்கண்ட படத்தில் இருக்கும் சிறுகோயிலுக்கு படிகள். முன்பெல்லாம் படிகள் இருக்காது. ஆனாலும் சர்க்கஸ் பண்ணி(!) :) தள்ளாடி மேலே சென்று அங்கிருக்கும் சிறு கோயிலைப் பார்ப்போம். இப்பொழுது கோயிலைப் புணரமைத்து படிகளும் கட்டிவிட்டார்கள்.
அப்படியே கீழே இறங்கி வந்தால் கோயிலைச் சுற்றி சில அரளி- தங்க அரளிப் பூச்செடிகள் நிற்கின்றன. அங்கிருந்து கீழே தெரியும் ஊரும், மலைச்சாரலும்!
 
கீழே இறங்கிவருகையில் இளைப்பாறக் கட்டப்பட்ட மேடையை ஒரு க்ளிக்க்க்க்க்! :)
இறங்கியாச்சு..கோயில் வாசலில் ஆலமரங்கள் சூழ இருக்கும் திடல்..அந்த லாரி நிற்கும் இடம் தாண்டி சற்று தொலைவில்தான் லலிதாம்பிகை திருக்கோயில் இருக்கிறது. நாங்கள் போகும் நேரங்களில் பெரும்பாலும் கோயில் மூடப்பட்டிருப்பதால் இன்னும் அங்கே செல்லவில்லை. அப்படியே கிளம்பி மேட்டுப்பாளையம் ரோட்டை வந்து சேர்ந்தபோது மதிய உணவு நேரம் ஆகியிருந்தது.
சரவணபவன்-ல ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் கிளம்பி விமானத்தைப் பிடித்தோம். அவ்ளோதாங்க, அனுவாவி ட்ரிப்! :)
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்,
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய், உயிராய், கதியாய் விதியாய்க் 
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே!

Tuesday, January 29, 2013

அனுவாவி - பகுதி 1

மேற்குத் தொடர்ச்சி மலையின் சாரலில், கோவையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில். மலையும் மலை  சார்ந்த இடத்தில், பச்சைப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு அருள்பாலிக்கிறார் இந்தக் கோயிலில் இருக்கும் முருகப் பெருமான். அனு- அழகிய, வாவி -நீரூற்று, பிரித்துப் பார்த்துப் பொருள்கொண்டால் இதுவே அனுவாவியின் அர்த்தம். :)

கோவை காந்திபுரத்தில் இருந்து 26A என்ற பேருந்தில் காலை எட்டரை மணிக்கு ஏறி உட்கார்ந்தால் ஒரு ஒண்ணரை மணி நேரத்தில் கோயில் சென்று சேர்ந்துவிடலாம். இது பேருந்தினை நம்புவோருக்கு! :) இருசக்கர - நான்கு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு ஆயிரம் வழிகள். தடாகம் ரோடு வழியாக வரலாம், அல்லது கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ், துடியலூர், வடமதுரை இப்படியான ஊர்களில் இருந்து மேற்காகச் செல்லும் குறுக்குச் சாலைகளில் நுழைந்து ஆங்காங்கே வழி கேட்டுக்கொண்டே கோயில் போய்ச் சேர்ந்துவிடலாம். :)) 

எங்கள் வீடு கோயிலில் இருந்து அதிகபட்சம் 10 கிலோமீட்டர் தூரம்தான் இருக்கும். பள்ளிக் காலங்களில், சோறு கட்டிக்கொண்டு, அடித்துப் பிடித்துக் கிளம்பி 9மணிக்கு வரும் 26A பிடித்து கோயிலுக்குப் போவோம். அப்பொழுதெல்லாம் அடிவாரத்தில் இருக்கும் லலிதாம்பிகை அம்மன் கோயில் இருக்கவில்லை. மலையேறி, முருகரை தரிசித்துவிட்டு, புளிச்சோறு- கட்டுசாதங்களை ஒரு புடி புடிச்சுட்டு, குளுகுளுன்னு வீசும் காற்றில் இளைப்பாறிவிட்டு   வீடு திரும்புவோம். இப்பொழுது காலங்கள் மாறிவிட, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பைக்கையோ காரையோ எடுத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் போய்விட முடிகிறது.
எங்கூரில் இருந்து (எந்த ஊருன்னு கேக்காதீங்க, ;), 2வது பாரால சொல்லியிருக்கும் ஊர்களில் ஒண்ணுதான், ஹிஹி!) மேக்கால போகும் ஒரு குறுக்குச் சாலையில் செல்கையில் சாலையோரம் வாழைத்தோப்பும், பச்சைக்குடை பிடிக்கும் மரங்களும்! 
வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் கொஞ்சம் தொலைவு சென்றதும், அனுவாவி கோயிலுக்குத் திரும்பும் சாலை..
போகும் வழியெல்லாம் இருபுறமும் செங்கல் சூளைகள். குவித்து வைக்கப்பட்ட செம்மண்ணும், பச்சைக் கற்களும், சூளையில் வேகும் கற்களுமாய் நிறைந்திருக்கும். 
  
 
கோயிலின் முன்னால் பெரீஈஈஈய்ய மைதானம் போல திடல்..பெரீய்ய ஆலமரம் ஒன்று நிற்கிறது. அதற்கு முன்பாகவே இடப்பக்கமாக லலிதாம்பிகை கோயில். அழகானவாயிலின் அருகே வேப்பமரம், வலப்பக்கம் அகத்தியர் சித்த வைத்தியசாலை இருக்கிறது.

சிறிய குன்றின் மேல்தான் கோயில் இருக்கிறது. படிகளும் ரொம்பவும் செங்குத்தாக இல்லாமல்தான் இருக்கும். வழியில் ஆங்காங்கே விநாயகர்- இடும்பன் இப்படி சந்நிதிகளும், திண்ணைகளும், மரங்களையொட்டிய மேடைகளும் இருக்கின்றன. படியேறுவோமா? ரெடி, ஒன்...டூ..த்ரீ...ஸ்டார்ட்! :)
படியேறிகிட்டே, அப்படியே பின்னால் திரும்பிப் பார்த்தால்...மேற்குத்தொடர்ச்சி மலை எல்லை கட்ட, தென்னைமரங்களும் எட்டிப்பார்க்க ஒரு வியூ!
இன்னுங்கொஞ்சம் மேஏஏஏஏலே போயாச்சு..இப்ப அடிவாரத்தில் இருக்கும் வீடுகளும் தோட்டங்களும் சிறு சிறு புள்ளிகளாய்த் தெரிகின்றன. 
ஆடிப்பாடி(?!!) :) 90% ஏறியதும் வரும் இடம்தான் மேலேயுள்ள படம். Elevated view-ல மந்தஹாசம் புரிந்தபடி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்..மேல ஏறி மயில் மேல உக்காந்துகிட்டு, "You did it"! என்கிறாரோ?! :)  இங்கிருந்து ஒரு பத்திருபது படிகள் நல்லாவே உசரமா இருக்கும். அதற்கு எச்சரிக்கை  பண்ணத்தான் இம்புட்டு அழகாச் சிரிக்கிறாருன்னு நினைக்கிறேன். அவ்வ்வ்வ்! தம்கட்டி ஏறிடுவோமில்ல? ஏறிப்போனால் அங்கேயே அனுவாவியின் குளிர்ந்த நீரைப் பருகலாம்.

படங்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அவை அடுத்த பதிவில்.

பி.கு. ஆசையாசையாகப் படமெடுத்து வந்து பிறகு ஆர்வம் குறைந்துபோய் ஹார்ட் ட்ரைவில் தூங்கிக் கொண்டிருந்த படங்களைத்  தேடியெடுத்து இங்கே பகிரவைத்த இன்ஸ்பிரேஷன் பதிவு இங்கே. :)

Thursday, December 27, 2012

Christmas 2012

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸுக்கு முன்பு ஒருவாரம் அருகில் இருக்கும் ஒரு கடற்கரையில் boat parade இருக்கும். வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகள் இரவு நேரத்தில் அணிவகுத்துச் செல்வது கண்களுக்கு விருந்து!
கடந்த ஞாயிறன்று இந்த படகுப் பரேடின் கடைசிநாள். நல்ல குளிர், நல்ல ஜலதோஷம், இருந்தாலும் போட் பரேடைப் பார்த்துவிட்டோம்.

இருள், காமெராவைக் கையாளப் போதுமான உடல்நலமின்மை இவற்றால் படங்கள் சரியாக வரவில்லை. சுமாராக வந்த படங்கள் உங்கள் பார்வைக்கு..
ஒரு சில படகுகளில் சான்டா க்ளாஸ் மைக்கில் பேசியவாறும், Merry Christmas என்று வாழ்த்துச் சொல்லியவாறும் சென்றார்(கள்).
வீடியோ எடுத்தேன் என்றாலும் அது அவ்வளவு தெளிவாக வராத காரணத்தால் யுட்யூபின் உதவியை நாடினேன். தெளிவான வீடியோக்கள் பல கிடைத்தன. அவற்றில் ஒன்று இங்கே.. நாங்கள் ரசித்தது, நீங்களும் ரசிக்க!


க்றிஸ்மஸூக்கு ஒரு இனிப்பும்...
காரமும்...
 இனிப்பு- தேங்காய் பிஸ்கட், காரம்- ரசவடை...தேங்கா பிஸ்கட் ரெசிப்பி விரைவில் வெளியிடப்படும். ரசம் + வடை = இதற்கு ரெசிப்பி உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். ;) :)

Friday, October 19, 2012

ஹோம், ஸ்வீட் ஹோம்!

இரண்டு மாதம் கோவையில் இருந்துவிட்டு கிளம்பும் நாள் வந்ததும், வானத்துக்கே பொறுக்காமல் இடி இடித்து, மின்னல் கொட்டி முழக்கி, மழைக்கண்ணீர் விட்டு அழுது என்னை வழியனுப்ப...
சென்னை வந்திறங்கி, ஏர்போர்ட் வந்த அன்புள்ளங்களுடன் சிலமணி நேரம் செலவிட்டபிறகு, மீண்டும் தன்னந்தனியே...

 
 பயணித்து, ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தாகிவிட்டது.
ஹோம், ஸ்வீட்ஹோம்! :)

/////போன தடவை ஒரு மாசம் இருந்ததுக்கே மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி சுத்திகிட்டு கவிதை எல்லாம் எழுதி எல்லாரையும் சோகமா ஏங்க வெச்சீங்க. இந்த தடவை ரெண்டு மாசத்துக்கு மேல இருந்திட்டு வந்து என்னெல்லாம் பண்ண போறீங்களோ :)) வி ஆர் waiting ///// இப்படி ஒரு (வா)சகி ஈமெயில்ல ஆர்வமா  கேட்டிருக்காங்க!! :):):)

ஆனா பாருங்க, ஆசை  தீர ஊரில் இருந்துவிட்டு வந்ததால எல்லாரையும் சோகமா ஏங்க வைக்கற அளவுக்கு எழுத சரக்கு தேறாது! விருந்தாளிகள் வருவதால் அடுத்த வாரம் வரை கொஞ்சம் பிஸீ..அதுக்குள்ள என்னென்ன ஆகப்போகுதோ, பொறுத்திருந்து பார்ப்போம், சரீங்களா?! :))))))))

LinkWithin

Related Posts with Thumbnails