Showing posts with label தோட்டம். Show all posts
Showing posts with label தோட்டம். Show all posts

Sunday, June 30, 2019

ஜூன் 2019

நாட்களும் மாதங்களும் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன. மாதமொரு முறையாவது பதிவு போடவேண்டுமென்று நினைத்து, தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு ஜூன் 30-ஆம் தேதி இரவு 10.43க்கு ஒரு பதிவை தட்டிக்கொண்டிருக்கிறேன். :) :) :) 

இங்கே பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை ஜூன் 13ஆம் தேதி முதல் துவங்கியதால் ஸ்கூல் கிளம்(ப்)பும் அவசரம் இல்லை..ஆனால் நாள் முழுதும் 2 குட்டீஸை கட்டி மேய்க்கும் வேலை தூள் பறக்கிறது. கூடவே மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி-யும் சேர்ந்துகொள்ள ஜூன் மாதம் வெகுவேகமாகப் பறந்துவிட்டது, ஜூலை இப்பவே எட்டிப்பார்க்கிறது. ;) 

சரி, இந்தப் பதிவில் மீண்டும் தோட்டத்தில் விளைந்த காய்களைக் காண்போமா?? 
 கேரட்..ஷார்ட் & ஸ்வீட் வகை விதைகள், டிசம்பர் 2018 கடைசியில் நட்டது. ஜூன் மாதம் அறுவடைக்கு தயாரானது. கேரட் கிழங்குகள் குட்டிக்குட்டியாக, கொழுகொழுவென்று இருந்தன. ஷார்ட் வெரைட்டி என்பதால் நீளமில்லை..சுவை நல்ல இனிப்பாக இருந்தது. ஒரு பேக்கட் விதைகள், முதல் அறுவடையில் சுமார் இரண்டரைக்கிலோ கேரட் கிடைத்தது. அதன் பின்னர் தேவைக்கேற்ப பறிக்கிறேன். லயாவின் ஆசிரியைக்கு ஒரு முறை, பக்கத்திலிருக்கும் நண்பிக்கு ஒரு முறை என பறித்திருக்கிறேன். இன்னும் மீதமிருக்கின்றன. நாளைக்கு மீண்டும் கொஞ்சம் பறிக்கலாம் என்று எண்ணம்.

முதன்முறையாக இத்தனை கேரட்டுகள் விளைந்தது, நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமளவு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. இயற்கையன்னைக்கு ஒரு மிகப்பெரிய நன்றி!! :)


 அடுத்து ஃபாவா பீன்ஸ்/ ப்ராட் பீன்ஸ்..ஒரு செடி வாடிப்போயாகிவிட்டது. மீதமுள்ள ஒரு செடியில் பறித்த காய்கள். சுத்தம் செய்வது ஒரு வேலை என்றாலும், சுவை அமோகம். வெண்ணெய் போல வாயில் கரைகிறது.
பீன்ஸ் குழம்பு, சுடச்சுட இட்லியுடன்!! :) 
~~~
இந்த வருடம் என் பிறந்தநாள், திருமணநாளை மிகவும் ஸ்பெஷலாக்கியது கடல் தாண்டி, கண்டங்களையும் தாண்டி, ஆகாயவிமானத்தில் அழகாகப் பறந்து வந்த வாழ்த்து மடல்கள்!! 

இத்தனை சிரத்தையெடுத்து, வெட்டி, ஒட்டி, அழகாக உருவாக்கி, வாழ்த்துகளை தன் அழகுக்கையெழுத்தால் மேலும் அழகாக்கி அனுப்பிய என் அன்புத்தோழிக்கு..நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. I am so blessed to have you as a friend Aunty..Love you!!

இந்த வருடம் கோயில் தரிசனம் மிக நன்றாக இருந்தது. கூட்டமில்லை, குட்டிகள் இருவரும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டு சாமி கும்பிட்டார்கள். திரும்பி வரும் வழியில் இன்னொரு நண்பர் தம்பதி (அவர்களது திருமணநாளும் அதே ஜூன் 25)-யை உணவகத்தில் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி. நல்லதொரு நாளாக அமைந்தது. முகப்புத்தகத்தில் வாழ்த்திய அன்புநட்பூக்கள் இதையும் படிப்பீர்களென்ற நம்பிக்கையில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரிங்க, மணி 11 ஆகிருச்சு..நான் தூங்கப் போறேன்..மீண்டும் ஜூலையில் சந்திப்போம். நன்றி!

Tuesday, April 30, 2019

தோட்டம் 2019

இந்த வருடம் எங்க வீட்டு குட்டி தோட்டத்தின் விளைச்சல்! 

கடந்த வருட இறுதியில் பேக்யார்ட் -ஐ கொஞ்சம் செப்பனிட்டோம்..அப்போது காய்கறிகள் வளர்க்க என்று ஒரு இடத்தில் Raised bed மாதிரி ஒன்றை உருவாக்கினோம். கிறிஸ்மஸ் பயணம் கிளம்புமுன் நர்சரியில் இருந்து வாங்கி வந்த நாற்றுகளை நட்டுவிட்டோம். 

ஜனவரி 30ஆம் தேதி மஞ்சள் நிற காலிஃப்ளவரும், ரொமனஸ்கோ காலிஃப்ளவரும் மொட்டுக்கட்டி வளர ஆரம்பித்தன. 
மடமடவென ஒரு மாதத்தில் இரண்டு காய்களுமே வளர்ந்துவிட்டன. :) 

அந்த காய்களைப் பறித்துச் சிலநாட்கள் கழித்து ப்ரோக்கலி பூக்கள் வளர ஆரம்பித்தன. 

ப்ரோக்கலி இரண்டே வாரங்களில் வெகு வேகமாக வளர்ந்துவிட்டது. அதனுடன் நட்ட காலிஃப்ளவர் தான் கொஞ்சம் ஏமாற்றம்.. ஒரு பூவைத்தவிர மற்றவை சரியாக வளரவில்லை..பிறகு இணையத்தில்  இருந்து காலிஃப்ளவர் வளர ஒரே சீரான சீதோஷ்ணம் தேவை எனத் தெரிந்தது. எல்லாம் ஒரு அனுபவம்தான்! 
நூல்கோல் (knol kohl, kohlrabi) நாற்றுகளும் டிசம்பரிலேயே நட்டு வைத்ததுதான்..6 செடிகளில் சில காய் பெருக்காமல் முழுத்தண்டுமே பெருத்து வளர்ந்தன..ஒழுங்காய் வளர்ந்த ஒரு காயையும் பூப்பூக்கும் வரை விட்டு வைத்துவிட்டேன். அறுவடை எப்பொழுது செய்ய வேண்டும் என்ற அறியாமை..முதல் முறை வளர்க்கையில் பல பாடங்கள்!! இருப்பினும் கிடைத்த ஓரிரு காய்கள் சுவை அலாதியாய் இருந்தன.

அடுத்து வருவது Fava Beans / Broad beans செடி..நான் இதுவரை பார்த்திராத வண்ணம் இலைகளுடன் தளதளவென இருந்ததால் 2 நாற்றுகள் வாங்கிவந்தேன். அமைதியாக அழகாக வளர்ந்து பூக்கள் மலர ஆரம்பித்தன..பிறகு பார்த்தால் செடி பாட்டுக்கு மடமடவென வளர்ந்துவிட்டது. காய்கள் ஒன்றுமே வரக்காணோம்..திடீரென ஒரு நாள் பார்க்கையில் காய்கள் தட்டுப்பட்டன..தண்டின் ஓரத்திலேயே ஒவ்வொரு காயாய், வெண்டைக்காய் போல காய்கள் வளர்கின்றன. நூல்கோல் பறிக்க ஏமாந்துபோனதில் முதல் முறை ஃபாவா பீன்ஸை கொஞ்சம் இளசாகவே பறித்துவிட்டேன். கொஞ்சமாக இருந்ததினால் பிரியாணியில் போட்டு செலவழித்தாயிற்று. 


இரண்டாம் முறை பீன்ஸ் காய்களை பறித்தாயிற்று. கூடவே புழுக்கள் தொந்தரவு நிறைய இருக்கிறதால் பார்த்து பார்த்து அவற்றை பிடித்து நீக்கிக்கொண்டும், புழு தின்ற இலைகளை நறுக்கி வீசிக்கொண்டும் நாட்கள் நகர்கின்றன. 

டர்னிப் - குளிர்கால காய்கறி என்று அதுவும் போட்டிருந்தோம். தப்பிப்போய் தள்ளி விழுந்த ஒரு விதை மட்டும் நல்ல முற்றிய காயாய் விளைய, ஓரே இடத்தில் போடப்பட்ட மற்ற விதைகள் நெருக்கியடித்துக்கொண்டு வளர்ந்தன.
டர்னிப்பும் பூப்பூக்கத் தொடங்கவே சுதாரித்துக்கொண்டு இந்த வாரம் அவற்றையும் பறித்தாயிற்று.
அதிகம் எழுத நேரமில்லாததால் படங்களை நிறையச் சேர்த்து ஒரு பதிவு. இந்தக் காய்கறிகள் வளர்ப்பதைப் பற்றி ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கருத்துப்பெட்டியில் கேளுங்கள்..தெரிந்ததைப் பகிர்கிறேன். நன்றி!! :))) 


Friday, January 27, 2017

ப்ரோக்கலி


அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு "Raised Bed" Garden -ஐ உருவாக்கி, காய்கறிகள் வளர்க்கலாம் என ஆர்வத்தோடு செடிகள் வாங்கபோனால்...இந்தியக்காய்கறிகள் எல்லாம் கோடை விரும்பிகள், குளிர்காலத்தில் வரும் காய்கறிகள்தான் இப்போது வளர்க்கவேண்டும் என உரைத்தது. ;) :)  சரி பரவாயில்லை என்று வாங்கி வந்து அப்படி இப்படி என்று அவையும் வளர்ந்து அறுவடையும் செய்த பின்னர் ஒரு பகிர்வு.  

மேலே படத்தில் நர்ஸரியிலிருந்து வந்து மண்ணில் நட்ட உடன், நாற்றுகள்..வலப்புற ஓரத்தில் இருப்பதுதான் ப்ரோக்கலி நாற்றுகள். சுமார் ஒரு மாதம் ஆனபின் செடிகள் உயிர் பிடித்து வளர ஆரம்பித்த போது..

அடுத்த ஒரு மாதமும் கடந்தது..செடிகள் செழித்து வளர்ந்தன. காய் பிடிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவரவில்லை...
திடீரென்று ஒரு நாள் காலை பார்க்கையில்..
நட்டிருந்த அரை டஜன் ப்ரோக்கலி நாற்றுகளிலும் குட்டிக்குட்டியாய்ப் ப்ரோக்கலி மொட்டுக்கள் வந்திருந்தன..!! :) :D :) 

நாட்கள் நகர நகர ப்ரோக்கலி மொட்டுக்கள் அழகான :) ப்ரோக்கலி-யாக வளர ஆரம்பித்தன..
இன்னுங்கொஞ்சம் ப்ரோக்கலி மொட்டுக்கள் பெரிதானதும், கட்டுக்கள் போட்டு,  காய் முற்றும் வரை பத்திரப்படுத்துவோம் என நினைத்திருந்த நேரம் ..
மழை வந்தது..வெளியே கால் வைக்க முடியாத அளவு சேறு, குளிர்..எல்லாம் காய்ந்து எட்டிப்பார்க்கையில்...
அணில்பிள்ளைகள் வந்து தம் கைவரிசையைக் காட்டிப்போயிருந்தார்கள்!! :( :) :( 

மீதமிருந்த காய்களை செடியின் இலைகளால் மூடி ரப்பர் பாண்ட் போட்டு கட்டி வைத்தோம்..அடுத்த நாள் பார்க்கையில், 
அழகாக ரப்பர் பாண்டை- பிரித்து உள்ளே இருந்த ப்ரோக்கலிப் பிஞ்சு சுவைக்கப்பட்டிருந்தது!!! :) :) :( :)  இலைகளும் விட்டு வைக்கப்படவில்லை!! அவ்வ்வ்வ்வ்......!! 
ஆக மொத்தம் அணில்களும் நாங்களுமாக  50-50அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு, ஆளுக்கு மூன்று என்ற வகையில் ப்ரோக்கலிகளைப் பிரித்துக்கொண்டோம். மூன்றில் ஒரு ப்ரோக்கலி, முழுவதுமாக முற்றுமுன் பொங்கலுக்கு அறுவடை செய்யப்பட்டது. மீதமிருந்த இரண்டு காய்கள்..

நேற்று ஒன்றை பறித்து ...
வளைச்சுக்கட்டி ஃபோட்டோ எடுத்துட்டு...
சமைச்சுச் சாப்பிட்டாச்சு!! :)))) 
கடைகளில் வாங்கும் ப்ரோக்கலியை விட அருமையான சுவையில் சூப்பராக இருந்தது. நம்ம வீட்டில வளர்த்து, அணிலுக்கும் கொடுத்து நாமும் சாப்பிடும் சுவையே தனிதான்!! 
அக்டோபர் முதல் வாரம் நட்டு, ஜனவரி 26ஆம் தேதி அறுவடை செய்திருக்கிறோம், இன்னுங்கொஞ்சம் முன்னதாகவே பறித்திருக்கலாம்! ரீசண்ட்டாக  (எங்களுக்கு) அறிமுகமான ஒரு காயை வீட்டிலேயே வளர்த்து சமைச்சு சாப்பிடுவது ரொம்ப சந்தோஷமான அனுபவம்!! :)  உங்களுக்கு முடியுமெனில் முயற்சித்துப் பாருங்களேன்!! 


Thursday, September 22, 2016

கீரை வாங்கலையோ...கீரை!!

அமரந்த் சீட்ஸ்/ ராஜ்கிரா சீட்ஸ் (Amaranth seeds/Rajgira seeds) என்ற பெயரில் இங்கே இந்தியன் மளிகைக்கடைகளில் கிடைக்கும் விதைகளை வாங்கி விதைத்து கீரை வளர்க்கலாம் என்ற தகவல் தெரிந்ததால் முயற்சித்து பார்க்கலாம் என ஆரம்பித்த கீரை வளர்ப்பு பற்றிய பதிவு இது. 
பக்கத்து வீட்டுத் தோழியிடம் இருந்து கிடைத்த அமரந்த் சீட்ஸ்...கீரை விதைகள்.. 
என் பெண்ணின் குட்டிக்கைகள் உதவிசெய்ய,
இரண்டு சிறிய தொட்டிகளில் விதைத்தாயிற்று...கீரைகள் முளைவிட்டு வளரலாயின.
குட்டிக்கால்களுடன் குட்டிக்கீரைகள்!! :) கீரைகள் வளர்வதைக் கண்டு சற்றே பெரிய தொட்டிகளிலும் கொஞ்சம் விதைகள் தூவி வளர்ந்த கீரைகள். 
பறித்து, பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டாயிற்று. கீரைகளைப் பறிக்கையில் வேருடன் பறிக்காமல், தண்டுகளை மட்டும் நறுக்கிக் கொண்டால், மீண்டும் அதே தண்டிலிருந்து கீரைகள் துளிர்க்கின்றன. அப்படி இரண்டாவது முறை பறித்த கீரை..பருப்புடன் சேர்த்து கடைந்த கோவை ஸ்பெஷல்!! 
இரண்டாவது முறை நறுக்கிய பின் இப்படி இருந்த கீரைத்தொட்டி,
சில நாட்களில் இப்போது...
இப்படி இருக்கிறது.  
:) 
வீட்டிலேயே கீரை வளர்த்து சாப்பிட விரும்பும் வெளிநாட்டு வாசிகள் சிறிய தொட்டிகளில் இந்தக் கீரையை வளர்க்கலாம். எளிதில் முளைத்து வளர்கிறது. நாமே வளர்க்கும் காய்-கனி-கீரைகளின் ருசி அறிந்தவர்கள் கண்டிப்பாக முயற்சிக்கலாம்!! :D 

Friday, August 19, 2016

தக்காளியின் கதை..!

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? நாந்தான் தக்காளி பேசறேன்....நலம், நலமறிய ஆஆஆஆஆவல்!! :))))) 
என் பேரு பேபி டொமாட்டோ (எ) தக்காளி! எனக்கு இம்பூட்டு அயகான பேரை வச்சது எங்க வீட்டு லயா பேபி! ;) ;)
 
பூச்செடி வாங்க நர்சரிக்கு வந்தவங்க கண்ணில தளதளன்னு இருந்த நானும் கண்ணில படவே என்னையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. தக்காளிச்செடியே வாங்கக்கூடாதுன்னு முடிவுல இருந்தவுகளையும் மயக்கி, வீட்டுக்கு வந்தவளாக்கும் நானு! B-) 

வீட்டுக்கு வந்த சிலநாள் நானும் தொட்டியிலயே இருந்தேன்..அப்புறமா தரையை (ரொம்ப கஷ்டப்பட்டு) தோண்டி,  எனக்கு ஒரு புது வீடு கட்டி கொடுத்தாங்க. பார்க்க துளசி மாடம் மாதிரியே அயகான வீடு! எனக்கும் வீடு நல்லா புடிச்சுப்போச்சு...பூ பூத்து ஒரு (ஒரே ஒரு) பிஞ்சும் வளர்த்தேன். 

அப்பப்போ எங்க வீட்டு குட்டியம்மா  என்கிட்ட வந்து பேசுவாங்க. "வாட் இஸ் திஸ்? பேபி டொமாட்டோ" அப்படின்னு அவங்கம்மா சொல்லி கொடுக்கவும் அதை அப்படியே புடிச்சுகிட்டு வரும்போதெல்லாம் "ஹாய் பேபீஸ்..ஹாய் பேபி டொமாட்டோ!" அப்படின்னு பேசிட்டே வருவாங்க. அப்புறம் "பை பை பேபீஸ்!"-நு பொறுப்பா டாட்டா சொல்லிட்டும் போவாங்க.

செடியிலே ஒரே ஒரு காய்தான் இருக்குன்னதும், நிறைய காய் வர டெக்னிக்கு, அப்படீன்னு என்னோட இலைகளை எல்லாம் சரிபாதியா வெட்டி விட்டாங்க..அது மட்டுமா?? டெய்லி வந்து என்னை சுண்டி சுண்டி விட்டாங்க...அவ்வ்வ்வ்வ்!!! வலிக்க்க்க்க்கும்..ஹூம்!! எங்க வலியெல்லாம் ஆருக்கு புரியுது??! அம்மா வந்து சுண்டி விடறதும், என்னோட வலிக்கு மருந்து போடற மாதிரி பேபி லயம் வந்து "ஹாய் பேபி டொமாட்டோ!" அப்படின்னு சொல்லுறதுமா சில நாட்கள் போனது.

என்னதான் எண்ணையத் தடவிட்டு புரண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும்ன்றமாதிரி நான் ஒரே ஒரு தக்காளிதான் வளத்தேன். ஹிஹி..!! அந்த ஒரு தக்காளியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளர்ந்துச்சு. முகம் சிவந்துச்சு, பழுத்துச்சு..!! :)
தக்காளி பழுத்தாச்சு...பேபி வந்து பறிச்சாச்சு...அரிஞ்சு சமைச்சு சாப்ட்டும் ஆச்சு!! :D
இப்படியாக ஒரு முறைக்கு ஒரு தக்காளியாக எங்க வீட்டு தக்காளிச்செடி காய்ச்சுக்கொண்டு இருக்கிறாள். இரண்டாவது பழம் பழுத்தாச்சு! மூணாவது பிஞ்சும் வந்திருக்கு. யாருப்பா அங்க...கிலோ கணக்கில தக்காளி பறிக்கிறவங்க எல்லாம் எங்க தக்காளிப்பொண்ணைப் பாத்து கண்ணு போடாதீங்க!! அக்காங்க்க்க்க்க்க்க்க்க்க்!! ;) :) 

Monday, May 11, 2015

பூ பூக்கும் ஓசை..

மொட்டிலிருந்து ஒரு ரோஜாவின் பயணம்..
மொட்டவிழ்ந்த முதல்நாள்..
இரண்டாம் நாள்..இன்னும் கொஞ்சம் மொட்டு பாக்கியிருக்கிறது..
..இதோ ஆகிட்டது...முழுவதும் விரியத்தயார்!
"பப்பரக்கா"- என விரிந்த ரோசாப்பூவக்கா! :)
இனி வண்ணம் மங்கி...
உதிரும் முன்னே இன்னொரு பூ பூத்தாச்சு! :)

இந்த ஏழு நாட்கள் ரோஜாவுடன் பயணித்தமைக்கு மிக்க நன்றிகள்! 

LinkWithin

Related Posts with Thumbnails