Showing posts with label மீல்மேக்கர். Show all posts
Showing posts with label மீல்மேக்கர். Show all posts

Friday, May 11, 2012

மீல்மேக்கர் & பட்டாணி கறி / சோயா கீமா

ஆசியா அக்காவின் வலைப்பூவில் இந்த சோயா கீமா-வைப் பார்த்ததுமே செய்து பார்க்கவேண்டும் என்று கை துறுதுறுக்க, ஒரு ஞாயிற்றுகிழமை லன்ச்சுக்கு செய்துவிட்டேன். அவசரமாய் சமைத்ததில் சில மாறுதல்கள், கூட்டல்கள் நடந்தது, ஆனாலும் சுவை குறையவில்லை! ;)

தேவையான பொருட்கள்
மீல்மேக்கர் (சோயா உருண்டைகள்) -12
ஃப்ரோஸன் பட்டாணி-1/4கப்
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1
தக்காளி-2
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2டீஸ்பூன்
மல்லித்தூள் -1/2டீஸ்பூன்
சக்தி கறிமசாலா பொடி -1டீஸ்பூன்
***தேங்காய் விழுது கொஞ்சம் (விரும்பினால்)
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மல்லி-புதினா இலை சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை
1.சோயா உருண்டைகளை கொதிநீரில் 3 நிமிடங்கள் போட்டு கொதிக்கவிட்டு, குளிர்ந்த நீரில் அலசி பிழியவும். பிழிந்த உருண்டைகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துவைக்கவும்.

2.சிறிய ப்ரெஷ்ஷர் குக்கரில் எண்ணெய் காயவிட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு பச்சைவாசம் அடங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பிறகு தூள்வகைகளை சேர்த்து கிளறவும்.
3. தேங்காய் விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கி,
4. உதிர்த்த சோயா மற்றும் பட்டாணியையும் சேர்க்கவும்.
5. கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேகவிடவும்.

6. இரண்டு விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
7. நறுக்கிய மல்லி-புதினா சேர்த்து தண்ணீர் வற்றும்வரை கிளறி இறக்கவும்.
[பொரியல் தண்ணீராக இல்லாமல் கொஞ்சம் ட்ரையாக இருக்கவேண்டும், ஒருவேளை தெரியாம, தண்ணி அதிகமா வைச்சுட்டீங்கன்னா தண்ணீர் வற்றும்வரை குக்கரை அடுப்பில் வைத்து கிளறி இறக்குங்க! ;)]
8. சுவையான மட்டர்- சோயா கீமா ரெடி!

பருப்பு-ரசம்-சோயா பொரியல்-வடகம்- சாப்பாடு இவற்றுடன் ஒரு ஞாயிறு மதிய உணவு!
ஆசியாக்கா, சுவையான ரெசிப்பிக்கு நன்றி!

Wednesday, December 7, 2011

மினி மீல்மேக்கர் வறுவல்

இந்த முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கிச்சன்ல இருந்த மளிகை சாமான்களில் ஒரு பாக்கெட் என் கவனத்தைக் கவர்ந்தது. குட்டிகுட்டி உருண்டைகளா ப்ரவுன் கலரில் இருந்தது என்னன்னு என்னால யூகிக்க முடியல..அது என்னன்னு தெரிஞ்சதும் ஒரே ஆச்சரியமாப் போச்சு போங்க. மீல் மேக்கர்/சோயா சங்க்ஸ்/சோயா மீல் உருண்டைகள்தானாம் அது!

பாருங்களேன், நார்மல் சைஸ்ல இருக்க மீல் மேக்கருக்கும் மினிமீல் மேக்கருக்குக்கும் எவ்ளோ வித்யாசம்னு! க்யூட்டா இருக்கில்ல? :) இந்த வறுவல்ல அப்பளத்தை நொறுக்கிப் போட்டு, தக்காளி-வெங்காயம் போட்டு, லெமன் ஜூஸும் புழிஞ்சு சாப்ட்டா...சூஊஊஊப்பரா இருந்தது.

தேவையான பொருட்கள்
மினி மீல் மேக்கர்-1/2கப்
வெங்காயம்(மீடியம்சைஸ்)-1
பச்சைமிளகாய்-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
புதினா,மல்லி இலை-கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைத்துக்கொள்ள
தேங்காய்-1/4கப்
ஏலக்காய்-1
பட்டை-2"துண்டு
கிராம்பு-1
சோம்பு-1டீஸ்பூன்
பிரியாணி இலை-1
வரமிளகாய்-5

செய்முறை
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு மீல்மேக்கர் உருண்டைகளைப் போட்டு 3 நிமிடங்களில் எடுத்து தண்ணீரை வடித்து, குளிர் நீரில் அலசி வைக்கவும்.

வெங்காயம்,பச்சைமிளகாய்,மல்லி-புதினாவை பொடியாக நறுக்கிவைக்கவும்.

அரைக்கக் கொடுத்தவற்றை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவிட்டு, வெங்காயம்-மிளகாய்,புதினா,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் மினி மீல் மேக்கரை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

அரைத்த மசாலாவை ஊற்றி அரை கப் தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

மசாலாவில் தண்ணீர் வற்றியதும் அடுப்பை ஸிம்மில் வைத்து வறுவல் ட்ரையாக வரும் வரை அடிபிடிக்காமல் கிளறி, மல்லித்தழை தூவி இறக்கவும்.

சுவையான மீல் மேக்கர் ஃப்ரை ரெடி. சாதம்,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். அல்லது நாங்க சாப்பிட்டது போலவும் சாப்பிட்டுப் பாருங்க,சூப்பரா இருக்கும்!

மினி மீல் மேக்கர் இல்லைன்னா பெரிய சோயா உருண்டையிலும் செய்யலாம்..நான் எப்பவுமே அதில்தான் செய்வது..இந்தமுறை செய்தபொழுது எடுத்த படத்தை விட பழைய படம் நல்லா இருக்கு...நீங்க என்ன சொல்றீங்க?? :)

குறிப்பு
பெரிய மீல் மேக்கரை நீரில்லாமல் பிழிந்துவிட்டுத்தான் சமைப்பது வழக்கம், மினி மீல் மேக்கரை தண்ணீரில் கொதிக்கவிட்டு எடுத்தபோது அழகழகா முத்துப்போல:) இருந்தது. தண்ணீரைப் பிழிந்ததும் பரிதாபமா ஷேப்லெஸ்-ஆப் போனது! :-| அதனால் அப்படியே சேர்த்து செய்தேன், ருசியில் பெரியவித்யாசம் தெரியவில்லை.இருந்தாலும் பிழிந்துவிட்டு செய்யச்சொல்லி நட்பூக்கள் எல்லாரும் சொல்றாங்க..அடுத்த முறை பிழிஞ்சுருவோம்! :)

Monday, September 12, 2011

மீல் மேக்கர்-மஷ்ரூம் பிரியாணி

மஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோசிச்சு மீல் மேக்கரையும் மஷ்ரூமையும் சேர்த்து பிரியாணி செய்வோம்னு செய்துபார்த்தேன். சூப்பரா இருந்துது காம்பினேஷன்! :) பிரியாணி- காளான்-சோயா எல்லாமே என்னவருக்கு மிகவும் பிடிச்சது, ஸோ, இந்தக் காம்பினேஷன் அடிக்கடி ரிபீட் ஆக ஆரம்பிச்சிடுச்சு எங்க வீட்டில்!

தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி -11/4கப்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-2
தக்காளி(சிறியது)-1
தேங்காய்ப்பால் பவுடர்-1டேபிள்ஸ்பூன்
எண்ணெய் + நெய் -4டேபிள்ஸ்பூன்

பட்டன் மஷ்ரூம்-6
மீல் மேக்கர்-12 உருண்டைகள்
புதினா,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-கொஞ்சம்
பிரியாணி மசாலா-11/2டேபிள்ஸ்பூன்
தயிர்-2டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள்-1டீஸ்பூன்
உப்பு

பொடிக்க
இஞ்சி-சிறுதுண்டு
பூண்டு-5பல்
பட்டை-3" துண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-1
பிரியாணி இலை-1

செய்முறை

அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாயையும் நறுக்கி வைக்கவும்.

மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் மூன்று நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும்.

பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் கொறகொறப்பாகப் பொடித்துவைக்கவும்.

காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.

குக்கரில் எண்ணெய்+நெய் காயவைத்து வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம்-மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும்.

வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை (விசில் இல்லாமல்) மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.

தேங்காய்ப்பால் பவுடரையும் ஊறவைத்த அரிசியையும் சேர்த்து 11/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடவும்.

தீயின் அளவை மீடியமுக்கு அதிகரித்து ஏழு நிமிடங்களில் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கவும். (விசில் வராவிட்டாலும் பரவாயில்லை, ஏழு நிமிடத்தில் இறக்கி வைத்தால் ப்ரெஷர் குறைந்து குக்கரை திறக்கையில் பிரியாணி பதமாக வெந்திருக்கும்.)

கமகம பிரியாணி ரெடி! அப்புறம் என்ன..தயிர் பச்சடியோ, மிர்ச்சி கா சாலன் அல்லது எண்ணெய்க் கத்திரிக்காயோ சைட்ல வைச்சு ஒரு புடி புடிக்க வேண்டியதுதேன்! வாங்க சாப்பிடலாம்! :)

LinkWithin

Related Posts with Thumbnails