Friday, January 31, 2014

எடிபிள் கம் லட்டு/கோந்து லட்டு

ஒரு சில வருடங்கள் முன்பாகத்தான் "எடிபிள் கம் / சாப்பிடக்கூடிய கோந்து" பற்றி கேள்விப்பட்டேன், அதுவரை கோந்து என்றால் வேப்பமரத்தில் கத்தி கொண்டு கஷ்தப்பட்டு சுரண்டி எடுத்துவந்து நீர் ஊற்றி ஊறவைத்து 'கோந்து வாசனை'யுடன் உபயோகிக்கும் கோந்தும், பிறகு வந்த 'கேமல்' கம்-மும்தான் தெரியும்! :)
மராட்டி நண்பர்கள் வாயிலாகப் பெயர் அறிமுகமானாலும் இதனைப் பார்த்ததோ, சுவைத்ததோ கிடையாது. உடலுக்கு மிகவும் நல்லது, குளிர்காலத்தில் சாப்பிட உகந்தது (உடலுக்கு சூட்டைத் தரும் குணமுடையது இந்த கோந்து), இளம் தாய்மார்களுக்கு முதல் 40 நாட்கள் கட்டாயம் தருவோம். இடுப்பெலும்பு பலமாகவும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் வல்லது இந்த கோந்து  என்ற தகவல்களெல்லாம் தோழிகள் மூலம் அறிந்து கொண்டேன்.  என்னவரிடம் கோந்து வாங்கி வாங்க வாங்க வாங்க வாங்க என்று சொல்லி, ஒரு வழியாக எடிபிள் கம்மை கண்ணால பார்த்து, லட்டும் செய்து சுவைத்துவிட்டேன்! :))))    

உலர் பழங்கள், முந்திரி, பாதாம், வால்நட் மற்ற நட்ஸ் வகைகள், மக்கானா- என்ற பாப்கார்ன் போன்ற ஒரு பண்டம், ஏலக்காய், வெந்தயம் இப்படி ஊட்டச்சத்து மிக்க பொருட்கள், கூடவே தாராளமாக..ஏராளமாக நெய் இவற்றுடன் கடலைமாவு அல்லது கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதே இந்த லட்டு. கடலைமாவு ஜீரணிக்க கடினம் என்பதால் கோதுமை மாவு உபயோகித்து தோழியொருவர் லட்டு செய்துதந்தார் எனக்கு. [அதற்கு முன்பாக ரெசிப்பி கேட்கிறேன் பேர்வழி என்று முக்காமணி நேரம் நான் கேட்ட கேள்விகளில் நொந்து நூடில்ஸ்;) ஆகி அவராகவே லட்டைப் பிடித்துக் கொண்டுவந்து என் வாயை அடைத்தாரா என்பது அந்த "ஊப்பர்வாலா"-வுக்கே வெளிச்சம்! ஹிஹ்ஹிஹி..]

நேரடியாகக் கிடைத்த மீனைச் சாப்பிட்டுப் பசியாறிவிட்டே இருந்தால் எப்படி? நானும் மீன்பிடிக்கப் பழகவேண்டுமே? :) அதனால் வீட்டிலிருந்த பொருட்களோடு களமிறங்கினேன். அங்கங்கே ஷார்ட்கட்ஸ் போட்டு டெஸ்டினேஷனை ஒரு வழியாக ரீச் பண்ணினேன், ஆனால் ஏலக்காய், வெந்தயமெல்லாம் போட மறந்தாச்சு, அதனாலென்ன "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று மனசைத் தேத்திகிட்டு  வாங்க லட்டு செய்யப்போலாம்.. 
தேவையான பொருட்கள்
எடிபிள் கம் - 2 டேபிள்ஸ்பூன்
உலர் பழங்கள், நட்ஸ் வகைகள் -3/4கப்
கோதுமை மாவு-11/4கப்
சர்க்கரை-3/4கப்
நெய்-1/2கப்

செய்முறை
மிதமான சூட்டில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை காயவைத்து கோந்தைப் பொரித்து எடுக்கவும். [கோந்து பார்க்க பனங்கல்கண்டு போல இருக்கிறது, (வேப்ப மர கோந்தைப் போலவும்தான் இருக்கிறது, ஹிஹி..)பெருங்காயம் பொரிவது போல, பாப்கார்ன் பொரிவது போல பொரிகிறது இந்த கோந்து..கவனமாக எல்லாப் பக்கமும் பொரிந்து வரும்படி பொரித்தெடுக்கணும்! ]  
பாதாம்-வால்நட் இவற்றையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். 
திராட்சையையும் வறுத்து எடுக்கவும். 
பேரீட்சையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். 
பொரித்த பண்டங்கள் ஆறியதும், அவற்றுடன் நறுக்கிய பேரீட்சையையும் சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துவைக்கவும்.

கடாயில் இன்னுமிரண்டு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கோதுமைமாவைச் சேர்த்து வாசனை வர வறுக்கவும்.
[இதுக்கப்புறம்தான் நம்ம ஷார்ட்கட் போறோம்..யூஷுவலாக அடுப்பிலேயே வெகுநேரம் மாவை வறுத்துதான் லட்டு செய்வாங்க. நாம மைக்ரோவேவ் யூஸ் பண்ணிக்கலாம்! ;)]
மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் வறுத்த மாவு, சர்க்கரை சேர்த்து கலந்து மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கலந்து 4 நிமிடங்கள் சமைக்கவும். உடனே மைக்ரோவேவ்-ஐத் திறக்காமல் 3-4 நிமிடங்கள் விட்டு பிறகு திறந்து லட்டு கலவையை வெளியே எடுத்து நன்றாக கலந்து விடவும்.

பொடித்த நட்ஸ்-உலர் பழ கலவையைச் சேர்த்து கலந்து மீண்டும் 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
2-3 நிமிடங்கள் கழித்து மைக்ரோவேவ்-லிருந்து லட்டு கலவையை எடுத்து ஆறவிடவும்.
கலவை கை பொறுக்கும் சூட்டுக்கு ஆறியதும் லட்டுகளாகப் பிடித்துவைக்கவும்.
[குறிப்பு: இரண்டு கைகளிலும் நெய் தடவிக்கொண்டு லட்டுக்கள் பிடித்தால் அழகாக வரும். என்னைப் போல அவசரக் குடுக்கை + நளினமாக ஒரே கையில் பிடித்தால் படத்திலிருப்பது போல கோக்குமாக்கான உருண்டைகள் கிடைக்கும்! ;) அது உங்க வசதி!! :)]

தினம் ஒன்று என்ற வீதத்தில் இந்த உருண்டைகளை உண்ணலாம். அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால் கூடவே ஒரு கப் பாலைக் குடித்து லட்டுகளின் சூட்டைத் தணித்துக் கொள்ளவும். நன்றி, வணக்கம்! :)) 

Thursday, January 23, 2014

இப்படி இருந்த நான்..

...இப்படி இருந்த நீ
இப்புடி ஆகிட்டே! 
:) 
இந்த படங்கள் & செய்தி என்னவர் எனக்கு அனுப்பியது!! :))) எப்போதும் அலைபேசி கையிலேயே இருக்கும், அடிக்கடி/அவ்வப்போது பேசுவதும் செய்திகள் அனுப்பிக்கொள்வதுமாக இருப்போம் இருவரும். சமீப காலமாக அலைபேசி சைலண்ட் மோட்-ல் போனதால் அவர் அனுப்பும் ஐ-மெஸேஜ்களை உடனே பார்ப்பது தவறுவதும், போனில் அழைப்பு வருகையில் சத்தமில்லாமலிருப்பதால் கவனிக்காமல் விடுவதுமாக நடப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் வெறுத்துப் போய் வந்த அழகுக் குதிரைப் படங்கள்தான் இவை! :D
அம்மாவும் பெண்ணும்..
 
அப்பாவும் பெண்ணும்...
எங்க குட்டி தேவதையின் பெயரைத் தெரிந்துகொள்ள ஆவலாகக் கேட்ட அனைவருக்கும் நன்றிகள்! குட்டிப் பாப்புவின் பெயர் "லயா"
ஷார்ட் & ஸ்வீட்டாக, வடமொழி எழுத்துக்கள் இல்லாததாக, இருக்கும் நாட்டு மக்களும் உச்சரிக்க சுலபமாக, நட்சத்திரத்துக்கேற்ற எழுத்தில், நியூமரலாஜி எண்ணும் சரியாக என பல்வேறு கட்டுப்பாடுகளையும் நிறைவு செய்து எங்கள் மகளுக்கென அமைந்த பெயர் இது. 
இனிமேல் ஜீனோ புராணத்துடன் லயா அருண்குமாரின் பங்களிப்பும் என் வலைப்பூவில் அவ்வப்போது இடம்பெறும். :))) 

என்னுயிர்த் தோழன் படத்தில் வரும் இந்தப் பாடல் பாதிக்குப் பாதி வசனகவிதையாக வரும். படிப்பதற்கு(எனக்குப் பாடத் தெரியாதுங்கோ!! ;)) நன்றாக இருப்பதால் அடிக்கடி காக்கைக்குரலில் கத்தி(!) என் குட்டிப் பெண்ணைப் பயமுறுத்திக் கொண்டிருப்பேன், நீங்களும் கேட்டுப் பாருங்க! :)
~~~
தீபாவளி-கிறிஸ்துமஸ்-நியூ இயர் நாட்களில் மின்விளக்குகள் போட்டு அலங்கரித்திருந்தோம். வீடு மாறி செடிகள் எல்லாம் இறங்கி ஏறி கொஞ்சம் பாதிக்கப்பட்டு ஓரளவு சீராகி இருக்கின்றன. குளிர் என்பதால் குறிப்பிடத்தக்க அப்டேட் எதுவுமில்லை. இந்த வீட்டில் செடிகளுக்கு வெயில்  கிடைப்பதும் கொஞ்சம் குறைவாக இருக்கும் என நினைக்கிறேன். வசந்தம் வந்தால் தெரியும். 
வீட்டிலிருந்து கீழே இறங்கியதும் சாலை இருப்பதால் எங்க Furry Baby-யின் பாதுகாப்புக்காக..

கேட் போட்டு அவரை லாக் பண்ணிவிட்டோம். இருந்தாலும் வெளியே வந்து குரைப்பது குறையவில்லை! ;) 
~~~
பொறுமையா இங்கே வந்து இதுவரை படிச்சுட்டும் வந்துட்டீங்க..லட்டு சாப்ட்டுட்டுப் போங்க! :)
நன்றி! 

Monday, January 13, 2014

புத்தாண்டு-புகைப்படத்தொகுப்பு..


புது வருடத்தில் கோயிலுக்குப் போகலாம் என எண்ணி, பலநாள் தவணையாக இருந்த ஒரு கோயிலுக்குப் போயிருந்தோம். அங்கு எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு! வீட்டிலிருந்து அரைமணி நேரப் பயண தூரத்திலே இருந்தும், என்னவர் தினமும் இதே வழியிலேயே அலுவலகம் சென்றும், இந்த ஸ்வாமிநாராயண் மந்திருக்குச் செல்ல எங்களுக்கு நான்கு வருடங்கள் பிடித்திருக்கின்றன. :) சரி வாருங்கள், என் பார்வையில் கோயிலை ஒரு சுற்று வரலாம்! 
ஶ்ரீ ஸ்வாமி நாராயண் என்பவர் ஒரு விஷ்ணு பக்தர், ஞானஷ்யம் பாண்டே என்ற பெயரில் உத்தர்ப்ரதேஷ் மாநிலத்தில் பிறந்து சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, 7 வருடங்கள் இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து குஜராத் மாநிலத்தில் கோயில் அமைத்தவர். அவரது இயக்கம் BAPS (Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha)  என்ற பெயரில்  பல இடங்களில் வேர்விட்டுப் பரவியிருக்கிறது. குஜராத், நியூடெல்லியில் மிக பிரம்மாண்டமான ஆலயங்கள் உள்ளன. இது மட்டுமில்லாமல் லண்டன், ஹூஸ்டன், ஷிகாகோ, அட்லாண்டா போன்ற இடங்களிலும் இவரது கோயில்கள் உள்ளன.  சலவைக்கற்களாலும், க்ரானைட் கற்களாலும் இழைத்து அழகழகான சிற்பங்களுடன் பார்த்த விழி பூத்துப்போகும்படி அழகான கட்டக்கலையுடன் மிளிர்கிறது இந்தக்கோயில். 

பார்க்கிங் லாட்-ல் காரை நிறுத்திவிட்டு வருகையில் முதலில் நம்மை எதிர்கொள்கிறது "ஹவேலி" என்ற பெயருடன் விசிட்டர் சென்டர்! கட்டிடத்தின் உள்ளேயும் கேரளத்தில் மரவேலைப்பாடுகளை நினைவுபடுத்தும் நுணுக்கமான சிற்பங்களுடன் உள்ளது. இங்கே அழகிய சிற்பங்கள், கைவினைப்பொருட்கள், மற்றும் இந்திய மளிகைப் பொருட்கள், இனிப்புகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.  


இங்கிருந்து நாங்கள் வாங்கிவந்தது ஒரு யானையும், பூந்தி லட்டுவும்! லட்டு காலியாகிட்டதால் யானையார் மட்டும் உங்களைக் காண வந்துள்ளார்! :)

ஶ்ரீ ஸ்வாமி நாராயண் மந்திர் - பளிங்காலும் க்ரானைட் கற்களாலும் இழைத்து கட்டப்பட்ட கோயிலின் முன்னால் நட்சத்திரவடிவில் ஒரு செய்குளம் உள்ளது. அவ்வப்போது நீரூற்றுகள் நட்சத்திரக்குளத்தில் ஆங்காங்கே எழுந்து நடனமாடி அமைதியாகின்றன. நாங்கள் சென்றது ஒரு பொன்மாலைப் பொழுதாகப் போனதால் நிறையப் படங்கள் எடுக்கும்முன் இருள் கவிழ்ந்துவிட்டது.
இருளானாலும் விளக்கு வெளிச்சத்தில் கோவில் தகதகவென ஜொலித்தது.  படிகளில் ஏறி கோவிலின் உள்ளே நுழைகையிலேயே, "ப்ளீஸ் மெய்ன்டெய்ன்  சைலன்ஸ்" என்ற பலகைகள் வரவேற்கின்றன. உள்ளேயும் ஆங்காங்கே "சைலன்ஸ் ப்ளீஸ்" என்ற போர்டுகளைப் பிடித்தவண்ணம் ஆட்கள் நிற்கிறார்கள். ஆனாலும் நம்மூர் ஆட்களை கன்ட்ரோல் செய்ய இயலுமா? ;)

ஸ்வாமி நாராயண் அவர்களின் திருவுருவங்கள், ராதா-கிருஷ்ணர், ராமர்-சீதை-லக்‌ஷ்மணர், சிவன் - பார்வதி இவர்களையெல்லாம் தரிசித்துவிட்டு, கோயிலினுள்ளே உள்ள சிற்பங்களை வாயைப் பிளந்து பார்த்துவிட்டு,  உடன்வந்த இரண்டு நண்பர் குடும்பத்துடனும் இருட்டுக்குள்ளேயே ஃபோட்டோஷூட்-ஐ முடித்துவிட்டு கிளம்பினோம்.
விசிட்டர் சென்டர் அருகிலேயே உணவகம் இருக்கிறது. பூண்டு-வெங்காயம் சேர்க்காத உணவுகள் குறைந்தவிலையில் விற்பனை செய்கிறார்கள்.  நீளமான க்யூவில் நின்று பராத்தா, பனீர் கறி, கமன் டோக்ளா, ஸ்வீட், லஸ்ஸி, ஃப்ரைட் ரைஸ் என்று ஆளுக்கொரு ப்ளேட் வாங்கி ருசித்துவிட்டு, லட்டும் யானையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினோம். ஆக மொத்தத்தில் புத்தாண்டு ஒரு புதிய விதமான கோயிலில் துவங்கியிருக்கிறது. :) 
~~~
இந்தக் கோயில் மாலிபு பாலாஜி கோயில்! கிறிஸ்துமஸ் அன்று சென்றிருந்தோம், அழகாக வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தார்கள். என்னவர் எடுத்த படத்தை உபயோகிக்காமல் இருந்தால் எப்படி? மஹி'ஸ் ஸ்பேஸ்னு பேரடிச்சு பப்ளிஷும் பண்ணிட்டேன்! ;)
~~~
Holliday Bakes, Butter Biscuit & Coconut Biscuit
எல்லாரும் எடுத்துக்குங்க, அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! 

பி.கு. ஸ்வாமி நாராயண் மந்திர் பற்றிய மேலதிகத்தகவல்கள் அறியவிரும்பினால் அங்கேயே இரண்டு இடங்களில் இணைப்பு கொடுத்திருக்கிறேன், க்ளிக் செய்து பார்க்கவும்.  நன்றி! 

LinkWithin

Related Posts with Thumbnails