Friday, May 27, 2011

ஆத்தா, நான் பாஸாகிட்டேன்!


நேத்துத்தான் 10த் ரிஸல்ட் வந்திருக்கு,இன்னிக்கு இப்படி ஒரு போஸ்ட் வந்திருக்கேன்னு பார்ப்பீங்க. எனக்கு இன்னும் ஸ்வீட் 16கூட ஆகல, இப்பதான் 10த் பாஸ் பண்ணிருக்கேன்னு சொன்னா நம்பவா போறீங்க? என் அக்கா பையனும் அண்ணன் பொண்ணும் 10த் எழுதியிருந்தாங்க. நேத்து மார்க்-ஐப் பார்க்கும்போது எனக்கு BP வராத குறைதான்! ரெண்டு பேருமே நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டாங்க. :)

நான் பாஸாகிட்டேன்னு சொன்னது எங்கூரு ட்ரைவிங் லைஸென்ஸ் எக்ஸாம்லே. யெஸ்,25-ஆம் தேதி புதன்கிழமை வெற்றிகரமா ரோட் டெஸ்ட்டை க்ளியர் பண்ணி லைஸென்ஸ் வாங்கிட்டேன்!!:)))))))) அதைப் பற்றி சொல்லத்தான் இந்தப் பதிவு. கிட்டத்தட்ட 2 வருஷக்கதை சொல்லப்போறேன். எல்லாரும் பெட்ஷீட்,தலகாணி, குடிக்கத்தண்ணி எல்லாம் எடுத்துட்டு வந்து கம்ப்யூட்டர் முன்னாடி உக்காருங்க,சரியா? :)

யு.எஸ்.ல பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் ஒரு சில இடங்களைத்தவிர மத்த இடங்களில் அவ்வளவு வசதியா, frequent-ஆ இருக்காது. கார் இல்லாமல் இருப்பது கஷ்டம். என்னவரும் இங்கே வந்து நாலு நாள்லயே காரை ரென்ட் பண்ணிட்டார். இன்டர்நேஷனல் ட்ரவிங் பர்மிட் வைத்து இருந்ததால், 2 ட்ரைவிங் க்ளாஸ் போனதுமே இந்த ஊர் ட்ரைவிங் பழகிட்டார். அதை வைத்தே பலநாட்கள் ட்ரைவ் பண்ணிட்டு இருந்தார். சால்ட் லேக் சிட்டில இருக்கும்போதுதான் திடீர் ஞானோதயம் வந்து அவர் லைஸென்ஸ் வாங்கினார். அதுவரை லைசென்ஸ் வாங்கணும்னு எண்ணமெல்லாம் இல்லாத நானும் ஒரு உத்வேகம் வந்து எழுத்துத்தேர்வுக்குப் போனேன்.

இண்டியன் லைஸென்ஸ் (ஒரிஜினல்) இருந்தா, சால்ட் லேக்ல எழுத்துத்தேர்வு ஓபன் புக் டெஸ்ட்தான். DMV ஆபீஸ்ல போய் பந்தாவா எங்கிட்ட இருந்த லைசென்ஸ்-ஐக் குடுத்ததும்,அந்தாளு அதையத் திருப்பித்திருப்பிப் பாத்துட்டு இது ஒரிஜினல் இல்லையே?-ன்னாரு. அதுவரைக்கும் நானும் கவனிக்கல,அப்பத்தான் பாக்கிறேன், துரதிர்ஷ்டவசமா என்னிடம் இண்டியன் லைசென்ஸின் போட்டோ காப்பிதான் இருந்திருக்குது.(ஒரிஜினல் பத்திரமா இருக்கோணும்னு ஊருல வைச்சுட்டு வந்திருக்கேன்னு அப்பத்தான் தெரிஞ்சுது!!)

பொறகென்ன? இதெல்லாம் செல்லாதும்மா,நீ ஓபன் புக் டெஸ்ட் எழுதமுடியாது, நார்மல் டெஸ்ட் வேணா எழுது-ன்னாங்க. அந்த போட்டோ காப்பியத்தான் அவ்ளோ நாளா ஐடி-யா யூஸ் பண்ணிட்டு இருந்தேன்,அதை வச்சு சிலபல முறைகள் காரை ஓட்டியும் இருக்கேன். டெஸ்ட் எழுத அலவ் பண்ணாட்டி பரவால்ல, என்னோட இண்டியன் லைஸென்ஸை திருப்பிக் குடுத்திருங்கன்னு கேட்டேன். ஒரு முறை முறைச்சுட்டு, அதெல்லாம் குடுக்க முடியாது. போட்டோ காப்பிய எங்கயுமே யூஸ் பண்ணக்கூடாது, பண்ணினா அது ஃபோர்ஜரி! -ன்னு சொல்லிட்டு ரெண்டா-நாலா கிழிச்சு குப்பைத்தொட்டில போட்டுட்டாங்க. எனக்குப் பொக்குன்னு போச்சு போங்க!! :-|

சரி, இன்னொருநாள் வந்து எழுதிக்கலாம்னு சொன்னா என்னவர் இவ்வளோ தூரம் வந்துட்டோம்(வீட்டில இருந்து மூஊஊஊஊணு மைலுங்க!!) சும்மா ஒரு ட்ரை பண்ணிப்பாருன்னு கம்பல் பண்ணினார். புக் பாத்து பதில் எழுதறதுதானேன்னு சும்மா நுனிப்புல் மேய்ஞ்சுட்டு போயிருந்தேன், இருந்தாலும் ஏதோ எழுதினேன். எதிர்பாத்தமாதிரியே ஊத்திகிச்சு!!!

என்னையப் பாத்து ஃபோர்ஜரி பண்ணறேன்னு சொல்லிப்போட்டாங்களே இந்த யூட்டா கவர்மென்ட்டு? இந்த ஸ்டேட்லயே லைசென்ஸ் வாங்கி காட்டறேன்னு சூளுரை எல்லாம் எடுத்துகிட்டு அடுத்த சிலநாட்கள்லயே, (கரெக்ட்டா டிசம்பர் 31-ஆம்தேதி) எழுத்துத் தேர்வை க்ளியர் பண்ணிட்டேன். ஒரு வருஷத்துக்கு லர்னர்ஸ் பர்மிட் குடுத்தாங்க. DMV-ல இருந்த ஒரு அம்மா உங்க மோதிரம் ரொம்ப அழகா இருக்கே,எங்கே வாங்கினது? எவ்ளோ விலை? இந்தமாதிரி அதிமுக்கிய டீடெய்ல் எல்லாம் கேட்டாங்க, அவங்களோட கொஞ்சநேரம் அரட்டை அடிச்சிட்டு சந்தோஷமா பர்மிட்டோட வெளியே வரேன், வின்டரோட முதல் பனிப் பொழிவு ஆரம்பமாகி, பனி கொட்டிட்டு இருக்கு அங்கே!

அதுக்கப்புறம் நாலஞ்சு மாசம் மாதம் ஏகத்துக்கும் ஸ்னோவா இருக்கும். நல்லா வண்டி ஓட்டறவங்களே அந்த ஸ்னோல தடுமாறுவாங்க, என்னை மாதிரி கத்துக்குட்டியெல்லாம் என்ன செய்யமுடியும்? அதுவும் இல்லாமல் என்னவருக்கும் அங்கே ப்ராஜெக்ட் முடிந்து இடம்மாற வேண்டிய சூழ்நிலை வந்தது. லைஸென்ஸ் வாங்கற ஐடியாவை மூட்டை கட்டி கார்லயே போட்டுகிட்டு மே மாதம் இங்கே வந்து சேர்ந்தோம்.

மீதி எங்கேன்னு பாக்கறீங்களா? அதான் கார்ல வந்துட்டு இருக்கமுல்ல? வந்து சேர்ந்ததும் அடுத்த பகுதில மீதிக்கத,ஓக்கே?

Thursday, May 26, 2011

சோமாஸ்

அஸ்மா அவர்கள் ப்ளாகில் பார்த்து, சில மாற்றங்களுடன் இந்த சோமாஸ் செய்தேன்,மிகவும் நன்றாக இருந்தது.

தேவையான பொருட்கள்

மேல்மாவுக்கு
மைதா-11/4கப்
கார்ன் ஃப்ளோர்-1/4கப்
ரவை-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1டேபிள்ஸ்பூன்
உப்பு-1/2டீஸ்பூன்
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
தண்ணீர்-3/4கப்

பூரணத்துக்கு
ஸ்வீட்டன்ட் கோகனட் ஃப்ளேக்ஸ்-1கப்
ஏலக்காய்-2
முந்திரி,பாதாம் -ஒரு கைப்பிடி
திராட்சை-ஒரு கைப்பிடி
எள்ளு-1டேபிஸ்பூன்
பொட்டுக்கடலை-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1/2கப்
நெய்-11/2டேபிள்ஸ்பூன்

செய்முறை
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரி-திராட்சை-பொட்டுக்கடலை-எள்ளு இவற்றை தனித்தனியாக (கருகாமல்) வறுத்து எடுக்கவும்.

மீதியுள்ள நெய்யையும் ஊற்றி சூடாக்கி, தேங்காயை சிவக்க வறுத்து எடுத்து, ஏலக்காய் தட்டிப்போட்டு கலந்து ஆறவைக்கவும்.

சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். சர்க்கரை கரைந்து கொதிக்கத்தொடங்கியதும், வறுத்த தேங்காயைச் சேர்த்து பிரட்டி, முந்திரி-திராட்சை-பொ.கடலை-எள்ளு இவற்றை சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி,
உடனே வேறு கிண்ணத்தில் மாற்றி, க்ளியர் ராப் பேப்பரால் மூடி ஆறவைக்கவும்.

மைதா-கார்ன் ஃப்ளோர்-ரவை-உப்பு-எண்ணெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கலந்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து பிசையவும். சுமார் 10 நிமிடங்கள் சப்பாத்திமாவு போல பிசைந்து, ஒரு மணிநேரம் மூடிவைக்கவும்.

ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவை கொஞ்சம் நீர்விட்டு நீர்க்க கரைத்துவைக்கவும்.

பிசைந்த மாவை சிறு உருண்டைகள் உருட்டி, சிறிய பூரிகளாக தேய்க்கவும்.

பூரியின் நடுவில் இனிப்பு பூரணத்தை வைத்து, ஓரங்களில் மைதா கலவையைத் தடவி, பிறைச்சந்திர வடிவத்தில் மடித்து ஒட்டி, முள்கரண்டியால் ஓரங்களை அழுத்திவிடவும்.

எண்ணெயை மிதமான சூட்டில் (medium low to low heat) காயவைக்கவும். செய்துவைத்த சோமாஸ்களை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பொரித்த சோமாஸை எண்ணெய் வடியவைத்து நன்றாக ஆறவைத்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து மூடிவைக்கவும்.
சோமாஸ் நன்றாக ஆற 2-3 மணி நேரமாகும் என்று அஸ்மா சொல்லியிருந்தாங்க,அதே போல் ஆறவைத்து எடுத்து வைத்தேன். இது போனவாரம் புதன்கிழமை செய்தது, 3-4 நாட்கள் வெளியிலேயே இருந்தது.இன்னும் 2 சோமாஸ் பத்திரமா ஃபிரிட்ஜில் இருக்கு, வீட்டுக்கு வாங்க, சாப்பிடலாம்! :):)

Saturday, May 21, 2011

யார் சொல்வதோ..யார் சொல்வதோ?பாட்டைப் பார்க்க விரும்பினால் இதோ..


:)))))))))))

Wednesday, May 18, 2011

வெஜிடபிள் கேக்

ப்ரியாவின் ஈஸி & டேஸ்ட்டி ரெசிப்பீஸ் வலைப்பூவில் இந்த சேவரி கேக் ரெசிப்பி பார்த்தேன். செய்து பார்க்கணும்னு நினைச்சு, போன வியாழக்கிழமை சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேலே தேவையான சாமானெல்லாம் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சேன்.(எங்க வீட்டுல ஃப்ரிட்ஜுல இருந்துதான்,ஹிஹி!)

முட்டை -தயிர்-பால்-மைதா எல்லாம் எடுத்து வெளியே வைச்சுட்டு ப்ரோக்கலி,கேப்ஸிகம்,வெங்காயம் நறுக்கி எண்ணெயிலே வதக்கினேன், அதிசயமா என்னவர் நேரத்துலயே வீட்டுக்கு வந்துட்டார். அவர் வருவதுக்கு முன்னாலயே இந்த மாதிரி எக்ஸ்பெரிமென்ட் எல்லாம் செய்து முடிச்சுடுவேன், அதனால், இந்த baking-ஐ அப்படியே ஸ்டாப் பண்ணிட்டு, அரிசிம்பருப்பு சாதம்,கத்தரிக்கா-உருளைக்கிழங்கு பொரியல் செய்து இரவு உணவும் சாப்பிட்டாச்சு. இவர் மும்முரமா எலக்ஷன் ரிஸல்ட் பார்த்துட்டு இருந்தார், கேக் செய்ய திங்க்ஸ் எடுத்து வெளியில் வைச்சது நைட் 10 மணிக்கு திடீர்னு நினைவு வந்தது!

ஆரம்பிச்ச வேலைய பாதில விடமுடியுமா என்ன? மறுபடி ஆரம்பிச்சேன். எலக்ட்ரிக் பீட்டர்ல முட்டை+ஆயிலை beat பண்ணும்போது சத்தம் பலமா வர்ர மாதிரி எனக்கு ஒரு பயம்! "ரொம்ப சவுண்டா இருக்கா?"-ன்னு இவர்கிட்ட கேட்டேன். ஒண்ணுமே சொல்லல. நான் சொன்னதை கவனிக்காம டிவி பார்க்கறார் போலன்னு beating-ஐ தொடர்ந்தேன், உடனே சொல்லறார்,"இப்பதான் சத்தம் கேக்குது"-அப்படின்னு!!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதுக்கப்புறம் சத்தம் யாருக்கு கேட்டா என்னன்னு வேலையைத் தொடர்ந்து கேக்-ஐ அவன்-ல வைத்தேன். அப்பவே மணி 11-க்கு மேலே ஆகிட்டது.

நல்லா தூக்கம் வருது,ஆனா கேக் அவன்-ல இருக்கு. கஷ்டப்பட்டு முழிச்சிட்டு இருந்தேன். 35 நிமிஷம் கழிச்சு எடுத்துப் பார்த்தா, வேகலை. மறுபடி பத்துப்பத்து நிமிஷமா தூங்கி முழிச்சு, தூங்கி முழிச்சு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கப்புறம் கேக் ரெடியாச்சு! அந்நேரம் அம்மா அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றியடைந்து, டிவி-ல எல்லாருக்கும் லட்டு விநியோகம் செய்து வெற்றியைக் கொண்டாடிட்டு இருந்தாங்க. நாங்க சுடச்சுட கேக்கை வெட்டி சாப்பிட்டு தூங்கிட்டோம்! :)


தேவையான பொருட்கள்
மைதா (ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர்)-11/4கப்
கார்ன் ப்ளோர்-1/4கப்
பேக்கிங் பவுடர்-1/2டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1/4டீஸ்பூன்
மிளகுத்தூள்-1/2டீஸ்பூன்
உப்பு-1/2டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
முட்டை-2
எண்ணெய்(கனோலா ஆயில்)-1/4கப்
பால்-1/3கப் + தயிர்-2/3கப் (ஒரிஜினல் ரெசிப்பில மோர் சேர்த்திருந்தாங்க. என்னிடம் மோர் இல்லாததால் இப்படி அட்ஜஸ்ட் செய்துகிட்டேன்.மோர் இருந்தால் ஒரு கப் மோர் சேர்த்துக்கலாம்.)

பொடியாக நறுக்கிய- ப்ரோக்கலிப் பூக்கள்-1/2, கேப்ஸிகம்-1,வெங்காயம்-1,
பச்சைமிளகாய்-1,கொத்துமல்லி இலை-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி நறுக்கிய மிளகாய்-கொத்துமல்லி இலை-ப்ரோக்கலி-கேப்ஸிகம்-வெங்காயத்துண்டுகளை 3-4 நிமிடங்கள் வதக்கி ஆறவைக்கவும்.

மைதா-கார்ன் ஃப்ளோர்-பேக்கிங் பவுடர்-பேக்கிங் சோடா-மிளகுத்தூள்-உப்பு-சீரகம் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பாலையும் தயிரையும் நன்றாக கலந்துவைக்கவும்.

முட்டை+எண்ணையை எலக்ட்ரிக் பீட்டரால் நுரை பொங்க கலக்கவும். இதனுடன் தயிரை சேர்த்து விஸ்க்கால் மெதுவாக கலக்கவும். வதக்கிய காய்களையும் சேர்த்து கலக்கவும்.


காய்கள் நன்றாக கலந்தபின்னர் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

வெண்ணெய் தடவிய பேக்கிங் பானில் கேக் கலவையை ஊற்றி மீதமிருக்கும் காய்களை மேலாகத்தூவி..
350F ப்ரீஹீட் செய்த அவனில் 55 முதல் 60 நிமிடங்கள் பேக் செய்யவும்.

கேக் பான்-ஐ அவன்-லிருந்து எடுத்து கொஞ்சநேரம் ஆறவைத்த பின்னர்தான் கேக்கை பானிலிருந்து தனியே எடுப்பது வழக்கம். இந்த கேக் அவனிலிருந்து வெளியே வரும்போதே நடுஇரவு! அதுக்கும் மேலே வெயிட் பண்ண நேரமில்லாததால் அப்பவே எடுத்தேன். அழகாக முழுசா வந்துட்டது. :)

இனி என்ன? துண்டுகளாக வெட்டி...

ருசிக்க வேண்டியதுதான்!
:)
~~~~~~~~~~~
பி.கு. போனவாரத்தில் ப்ளாகர் டவுனா இருந்த நேரத்தில் கேக் செய்ததால் ரெசிப்பியில் எனக்கு வந்த சந்தேகங்களை தீர்த்துக்க முடியல. அதனால் ப்ரியாவின் ரெசிப்பியில் என் வசதிப்படி ஒரு சில மாற்றங்களுடன் செய்திருக்கிறேன்.

Friday, May 13, 2011

ஜெம் ஷோ


யு.எஸ்.வந்த புதிதில் ஜெம் ஷோ-வை முதன் முதலில் கேள்விப்பட்ட அனைவரும் கண்டிப்பாய் சில பல டாலர்களை செலவு பண்ணியிருப்பாங்க.நானும் இதுக்கு விதிவிலக்கில்லை. பொதுவாக வருஷத்துக்கு 2 முறை வெள்ளி-சனி-ஞாயிறு என்று மூணு நாள் ஜெம் ஷோ நடக்கும். ஆன்லைன்ல பாஸ் பிரிண்ட் பண்ணினா ஆபர்,வெள்ளிக் கிழமை போனா, மத்த 2 நாளுக்கு ப்ரீ அட்மிஷன் இப்படி நம்மை கொக்கி போட்டு இழுப்பாங்க. கூடவே முதல் முறை டிக்கட் வாங்கும்போது நம்ம அட்ரஸ் வாங்கி வச்சுகிட்டு அடுத்த முறை இன்விடேஷன் + ப்ரீ அட்மிஷன் பாஸ் அனுப்பிடுவாங்க.

இரண்டு வருஷம் முன்பு நாங்க இருந்த ஊரில் ஜெம்ஷோ வந்தது. வீட்டுப் பக்கத்தில் இருந்த ஒரு தோழியும் எங்களுடன் சேர்ந்துகிட்டாங்க. இவரை கொத்திப் பிடுங்கி ஒருவழியா சனிக்கிழமை காலைல வெற்றிகரமா போய்ட்டோம். கல்யாண மண்டபம் சைசுக்கு இருந்த ஹால்-ல லைனா டேபிள் போட்டு ஸ்டால் வைச்சு இருந்தாங்க. கலர் கலரா கிறிஸ்டல், பவளம்,முத்து, ரூபி, எமரால்ட் , சபையர் இப்படி விலை உயர்ந்த கற்கள் எல்லாமும் இருந்தது. கீ செய்ன்,ரிஸ்ட் வாட்ச் கடைகள், கால்வலிக்க நடந்து பர்ஸ் இளைக்க ஷாப்பிங் செய்துட்டு ஆறுதலா உட்கார்ந்து சாப்பிட பிஸ்ஸா கார்னரும் இருந்தது.

அதுவரை எனக்கு முத்து பவளம் ரூபி தவிர வேறு கற்கள் எல்லாம் தெரியாது. அழகான மெரூன் கலர் கார்னெட், ப்ரைட்டான கருப்பு நிறத்தில் ஓனிக்ஸ், கடலின் நீலத்தில் டர்க்காய்ஸ், பச்சையிலே பல நிறங்களில் ஜேட் என்று பலவகை இருப்பதை அன்றுதான்தெரிந்துகிட்டேன். பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையப் பாத்தா மாதிரியே கொஞ்ச நேரம் பராக்கு பாத்துட்டு பர்ச்சேஸ் பண்ண புகுந்தோம்.

முத்து நல்ல சீப்பா கிடைத்தது. டாலர்(யு.எஸ்.டாலர் இல்ல,இது வேற டாலருங்க) வைச்சு,2 -3 வரில இருக்குமே முத்துமாலை அது மேல எனக்கு ரொம்ப நாளா ஒரு கண்ணு. கூடவந்த ப்ரெண்டும் அதே மாதிரி நினைத்ததால் முத்துமாலை +வளையல் செய்யற ப்ளான்ல, கடைக்காரர்கிட்ட பேரம் பேசி முத்துக்களை அள்ளிகிட்டோம். அந்நேரம் ஊருக்கு போகும் பிளானும் இருந்ததால் சொந்த பந்தத்துக்கெல்லாம் சேர்த்து நான் தேத்திய ஜெம் கலெக்ஷன் இதோ..

கார்னெட்,ஜேட்,முத்து,ஓனிக்ஸ், பவளம், எமரால்ட் மற்றும் ரூபி.
(எதுக்கு இப்படி கடை பரப்பி போட்டோ எடுத்திருக்கேன்னு நீங்க நினைக்கலாம். அங்கங்கே இருந்த தோழிகளுக்கெல்லாம் போட்டோவை அனுப்பி அவிங்க வீட்டு ரங்க்ஸ் பர்ஸ்களுக்கெல்லாம் வேட்டு வைக்கணும்ல? அதுக்குத்தான்! ஹிஹிஹி!)

ஊருக்கு போனதும் எல்லாருக்கும் டிஸ்ட்ரிப்யூட் பண்ணிட்டு என்னோடதெல்லாம் ராம் நகர்ல ஒரு ஜெம் ஷாப்ல குடுத்து கோர்த்து வாங்கினேன்.(தங்கமெல்லாம் இல்லைங்க. வெள்ளியோ, ஐம்பொன்னோ ஏதோ ஒண்ணுல செய்து தங்க முலாம் பூசியது). ஆசை ஆசையா வாங்கின முத்துக்களுக்கு அட்டகாசமா மாலை-வளையல் டிசைன் செலக்ட் பண்ணி குடுத்துட்டு வந்தேன். கடைக்காரக்கா கடைசி நேரத்தில் சரியா கோர்க்காம சொதப்பிட்டாங்க. அதனால் அது ஊரிலேயே இருக்கு.

ஓனிக்ஸ் மாலைக்கு என் அக்கா அழகான டாலர் செலக்ட் பண்ணி தந்தாங்க. இங்கே கிளம்பும்போது அதை சர்ப்ரைசா அக்காவுக்கே குடுத்துட்டு வந்துட்டேன். கார்னெட் மாடர்ன் ட்ரெஸ் கூட நல்லா மேட்ச் ஆகிறது. ரூபி சுடிதாருடன் போட நல்லா இருக்கு. பவளம் பார்க்க அழகா இருக்கு,ஆனா கழுத்தில் போட்டா சாமியார் மேடம் எபெக்ட் வரமாதிரி ஒரு பீலிங்! :)

"விடாது கருப்பு"-ன்னு அடுத்த வருடமும் ஜெம் ஷோ டிக்கட் அதுவே வந்தது. எதுவும் வாங்க வேணாம், சும்மா பாத்துட்டு வரலாம்னு(?!) போனோம். முதல் முறையே டர்க்காய்ஸ் என்னவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்ப நான் வாங்கலை, இந்தமுறை அவர் ஆசையா வாங்கித் தரும்போது வேணாம்னு சொல்ல முடியுமா? நீங்களே சொல்லுங்க?!! ;)

டர்க்காய்ஸ் சரத்தினுள் பெயர் தெரியாத சிவப்புக்கல் சரம், பவளச் சரங்களுக்குள் ஓனிக்ஸ், டாப்ல டக்கரா இருப்பது ப்ளூ ஸஃபையர் ஸ்ட்ரான்ட். :) இந்த முறை ஊருக்கு போகையில் இதையெல்லாம் கோர்த்து வாங்கணும்.ஸ்டேட் மாறி வந்தப்பவும் விடாம இன்னமும் ப்ரீ டிக்கட் அனுப்பிட்டே இருக்காங்க. போன வாரம் பக்கத்து சிட்டியில் நடந்த ஷோவுக்கு இன்விடேஷனும் ப்ரீ பாஸும் வந்தது. போனாப்போகுதுன்னு நாங்க போகலை.:)

டிஸ்கி.: ஒரிஜினல் ரூபி-எமரால்ட்-ஸஃபையர் எல்லாம் ரொம்ப ரொம்ப காஸ்ட்லி, இப்படி சரங்களா எல்லாம் வாங்கமுடியாது, இந்த கற்கள் எல்லாம் ஒரிஜினல் இல்லை என்றும் சொல்றாங்க. எது உண்மைன்னு தெரில. ஆனால் குடுத்த காசுக்கு மதிப்பு இருக்கறமாதிரிதான் எனக்கு தெரிந்தது.

முதல் படத்தை பாத்து டென்ஷன் ஆயிராதீங்க..திருஷ்டிக்குன்னு போட்டிருக்கேன், சீரியஸா எடுத்துக்காதீங்க, சும்மா தமாஷுக்கு! அந்த லெமன் சிரிக்கறது அழகா இருக்கில்ல? :D

Tuesday, May 10, 2011

பஸிஃபிக் கடலோரம்...

முன்பொருமுறை வந்த விருந்தினரை மறந்திருக்க மாட்டீங்க. (எதுக்கும் அந்த லிங்க்-ஐக் க்ளிக் பண்ணி ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்களேன். :)) சமீபத்தில் மீண்டும் ஒருமுறை அவரைப் பார்க்க அதே இடத்துக்குப் போனோம். ஆகஸ்ட் மாதம் ப்ரெட் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவரும் அவர் சுற்றமும் நட்புக்களும் இப்பொழுது ஆரோக்கிய உணவுக்கு மாறியிருந்தாங்க. ஆமாம்,இப்பல்லாம் அவிங்க வறுத்த வேர்க்கடலைதான் சாப்பிடுறாங்க!

அங்கே வந்த சுற்றுலாப் பயணிகள்,முக்கியமாக குழந்தைகள் இந்த அணில்களுக்கு ஆர்வமா வேர்க்கடலை குடுத்தாங்க. அணில்களும் எந்த பயமும் இல்லாம, ரொம்ப ஃப்ரெண்ட்லியா பக்கத்தில் வந்து அவங்க கைல இருந்து கடலைகளை வாங்கிட்டு அந்தப் பக்கம் ஓடி அமைதியா உட்கார்ந்து சாப்பிட்டுதுங்க.
இந்த அணிலைப் பாருங்க, அந்த தாத்தா கையிலிருந்து கடலையை கிட்டத்தட்ட பிடுங்குது!! :)))) குழந்தைகள் கடலைய ஒரு கையில் பிடிச்சுகிட்டு அணில் பக்கத்துல வந்ததும், நைஸா இன்னொரு கையால அணிலைத் தொட்டுத் தொட்டு பாத்துட்டு இருந்தாங்க. கவனிச்சுப் பார்த்தா,அணில் எவ்வளவு புத்திசாலியா இருக்குன்னு தெரியுது! கவனமா முழுக்கடலையக் கடிச்சு தோலை துப்பிட்டு அழகா கடலையை மட்டும் ருசிச்சு சாப்பிடுதுங்க.
எங்களுக்கு அணில் இப்படி ஆர்கானிக்கா மாறியது தெரியாது. (நாங்க) கொறிக்க கொண்டுபோயிருந்த சிப்ஸ்-ஐக் குடுத்துப் பார்த்தோம்.ம்ஹும்,வாங்கி கீழே போட்டுட்டு குட்டிப் பசங்க பக்கமே போயிடுச்சு. நான் பாவமா உட்கார்ந்திருந்தேன்,அதைப் பார்த்துட்டு பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெண்மணி கைநிறைய வேர்க்கடலைய குடுத்தாங்க.

ஹாஹ்ஹா...கடலை போடற சாக்கில் நானும் அணிலைத்தொட்டுப்பார்த்தேனே!! மெத்து மெத்துன்னு ரொம்ப ஸாஃப்ட்டா இருந்தது! :) கடலையைக் கொடுக்கும்போது டக்குன்னு குடுக்காதே,போட்டோ எடுக்க முடிலன்னு என்னவர் சொல்லிட்டே இருந்தார்.அப்படியே எல்லாம் தீர்ந்து போய் கடைசி கடலை வந்துடுச்சு.

நானும் கடலையக் குடுக்கறமாதிரி நடிச்சு, கையைத் தூக்க, விட்டேனா பாருன்னு அணிலாரும் எங்கிட்ட இருந்து பிடுங்க போராடினார். மென்மையான அணிலுக்கு எவ்வளவு கூரான நகங்கள்ங்கறீங்க? நல்லவேளை என் கைக்கு ஒண்ணும் ஆகல.;)

"போட்டோ எடுத்துட்டீங்களா?"ன்னு நான் கேக்கறதுக்குள்ள அணிலாருக்கு கோவம் வந்துடுச்சு. நீயும் வேணாம்,நீ குடுக்கற கடலையும் வேணாம்-னு விட்டுட்டு ஓடிட்டார். :-|
அப்புறம் இன்னொருவர் வந்து வாங்கிட்டு போயிட்டார், இருந்தாலும் கொஞ்சம் வருத்தமா இருந்தது. கடலை கிடைக்காத அணில் என்னைத்திட்டிட்டே போயிருக்கும்னு புலம்பிட்டே இருந்தேன்.
இதுதான் உண்டு கொழுக்கறதோ??!!
:)))))))))))

அணிலுக்கு டாட்டா சொல்லிட்டு கிளம்பி இந்தக் கடற்கரைக்குப் போனோம். (பதிவில் முதல் படம்) அழகான கடற்கரை,உற்சாகமான மக்கள் கூட்டம், சுடச்சுட நம்ம ஃபில்டர் காபி ரேஞ்சுக்கு espresso coffee கிடைக்கும் ஒரு காஃபி ஷாப் என்று மனசுக்கு சந்தோஷமா இருந்தது. அங்கே போயும் என் கை சும்மா இருக்காமல் இந்த seagull-ஐ போட்டோ எடுக்கப் போயிட்டேன்.

மாலை வெயிலில் இந்தப் பறவையின் நிழலும் கரையில் துல்லியமா விழுந்தது..அதுவும் பிகு பண்ணிக்காம அமைதியா போஸ் குடுத்தது. :)

சூரிய உதயம்-அஸ்தமனம் இரண்டுமே அழகுதான்..காலையில் எழுந்து சூரிய உதயம் பார்ப்பதெல்லாம் எப்பவாஆஆஆஆவது நடக்கும் விஷயம்(கவனிங்க,நடக்காத விஷயம்னு நான் சொல்லல. எப்பவுமே எர்லி மார்னிங் 7 மணிக்கு எந்திரிச்சாலும் நாங்களும் மிட்நைட் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திருப்போமுல்ல? ஹிஹி) சரி அதை விடுங்க..இந்த சன்செட்-டை பாருங்க...
மேகங்களுக்கிடையில் மறைந்து கிடந்தாலும் சூரியக் கதிர்கள் அங்கங்கே வானத்தை ஊடுருவி கடல்நீரில் விழுந்து பிரதிபலித்த அழகான சூரியாஸ்தமனம் ஒரு அழகான நாளை நிறைவு பெறச்செய்தது.

Tuesday, May 3, 2011

ப்ரோக்கோஃப்ளவர் ஸ்டிர் ஃப்ரை

ப்ரோக்கோ ஃப்ளவர் அல்லது க்ரீன் காலிஃப்ளவர் என்பது காலிஃப்ளவர்-ப்ரோக்கலி இரண்டும் கலந்து உருவான காய்.இதனைப் பற்றிய தகவல்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
தேவையான பொருட்கள்
ப்ரோக்கோ ஃப்ளவர்-1
வெங்காயம்-1
பூண்டு-4பற்கள்
சீரகம்-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
கறிமசாலா பொடி-2 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் பொடி-1டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை

ப்ரோக்கோஃப்ளவரைக் கழுவி பெரிய பூக்களாக நறுக்கிவைக்கவும்.
வெங்காயம்-பூண்டை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் காயவைத்து,சீரகம் தாளித்து வெங்காயம்-பூண்டு-கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ப்ரோக்கோ ஃப்ளவர் சேர்க்கவும்.
கடாயை மூடி 2 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் மசாலாப் பொடி சேர்த்து கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.

தேங்காய்ப்பால் பொடியைத்தூவி, தீயை அணைத்துவிடவும். அடுப்பின் சூட்டிலேயே ஓரிருநிமிடம் வைக்கவும்.
சுவையான ப்ரோக்கோஃப்ளவர் ஸ்டிர் ஃப்ரை தயார். சப்பாத்தி-சாதம் இரண்டுக்குமே பொருத்தமான சைட் டிஷ்.

சமைக்கும் நேரம் முழுவதும் அடுப்பை ஹை ஃப்ளேமிலேயே வைத்து செய்யவேண்டும்.
காய் முழுவதும் வேகாமல் சற்றே க்ரன்ச்சியாக இருப்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி.
காலிஃப்ளவர்-ப்ரோக்கலி இவற்றை இப்படி க்ரன்ச்சியாக செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
நான் சிக்கன்65 பவுடர் யூஸ் பண்ணியிருக்கிறேன், அவரவர் விருப்பப்படி ஏதாவதொரு மசாலாபொடி சேர்த்துக்கொள்ளலாம். :)

LinkWithin

Related Posts with Thumbnails