Thursday, October 31, 2013

அவல் மிக்ஸர் (டயட் வர்ஷன்)

இந்த மிக்ஸர் சுடச்சுடச் செய்து ஈவினிங் டீ-யுடன் கொறிக்க சரியான ஜோடி! இங்கே கொடுக்கப்பட்டுள்ளது மிகக் குறைந்த அளவில் செய்த பேஸிக்  ரெசிப்பி. இதனுடன் உங்கள் விருப்பப்படி வேர்க்கடலை-முந்திரி-திராட்சை-கறிவேப்பிலை-பூண்டு இவற்றையும் சேர்த்து செய்யலாம். மிளகுத்தூளுக்குப் பதில் மிளகாய்த்தூள்-பெருங்காயமும் சேர்க்கலாம். ஷாலோ ஃப்ரை செய்வதற்கு பதிலாக டீஃப் ஃப்ரையும் செய்துகொள்ளலாம். உங்கள் தேவை மற்றும் வசதிப்படி செய்து ருசித்துப் பாருங்க. :)
தேவையான பொருட்கள்
கெட்டி அவல்-1/2கப்
பொட்டுக் கடலை-1டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள்-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்-2டீஸ்பூன்
செய்முறை
மிதமான தீயில், கடாயில் எண்ணெய் காயவைத்து அவலைச் சேர்த்து வறுக்கவும்.
அவல் கருகாமல் பொரியும் வரை கவனமாக கை விடாமல் கிளறிவிட்டு வறுக்கவும்.
 அவல் மொறுமொறுப்பாக பொரிந்ததும் பொட்டுக்கடலை சேர்க்கவும். [வேர்க்கடலை-முந்திரி-கறிவேப்பிலை சேர்ப்பதாக இருந்தால் இந்நிலையில் சேர்த்துக்கொள்ளவும்]
 மிளகுத்தூள், தேவைக்கு உப்பு சேர்த்து கலக்கவும். [மிளகாய்த்தூள்-பெருங்காயத்தூள்-உப்பு சேர்ப்பதாக இருந்தால் இப்போது சேர்க்கலாம்.]
எல்லாப் பொருட்களும் நன்றாக கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
நிறையச் செய்து காற்று புகாத டப்பாக்களில் ஒரு வாரம் பத்து நாட்கள் வரை வைத்துக்கொள்ளலாம். நினைத்த நேரம் குற்ற உணர்ச்சி இல்லாமல் கொறிக்க ஒரு கறுக் மொறுக் ஸ்னாக்ஸ் இது. ரெசிப்பி கர்ட்டஸி என் மாமியார். படமெடுத்தது மட்டுமே நான்! :) 

Sunday, October 27, 2013

நான் அவனில்லை..!

:) 
பேசுவது படத்திலுள்ளவர்! அவர் சூரியனா சந்திரனா...கண்டுபுடிங்க பார்ப்போம்!
:) 
~~~
சிலதினங்கள் முன்பாக மூன்றாம் பிறையைப் படமெடுத்துப் பகிர்ந்திருந்தேன், அப்பதிவில் மூன்றாம் பிறை முழுநிலவாவதைப் படமெடுக்க முடிந்தால் இணைக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன்.  வார இறுதியில் வந்ததால் முழுமதியைப் படமெடுக்க இயலாமல் போனது.  அதனால் இந்தப் படங்களில் இருப்பது சந்திரன் என நீங்கள் நினைத்து ஏமாறக்கூடாது என்பதற்காய், சூரியன் தானாக முன்வந்து "நான் அவனில்லை!" என டைட்டில்லயே சொல்லிட்டார்! :))) 
[போடுவதே மொக்கை..அதுல கூச்சமென்ன? நல்லா பத்தி பத்தியாப் பக்கம் பக்கமாப் போடுவம்ல? ஹிஹிஹிஹி...]
அந்தி நேரத் தென்றல் காற்று சில்லென்று வீசிய ஒரு மாலைப் பொழுதில் மேகங்கள் மஞ்சள் கொற்றக்குடை பிடிக்க, பெருமையுடன் பூமியுலா முடித்து கடலில் இறங்கும் சூரியன்..
கடலின் நீலம் கீழ்ப்பகுதி உடலெங்கும் ஆதிக்கம் செலுத்த, தன்னுடல் கொண்ட பொன்வண்ணம் மேற்பாதி உடலுக்கும், அதன் மேலே பரந்து விரிந்த வானத்திரைக்கும், மேகக் குடைக்கும் வண்ணம் செலுத்த அர்த்தநாரீஸ்வரனாய் மோனப் புன்னகையுடன்...
சில நிமிடங்களில்..
மஞ்சள் நிறம் கருநீலமாகக் குவளைப்பூவில் குழைத்த வண்ணமாக மாற..
சற்றே அருருருருருருகில் சென்று படமெடுக்க முயன்றபோது கிடைத்த ஒரு படமிது! சந்திரனின் அழகுக்குத் தானும் சற்றும் குறைவில்லை என்று நிரூபித்த சூரியன்! :)
~~~
படங்களுடன் என் கிறுக்கலை ரசித்த நட்புக்கள் "கறுக்-மொறுக்" எனக் கடிச்சு ருசிக்க அவல் மிக்ஸர்! 
பயப்படாமச் சாப்பிடலாம், டயட் வர்ஷன் தான்! :) 
இல்லை..உங்க பதிவைப் படித்து பசி எடுத்துவிட்டது என்போருக்காக...
பீர்க்கங்காய் பொரியல்-முருங்கைக்கீரை பொரியல்-சோறு & காளான் குழம்பு
என்ஸாய்! ஹேவ் எ நைஸ் வீக் அஹெட்! 
:)

Wednesday, October 23, 2013

ரசித்த பாடல்கள்..

ரசித்த பாடல்களைப் பகிர்ந்து சிலநாட்களாகி விட்டதால் இந்தப் பதிவில் நான் ரசித்த சில பாடல்கள்! மோஸ்ட்லி எல்லாப் பாடல்களும் காதலர்கள் பாடுபவை..ஸோலோ ஸாங்க்ஸ்!
~~~
ஹரிஹரனின் இனிய குரலில், வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் வரிகளுடன் ஆஹா படத்தில் இருந்து "முதன் முதலில் பார்த்தேன், காதல் வந்ததே.."

நொடிக்கொருதரம் உனை நினைக்க வைத்தாய்..
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்! ..
உனைக்கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்..
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்!..
~~~
வைரமுத்து-வின் வைரவரிகள், வித்யாசாகரின் இசை..ஶ்ரீநிவாஸின் குரலில் "தல" அஜீத்தின் அழகான(!) தோற்றத்துடன் ஒரு மெலடி..உயிரோடு உயிராக-படத்தில் இருந்து..

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்..
விண்மீனெல்லாம் நிலவாய்ப் போனது எந்தன் வானத்தில்..
முப்பது நாளும் முஹூர்த்தமானது எந்தன் மாதத்தில்..
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்!
~~
பழநிபாரதியின் வரிகள், கார்த்திக் ராஜாவின் இசை, ஹரிஹரனின் குரலில், உல்லாசம்-படத்தில் இருந்து..."வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?.." கூடவே அழகான விக்ரம் :) என்று சொல்லவும் வேண்டுமா! ;)

அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன்..
போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்!
சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்
விழிகள் முழுதும் நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம்..முதலா..முடிவா?
~~
மீண்டும் வைரமுத்துவின் வரிகள், ஹரிஹரனின் குரல், S.A.ராஜ்குமாரின் இசையில், துள்ளாத மனமும் துள்ளும்-படத்திலிருந்து... "இருபது கோடி நிலவுகள் கூடி.." பலமுறை முயற்சித்தும் பாடலை டைரக்ட்டாக இங்கே இணைக்க முடியவில்லை. சிரமம் பார்க்காம வீடியோவை க்ளிக் செய்து யுடியூபிற்குச் சென்று பாட்டைக் கேளுங்க!

குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு?.. - உன் 
கால்விரல் நகமாய் இருப்பது சிறப்பு! 
:))))
வெட்கப்படாமச் சொல்லுங்க, இந்த வரிகளைப் படிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஒரு சந்தோஷம் வருவது நிஜம்தானே!! :)))
~~
இறுதிப் பாடல் ஒரு சோகப் பாடல்...சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்! :) இதுவும் ஏதோ சன் நெட்வொர்க் காப்பிரைட் என்கிறது. அதனால் யுடியூபிற்குச் செல்லவும்!  படம்- தீனா, ஹரிஹரனின் குரல், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை...கொழுக் மொழுக் அஜீத்! :))) 


சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்!
..
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை..
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தானலைவான் வீதியிலே!! :))))
~~~
பாடல்கள் செவிக்குணவு...ஸ்வீட் பஃப்ஸ் வயிற்றுக்குணவு!
என்ஸாய்! 
:)

Saturday, October 19, 2013

ப்ரவுன் ரைஸ்-பச்சைப்பயறு தோசை / ப்ரவுன் ரைஸ் பெசரட்டு

தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு-1/2கப்
ப்ரவுன் ரைஸ்-1/2கப்
பச்சைமிளகாய்-3
இஞ்சி-சிறுதுண்டு
கொத்துமல்லித் தழை-கால் கட்டு
உப்பு

செய்முறை
அரிசி, பச்சைப்பயறை 2-3 முறை களைந்து நான்கு மணி நேரங்கள் ஊறவைக்கவும். 
ஊறியவற்றை தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
 அரைபட்டதும் பச்சைமிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
 பெசரட்டுக்கான மாவு தயார். இது புளிக்க வேண்டிய அவசியமில்லை, அரைத்த உடனே தோசையாக சுடலாம்.
 தோசைக்கல்லை காயவைத்து தோசைகளாக ஊற்றவும்.
 சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடவும்.
காரசாரமான ப்ரவுன் ரைஸ் பெசரட்டு தயார். விருப்பமான சட்னி, சாம்பார் அல்லது பொடியுடன் ருசிக்கலாம். புளிக்காத மாவில் செய்வதால் சூடாகச்  சாப்பிடவேண்டும், ஆறினால் காய்ந்து போனது போல இருக்கும்.
படத்தில் பெசரட்டுவுடன் இருப்பது வெங்காயச் சட்னி

Monday, October 14, 2013

சுரைக்காய் பாயசம்/ Bottle-gourd kheer- Lauki ki kheer-Dudhi kheer

தேவையான பொருட்கள்
துருவிய சுரைக்காய்-1/2கப்
பால்-2கப்
சர்க்கரை-1/4கப்
நெய்-2டேபிள்ஸ்பூன்
முந்திரி-கொஞ்சம்
ஏலக்காய்-2
முந்திரி, பாதாம், ஏலக்காய், சர்க்கரை சேர்த்து பொடித்த பொடி-1டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை
சுரைக்காயைக் கழுவி, தோல் சீவி, விதைகள் இருப்பின் அவற்றை நீக்கிவிட்டு துருவிக் கொள்ளவும். துருவிய காயை நன்றாகப் பிழிந்து, சுரைக்காயின் நீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் காயவைத்து  சிறு துண்டுகளாக உடைத்த முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 
அதே கடாயில் துருவிய சுரைக்காயைச் சேர்த்து மிதமான தீயில் சுருள வதக்கவும். 
பக்கத்து அடுப்பில் 2 கப் பாலை காய்ச்சி, பொங்கியதும் தீயைக் குறைத்து பால் கொஞ்சம் வற்றும்வரை சுண்டவைக்கவும். 
வதக்கிய சுரைக்காயைச் பாலுடன் சேர்த்து கலந்துவிடவும். 
சிலநிமிடங்கள் கழித்து கால்கப் சர்க்கரையைச் சேர்க்கவும். 
சர்க்கரை கரைந்து பாயசம் சற்றே கெட்டியானதும் பாதாம்-முந்திரி-ஏலம்-சர்க்கரை பொடியைச் சேர்க்கவும்.
ஏலக்காய் பொடித்து சேர்த்து, பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கவும். வறுத்துவைத்துள்ள முந்திரியைச் சேர்க்கவும்.
க்ரீமி அண்ட் ரிச் சுரைக்காய் பாயசம் தயார்.
சூடாகவும் பரிமாறலாம், அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில்ல்ல்ல்ல்ல்லென்றும் பருகலாம்.
சூடான பாயசத்தை விடவும் ஜில்ஜில் பாயசம் ரொம்ப அருமையாக இருந்தது. சூடாக சாப்பிடுவது ஒரு ருசி, குளிரவைத்து ருசிக்கையில் இன்னொரு ருசி. எது உங்க ஃபேவரிட் என்று செய்து சாப்பிட்டுப்பார்த்து மறக்காமச் சொல்லுங்க! :) 
நன்றி!

குறிப்பு

  • சம அளவு (1/4கப்) பாதாம், முந்திரி இவற்றையும் ஏலக்காயையும் வெறும் கடாயில் லேசாகச் சூடாக்கி ஆறவிடவேண்டும். ஆறியதும் கால்கப் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொண்டால் இப்படியான பாயசங்கள் மற்றும் மில்க் ஸ்வீட்களுக்கு ஓரொரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.  இனிப்புப் பண்டத்தின் சுவை கூடுவதுடன்,  கொஞ்சம் கெட்டியாகும், க்ரீமியாகவும் இருக்கும். 
  • இந்தப் பொடியைச் சேர்த்து மசாலா பால் கூட செய்யலாம். பாலைக் காய்ச்சி தேவையான அளவு பொடி, தேவைப்பட்டால் சர்க்கரையும் சேர்த்தால் மசாலா பால் ரெடி. 
  • இனிப்புகளுக்கு ஏலக்காயைப் பொடித்துச் சேர்த்தவுடன் சூடாக்காமல் இருந்தால் ஏலத்தின் வாசனை தூக்கலாக இருக்கும். அதனால் அடுப்பிலிருந்து இறக்கும்போது ஏலப்பொடி சேர்க்கவும்.
  • lauki-dudhi என்பன ஹிந்தியில் சுரைக்காயின் பெயர்கள். bottle gourd என்பது ஆங்கிலப்பெயர். [இது கூட எங்களுக்குத் தெரியாதா என நீங்க டென்ஷன் ஆகுமுன் மீ த எஸ்கேப்பூ! ;))))]

Friday, October 11, 2013

மூன்றாம் பிறை..

ஞாயிற்றுக்கிழமை மாலை..கதிரவன் வானெங்கும் மஞ்சளும், நீலமும், சிவப்பும். கருப்புமாய் வண்ணக்குழம்பெறிந்து மேற்கில் சரிந்த பொழுதில்..
மெல்லிய கீற்றாய் மேல்வானில் இந்தின் இளம்பிறை..
மஞ்சள் அரைக்கும் வானமகள்..ஆங்காங்கே கார்காலத்தில் பிசிறி விட்ட பஞ்சுத் துணுக்குகளாய்க் கருமேகக்கூட்டங்கள்! அவற்றில் வாயு தேவன் தீட்டும் எழிலுறு ஓவியங்கள்!
இயற்கையுடன் போட்டி போட்டுத் தோற்கும் சாலையோர விளக்கு..
கேமராவில் சிறை பிடிக்கப் பிடிக்கச் சற்றும் சலிக்காத அழகு வானம்! 

மாடியிலிருந்து சில படங்கள்..கீழே இறங்கி வந்து சில படங்கள் எனச் சில்லென்ற ஒரு அக்டோபர் மாலைப் பொழுதில் க்ளிக்கிய மூன்றாம் பிறை!
முடிந்தால் மூன்றாம் பிறை முழுநிலவாவதையும் படமெடுத்து இணைக்கிறேன். :)
~~~
இன்றைய இணைப்புகள் 

நிழலும் நிஜமும்.. 
;) 
Geno: wow..nu toy!..gimme that Mommy!
Yay....I got it!
:)
~~~
மஞ்சள், வெள்ளை, சிவப்பு என்று மூவண்ணத்தில் ஒரு சிம்பிள் வீகெண்ட் லன்ச்! :) 

Monday, October 7, 2013

புகைப்படத் தொகுப்பு - தொட்டிச் செடிகள்

மூன்று வண்ணங்களில் வாங்கிவந்த ஜெரேனியம் (geranium) மலர்ச்செடிகளில் உயிர்பிடித்து, புதிதாகப் பூத்த ஒரு மலர்க்கொத்து..
சற்றே பின்னால் நகர்ந்து நின்று ஒரு லாங் ஷாட்! :)
~~
டாலர் ஷாப்பில் வாங்கிவந்த 99காசு ரோசாப்பூ!  இந்தத் தொட்டியும், ஜெரேனியம் தொட்டியும் ஒரு நாள் மாடியிலிருந்து தரைக்கு தொப்பென வீழ்ந்துவிட்டன. ஏதோ சத்தம் கேட்டது, ஆனால் இதுவரை இப்படி நிகழாத காரணத்தால் நானும் கவனிக்கவில்லை. மாலையில் கீழ்வீட்டு பால்கனியில் இருந்த தொட்டிகளைப் பார்த்துவிட்டு, "கீழ் வீட்டுக்காரப் பையனும்  நம்மைப்போலவே தொட்டிகள் வாங்கி வைச்சிருக்காரே" என ஆச்சரியப்பட்டு(!?!) விட்டு வந்துவிட்டேன். ஹிஹி...
பிறகு சிறிது நேரம் கழித்து மண்டைக்குள் பல்பு எரிய, பால்கனிக் கதவைத் திறந்து பார்க்கிறேன், இங்கே தொட்டிகளைக் காணோம்! ;)))) தரையில் விழுந்து கிடந்ததை யாரோ எடுத்து கீழ்வீட்டுச் சுவரில் வைத்திருக்கிறார்கள். பிறகென்ன! மறுபடி கீழே போய் நம்ம ப்ராப்பர்டியைக் கலெக்ட் பண்ணிட்டு வந்து மறுநடவு செய்தேன். வருமா என்ற சந்தேகத்துடன்தான்! நல்லவேளையாக இரண்டு செடிகளுமே ஓகே-வாக இருக்கின்றன.
~~
சிலநாட்களாகவே எல்லாச் செடிகளிலும் கருப்பு எறும்பு போன்ற பூச்சிகள் இருந்துகொண்டே இருக்கின்றன. எறும்புகளுடனே செடிகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றன..

~~
இது மணத்தக்காளிப் பூ! சிறு தக்காளிச் செடியை மணத்தக்காளிச் செடியுடன் குழப்பிக்கொள்ளும் ஆட்கள் படத்தை பெரிதாக்கி, செடியின் இலைகள் மற்றும் பூக்கள்-காய்கள் இவற்றை அடையாளம் கண்டுகொள்ள உதவியாக இருக்குமே என்ற ஒரு நல்லெண்ணத்தில்... ஹிஹி..
~~
தக்காளி/மிளகாய்ச் செடியும் நானும்..
ஆகஸ்ட்டில் ஹோம் டிப்போவில் வாங்கி வந்த தக்காளி-மிளகாய் இரண்டு நாற்றுக்களுமே சரிப்படவில்லை! மிளகாய் வந்த புதிதிலிருந்தே பூச்சிகளுடன் இருந்தது. சில நாற்றுக்கள் மட்டும் எறும்புடன் சந்தோஷமாகவே வளர்ந்து ஓரிரண்டு பிஞ்சுகள் விட்டிருக்கின்றன. 
படத்தில் மேலே இருக்கும் இலையின் பின்பகுதியைப் பாருங்கள்..வெள்ளைப் புள்ளிகள், எறும்புகள்..கூடவே பூக்களும், பிஞ்சும்! :) 

தக்காளிக்கும் எனக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான்! இந்த முறை வாங்கிவந்த செடி ஆரோக்கியமாக கொழு-கொழுவென்று தழைந்தது. ஆச்சரியத்துடன், சப்போர்ட்டுக்கு குச்சிகள் நட்டு ஏதோ எனக்குத் தெரிந்த அளவில் வேலிகள் கூட கட்டிவைத்தேன்.
வழக்கம்போல, திடீரென செடி தானாக வாடத் துவங்கியது..இலைகள் சுருண்டுகொண்டு வரளத்துவங்கின..
இப்போது பரிதாபத்துக்குரிய நிலையில் டக்காளி! கர்ர்ர்ர்ர்ர்ர்! வந்தா வா-போனாப் போ என விட்டாச்சு போங்க! 
~~
வாசலிலே பூசணிப்பூ வைச்சதென்ன...

யெல்லோ ஸ்க்வாஷ் நாற்றில் பூக்கள்(மட்டும்) வரத்துவங்கி இருக்கின்றன. மலர்ந்த மலர்கள் அப்படியே வாடிப்போய்க்கொண்டுதான் இருக்கின்றன. செடி சிறிதாக இருப்பதால் இன்னும் சற்று வளரும் வரை காய் பிடிக்காமலிருப்பது நலம்தான் என நானும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறேன்.
~~ 
படங்கள் பார்த்து ரசித்தாச்சு..காலிஃப்ளவர் தோசை & புதினா-தக்காளி சட்னி ரெடியாய் இருக்கு, சாப்பிட்டுட்டுப் போங்க!

லன்ச் டைம்ல வந்து படிக்கும் ஆட்களுக்கு கேல் (Kale) பொரியல், அரசாணிக்காய்(மஞ்சள் பூசணி) பொரியல், சோறு, மோர்க்குழம்பு..
என்ஜாய்!

Wednesday, October 2, 2013

ஹெல்த்தி எள்ளுருண்டை/ Sesame seeds-Chia seeds-Peanuts Laddu

முன் குறிப்பு 
"இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு"- என்று பழமொழி உண்டு. அதனால் இளைத்தவர்கள் இந்த எள்ளுருண்டையை விரும்பிய அளவு சாப்பிடலாம்,  "மற்றவர்கள்" அளவாகச் சாப்பிடவும். இது ஒரு அடிக்டிவ் ஸ்னாக். சாப்பிட ஆரம்பித்தால் நிறுத்தாமல் சாப்பிடச் சொல்லும், ஜாக்கிரதை! :))) ;))))
தேவையான பொருட்கள்
கருப்பு எள்ளு-1/2கப்
வெள்ளை எள்ளு-1/4கப்
சியா சீட்ஸ்-2டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை-1/4கப்
வெல்லம்-4 (அ) 5 டேபிள்ஸ்பூன்

செய்முறை
வெல்லம் தவிர எல்லாப் பொருட்களையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து ஆறவைக்கவும். [நான் வறுத்த வேர்க்கடலையை உபயோகித்தேன், அதனால் சில நிமிடங்கள் சூடானது போதுமாய் இருந்தது. பச்சைக்கடலை என்றால் கருகாமல் வறுத்து தோல் நீக்கிக்கொள்ளவும், தோலுடனும் சேர்க்கலாம்.]
மிக்ஸி ஜாரில் முதலில் கருப்பு மற்றும் வெள்ளை எள்ளைச் சேர்த்து அரைக்கவும்.
கொறகொறவென்று அரைபட்டதும், சியா சீட்ஸ் மற்றும் வேர்க்கடலை சேர்த்து அரைக்கவும்.
பொடித்த வெல்லத்தையும் சேர்த்து 2-3 சுற்றுக்கள் மிக்ஸியை அரைக்கவும்.
சுவையான எள்ளுருண்டை கலவை தயார்..
விரும்பிய வடிவில் உருண்டை பிடித்துக் கொள்ளலாம்.

இப்படி கலவையான எள்ளுருண்டை முதல் முறை செய்வதால் 2 டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ்மட்டுமே சேர்த்தேன், சுவையில் எந்த மாறுதலும் தெரியாமல் சூப்பராக இருந்தது. அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சியா விதைகள் சேர்க்கலாம் என்றிருக்கிறேன்.
சில நாட்கள் முன்பாக இந்த சியா சீட்ஸ் பற்றி என்னவருக்கு ஆஃபீஸில் யாரோ சொல்லியிருக்கிறார்கள்,  Flax seeds (ஆளி விதை) போல இதுவும் ஒரு வைல்ட் க்ரெய்ன். dietary fibers, அதிக அளவு ப்ரோட்டீன், ஒமேகா-3, மற்றும் உடலுக்கு நன்மைதரக்கூடிய பல சத்துக்கள் இந்த சியா சீட்ஸ்-ல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
எள்ளை விடவும் சிறிய விதைகளாக இருக்கிறது. தனியே குறிப்பிடத்தக்க சுவை எதுவும் இல்லை. ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என  சியா சீட்ஸ்-பேக்கட் சொல்கிறது. ஜூஸ், மில்க் ஷேக் இவற்றில் மேலே தூவிக்கொள்ளலாம். உப்புமா, ஆம்லெட், சீரியல் இவை சாப்பிடும்போதும் மேலே தூவிக்கொள்ளலாம். அதனால் வாய்ப்புக் கிடைக்கும்போது இவற்றை உணவில் சேர்த்துக்கொள்கிறோம். :)

விரும்பினால் எள்ளுருண்டைக்கு ஏலக்காயும் சேர்க்கலாம், ஆனால் எனக்கு வறுத்த எள்ளின் மணம் மட்டுமே போதுமானதாக இருப்பதால் ஏலக்காய் சேர்ப்பதில்லை. கொப்பரைத் தேங்காய் சேர்ப்பதென்றால் அதுவும் சேர்க்கலாம்.

கருப்பு எள்ளில் மட்டுமே செய்த எள்ளுருண்டைகள் இவை...ரெசிப்பி இங்கே!
எள்ளின் சுவை கொஞ்சம் ஸ்ட்ராங்க்-ஆக இருப்பதாகத் தோன்றினாலோ அல்லது ஜஸ்ட் ஃபார் எ சேஞ்ச்-ஆகவோ இப்படி கலவை உருண்டைகள் செய்து பாருங்க. :)

LinkWithin

Related Posts with Thumbnails