Tuesday, February 26, 2013

Lost & Found மற்றும் இன்ன பிற!

இன்று காலை பத்தரை மணி சுமாருக்கு வாக் போகலாம் என்று கிளம்பினேன். ரொம்ப குளிரும் இல்லாமல் சுள்ளென்ற வெயிலும் இல்லாமல் குளுகுளு தென்றல் அவ்வப்போது முகத்தில் செல்லமாக மோத இதமாக இருந்த நடையை ரசித்தவண்ணம் போய்க்கொண்டே இருந்தேனா....
..................
...........
......
...திடீரென மேலே படத்திலுள்ளவர் சாலையோரமாக நின்றிருந்தார். அருகில் ஆட்கள்  யாரையும் காணோம். அருகிலுள்ள வீடுகளைச் சேர்ந்தவரா, இல்லை வெறெங்காவதிருந்து இங்கே வந்தவரா எதுவும் தெரியவில்லை. "பக்கத்தில் வா!" என்று கூப்பிட்டதும், கொஞ்சம் பயப்பட்டாலும் சிறிது நேரங்கழித்து அருகில் வந்தார்.  கழுத்தில் ஒரு காலர் இருந்தது, எங்கிருந்தோ தொலைந்துதான் போயிருக்கிறார் என அவர் முகம் மற்றும் நடை-பாவனைகளில் இருந்து தெரிந்தது. 

நானோ நடந்து போயிருக்கிறேன். இவரை என்ன செய்வது..காரில் போயிருந்தால் கூட அப்படியே அமுக்கி:) காரில் அடைத்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று பார்த்திருக்கலாம். அப்படியே அம்போவென விட்டுப் போக மனம் வரவில்லை..என்ன செய்வதென விளங்கவும் இல்லை. உடனே என்னவருக்கு ஒரு தொலைபேசினேன், அதிசயமாக அவரும் போனை எடுத்தார். என்ன செய்வதுன்னு மறுபடியும் குழம்பி..சரி அருகில் இருக்கும் அனிமல் ஷெல்டருக்குத் தகவல் கொடுப்போம் என முடிவானது.
அதற்குள்ளாக இவர்(ரிக்கி) எனக்கு முன்னால் கொஞ்சம் நடப்பதும், பின்னால் போய் மறுபடி என்னிடம் நடந்து வருவதுமாக இருந்தார். பின்னங்காலில்  ஒன்று ஏதோ வலி இருக்கும் போலும், அவ்வப்போது 3 காலிலும் நடந்தார். இப்படியாக இருவரும் நடந்து நடந்து வால்மார்ட் அருகில் வந்துவிட்டோம். அதற்குள் அருகில் இருந்த அனிமல் ஷெல்டருக்கு போன் அடித்து பேசினால், லொகேஷன் கேட்டதும் அவர்கள் " நீங்க ஆரஞ்ச் கவுன்டி அனிமல் ஷெல்டருக்கு போன் பண்ணுங்க, இது  எங்க ஏரியா இல்லை" என்று சொல்லி தொலைபேசி எண்ணை கொடுத்தார்கள்.

இத்தனைக்கிடையிலும் எங்க நடை  நிற்கவில்லை..சாலைகளைத் தாண்டுகையில் ரிக்கி அகஸ்மாத்தாக சிக்னல் எல்லாம் கண்டுக்காம அவர் இஷ்டத்துக்கு ஓடினார். நான் பக்-பக்னு துடிக்கும் இதயத்தை வாய்வழியே வெளியே கொண்டுவந்திரக்கூடாதேன்னு கஷ்டப்பட்டு சாலையைக் கடந்தேன். பிறகொருமுறை சமர்த்தாக என் பக்கத்தில் வந்து, சிக்னல் விழுந்ததும் பவ்யமாக என்னுடனே நடந்தார். அப்படியே வால்மார்ட் பார்க்கிங் லாட் பக்கம் வந்ததும், ஒரு காரில் இருந்த பெண்மணி அவசரமாக "இஸ் இட் யுவர் டாக்" என கேட்டவாறே ஓடிவந்தார். தான் சிலமைல்கள் தள்ளி குடியிருப்பதாகவும், அவர் வீட்டருகில் ஒரு நாய்க்குட்டி காணமல் போனதாகவும் சொன்னார். தொலைந்து போன ஆள்தான் இந்த ரிக்கி!

இருவருமாகச் சேர்ந்து ரிக்கியை கேட்ச் பண்ணி;) அந்தப் பெண்ணின் காரில் உட்காரவைத்தோம். அவன் கழுத்தில் இருந்த காலரை செக் செய்து அதிலிருந்த எண்ணுக்கு தொலை பேசினால் அது fax number! grrrrrrrr! பிறகு தானே கூட்டிச் சென்று ரிக்கியை வீட்டில் சேர்த்து விடுவதாக கூறி சென்றுவிட்டார். ரிக்கி வீட்டுக்குப் போயிட்டார். சுபம்! :)
 ~~
சரி, ரிக்கிதான் வீட்டுக்குப் போயிட்டானே, வாங்க நம்ம பக்கத்தில் இருக்கும் டாலர் ஷாப்-கு போவோம். :) வாக்கிங் வருகையில் இந்தக் கடைக்குள் நுழைஞ்சு கொஞ்சம் டைம் பாஸ் பண்ணிட்டுப் போறது வழக்கம். ஹிஹி!
 வண்ண வண்ணமாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த பூஜாடிகள் கண்ணைக் கவர்ந்தன. க்ளிக்கிட்டேன். :) 

அப்படியே அந்தப் பக்கம் வந்தா...என்னடா இது, வெள்ளை வெள்ளையா இருக்கேன்னு உத்துப் பாத்தேன். கரும்பு...ஆஹா! :)
என் கண்களையே நம்ப முடியாம கண்ணைக் கசக்கிப் பார்த்தேன்..ஆமாங்க, கரும்பேதான்! PEELED SUGAR CANE என்று எழுதி சிறு பாக்கட்களாக போட்டு வைச்சிருந்தாங்க. ஒருமுறை ஆசையா கரும்புன்னு வாங்கி, அது தோசியாப் போனதால் ரிஸ்க் எடுக்கலை நானு. போட்டோ மட்டும் எடுத்துகிட்டு நடையக் கட்டினேன். ;) :)
வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும்..முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்!! :)))
 ஆனால் எங்க ஊரில்,
வரும் வழியில் இளவெயிலில் புதுமலர்கள் தினம் நனையும்..முகிலெடுத்து முகம் துடைத்து மாலை வரை நகை புரியும்!! :)))


வைரமுத்துவின் வைரவரிகளோடு, SPB-யின் இனிய குரல்..இதயம் வரை நனையும் பாடல்..பயணங்கள் முடிவதில்லை-படத்திலிருந்து! கீழே படத்தில் எங்க வீட்டுப் பால்கனியில் "விழாக் காணும் வானம்"! :)
 உலாப் போகும் மேகம் கனாக் காணுமே..
விழாக் காணுமே வானமே! 
வான வீதியில் மேக ஊர்வலம்..
காணும் போதிலே ஆறுதல் தரும்!

Monday, February 25, 2013

BBB

A, B, C, D கூட ஒழுங்கா சொல்லத்தெரில, ஒரே எழுத்தை திரும்பத் திரும்ப சொல்லுறாங்க என்று சிரிக்கிறீங்க..ஐ நோ!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;) பிஸி  பேளே  பாத் - Bisi Bele Bath அப்படீன்றதத்தான் சுருக்கி BBB -னு சொல்லிருக்கேன். டைப் பண்ணற எனக்கும் ஈஸி, படிக்கிற உங்களுக்கும் ஈஸி![டைட்டில மட்டும் மூணெழுத்தில வைச்சிட்டு போஸ்ட்ல நீட்டி முழக்கிட்டு.."எங்களுக்கு ஈஸி"ன்னு வேற சொல்றயா? என்று பல்லைக் கடிக்காதீங்க..பாவம் பல்லு! :)

(என்னைப் பொறுத்தவரை) இந்த ரெசிப்பிக்கு முக்கியமான பொருட்கள் ரெண்டு. ஒண்ணு பச்சை வேர்க்கடலை, ரெண்டாவது கலர் கலர் குடைமிளகாய்! மத்த என்ன இல்லன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா இது ரெண்டும் இல்லாம BBB செய்யாதீங்கன்னே சொல்லுவேன்! ஹிஹி! கூடவே சாப்பிடும்போது தட்டுல சுடச்சுட சாம்பார் சாதத்தை வைச்சு, மேலாப்பல காராபூந்தியோ, மிக்ஸரோ தூவி, ஒரு டீஸ்பூன் நெய்யும் விட்டு சாப்பிட்டா...சாப்பிட்டுப் பாருங்க, உங்களுக்கே தெரியும். :) ;)
தேவையான பொருட்கள்
அரிசி-3/4கப்
துவரம் பருப்பு-1/4கப்
விருப்பமான காய்கறிகள்( சற்றே பெரிய துண்டங்களாக்கியது)-1கப்
தக்காளி-2
பச்சை வேர்க்கடலை -ஒரு கைப்பிடி
புளிக்கரைசல்-1/4கப்
மஞ்சள் பொடி-1/4டீஸ்பூன்
மிளகாய் பொடி-1/2டீஸ்பூன்
சர்க்கரை -1/4டீஸ்பூன்
MTR சாம்பார் பொடி (அ) ஏதாவதொரு:) சாம்பார் பொடி-11/2டீஸ்பூன்
தண்ணீர்-21/4 கப்

நெய்
உப்பு
தாளிக்க
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் -1(நீளமாக நறுக்கவும்)
குடைமிளகாய்(பச்சை-சிவப்பு-ஆரஞ்சு இப்படி எல்லாக் கலரும் சேர்த்து)-1
கறிவேப்பிலை
பட்டை -2"துண்டு
கிராம்பு-2
சீரகம்-1/2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-2

செய்முறை
அரிசி-பருப்பை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
குக்கரில் அரிசி-பருப்பு-காய்கள்-பச்சை வேர்க்கடலை-நறுக்கிய தக்காளி-மஞ்சள் பொடி-மிளகாய்ப் பொடி-சாம்பார் பொடி-உப்பு-சர்க்கரை-புளிக்கரைசல் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீரும் சேர்த்து 3 விஸில் வரும் வரை சமைக்கவும்.
தனியாக ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு-சீரகம்-பட்டை-கிராம்பு சேர்த்து பொரியவிட்டு, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.  [தாளிக்க வேண்டிய பொருட்களை தாளிக்கவும்-அப்படின்னா ஒரே லைன்ல வேலை முடிஞ்சது, ஆனாலும் பாருங்க, விளக்கவுரை-பொழிப்புரை எழுதிஎழுதிஎழுதி....சரீஈஈஈ...நிறுத்திக்கறேன்!;)] வதக்கும்போது கொஞ்சூண்டு உப்பும் சேர்த்தா சுவை நல்லா இருக்கும், சும்மா ரெண்டு சிட்டிகை சேருங்க. ப்ரெஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து தாளித்த பொருட்களைச் சேர்த்து கலந்துவிடவும். விரும்பினால் இப்பொழுதும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து கலக்கிவைக்கலாம்.
சுவையான BBBath தயார். விருப்பமான வடகம், சிப்ஸ், அப்பளம் வகைகளுடன் சாப்பிடலாம்.
குறிப்பு
நான் சேர்த்திருக்கும் காய்கறிகள் 2கத்தரிக்காய்,சில துண்டுகள் முருங்கைக்காய், கொஞ்சம் மேரக்காய்/ சௌ-சௌ/பெங்களூர் கத்தரிக்காய், கேரட் 1, பீன்ஸ் ஒரு 3-4 அப்புறம் ஒரு சின்ன உருளைக் கிழங்கு. நீங்க உங்க வீட்டில் கைவசம் இருக்கும் காய்களை சேர்க்கலாம்.
நான் சக்தி மசாலாவின் சாம்பார் பொடி உபயோகித்தேன்.

இந்தக் குறிப்பு ஆங்கில வலைப்பூவில் பலகாலம் முன்பே பகிர்ந்திருந்தாலும், இங்கே மறுபடி பகிரக் காரணம் கடந்த வாரத்தில் மீண்டும் ஒரு முறை செய்தேன்.  என்னவருக்கு சாம்பார் சாதம் அவ்வளாப் புடிக்காது, பலநாள் கழிச்சு செய்ததால் சாப்பிட்டார், அவருக்கும் ரொம்ப பிடிச்சிப்போச்சு. சாதத்தின் மேலே மிக்ஸர் தூவி சாப்பிட்டது அவர்தான், எனக்கு இந்த அலங்காரம்லாம் வேணாம், அப்படியே சாப்பிடுவேன். ;) :) 
இவ்ளோ விளக்கிருக்கேன், கட்டாயம் நீங்களும் ஒருமுறை BBB செய்து பார்ப்பீங்கதானே? :) 
~~~
Sending this recipe to "Passion on Plate" event happening at "En Iniya Illam"
~~~

Friday, February 22, 2013

வயலட் காலிஃப்ளவர் குருமா

முன்பே ஒரு பதிவில் உழவர் சந்தைக்குப் போய் வயலட் காலிஃப்ளவர் (purple cauliflower) வாங்கிவந்தது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். வண்ணமயமான காலிஃப்ளவர் கிடைக்காவிட்டாலும், சாதா காஃலிப்ளவரிலும் இதே போன்ற குருமா செய்யலாம். நான் இதுவரை வெள்ளை-பச்சை-வயலட் மூணு கலரில் காலிஃப்ளவர்கள் வாங்கியிருக்கிறேன். இந்தக் காய் புதிதாக இருந்ததால் ருசி மிகவும் நன்றாக இருந்தது. இன்று காலிஃப்ளவரை எப்படி குருமாவில் உபயோகிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க. :)
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் பூக்கள் -7 (படம் 1-ல் உள்ள அளவு)
வெங்காயம்-1
தக்காளி-1
பச்சைமிளகாய்-1
இஞ்சி-பூண்டு தட்டியது - 1டீஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி -1/4டீஸ்பூன்
கறி மசாலா பொடி-11/2டீஸ்பூன்
கரம் மசாலா பொடி-1/2டீஸ்பூன்
Half &Half milk -2 டேபிள்ஸ்பூன் (அல்லது) க்ரீம்-2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி- கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைக்க
தேங்காய்த் துருவல் - 2டேபிள்ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு - கொஞ்சம்

செய்முறை
காலிஃப்ளவர் பூக்களை சுத்தம் செய்து அலசிவைக்கவும். பெரிய பூக்கள் எனில் ஒரே அளவான துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கிவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு, கடுகு பொரியவிடவும்.
நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தட்டிய இஞ்சி-பூண்டு சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து, குழையும் வரை வதக்கவும். 
நறுக்கிய காலிஃப்ளவர் பூக்களை சேர்த்து பிரட்டவும்.
 
அரை கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.காய் முக்கால் பாகம் வெந்ததும்(சீக்கிரமாய் வெந்துவிடும், 4-5 நிமிடங்கள் கொதித்தால் போதுமானது) அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
குருமா நன்றாக கொதித்ததும் half & half milk -ஐச் சேர்க்கவும். தீயைக் குறைத்து சர்க்கரையையும் சேர்த்து கலந்துவிடவும்.
2-3 நிமிடங்களுக்குப் பிறகு கரம் மசாலா பொடி மற்றும் மல்லித்தழை தூவி குருமாவை அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான க்ரீமி காலிஃப்ளவர் குருமா தயார். சப்பாத்தி, மற்றும் சாத வகைகள், இட்லி-தோசை எல்லாவற்றுக்கும் பொருத்தமான குருமா இது.
~~~
Sending this recipe to "Passion on Plate" event happening at "En Iniya Illam"
~~~

Tuesday, February 19, 2013

அடி பின்னீட்டீங்க, நன்றி! :)

ஒண்ணா..ரெண்டா?
அஞ்சா..பத்தா?
நூறா..ஆயிரமா?
பத்தாயிரமா..லட்சமா?
ஒரு லட்சமா..ரெண்டு லட்சமா?
மூணு லட்சம்..மூணு லட்சம்..மூணு லட்சம்! ஆமாங்க..என் வலைப்பூ 3,00,000க்கும் மேல "அடி":) வாங்கிருச்சு! :)))) Mahi's Space has crossed 3,00,000 hits! :))))))))

கவனமாக் கவனிச்சிகிட்டேதான் இருந்தேன், ஆனா பாருங்க..பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு தூங்கப் போகயில் 2,99, 099 என்று இருந்த பேஜ் வியூஸ்...
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது முக்கியமான எண்ணைக் கடந்து 3,00,102-ல வந்து  நின்றிருந்தது.
வலைப்பூ ஆரம்பித்து வருஷங்கள் மூன்றானாலும் சீராகப் பதிவுகள் போட்டுக்கொண்டே இருந்தேனா என்றால் இல்லை. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பதாக திடீரென சிலபல நாட்கள் இந்தப் பக்கம் வராமல் மறைந்து விடுவேன். பலநாட்கள் வந்த கருத்துக்களுக்கெல்லாம் நல்ல புள்ளையாகப் பதில் கொடுப்பேன், சில நாட்கள் சோம்பேறியாகி அடுத்த பதிவைப் போட்டுவிடுவேன். :)))) ஆனாலும் என்னிடம் ஏதேனும் விளக்கம், சந்தேகம் கேட்பவர்களை இதுவரை தெளிவாக்காமல் விட்டதில்லை! ;)

இப்படி நான் செய்யும் குறும்புகளை எல்லாம் பொறுமையாக சகித்துக்கொண்டு தவறாமல் என் பதிவுகளைப் படித்து கருத்துக்கள் தந்து உற்சாகப் படுத்தும் முகம் தெரிந்த/தெரியாத நட்புக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கருத்துக்கள் தர நேரமில்லா விட்டாலும், விருப்பமில்லா விட்டாலும்;)  தவறாமல் வந்து என் எழுத்துக்களைப் படித்துச் செல்லும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
 ~~~
பி.கு. என் எழுத்து இந்த வலைப்பூவுக்கு முதுகெலும்பாக இருந்தாலும் புகைப்படங்கள் வலைப்பூவின் நறுமணமாக இருந்தது என்பது உண்மை. இதுநாள் வரை எனக்குத் தேவையான படங்களை நன்றியுடன் எடுத்துத் தந்து அரும்பணியாற்றி வந்த Sony H7 கேமரா, கடந்த வாரம் திடீரென தன் ஆயுட்காலத்தை முடித்துக் கொண்டுவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இடத்தை நிரப்ப ஒரு Canon t3i வந்திருக்கிறது, ஆனால் கேனன்-இன் தோற்றம் மற்றும் பணிச் செயல்முறைகள் கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் ஆகவும், கவனக்குறைவாகக் கையாள்வது சரியில்லை என அதற்குக் கொடுத்த விலை மிரட்டுவதாகவும் ;) :)  இருப்பதால் இனிமேல் எனது சமையல் குறிப்புகளில் ஸ்டெப்-பை-ஸ்டெப் படங்கள் வருவது (தற்சமயம்) கேள்விக்குறியாக இருக்கின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்ள  கடமைப்பட்டிருக்கிறேன். "ஸோனி"-யை மீண்டும் பலசாலியாக்க முடிந்தால் மிக்க மகிழ்வுறுவேன், பார்ப்போம் என்ன ஆகின்றது என! :)
~~~

Thursday, February 14, 2013

காதல், காதல், காதல்!
காதலிக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையும் காதல் வாழ்க!
பூமிக்கு மேலே வானுள்ள வரையும் காதல் வாழ்க!
~~

இயற்கையன்னை செதுக்கிய இதயங்கள் யாவும் யாஹூ முதல் பக்கத்தில் வந்தவை. பிடித்ததால் இங்கே பகிர்ந்திருக்கிறேன். :)

Wednesday, February 13, 2013

என்னதிது?!...

என்னதிது? உருண்டையா இருக்கு, ஆனா லட்டு இல்லே..வேற என்ன? என்று கேள்விப்புழுக்கள் மண்டையைக் குடைய இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். புழு-பூச்சினு மனசை அலைபாயவிடாம இந்த அழகான பூவைப் பாருங்க. மனசு அமைதியாகும். :)
கடந்த சிலவார இறுதிகளில் இங்கே நடக்கும் ஃபார்மர்ஸ் மார்கெட்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். அப்படியான ஒரு சந்தையில் வாங்கிய பூக்கள்தான் இவை. மம்ஸ்-என்று சுருக்கமாக அழைக்கப்படும் க்ரைசாந்திமம்(செவ்வந்தி) குடும்பத்தைச் சேர்ந்தவை. மார்க்கட்டில் பூக்களைச் சுற்றி ப்ளாஸ்டிக் வலை கட்டி மொட்டுக்கள் போல வைத்திருந்தார்கள்.  இனிமேல்தான் மலரும் என்று நினைத்துக்கொண்டு வாங்கிவந்து வீட்டில் ப்ளாஸ்டிக் வலையை நீக்கியதும், விடுதலையான சந்தோஷத்தில் பளீரென விரிந்து  கொல்லென்று சிரித்தன மலர்கள்! :) 
அடுத்து ஒரு சனிக்கிழமைச் சந்தைக்குப் போனோம். ஞாயிற்றுக்கிழமை சந்தை போலல்லாமல் இது கொஞ்சம் அளவில் சிறிய ஆனால் கடைகள் அதிகமுள்ள சந்தை, பார்க்கிங் லாட்டில் நடப்பது. காய்கள் எல்லாம் ப்ரெஷ்ஷாக வைச்சிருந்தாங்க. நல்ல கூட்டமாகவும் இருந்தது.
முதல் கடையில் நுழைந்ததும் கண்ணில் பட்டன இந்த டிசைனர் காலிஃப்ளவர்? ப்ரோக்கலி? என்னவென்று புரியலை, பக்கத்திலேயே பேரும் எழுதி வைச்சிருந்தாங்க. வாங்கலாம்னு கொஞ்சம் ஆர்வம் வந்தாலும், எதுக்கு ரிஸ்க்-னு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு வயலட் காலிஃப்ளவர் & ப்ரோக்கலி வாங்கிக் கொண்டோம்.

வீடு வந்து கூகுளாரை வேண்டிவிரும்பி:) கேட்டுக்கொண்டதில்  அது Romanesco broccoli என்று விக்கி-மூலம் தெரியவந்தது. பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருக்கிறது அல்லவா அந்த பூக்களின் வடிவம்?
முழுப் பூவைப் பார்க்க மட்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது. அதைப் பிச்சு பிச்சு சமைப்பது என்பது என் மனசுக்கு ஒத்துவரவில்லை. சில விஷயங்களைப்  பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வேன், ரோமனெஸ்கோ ப்ரோக்கலியும் அப்படியே! :)

என்னவருக்கு மிகவும் பிடித்த மஷ்ரூம் கடை..ஆர்வமாய் அவரே செலக்ட் பண்ணி, கவரில் போட்டு, எடை போட்டு..
வாங்கிவந்த மஷ்ரூம்கள்...
வீடு வந்தவுடன் முதலில் சமைக்கப்பட்டவையும் இவையே. அது ஒரு காமெடி கதை! தனியாப் பேசிக்கலாம் அதைய! :) ;) 

ரோமனெஸ்கோ இருந்த கடையிலேயே சின்ன ஆரஞ்சுப் பழங்கள் 8, ஒரு டாலருக்குக் கிடைத்தன. அதையும் வாங்கிக்கொண்டோம். 
அப்படியே சுற்றிவந்து கத்தரி-சுரைக்காய்-பீன்ஸ்-கீரை-கொத்துமல்லி-வெங்காயம்-தக்காளி என ஷாப்பிங்கை முடித்துவிட்டு, கடைசியாக ஒரு பாப்கார்ன் கடையில் ஒரு பேக்கட் கெட்டில் கார்ன் வாங்கி கொறித்தவாறே வீடு வந்து சேர்ந்தோம்.
பை நிறைய காய்கள் வாங்கியாச்சு இந்தமுறை! :)

சரி..இனி முதல் படத்தில் இருக்கும் மர்ம;) உருண்டைக்கு வருவோம். பயப்படாதீங்க, ரெசிப்பியெல்லாம் தரமாட்டேன்..ஏனா எனக்கே தெரியாது, ஹிஹி!! தமிழகத்தில் பால்வாடிகளில் தினமும் சத்துமாவு உருண்டை  குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும். சிறுவயதில் சித்தி ஊருக்குப் போகையில்(அங்கே பெரியவங்களுக்கும் தருவாங்க) சித்தி வாங்கிவந்து எனக்குத் தருவார். அந்தச் சுவை பசுமரத்தாணியாய் மனதில் பதிந்திருந்தது.  இப்பொழுதெல்லாம் என்னென்னவோ சத்துமாவுகள் மார்க்கெட்டில் வந்துவிட்டாலும், அரசாங்க சத்து உருண்டை ருசியை அடிச்சுக்கவே முடியாதுங்க! :)) 

கடந்தமுறை ஊருக்குப் போனபோது என் தோழிவீட்டுக்குப் போயிருந்தேன், அவள் வீட்டில் இந்த சத்துமாவு இருந்தது. [எப்படின்னு கேட்கும் நீளமூக்கு ஆட்களுக்குப் பதில் கட்டாயம் தேவையென்றால் கமென்ட்டுங்கோ, ரகசியமாய்க் காதைக் கடிக்கிறேன், டீல்?] கும்புடப் போனதெய்வம் குறுக்கே வந்தமாதிரி கிடைச்ச சத்துமாவை பத்திரமாப் பொட்டலம் கட்டி, இங்க கொணாந்து ஐஸ்பொட்டில வைச்சிருக்கேன். நீ என்ன சத்துமாவு சாப்ட்டு ஒடம்ப தேத்தற அளவுக்கு ஒல்லியாவா இருக்கே? -னு என் உடன்பிறப்புகளே கிண்டலடித்தாலும் அதையெல்லாம் இந்தக்காதில வாங்கி அந்தக் காதில விட்டுட்டு சந்தோஷமா இருக்கோணும் அப்படின்னு ஞானோதயம் வந்து பலநாளாகிருச்சுங்க. ;)
இந்த உருண்டைய செய்வது ரொம்ப சுலபம்..கொஞ்சம் தண்ணிய சூடு பண்ணிக்கணும், கொதிக்க கொதிக்க இல்ல, ஆனா தண்ணி சூடா இருக்கணும். [நான் மைக்ரோவேவ்-ல ஒரு நிமிஷம் வச்சு எடுத்துகிட்டேன்.]  தேவையான அளவு சத்துமாவை ஒரு கிண்ணத்தில எடுத்துகிட்டு, கொஞ்சம் கொஞ்சமா தண்ணி தெளித்து பிசைந்து உருண்டை பிடிக்க வேண்டியதுதான். லேசான இனிப்புச் சுவையுடன் சூப்பராக இருக்கும். வாய்ப்புக் கிடைச்சால் ருசித்துப் பாருங்க. நன்றி!

Sunday, February 10, 2013

ரவா ரோஸ்ட்

இந்த தோசை இங்கே வந்த புதிதில் மிக்ஸி இல்லாமல் திண்டாடியபோது கை கொடுத்தது. பெங்களூரில் பக்கத்து அப்பார்ட்மென்டில் இருந்த ஒரு சென்னை தோழியின் செய்முறை, அமெரிக்காவில் சமைக்கப்பட்டது! எவ்ளோ ஊர் தாண்டி வந்திருக்கு பாருங்க! :)

 1 பங்கு ரவைக்கு 3 பங்கு அரிசி மாவு,  கொஞ்சம் மைதா.. இதுதான் பேஸிக் ரேஷியோ..அதனுடன் இந்த "மானே,தேனே, பொன்மானே.." (அதாங்க மற்ற பொருட்கள்) இதெல்லாம் விருப்பப்படி சேர்த்துக்  கொள்ளலாம். :))) சிலர் எண்ணெயில் தாளித்துக்கொட்டியும் செய்கிறார்கள். எனக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லாததால் அப்படியே பச்சையாகச் சேர்ப்பேன், இந்த ருசியே நன்றாக இருப்பதால் தாளித்துக் கொட்டப்போகல இன்னும்! :)

தேவையான பொருட்கள்

ரவை -1/4கப்
அரிசி மாவு-3/4கப்
மைதா மாவு - 2டேபிள்ஸ்பூன்
கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1/2கப்
[தயிர் உபயோகிப்பதானால் அரைக் கப்புக்கும் கொஞ்சம் குறைவான தயிருடன் தண்ணீர் விட்டு, கரைத்து உபயோகிக்கவும்]
உப்பு

சீரகம்-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி -சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய்-2 (பொடியாக நறுக்கியது)
முந்திரி -5 (பொடியாக நறுக்கியது) - விரும்பினால் சேர்க்கலாம், நான் சேர்க்கவில்லை.

 செய்முறை
அரிசிமாவு-ரவை-மைதா-உப்பு இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும்.
மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசை வார்க்கும்  முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.
~~
யூ ட்யூபில் பாடல்கள் கேட்டுக் கொண்டு இருந்தபோது இந்த தொகுப்பு சிக்கியது. அருமையான பாடல்கள். போட்டுவிட்டால் ஒரு மணி நேரம் போவதே தெரியாது. நேரமிருந்தால் நீங்களும் கேளுங்க. 
:)
 

Tuesday, February 5, 2013

Guacamole

Guacamole (US /ɡwɑːkəˈml/; Spanish: [wakaˈmole] or [ɡwakaˈmole]), is an avocado-based sauce that originated with the Aztecs in Mexico.[1] In addition to its use in modern Mexican cuisine it has also become part of American cuisine as a dip, condiment and salad ingredient. It is traditionally made by mashing ripe avocados with a molcajete (mortar and pestle) with sea salt. Some recipes call for tomato, onion, garlic, lime juice, chili, yogurt and/or additional seasoning's.
Thanks to Wikipedia. 

க்வாக்கமோலே - இது ஒரு மெக்ஸிகன் டிப். சிப்ஸ் உடன் பரிமாறலாம், அல்லது மெக்ஸிகன் உணவுவகைகளுடன் பரிமாறலாம். இங்கே உள்ள சிப்போட்லே மெக்ஸிகன் உணவகத்தில் இதனை ருசித்திருக்கிறேன். சமீபத்தில் அவகாடோ பழங்கள் கிடைத்ததில் ஒருமுறை அவகாடோ சப்பாத்தி செய்தபிறகு, வேறென்ன செய்யலாம்னு கொஞ்சம் இணையத்தை துருவியதில்;) க்வாக்கமோலே சிக்கியது!முதன்முறையாக வீட்டில் செய்கிறேன், அதனால் எப்படி இருக்குமோ என கொஞ்சம் பயந்துகிட்டே செய்தேன், சும்மா சூப்பரா இருந்தது! :) 

க்வாக்கமோலே-வில் அவகாடோ-எலுமிச்சை சாறு -உப்பு இவைதான் மூலப்பொருட்கள் (main ingredients) இவற்றுடன் உங்க விருப்பப்படி பொருட்களைச் சேர்த்து கலந்துக்கலாம். சிலர் தயிர் சேர்க்கறாங்க, பூண்டு சேர்க்கிறாங்க..நான் எனக்குப் பிடிச்ச பொருட்களைச் சேர்த்திருக்கேன்.

தேவையான பொருட்கள்
அவகாடோ பழம்/பட்டர் ஃப்ரூட் -1
கால் பாகம் தக்காளி
சிறியதாக ஒரு வெங்காயம் (Shallot)
இரண்டு பச்சைமிளகாய் (காரத்துக்கேற்ப)
ஒரு மூடி எலுமிச்சைச் சாறு
ஒரு கைப்பிடி கொத்துமல்லித் தழை
உப்பு

செய்முறை
வெங்காயம்-தக்காளி-மிளகாய்- கொத்துமல்லித் தழை இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
 
தக்காளியின் விதைகள் இல்லாமல் சதைப் பற்றான பகுதியை மட்டும் நறுக்கியிருக்கேன். மிளகாயின் காரம் குறைவாக வேண்டும் என்றால் அதிலும் விதைகளை நீக்கிவிட்டு நறுக்கிகொள்ளவும். 
அவகாடோ-வை நறுக்கி, அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து, மசித்துக்கொள்ளவும்.
 
அதனுடன் நறுக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும்.
 
தேவையான உப்பும் சேர்க்கவும்.
 
எல்லாவற்றையும் ஒன்றாக சேரும்படி கலந்துவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் அரைமணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்துப் பரிமாறலாம்.
ஸோ...க்வாக்கமோலே ஃப்ரிட்ஜ்ல இருக்கட்டும், நாம அப்படியே பொடிநடையா எங்கூர் உழவர் சந்தைக்குப் போயிட்டு வரலாம் வாங்க! :) 
இங்கே இன்னும் முழுவீச்சில் உழவர் சந்தை துவங்கவில்லை..குளிர்காலம் வேறு! ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு காய்கறிக்கடை! :) சில பழக்கடைகள், ஒரு ஆர்கானிக் பால்- கடை, செல்லப் பிராணிகளுக்கான கடை ஒன்று, க்ரீன் டீ கடை ஒன்று என இரட்டைப்படை எண்ணிக்கையைக் கூடத் தொடாத கடைகள்தான் உள்ளன. இருந்தாலும் நம்மள்லாம் போய் ஆதரவு குடுத்தாத் தானே இன்னும் நிறையக் கடைகள் வரும்? -அப்படீன்ற நல்லெண்ணத்தில நான் வாரவாரம் போலாம்னு இருக்கேங்க! ஹஹஹா!
சரி..போனதுக்கு சல்ஸா கடைல ஒரு பாக்கெட் சிப்ஸ் வாங்கிட்டு, காய்க்கடைக்காரம்மா கிட்ட கொஞ்சநேரம் கதையடிச்சுட்டு ஒரு முட்டைக் கோஸும், ரெண்டு தக்காளியும் வாங்கிட்டு நடையக் கட்டினேன்.
வீட்டுக்கு வந்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து guacamole-வ கொஞ்சம் கிண்ணத்தில எடுத்துவைச்சிகிட்டு, சிப்ஸையும் பிரிச்சு ஒரு புடி புடிச்சேன்! ;))))) 

சிப்ஸ் &க்வாக்கமோலே காம்பினேஷன் சூப்பரா இருக்கும்! பொரிக்காம, bake பண்ண சிப்ஸா இருந்தா உத்தமம், ருசி கம்மியா இருந்தாலும் ஆரோக்கியமா இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க..நன்றி, வணக்கம்!

LinkWithin

Related Posts with Thumbnails