Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Thursday, May 16, 2019

மா, பலா - மலரும் நினைவுகள்!


மாம்பழம், பலாப்பழம் என்றால் உடனே என் நினைவில் வருவது பள்ளிப்பருவத்து கோடைவிடுமுறை காலங்கள் தான்!! 8ஆம் வகுப்பு வரையிலும் கோடை விடுமுறை வந்தால் பள்ளி முடிந்த அடுத்தநாள் சித்திகள் வந்து என்னை ஊருக்கு (வீட்டிலிருந்து 2 பஸ் மாற்றி போகவேண்டும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொண்டாமுத்தூருக்குப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம்.) என்னவோ ஏழு கடல் தாண்டி போகிற மாதிரி இருக்கும். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் 56-ஆம் நம்பர் பேருந்துக்கு காத்திருந்து பஸ் வந்தவுடனே எல்லாரும் இறங்க காத்திருந்து ஓடிப்போய் ஏறி இடம் பிடித்து உட்கார்ந்தால் என்னவோ ஒரு பெரிய அச்சீவ்மெண்ட் போல இருக்கும். :))))

ஊரில் பஸ் விட்டு இறங்கி, வீடு சேரும்வரை பார்க்கும் ஆட்கள் எல்லாம் "டவுன் புள்ளை"களை நலம் விசாரிக்க வீடு வந்து சேருவோம். அப்புறம் லீவு நாட்கள் எல்லாம் பக்கத்து வீட்டு வாண்டுகளுடன் "பாண்டிங்குழி (பல்லாங்குழி) ஆடுவதும், புளியங்கொட்டைகளைப் பரப்பி வைத்து "ஒட்டி" விளையாடுவதும், தாயக்கட்டம் போட்டு தாயம் ஆடுவதும், மாலையானால் மல்லிகை மொக்குகளை பறித்து கோர்த்துவைப்பதுமாகக் கழியும்.

அப்புறம்  சித்தி ஒரு நாள் உக்கடம் வந்து மாம்பழம், பலாப்பழம் எடுத்துவருவார். எனக்கு நினைவில் இருப்பது  பாலக்காட்டு மாம்பழம், நீல மாம்பழம், கிளிமூக்கு மாம்பழம்!!! அல்போன்ஸா எல்லாம் கேள்விப்பட்டது கூட இல்லை! ஹிஹி...போகவர மாம்பழங்களை எடுத்து கழுவி கடித்து தின்று, கையெல்லாம் மாம்பழச்சாறு வடிய வடிய சுவைத்தது எல்லாம் மன அடுக்குகளில் அழியா நினைவுகளாய்!!!


பலாப்பழத்தை சுத்தம் செய்து சுளைகளை எடுக்கும் வரை பொறுமையாய்க் காத்திருக்க வேண்டும். வீடெல்லாம் மணக்கும், சுத்தம் செய்த பழங்களை சீக்கிரம் தீர்த்திடுதல் நலம். இல்லையென்றால் கோடைச்சூட்டிற்கு ஒரு நாளுக்கு மேல் தாங்காது. அக்கம் பக்கம் வீடுகளுக்கெல்லாம் பகிர்ந்து விட்டு மீதமிருப்பதை வெல்லம் சேர்த்து வதக்கியும் வைப்பார்கள். பலாக்கொட்டைகளை "தண்ணி அடுப்பில்" (குளிப்பதற்கு தண்ணீர் காயவைக்கும் அடுப்பு) போட்டு சுட்டெடுத்து சுவைப்போம். பலாச்சுளைகளை ஓவராகத் தின்று வரும் வயிற்றுவலிக்கு இந்த சுட்ட பலாக்கொட்டை நல்லது என்பார்கள். எவ்வளவு சுளைகளை வயித்துக்குள் அமுக்கினாலும், 2-3 சுட்ட பலாக்கொட்டைகள் தின்றுவிட்டால் எல்லாம் நலமே!!! :)

எதுக்கிந்த மலரும் நினைவுகள் என்றால்..தமிழ்ப்புத்தாண்டுக்கு வாங்கிய பலாப்பழமும், சமீபத்தில் வால்மார்ட்டில் சுகந்தமான மணம் வீசிக்கொண்டிருந்த மாம்பழங்களை வாங்கிவந்து கத்தி கபடா எல்லாம் உபயோகித்து நறுக்கி நளினமாகச் சாப்பிடாமல், சும்மா கழுவிட்டு, தோலை உரித்து துப்பிவிட்டு சுவைத்து தின்னும்போது இதெல்லாம் நினைவு வந்ததுதான். :))))

நன்றி, மீண்டும் சந்திப்போம்! 

Sunday, March 10, 2019

கடலை வறுக்கலாமா? :)

U.S. வந்து பலநாட்கள் நம்ம ஊர் வேர்க்கடலை கிடைக்கவில்லை/ கிடைக்குமிடம் எனக்குத் தெரியவில்லை..ஹிஹி!! வால்மார்ட்-ல் கிடைக்கும் Planters ப்ராண்ட் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையையே பலகாலம் உபயோகித்தேன். 

இந்தியன் ஸ்டோர்ஸில் கடலை பேக்கட்டை பார்த்திருந்தாலும், பச்சைக்கடலை..அதை வாங்கி வறுக்கவேண்டுமே என்ற கவலை (கவனிக்க..12 வருடங்கள் முன்பு! ;))..அதான் வால்மார்ட்டில வறுத்து தோல் நீக்கியதே கிடைக்கிறதே என வாங்கிய காலங்கள்!! பிறகொருமுறை வாங்கித்தான் பார்ப்போமே என வாங்கி உப்புத்தண்ணீர் தெளித்து வறுத்து வைத்திருக்கிறேன்.,2010 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அப்போது நேரம் நிறைய்ய்ய்ய இருந்தது. பிறகு பெர்ஷியன் கடையில் வறுத்த கடலை கிடைத்தது..அது வால்மார்ட் கடலையை விட கொஞ்சம் பெட்டர்!! அதனால் அங்கே வாங்க ஆரம்பித்தாயிற்று.

மறுபடி ஒரு சின்ன கொசுவர்த்தி...சிறுவயதில் பக்கத்தில் இருக்கும் மளிகைக்கடை (எங்க சொந்தக்காரங்க கடைதான்!! )யில் நாலணாவுக்கு "கள்ள" வாங்கி அதை அரைமணி நேரம் நிதானமாக சோடனைகள் செய்து சாப்பிடுவேன்..முதல்ல கடலையைத் தேய்த்து தோலை எல்லாம் ஊதி அப்புறப்படுத்திவிட்டு, பிறகு இரண்டிரண்டாகப் பிரித்து, பிறகு அதிலே இருக்கும் குட்டி கொண்டையையும் பிரித்து முதலில் அதைச் சாப்பிட்டுவிட்டு பிறகு ஒவ்வொன்றாக கடலையைத் தின்பது!! :) :) :)  அந்தக் கடலையின் ருசி இங்கே கிடைக்காததால் கடலையை சட்னி, புளிசாதத்துக்கு உபயோகிப்பதோடு நின்றுபோனது.  

2013-ஆம் ஆண்டு மாமனார்-மாமியார் இங்கே வந்திருந்தபோது மறுபடி கடலை தேடல் ஆரம்பமாயிற்று..இருவரும்  வேர்க்கடலையை விரும்பிச் சாப்பிடுவார்கள், அவர்கள் மகனும் அப்படியே என அப்போதான் எனக்குத் தெரியவந்தது வேற கதை!! மாமியாருக்கு நான் வாங்கும் பெர்ஷியன் கடலை ருசி பிடிக்கவில்லை..வேறு கிடைக்குமா கிடைக்குமா எனக் கேட்டு இந்தியன் ஸ்டோரில் மறுபடி பச்சைக்கடலை வாங்கி வந்தேன். அதனை மைக்ரோவேவ்-ல வறுக்கலாமென எங்கோ இண்டர்நெட்டில் படித்தது..எக்ஸ்பெரிமெண்ட்ஸ் செய்து மெல்ல மெல்ல என்ன செய்ய வேண்டுமென பிடிபட்டது.. அப்போதிருந்து இதே முறைதான். என்ன தான் சொல்லுங்க, நம்ம ஊர் சிறு வேர்க்கடலையின் ருசி அமெரிக்காவின் மெகா சைஸ் வேர்க்கடலைல இல்லவே இல்லை!!   

இவ்வளைவையும் பொறுமையாப் படிச்சுட்டீங்க, அப்படியே கடலையையும் வறுத்துடலாம், வாங்க..

இது இங்கே இண்டியன் ஸ்டோரில் வாங்கிய பச்சைக்கடலை..
 பேக்கட்டை பிரிச்சு, ஒரு மைக்ரோவேவ் பவுல் (உயரம் குறைவான, அகலமான பவுல் அல்லது ப்ளேட் நன்று) இல் எடுத்துக்கொள்ளவும். ஆர்வக்கோளாறுல அதிகமா எடுத்துகிட்டீங்கனா அதுக்கேற்ற மாதிரி நேரம் அதிகரிக்கும். நான் எடுத்திருப்பது  ஏறத்தாழ ஒரு கப். மைக்ரோவேவில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். மைக்ரோவேவ் ஆஃப் ஆன உடனே அதனைத் திறக்காமல் சில நிமிடங்கள் கழித்து திறக்கணும்..பாத்திரச்சூட்டில் கடலை இன்னும் வறுபட்டுக்கொண்டிருக்கும்.
 2 நிமிடங்கள் வறுபட்ட கடலை...வெளியே வைத்து ரூம் டெம்பரேச்சருக்கு ஆறிய பின்னர் கலந்துவிட்டு, மீண்டும் 2 நிமிடங்கள் வைக்கவேண்டும். 
அதே போல ஆறவிட்டு, கலந்துவிட்டு மீண்டும் 2 நிமிடங்கள்.. 
நன்றாக ஆறிய பிறகு, சுவை பார்த்துக்கொண்டு விரும்பினால் மீண்டும் ஒரு நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்து ஆறவைத்தால், 
சுவையான வறுத்த கடலை ரெடி..
குறிப்பு 
இது என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு..ச்சீ,ச்சீ...ஆர்ட்டிஸ்ட்களுக்கு வசதியான மெத்தட்..மைரோவேவ்-ல இரண்டு நிமிஷம் முடிந்ததை மறந்தே போய் சிலமணி நேரங்கள் விட்டாலும் பாதகமில்லை...ஆடி அசைந்து 2 நாட்கள் நிதானமாக வறுத்தாலும் ஓகேதான்.. ஸ்டவ் பக்கத்திலேயே நின்னுகிட்டு கறுகாமப் பாத்து பாத்து வறுக்கும் டென்ஷன் இல்ல.. Oven- ல ரோஸ்ட் பண்ணியும் எடுக்கலாம் என்றாலும், நம்ம கவனக்குறைவா அவரை (oven) கவனிக்காமல் விட்டா மைக்ரோவேவ் மாதிரி அமைதியா இல்லாம, கடலையைக் கறுக்கி, கத்தி, புகை வரவச்சுன்னு ரெம்ப வேலை குடுப்பார்..ஸோ, மைக்ரோவேவ் இஸ் ஈஸி யு ஸீ!! ;) :) :D :D

Thursday, July 26, 2018

மீண்டும் தொடங்கலாமா? :)

சரியாக ஒரு வருடம் முன்பு இந்த வலைப்பூவில் பதிவிட்டது..ஓராண்டு காலம் ஓடியது தெரியாமல் ஓடிப்போய்விட்டது..இதற்கு மேலும் இங்கே வராமல் இருந்தால் அப்படியே விட்டுவிடுவேனோ என்ற பயம் உந்தித் தள்ளி, ஒருவழியாய் வந்துவிட்டேன்!! :) 

நாட்களும் வாரங்களும் மாதங்களும் நிற்க நேரமில்லாமல் கடக்கின்றன..ஒரு நொடியும்  யோசிக்க நேரமில்லாமல் என் நேரத்தை பங்குபோட்டுக்கொள்ள என் குட்டிப்பெண்களும் நாலுகால் பையனும் இருப்பதால் அவர்களோடு நானும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்..இன்னும் சில ஆண்டுகள் இந்த ஓட்டம் தொடரும்! அதனூடே இங்கேயும் அவ்வப்போது எதாவது செய்யலாம் (கவனிச்சு படிங்க..என்ன செய்வேன்னு நான் சொல்லவேயில்ல...அது சமையலா இருக்கலாம்..என் மனங்கவர்ந்த பூக்களா இருக்கலாம்..உங்களை கலங்கடிக்கும் மொக்கையா இருக்கலாம்...எதுவா வேணாலும் இருக்கலாம்...ஹிஹி...)

 இந்த குருவிக்கூட்டம் இந்த மே மாதம் சுற்றுலா சென்ற இடத்தில் இருந்து வாங்கி வந்தது..குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கும் ஆளுக்கொரு குருவி. ;) பார்க்க நிஜ குருவிகள் போலவே தத்ரூபமாக இருக்கின்றன..அதனால அவங்களுக்கு தானியங்கள் வச்சுக் குடுத்து உட்கார வைச்சிருக்கோம்.

சம்பந்தமே இல்லாம மாம்பழம், ரோசாப்பூ, குருவி அப்புறம் ஒரு பொங்கல்-சட்னி-கொத்சு படம்ன்னு கலந்துகட்டி ஏதோ போட்டிருக்கேன்...அஜீஸ் ;) பண்ணிக்கோங்க. முதல் படம் இந்தக் கோடையின் மாம்பழம்..இரண்டாவது எங்க வீட்டு அழகு ராணி..மூணாவது குருவிக்கூட்டம், நாலாவது சாமை பொங்கல், சுரைக்காய் கொத்சு, தேங்காய்ச் சட்னி.

நன்றி, வணக்கம்!! விரைவில் மீண்டும் பார்க்கலாம்!! :) :))) 

Wednesday, July 26, 2017

Lemonade


போஸ்ட்டின் டைட்டிலை பார்த்து லெமனேட் செய்வது எப்படி என்ற பதிவு என்று நினைத்தால்....
........
....
...
..
.
அதனை தண்ணி தொட்டு அழிச்சுட்டு, தொடர்ந்து படியுங்க! :)

இப்போது இங்கே வெயில் காலம்...கொளுத்தும் வெயில் என்று சொல்ல முடியலைன்னாலும் கொஞ்சம் வெயில்தான். பள்ளிகளுக்கெல்லாம் கோடை விடுமுறை. எங்க குட்டிப்பெண் ப்ளே ஸ்கூல் போவதால் லீவில்லை..கடந்த வாரத்தில் ஒரு நாள் அவங்களை அழைத்துவர நடந்து சென்றோம் (நானும் சின்னக் குட்டியம்மாவும்..) ..நல்ல வெயிலாக இருக்கே என்று நினைத்தவாறே சாலைமுனையொன்றில் திரும்பியபோது 2 சிறுமிகள் சாலையோரம் லெமனேட் விற்றுக்கொண்டிருந்தார்கள். அடிக்கிற வெயிலுக்கு சில்லென்று லெமனேட்!! 2 கப்புகள் வாங்கினேன்..ஒன்று 50சென்ட்  என்றார்கள், கரெக்ட்டாக ஒரு டாலர் சில்லறையும் இருந்தது. சமர்த்தாக சாலையைக் கடந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் ஒரு சிறுமி. நாங்கள் மூவரும் எதிர்த்திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்ததும், " Yay...we made a dollar!!!" என்ற அவர்களின் சந்தோஷக் கூச்சல் காதைத் தொட்டது. சில்லென்ற லெமனேட் தொண்டையில் இதமாக இறங்க, அதை விடவும் அவர்களின் மகிழ்ச்சிக் கூக்குரலில் என் இதயமே நிறைந்துவிட்டது!! :)))))


அப்போதுதான் விற்பனையை ஆரம்பித்திருப்பார்கள் போலும், நான்தான் முதல் போணியாக இருந்திருக்கக்கூடும்!! நல்லபடியாக லெமனேடை விற்று முடிக்கட்டும் என்று மனதுக்குள் வாழ்த்தியவாறே நாங்கள் நடையைக் கட்டினோம்.
பின்குறிப்பு 
கோடை விடுமுறை காலங்களில் பள்ளிக் குழந்தைகள் இது போல வீட்டில் லெமனேட் (எலுமிச்சை ஜூஸே தான்!! ;) ) செய்து எடுத்துக்கொண்டு வந்து சாலைமுனைகளில் "லெமனேட் ஸ்டேண்ட்" என்ற பெயரில்  சிறு டேபிள்கள் போட்டு வைத்து விற்பனை செய்வார்கள். குக்கீ, கேக் போன்றவையும் வீட்டில் செய்து விற்பனை செய்வதும் உண்டு..நாற்சந்திகளில், சிக்னல் அருகில் டேபிள்கள் போட்டு  விற்பனை செய்வார்கள். நம்மால் முடிந்தது, வாய்ப்புக் கிடைக்கும்போது இவற்றை வாங்குவது, குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும், நமக்கும் வெயிலுக்கு இதமான குளிர்பானம் கிடைக்கும்! ஒரே கல்லில ரெண்டு மாங்கா!! 

என்னவர் இன்னும்கொஞ்சம் மேலே!! கடைகளுக்குப் போகும்போது வாசலில் பள்ளிச்சிறுமிகள் நின்று "Girl scout cookies" விற்பார்கள். அந்த குக்கீ-களை சாப்பிட வீட்டில் ஆளில்லா விட்டாலும் அதை வாங்காமல் வரமாட்டார்!! "நாளைக்கு நம்ம பொண்ணு கர்ள் ஸ்கவுட்டில் சேர்ந்து இதே மாதிரி குக்கீ விற்க போனா...வாங்காம வந்தா பொக்குன்னு போயிருவாள்ல?" என்ற ஜஸ்டிஃபிகேஷனோடு குக்கீ பாக்ஸ்கள் வரும்..சில நேரங்களில் வீட்டிற்கே கொண்டுவந்து விற்பனை செய்வார்கள், அப்போதும் அந்தக் குழந்தைகளுடன் உரையாடி ஒன்றிரண்டு பேக்கட் குக்கீகள் வாங்காமல் விடுவதில்லை!! :) 

பின்குறிப்புக்கு பின்குறிப்பு 
லயாக்குட்டிக்கு ஹேர்கட் பண்ணியாச்சு!! ;)  11 மாதத்தில் மொட்டை போட்டதிலிருந்து இதுவரை ஹேர்கட் செய்யவே இல்லை..சமீபத்தில்  அப்பாவுடன் சலூனுக்கு சென்ற அம்மணி, தானும் ஹேர்கட் செய்துகொண்டு வந்து எனக்கு அதிர்ச்சி (இன்ப அதிர்ச்சினு சொல்ல முடியாதுனு வைங்களேன்!! ) கொடுத்துவிட்டார்!! ஹூம்...தட் "நான் வளர்கிறேனே மம்மி!! " மொமெண்ட் யு சி!!
லாஸ்ட் பின்குறிப்பு
லெமனேட் எக்ஸ்பீரியன்ஸ் நெம்ப மொக்கையா இருந்தா கோவிச்சுக்காம ஒரு கப்பு லெமனேட் போட்டு குடிங்கப்பூ!!! ;) :) காட் ப்ராமிஸ், நோ மோர் பின்குறிப்பு!! 

Thursday, November 3, 2016

ஆம்லெட்

ஆம்லெட் செய்வது என்ன பெரிய கம்ப சூத்திரமா? இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா?? என்று பெரும்பாலானவர்கள் எண்ணினாலும்....அப்படி என்னதான் இருக்குன்னு படிச்சுப்பார்க்க ஒரு க்யூரியாஸிட்டியோட எட்டிப்பார்க்கிறதுக்கு பெரிய டாங்க்ஸூ!! :)))))) 

அது பாருங்க, இந்த ஆம்லெட் செய்யறது ஈஸியான வேலைதான், தோசைக்கல்ல காயவச்சோமா, அதுக்குள்ள வெங்காயத்தை நறுக்கினோமா, முட்டைய ஒடச்சு கலக்கினோமா..சுட்டு சாப்ட்டோமானு அஞ்சு நிமிஷத்தில முடியற வேலைதான். ஆனா இன்னிக்கு அதில ஒரு ஷார்ட்கட் மெதட் உங்களுக்கெல்லாம் சொல்லித்தரப்போறேன்(!!!??!! )..ஓகே ரெடி, ஸ்டார்ட் மீசிக்!! 

ஆம்லெட் செய்யற வேலை ஈஸியா இருந்தாலும் அதில மீ ஃபேஸ் பண்ணற ஒரு சில டிஃபிகல்டீஸ் ஃபார் யுவர் ரெஃபரன்ஸ் : 
1. எவர் சில்வர் கிண்ணத்தில்  முட்டைய உடைச்சு ஊத்தி ஸ்பூன் , ஃபோர்க் அல்லது விஸ்க்-ஆல முட்டைய கலக்கினா என்னோட அழகான கிண்ணங்கள் எல்லாம் காயமாகிருது யுவர் ஹானர்!! 
...சரின்னு இல்லாத மூளைய கசக்கி உலுக்கி, கண்ணாடி கிண்ணங்கள்லதான் முட்டைய உடைச்சு கலக்கணும்னு வீட்டுல ஒரு ரூல் போட்டாச்சுன்னு வைங்க. 
2. இப்ப அடுத்த பிரச்சனை..முட்டை கலக்கின கிண்ணத்தை கழுவி வைக்கிறது. என்னதான் ஆம்லெட்ட ருசிச்சு சாப்ட்டாலும் இந்த முட்டைக்கிண்ணத்தை கழுவுறது மீ-க்கு புடிக்காத வேலை...அந்த சுமெல் (!!??@@) ரொம்ப கஷ்டமா இருக்கும் கழுவி வைக்கிறதுக்குள்ள...!! 

சரி, வெங்காயமிளகாயே போடாம செய்யலாம்னா நல்லா நாலு முழம் வளத்தி வைச்சிருக்க நாக்கு அது போதாது, போதாதுன்னு மல்லுக்கட்டுது. அவசரத்துக்கு எப்பவாவது அப்படியே சாப்பிடலாம், ஆனா ஒவ்வொருக்காவும் ப்ளெயின் ஆம்லெட்டே சாப்பிட போரடிக்குதுல்ல? நீங்க என்ன சொல்றீங்க? 

இப்படியான தலையாய பிரச்சனைகளால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த சோம்பேறி டெக்னிக் ஃபார் ஆம்லெட். ஓகே, போதுமான முன்னுரை குடுத்தாச்சு, வாங்க ஆம்லெட் போட போலாம்!! 


அடுப்ப ஆன் பண்ணி, தோசைக்கல்ல வைச்சுட்டு கொஞ்சம் வெங்காயம், ஒரு பச்சைமிளகாயை பொடியா கட் பண்ணிக்குங்க. அதுக்குள்ள கல்லு காய்ஞ்சிருக்கும். ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் டைரக்ட்டா தோசைக்கல்லயே நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாயைப் போடுங்க...
கொஞ்சம் உப்பையும் தூவி நல்லா வதக்குங்க.  வெங்காயம் வதங்கினதும் முட்டைய டமால்னு உடைச்சு வெங்காயத்து மேல ஊத்துங்க...
கையோட சட்டுவத்தில முட்டைய கலக்கி, வெங்காயமிளகாயோட சேர்ர மாதிரி கலந்துடுங்க..
அப்புறம், இன்னுங்கொஞ்சம் எண்ணெய் ஊத்திட்டு, மிளகுத்தூளையும் தூவிருங்க..
ஒரு புறம் வெந்ததும், திருப்பிப்போட்டு அடுப்பை ஆஃப் பண்ணிருங்க. கல்லு சூட்டிலயே அடுத்த பக்கம் பதமா வெந்துரும். (ஆம்லெட்டோட மறுபக்கத்தை பாக்கறதுக்குள்ள, "பார்க்க அப்பெடைஸிங்-ஆவே இல்லையே!!" அப்புடின்னெல்லாம் யோசிக்கக்குடாது..கர்ர்ர்ர்ர்ர்!!)
சில விநாடிகளில் ஆம்லெட் ரெடி...தட்டில வச்சு சுடச்சுட சாப்பிடுங்க.
எப்புடி நம்ம ஷார்ட்கட்டு?? இதை விட வேற எதாச்சும் குறுக்கு வழி உங்க கைவசமிருந்தா அதையும் சொல்லுங்க!! ;) 

Sunday, October 25, 2015

நரி முகத்தில முழிச்சிருக்கீங்களா? :)


என்னங்க...ஏடா கூடமா டைட்டில் வச்சிருக்கனே பாக்கிறீங்களா? வேற என்னத்தச் செய்ய?! சும்மா கம்பு தோசையும், சட்னியும் , குழம்புமாவே ப்ளாகில எழுத போரடிக்குதுல்ல? அதனால என்னைய அடிச்ச போர உங்களுக்கும் அடிக்க வைக்கலாம் என்ற ஒரு நல்லெண்ணத்தில தலைப்ப வச்சுப்புட்டேன். ஹிஹிஹி...

தலைப்புக்கேத்த மாதிரி என்ன செய்யலாம்னு சோஃபால உட்கார்ந்து யோசிச்சதில சமீப காலமா எங்க ஏரியாவுக்கு வருகை தரும் விசிட்டர்ஸை உங்களுக்கும் அறிமுகப்படுதலாம்னு பல்பு எரிஞ்சுது.

எங்கள் வீடு இருக்கும் பகுதி ஊரின் ஓரம் என்பதால், வீட்டிற்கடுத்த படியாக மலைச்சரிவுகளும், ஒரு அவகாடோ தோட்டமும், காட்டுப்பகுதியுமாகத்தான் இருக்கும். எப்பொழுதாவது  "கயோட்டி" என்னும் மிருகம் எட்டிப்பார்ப்பதும்,  காட்டிற்குள் இருந்து இரவு நேரங்களில் சத்தமிடுவதுமாக இருக்கும். இங்கிருந்த 5 வருடங்களில், பலமுறை அவற்றின் சிரிப்பை (ஆமாங்க..அவை சத்தமிடுவது மனிதர் சிரிப்பதைப் போலவே இருக்கும்...அவ்வ்வ்வ்வ்)  நான் ஒரு முறை கூடப் பார்த்ததில்லை. ஆனால் கொஞ்ச நாட்களாகவே வீட்டெதிரே இருக்கும் சிறு குன்றின் சரிவிற்கப்பாலிருந்து ஒரு சில "கயோட்டி"-கள் குன்றின் மேலே ஏறி நடை பழக ஆரம்பித்திருக்கின்றன.

தனியாகவும், ஜோடியாவும், குடும்பத்தினருடனும் என்று மாலை மயங்கும் நேரங்களில் இவர்களது வருகை இருக்கும். ஜீனோ அவற்றை கண்டுகொண்டு "வள்..வள்..வள்ள்ள்ள்ள்" என்று வரவேற்பு கொடுப்பார். அவர்களுக்கு மனிதர் மற்ற விலங்குகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, நிதானமாக நின்று ஒரு லுக்கு விடுவார்கள். அவசரப்படாமல் 5-10 நிமிஷங்கள் நின்று "எதற்கு இந்த சின்னக் குள்ளன் (ஜீனோ! :) ) சித்திரக்குள்ளன் மாதிரி கத்தறான்? " என்று ஆலோசனை பண்ணிவிட்டு ஜாலியாக நடந்து போவார்கள்.

இப்படியாக இருந்தது..ஒரு வார இறுதியில் மாலை 3.30-4 மணி இருக்கும், காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துக்கொண்டிருக்கையில் வெளியே வந்த என்னவர், "ஏய்..அங்கே பார்" என எக்ஸைட்டட் ஆக சின்னக் குரலில் கத்த...எட்டிப் பார்த்தால்...

வீட்டெதிரே இருக்கும் பார்க்கிங் லாட்டில் கார்களுக்கப்பால் ஹாயாக ஒருவர் மேய்ந்து(!!?) கொண்டிருந்தார்..சட்டென்று கேமராவை எடுத்து வந்த படமெடுக்க, வழக்கம்போல "யாரிவர்கள்...எதற்கு நம்மை படமெடுக்கிறார்கள்?" என்று அசால்டாக சிறிது நேரம் பார்த்துவிட்டு, நிதானமாக ரோட்டில் இறங்கி நடந்து சென்று மறைந்தார்.
யார்ரா அது...நம்மளை போட்டோ புடிக்கிறது??
போட்டோ தான? புடிச்சாப் புடிக்கட்டும்...நமக்கென்ன? 
சரி..அப்படியே மேலே ஏறிப் போயிரலாமா?
இல்ல...கீழ இறங்கலாம்...
ஆச ஆசையாப் படம் புடிக்கறாங்க...அயகா:) ஒரு போஸ் குடுப்பம்..!!
ஓகே..கிளம்புறன்!
என்னய்யா இது? நடக்குறதையும் விடாமப் படம் புடிக்கிறாய்ங்க? நம்ம நடக்கத்தான ரோடு போட்டு வைச்சிருக்காங்க? ஹ்ம்ம்ம்ம்....
ஸ்பீட் லிமிட்டு 5 மைலாம்..கி கி கி!! நாங்கள்லாம் ஆரு? எங்களுக்கெல்லாம் நோ லிமிட்!! 
வந்ததுக்கு சாப்புட ஏதும் கிடைக்கலன்னாலும் நல்லாப் போஸ் குடுத்தாச்சு...வர்ட்டா?? பய்..பய்ய்ய்ய்ய்!! 
:))) 

பி.கு. இந்த கயோட்டிகள் நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த பிராணிகள். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் புகுந்து குப்பைத்தொட்டிகளை ஆராய்ந்து உணவைத்தேடும் நிலைமைக்கு வந்துவிட்டன. மனிதர்கள்,  வளர்ப்புப் பிராணிகளையும் தாக்க வாய்ப்புண்டு..நாய்கள், பூனைகளை அடித்துத் தின்னும் என்றும் சொல்கிறார்கள். மேலதிக தகவலுக்கு விக்கிபீடியா லிங்க் இங்கே...(Coyote)

Sunday, June 29, 2014

பத்து கேள்விக்குப் பதில்! ;) :)

முக்கியமான முன்குறிப்பு
இந்த பத்து பதில்களில் பெரும்பாலானவை நகைச்சுவையை மனதில் கொண்டு எழுதப்பட்டவை. யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை! எல்லாருமே சீரியஸாவே பதில் சொல்லிட்டு இருக்காங்க, அதான் நாம கொஞ்சம் காமெடியா எழுதலாமேன்னு...ஹிஹி!

1. உங்களுடைய 100வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
பிறந்தநாள் பரிசாக ஒரு தங்கப் பல் செட் வாங்கி, "கருக்-மொருக்" னு கடிச்சுச் சாப்பிடற ஸ்னாக்ஸ் எல்லாம் வயிராற, மனசார சாப்ட்டு சந்தோஷமா கொண்டாட விரும்புகிறேன்.

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?
கண்ணைத் திறந்து கொண்டே தூங்கக் கற்க விரும்புகிறேன்.

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
..தோ...இப்பத்தான்! :) மொதக் கேள்விக்கு பதில் எழுதும்போது சிரித்தேன், இப்பவும் சிரிக்கிறேன்! :)

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
கரண்ட் கம்பியப் புடிச்சு தொங்கி(!) பார்க்க ஆசை..
கனெக்ட் பண்ணிய ஒயரை எல்லாம் கையால் இழுத்துப்பார்க்க ஆசை!
இங்கே அது முடியாது என்பதால், திங்க் பண்ணி அப்பறமா சொல்லறேனே, ப்ளீஸ்! ;)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
உங்க அப்பா-அம்மாவை இவ்வளவு நாள் பார்த்த பிறகும் இப்படி ஒரு துணிகரமான முடிவை எடுத்த உன் மன தகிரியத்தை;)ப் பாராட்டுகிறேன். பல்லாண்டு, பல்லாண்டு, பலகோடி நூறாண்டு வாழ்க! :)

6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
பூமிப் பந்தின் ஒரு பக்கம் பகல், ஒரு பக்கம் இரவு எல்லாம் இருக்கப்படாது. எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் இரவு, ஒரே நேரத்தில் பகல். அப்புறம், உலகத்தில 24 மணி நேரம், 35 மணி நேரம் விமானப் பயணங்களெல்லாம் கிடையாது. கண்ணை மூடி கண்ணைத் திறந்தா, யு.எஸ். டு கோயமுத்தூர்(சும்மா உதாரணமுங்க..எந்த ஊர் வேணா வைச்சுக்கலாம்! ) போயிரணும்.

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
நல்லவங்க, நண்பர்ங்க, பெரியவங்ககிட்ட கேக்கிறதுதான். ஆனா கடைசி முடிவு ஆண்டவன் கைல. கண்ணை மூடி சாமி கும்புட்டு எந்த வழியில் போகும்படி என் மனதிற்கு தோன்றுமாறு ஆண்டவன் என்ன சொல்றாங்களோ அதில போயிருவங்க.

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
இன்னா பண்றது! நம்மளும் பிரபலம் ஆகிட்டோம்னு கண்டுக்காம போயிக்கினே இருக்கறது தான்! ஐ டோண்ட் கேர்! ;) நான் எனக்கு உண்மையா இருப்பது மிக முக்கியம்னு நினைக்கிறேங்க.

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
நான் "சொல்ற" நிலைமையில் இருப்பனான்னு தெரில. அழுதுகிட்டு இல்ல இருப்பேன்? அவரையும் மனம் கரையும்வரை அழுது முடிக்கச் சொல்லி அதன் பின்னர் தேற்ற முயல்வேன்.

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
இந்தக் கேள்விய மெய்யாலுமே பாராட்டுறேன்ங்க.."உங்க வீட்டில்" என்று ஒரு வார்த்தையச் சேர்த்தீங்களே..அதுக்காக! :) நம்ம வீட்டில என்ன வேணா பண்ணலாமே! ம்...என்ன பண்ணலாம்?? வீட்டை க்ளீன் பண்ணுவோம் முதல்ல..அப்புறம் இருக்கவே இருக்கு டிவி-கம்ப்யூட்டர்-ஐ பேட் எக்ஸறா..பிறகு சமையல், சாப்பிடறது..எனக்கு தனியா இருந்தா தூக்கம் மட்டும் வராது, சோ நோ தூக்கம். தட்ஸ் ஆல்!
~~~
சரி, ஒரு வழியா மொக்கைய முடிச்சாச்சு..ஒடஞ்சு சுக்கு நூறாப் போன உங்க இதயத்தை சிரமப்பட்டு, பெவிகால், க்விக்-ஃபிக்ஸ், எம்-ஸீல் எல்லாம் போட்டு ஒட்டிகிட்டு சாப்பிடவாங்க!!
ஒரே தட்டை சுத்திச் சுத்தி வந்து படமெடுத்திருக்கேனேன்னு யோசிக்கப்படாது..நாமல்லாம் ஆரு? விக்கிரமாதித்தன் வம்சமில்லையா..நினைச்சது கிடைக்கும்வரை விடாம சுடுவோம்ல? ;) 
 இந்தப் படத்தில சோறு ஃபோகஸ் ஆகிருக்குங்க..
 இந்தப் படத்தில பச்சைப்பயறும், நெய்யும் ஃபோகஸ் ஆகிடுச்சு..
 இதிலே கேரட் பொரியல்...
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், குட்டி உருளை வருவல்!! இவரை போட்டோ எடுக்கத்தான் இம்புட்டு பில்ட்-அப்பூ! ரொம்ப ரொம்ப சிம்பிள் அண்ட் டேஸ்ட்டி வருவல். சின்ன உருளைக் கிழங்கை வேகவைச்சு தோலுரிச்சு, ஓரொரு கிழங்கையும்  உள்ளங்கைல வைச்சு லேசா அழுத்தி வைச்சுக்குங்க. கடாயில கொஞ்சம் எண்ணெயை தாராளமா ஊத்தி, கடுகு தாளிச்சு வெந்த கிழங்கு, மஞ்சப்பொடி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிட்டு, உப்பு மிளகாத்தூள் போட்டு புரட்டி இறக்கிருங்க. தட்ஸ் ஆல்! மொறு மொறுன்னு காரசாரமான வறுவல் ரெடி!
ஓக்கே...நன்றி வணக்கம், அடுத்த பதிவில் சந்திப்போம். 

Wednesday, May 22, 2013

டிட்பிட்ஸ்..

சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் கோர்த்து ஒரு பதிவு. மேலே படத்தில் உள்ளதுதான் இங்கே "கசகசா- poppy seed"என்ற பெயரில் கிடைக்கிறது. என் நினைவுப்பதிவுகளைப் புரட்டினால், கசகசா வெள்ளை நிறத்தில் இருந்த மாதிரி ஞாபகம். இண்டியன் ஸ்டோரில் வெள்ளை கசகசா கிடைக்கிறது என்கிறார்கள், ஆனா எனக்கு கரெக்ட்டா அங்கே போகும்போதெல்லாம் மறந்து போகிறது. ஸோ...இந்தப் படத்தில் உள்ள கசகசா-வை வாங்கலாமா...சமையலுக்கு உபயோகிக்கலாமா? என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்? 
~~
ஒரு நாள் கையில் கிடைத்த காய்களை எல்லாம் வெட்டி, ஒரு ஸ்டிர்ஃபிரை செய்து சப்பாத்தியும் போட்டு, தட்டிலும் வைச்சு, சாப்பிடவும் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டதும் எதோ வித்யாசம் தெரிந்தது..என்னவென்று கண்டுபிடிக்க இன்னுமொரு வாய் சாப்பிட்டதும்தான் தெரிந்தது, காயில் நான் உப்பே போடவில்லை என்பது!!! :)))))  இதுக்கப்புறம் என்ன செய்யறது?!! காய்களில் இயற்கையாவே உப்பு இருக்குமாமே..அதை சுவைத்துப் பார்ப்போமே..காயின் ஒரிஜினல் ருசியும் தெரிந்த மாதிரி இருக்கும் என்றெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டு சாப்பிட்டு முடிச்சுட்டேன். ஹிஹிஹி...
ஸோ...இந்த மாதிரி டிரை காய்கள்ல உப்பு போட மறந்துட்டா என்ன செய்து அட்ஜஸ்ட் பண்ணுவது? சஜஸன் ப்ளீஸ்!!
~~
மார்ச் கடைசியில் நட்ட டேலியாக்கள்..மஞ்சள் பூ முதலில் மலர்ந்திருக்கிறது. மற்ற நிறங்கள் ஆன் த வே!
இந்தம்மா அடுத்த கலர்..இலைகளுக்குள் ஒளிஞ்சிகிட்டிருக்காங்க. :)
 என்னவர் எல்லாப் பூக்களுக்கும் பேர் வைச்சு கூப்பிட்டுகிட்டு இருக்கார். இவங்க இலைக்குள்ள மறைந்திருந்ததால் இன்னும் பேரு வைக்கலை! ;) மஞ்சளும் இந்த நிறமும் நாங்க வாங்கி வந்த டேலியாக்கள். தோழி தந்தவை வேறு நிறங்கள். இப்பத்தான் மொட்டுக்கள் அரும்பியிருக்கின்றன. பூத்ததும் இங்கேயும் வரும். 
~~
அப்பார்ட்மெண்டில் சிலபல மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். டாகி வாக் - புனரமைக்கப்பட்டு, விரிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. புதுசாக 2 க்ரில் வைத்திருக்கிறார்கள். டாகி வாக்-ல புற்கள் சதுரம் சதுரமாகக் கொண்டுவந்து பதிக்கப்பட்டது பார்க்க சுவாரசியமாக இருந்தது. :) 
~~
முழுவட்டமாக பஸிஃபிக் கடலில் இறங்கிக்கொண்டிருக்கும் கதிரவன். நேரில் பார்த்தபொழுது இன்னும் மிக அற்புதமாக இருந்தது.  தினம்தோறும் வானம் நிகழ்த்தும் இந்த வண்ணக் கலவரம் நாங்கள் இதே இடத்தில் இருப்பதற்கு இன்னுமொரு காரணம். :) 
~~

உருளைக் கிழங்கு பொடிமாஸ் - கேரட் பொரியல்- சோறு- கீரை மசியல்.  தட்டு கலர்ஃபுல்லா இருக்கவே படமெடுத்து வைச்சேன்,  திவ்யமாச் சாப்பிடுங்க.
நன்றி!
:)  

Monday, April 29, 2013

பர்ஃபெக்ட் ஊத்தாப்பம்

 
...செய்வது எப்படி? - என்பது பற்றித்தான் இன்றைய பதிவுங்க. :)))) ஹல்லோ...வெய்ட்..பின்னங்கால் பிடறியில் பட, பல பேர் ஓட்டம் பிடிச்சாலும், எனக்கு என்றென்றும் ஆதரவு தரும் ஒரு சில நல்ல உள்ளங்கள் கண்டிப்பாஆஆஆஆஆ இந்தப் பதிவைப் படிப்பீங்க என்ற நம்பிக்கையில், கன்டினியூ!! இஸ்டார்ட் மீசிக்! :))))) டன் டனக்கா..ஆ...டமுக்கு டக்கா!! :)))) 
தோசை சுடுவது எப்படி -- நூறு வகை, ச்சே,ச்சே..ஆறு வகை தோசை  என்று ஏற்கனவே எழுதிருந்தாலும் ஊத்தாப்பம் பத்தி இன்னும் நான் எழுதலங்க. அதான்! ஒரு நாள்...வீகென்ட்..காலை..தோசை  சுடலாம்னு சட்னி அரைச்சாச்சு. திடீர்னு மொறு-மொறு தோசைக்குப் பதிலா மெத்-மெத் ஊத்தப்பம் சுடலாமேன்னு தோணுச்சு. மெத் மெத் ஊத்தப்பம் ஒண்ணு வயித்துக்குள்ள போன அதே (பொன்)நேரம்(??!!!)  ஊத்தப்பம் சுடுவது எப்படினு ஒரு டுட்டோரியல் குடுத்தா எல்லாருக்கும் உபயோகமா இருக்குமேன்னு ஒரு ஞானோதயம் உருவாச்சு. 

ஸோ..இப்ப ஒருவழியா (நிஜமாவே) ஊத்தப்பம் செய்யப் போறோம். இட்லி மாவரைச்சா, முதல்நாள் இட்லி- அப்புறம் தோசை, இதான் நம்ம கான்சப்ட். ஸோ, தேவையான அளவுக்கு இட்லி மாவ கப்ல எடுத்து.. தோசைன்னா கொஞ்சம் தண்ணி தாராளமாவே விட்டு கரைக்கலாம், ஆனா ஊத்தப்பத்துக்கு அப்படி இல்ல, கொஞ்சமா தண்ணி விட்டு கரைச்சுக்குங்க. தோசைக்கல்ல மீடியம் சூட்டில காயவைங்க. பக்கத்தில ஒரு வெங்காயம்/கத்தரிக்காய்/உருளைக்கிழங்கு/வாழக்காய் ...குழம்பக்குடாது, இதெல்லாம் வச்சு சாம்பார் செய்யப் போறதில்ல, அப்பப்ப தோசைக்கல்ல மசாஜ் பண்ணிக்கறதுக்கு!! ஹிஹிஹ்ஹி! இல்லன்னா ஒரு பேப்பர் டவல்ல எண்ணெய் தொட்டு மசாஜ் பண்ணிக்கலாம், அல்லது ஸிலிகன் பேஸ்ட்ரி ப்ரஷ்ல மசாஜ் பண்ணிக்கலாம், அது உங்க வசதி! [ஊரில டீக்கடைகள்ல தென்னங்குச்சி துடைப்பம் வைச்சு மசாஜ் பண்ணுவாங்க, அது நமக்கு உபயோகப்படாது, விட்டுரலாம். ;)]

தோசைக்கல்லு ரெடியானதும் ஒரு கரண்டி மாவை ஊத்துங்க. லேசா, பட்டும் படாம, தொட்டும் தொடாம, அந்த வட்டத்தை கொஞ்சமே கொஞ்சம் பெரிசு பண்ணிவுடுங்க, போதும்! அரை ஸ்பூன் எண்ணெய எடுத்து ஊத்தப்பத்தை சுத்திவர ஊத்திருங்க. இப்ப சிலநொடிகள் காத்திருங்க...
ஊத்தப்பத்தில மேஜிக் ஆரம்பிக்கும்! :o) அதாவது, ஊத்தப்பத்தில அங்கங்க சின்னச் சின்ன துவாரங்கள்:) உருவாகும். அப்ப, ஸ்பூனை மறுபடி எண்ணெய்க் கிண்ணத்தில ஒரு dip பண்ணிட்டு எடுத்து, ஊத்தப்பத் துளைகள்ல ஓரொரு சொட்டா எண்ணெய் விடுங்க. இன்ட்ரஸ்டிங்கா இருக்கும், செய்து பார்த்தா உங்களுக்கே புரியும்!  :))) 
100% எல்லா துவாரங்களையும் கவர் பண்ணனும்னு இல்லை..முடிஞ்சளவு கவர் பண்ணுங்க. அதுக்குள்ள, ஊத்தப்பம் ஒரு பக்கம் பொன்னிறம் ஆகியிருக்கும். திருப்பிப் போடுங்க..
 ஒரு சிலர், திருப்பிப் போட்டதும் ஆர்வம் தாங்காம,  ஊத்தப்பதை தோசை திருப்பியால அழுத்துவீங்க...நோ!! தட் இஸ் நாட் எ குட் ப்ராக்டீஸ்! ஊத்தப்பம் மொறுமொறுன்னு ஆகிரும், ஸோ..தொந்தரவு பண்ணாம விட்டிருங்க. சில நொடிகள்ல இருபுறமும் பொன்னிறமான ஊத்தப்பம் ரெடியாகிரும். ஊத்தாப்பத்த மூடி வச்சு சுடுவதா இருந்தா இந்த "திருப்பி போடற" ஸ்டெப் ஆப்ஷனல்தான். மூடி வைப்பதால் ஊத்தப்பத்தின் 2 பக்கமுமே கரெக்ட்டா வந்துரும், ச்சே,ச்சே, வெந்துரும்! ;) எடுத்து தட்டில வைச்சு, விருப்பமான சைட் டிஷ்களுடன் வெளுத்து வாங்கலாம். மெத் மெத் ஊத்தாப்பம் சூப்பரா இருக்கும்.
தமிழ் கூறும் நல்லுலகத்தில் யாரும் இப்படி ஒரு மொக்கை பதிவ எழுதியிருக்க மாட்டாங்க என்ற பெருமிதத்துடன்..
நன்றி, வணக்கம்!
:) 

LinkWithin

Related Posts with Thumbnails