வெங்காய வடகம்
கோடைக்கொண்டாட்டத்தில் கருவடாம்,தக்காளி வடாமுக்கு அடுத்தபடியாக வெங்காய வடாம்! இரண்டு முறைகளில் செய்தேன்,இரண்டுமே சூப்பராக இருக்கிறது. முதல் முறை(1ஸ்ட் டைம் இல்லைங்க,ஹிஹி) நம்ம ஸாதிகா அக்கா ரெசிப்பி..அதிராக்கா கொடுத்திருந்த போட்டோ டுட்டோரியலும் யூஸ்ஃபுல்லா இருந்தது. இரண்டாவது முறை ஜவ்வரிசியில் செய்தேன்..தக்காளி வடாம் செய்முறை போலவேதான். இந்தமுறை எச்சரிக்கையா இந்த முறை எலிமிச்சம்பழம், ச்சீ,ச்சீ எலுமிச்சம்பழமெல்லாம் போடாம செய்தேன்..சூப்பரா வந்தது.நான் போட்ட வடாமை காக்காய் கிட்ட இருந்து காப்பாத்தினேனோ இல்லையோ, வீட்டில் ஒருவரிடமிர்ந்து கஷ்டப்பட்டு காப்பாத்தினேன்!! [உடனே கற்பனைக் குதிரைய நாப்பது மைல் வேகத்தில் பறக்கவிடாதீங்க!! கர்ர்ர்ர்...] நடந்தது என்னன்னா, ஒரு வீகெண்டில் வடாம் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது..வெயிலின் கொடுமையப் பொறுக்க முடியாத என்னவர் [வீட்டுக்குள்ளயே இருக்கலாம்ல? ஹாயா patio-ல உட்கார்ந்து (அனல்)காத்து வாங்கறாராம்!] செடிக்கு தண்ணீர் ஊற்றும் hose-l மிஸ்ட் ஆப்ஷனில் நாஸிலை செட் பண்ணி ஒரு பூந்தொட்டி மேலே நிக்கவைச்சுட்டார்.காய்ந்து கொண்டிருந்த வடாமும் சேர்ந்து நனைஞ்சு கூலாகிட்டது!!
ஒரு அப்பாவி கஷ்டப்பட்டு வடகம் போட்டு வைச்சா எப்படி எப்படியெல்லாம் ஆபத்து வருது பாருங்க?!! நானும் சாயந்திரம் வரை கவனிக்கலை..அப்புறமா வெளியே வந்து பார்த்தா...அவ்வ்வ்வ்வ்வ்! மறுக்கா எல்லாத்தையும் எடுத்து வேற ப்ளேட்ல வச்சு காயவைச்சு எடுத்தேன். சரி, ரெசிப்பியப் பாக்கப் போவோமா? சீட் பெல்ட்டெல்லாம் தேவையில்ல, ஸ்மூத் ride தான், தைரியமாப் படியுங்க! :)
வெங்காய வடகம்-செய்முறை 1
தேவையான பொருட்கள்
சாதம்-1கப்
சின்ன வெங்காயம்-200கிராம்
வரமிளகாய்-10 (காரத்துக்கேற்ப)
மிளகு,சீரகம்,சோம்பு -தலா 1 டீஸ்பூன்
உப்பு
செய்முறை
சாதத்தை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
மிளகாய்-சோம்பு-சீரகம்-மிளகு இவற்றை பொடித்துக்கொள்ளவும்.
சின்னவெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கவும்.
அரைத்த சாதம், நறுக்கிய வெங்காயம், பொடித்த பொடி,தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.வடாம் இடும் தட்டில் ப்ளாஸ்டிக் ஷீட்டை விரித்து,தண்ணீரால் துடைத்துவிட்டு சிறிய வடகங்களாக கிள்ளி வைக்கவும். (உங்க ஆசைதீரக் கிள்ளுங்க,வடகத்துக்கு வலிக்காதாம்! ஹிஹி)
வெயிலில் ஒரு நாள் காயவிட்டு, மறுநாள் வடகங்களைத் திருப்பி விட்டு நன்றாக காயவிட்டு எடுத்துவைக்கவும்.
குறிப்பு
- நான் சுடு சோற்றில் வடாம் போடலை. தண்ணீர் ஊற்றிவைத்த பழைய சாதத்தில் நீரை சுத்தமாகப் பிழிந்துவிட்டு அரைத்திருக்கிறேன்.
- இன்னொரு விஷயத்தையும் நானே சொல்லிடறேன், இல்லன்னாக் கண்டிப்பா ஆராச்சும் வந்து ஏன் வெங்காயத்தை தோலோட போட்டிருக்கீங்கம்பீங்க!! வெங்காயத்தை 100% உரிக்கலை,கொஞ்சம் சருகோட போட்டா ருசி நல்லா இருக்கும்,போட்டுப் பாருங்க!:)
- இங்கே க்ளிக் பண்ணினா ஸாதிகாக்கா ரெசிப்பியைப் பார்த்து பூஸார் போட்டிருக்கும் வடகத்தைப் பார்க்கலாம். ;) இங்கே க்ளிக் பண்ணினா ஸாதிகாக்காவின் செய்முறை இருக்கிறது. இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
~~
வெங்காயவடகம்- செய்முறை 2ஜவ்வரிசி-1/2கப்
தண்ணீர்-4கப்
சின்ன வெங்காயம்-250கிராம்
பச்சைமிளகாய்- 6 (காரத்துக்கேற்ப)
food colour -4 துளிகள் (விரும்பினால்)
உப்பு
செய்முறை
ஜவ்வரிசியைக் களைந்து 8 மணி நேரங்கள் ஊறவிடவும்.
வெங்காயத்தை உரித்து, பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துவைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். கொதி வந்ததும் ஊறிய ஜவ்வரிசியின் நீரை வடித்துவிட்டு சேர்க்கவும்.
ஜவ்வரிசி வேகும்வரை அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.(10 -12 நிமிடங்கள்) வெந்ததும் வெங்காயமிளகாய் அரைத்ததை சேர்த்து கலக்கவும்.
வடாம் கலவையை அடுப்பிலிருந்து இறக்கி அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.நான்கு துளிகள் மஞ்சள் நிற food colour-ஐச் சேர்த்து கலக்கிவிட்டு, கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும்.
கலவை கொஞ்சம் சூடு ஆறியதும், தண்ணீரால் துடைத்த ப்ளாஸ்டிக் ஷீட்டுகளில் சிறுவட்டங்களாக ஊற்றி காயவிடவும்.
ஜவ்வரிசி வடாம் ஒரு நாள் காய்ந்ததும் ப்ளாஸ்டிக் ஷீட்டில் இருந்து ஈஸியாக உரிக்க வரும். உரித்து திருப்பிவிட்டு நன்றாக காயவிடவும். படத்தில் தட்டில் இருப்பது செய்முறை-1ல் சொல்லியிருக்கும் வடாம்.காய்ந்த வடகங்களை காற்றுப்புகாத டப்பாக்களில் எடுத்துவைக்கவும்.
வெங்காய வடகத்தை எண்ணெய் மிதமான சூட்டில் காயவைத்து கவனமாகப் பொரிக்கவேண்டும். சாதத்தில் செய்த வடாம் சீக்கிரம் சிவந்துவிடும், ஜவ்வரிசி வடாமில் எண்னெய் தெறிக்கும் அபாயம் உண்டு. [இதெல்லாம் எனக்கு நடந்துதான்னு உங்களுக்கு டவுட்டு வந்திருக்கும், ஆனா அப்படில்லாம் நடக்கலையே! :) இருந்தாலும் முன்னோர்கள் (ஸா... அக்கா, அ... அக்கா, கா... அம்மா) எல்லாரும் சொல்லிருந்தாங்க,அதனால் நானும் சொல்லி வைக்கிறேன்!அவ்வளோதாங்க நான் வடாம் போட்ட கதை..சொல்ல மறந்துட்டேனே, வெங்காய வடகம் எலுமிச்சை சாதத்துடன் சாப்பிட்டோம். வழக்கம் போல என்னவர் வெங்காய பகோடா மாதிரி இருக்குதுன்னு ஒரு குபீர்(!) கருத்து சொன்னார். :) அதனால் அடுத்தநாள் டீயுடன் சாப்பிடலாம்னு ட்ரை பண்ணினேன் சூப்பரா இருக்குது!! :P :P