Thursday, April 26, 2012

ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் பொரியல் / Burssel Sprouts Stir fry

ப்ரஸ்ஸல் ஸ்பரவுட்ஸ் வாங்கவேண்டும் என்ற நினைவு வருகையில் கடையில் இருக்கும் ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் எல்லாம் வாடிவதங்கிப் போயிருக்கும். அது ப்ரெஷ்ஷாகவே இருக்கும் போது எனக்கு நினைவில்லாமல் வந்துவிடுவேன். ஒருவழியாக ப்ரெஷ் பேக் ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட் வாங்கிவந்தாயிற்று. முதல் முறை என்ன சமைப்பது என்று குழப்பமாக இருந்தது. என்னவரின் ஆஃபீஸ் cafeteria- வில் இந்தக் காயை முழுதாக bake செய்து தருவார்களாம், நீயும் அப்படி ட்ரை செய்து பாரேன் என்று ஐடியா கொடுத்தார். நம்ம ருசிக்கேற்ப மசாலா பொடி சேர்த்து மாரினேட் பண்ணினேன், பசிக்க ஆரம்பித்ததால் oven-ல் bake செய்யாமல் இதோ அந்த ரெசிப்பி..

தேவையான பொருட்கள்
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ்-12
ஆலிவ் ஆயில்-2 டேபிள்ஸ்பூன்
சில்லி சிக்கன் மசாலா-1டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸை கழுவி, தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு நான்காகப் பிளந்துகொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் ப்ரஸ்ஸல் ஸ்பரவுட்ஸ், மசாலா பொடி, உப்பு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக குலுக்கிவிட்டு அரைமணி நேரம் வைக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து மசாலா கலந்த ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸை சேர்த்து வதக்கவும்.
தீயைக் கூட்டி வைத்து மூடி போட்டு 3-4 நிமிடங்கள் வேகவிடவும். மூடியைத் திறந்து காயை அடிபிடிக்காமல் கிளறிவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் ஸ்டிர் ஃப்ரை ரெடி. சாதம்- உப்பு பருப்பு-ரசம் இவற்றுடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

பி.கு. இந்த முறையில் காய் முழுவதுமாக வெந்திருக்காது, க்ரன்ச்சியாக இருக்கும்.
~~
இரண்டாவது முறையில் நான் செய்த பொரியல் அடுத்ததாக! :)
~~
தேவையான பொருட்கள்
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ்
வெங்காயம்-1
காய்ந்த மிளகாய்-3
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
வேகவைத்த பாசிப்பருப்பு-1 குழிக்கரண்டி
தேங்காய்த் துருவல்-2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
ப்ரஸ்ஸல் ஸ்பரவுட்ஸை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தையும் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு போட்டு பொரியவிடவும். க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் சீரகம் சேர்க்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம், கிள்ளிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் காயைச் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
காய் வெந்ததும் உப்பு, வேகவைத்த பருப்பு சேர்த்து கலந்துவிடவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து தேங்காய்த் துருவல் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சாதம்-வத்தக்குழம்பு-ரசம் இவற்றுடன் பரிமாற சுவையான சுவையான (தென்னிந்திய ஸ்டைல்) ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் பொரியல் ரெடி!

இரண்டு பொரியலுமே சுவையாய் இருந்தது..இந்த காய் உடலுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்க!
~~
மணத்தக்காளிக் கீரையை எங்க ஊர்ப்பக்கம் "சுக்குட்டிக் கீரை" என்றுதான் சொல்வது வழக்கம். :) ஆசைக்கு செடிகளை வளர்த்தாலும் ஒன்றிரண்டு செடிகள் வரைதான் எங்க வீட்டில் வளர்ந்திருக்கு. இதிலே சிவப்பு நிறப் பழம் பழுக்கும் வகையும் உண்டு.

இந்தச் செடியை வீட்டில் வளர்த்தாலும் பழம் பறித்துச் சாப்பிடலாமே தவிர கீரையாய்ப் பறித்து ஒரு குடும்பத்துக்குச் சமைப்பதுக்கு கீரைத் தோட்டம்தான் போடவேண்டும்! ;0) அதனாலோ என்னமோ கீரைக்காரர்களிடம் இந்தக்கீரைக்கு ஸ்பெஷல் விலையாக இருக்கும். மற்ற கீரையெல்லாம் 1.50ரூபாய்க்கு விற்கையில் இந்தக் கீரை 3 ரூபாயாக இருக்கும்.

கடந்த முறை ஊருக்குப் போயிருந்தபோது கீரைக்காரரிடம் சுக்குட்டிக் கீரையைப் பார்த்ததும் வாங்கலாம் என்று விலையைக் கேட்டால் 8 ரூபாய்கள்!! கீரையும் அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை! இருந்தாலும் இனி எத்தனை நாள் கழிச்சு சுக்குட்டிக் கீரையைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமோ என்று வாங்கி பொரியல் செய்தேன். பொதுவாக, பொரியல் என்பதுக்கு எங்க வீட்டில ரொம்ப சிம்பிள் ப்ராஸஸுங்க!


கீரையோ, காய்கறியோ எது மெயின் இன்கிரிடியன்ட்டோ, அதை நறுக்கி வைச்சுக்கணும். வெங்காயம்- பச்சை நிறக் காய்கள், கீரைக்கு மட்டும் வரமிளகாய், மத்த காய்களுக்கு பச்சைமிளகாய் இதையும் நறுக்கி ரெடியா வைச்சுக்கணும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு-க.பருப்பு,உ.பருப்பு தாளித்து நறுக்கிய காய் சேர்த்து கொஞ்சம் தண்ணிதெளிச்சு உப்பு போட்டு வேகவிட்டு வெந்ததும் தேங்கா போட்டு இறக்கவேண்டியதுதேன்! சுக்குட்டிக் கீரைப் பொரியலும் இதுக்கு விதிவிலக்கில்லை! :)))))
----
என் நிலைமை இப்படியிருக்க, சுக்குட்டிக் கீரைத் தோட்டத்தையே "பர்ட் ஃபீடராக" உபயோகிக்கும், திருக்குறளில் வார்த்தைகளுக்குப் பதிலாக காயையும் கனியையும் படமெடுத்துப் போடுமளவுக்கு விளைச்சல் பார்க்கும் இமா குடுத்துவைச்சவங்கதானே? ;);)
எங்கோ ஒளிந்து கிடந்த கீரைப் படங்களைத் தேடி எடுத்து கொஞ்சம் மொக்கையும் போடவைத்த இமா வாழ்க! :)))))))
---
[முதல் படம்: நன்றி,கூகுள் இமேஜஸ்]

Monday, April 23, 2012

வீட்டுப் பறவைகள்..

புது இடங்கள்-புது மனிதர்கள்-சுற்றுலாக்கள் என்று செல்வது பிடித்திருந்தாலும் சுற்றித்திரிந்து, நம் வீ(கூ)டு சேர்ந்து கதவைத் திறக்கையில் ஒரு சந்தோஷமான அலுப்பு வரும் பாருங்கள், அப்பொழுதுதான் தெரியும் வீட்டை நாம் எவ்வளவு நேசிக்கிறோம் என்று! சிலருக்கு விடுமுறை நாட்கள் என்றால் வீட்டில் இருக்கவே பிடிக்காது, வெளியே செல்லவே நினைப்பார்கள், ஆனால் நான் வெளியுலகை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ, அதை விடவும் வீட்டினுள் இருப்பதை விரும்பும் வீட்டுப் பறவை! :))

கடந்த பதிவில் பர்ட் ஃபீடர் பற்றி சொல்லியிருந்தேன், வீட்டுக்குள் சில அடித் தொலைவில் நான் கேமராவுடன் அமர்ந்திருந்தாலும் கவலையில்லாமல் தம்பாட்டிற்கு வந்து ப்ரேக்ஃபாஸ்ட், லன்ச்,ஈவினிங் ஸ்னாக் என்று சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள் இந்த ஹவுஸ் மார்ட்டின் பறவைகள்..சில நாட்கள் கண்ணாடிக்தவுக்குப் பின்னால் இருந்த நான், கதவையும் திறந்து வைத்தே படமெடுத்தாலும் கண்டுகொள்ளாமல் தேமேன்னு வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லும் எங்கள் வீட்டுப்பறவைகளுக்காக இந்தப் பதிவு...இவர் முதன் முதலில் வந்த பறவையார், வீடியோ எடுக்க முடியுமா என்ற பதற்றத்திலேயே எடுத்தேன். ஒரு பெரிய உணவுத் துணுக்கை விழுங்கியதும் விக்கிக் கொள்ள, விடுவிடுவென்று சுவற்றோரம் போகிறார். அங்கே அலகை அப்படி இப்படித் திருப்பிக் கூர் தீட்டிக்கொண்டு பறந்துவிட்டார்....

தனியே தண்ணீரும் வைக்கவேண்டுமோ என்று சீரியஸாக யோசிக்கத் தொடங்கியிருந்தேன் அப்பொழுது!! பிறகு கீழ்வீட்டில் பறவைகளுக்குத் தண்ணீர் வைச்சிருக்காங்க என்று தெரிந்துவிட்டது. :))

அடுத்த வீடியோவில், தத்தித் தத்தி நடைபயின்று வரும் பறவையார்..நாலடி தள்ளி கேமராவுடன் நான்! அவ்வப்பொழுது தலையைத் திருப்பி காமராவைப் பார்ப்பதில் இருந்து தான் காமெராவில் சிறைபிடிக்கப் படுகிறோம் என்பது தெரிந்திருக்கிறது பறவையாருக்கு என்றே நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க??பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்! :) சிலர் குண்டுப் பூசணிக்காய்களாக, சிலர் ஒல்லியாக, உயரமாக, சிலர் சாந்தமாக, சிலர் கோபமாக, சிலர் அவசரமாக, சிலர் அழகாய் நிதானமாக அன்னநடை பயின்றபடி...என்று வந்து கொத்தித் தின்று பறந்துகொண்டே இருக்கிறார்கள்...

தினமும் இதையே சாப்பிட்டால் போரடிக்குமாம், அதனால் அடுத்து இவர்களுக்கு இட்லி-தோசை-சட்னி எல்லாம் ரெடிபண்ணித் தரவேண்டும் என்று ஐடியா குடுக்கிறார் என்னவர். இவங்களுக்கு ரொட்டித் துண்டு குடுத்தாலே ஸ்டைலாக அந்தப் பக்கம் இழுத்துத் தள்ளிவிட்டு அவர்களுக்கான ஸ்பெஷல் உணவை மட்டுமே கொத்தறாங்க, இதிலே இ-தோ-ச- எல்லாமும் வேறா? அவ்வ்வ்வ்...அனேகமாக அது தென்னிந்தியப் பறவைகளுக்கு மட்டுமே பிடிக்கும்என்று நினைக்கிறேன். அமெரிக்கப் பறவைகள் peanut butter snack-தான் சாப்பிடறாங்க! :Dபறவைகளுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்துவிட்டு, இந்தப் பதிவைப் படித்த உங்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் அனுப்பினால் எப்படி? ;) இந்தாங்க, "ஐடியா வடை" & காஃபி! காஃபி பதமான சூடில் இருக்கிறது, ஆறுமுன் குடிச்சிருங்க :~

மசால் வடை , உளுந்துவடை கேள்விப்பட்டிருக்கோம், அதென்ன ஐடியா வடை?-என்று புருவம் தூக்கும் ஆட்களுக்காக ஒரு quick recipe! ;)
தால் மக்னி செய்யலாம் என்று கருப்பு உளுந்து-க.பருப்பு-black eyed peas ஊறவைத்து சமைக்கப் போகையில் "தக்காளி, காலி!" என்று தெரியவந்தால் என்ன செய்வது?! பருப்பை வடித்து இஞ்சி-பூண்டு-சோம்பு-வரமிளகாய் சேர்த்து கொறகொறன்னு அரைச்சு, வெங்காயம் நறுக்கிப் போட்டு,உப்பும் போட்டு வடையாத் தட்டிப் பொரிச்சு எடுக்கவேண்டியதுதான்! ஹிஹிஹி...
நன்றி!

Friday, April 20, 2012

தோட்டம்,2012

2010-ல் இந்த ஊருக்கு வந்ததும் வீடு தேடும் படலத்தின் போது, முதல் தள வீடு ஒன்று இருந்த போதும் அதை விடுத்து தரைத்தள வீட்டிற்கு குடிவந்தோம். காரணம், வீட்டின் முன்பு இருந்த கையகல நிலம்! அங்கே விவசாயமே செய்யப்போவது போல நிறைய ரிஸர்ச், வீட்டுத் தோட்டம் வைத்திருப்போரிடம் 1008 சந்தேகம் என்று ஏகப்பட்ட ஏற்பாடுகளுடன் களமிறங்கினோம்! :)))))

அந்தக் கையகல இடத்தில், காங்க்ரீட் கற்கள்தான் உண்டு, போதுமான சூரியவெளிச்சம் இருக்காது, வாசலில் இருக்கும் இங்கிலீஷ் பாக்ஸ் செடி எங்கெங்கும் பரந்து விரிந்து வேர்விட்டிருக்கிறது என்பதும் தெரியாமல் ஆரம்பித்து இரண்டு கோடைகளில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இரண்டாவது கோடையிலேயே தொட்டிச் செடிகள் வாங்கி (பூக்கள் மட்டும்) வளர்க்கவும் ஆரம்பித்தோம்.

இந்த வருஷம் வசந்தம் சீக்கிரமே வர, நாங்களும் ஏப்ரல் முதல் வாரமே கடைக்குப் போனோம். நர்ஸரியிலும் ப்ளாக் ஃப்ரைடே சேல்!! கடையைச் சுத்திக்காட்டப் போறேன்,ரெடி, ஸ்டெடி!!! :)) ஹோம் டிப்போவில் வீட்டுக்குத் தேவையான ஹார்ட்வேர் பொருட்கள், தோட்டத்திற்குத் தேவையான பொருட்கள் (A to Z) இருக்கும்.

ஒவ்வொரு ஸ்ப்ரிங் ஸீஸனிலும் கடையின் வெளியிலேயே சிறிய பூச்செடிகள், பழ மரங்கள், தோட்டத்திற்கு தேவையான மண் எல்லாமே அடுக்கி வைச்சிருவாங்க..கடையின் உள்ளேயும் பலவகைப் பூச்செடிகள், காய்கறிச் செடிகள் இருக்கிறது.செம்பருத்திப் பூவில் இருந்து ஆரஞ்சு -எலுமிச்சை மரங்கள்,தென்னை முதல் palm trees வரை அழகாக அடுக்கி வைச்சிருக்காங்க. நமக்கு எதாவது சந்தேகம் வந்தால் அதைத் தீர்த்துவைக்க, உதவி செய்ய ஆட்களும் கடை பூராவும் இருக்கிறார்கள்.

செடிகொடிகளை எல்லாம் பார்த்துட்டு வந்தம்னா சுற்றிலும் ஓரத்தில் தோட்டத்துக்குத் தேவையான பொருட்கள்இருக்கு..பிளாஸ்டிக் தொட்டிகள், மண் தொட்டிகள், மரத்தொட்டிகள், தோட்டத்துக்கு வேலி, பார்டர் கட்ட/ தரையில் பதிக்க கற்கள், தண்ணீர் பாய்ச்ச ட்யூப் என்று எல்லாப் பொருட்களும் சுற்றிலும் வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து உள்ளே நுழைந்ததும் இன்டோர்-ப்ளான்ட்ஸ் இருக்கின்றன. சுவரில் வானமெல்லாம் வரைந்து ரூமுக்குள்ளேயும் அவுட்டோர் ஃபீலிங்கை கொண்டுவந்துடறாங்க..

இன்னும் உள்ளே போனால் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் இருக்கின்றன. வாசலிலேயே லில்லிப் பூந்தொட்டிகள் விற்பனைக்கு..பக்கத்திலேயே ஆர்க்கிட் பூக்கள் அணிவகுத்து நிற்கின்றன. தேடிக்கண்டுபுடித்து Bird feeders வாங்கியதுடன் கார்டன் ஷாப்பிங் நிறைவுபெற்றது.

இந்த ட்ரிப் பற்றிய தொடர்புகளை அங்கங்கே bold letters-ல் இணைத்திருக்கேன், க்ளிக் பண்ணிப் பாருங்க. படங்களைத் தனித்தனியே ரசிக்க விரும்பினால், ஆல்பம் இங்கே இருக்கிறது..
புதிய பூவிது, பூத்தது!
~~~
இந்த முறை bird feeder ஒன்றும், humming bird-க்கு ஒரு nectar feeder-ம் வாங்கிவந்தோம். நெக்டர் மிக்ஸை தண்ணீரில் கரைத்து feeder-ல் நிறைத்து வெளியே மாட்டியிருக்கிறோம். அவ்வப்பொழுது மினியேச்சர் ஹெலிகாப்டர் போல தேன்சிட்டுக்கள் வந்து செல்கின்றன. :)

பறவைகளுக்கு peanut butter snacks-ஐ feeder-ல் நிறைத்து கூரையில் தொங்கவிட்டோம், ஆனால் அவற்றுக்கு கண்டுபிடிக்கத் தெரியவில்லையோ என்னவோ, யாருமே வரவில்லை..கழற்றித் தரையில் வைச்சோம், பிறகென்ன??

அடுத்த பதிவில் இந்தப் பறவையம்மா(!) வருவாங்க,அதுவரை நன்றி கூறி விடை பெற்றுக்கொள்கிறேன்,நன்றி வணக்கம்!

பி.கு. :தோட்டம் பற்றிய பதிவுகள் எல்லாமும் பார்க்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

Tuesday, April 17, 2012

முட்டை குருமா

தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-2
முட்டை-3
பச்சைமிளகாய்- 3(அ)4
பூண்டு-4 பற்கள்
கொத்துமல்லி இலை-சிறிது
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
கரம் மசாலா-1டீஸ்பூன்
உப்பு

அரைக்க
தேங்காய் - 3டேபிள்ஸ்பூன்
முந்திரி-4
சோம்பு-1டீஸ்பூன்

செய்முறை
இரண்டு முட்டைகளை தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
தேங்காய்-முந்திரி-சோம்பை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துவைக்கவும்.
வெங்காயம்,தக்காளி, பூண்டை நீளவாக்கில் நறுக்கவும்.
பச்சைமிளகாயை ஒடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். பூண்டு,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு (வேகவைத்த முட்டையில் உப்பு இருக்கிறது,கவனம்!) சேர்த்து மசாலா வாசம் போகும்வரை கிளறவும்.
அரைத்த விழுது சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
குருமா நன்றாக கொதித்ததும் வெந்த முட்டைகளை கத்தியால் அங்கங்கே கீறிவிட்டு குருமாவில் சேர்க்கவும்.
சில நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை உடைத்து குருமாவில் ஊற்றி, மெதுவாக கலக்கி விடவும்.
தீயைக் குறைத்து 4-5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும்.

சுவையான முட்டைகுருமா ரெடி! ஆப்பம்-பரோட்டா-சப்பாத்தி-இட்லி-தோசை-இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.

ஆப்பம் குருமா உடன் தேங்காய் சட்னியும் சேர்ந்துகொண்டால் அமர்க்களமான பொருத்தம்தான்! நீங்களும் செய்து ருசித்துப் பாருங்க! :)))))
~~~
ஆப்பத்துக்கு சைட் டிஷ் தேடியபொழுது இந்த மலையாள வீடியோ சிக்கியது. ஏஷியா நெட்-டில் வரும் அடுக்களை-பகுதியில் செய்து காட்டிய முட்டைகுருமாவை வழக்கம் போல, என் வசதிப்படி மாற்றி செய்தேன். உங்களுக்கு வீடியோ குக்கிங் பார்க்க விருப்பமும் நேரமும் இருந்தால் யு ட்யூபில் போய்த் தேடாமல் இங்கேயே.. :))குருமா ரெசிப்பியை விட, குருமா செய்யும் பெண்மணியின் மலையாளம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது! வெகுநாட்கள் கழித்து இவ்வளவு மலையாளத்தை பார்த்ததால் இருக்கலாம். பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு நீ...ள....மா....ன வீடியோ! கொஞ்ச நேரத்தில் ஃபாஸ்ட் பார்வர்ட் பண்ணிட்டேன், அது வேறகதை! ;)

"நல்லது போலே" என்ற பதத்தைப் பலப்பலப்பல முறை உபயோகித்தாங்க, நானும் நல்லது போலே ;) அரைச்சு, கரைச்சு, குருமா ஆக்கிட்டேன்..தேங்க்ஸ் டு அடுக்களை! ;)))))
ஆப்பம்-முட்டை குருமா & தேங்காய் சட்னி
[யாரது..எதுக்கு இவ்ளோ படம்னு கேக்குறது?? எடுத்த போட்டோவை எல்லாம் இங்கே போஸ்ட் பண்ணாம என்ன பண்ணறதாம்???;)))))) ]

Thursday, April 12, 2012

அசோகா ஹல்வா & தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அசோகா ஹல்வா..திருவையாறு ஹல்வா..பாசிப்பருப்பு ஹல்வா..மூங் தால் ஹல்வா...இப்படி பலபேர் கொண்ட இந்த ஹல்வா பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ருசித்தது சமீபத்தில்தான்...சுடச்சுட தயாராகி, எல்லாருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொல்ல இங்கேயும் வந்துவிட்டது அசோகா ஹல்வா! :)

தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு-1/2கப்
கோதுமை மாவு /ஆட்டா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 11/4கப்
நெய்-1/2கப்
ஏலக்காய்-3
கேசரி கலர்-சிறிது
திராட்சை,முந்திரி-சிறிது

செய்முறை
குக்கரில் ஒண்ணரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, பாசிப்பருப்பை சேர்த்து 4-5 விசில் வரும்வரை வேகவிடவும்.
ப்ரெஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து பருப்பை மசித்துக்கொள்ளவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் நெய் காயவைத்து முந்திரி-திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதே கடாயில் கோதுமை மாவை சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும்.
வறுத்த மாவுடன் மசித்த பருப்பை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். கேசரி கலரை சேர்த்து கலக்கிவிடவும்.
ஹல்வாவுடன் கேசரி பவுடர் கலந்ததும், நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
ஹல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் முநிதிரி திராட்சை, ஏலப்பொடி சேர்த்து கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான அசோகா ஹல்வா/திருவையாறு ஹல்வா ரெடி!
குறிப்பு
  • கோதுமை மாவிற்கு பதிலாக மைதாவும் உபயோகிக்கலாம்.
  • ஒரு கப் பருப்புக்கு ஒரு கப் நெய் என்ற ரேஷியோ[1:1] சரியாக இருக்கும், விரும்பினால் இன்னும் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேரச்சேர ருசி அதிகமாகும்! ;) :P,
  • ஆக்ச்சுவல் ரேஷியோ 1:2:3[பருப்பு:சர்க்கரை:நெய்]..ஒரிஜினல் ருசிதான் வேண்டும் என்பவர்கள் இந்த அளவில் பொருட்கள் சேர்த்து செய்து பாருங்க! ;)
  • ஹல்வா-வை இளம் சூட்டுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஹல்வாவை நேரடியாக சூடாக்காமல், சூடான நீரில் சிறு கிண்ணங்களில் ஹல்வாவை சிறிது நேரம் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நளினி சொல்லிருக்காங்க, அவங்க வலைப்பூவில் இருந்து கொஞ்சம் மாற்றங்களுடன் நான் முயற்சித்திருக்கிறேன், நன்றி நளினி!
~~~
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
~~~

Wednesday, April 11, 2012

மழையும், மழை நிமித்தமும்..

மழை வருமா?..
இல்லை வானில் சூல்கொண்ட கருமேகங்கள் காற்றில் கலைந்து சென்றுவிடுமா?..
மாலையில் சூழ்ந்த மேகங்கள் இரவு முழுக்க மழையாய்ப் பெய்தபின்னும், தாம் சுமந்த தண்ணீரின் தாக்கம் குறையாமல் மீண்டும் பூமியை நீராட்டத் தயாராய்...மரங்களின் பின்ணணியில் அணிவகுத்து!..
மலர்களுக்கு வண்ணம் தரும் கடவுளுக்குத்தான் எத்தனை அலாதியான ரசனை? மஞ்சள் என்ற ஒரே நிறத்தில்தான் எத்தனை வகைகள்? அடர்ந்த மஞ்சள், வெளுத்த மஞ்சள், சிவப்பும் மஞ்சளும் கலந்து ஆரஞ்சாய் ஆன மஞ்சள்! மலர்களில் வண்ணங்களைக் கலக்கும் அந்த வித்தையை ஒவ்வொரு மலரைக் காண்கையிலும் நான் வியக்கத் தவறுவதில்லை!
மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு..மலரிதழ் சுமந்த துளியும் அழகே! மழை வந்து தலைதுவட்டிப் போன பின்னர் எல்லா மலர்களும் உலர்ந்துவிட்டன, அந்த மஞ்சள் மலரைத் தவிர! [அது எந்த மலர் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையெனில், எனக்கு சரியாகப் படமெடுக்கத் தெரியவில்லை! ;) ]
~~~
வானம் என்ற காகிதத்தில்
மேகம் எனும் மையூற்றி,
காற்றென்னும் தூரிகையால்
கடவுள் தீட்டும் ஓவியங்கள்..
வானோவியங்கள்..
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு வண்ணம்,
ஒவ்வொரு காட்சி..
அத்தனை காட்சியிலும்
இயற்கையின் ஆட்சி!

Monday, April 9, 2012

தால் மக்னி / Dal Makhni

தேவையான பொருட்கள்
முழு உளுந்து(தோலுடன்)-1/4கப்
கடலைப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
ப்ளாக் ஐட் பீஸ்(Black eyed peas) -2 டேபிள்ஸ்பூன்
தக்காளி-4
சீரகம்-1டீஸ்பூன்
தால் மக்னி மசாலா-1டேபிள்ஸ்பூன்
(fat free)எவாப்பரேடட் மில்க் -1/4கப்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
நெய்-1டீஸ்பூன்
உப்பு

செய்முறை
பருப்புகளை அலசி 8 மணி நேரம் ஊறவிடவும்.
குக்கரில் 5 கப் தண்ணீர் கொதிக்கவிட்டு பருப்புகளைச் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
அதிகப்படியான நீரை வடித்து எடுத்துவைத்துவிட்டு பருப்புகளை மசித்துவைக்கவும்.

தக்காளிகளை மிக்ஸியில் அரைத்து எடுத்துவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு சீரகம் தாளிக்கவும்.
அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
தக்காளி நன்றாக சுண்டியதும் பருப்பு வேகவைத்த தண்ணீர், தால் மக்னி மசாலா ஒரு டேபிள்ஸ்பூன், தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இந்தக் கலவை நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மசித்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்.
தீயைக் குறைத்துக்கொண்டு கால் கப் எவாப்பரேடட் மில்க், ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
2-3 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலை தூவி தால் மக்னி-யை அடுப்பிலிருந்து இறக்கவும்.

சூடான சப்பாத்தி/ ஜீரா ரைஸ்/ புலாவ் வகைகளுடன் பரிமாற ஏற்ற சைட் டிஷ் இது. பொதுவாக உளுந்துடன் கிட்னி பீன்ஸ்தான் சேர்ப்பார்கள், என்னிடம் கிட்னி பீன்ஸ்/ராஜ்மா பீன்ஸ் இல்லாதாதால் இந்த black eyed peas சேர்த்திருக்கிறேன். இந்த ரெசிப்பி, MDH-தால் மக்னி மசாலா பேக்கட்டில் இருந்தது. விரும்பினால் எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய், எவாப்பரேடட் மில்க்கிற்கு பதிலாக ப்ரெஷ் க்ரீம், ஒரு டீஸ்பூனிற்கு பதிலாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கலாம். ;)
ரிச்சாக செய்யும் முறைதான் பேக்கட்டில் சொல்லிருக்காங்க, ஆனா நம்ம வசதிப்படி மாத்தி செய்வோம் என்று இப்படி செய்துவிட்டேன். தால் மக்னியை பரிமாறும்போது மேலாக கொஞ்சம் எவாப்பரேடட் மில்க்-ஐ ஊற்றி பரிமாறவும்.
~~~
தால் மக்னி என்றால் என் மனதில் உடனே ஒரு கொசுவர்த்தி சுத்த ஆரம்பிக்கும். இந்த படம் எங்க ஹனிமூன் ட்ரிப்பில் எடுத்தது. அப்பல்லாம் நார்த் இண்டியன் உணவுன்னாலே தலை தெறிக்க ஓடுவேன். 5 நாள் டிரிப்பில் வட இந்திய உணவு வகைகளை சாப்பிடப் பிடிக்காமல் நான் பட்ட பாடு...அதனால போகும் இடமெல்லாம் சவுத் இண்டியன் ஹோட்டல்கள் தேடி என்னவர் பட்ட பாடு!!! :))))) இந்த படத்தில கூட பாருங்க..தால் மக்னிய விட்டுட்டு தயிர்தான் சாப்பிடறேன். ஹிஹி! அப்ப இருந்து இன்று வரை தால் மக்னி-ன்னா எனக்கென்னமோ அவ்வளவா விருப்பம் கிடையாது. ஆனா என்னவர் அதுக்கு அப்படியே ஆப்போஸிட்!! தால் மக்னி ரொம்பப் புடிக்கும் அவருக்கு. அதனால் வீட்டில் செய்து பார்ப்போமே என்று முயற்சித்தது இது. பருப்பு வாங்கி மாதக்கணக்கா அப்படியே இருந்தது. மசாலா வாங்கினாலாவது(!) செய்வேனோ என்ற நப்பாசையில் அதையும் வாங்கி பலநாட்கள் கழித்து வெற்றீகரமா செய்துட்டேன். நீங்களும் செய்து பாருங்க! :)))

Wednesday, April 4, 2012

ரசித்து ருசித்தவை - 7

மற்ற வலைப்பூக்களில் இருந்து நான் ரசித்து ருசித்தவை..நீங்களும் ருசிக்க! :)
~~
1.Baked காலிஃப்ளவர் கறி - வானதியின் வலைப்பூவிலிருந்து..
சப்பாத்திக்கு ஈஸியான சுவையான பக்க உணவாக இருந்தது. கொஞ்சம் எண்ணெய் சூடாக்கி, மஞ்சள்தூளும் சேர்த்து கலக்கி அதில் காலிஃப்ளவர் பூக்களை பிரட்டி அவனில் 15 நிமிடங்கள்
bake செய்துகொள்ளவேண்டும். பிறகு சீரகம், பூண்டு தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி, மிளகாய்ப்பொடி, கரம்மசாலாபொடி, உப்பு சேர்த்து கிளறி சமைத்த காலிஃப்ளவரையும் சேர்த்து சூடாக்கி இறக்கினா அவ்வளவுதான். சுவையான சைட் டிஷ் ரெடி!
நன்றி வானதி!

2. சர்க்கரை வள்ளி - சித்ராசுந்தர் வலைப்பூவில் இருந்து..
பலநாளாக கிழங்கை குக்கரில் போடுவேன், அல்லது கிண்ணத்தில் வேகவைப்பேன். இனிப்பே இல்லாத மாதிரி இருக்கும். சித்ரா அவர்கள் வலைப்பூவில் இட்லித் தட்டில் வைத்து வேகவைக்கச் சொல்லிருந்தாங்க. ரொம்ப நல்லா வந்தது கிழங்கு.
நன்றி சித்ரா!
3.முறுக்கு - சித்ராசுந்தர் வலைப்பூவில் இருந்து..
பொங்கல் தீபாவளிக்கு செய்யும் முறுக்கை நினைவு படுத்திவிட்டாங்க பொட்டுக்கடலை மாவு முறுக்கை செய்து காட்டி...டெம்ப்ட் ஆகி நானும் கொஞ்சம் முறுக்கு செய்துட்டேன். :)
நன்றிங்க!


4.பொடி இட்லி - கிரிஜாவின் வலைப்பூவில் இருந்து..

மினி இட்லி அல்லது பெரிய இட்லியை நறுக்கி ரெடியா வைச்சுக்கணும். நல்லெண்ணெய் காயவைத்து கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கணும். வதங்கியதும், தேவையான இட்லிப்பொடியை சேர்த்து கலந்து, இட்லியையும் சேர்த்து ஒரு நிமிடம் சூடாக்கி இறக்கினா சுவையான பொடி இட்லி ரெடி!
நன்றி கிரிஜா!

5.வெஜிடபிள் ஊத்தப்பம் - மீராவின் வலைப்பூவில் இருந்து..

ஒரு கேரட், சிறு துண்டு இஞ்சி துருவி வைச்சுக்கணும். வெங்காயம்-பச்சைமிளகா-கொத்துமல்லி பொடியாக நறுக்கி வைச்சுக்கணும். ஊத்தப்பம் வார்த்து எல்லாப் பொருட்களையும் தூவி கொஞ்சம் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடணும். ஊத்தப்பத்தை திருப்பிப் போடாமல் அப்படியே எடுத்து வைத்தால் கலர்ஃபுல்லா அழகா இருக்கும்.
நன்றி மீரா!

6. வெங்காயம்-புதினா-தக்காளி சட்னி - கீதாவின் வலைப்பூவில் இருந்து..
இட்லி-தோசைக்கு சட்னி தேடுவதே ஒரு பெரிய குழப்பமா இருக்கும் எனக்கு. கீதா ஆச்சலின் ப்ளாகில் பாப்புலர் போஸ்டில் இந்த சட்னி இருந்தது. வழக்கமா செய்யும் சட்னியிலிருந்து ஒரு புதுவிதமான சட்னி.

கடுகு,உளுத்தம்பருப்பு வரமிளகாயை கொஞ்சம் எண்ணெயில் வதக்கி, அதனுடன் தேங்காய், புளி சேர்த்து நைஸா அரைச்சுக்கணும். அதனுடன் தேவையான உப்பு, வதக்கிய வெங்காயம்-தக்காளி-புதினாவை சேர்த்து ஒன்றிரண்டாக அரைச்சு எடுத்து தாளிச்சுக் கொட்டினா சட்னி ரெடி!
நன்றி கீதா!
~~
நீங்களும் செய்து ருசியுங்க..அந்தந்த வலைப்பூக்களின் இணைப்புக்கள் அங்கங்கே குடுத்திருக்கேன், அங்கே போனால் தெளிவான செய்முறை இருக்கும். நன்றி!

Sunday, April 1, 2012

சந்தைக்குப் போலாமா? :)

கோவையில் எங்க ஊரில் திங்கள் கிழமை சந்தை. அன்று பேருந்துகள் கூட்டத்தில் பிதுங்கி வழியும். திங்கள் காலை முதல் இரவு வரை சந்தைத் திடலில் கனஜோராக வியாபாரம் நடக்கும். அன்று மட்டும் ஜே-ஜேன்னு இருக்கும் இடம் மத்த 6 நாட்களும் காற்று வாங்கிக்கொண்டு கிடக்கும். நான் சிலமுறைகள் மட்டுமே சந்தைக்குப் போயிருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் நீந்தி காய்களை வாங்கிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும்னு ஆனாலும், அதுவும் ஒரு சந்தோஷம்தான்! :)

சந்தையில் கடலை-பொரியும், தேர் மிட்டாய், பீடி மிட்டாய் போன்ற மிட்டாய்களும்தான் அந்தக் காலத்தில் ரொம்ப ஃபேமஸாக இருந்தது. மேலே படத்தில் இருப்பது தேர் மிட்டாய், ஆனால் சந்தையில் வாங்கியதில்லை! மேட்டுப்பாளையம் கோயில் போயிருந்தபோது வாங்கியது.

இந்தப் பதிவில் வடஅமெரிக்காவில் காய்கள் வாங்கப்போகலாம்,வாங்க! :)
~~~
யூட்டாவில் வீட்டிலிருந்து ஒரு ரோடைக் க்ராஸ் பண்ணினால் வால்மார்ட் சூப்பர் சென்ட்டர் இருக்கும், அங்கே காய்களும் கிடைக்கும். அதனால் ரொம்ப வசதியாக இருந்தது. கலிஃபோர்னியா வந்தபொழுது இங்கே உள்ளூர் விவசாயிகள் வால்மார்ட்டை அனுமதிப்பதில்லை, விவசாயிகளிடம் வால்மார்ட் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கி மக்களுக்கு விற்பனை செய்வதாக ஒரு சர்ச்சை இருந்துகொண்டிருக்கு, அதனால் கலிஃபோர்னியாவில் மூலைக்கொன்றாக சில வால்மார்ட்கள்தான் இருக்கும், சூப்பர் சென்டர் அநேகமாக மொத்த மாநிலத்துக்கும் சேர்த்து ஒன்று இருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது!

வீடு கிடைத்து செட்டில் ஆனபொழுது, வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் வால்மார்ட் இருக்கிறதுன்னு தெரிந்தது. முதல் முறை வால்மார்ட்டில் நுழைந்ததும் ஷாக் ஆகிட்டேன்... பின்னே?? சால்ட் லேக் சிட்டில சூப்ப்ப்ப்பர் சென்டர்ல டைம்பாஸ் பண்ணிட்டு இருந்த என்னைய இப்படி ஒரு தக்குனூண்டு கடையைக் காமிச்சு, இதான் வால்மார்ட்டுன்னு சொன்னா?அவ்வ்வ்வ்வ்!! ... மனுஷங்க நடக்கவே இடம் இல்ல, கடைக்குள்ள! பொருட்களும் நிறைய சாய்ஸ் பார்த்து எடுக்க முடியாது, என்ன இருக்கோ அதான்! அக்கம் பக்கம் பதினெட்டுப் பட்டிக்கும் சேர்த்து எங்கூட்டுப் பக்கத்திலதான் வால்மார்ட்டாம்! [இதிலே ஒரு அல்ப சந்தோஷமான்னு மொறைக்காதீங்க,ப்ளீஸ்! ;) ]

ஆக மொத்தம் இங்கே ரால்ஃப்ஸ் என்ற லோக்கல் சூப்பர் மார்க்கெட்டில்தான் காய்கள் வாங்கிட்டு இருந்தோம். பக்கத்து வீட்டில் இருந்த ஒரு தோழி இந்த மிடில் ஈஸ்டர்ன் சூப்பர் மார்க்கட்டை அறிமுகப் படுத்தினார், அப்ப இருந்து இங்கேயேதான் எங்க ரெகுலர் ஷாப்பிங்.

இங்கே இந்தியப் பொருட்களுக்கும் தனியே ஒரு செக்ஷன் இருக்கிறது. எல்லாக் காய்களும் புதிதாகவும் விலை குறைவாகவும் இருக்கும். கூடவே வெண்டைக்காய், கத்தரிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சின்ன வெங்காயம், சேப்பங்கிழங்கு, கொய்யாப்பழம் போன்றவையும் இருக்கும். அவ்வப் பொழுது சீஸனல் ஐட்டங்களும் சேல் போடுவார்கள். கடந்த முறை 10 கட்டு கொத்தமல்லி இலை ஒரு டாலர், 6கட்டு புதினா ஒரு டாலர்!! மேலும் தகவலுக்கு(!) படங்களைப் பாருங்க.

நட்ஸ், பேரீட்சை மற்றும் உலர் பழவகைகளும் தரமாகவும் கிடைக்கும். பக்லவா போன்ற இனிப்பு வகைகள், மற்றும் பலவிதமான கேக்ஸ், ப்ரெட்ஸ், சாக்லேட்ஸ் என்று A-Z எல்லாப் பொருட்களும் வைத்திருப்பாங்க.
இதாங்க அந்தக் கடை.பேரிலே ஒரு எழுத்து ஆஃப் ஆகிட்டது, ஆனா கடை சூப்பர்!!:)) அப்படியே அதே ரோட்டில் இன்னும் கொஞ்சம் தூரம் போய் 3 முறை ரைட் டர்ன் எடுத்தா(!) இண்டியன் க்ரோசரி ஸ்டோர் வந்துரும். கீழே இருக்கும் படம் இந்தியன் ஸ்டோரில் காய்கள் இருக்கும் பகுதி..
வெள்ளை முள்ளங்கி தெரியுதுங்களா? ;) இந்த முறை இளநீர்-முருங்கைப் பிஞ்சு(!) எல்லாம் வைச்சிருந்தாங்க..நாம உஷாரில்ல,இதெல்லாம் வாங்கி ரிஸ்க் எடுக்கலை. ஷாப்பிங் எல்லாம் மிஷன் ரான்ச் மார்க்கெட்லயே முடிச்சிட்டு அரிசி-மளிகை-கறிவேப்பிலை மட்டும்தான் இங்கே வாங்குவது. மழை சீஸனாக இருப்பதால் இந்த முறை கறிவேப்பிலையும் சரியில்லை, நைஸா ஃபோட்டோ மட்டும் எடுத்துட்டு ஓடிவந்துட்டேன்! ;)

இந்தக் கடையில் எல்லா இந்தியன் ஸ்டோர்களையும் போலவே உணவகமும் இருக்கிறது, அங்கே பாவ்-பாஜி சூப்பரா இருக்கும்! :P அவ்வப்போது அவசரத்துக்கு இந்தியன் சாப்பாடு சாப்பிட்டுக்கலாம்னு வைங்களேன்.

இது ஒரு மாதிரிக்கு! 2 ஐட்டம் மீல்ஸ்... ரைஸ்-நாண்-2 சைட் டிஷ்- வெஜிடபிள் ஊறுகாய், சாலட், பூந்தி ரைத்தா, தெம்பாச் சாப்புட்டு, சன்னா-பட்டூராவையும் ஒரு புடி புடிச்சு சந்தைக்குப் போன களைப்பைத் தீர்த்துட்டு போங்க என்று கேட்டுக்கொள்கிறேன். :P
நன்றி!

பி.கு. ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்ந்ந்ந்ந்தவிதமான சம்பந்தமும் இல்லீங்கோ! ;)

LinkWithin

Related Posts with Thumbnails