Monday, October 31, 2011

மோத்தி லட்டு

லட்டு/மோத்தி லட்டு/மோத்தி சூர் லட்டு [Laddoo/ Moti laddoo/ Motichoor laddoo] எல்லாமே பூந்தி லட்டுகள்தான். சின்ன பூந்தி கரண்டியில பூந்தி பொரிச்சு லட்டு பிடிச்சா அது மோத்தி சூர் லட்டு, நார்மல் சைஸ் பூந்தில லட்டு செய்தா அது லட்டு..அம்புட்டுதாங்க! சாதா லட்டு மஞ்சக் கலர்ல இருக்கும்,மோத்தி லட்டு ஆரஞ்ச் கலர்ல அட்ராக்டிவா இருக்கும். திருப்பதி லட்டும் பூந்தி லட்டுதான், வெங்கடாசலபதியின் அருள் தவிர, அதுக்கு எதாச்சும் ஸ்பெஷல் ரெசிப்பி இருக்குதான்னு எனக்குத் தெரியலை! :)

பேசன் லட்டு, ரவா லட்டு,இந்த லட்டுன்னு பலவகைகள் இருந்தாலும்,என்னைப் பொறுத்தவரை லட்டுன்னா பூந்தி லட்டுதான்! ரவா லட்டுன்னு சொல்லறத விட ரவை உருண்டைன்னு சொல்லுவதுதான் எங்க வீட்டில் வழக்கம். அதனால் லட்டுன்னாலே பூந்தி லட்டுதான்.

சின்ன வயசில இருந்தே விநாயகர் கிட்ட இருக்கும் லட்டுத்தட்டு மேல எனக்கு ஒரு கண்ணு! ;) விநாயகர் படத்தை கவனிச்சுப் பார்த்தீங்கன்னா மோஸ்ட்லி எல்லாப் படங்கள்லயும் லட்டு கண்டிப்பா இருக்கும், சில படங்களில் தும்பிக்கையிலயும் லட்டை வச்சு டேஸ்ட் பண்ணிட்டும் இருப்பார்! அவரோட வாகனமான மூஞ்சூறும் கூட லட்டு சாப்பிடுவார்! :)

சாமி கும்பிடும்போதும் லட்டு ஞாபகமா?!!!! சரியான சாப்பாட்டு ராமி(ராமனுக்கு பெண்பால்..ஹிஹிஹி!) போலவே இந்தப்பொண்ணுன்னு நீங்க நினைக்கமாட்டீங்க, அவ்ளோ கெட்டவங்களா என்ன நீங்கள்லாம்? :) ;) ;)

இந்த வருஷம் தீபாவளிக்கு நிறைய ப்ளாக்ஸ்ல லட்டு ரெசிப்பி கண்ணில பட்டுது,இருந்தாலும் ட்ரை பண்ணிப்பார்க்கும் தைரியம் வரல..ரேவதியின் காரசாரம்-ல வந்த லட்டு ரெம்ப டெம்ப்ட் பண்ணிடுச்சு, கொஞ்சமா செய்துபார்ப்போம்னு ஆரம்பிச்சேன், அங்கிருந்த ரெசிப்பியவும் அப்படியே செய்யல, என் வசதிக்கேத்த மாதிரி கொஞ்சம் கொஞ்சம் மாத்தி செய்தேன். சூப்பரா வந்தது லட்டு! Thanks for the tempting snaps Reva! :)


தேவையான பொருட்கள்
பூந்திக்கு
கடலைமாவு-1கப்
அரிசிமாவு-1டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1சிட்டிகை
மஞ்சள் & சிவப்பு food colors- தலா 2 துளிகள்
தண்ணீர் -1/2கப் to 3/4கப்
எண்ணெய்

சர்க்கரைப் பாகுக்கு
சர்க்கரை -1கப்
தண்ணீர் 1 கப்

அலங்காரத்துக்கு :)
ஏலக்காய்-2
கிராம்பு-2
முந்திரி -10
திராட்சை-10
கல்கண்டு-1 டேபிள்ஸ்பூன்
நெய்-1டேபிள்ஸ்பூன்


செய்முறை
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பிசுபிசுப்பு பதம் வரும்வரை கொதிக்கவிட்டு எடுத்துவைக்கவும். ஏலக்காயைத் தட்டி பாகில் போட்டுவைக்கவும்.

முந்திரி, திராட்சை,கிராம்பு இவற்றை நெய்யில் பொரித்து எடுத்துவைக்கவும்.

கடலைமாவு,அரிசிமாவு,பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். அதனுடன் food color சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

மிதமான சூட்டில் எண்ணெயை காயவைத்து பூந்திகரண்டியில் மாவை ஊற்றவும். பூந்திகளை அதிகம் முறுகவிடாமல் எடுத்துவிடவும்.[எண்ணெயில் விழுந்த பூந்திகள் சில நொடியிலே எண்ணெய் ஓசை அடங்கி மிதக்க ஆரம்பிக்கும். உடனே எடுத்துருங்க.]

பொரித்த பூந்திகளை பேப்பர் டவலில் வைத்து எண்ணெய் வடியவைத்து எடுத்து வைக்கவும். எல்லாமாவையும் பூந்திகளாக பொரித்து எடுத்ததும், ஒரு கைப்பிடி பூந்தியை மிக்ஸியில் ஒருமுறை pulse-ல் போட்டு எடுத்து பூந்தியுடன் கலக்கவும். வறுத்த முந்திரி-திராட்சை-கிராம்பு, 2 கரண்டி சூடான சர்க்கரைப் பாகு சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து இன்னும் இரண்டு கரண்டி சூடான பாகு சேர்த்து கல்கண்டும் சேர்த்து கலந்துவைக்கவும். [முந்திரி திராட்சை சேர்க்கும்போதே கல்கண்டும் போட்டுக்கலாம், நான் மறந்துட்டேன். ;)]

மீண்டும் 5 நிமிஷங்கள் கழித்து மீதமுள்ள (சூடான) பாகு முழுவதையும் ஊற்றி கலந்து, 1/2 மணி நேரம் ஊறவிடவும். கையில் நெய் தடவிக்கொண்டு லட்டுகளாகப் பிடித்துவைக்கவும். சுவையான சூப்பர் டூப்பர் லட்டு (!) ரெடி!

என்ஜாய்!
குறிப்பு
  • பச்சைக்கற்பூரம், வெள்ளரிவிதை இதெல்லாமும் கிடைச்சால் சேர்த்துக்கோங்க.
  • சர்க்கரைப் பாகை அடுப்பிலிருந்து இறக்கியதும் ஏலக்காய் போடுங்க, ஏலக்காய் சேர்த்தபிறகு கொதிக்கவிடக்கூடாது..கொதிக்கவிட்டா ஏலம் மணம் குறைஞ்சுடுமாம்.
  • பூந்தியில் பாகை சேர்க்கும்போது பாகு ஆறியிருக்கக்கூடாது(அதுக்காக கொதிக்கக் கொதிக்கவும் ஊத்தக்கூடாது,ஹிஹி!) ஆறியிருந்தால் கொஞ்சம் சூடாக்கி ஊற்றி வைக்கவும்.
  • பேக்கிங் சோடா போடாமலே செய்தாலும் பூந்தி நல்லா வரும்னுதான் (எனக்குத்) தோணுது.[காராபூந்தி பொரிக்கும்போதெல்லாம் நான் பேக்கிங் சோடா சேர்க்காமல்தான் செய்தேன்.நன்றாகவே வந்தது.]

Saturday, October 29, 2011

தீபாவளி பலகாரம்! :)

தீபாவளி கழிஞ்சு ரெண்டு மூணு நாள் கழிச்சு நிதானமா எங்கூட்டுப் பலகாரமெல்லாம் ப்ளாகுக்கு வந்திருக்கு..அட்ஜஸ்ட் பண்ணிட்டு சாப்பிடவாங்க! :) முதல் முறையா மேத்தி லட்டு, ரோஸ் ஃப்ளேவர்ட் தேங்காய் பர்ஃபி அப்புறம் மைசூர்பாகு & அதிரசம்..

ஆரது..அதிரசத்தால மைசூர்ப்பாவ ஒடைக்கறதா இல்ல இதால அதை ஒடைக்கிறதான்னு கேக்கறது???கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இப்புடியெல்லாம் ஆராச்சும் கமென்ட் போட்டீங்க...???!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அப்பறம் ஆருக்கும் பலகாரம் கிடையாது,சொல்லிட்டேன்! ;)

காராபூந்தி - ஓமம் இல்லாத ஓமப்பொடி(!) ரெண்டும் செய்தேன்..அப்புடியே கொஞ்சம் "மானே,தேனே, பொன்மானே" (கடலை-கறிவேப்பிலை-மிளகாய்த்தூள் எக்ஸட்ரா!;)) மிக்ஸ் பண்ணி மிக்ஸராக்கிட்டேன். வட்டமா கொஞ்சம் முறுக்கு, நீளமா கொஞ்சம் முறுக்கு!

சிலபல:) நாட்களா என் லேப்டாப்பில் சிலபல:) அப்ளிகேஷன்ஸ் இன்ஸ்டால் பண்ணாம இருந்ததால் ப்ளாக் பக்கம் அதிகம் வரமுடியல! எல்லாரும் வந்து சந்தோஷமாப் பலகாரம் சாப்புடுங்கோஓஓஓஓ!
நன்றி,வணக்கம்!
:)))))))

Tuesday, October 25, 2011

தீபாவளி வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!


Tuesday, October 18, 2011

கைகள்-பயணம்-சாப்பாடு-வணக்கம்!

ஒரு வைகாசி மாதம் 11ஆம் தேதி கோவையின் ஒரு மூலையில் பிறந்த பையனும், அதற்கு சரியாக ஒரு மாதம் கழிச்சு கோவையின் இன்னொரு மூலையில் ஆனி மாதம் 11ஆம் தேதி பிறந்த பெண்ணும், சிலபல வருஷங்கள் கழித்து ஒன்று சேர்ந்திருக்காங்க..அது இந்தக் கைகள்ல தெரியுதா?! ;) :)
~~
இந்தமுறை ஊருக்குப் போனபோது, ப்ளைட்ல பொழுது போகலை என்று சொல்லமுடியாத மாதிரி பலவசதிகள் இருந்தது. [ப்ளைட் படத்தில் காக்பிட் உள்ளே, ப்ளைட் ட்ரைவரின் பளிச்-பளிச் தலை(!?!) கூடத்தெரியும், பாருங்க. ;) ] ஒவ்வொரு சீட்டுக்கும் ஒரு குட்டி என்டர்டெய்ன்மென்ட் கன்ஸோல் (வித் ரிமோட்)இருந்தது. கேம்ஸ், குழந்தைகள் படம், காமெடி படங்கள், டிவி சீரியல்ஸ் இப்படி பலவிஷயங்கள் இருந்தது. ஒரு சில ஹிந்தி-தமிழ் படங்களும் மூவி லிஸ்ட்ல இருந்தது. நல்ல டைம்பாஸ்!!

~~
இந்தக் கடைகள் துருக்கி ( Turkey) ஏர்போர்ட்டில் இருப்பவை. மத்திய கிழக்கு நாட்டு இனிப்புக்கள்,அலங்காரப் பொருட்கள் இந்தக் கடை பூராவும் இருந்தன. ஸ்வீட்ஸ் எல்லாமே ருசிபார்த்து வாங்கும்படி அங்கங்கே சிறு தட்டுகள்ல வைச்சிருந்தாங்க. கைவசம் யூரோ இல்லாததால் நாங்க வாங்கலை! [எனக்கு அந்த இனிப்பெல்லாம் அவ்வளவாப் புடிக்கவும் இல்லை,ஹிஹி]
அதே கடையின் ஒரு புறம் அலங்காரப் பொருட்கள்..இன்னொரு பக்கம் டர்கிஷ் ஐஸ்க்ரீம் கடை..ஏர்போர்ட்டில் ஆங்காங்கே இப்படி கடைகள் வைத்து இதே போல பாரம்பரிய ஆடைகளுடன் இருப்பவர்கள் ஐஸ்க்ரீம் விக்கிறாங்க.

~~

ப்ளைட்டுக்குள்ளே சாப்பாடு...இடதுமூலை ஒரு வெஜிடேரியன் டின்னர், அதற்கும் கீழே ஒருநாளின் லன்ச்.(ஒவ்வொரு முறையும் இந்த பன் வந்தது..சூடான பன்ல பட்டர் & ஜாம் தடவி சாப்பிட சூப்பர்!!:P ) பாலக் பனீர்-ஐ எல்லா ஏர்லைன்ஸும் குத்தகைக்கு எடுத்திருப்பாங்களோ என்னவோ..எந்த முறை போனாலும் இண்டியன்-வெஜிடேரியன் மீல் வந்த நேரங்களில் எல்லாம் தவறாமல் ப்ரெசென்ட் ஆனது இந்த பாலக் பனீர்!கர்ர்ர்ர்ர்ர்! :)

மேலேயுள்ள படங்கள்ல மற்ற மூன்றும் மும்பை ஏர்போர்ட்டில் இருக்கும் ஃபுட் கோர்ட். கே.எஃப்.சி. மற்றும் சில உணவகங்கள் இருந்தாலும், கூட்டம் இருந்ததென்னவோ இட்லி.காம் என்ற ஹோட்டல்லதான்!
எங்க போனாலும் நம்ம ஊர் சாப்பாட்ட அடிச்சுக்க முடியாதில்ல? போட்டோலே இருப்பது மைசூர் மசாலா தோசை, அதிகமில்லை, ரூ.170 மட்டுமே, இட்லி ஒரு ப்ளேட் 90ரூபாய் மட்டுமே! :)
~~
கதையின் ஆரம்பத்தில் சொன்ன பையன் அன்ட் பொண்ணு யாருன்னு பொழிப்புரை--தெளிவுரை எல்லாம் தேவையில்லை, நீங்களே கண்டுபுடிச்சிருப்பீங்க, கரெக்ட் ! ;) மீண்டும் அடுத்து ஒரு (மொக்கை) பதிவில் சந்திப்போம், அதுவரைக்கும் நன்றி, வணக்கம்!

பி.கு.: இப்புடி ஒரு மொக்கை போஸ்ட்டுக்கு டைட்டில் என்ன வைக்கறதுன்னு மண்டைக்குள்ளே பல்ப் எரியாத காரணத்தால், தற்போதைக்கு இப்புடி ஒரு டைட்டில் வைக்கப்படுகிறது. வாசகர்கள் தரும் டைட்டில்கள் வரவேற்கப்படுகின்றன. எல்லாரும் உங்க கற்பனைத்திறனை வாரிக் கொட்டுங்க..சிறந்த தலைப்பை எப்படியாவது(!) தேர்ந்தெடுத்திரலாம், ஓக்கை?

Tuesday, October 11, 2011

ஆவியின் நடனம்!

இந்த ஆவி-பூதம்-பேய்-பிசாசு இதிலெல்லாம் எனக்கு அவ்வளவா நம்பிக்கையில்லைன்னு சொல்லிகிட்டாலும் கொஞ்சம் பயம் உண்டு. (நம்பிக்கை வேற, பயம் வேற...என்னங் நாஞ்சொல்லறது? கரெக்ட்டுதானுங்க?!!) என்னதான் தைரியமா இருக்கற மாதிரி காட்டிகிட்டாலும் ஒரு உதறல் இருக்கத்தானே செய்யும்? டிவி-ல வர பேய்ப்படமெல்லாம் கூட நான் பார்க்கமாட்டேன். சாந்தமான படங்கள் மட்டுமே பார்க்கும் ஒரு சாந்தசொரூபி (ஹிஹி,மீ ஒன்லி,நோ டவுட்,ஓக்கை?!) முதல்முறையாக ஒரு நேரடியாக ஆவி ஆடிய டான்ஸைப் பார்த்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிகிட்டு படிக்க ஆரம்பிங்க! :)


இந்த (நீர்)ஆவியின் டான்ஸை முதல்முறை பார்த்ததும் வெலவெலத்துப் போயிட்டேன். என்ன ஒரு ஆட்டம்ங்கறீங்க?? அப்படி ஒரு வேகம், சத்தம் வேற பலமா வந்துது!!! அப்ப வீட்டுல நான் மட்டுந்தான் இருந்தேனா.. என்ன பண்ணறதுன்னும் தெரில! இவருக்கு போன் பண்ணி சொன்னாலும் வீடு வந்து சேர அரை மணி நேரமாவது ஆகும். அதுவரைக்கும் இந்த டான்ஸைப் பார்த்து என்ன செய்யறதுன்னு நினைச்சதுல ப்ளட்ப்ரஷரே எகிறிடுச்சுன்னா பாருங்களேன்!!!

நாளாக ஆக, டான்ஸ் பழகிப்போச்சு..இப்பல்லாம் (நீர்)ஆவி என்ன சத்தம் போட்டு டான்ஸ் ஆடினாலும் நான் பயப்படறதில்லை..பழகப்பழக பாலும் புளிக்கும்ணு ஒரு பழமொழி சொல்லுவாங்களே,அது மாதிரிதான் ஆகிப்போச்சு நிலைம!! பாருங்க, அந்த (நீர்)ஆவியின் நடனத்தை உங்க எல்லாருக்கும் காட்டோணும்னு வீடியோ எடுத்து இங்கே போஸ்ட் பண்ணற அளவுக்கு தைரியசாலி ஆகிட்டேன்!!சரி, சரி..ஓக்கே!!கூல் டவுன்!!! இதுக்கே இம்புட்டு டென்ஷன் ஆனீங்கன்னா எப்புடி? வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா! டேக் இட் ஈஸி...எதோ டெரர் ஸ்டோரின்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சு ஏமாந்து போயிட்டீங்க??! ;) ஹிஹிஹி..நான் எழுதின இடத்தில எல்லாம் (நீர்)ஆவின்னுதான் எழுதிருக்கேன். ஹைலைட் பண்ணிப் படிக்கற டெக்னிக் எல்லாம் தெரிஞ்சுக்காம நீங்களும் அப்பாவியா இருந்தா ரெம்ப கஷ்டம்! என்னை மாதிரி ஒரு சிலர் உங்க தலைல நல்லா மொளகா அரைச்சிருவோம்;) ;) ... ஜாக்ரதை!!! :)

மொளகான்னதும்தான் ஞாபகம் வருது, இந்தாங்க,சுடச்சுட மொளகா பஜ்ஜி..சாப்புட்டு வாங்க!! கொஞ்சம் ஸீரியஸா பேசலாம்.

ஸீரியஸாப் பேசலாம்னு சொன்னதுக்காக அட்டென்ஷன்ல எல்லாம் நின்னுட்டு படிக்கவேணாம், உட்கார்ந்தே படிங்க! :)

குக்கர் இட்லி சாப்பிட்டு போரடிச்சுப் போனதால ஊர்ல இருந்து இட்லிச்சட்டி வாங்கிட்டு வரலாம்ணு நினைச்சிருந்தேன். இதுவரை போட்ட போட்டோஸ்ல என்னோட கிச்சனை உத்துப் பார்த்திருந்தீங்கன்னா, நான் யூஸ் பண்ணறது செராமிக் குக் டாப்-னு கண்டுபிடிச்சிருப்பீங்க. எங்களுக்கெல்லாம் வேலைவெட்டி அதிகம், அதெல்லாம் பார்க்க நேரமில்லைன்னாலும் இப்ப சொல்லிட்டேன்! ;))))))))

பாத்திரக்கடைல கேட்டப்ப, "அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க..இன்டக்ஷன் அடுப்பிலயே வைக்கலாம், நம்பி வாங்குங்க"ன்னாங்களா.. வாங்கிட்டு வந்தாச்சு! பொழப்புக்கெட்டு வால்மார்ட்டுக்கு ஒரு நடை போயி 100% காட்டன் துணியாப் பார்த்து ஒரு அடி ( அடிதடியில்லீங்க..one yard) வாங்கிட்டு வந்து தட்டுக்கு அளவெடுத்து துணியக் கட் பண்ணி, ஒரு சுபயோக சுபதினத்தில இட்லிச் சட்டிய அடுப்பில வச்சேன்,அம்புட்டுதான்! டான்ஸிங் ஆரம்பிச்சிருச்சு. வெறும் தண்ணி இருக்கறதாலதான் பேலன்ஸ் இல்லாம ஆடுது, இட்லிமாவை ஊத்தி தட்டை வைச்சா சரியாகிரும்ணு பார்த்தேன்..ம்ஹும், அப்பவும் டான்ஸ் நிக்கவே இல்ல!

இருந்தாலும் இந்த ஆவிக்கெல்லாம் பயப்பட்டா ஆகுமா? எடுத்த முயற்சியெல்லாம் வீணாகக் கூடாதுன்னு தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மாதிரி அப்பப்ப இட்லிச்சட்டிலதான் இட்லி சுடறேன்..என்னதான் டான்ஸ் ஆடினாலும், இட்லி ஓரளவு சுமாரா வருது.
சரி, மொக்கைய போட்டுத் தாக்கியாச்சு, உபயோகமா ஒரு தகவலாவது சொல்லலைன்னா ப்ளாகர்(ஸ்) ஆவி வந்து அடிச்சிருமோன்னு பயம்மா இருக்கறதால அடுத்து ஒரு டிப்ஸ்!! புதுசா எவர்சில்வர் பாத்திரம் வாங்கும்போது அதிலே ஒட்டியிருக்க ஸ்டிக்கரை எடுக்கறது ஒரு நச்சுப்பிடிச்ச வேலை..அத ஈஸியா எடுக்கறதுக்கு ஒரு டெக்னிக் எங்க அக்கா சொல்லிக்குடுத்தாங்க.

அது என்னன்னா, புதுப் பாத்திரங்களை கொஞ்சம் சூடுபண்ணினா, (ரொம்ப சூடு பண்ணிராதீங்க, அதே மாதிரி காலிப் பாத்திரத்தை சூடு பண்ணனும்..தண்ணி கிண்ணி ஊத்தி கழுவறதுக்கெல்லாம் முன்னாலயே சூடு பண்ணுங்க) அந்த ஸ்டிக்கர்ல இருக்க கம் இளகி வரும், அப்ப ஸ்டிக்கரை உரிச்சா வம்பு பண்ணாம முழுசா வந்துரும். சூடா இருக்கும்போதே ஒரு துணி வைச்சு துடைச்சா கம் இருந்த இடத்திலிருக்கும் பசையும் கூட க்ளீனா வந்துரும்.

இந்த டெக்னிக் வேலை செய்யும்ங்கறதுக்கு நானே கேரண்டி..இந்தப் பாத்திரங்களைப் பாருங்களேன்,எவ்வளவு க்ளீனா வந்திருச்சு ஸ்டிக்கர் எல்லாம்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,நன்றி,வணக்கம்! :))))))))

Friday, October 7, 2011

மலரும் நினைவுகள்...

ஆயுதபூஜை,விஜயதசமின்னாலே என் நினைவுக்கு வருவது செவ்வந்திப் பூ! மஞ்சள் செவ்வந்தி சீஸனாக இருக்கும், எங்கே பார்த்தாலும் பூக்கடைகள் எல்லாப்பக்கமும் செவ்வந்தியா இருக்கும். ஆயுதபூஜைக்கு பூ மார்க்கெட்ல இருந்து செவ்வந்திப் பூக்கள் வாங்கிவந்து நெருக்கமா கட்டி வீட்டில் இருக்கும் சாமிபடங்களுக்கு போடுவோம். மஞ்சள் செவ்வந்திப் பூவுக்கும், சிவப்பு குங்குமத்துக்கும் கான்ட்ராஸ்ட் சூப்பரா இருக்கும். அழகா இருக்க பூக்களா செலக்ட் பண்ணி பூவின் நடுவில் குங்குமம் வைத்து தலையில் வைச்சுக்குவோம்!:)

வீடு முழுக்க சுத்தம் செய்து, கதவு ஜன்னல் டிவி மிக்ஸி க்ரைண்டர் gas அடுப்பு முதற்கொண்டு எல்லாத்தையும் துடைத்து திருநீறு-சந்தனம்-குங்குமம் வைப்போம். சாமிபடங்கள், புத்தகங்கள், பேனா, கால்குலேட்டர், அக்காவின் சிவில் ட்ராயிங் உபகரணங்கள் எல்லாம் பொட்டு-திருநீறு வைத்து, சுண்டல்,கடலை-பொரி, பழங்கள் எல்லாம் படைத்து, அண்டை அயலார் எல்லாரையும் அழைத்து தேங்காய் உடைத்து சாமி கும்பிடுவோம்.

சுற்றிலும் இருக்கும் வீடுகள், டெய்லர் கடை, மளிகைக்கடை, ஹோட்டல், ஜெராக்ஸ் கடைகள் என்று எல்லாம் ஒரு ரவுண்டு போய் சாமி கும்பிட்டுவிட்டு, சுண்டல்-பொரி-பழங்கள் வாங்கி வருவோம். வீடுகளை விட கடைகளில்தான் அலங்காரம் நிறைய செய்திருப்பாங்க, 2-3 வெரைட்டி சுண்டலும் கிடைக்கும்! :) மற்றபடி 9 நாள் கொலு- எல்லா நாளும் சுண்டல் இதெல்லாம் எனக்கு நினைவு தெரிந்து புத்தகங்களில் படித்து தெரிந்துகொண்டதுதான்.

திருமணம் முடிந்து முதல் நவராத்திரி பெங்களூர்ல வந்தது. :) அப்பொழுது பக்கத்து வீட்டில் ஒரு தோழி கொலு வைத்திருந்தாங்க, அவங்க குட்டிப் பெண் தினமும் ஒரு மேக் அப்பில் வந்து கொலுவுக்கு அழைப்பா. நானும் போய் (பாட்டெல்லாம் பாடச்சொல்ல மாட்டாங்க! ;)) சுண்டல் சாப்ட்டு தாம்பூலம் வாங்கிவருவேன். அடுத்தவருஷம் பாஸ்டனில் ஆயுதபூஜை கொண்டாடினோம்..அதன்பின்னர் உப்பேரிபாளையத்தில் கணேஷ் டெம்பிளில் கொலுவுக்கு போன நினைவிருக்கு. போனவருஷம் இங்கே வந்தாச்சு.

இப்படி மலரும் நினைவுகளை அசைபோட்டுட்டு இந்த வருஷம் சரஸ்வதி பூஜை அன்று சாமி கும்பிட்டுட்டு கோயிலுக்கு போலாம்னு ப்ளானெல்லாம் பலமா பண்ணினோம்..ஆனா வருணபகவான் என்ன நினைச்சாரோ தெரில, செவ்வாய்-புதன் ரெண்டு நாளும் இங்கே நாள்பூரா மழை..ஒரு வேலையும் செய்யாமல் இழுத்துப் போர்த்திப் படுத்துக்கலாம் போல சரியான குளிர்! பக்கத்திலிருந்த நண்பர் குடும்பம் கூட வீட்டுக்கு வரமுடியலை. பாருங்க, எங்கூர் மழை எப்படி வந்திருக்குன்னு..

எல்லாப் பக்கமும் வரமாதிரி வானத்தில இருந்து பூமிக்குத்தானே மழை வந்திருக்கு..இவங்க ஊர் மழையென்னமோ உல்டாவா வந்தமாதிரி பில்ட்-அப் குடுக்கறாங்களேன்னெல்லாம் கோக்குமாக்கா யோசிக்கப்படாது..மழையிலயும்,குளிர்லயும் நடுங்கிட்டே நான் போட்டோ எடுத்ததுக்காகவாவது எல்லாரும் ரசிச்சுப்(!) பார்க்கோணும்,ஓக்கை?:))))))))))

சாமிக்கு வைக்க பூக்கள் நான் வளர்த்த தொட்டிச்செடிகள்ல இருந்து பறிச்சேன். நம்ம வீட்டு செடியில இருக்க பூக்களைப் பார்த்தாலே மனசுக்கு ஒரு சந்தோஷம்தான்!! மஞ்சள் செவ்வந்தி இல்லைன்னாலும் வெள்ளைச்செவ்வந்தியாவது இருந்தது. ஒரு மாசம் நான் இல்லைன்னாலும் பக்கத்துவீட்டுக்காரர் கவனிப்பில் செடிகள் பூத்திருந்தது. அழகாய் பூத்திருக்கா?:)

குளிரடிச்சாலும் பரவால்லை(!!?!!) , கோயில் போலைன்னாலும் பரவால்லைன்னு மனசத் தேத்திகிட்டு புதன்கிழமை சாயந்தரம் 4 மணிக்கு மேல 5.30 மணிக்குள்ளே நான் இதெல்லாம் செய்தேன்..கரெக்ட்டா என்னவரும் வந்தார், ஆயுதமெல்லாம்(!):) வைச்சு சாமி கும்பிட்டு இந்தப்பக்கம் திரும்பறதுக்குள்ளே பூஜைல வைச்சிருந்த ஐபேட் எங்கவீட்டய்யா கைல இருக்கு!! எ.கொ.ச..?!!! பூஜைல வைச்சா அடுத்தநாள் காலைல மறுபூஜை பண்ணி புக்ஸ்-ஐ எடுத்த காலமெல்லாம் மனக்கண்ணில் ஓடுச்சு! ஹும்,என்ன செய்ய..காலம் மாறிப்போச்சு போங்க! :) :)

போட்டோவைப் பார்த்தாலே என்னென்னனு தெரியுது, அதுக்கப்பறம் எதுக்கு ச.பொங்கல், வெ.பொங்கல், சுண்டல் இப்படின்னெல்லாம் எழுதிருக்குன்னு நீங்க திங்க் பண்ணுவீங்க..

(என்னது, பண்ணலயா?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இப்பவாவது பண்ணுங்க.....................................................................
.................................................
...........................................
..............................
.....................
.............
.....
...ஹும், (திங்க்) பண்ணியாச்சா?!!! அது எதுக்குன்னா...போட்டோலே பேர் அடிக்க(!) போனப்ப பை மிஸ்டேக் தமிழ்ல வந்தது..தமிழ் எழுத்துக்கள் அழகா இருந்ததால் இப்புடி எழுதிட்டேன்,ஹிஹிஹிஹி!!!! (இப்ப யாரோ என்னை அடிக்க வரமாதிரி இருக்கு...அதுக்குள்ள எஸ்கேப் ஆகிடறேன்.)

நைவேத்யம் சூப்பரா இருந்ததுன்னு லக்ஷ்மி-சரஸ்வதி-பார்வதி மூணு பேருமே சொல்லிட்டாங்க! :) நீங்களும் சாப்ட்டுப் பார்த்து சொல்லுங்க! ஹேப்பி வீகெண்ட் எவ்ரிபடி!

Tuesday, October 4, 2011

சுண்டக்காய் வத்தக்குழம்பு

கசப்பான குழம்புன்னு டைட்டிலை வைச்சுட்டு இனிப்பு படம் வந்திருக்கேன்னு எல்லாரையும் கொஞ்சம் குழப்பணும்ல? ஒரு சிலர், இது குலோப்:) ஜாமூன் இல்லையோ, சுண்டக்காய்தானோன்னு கூட குழம்புவீங்க,கரெக்ட்டுத்தானே? ;)

என்ன பண்ணறதுngka?..என் லேப்டாப்புக்கு மண்டை குழம்பினதுல இருந்து அது இப்புடித்தான் எடக்கு மடக்கா எதாச்சும் செய்யுது! tamil software install panninaalum, tamilla type pannarathu english-lathaan varuthu. athuvaa ninaichaa tamil-a varuthu! en nilamai eppadi aakiduchunnu paarunga!! இல்லாட்டி என்னைய மாதிரி ஒரு நல்ல பொண்ணு இந்தமாதிரி எல்லாம் எழுதாதுன்னு உங்களுக்கே தெரியும். ஹிஹி!

சில வருஷங்களுக்கு முன்பு வரை எனக்கு இந்த சுண்டைக்காய் வத்தல்-மணத்தக்காளி வத்தல் இப்புடி வத்தலெல்லாம் புடிக்கவே புடிக்காது. பச்சை சுண்டைக்காய்-ல வைக்கிற குழம்புதான் புடிக்கும். எங்கயாவது கல்யாண வீடுகள்ல மத்யானம் விருந்து சாப்பாட்டில வத்தக்குழம்பு இருந்தா சாப்பிடறதோட சரி. வீட்டுல வத்தல் வாங்கற வழக்கமே இல்ல. போன வருஷம் inge பக்கத்தில இருந்த ஒரு தோழி இந்த குழம்பை ஞாபகப் படுத்தினதுல இருந்து நானும் போற வர இண்டியன் ஸ்டோர்ல எல்லாம் வத்தலைத் தேடித் தேடி தேய்ந்ததுதான்(!?) மிச்சம், எங்கயுமே கிடைக்கலை! ஸோ, ஊர்ல இருந்து வரப்ப மசாலா பெட்டில 2-3 பாக்கெட் வத்தலா வாங்கிப் போட்டு, மறக்காம வத்தக்கொழம்பு பொடியும் வாங்கிப் போட்டுட்டு வந்தேன். கொழம்பும் வைச்சு ஒரு புடி புடிச்சாச்சு! சும்மா சொல்லக்கூடாது,குழம்பு சூஊஊஊஊப்பர் டேஸ்ட்டு! :P:P
~~~~

தேவையான பொருட்கள்
சுண்டக்காய் வத்தல்-ஒரு கைப்பிடி
வெங்காயம்-1
தக்காளி-2
புளிக்கரைசல்-1/4கப்
வத்தக்குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கொத்து
தேங்காய் - 1/4மூடி
உப்பு
நல்லெண்ணெய்

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும், தக்காளியை நறுக்கி புளிக்கரைசலுடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.தேங்காயை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, சுண்டைக்காய் வற்றலை சேர்த்து பொரிக்கவும்.

வற்றல் பொரிந்ததும் வெங்காயம்-கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

கரைத்து வைத்த புளி-தக்காளி கரைசல், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் தேங்காய் விழுது, வத்தக்குழம்பு பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து இறக்கினா
காரசாரமான சுண்டக்காய் வத்தக் குழம்பு ரெடி!

BTW, இந்த ரெசிப்பி வத்தகொழம்பு பாக்கெட் பின்னாடி இருந்தது, அதை அப்புடியே ஃபாலோ பண்ணிருக்கேன், போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் சக்தி மசாலாவுக்கே! ;) ;) ;)


சூடான சாதம்-வத்தக்குழம்பு-பீர்க்கங்காய் பொரியல்-ரசம்! இந்தக் காம்பினேஷன் சூப்பரா இருந்தது, செஞ்சுபாருங்க.
~~~
அப்புறம் இன்னொரு விஷயம் என்னன்னா எங்க கம்ப்யூட்டர்ல புடிச்ச வைரஸ சரி பண்ணியாச்சு, ஆனா ubuntu-ல இன்ஸ்டால் பண்ணிருக்க தமிழ் ஸாஃப்ட்வேர்ல இன்னும் பக்ஸ் (bugs) இருக்குதாம், நேரம் கிடைக்கைல மறுபடி இன்ஸ்டால் பண்ணித் தாறேன்னு எங்கூட்டுக்காரர் சொல்லிருக்கிறாரு, அதுவரைக்கும் என் தமிழ் கொஞ்சம் தடுமாறும், அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, ஓக்கை?

oorukku poyittu vanthu வெறும் சிப்ஸும் டீயும் காட்டி ஏமாத்திட்டீங்களேன்னு காதில் புகை விடறவங்க:) உட்பட, எல்லாருக்கும் முதல் படத்தில இருக்க கோவை ஸ்பெஷல் குலாப் ஜாமூன்!! கூல் டவுன் aakirungka, nanri!

LinkWithin

Related Posts with Thumbnails