Monday, January 30, 2012

ஏழு காய் சாம்பார்

பொங்கல் குழம்பு/ திருவாதிரை கூட்டு/ 7 கறி குழம்பு/கதம்ப சாம்பார் இப்படி பலபேரில் திருவாதிரை சீஸன்ல இருந்து அங்கங்கே வலைப்பூக்களில் வந்த ரெசிப்பிகளைப் பார்த்து நாமும் செய்து பார்ப்போமேன்னு நிதானமா(!) இப்பச் செய்துபார்த்தேன். :)
தேவையான பொருட்கள்

நறுக்கிய காய்கள் -1 கப் (அ) 11/2 கப்
துவரம் பருப்பு -1/4 கப் (தேவையான நீர், மஞ்சள்தூள் சேர்த்து வேகவைச்சுக்குங்க)
புளிக்கரைசல்-1/4கப்
மஞ்சள்த்தூள் -1/8டீஸ்பூன்
வறுத்து பொடிக்க
சீரகம்-1டீஸ்பூன்
மிளகு-1டீஸ்பூன்
தனியா-1டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-3 (அ) 4
கடலைப்பருப்பு-1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் -1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க
எண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து

செய்முறை (படங்களில் இருக்கும் நம்பருக்கு ஏற்ற வரிசையில் ரெசிப்பியும் இருக்கு. கரெக்ட்டாப் படங்களைப் பார்த்துக்கலாம். :) )

1.வறுக்க வேண்டிய பொருட்களை துளி எண்ணெயில் கருகாமல் வறுத்து, ஆறவிட்டு..

2. மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

3.காய்களை ஒரே அளவில் இருக்குமாறு நறுக்கி பாத்திரத்தில் போட்டு, மஞ்சள்தூளுடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

4.காய்கள் வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்க்கவும்.

5.வெந்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

6.குழம்பு கொதிவந்ததும் மசாலாப் பொடியைச் சேர்த்து, தேவையான அளவுக்கு தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.

7. ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து இறக்கவும்.

8.தாளிப்புகரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம்,கறிவேப்பிலை,வரமிளகாய் தாளித்து குழம்பில் ஊற்றவும். காரசாரமான கமகம சாம்பார்/ 7 கறி கூட்டு ரெடி! :)

பொங்கல் முடிந்து பலநாள் கழிச்சு இந்தக் குழம்பை செய்ததால் பொங்கலுடன் சாப்பிடவில்லை, ஓட்ஸ்+கோதுமைமாவு தோசையுடன் சாப்பிடுங்க. :)

ஏழு காயிலே குழம்பு செய்யணும்னு முடிவு செய்துட்டேன்,ஆனா (முதல் படத்திலே) பாருங்க...
1.அரசாணிக்காய்(மஞ்சள் பூசணி/பரங்கி)
2.ப்ரோக்கலி
3.உருளை
4.கேரட்
5.பட்டாணி
6.பீன்ஸ்
....ஆஹா ஆறு காய்தானே இருக்குது?? இன்னொரு காயும் வேணுமில்ல?? ஃப்ரிட்ஜை குடைஞ்சதில மாட்டினது முட்டைக்கோஸ்,அதையும் கொஞ்சம் எடுத்து கழுவி நறுக்கி போட்டா ஏழு காய் ஆகிருச்சு! :)

ப்ரோக்கலியும் முட்டைக்கோஸும் பட்டாணியும் சாம்பார்ல போடறதான்னு புருவத்தை உயர்த்தறீங்களா?? ஹிஹிஹி..என்ன செய்ய? ஃப்ரோஸன் முருங்கை இருந்தது,ஆனா அதை தனியா வேகவிட்டு சேர்க்க பொறுமை இல்ல, அதுவும் இல்லாம அப்பவும் காய் குறையும்ல? இந்தக் கூட்டுக்கு முக்கியமான காய் பரங்கி/அரசாணி...அது இருந்தது. இருந்த காய்களைச் சேர்த்து 7-ங்கற லக்கி நம்பரை மிஸ் பண்ணிரக்கூடாதேன்னு அஜீஸ்;) பண்ணிகிட்டேன். இன்னொரு காமெடி என்னாச்சுன்னா சாம்பார்ல ப்ரோக்கலி + அரசாணிக்காய் ரெண்டுமே கரைஞ்சு(!) போயிருச்சு..ஹிஹி!!! நீங்க பார்த்து கரெக்ட்டா வேகவிடுங்க,சரியா? ;)
~~~
சாம்பாருக்கு போட்டது போக மீதியிருந்த பரங்கிக்காயில் ஒரு மதியம் பத்து நிமிஷத்திலே இந்த தயிர்குழம்பு செய்தேன். ரெசிப்பி ப்ராப்பரா பார்க்கணும்னா இங்கே இருக்கு..

ஷார்ட்கட்ல போனம்னா, "அரசாணிக்காயை கொஞ்சமா தண்ணி, தேவைக்கு உப்பு சேர்த்து வேகவிடணும். சிறு துண்டு இஞ்சி,ஒரு பச்சைமிளகா சேர்த்து ஒரு கப் தயிருடன் சேர்த்து மிக்ஸில அரைச்சு, காயில சேர்த்து லோ ஹீட்ல ஒரு கொதி விடணும். கடுகு , சீரகம், ஒரு வரமிளகா தாளிச்சு கொட்டினா சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு சூப்பர் குழம்பு ரெடி! :) " Thanks to Faseela for the quick n easy recipe!
~~~
இது இங்கே கிடைக்கும் அரசாணிக்காய்/பரங்கிக்காய்/pumpkin..

இன்னொரு வியூ...
இது கூகுளாரின் இமேஜஸ்..முழுக்காய்!!
படம் கேட்ட ஆட்கள் காமெடி கீமெடி(!) பண்ணாம சீரியஸாக் கேட்டிருக்கிறீங்கள் என்ற நம்பிக்கையில் படங்கள் இணைத்திருக்கிறேன். :) ;)

Wednesday, January 25, 2012

ஒற்றைக்கால் பூக்கள்..

இந்த வருடம் வசந்தம் கொஞ்சூண்டு சீக்கிரமாகவே வந்துவிட்டது. டிசம்பர் மாத இறுதியில் புதுச்செடிகள் நடப்பட்டு, ஜனவரியில் பாதி கடக்கும்போதே புதுப்பூக்கள் தலையாட்ட ஆரம்பித்துவிட்டன. கடவுள் 2012-ன் வசந்தத்தை கொஞ்சம் ஃபாஸ்ட்ஃபார்வர்ட் செய்துவிட்டார் போலும்!! ;) ;)

கடந்த வாரம் ஒரு மாலை இளவெயில் நேரத்தில் என் கேமராவில் சிறைப்பிடித்த மலர்க்கூட்டங்கள்,உங்கள் பார்வைக்கு! :)

பிக்காஸாவில் ஸ்லைட்ஷோவையே embed செய்யும் வசதி கண்ணில் பட்டதால் சேர்த்திருக்கிறேன். பாருங்க..பார்த்து முடிச்சதும் கொஞ்சம் டீடெய்லாப் பூக்களை ரசிப்போம்.

நடுவில் ஒரு ப்ரவுன் நிற புல்வகைச் செடி, இருபுறமும் பாப்பி, ரனன்குலஸ் இரண்டு செடிகளும் கலந்து நட்டிருக்கிறார்கள். அடுத்து பசும்புல்லை நட்டு ப்ரிம்ரோஸ் செடிகளால் எல்லை கட்டியிருக்கிறார்கள் இந்த முறை..

ரனன்குலஸ் செடிகள் இன்னும் சிறிய நாற்றுக்களாய் இருக்கின்றன, பாப்பி செடிகள்தான் கிடுகிடுவென்று உயர்ந்த பூக்களால் பளீரென்று சிரிக்கின்றன..
அந்தி வெயிலின் இதமான மஞ்சள் நிறம் பூக்களில் படிந்து சாதாரண காட்சிகளையும் அருமையான வண்ணக்கலவையாய் மாற்றி கண்களுக்கு விருந்தளிக்கின்றது..இது எங்க வீட்டுத் தொட்டிச் செடிகள். வெள்ளை செவ்வந்தி..குளிருக்கு எல்லாத் தண்டுகளையும் பூச்சி பிடித்து, வெட்டிவிட்டிருந்தேன், ஒரு பூ மட்டிலும் ஆரோக்கியமாய்ப் பூத்துவிட்டது. :)

மேரிகோல்ட் செடியில் குட்டிக்குட்டி மலர்கள்தான், பக்கத்தால போய் :) போட்டோ எடுத்ததால் பெரிய பூக்களாய்த் தெரியுது. படங்களைப் பார்த்ததுமே என்னவர் "உனக்குன்னு இந்த மஞ்சள்ப்பூக்கள் எங்கிருந்துதான் வாய்க்குமோ?"என்று செல்லமாய் அலுத்துக்கொண்டார்.:))))))

நான் என்னங்க செய்யட்டும்..அதுதான் இருக்குது,நான் போட்டோ புடிச்சிருக்கேன்..வேறகலர் பூ இருந்தா நான் எடுக்கமாட்டேனா என்ன? ;)

Monday, January 23, 2012

வறுவல் & பொரியல்

சேப்பங்கிழங்கு வறுவல் & முட்டைக்கோஸ் பொரியல்

சேப்பங்கிழங்கு வறுவல்-தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு -5 (Taro root /Arbi/colocasia root)
சாம்பார் பொடி-1டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்-2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
சேப்பங்கிழங்கை குழையாமல் வேகவைத்து எடுக்கவும். (மேலே படத்திலிருப்பது வெந்த கிழங்குதான். :))
கிழங்கை தோலுரித்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி கிழங்கை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
கிழங்கு கருகாமல்,உடையாமல், அவ்வப்போது துளித்துளி எண்ணெய் விட்டு நன்றாக முறுகலாகும் வரை வறுக்கவும். (நான்-ஸ்டிக் பாத்திரமா இருந்தா வேலை சுலபம்)
சாம்பார்ப்பொடி, உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி!
~~ ~~00O00~~ ~~

முட்டைக்கோஸ் பொரியல்-தேவையான பொருட்கள்
நறுக்கிய முட்டைக்கோஸ்-11/2கப்
வெங்காயம்(சிறியது)-1
பச்சைமிளகாய்-2
வரமிளகாய்-1
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு-1டீஸ்பூன்
உ.பருப்பு-1டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

செய்முறை
கோஸை கழுவி பொடியாக நறுக்கிவைக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிவைக்கவும்.
ஒரு மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் முட்டைக்கோஸுடன் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து 3 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்யவும். ஒரு நிமிடம் கழித்து கோஸை வெளியே எடுத்து தேவையான உப்பு சேர்த்து கலந்து மீண்டும் 30நொடிகள் மைக்ரோவேவில் வைத்து எடுக்கவும்.
(இட்லிப்பாத்திரத்தில் வைத்து 3நிமிடம் ஆவியில் வேகவிட்டும் எடுக்கலாம்.)
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு, க.பருப்பு,உ.பருப்பு தாளித்து வெங்காயம்-பச்சைமிளகாய், கிள்ளிய வரமிளகாய் போட்டு வதக்கவும். (ஒரு துளி உப்பும் சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கிடும்,ஆனா ஜாக்கிரதை, கோஸுல ஏற்கனவே உப்பு போட்டிருக்கீங்க, அதை மறந்து இங்கேயும் உப்பை அள்ளிப் போட்டுரக்கூடாது. ;) )
வெங்காயம் வதங்கியதும் வெந்த கோஸைச் சேர்த்து பிரட்டி..
தேங்காய்த் துருவல் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான முட்டைக்கோஸ் பொரியல் ரெடி!

~~~~ ~~~~ ~~***~~ ~~~~ ~~~~
சமர்த்தா சமையல் குறிப்பை மட்டும் போட்டுட்டுப் போலாம்னு நினைச்சேன், ஆனா பாருங்க, கை துறுதுறுங்குது..வழக்கம் போல மேலதிகத் தகவல்கள் தொடர்கிறது!
டொட்டொடொய்ங்க்!
:)))))
~~~~ ~~~~ ~~***~~ ~~~~ ~~~
சேப்பங்கிழங்கு வாங்கும்போது ப்ரெஷாக இருக்கும் கிழங்காகப் பார்த்து வாங்கணும்னு என் தோழி ஒருவர் சொன்னாங்க..அவிங்க சொன்ன ரெசிப்பிதான் மேலே இருக்கும் சிம்பிள் வறுவல். அதெப்படிங்க அது ப்ரெஷா இருக்குன்னு கண்டுபிடிக்கன்னு கேட்டேன், கிழங்கை கையில் எடுத்துப் பார்த்தா கொஞ்சம் ஈரமா சில்லுன்னு இருக்கணுமாம்,அப்பதான் ப்ரெஷ் கிழங்காம். காய்ஞ்சு போயிருந்தா ருசி நல்லாருக்காது,வாங்காதீங்கன்னாக..உங்களுக்கும் சொல்லிட்டேன். :)

சேப்பங்கிழங்கை குழையாமல் வேகவைக்க குக்கரில் தண்ணீர் கொதி வந்ததும் கிழங்கைச் சேர்த்து 3-4 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடுங்க.(அடுப்பை ஆஃப் பண்ணிட்டு அப்படியே விட்டுரக்கூடாது.கர்ர்ர்ர்ர்ர்! ;))
இட்லித்தட்டில் வைத்து 15நிமிஷம் வேகவைக்கலாம்னு லஷ்மிம்மா சொல்லிருக்காங்க. அதையும் ட்ரை பண்ணிப் பாருங்க..அல்லது பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவிட்டு வேகவைக்கலாம்.
****
எந்தக் காய்கறியாய் இருந்தாலும் அளவுக்கு மீறி வேகவைத்தால் அதிலிருக்கும் சத்துகள் வீணாப்போகும் என்பது எல்லாருக்கும் தெரியும்,அட எனக்கும்தாங்க தெரியும்.;) ஆனா பாருங்க, முன்பெல்லாம் தண்ணீரை காய் மூழ்குமளவு ஊத்தி வேஏஏஏஏகவிட்டுடுவேன்,மாவு போல வெந்துரும். :) என்னவருக்கோ காய் கடிச்சு சாப்பிடறமாதிரி இருந்தாதான் பிடிக்கும்,இதனாலேயே நான் செய்யும் பல பொரியல்களை சாப்பிடமாட்டார். அதுக்காகவே கொஞ்சம் கொஞ்சமா இப்பஇப்பத்தான் நிமிஷக் கணக்குப் பார்த்து சமைக்கிறேன். :) காய்களின் ருசியும் தெரியுது.

முட்டைக்கோஸ், ப்ரோக்கலி இவை அதிகபட்சம் 3 நிமிஷத்தில் வெந்துருது. அதுக்கப்புறம் இந்த தாளிப்பது, தேங்கா சேர்ப்பது இதுக்கெல்லாம் மீறிப்போனா ஒரு 2 நிமிஷம்,அம்புட்டுதான்,அதுக்கு மேலே அடுப்பில வைப்பதில்லை. பீன்ஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கேரட், சுரைக்காய், எல்லாமே அப்படித்தான். கொஞ்சமாகத் தண்ணீர் தெளிச்சு மூடி வைத்து 3-4 நிமிடங்கள் சமைத்தாலே வெந்துவிடுகிறது. அதே போல தேங்காய் சேர்க்கும் காய்களுக்கு அடுப்பிலிருந்து இறக்கிதான் தேங்காய் சேர்த்து கலக்கறேன். தேங்காயை அடியோடு விடத்தான் முடியல,அட்லீஸ்ட் வதக்காமலாவது இருக்கலாமே..கொழுப்பு ஒரு % குறையுமே என்ற நப்பாசைதான் எல்லாம்! ஹிஹி!

அதனாலே நான் எல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னன்னா..வீட்டிலிருக்கும் பெரியவர்கள்(காயை மென்று சாப்பிடமுடியாதவர்கள்) தவிர மற்ற எல்லாரும் காய்களை அளவா வேகவிட்டு சமைத்து ஆரோக்கியமா வாழுங்கள்!

ஹப்பாடி,ப்ரசங்கம் முடிஞ்சது, யாருப்பா அங்கே, கூலா ஒரு கலர் குடுங்க. ;) B-)

Friday, January 20, 2012

உப்பும் மிளகும்..வெனிஸ் பீச்சும்!

க்றிஸ்மஸ் முடிந்ததுமே இங்கே வந்திருக்கவேண்டிய ஆட்கள் இவர்கள்..கிறிஸ்மஸ்,நியூ இயர்,பொங்கல் எல்லாமும் முடிந்தது..பொறுத்தது போதும்னு பொங்கலில் பொயிங்கி:) எழுந்து நான் செய்த பொங்கலுக்கு அருகே வந்து கேமரா ஃப்ரேமுக்குள் வந்து நின்றுகொண்டார்கள். :) இவர்களுக்குப் பின்னால ரொமான்டிக் காதல் கதை இருக்கக்கூடும் என்று ஆர்வமா வந்து ஏமாந்துவிடாதீர்கள் என்று ஆரம்பத்திலயே எச்சரிக்கிறேன். ;)

போனவருடத்தின் க்றிஸ்மஸுக்கு வந்த லாங் வீகெண்டில் Venice Beach போனோம். அங்கேதான் இந்த மஞ்சள்-பச்சை வர்ண உப்பும் மிளகும் காதலர்களையும் வாங்கினேன். வெனிஸ் பீச்..புகழ் பெற்ற கடற்கரைகளில் ஒன்று.. பஸிஃபிக் கடலோரம் ஓங்கி உயர்ந்த பனை மரங்களின் கஸின் ;) மரங்களோடு கிட்டத்தட்ட 21/2 மைல் தூரத்திற்கு நீண்டு கிடக்கும் கடற்கரையோரச் சாலை, மற்றும் புகழ்பெற்ற Venice canals என்று இருக்கும் ஒரு அழகான இடம்.

பீச்சில் நுழையும்போதே ஒருவர் ரெண்டு கையிலும் ரெண்டு (உயிருள்ள) பாம்புகளைப் பிடித்தவாறு சிறு ஸ்டூல் மீது நின்று வரவேற்பு(!!!) தருகிறார். அவரைத் தாண்டினால் இருபுறமும் நீண்டு கிடக்கும் சாலையோரக் கடைகளும், வெண் மணல் பரப்பும், பனைமரங்களின் ஒண்ணு விட்ட சகோதர மரங்களும்:) நம்மை வரவேற்கின்றன.

சாலையோரக் கடைகளில் ஆடைகள் அணிந்து நிற்கும் பொம்மைகளில் ஒன்று சேலை சுற்றியிருந்தது! :) படத்தில் இடது மூலையில் பாருங்க. நீலச்சேலை அணிந்த பொம்மை தெரியுதா??

கோல்டன் கலர் பெயின்ட் அடித்துக்கொண்டு சிலை போல் நிற்பவர், பாட்டுப் பாடுவோர், ஒருவர் மீது ஒருவர் ஏறிக்குதித்து வித்தை காட்டுவோர், ஜோசியம் பார்ப்பவர்கள் மற்றும் ஓவியங்கள் விற்பனைக்கு, tattoo வரைபவர்கள்(அதாங்க, பச்சைகுத்தறது!!:)), சிறிய உணவகங்கள் முதல் பெரிய ரெஸ்டாரண்ட் வரை பலதரப்பட்ட உணவகங்கள் என்று அந்தச் சாலையே கலகலப்பாக இருக்கிறது.
நாங்கள் ஒரு பின்மதிய வேளையில் சென்றதால் சுடச்சுட ஒரு புனல் கேக் (ஹிஹி..funnel cake) வாங்கி ருசித்தவாறே கடலோரம் நடந்தோம். ஸ்கேட்டிங் செய்பவர்களுக்கென்று தனியாக கடலோரத்தில் ஒரு Skate park (இந்த லிங்கை க்ளிக் பண்ணினால் இன்னும் நிறைய படங்கள் பார்க்கலாம்) கட்டிவிட்டிருக்கிறார்கள். நண்டுசுண்டிலிருந்து பல்லுப்போன தாத்தா வரை அங்கே ஸ்கேட்டிங் செய்யும் வேகத்தைப் பார்க்கவே பயமா இருக்கு! ;)

வெள்ளைவெளேர்னு கொட்டிக் கிடந்த மணலில் ஆங்காங்கே கார் சென்ற தடம் இருந்தது..யாரப்பா இங்கே காரோட்டியிருக்கா என்று பார்த்தா...லைஃப் கார்ட்ஸ்!! ஒரு இடத்தில் நிற்காமல் காரில் உலா வருகிறார்கள். நாம் கொறிக்கும் உணவு வகைகளை ஒரு கை பார்க்கவென்று மனிதருடன் மணலில் நடைபயிலும் சீகல் பறவைகள்..நீலவானம், மலைகள் எல்லைகட்டும் பஸிஃபிக் கடல், மணல்வெளி என்று கண்ணால் ரசித்துக் காலாற நடந்து திரும்பினோம். இந்த முறை வெனிஸ் canals பக்கம் போகவில்லை.அடுத்தமுறை போக கொஞ்சம் மீதம் வைத்திருக்கிறோம். :)

மணலில் செய்த ஆக்டோபஸ் பல்லைக்காட்டிக் காசு கேட்டது ஒரு இடத்தில்! அந்தப் படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்..அந்த போர்டில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள் உங்களைச் சிரிக்கவைக்கும் என்பதற்கு நான் கேரண்டி! இந்தச் சிலையைச் செய்த சிற்பிக்கு டிப்-ஆக காசு, பேருந்தில் உபயோகிக்கும் டோக்கன், அல்லது உங்க பர்ஸ், கார் கீ, ஐ பாட், ஐபேட், பிளேஸ்டேஷன் -3 இப்படி நீண்டுகொண்டே போகும் லிஸ்டில் எதுவேணுமானாலும் தரலாமாம். :) :)

அப்படியே வந்துகொண்டிருக்கும்போதுதான் இந்த ரொமான்டிக் காதலர் கூட்டத்தைக் கண்டேன். நான் வாங்கியிருக்கும் சின்ன சைஸிலிருந்து ஒரு அடி உயரம் வரை பல சைஸில் hugging காதலர்கள் பல்வேறு வண்ணங்களில் நின்றார்கள். விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் க்யூட்டாக இருந்ததால் வாங்கிட்டு வந்தாச்சு. இன்னும் உப்பு-மிளகு எல்லாம் போடலை,அப்படியே தான் வைச்சிருக்கேன்,அவிங்களும் எத்தனை நாள் போனாலும் என்றும் 16 மாதிரி கட்டிப்பிடிச்சுட்டேதான் நிற்கறாங்க. :))

Huggers: என்ன பார்கறீங்க..அவ்ளோதான், ட்ரிப் முடிஞ்சது. இந்த மஞ்சள்-பச்சை குழம்பு Mirchi ka salan-ஆம்!! பிரியாணி கூட சாப்பிட நல்லா இருக்கும்னு சொல்றாங்க. சீக்கிரமா ரெசிப்பு வரும், அப்ப அவிங்கவிங்க வீட்டுக்கு கிச்சன்ல செய்து ருசிக்கலாம்.இப்ப போயி வேலைகளைப் பாருங்கோ!
ஒரு காதல் ஜோடி ஃப்ரீயா சிரிச்சுப்பேசலாம்னு பாத்தா..சிவபூஜையிலே கரடி மாதிரி தொந்தரவு செய்யறீங்க? வி வான்ட் ஃப்ரீடம், லீவ் அஸ் அலோன்!!! ;))))))))))))

Tuesday, January 17, 2012

2 இன் 1 பொங்கல்

அவசரமாச் சமைக்கவேண்டிய நேரங்கள் வந்தா ஒரே கல்லில 2 மாங்கா அடிக்கிற மாதிரி ஒரே பொங்கல்ல இனிப்பும் காரமும் பண்ணிக்கற மாதிரி (ரூம் போட்டு யோசிச்சு) இப்படி ஒரு quick and easy ஐடியாவைக் குடுக்கிறேன்..என்ஜாய்!!!!! :)

தேவையான பொருட்கள்

பச்சரிசி-1கப்
பாசிப்பருப்பு-6 டேபிள்ஸ்பூன்
(1/4கப் +1/8கப்)
நெய் -2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரைப் பொங்கலுக்கு
பொடித்த வெல்லம்-1/2கப்
ஏலக்காய்-2
முந்திரி திராட்சை-தேவைக்கு

வெண்பொங்கலுக்கு
பச்சைமிளகாய்-1
சிறு துண்டு இஞ்சி
கறிவேப்பிலை -கொஞ்சம்
பொடித்த சீரகம்,மிளகு -11/2டீஸ்பூன்
பெருங்காயம்-1/8டீஸ்பூன்
முந்திரி-தேவைக்கு
உப்பு

செய்முறை
அரிசி-பருப்பை களைந்து, 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும். 4-5 சத்தங்கள் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு முந்திரி-திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே நெய்யிலேயே பெருங்காயப்பொடி, பொடியாக நறுக்கிய இஞ்சி -பச்சைமிளகாய், பொடித்த மிளகு-சீரகம், முந்திரி இவற்றை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

வெல்லத்துடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு குறைந்த சூட்டில் அடுப்பில் வைக்கவும்.
இந்த டைம் கேப்புக்குள்ள குக்கரில் ப்ரெஷர் இறங்கியிருக்கும், திறந்து கரண்டியால் பொங்கலை மசித்து வைத்துக்கொள்ளவும்.
வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மீண்டும் சற்றே கொதிக்கவிடவும். கொதிவந்ததும் மசித்த பொங்கலில் பாதியை வெல்லப்பாகுடன் சேர்த்து கிளறவும்.
பொங்கல் வெல்லத்துடன் நன்கு கலந்து கொதிவந்ததும் ஏலப்பொடி, வறுத்த முந்திரி-திராட்சை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
குக்கரில் மீதமிருக்கும் பொங்கலுடன் வெண்பொங்கலுக்குத் தாளித்தவற்றை சேர்த்து,தேவையான உப்பும் சேர்த்து கிளறவும்.
அவ்ளோதாங்க..சூடான சர்க்கரைப் பொங்கல் & வெண்பொங்கல் தயார்! பரிமாறும் கிண்ணங்களுக்கு பொங்கல்களை மாற்றி, இரண்டு பொங்கலிலும் தலா அரை டேபிள்ஸ்பூன் நெய்யை சேர்த்து கலக்கிப் பரிமாறுங்க.
பொங்கல் செய்யும்போது கிடைக்கும் கேப்பிலேயே கொஞ்சம் தேங்காச்சட்னியும் அரைச்சுட்டேன்.இந்த முழு சமையல் ப்ராஸஸிலும் அடுப்பை ஆஃப் பண்ணவே இல்லை. :)
குக்கரை அடுப்புலே வைக்கும்போதே வடைக்கு மாவையும் அரைச்சேன்..ரெண்டு பொங்கலையும் கிச்சன்ல இருந்து டைனிங் டேபிளுக்கு மாத்தறதுக்குள்ளே வடைக்கு எண்ணெய் காய்ஞ்சிருச்சு,வடையும் சுட்டு எடுத்தாச்சு.
பொங்கலோ பொங்கல்!!!
சாப்பிடலாம் வாங்கோ!
:):)
குடும்பத்தில் எல்லாரும் கூடி, புத்தாடை உடுத்தி, வாசலிலே வண்ணக் கோலமிட்டு, மூன்று கல்லால் அடுப்புக் கூட்டி, புதுப்பானையிலே புத்தரிசிப் பொங்கலிட்டு, காய்கறிகள், மஞ்சள், கரும்பு, பொங்கல் எல்லாம் சூரியனுக்குப் படைத்து "பொங்கலோ பொங்கல்!!"னு சந்தோஷமாகக் கூவி ப்ளாகிலே போட ஆசையாய்த்தான் இருக்கு! ஆனா அதற்கு வழியில்லாதப்ப இப்படி GE cooking range-ல, Hawkins pressure cooker-ல, பாஸ்மதி அரிசியைப் போட்டு 2 இன் ஒன் பொங்கல் வைச்சு கொண்டாடிக்க(!) வேண்டியதுதான்!! என்ன சொல்றீங்க?! :)

Hope Everyone Had a Happy Pongal!

Friday, January 13, 2012

நன்றிகள்!

இன்றைக்கு இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு, ஜனவரி மாதம், 13-ஆம் நாள், வெள்ளிக்கிழமை. அதற்கு என்ன என்று கேட்பீங்க..இந்த வலைப்பூவின் முதல்ப்பூ:) பூத்தது ஒரு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி! :) ஆமாங்க, வெற்றிகரமா இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது "மஹி'ஸ் ஸ்பேஸ்"!

என் வலைப்பூவின் 3வது பிறந்தநாளுக்கு அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல்ல இருந்து உணவுவகைகள் ஆர்டர் பண்ணிரட்டேன்! எல்லாம் ரெடியா இருக்குது, பூந்து விளையாடுங்க... ;))))))))))))

செட்டிநாடு கோழி ரசம் (சிக்கன் சூப்)

சிக்கன் லாலிபாப்

ஃபிஷ் ஃப்ரை
இது என் கிச்சன்ல செய்த Bass Fish Fry

நாட்டுக்கோழி பிரியாணி
சிக்கன் க்ரேவி..from Mahi's Kitchen

இந்த வருஷப்பிறப்பன்று SanFransisco பக்கம் போயிருந்தோம், அவ்வளவு தூரம் போயிட்டு அங்கே இருந்த அஞ்சப்பர் செட்டிநாடு ரெஸ்டாரண்ட்டை மிஸ் பண்ணக்கூடாது என்று எல்லாரும்(!) விரும்பியதால், உங்களுக்கும் இன்று இந்த விருந்தைப் பரிமாற எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. :)))))))

இது சைவ சாப்பாடு...லெஃப்ட் டு ரைட் பாத்தீங்கன்னா, பாசிப்பருப்பு பாயசம், புளிக்குழம்பு, உருளைக்கிழங்கு கறி,பருப்பு, சாம்பார்,ரசம்,சௌ-சௌ பாசிப்பருப்பு கூட்டு, ஊறுகாய்,தயிர், சாப்பாடு, சப்பாத்தி மற்றும் அப்பளம்.

மெய்ன் கோர்ஸ் வெளியே ஆர்டர் பண்ணீட்டாலும் டிஸர்ட் ஹோம் மேட் தான்!! :) இது என் சமையலறையில் தயாரான போளி. ரெசிப்பியைக் காண விரும்பினால் இங்கே க்ளிக்குங்க. விருந்து முடிந்ததும் கடைசியாய் வரும் பீடாவை மேஏஏஏல முதல் படமாப் போட்டிருக்கிறேன், அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. :)
~~~
கடந்த இரண்டு வருடங்களாக என் சமையலை, புகைப்படத் தொகுப்புகளை, பயணக்கட்டுரைகளை, எல்லாவற்றுக்கும் மேலாக எனது மொக்கைப்பதிவுகளை சலிக்காமல் படித்து, உங்கள் கருத்துக்கள் என்னும் உரமிட்டு, உயிர்நீரூற்றி இந்த வலைப்பூவை வளர்த்துவரும் அன்புள்ளங்களுங்கு என் உளமார்ந்த ன்றி!
:)

LinkWithin

Related Posts with Thumbnails