Showing posts with label டிபன் வகைகள். Show all posts
Showing posts with label டிபன் வகைகள். Show all posts

Thursday, May 11, 2017

ஓட்ஸ் வெஜிடபிள் உப்மா

தேவையான பொருட்கள் 
ஓட்ஸ் - 1 கப்
தண்ணீர் -11/2 கப்
கேரட் -1
பீன்ஸ் - 5
பச்சை பட்டாணி (ஃப்ரோஸன்) - ஒரு கைப்பிடி
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -3 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை -கொஞ்சம்
கொத்துமல்லி இலை - கொஞ்சம்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

செய்முறை
ஓட்ஸை வெறும் கடாயில் வாசம் வரும்வரை வறுத்து ஆறவைக்கவும்.
ஒண்ணரை கப் தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஓட்ஸை சேர்த்து வேகவைக்கவும். தீயை குறைத்து வைத்து வேகவைக்கவேண்டும், ஓட்ஸ் சேர்த்ததும் பொங்கும். ஓட்ஸின் வகைக்கேற்ப சில நிமிடங்களில் வெந்துவிடும். குழையாமல் வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். [தண்ணீர் அளவாக இருக்கும், வடிக்கத் தேவையில்லை]

கேரட் பீன்ஸை கழுவி நறுக்கி, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைக்ரோவேவ்-ல் 2  நிமிடங்கள் வேகவைக்கவும். அதனுடன் பட்டாணியையும் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வேகவிட்டு எடுத்துவைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கிவைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை - நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் தேவையான உப்பு, வேகவைத்த காய்கறிகள் (தண்ணீரை வடித்துவிட்டு) சேர்க்கவும். எல்லாம் நன்றாக வதங்கியதும் வெந்த ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும். [ரொம்பவும் கிளறக்கூடாது..காய்கள் ஓட்ஸுடன் கலந்தால் போதும்]

ஓட்ஸ் காய்களுடன் கலந்து சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்துமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும். 

Tuesday, March 22, 2016

ராகி சேமியா

ராகி சேவை, கோதுமை சேவை, தக்காளி சேவை, கம்பு சேவை என தமிழகத்தில் விதவிதமாக கிடைத்தாலும், இங்கே ராகி "சேமியா" கிடைத்தது இதுவே முதல் முறை.  மேகி நூடுல்ஸ் இருக்கும் பக்கம் இந்த "அணிலாரை"ப் பார்ததும் வீட்டுக்கு கூட்டிவந்துவிட்டேன். இப்படியான சேமியாவை நான் (மட்டுமே) செய்வது முதல்முறை. ஊரில் அம்மாவோ அக்காவோ செய்வார்கள், பக்கத்தில் நின்று பார்த்ததோடு சரி. கொஞ்சம் பயந்துகிட்டே செய்தேன், ஆனா அவ்வளவு கடினமில்லை..சூப்பரா இருந்தது. நீங்களும் செய்து பாருங்க. 

தேவையான பொருட்கள்
ராகி சேமியா - 2கப் 
வெங்காயம்- பாதி
பச்சைமிளகாய் - 4 (காரத்துக்கேற்ப)
வரமிளகாய் -1 
தக்காளி -1
கடுகு -1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1டீஸ்பூன்
உளுந்து பருப்பு -1டீஸ்பூன் 
எண்ணெய்
உப்பு 

செய்முறை
2 கப் சேமியாவுக்கு சுமார் 4 கப் தண்ணீர் (சூடாக்க தேவையில்லை, பச்சைத்தண்ணீரே போதும்) எடுத்து தேவையான உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். 

உப்பு கரைந்ததும் ராகி சேமியாவை தண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் வைக்கவும். 

*மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடித்துவைக்கவும். 

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, ஊறிய ராகி சேமியாவை வைத்து 5-6 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.
 சேமியா வெந்ததும் எடுத்து ஆறவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, க.பருப்பு-உ.பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய், கிள்ளிய வர மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் **உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் ஆறிய ராகி சேமியாவை உதிர்த்துப் போட்டு கிளறவும்.
 சேமியா வெங்காயத்துடன் நன்கு கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
குறிப்பு
* தண்ணீரில் ஊறப்போடும் சேமியாவை 3 நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்கவேண்டாம்..அதிக நேரம் ஊறினால் கூழ் போல் ஆகிவிடும், கரெக்டா 3 மினிட்ஸ் மட்டும் வைங்க. (இது அந்த சேமியா பாக்கட்டிலயே போட்டிருக்காங்க..நான் பயமுறுத்தலை!! ஹிஹி...)
** சேமியாவை ஊறவைக்கும்போதே உப்பு கலந்த தண்ணில தானே ஊறவைக்கிறோம் என தவறாக நினைக்கவேண்டாம். எனக்கென்னவோ அந்த 3 நிமிட ஊறவைத்தலில் உப்பு சேமியாவில் பிடிக்கிற மாதிரி தெரியவில்லை. நீங்க பாத்து போட்டுகுங்க. :)

Wednesday, November 4, 2015

ஆப்பம் - தேங்காய்ப்பால்

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1கப்
புழுங்கலரிசி -1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உளுந்துப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பழைய சாதம் - 1/4 கப்
தேங்காய்த் தண்ணீர் 

செய்முறை
மறுநாள் ஆப்பத்துக்கு அரைக்க சில முன்னேற்பாடுகள் : 
அரிசிகள், வெந்தயம், உளுந்து இவற்றை நன்றாக 2-3 முறை அலசி 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஃப்ரிட்ஜில் ஊறவைக்கவும்.
தேங்காய் வாங்கி வைத்துக்கொள்ளவும். :)

1.காலையில் அரிசிகளை தண்ணீர் வடித்துவைக்கவும். 
2.பழைய சாதத்தையும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைக்கவும்.
3.தேங்காயை உடைத்து கவனமாக தண்ணீரை எடுக்கவும்.அதனை வடித்து வைத்துக்கொள்ளவும்.
4.அரிசி, பழைய சாதம் இவற்றை கிரைண்டரில் போட்டு தேங்காய்த்தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். [சில தேங்காய்களில் தண்ணீர் குறைவாக இருக்கும், அப்படியாயின், தேங்காய்த்தண்ணீருக்குப் பிறகு தேவையான தண்ணீரையும் சேர்த்து அரைக்கவும். நான் வாங்கிய தேங்காயில் நிறையத் தண்ணீர் இருந்தது. மாவரைத்தது போகவும் மீதமானது! :)]
5. மாவு நைஸாக அரைபட்டதும் கொஞ்சமாக உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
6. சுமார் 8-10 மணி நேரங்கள் புளித்ததும் மாவு நன்றாக பொங்கி மேலே வந்திருக்கும்.

தேவையான அளவு மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து கரைக்கவும். தோசை மாவை விடவும் கொஞ்சம் தண்ணீராக இருக்கவேண்டும்.
ஆப்பச்சட்டி அல்லது குழிவான தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊற்றி, ஆப்பச்சட்டி/தோசைக்கல்லை சுழற்றி மாவு வட்டமாக பரவச் செய்யவும். மூடி போட்டு வேக விடவும்.
ஆப்பம் வெந்ததும் கல்லை விட்டு எழும்பி வரும். சூடான ஆப்பத்தை தேங்காய்ப்பால் மற்றும் விருப்பமான சட்னி- குருமா- ஸ்டூவுடன் பரிமாறவும்.

தேங்காய்ப்பால் (ஷார்ட் கட்)
தேவையான பொருட்கள்
பசும்பால் - 1 கப்
தேங்காய்ப்பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் 
சர்க்கரை - சுமார் 1/4கப் (சுவைக்கேற்ப)
ஏலக்காய் - 2 
செய்முறை
பாலை காய்ச்சவும்.
பால் பொங்கி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து சர்க்கரை மற்றும் தேங்காய்ப்பால் பொடியைச் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிடவும்.
சர்க்கரை கரைந்து சில நிமிடங்கள் சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கி, பொடித்த ஏலக்காயைச் சேர்க்கவும். 

குறிப்பு 
தேங்காய்த் தண்ணீர் சேர்த்து அரைத்தால் அருமையாக இருக்கும், கிடைக்காத பட்சத்தில் டெஸிகேடட் தேங்காய்த்துருவல் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்தும் அரைக்கலாம். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை! :) 
நேரமும் வசதியும் பொறுமையுமிருப்பவர்கள் தேங்காயை அரைத்தே பால் எடுத்து சர்க்கரை ஏலக்காய் சேர்க்கலாம். :) 
பழைய சாதம் சேர்க்காமல் செய்தால் ஆப்பம் வறண்டு போன மாதிரி இருக்கும், அதனால் கண்டிப்பாக சோறு சேர்க்கவேண்டும். 

Monday, April 27, 2015

கொள்ளு தோசை/ கொள்ளு-ப்ரவுன் ரைஸ் தோசை

தோசையில் உளுந்துக்கு பதிலாக கொள்ளு சேர்த்து செய்த தோசை, இட்லி அரிசி/புழுங்கல் அரிசிக்கு பதிலாக "கைக்குத்தல் அரிசி"/ப்ரவுன் ரைஸ் சேர்த்து செய்தது இந்த தோசை. எப்படியும் இட்லி தோசைய நம்ம டயட்-ல இருந்து விலக்க முடியாது என்று இருப்பதால.. அட்லீஸ்ட் கில்ட் ஃப்ரீயாச் சாப்பிடலாமே!! எங்க வீட்டில வாரத்துக்கொருமுறை இந்த தோசையும், கீன்வா-ப்ரவுன் ரைஸ் தோசையும் மாற்றி மாற்றி இடம் பிடிக்கின்றன இப்போது. நீங்களும் செய்து பார்த்துச் சொல்லுங்களேன்! 

தேவையான பொருட்கள்
ப்ரவுன் ரைஸ் - 2 கப்
வெந்தயம்-1டீஸ்பூன்
கொள்ளு-1/2கப்
உப்பு 

செய்முறை
1. ப்ரவுன் ரைஸ், வெந்தயம் இரண்டையும் நன்றாக 2-3 முறை களைந்து சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. கொள்ளையும் நன்றாக களைந்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். 
3. க்ரைண்டரில் கொள்ளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும். மாவு சும்மா பொங்கிப் பொங்கி வந்தது. க்ரீம் மாதிரி எப்படி நிற்குது பாருங்க கிண்ணத்தில்!! ;)  
 4. கொள்ளை சுமார் 20 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும்.
5. அரிசி-வெந்தயத்தையும் தேவையான தண்ணீர் விட்டு நன்கு அரைத்தெடுத்து கொள்ளுடன் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து புளிக்க விடவும்.
6. மாவு புளித்ததும் கொஞ்சம் மாவை எடுத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலந்து தோசைகளாக வார்க்கவும்.
7. சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
8. சுவையான கொள்ளு தோசை தயார். நல்ல காரசாரமான சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு
ஊறிய கொள்ளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தும் அரைக்கலாம்..நன்றாக மாவு காணும்.
இந்த மாவில் இட்லி செய்ய முடியாதா எனக் கேட்பவர்களுக்கு...நான் செய்து பார்க்கலை, அதனால் தெரியவில்லை. ;) :) 
இந்த தோசைக்கு தேங்காய்ச்சட்னியை விட, நல்ல புளிப்பான தக்காளிச் சட்னி, அல்லது காரசாரமான சட்னி, குழம்புவகைகள் நன்றாக இருக்கும். 

Thursday, July 3, 2014

ப்ரெட் உப்புமா / ரொட்டி உப்புமா

தேவையான பொருட்கள்
ப்ரெட் ஸ்லைஸஸ்/ ரொட்டித் துண்டுகள் - 8
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3 (காரத்துக்கேற்ப)
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-2டேபிள்ஸ்பூன்
உப்பு-வெங்காயம் வதங்கும் அளவு
எண்ணெய்

செய்முறை
வெங்காயம்-பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய்-கறிவேப்பிலை(நான் சேர்க்கவில்லை) சேர்த்து வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க உப்பை சேர்த்து வதக்கவும். 
ப்ரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துக்கொள்ளவும். [புது ப்ரெட்-ஐ விட மீதமான ப்ரெட் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த ப்ரெட் ஈஸியாக அரைபடும். நான் ஃரெஷ் ப்ரெட்தான் உபயோகித்திருக்கிறேன். ;)] 
உதிர்த்த ப்ரெட்-ஐ வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து பிரட்டவும்.
ப்ரெட் ஓரளவு சூடேறியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான உப்புமா தயார். சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு
உப்பு வெங்காயம் வதக்க மட்டுமே, ரொட்டியில் ஏற்கனவே உப்பு இருக்கும்.
நாங்கள் எப்போதும் கோதுமை அல்லது மல்ட்டிகிரெய்ன் ப்ரெட் தான் வாங்குவது வழக்கம்.  வெள்ளை ரொட்டியும் உபயோகிக்கலாம்.
உதிர்த்த ரொட்டி சேர்த்த பின் அதிக நேரம் வதக்கினால் உப்புமா வறவற-வென ஆகிவிடும்.
சூடாகச் சாப்பிட்டால் சுவை அதிகம்! :)
ரெசிப்பி கிடைத்தது இங்கே.

Saturday, October 19, 2013

ப்ரவுன் ரைஸ்-பச்சைப்பயறு தோசை / ப்ரவுன் ரைஸ் பெசரட்டு

தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு-1/2கப்
ப்ரவுன் ரைஸ்-1/2கப்
பச்சைமிளகாய்-3
இஞ்சி-சிறுதுண்டு
கொத்துமல்லித் தழை-கால் கட்டு
உப்பு

செய்முறை
அரிசி, பச்சைப்பயறை 2-3 முறை களைந்து நான்கு மணி நேரங்கள் ஊறவைக்கவும். 
ஊறியவற்றை தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
 அரைபட்டதும் பச்சைமிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
 பெசரட்டுக்கான மாவு தயார். இது புளிக்க வேண்டிய அவசியமில்லை, அரைத்த உடனே தோசையாக சுடலாம்.
 தோசைக்கல்லை காயவைத்து தோசைகளாக ஊற்றவும்.
 சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடவும்.
காரசாரமான ப்ரவுன் ரைஸ் பெசரட்டு தயார். விருப்பமான சட்னி, சாம்பார் அல்லது பொடியுடன் ருசிக்கலாம். புளிக்காத மாவில் செய்வதால் சூடாகச்  சாப்பிடவேண்டும், ஆறினால் காய்ந்து போனது போல இருக்கும்.
படத்தில் பெசரட்டுவுடன் இருப்பது வெங்காயச் சட்னி

Sunday, September 29, 2013

புதினா-வெங்காய சாண்ட்விச் / Mint Onion Sandwich

தேவையான பொருட்கள்
புதினா சட்னி 
சுத்தம் செய்யப்பட்ட புதினா இலைகள்-1/4கப்
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப) 
தேங்காய்த் துருவல்-1டேபிள்ஸ்பூன்
புளி-சிறிது
உப்பு
எண்ணெய் 
வதக்கிய வெங்காயத்திற்கு
நீளமாக நறுக்கிய வெங்காயம்-1
சீரகம்-1/4டீஸ்பூன்
கறிமசாலாதூள்-1/2டீஸ்பூன்
மல்லித்தூள்-1/8டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/8டீஸ்பூன்
உப்பு 
எண்ணெய் 
வீட் ப்ரெட் (அ) விருப்பமான ரொட்டித் துண்டுகள்-6
ஆலிவ் ஆயில்-2டீஸ்பூன்

செய்முறை 
கடாயில் சிறிது எண்ணெய் காயவைத்து பச்சைமிளகாயை வதக்கவும். அதனுடன் புதினா இலைகள், புளி சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கி எடுத்துவைக்கவும். 
ஆறியதும் இவற்றுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைத்தெடுக்கவும்.
புதினா வதக்கிய கடாயிலேயே இன்னும் சிறிது எண்ணெய் சூடாக்கி, சீரகத்தை பொரியவிடவும். 
நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சுவைக்கு உப்பும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய்-மல்லி-கறிமசாலாப் பொடிகளைச் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்.
க்ரில்லில் லேசாக எண்ணெய் தடவி, சூடாக்கிக் கொள்ளவும்.
ரொட்டித் துண்டுகளில் ஒரு புறம் புதினா சட்னியைத் தடவி, அதன் மேல் வதக்கிய வெங்காயத்தை வைத்து..
இன்னொரு ரொட்டித் துண்டை அவற்றின் மீது வைத்து, ஆலிவ் ஆயில் கொஞ்சம் தெளித்து விட்டு..
க்ரில்லை மூடி வைக்கவும்.
2 அல்லது 3 நிமிடங்களில் சுவையான புதினா-வெங்காய சாண்ட்விச் ரெடியாகி இருக்கும்.
கத்தியால் முக்கோணமாக நறுக்கி, சூடாகப் பரிமாறவும்.
சுடச்சுட சாப்பிட காரசாரமான  சுவையான மொறுமொறு "மின்ட்-ஆனியன் சாண்ட்விச்" ரெடி!
ஈவினிங் டீ-யுடன் சூப்பர் ஜோடி இந்த சாண்ட்விச்! :) 
க்ரில்-லிற்கு பதிலாக ப்ரெட் துண்டுகளை தோசைக்கல்லிலும் வாட்டி எடுக்கலாம். இங்கே கொடுத்துள்ள அளவிற்கு 6 முதல் 8 ரொட்டித்துண்டுகள் உபயோகித்து 3 அல்லது 4 சாண்ட்விச்கள் செய்யலாம். 

Recipe Inspiration: Here

Saturday, September 21, 2013

கீன்வா-ப்ரவுன் ரைஸ் பணியாரம்


தேவையான பொருட்கள்
கீன்வா(Quinoa)-1/2கப்
ப்ரவுன் ரைஸ்-1கப் 
வெந்தயம்-1/2டீஸ்பூன் 
உருட்டு உளுந்து-1/4கப்
உப்பு
எண்ணெய்
 செய்முறை
அரிசி, கீன்வா, வெந்தயம் இவற்றை 2-3 முறை நீரில் களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். 
மூன்று மணி நேரம் கழித்து, உளுந்துப் பருப்பையும் இரண்டு, மூன்று முறை கழுவிவிட்டு, அரிசி-கீன்வாவுடன் சேர்த்து ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும்.
அளவு கொஞ்சமாக இருப்பதால் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்திருக்கிறேன். அதிகமாகப் போடுவதாக இருந்தால், அரிசி-கீன்வா இவற்றை 4 மணி நேரங்களும்,  உளுந்தைத் தனியே 11/2 மணி நேரமும் ஊறவைத்துக்கொள்ளலாம். 

கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு மாவை அரைத்து, உப்பு சேர்த்து கலந்துவைக்கவும்.

8 மணி நேரங்கள் கழித்து மாவு பொங்கி வ(ழி)ந்திருக்கும். ;) 

[அரைத்த மாவை கன்வென்ஷனல் அவன் -ல்  விளக்கைப் போட்டு  உள்ளே வைத்தேன், காலையில் பொங்கி வழிஞ்சிருந்தது..ஹிஹிஹ்ஹி! :) நல்லவேளையா பேக்கிங் டிரேயில கிண்ணத்தை வைச்சேனோ, தப்பிச்சேன்! இல்லன்னா சிந்திய மாவைச் சுத்தம் செய்யறதுக்குள்ள ஒரு வழியாகிருப்பேன். அவ்வ்வ்வ்வ்வ்! ;) ]

பணியாரக் கல்லை காயவைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடாக்கவும். கல் சூடானதும் மாவை ஊற்றி வேகவிடவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பி விட்டு வேகவிடவும்.  
 சூடான, சுவையான, ஸாஃப்ட்-ஆன பணியாரம் ரெடி. 
 பணியாரம்-மதுரை சட்னி-கொத்துமல்லி சட்னி
இதே மாவை கீன்வா-ப்ரவுன் ரைஸ் தோசையாகவும் செய்யலாம்.

தோசை சீக்கிரம் சிவந்துவிடும், கவனமாக கருகவிடாமல் எடுக்கவேண்டும்.

பணியாரத்தை வைத்து என்னவர் செய்த இன்னொவேட்டிவ் ப்ரேக்ஃபாஸ்ட் அடுத்து வரும் கொலாஜில்! :)
பணியாரத்தை இரண்டாக நறுக்கி, ஒரு புறம் கொத்துமல்லி சட்னியைத் தடவி, மறுபுறம் நறுக்கிய அவகாடோ துண்டுகளை வைத்து, பக்கத்தில் மதுரை சட்னியை வைத்துச் சாப்பிட்டார், விரும்பினால் நீங்களும் முயற்சிக்கலாம் என்பதற்காக இந்த கொலாஜ்!
:)))
~~~

Monday, September 2, 2013

வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா

தேவையான பொருட்கள் 
ஓட்ஸ் -1 கப் [OLD FASHIONED OATS (or) ROLLED OATS]
தண்ணீர்-2 கப் 
கேரட்-1
பீன்ஸ்-4
பச்சைப் பட்டாணி-ஒரு கைப்பிடி 
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை, கொத்துமல்லி - கொஞ்சம் 
கடுகு-1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பு- தலா 1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் 

செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும். 
கேரட் பீன்ஸை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். கேரட்-பீன்ஸ்-பட்டாணியை தேவையான தண்ணீர் விட்டு 30 செகண்ட் மைக்ரோவேவ் செய்து எடுத்துக்கொள்ளவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் வாசம் வர வறுத்துவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு-உ.பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய்-கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மைக்ரோவேவ் செய்த காய்கள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதி வந்ததும் ஓட்ஸை சேர்க்கவும்.
 ஓட்ஸ் சில நிமிடங்களிலேயே வெந்துவிடும். தண்ணீர் வற்றியதும் மல்லித்தழை சேர்க்கவும்.
 சூடான சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி. 
குறிப்பு
ஓட்ஸை வறுத்து சேர்க்காமல் அப்படியே சேர்த்தால் உப்புமா கொழகொழவென ஆகிவிடும்.
இந்த உப்புமாவுக்கு QUICK COOKIN OATS-ஐ விட ரோல்ட் ஓட்ஸ்தான் சுவை நன்றாக இருக்கும், உதிரியாகவும் வரும்.
காய்களை மெலிதாக நறுக்கினால் மைக்ரோவேவ் செய்யாமல் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கும்போதே வெந்துவிடும். 

LinkWithin

Related Posts with Thumbnails