Showing posts with label சாம்பார். Show all posts
Showing posts with label சாம்பார். Show all posts

Tuesday, March 15, 2016

அவசர சாம்பார் / இன்ஸ்டண்ட் சாம்பார்

பருப்பு இல்லாமல்,  தேங்காயும் தேவைப்படாத சாம்பார் இது. சும்மா இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில் இந்த ரெசிப்பி கண்ணில் பட சட்டென்று செய்து சாப்பிட்டாயிற்று. நீங்களும் செய்து பாருங்க..ஈஸி & டேஸ்ட்டி! 

தேவையான பொருட்கள்
வெங்காயம் - பாதி (அ) சின்ன வெங்காயம் - நாலைந்து 
பச்சைமிளகாய்-1
நறுக்கிய காய் - 1/2கப் [விருப்பமான காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நான் மஞ்சள்பூசணி/அரசாணிக்காய் சேர்த்திருக்கிறேன்]
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்துமல்லித் தழை -கொஞ்சம் 
சர்க்கரை -1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
அரைத்துக்கொள்ள
பொட்டுக்கடலை -1டேபிள்ஸ்பூன்
நன்கு பழுத்த தக்காளி -2 
புளி - சிறுதுண்டு
சாம்பார்பொடி -2டீஸ்பூன் 
சீரகம்-1/2டீஸ்பூன் 

செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் எடுத்து,
அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, தக்காளி இருப்பதால் அதுவே போதும்.
காயை சற்றே பெரிய துண்டுகளாகவும், வெங்காயம் பச்சைமிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் சூடாக்கி, கடுகைப் பொரியவிடவும். பிறகு கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காயைச் சேர்த்து வதக்கவும்.
அரைத்த கலவையை குக்கரில் சேர்த்து,
தேவைக்கு தண்ணீர் மற்றும் உப்பு, சர்க்கரையைச் சேர்க்கவும். நான் சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்தேன், உங்களுக்கேற்ற கன்ஸிஸ்டன்சி-க்கு தண்ணீரை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.
பதிவின் முதல் படத்தில் இருப்பது ஓட்ஸ் பொங்கல் & சாம்பார்...இறுதிப் படத்தில் இருப்பது இட்லி & சாம்பார்.
குக்கரின் விசிலை கவனிக்காமல் 2-3 என்று போனதில் நான் சேர்த்த காய் சாம்பாரில் கரைந்துவிட்டது, ஹிஹி...ஆனால் சுவை அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

Recipe Link : HERE

Thursday, September 19, 2013

கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு & கத்தரிக்காய் சாம்பார்

--------------------------
இது கத்தரிக்காயைப் பொரிச்சு ஒரு ஶ்ரீலங்கா ஸ்பெஷல் குழம்பாக்கும்! இதுக்கு இங்கத்தைய பெரிய கத்தரிக்காய்தான் சரி.. ( ஒபஜின்) .. இரண்டாகப் பிளந்துபோட்டு , மூன்று துண்டாக வெட்டுங்கோ.. அதாவது பெரிய பெரிய பீஸாக...

நன்கு பொரித்தெடுங்கோ, பின்னர் உங்கட முறையில் தாளிதம் அனைத்தும் சேர்த்து வெங்காயம் மிளகாய் வதக்கி, கறித்தூள் போட்டு வதக்கி, பழப்புளி கரைத்து விடோணும்.. கொஞ்சம் புளித்தன்மையாக 
இருப்பின்தான் சுவை அதிகம்.

பின்னர், அளவுக்கு தண்ணி, விரும்பினால் கொஞ்சம் பால் சேர்த்து கொதித்ததும், இக்கத்தரிக்காய்களைப் போட்டு இறக்குங்கோ..
--------------------------
என்று குத்துமதிப்பாகக் கிடைத்த ரெசிப்பியை, என் ருசிக்கேற்ப டெவலப் பண்ணி, சுவையான குழம்பாக மாற்றி, வெற்றிகரமாக போட்டோக்களும் எடுத்து இங்கே பகிர்கிறேன். கத்தரியை டீப் ஃபிரை செய்வதற்கு பதிலாக கொஞ்சம் எண்ணெய் நிறைய:) விட்டு ஷாலோ ஃபிரை செய்துவிட்டேன். விரும்பினால் கொஞ்சம் பால் சேர்த்து என ரெசிப்பி தந்தவர் குறிப்பிட்டதால், நானாகவே கெட்டியான பசும்பாலைச் சேர்த்துச் செய்திருக்கிறேன்! ;)

Authentic Sri Lankan Recipe-வேண்டுவோர், நல்லெண்ணெயில் கத்தரிக்காயை முறுகலாகப் பொரித்தும், தேங்காய்ப்பால் சேர்த்தும், கெட்டியான குழம்பாகச் செய்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். கருத்துப் பெட்டியில் ஒரு நட்பு பல்வேறு டிப்ஸ்கள் கொடுத்திருக்காங்க, அதையும் கவனித்துக்கொள்ளவும். :)
--------------------------------
தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய் -2
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
புளிக்கரைசல்-1/4கப்
கறிப்பொடி-2டீஸ்பூன் [நான் தோழி கொடுத்த கலவை மிளகாய்ப்பொடி உபயோகித்திருக்கிறேன், நீங்க வசதிப்படி சாம்பார் பொடி (அ) மிளகாய்த்தூள்+மல்லித்தூள் (அ) கறிமசாலாத்தூள் சேர்த்துக்கலாம்.]
ஹாஃப் & ஹாஃப் மில்க்/ கெட்டியான பசும்பால்-3டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/4டீஸ்பூன்
வெந்தயம்-5
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
உப்பு 
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்  

செய்முறை
கத்தரிக்காயைக் கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். 
வெங்காயம்-பச்சை மிளகாயையும் நறுக்கி வைக்கவும். 
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, நறுக்கிய கத்தரித் துண்டுகளைச் சேர்க்கவும்.
மிதமான தீயில் கத்தரிக்காயை முறுவலாக வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். 
அதே கடாயில் வெந்தயம்-சீரகம் சேர்க்கவும். அவை பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம்-மிளகாய் சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, கறிப்பொடி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 
புளிக்கரைசல் பச்சைவாசம் போக கொதித்து வற்றியதும் பொரித்த கத்தரிக்காய் துண்டுகளைக் குழம்பில் சேர்க்கவும். குழம்பு கெட்டியாக இருந்தால் கால் கப் கொதிநீரும் சேர்க்கலாம். 
சில நிமிடங்கள் கழித்து, தீயைக் குறைத்துக்கொண்டு பாலைச் சேர்க்கவும். 
நன்றாக கலந்து விட்டு குழம்பு சூடானதும், சர்க்கரையைச் சேர்த்து அடுப்பை ஆஃப் செய்யவும். குழம்பு அடுப்பின் சூட்டிலேயே சில நிமிடங்கள் இருக்கட்டும். 
ஐந்து நிமிடங்கள் கழித்து குழம்பை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். சுவையான கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு ரெடி.  
பொங்கலும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் சூப்பர் காம்பினேஷன்! தேங்க்ஸ் பூஸக்கா ஃபார் தி ரெசிப்பி! :) 
 கோ-இன்சிடென்டலாக நானும் காலை உணவுக்கு வெண்பொங்கல்தான் செய்திருந்தேன்! :) அது என்ன கோ-இன்சிடென்ஸ், யாரந்த பூஸக்கா:) என அறிய விரும்புவோர் இங்கே கையை வையுங்கோ! மறக்காமல் அந்தப் பதிவின் கருத்துக்களையும் படிக்கணும். :) 
~~~
கத்தரிக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய்-1 (அ) சின்னக் கத்தரிக்காய்கள் -4
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை, கொத்துமல்லி- கொஞ்சம்
துவரம் பருப்பு-1/4கப்
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
சாம்பார்பொடி-1டீஸ்பூன் 
உப்பு
எண்ணெய்
செய்முறை
பருப்புடன் தக்காளி,  2 துளி எண்ணெய், கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைத்து எடுக்கவும். 
கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். 
வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கி கொள்ளவும். 
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
பிறகு கத்தரிக்காய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். 
வெந்த பருப்பு & தக்காளியை கரைத்து கத்தரிக்காயுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் சாம்பார்பொடி, தேவையான உப்பு சேர்த்து குறைவான  தீயில் 4-5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். 
கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். 
 
காரம் குறைவான, புளி சேர்க்காத, சுவையான சாம்பார் தயார். சாதம், இட்லி தோசை இவற்றுக்கு பொருத்தமாக இருக்கும்.  

Monday, April 9, 2012

தால் மக்னி / Dal Makhni

தேவையான பொருட்கள்
முழு உளுந்து(தோலுடன்)-1/4கப்
கடலைப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
ப்ளாக் ஐட் பீஸ்(Black eyed peas) -2 டேபிள்ஸ்பூன்
தக்காளி-4
சீரகம்-1டீஸ்பூன்
தால் மக்னி மசாலா-1டேபிள்ஸ்பூன்
(fat free)எவாப்பரேடட் மில்க் -1/4கப்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
நெய்-1டீஸ்பூன்
உப்பு

செய்முறை
பருப்புகளை அலசி 8 மணி நேரம் ஊறவிடவும்.
குக்கரில் 5 கப் தண்ணீர் கொதிக்கவிட்டு பருப்புகளைச் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
அதிகப்படியான நீரை வடித்து எடுத்துவைத்துவிட்டு பருப்புகளை மசித்துவைக்கவும்.

தக்காளிகளை மிக்ஸியில் அரைத்து எடுத்துவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு சீரகம் தாளிக்கவும்.
அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
தக்காளி நன்றாக சுண்டியதும் பருப்பு வேகவைத்த தண்ணீர், தால் மக்னி மசாலா ஒரு டேபிள்ஸ்பூன், தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இந்தக் கலவை நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மசித்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்.
தீயைக் குறைத்துக்கொண்டு கால் கப் எவாப்பரேடட் மில்க், ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
2-3 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலை தூவி தால் மக்னி-யை அடுப்பிலிருந்து இறக்கவும்.

சூடான சப்பாத்தி/ ஜீரா ரைஸ்/ புலாவ் வகைகளுடன் பரிமாற ஏற்ற சைட் டிஷ் இது. பொதுவாக உளுந்துடன் கிட்னி பீன்ஸ்தான் சேர்ப்பார்கள், என்னிடம் கிட்னி பீன்ஸ்/ராஜ்மா பீன்ஸ் இல்லாதாதால் இந்த black eyed peas சேர்த்திருக்கிறேன். இந்த ரெசிப்பி, MDH-தால் மக்னி மசாலா பேக்கட்டில் இருந்தது. விரும்பினால் எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய், எவாப்பரேடட் மில்க்கிற்கு பதிலாக ப்ரெஷ் க்ரீம், ஒரு டீஸ்பூனிற்கு பதிலாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கலாம். ;)
ரிச்சாக செய்யும் முறைதான் பேக்கட்டில் சொல்லிருக்காங்க, ஆனா நம்ம வசதிப்படி மாத்தி செய்வோம் என்று இப்படி செய்துவிட்டேன். தால் மக்னியை பரிமாறும்போது மேலாக கொஞ்சம் எவாப்பரேடட் மில்க்-ஐ ஊற்றி பரிமாறவும்.
~~~
தால் மக்னி என்றால் என் மனதில் உடனே ஒரு கொசுவர்த்தி சுத்த ஆரம்பிக்கும். இந்த படம் எங்க ஹனிமூன் ட்ரிப்பில் எடுத்தது. அப்பல்லாம் நார்த் இண்டியன் உணவுன்னாலே தலை தெறிக்க ஓடுவேன். 5 நாள் டிரிப்பில் வட இந்திய உணவு வகைகளை சாப்பிடப் பிடிக்காமல் நான் பட்ட பாடு...அதனால போகும் இடமெல்லாம் சவுத் இண்டியன் ஹோட்டல்கள் தேடி என்னவர் பட்ட பாடு!!! :))))) இந்த படத்தில கூட பாருங்க..தால் மக்னிய விட்டுட்டு தயிர்தான் சாப்பிடறேன். ஹிஹி! அப்ப இருந்து இன்று வரை தால் மக்னி-ன்னா எனக்கென்னமோ அவ்வளவா விருப்பம் கிடையாது. ஆனா என்னவர் அதுக்கு அப்படியே ஆப்போஸிட்!! தால் மக்னி ரொம்பப் புடிக்கும் அவருக்கு. அதனால் வீட்டில் செய்து பார்ப்போமே என்று முயற்சித்தது இது. பருப்பு வாங்கி மாதக்கணக்கா அப்படியே இருந்தது. மசாலா வாங்கினாலாவது(!) செய்வேனோ என்ற நப்பாசையில் அதையும் வாங்கி பலநாட்கள் கழித்து வெற்றீகரமா செய்துட்டேன். நீங்களும் செய்து பாருங்க! :)))

Monday, March 12, 2012

முள்ளங்கி சாம்பார் & சேப்பங்கிழங்கு வறுவல்

விதவிதமாக சாம்பார் வைத்தாலும், வெறுமனே ஒரு காய் மட்டும் சேர்த்து வைக்கும் சாம்பாருக்கு ருசி அதிகம்தான். அதிலும் வெள்ளை முள்ளங்கி சாம்பாரில் போட்டால் தனி ருசியாக இருக்கும். வெகுநாட்களாக இங்கே வெள்ளை முள்ளங்கி வாட்டசாட்டமாக படா சைஸில் பயமுறுத்தும். அதனால் சின்னச்சின்ன சிவப்பு முள்ளங்கிக் கொத்துகள் மட்டுமே வாங்குவது வழக்கம். சமீபத்தில் சில நாட்களாக இந்தியன் ஸ்டோரில் ப்ரெஷ்ஷாக வெள்ளை முள்ளங்கிகளைப் பார்க்கிறேன்.

காய்கறிகள் பக்கம் போகையிலே பசேலென்ற கீரையுடன் வெள்ளைவெளேர் முள்ளங்கி என்னை வாங்கிட்டுப்போய் சாம்பார் வையேன்-னு கெஞ்சற மாதிரி(!)யே இருந்ததா..வாங்கிட்டு வந்து சாம்பாரும் வைச்சு சாப்புட்டாச்சு! :)

தேவையான பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு -1/4கப்
முள்ளங்கி - பாதி (நறுக்கிய காய் அரைகப் வருமளவு)
புளிக்கரைசல் -1/4கப்
வெங்காயம்-1
தக்காளி-2
பச்சைமிளகாய்-1
சாம்பார் பொடி-2டீஸ்பூன்
மஞ்சள்பொடி-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
தேங்காய்த்துருவல்(விரும்பினால்) -1 டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
முள்ளங்கியை கழுவி வில்லைகளாக நறுக்கவும்.
வெங்காயம்,ப.மிளகாய்,தக்காளியை பெரிய துண்டுகளாய் நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு கடுகு-சீரகம் தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
நறுக்கிய முள்ளங்கி சேர்த்து, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து சிலநிமிடம் வதக்கவும்.
புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
காய் வெந்ததும் வேகவைத்து மசித்த பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இறுதியாக தேங்காய்த்துருவல், சாம்பார்தூள் சேர்த்து நுரைக்கட்டி லேசாகக் கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

சேப்பங்கிழங்கு வறுவல்
இது சித்ராசுந்தர் வலைப்பூவில் பார்த்து செய்தது. முதல்முறை கிழங்கு குழைந்தது..இரண்டாம் முறை ஓரளவுக்கு சுமாரா(!) வேகவைத்து செய்துவிட்டேன். :) ரெசிப்பிக்கு நன்றிங்க!

தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு -3
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/8டீஸ்பூன்
உப்பு
பூண்டு- 2 பற்கள்
தயிர் -1டேபிள்ஸ்பூன்
எண்ணெய்

செய்முறை
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வட்டமான வில்லைகளாக நறுக்கவும்.

மிளகாய்தூள்-உப்பு-பெருங்காயத்தூள் மூன்றையும் ஒன்றாகக் கலக்கி, கிழங்கு வில்லைகள் மீது சீராகத் தடவி அரைமணி நேரம் ஊறவிடவும்.

தோசைக்கல்லை காயவைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சேப்பங்கிழங்குத் துண்டுகளை பரவலாக அடுக்கவும். பூண்டை நசுக்கிப் போடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிடவும்.

ஒருபுறம் வெந்ததும், மறுபக்கம் திருப்பி விட்டு கட்டியில்லாமல் கலக்கி வைத்த தயிரை ஸ்பூனால் தடவவும். இன்னும் சிறிது எண்ணெய் விட்டு முறுகவிடவும். பிறகு அடுத்தபக்கம் திருப்பி தயிரைத் தடவி முறுகவிட்டு எடுக்கவும்.

சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி!


முள்ளங்கி சாம்பார்-சாதம்-சேப்பங்கிழங்கு வறுவல்! ஹெல்ப் யுவர்செல்ஃ~~ :)

Monday, January 30, 2012

ஏழு காய் சாம்பார்

பொங்கல் குழம்பு/ திருவாதிரை கூட்டு/ 7 கறி குழம்பு/கதம்ப சாம்பார் இப்படி பலபேரில் திருவாதிரை சீஸன்ல இருந்து அங்கங்கே வலைப்பூக்களில் வந்த ரெசிப்பிகளைப் பார்த்து நாமும் செய்து பார்ப்போமேன்னு நிதானமா(!) இப்பச் செய்துபார்த்தேன். :)
தேவையான பொருட்கள்

நறுக்கிய காய்கள் -1 கப் (அ) 11/2 கப்
துவரம் பருப்பு -1/4 கப் (தேவையான நீர், மஞ்சள்தூள் சேர்த்து வேகவைச்சுக்குங்க)
புளிக்கரைசல்-1/4கப்
மஞ்சள்த்தூள் -1/8டீஸ்பூன்
வறுத்து பொடிக்க
சீரகம்-1டீஸ்பூன்
மிளகு-1டீஸ்பூன்
தனியா-1டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-3 (அ) 4
கடலைப்பருப்பு-1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் -1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க
எண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து

செய்முறை (படங்களில் இருக்கும் நம்பருக்கு ஏற்ற வரிசையில் ரெசிப்பியும் இருக்கு. கரெக்ட்டாப் படங்களைப் பார்த்துக்கலாம். :) )

1.வறுக்க வேண்டிய பொருட்களை துளி எண்ணெயில் கருகாமல் வறுத்து, ஆறவிட்டு..

2. மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

3.காய்களை ஒரே அளவில் இருக்குமாறு நறுக்கி பாத்திரத்தில் போட்டு, மஞ்சள்தூளுடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

4.காய்கள் வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்க்கவும்.

5.வெந்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

6.குழம்பு கொதிவந்ததும் மசாலாப் பொடியைச் சேர்த்து, தேவையான அளவுக்கு தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.

7. ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து இறக்கவும்.

8.தாளிப்புகரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம்,கறிவேப்பிலை,வரமிளகாய் தாளித்து குழம்பில் ஊற்றவும். காரசாரமான கமகம சாம்பார்/ 7 கறி கூட்டு ரெடி! :)

பொங்கல் முடிந்து பலநாள் கழிச்சு இந்தக் குழம்பை செய்ததால் பொங்கலுடன் சாப்பிடவில்லை, ஓட்ஸ்+கோதுமைமாவு தோசையுடன் சாப்பிடுங்க. :)

ஏழு காயிலே குழம்பு செய்யணும்னு முடிவு செய்துட்டேன்,ஆனா (முதல் படத்திலே) பாருங்க...
1.அரசாணிக்காய்(மஞ்சள் பூசணி/பரங்கி)
2.ப்ரோக்கலி
3.உருளை
4.கேரட்
5.பட்டாணி
6.பீன்ஸ்
....ஆஹா ஆறு காய்தானே இருக்குது?? இன்னொரு காயும் வேணுமில்ல?? ஃப்ரிட்ஜை குடைஞ்சதில மாட்டினது முட்டைக்கோஸ்,அதையும் கொஞ்சம் எடுத்து கழுவி நறுக்கி போட்டா ஏழு காய் ஆகிருச்சு! :)

ப்ரோக்கலியும் முட்டைக்கோஸும் பட்டாணியும் சாம்பார்ல போடறதான்னு புருவத்தை உயர்த்தறீங்களா?? ஹிஹிஹி..என்ன செய்ய? ஃப்ரோஸன் முருங்கை இருந்தது,ஆனா அதை தனியா வேகவிட்டு சேர்க்க பொறுமை இல்ல, அதுவும் இல்லாம அப்பவும் காய் குறையும்ல? இந்தக் கூட்டுக்கு முக்கியமான காய் பரங்கி/அரசாணி...அது இருந்தது. இருந்த காய்களைச் சேர்த்து 7-ங்கற லக்கி நம்பரை மிஸ் பண்ணிரக்கூடாதேன்னு அஜீஸ்;) பண்ணிகிட்டேன். இன்னொரு காமெடி என்னாச்சுன்னா சாம்பார்ல ப்ரோக்கலி + அரசாணிக்காய் ரெண்டுமே கரைஞ்சு(!) போயிருச்சு..ஹிஹி!!! நீங்க பார்த்து கரெக்ட்டா வேகவிடுங்க,சரியா? ;)
~~~
சாம்பாருக்கு போட்டது போக மீதியிருந்த பரங்கிக்காயில் ஒரு மதியம் பத்து நிமிஷத்திலே இந்த தயிர்குழம்பு செய்தேன். ரெசிப்பி ப்ராப்பரா பார்க்கணும்னா இங்கே இருக்கு..

ஷார்ட்கட்ல போனம்னா, "அரசாணிக்காயை கொஞ்சமா தண்ணி, தேவைக்கு உப்பு சேர்த்து வேகவிடணும். சிறு துண்டு இஞ்சி,ஒரு பச்சைமிளகா சேர்த்து ஒரு கப் தயிருடன் சேர்த்து மிக்ஸில அரைச்சு, காயில சேர்த்து லோ ஹீட்ல ஒரு கொதி விடணும். கடுகு , சீரகம், ஒரு வரமிளகா தாளிச்சு கொட்டினா சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு சூப்பர் குழம்பு ரெடி! :) " Thanks to Faseela for the quick n easy recipe!
~~~
இது இங்கே கிடைக்கும் அரசாணிக்காய்/பரங்கிக்காய்/pumpkin..

இன்னொரு வியூ...
இது கூகுளாரின் இமேஜஸ்..முழுக்காய்!!
படம் கேட்ட ஆட்கள் காமெடி கீமெடி(!) பண்ணாம சீரியஸாக் கேட்டிருக்கிறீங்கள் என்ற நம்பிக்கையில் படங்கள் இணைத்திருக்கிறேன். :) ;)

Thursday, July 7, 2011

அரைத்துவிட்ட சாம்பார்-சுலப முறை

பொதுவாக அரைத்துவிட்ட சாம்பார் என்றால் கடலைப்பருப்பு,வரமிளகாய்,தனியா,சீரகம்,தேங்காய் இன்ன பிற பொருட்களை தனியாக வறுத்து அரைத்து சேர்த்துத்தான் செய்வது வழக்கம். மசாலா வதக்கி, அரைத்து,கரைத்து செய்ய நேரமும் பொறுமையும் இல்லாத சமயங்களில் அதே சுவையுடன் குறைந்த நேரத்தில் சாம்பார் வைப்பது எப்படின்னு பார்க்கலாமா?

0000*****0000
இந்த இடத்தில ஒரு முப்பது செகன்ட் விளம்பர இடைவேளை..யூட்யூப் போயி அவிங்கவிங்களுக்குப் புடிச்ச ஜிங்கிள்ஸ்-ஆ கேட்டுட்டு மறக்காம வந்துருங்க,சரியா?
அவ்வளவு பொறுமை இல்லையா..அப்ப இங்கயே பாருங்க..மொளகாப்பொடி விளம்பரம்தானேன்னு கோக்குமாக்காக் கேக்கக்கூடாது,இது சும்மா ஒரு சாம்பிள்தான்! ஹிஹிஹி!



0000*****0000

தேவையான பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு -1/4கப்
புளிக்கரைசல்-1/4கப்
தக்காளி(பெரியதாக)-1

சின்ன வெங்காயம்-10 (அல்லது பெரியவெங்காயம் -1)
பச்சைமிளகாய்-1
நடுத்தரதுண்டுகளாக நறுக்கிய (விருப்பமான) காய்-1/2கப்
மிளகாய்த்தூள்-11/2டீஸ்பூன்
மஞ்சள்த்தூள்-1/4 டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

கடுகு-1/2டீஸ்பூன்

பெருங்காயத்தூள்-1 சிட்டிகை
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை -சிறிது


அரைக்க

தேங்காய்-கால்மூடி

தனியா-11/2டீஸ்பூன்

செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு-சீரகம்-பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் காயைச் சேர்த்து புளித்தண்ணீர்-மஞ்சள்த்தூள்-மிளகாய்த்தூள்-உப்பு சேர்த்து வேகவைக்கவும்.


தேங்காய்-கொத்துமல்லி விதையை கொஞ்சமாகத்தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வெந்த காயுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

வேகவைத்த பருப்பு,சர்க்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். கம-கம வாசனையுடன் சுவையான அரைத்துவிட்ட சாம்பார் ரெடி!

சாதம்-இட்லி-தோசை எல்லாவற்றுடனும் சூப்பராக மேட்ச் ஆகும் இந்த ஈஸி சாம்பார்.

*************

என்ன இது இம்புட்டு பவ்யமா(!) ஒரு போஸ்ட்டுன்னு நீங்கள்லாம் மூக்கு மேல விரல் வைச்சுரக்கூடாதேன்னு... அடுத்த போஸ்ட்டுக்கு ஒரு முன்னோட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

:))))))))))))

Thursday, March 4, 2010

டிபன் சாம்பார்

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/4கப்
வெங்காயம் - பாதி
தக்காளி - 2 (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் - 1
கடுகு -1/2ஸ்பூன்
சீரகம் -1/2ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4ஸ்பூன்
புளிக்கரைசல் - 1/4கப்
சாம்பார்த்தூள் - 1 1/2ஸ்பூன்
சர்க்கரை - 1/2ஸ்பூன்
எண்ணெய் - 1ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது

செய்முறை
பருப்புடன் கால் ஸ்பூன் மஞ்சள்தூள், இரண்டு மூன்று சொட்டு எண்ணெய் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் - பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் கடுகு,சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து காய்ந்த மிளகாய், வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்னர் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

எல்லாம் நன்கு வெந்ததும் வெந்த பருப்பை நன்றாக மசித்து சாம்பாருடன் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் சாம்பார்த்தூள் சேர்த்து அடுப்பை குறைந்த சூட்டில் வைக்கவும்.

சாம்பார் நுரைக்கட்ட ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் லோ ஹீட்டில் வைத்து கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

கம-கம டிபன் சாம்பார் தயார்..இட்லி,தோசை,ஊத்தப்பம்,பொங்கல், உப்புமா, கிச்சடி இவற்றுக்கு பொருத்தமான ஜோடி இந்த சாம்பார்.

குறிப்பு
  • எப்பொழுதும் சாம்பார் பொடி சேர்த்ததும், நிறைய நேரம் சாம்பாரை கொதிக்க விடக் கூடாது.நுரைக் கட்ட ஆரம்பித்ததுமே அடுப்பிலிருந்து இறக்கிவிடவேண்டும்.
  • சாம்பார் கெட்டியாக இருக்காது. திக்காக வேண்டும் என்றால் தண்ணீரின் அளவைக் குறைத்துக்கொள்ளவும்.

இந்த முறை ஊரிலிருந்து சக்தி சாம்பார் பொடி வாங்கி வந்திருக்கிறேன்..என்னதான் எம்.டி.ஆர். சாம்பார் பொடி உபயோகித்தாலும் நம்ம ஊர் சாம்பார் டேஸ்ட் தனிதான்! :) எம்.டி.ஆர்-ல பட்டை கிராம்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் கர்நாடகா சாம்பார் டேஸ்ட் வந்துடும்..அன்ன பூர்ணா சாம்பார் பொடி, சக்தி சாம்பார் பொடி இரண்டும் வாங்கி யூஸ் பண்ணிபாருங்க..உங்களுக்கே வித்யாசம் தெரியும்.

LinkWithin

Related Posts with Thumbnails