Showing posts with label இனிப்புகள். Show all posts
Showing posts with label இனிப்புகள். Show all posts

Wednesday, April 27, 2016

பாசிப்பருப்பு பாயசம்

பாயசம் செய்யும்போதெல்லாம் பெரும்பாலும் எங்க வீட்டில் செய்யப்படுவது இந்த "பருப்பு பாயசம்" தான்..எனக்கு எந்த பாயசமாக இருந்தாலும் பிடிக்கும், ஆனால் இன்னொருவருக்கு பருப்புப் பாயசம் மட்டும்தான் பிடிக்கும், அதனால் சேமியா/ஜவ்வரிசி பாயசம் செய்யலாமா என்ற கேள்விக்குப் பதிலே கிடைக்காமல் போய்விடும். பலநாட்களாக மறந்து போயிருந்த கேள்வி, தமிழ்ப் புத்தாண்டுக்குத் தலைதூக்க, கேள்வியைக் கேட்காமலே நானாக பதிலை ஊகித்து பாயசம் வைத்தாயிற்று. பருப்பு வேகவைத்த பிறகுதான், இது நம்ம வலைப்பூ-வில பகிர்ந்திருக்கிறோமா என்ற சந்தேகம் வர...படமெடுத்து, இங்கேயும் வந்துவிட்டது பாயசம். 

சாதாரணமான ரெசிப்பிகளாக இருந்தாலும் வீட்டுக்கு வீடு சிறு வித்யாசங்கள் இருக்கும், ஏன் சமைக்கும் ஆளுக்கு ஆள் வித்யாசங்கள் இருக்கும்..எங்க வீட்டு செய்முறை இப்படி..நீங்களும் ஒரு முறை செய்து பாருங்களேன்..! 

தேவையான பொருட்கள் 
வேகவைத்த பாசிப்பருப்பு -1/2கப் 
வெல்லம் - 2 அச்சு (படம் பார்த்தறிக... :)) 
தேங்காய்ப்பால் பொடி - 1டேபிள்ஸ்பூன் (அ) தேங்காய்ப்பால் -1/4கப் 
ஏலக்காய் -2
திராட்சை முந்திரி - கொஞ்சம் 
நெய் - 1 டேபிள்ஸ்பூன்  

செய்முறை
பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஆறியதும் லேசாக மசித்து வைக்கவும்.
ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.
வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கரையவிடவும்.
கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும். 
வெல்லக் கரைசலுடன் வெந்த பருப்பை சேர்க்கவும். 
பருப்பு வெல்லத்துடன் கலந்து நன்கு கொதித்ததும் தேங்காய்ப்பால் பொடியைச் சேர்த்து கட்டிகளில்லாமல் கலக்கி விடவும். அடுப்பின் தணலை குறைத்து வைக்கவும். 

தேங்காய்ப்பால் பாயசத்துடன் நன்கு கலந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்ப் பொடியைச் சேர்க்கவும்.
சிறு கரண்டியில் நெய்யை சூடாக்கி, முந்திரி சேர்க்கவும், பொன்னிறமானதும் திராட்சையைச் சேர்க்கவும்.
 
உடனே பரிமாறுவதாக இருந்தால் பாயசத்தில் கலந்து பரிமாறலாம். அல்லது தனியே வைத்திருந்து பரிமாறும்பொழுது  வறுத்த முந்திரி திராட்சையைக் கலந்துவிட்டு பரிமாறலாம்.

எளிமையான, கொஞ்சம் பொருட்களைக் கொண்டு விரைவில் செய்யும் இனிப்பு. சுவையும் அருமையாக இருக்கும். செய்து பாருங்க. நன்றி! 

Thursday, November 19, 2015

கோயா குலாப் ஜாமூன்(Khoya Gulaab Jamoon)

தேவையான பொருட்கள் 
இனிப்பில்லாத பால்கோவா/கோயா/மாவா - 200கிராம் 
மைதா மாவு -1/4கப் 
ஆப்ப சோடா/ பேக்கிங் சோடா - 2சிட்டிகை 
பால் -1/4கப்
சர்க்கரை - 11/4கப்
தண்ணீர் - 11/4கப் 
ஏலக்காய்-2 
எண்ணெய் - பொரிக்க 

செய்முறை 
கோயா-வை 3-4 மணி நேரங்கள் முன்பாகவே ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும். அறை வெப்பநிலைக்கு வந்தவுடன் அதனை கைகளால் உதிர்த்துக்கொள்ளவும். 
நான் காய்துருவியால் கோயாவை துருவி இருக்கிறேன். 

துருவிய கோயாவுடன் பேக்கிங் சோடா, மைதா மாவு சேர்க்கவும்.
கைகளால் நன்றாக பொடித்துவிட்டுக் கொண்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகப் பால் தெளித்து பிசையவும்.
அழுத்திப் பிசையத் தேவையில்லை.. விரல்களால் மென்மையாக பிசிறி விட்டு மாவு ஒன்றாக சேர்த்து வந்ததும் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகள் விரிசல் விழாமல் ஸ்மூத்-ஆக இருக்கும்படி உருட்டிவைக்கவும்.
மிதமான தீயில் எண்ணெய் காயவைத்து குலாப் ஜாமூன்களை பொரிக்கவும்.
பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சர்க்கரைப் பாகுக்கு :-
11/4 கப் சர்க்கையுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்..பாகு கொதி வர ஆரம்பித்த 5 நிமிடங்களில் இறக்கி வைக்கவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

பாகும் சற்று சூடாக இருக்கவேண்டும், ஜாமூன்களும் சற்றே சூடாக இருக்கவேண்டும். ஜாமூன்களை சர்க்கரைப்பாகில் போட்டு ஊறவிடவும்.
இரண்டு மூன்று மணி நேரங்கள் ஊறியதும் சுவையான குலாப்ஜாமூன் ரெடி.

Thursday, September 17, 2015

இனிப்பு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1/2கிலோ
வெல்லம் - 1/2கப் (இனிப்புக்கேற்ப)
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்-2
தேங்காய்த்துருவல் - 2டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துண்டுகள் -2டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-2 டீஸ்பூன்

செய்முறை
புழுங்கலரிசியைக் 2-3 முறை களைந்து 3 மணி நேரங்கள் ஊறவிடவும்.
ஊறியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்துடன் கொஞ்சமாக நீர் சேர்த்து குறைந்த தீயில் கரையவிடவும்.
 வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைக்கவும். அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மாவைச் சேர்த்து கிளறவும்.
 மாவு கெட்டியாகி வரும்போது தேங்காய்த்துண்டுகள் மற்றும் ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்து கிளறவும்.
கடைசியாக 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறவும். மாவு கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும். அப்போது இறக்கி வைத்து ஈரத்துணியால் மூடி ஆறவைக்கவும்.
இட்லிப்பானையில் தண்ணீர் சூடாக்கவும். மாவு ஆறியதும் சிறு உருண்டைகளாக எடுத்து கைகளால் அழுத்தி இட்லித்தட்டில் வைத்து வேகவைக்கவும்.
கொழுக்கட்டைகள் 5 நிமிடத்தில் வெந்துவிடும். (நான் ஆறு ஆறு கொழுக்கட்டைகளாகத்தான் வேகவைத்தேன், அதிகம் வைத்தால் அதற்கேற்ப நேரத்தை கவனித்து வேகவிடவும்.)
சுவையான சாஃப்டான இனிப்புக் கொழுக்கட்டைகள் தயார்.
பிள்ளையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 
:) 

Tuesday, May 5, 2015

Shrikhand/ஶ்ரீகண்ட்

தேவையான பொருட்கள்
கெட்டித் தயிர்/Greek Yogurt-1கப்
பொடித்த சர்க்கரை/Powdered Sugar -1/4கப்
ஏலக்காய்-1
ஆரஞ்ச் கலர் - சில துளிகள் (விரும்பினால் மட்டும்)

செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.
கெட்டித்தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து விஸ்க்-ஆல் கலக்கவும்.
நன்றாக கலந்து க்ரீம் போல பதம் வந்ததும் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து கலக்கவும்.
ஏலக்காய்ப் பொடி மற்றும் கலர்(விருப்பப்பட்டால்) சேர்க்கவும்.
கலந்து விடவும்.,
இதனை 5-6 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும்.
சுவையான ஶ்ரீகண்ட் சுவைக்கத் தயார்..
சிம்பிளாக சீக்கிரமாகச் செய்துவிடலாம். 
குறிப்பு
சாதாரண தயிரை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி வைத்து நீரை முழுவதும் வடித்துவிட்டு கிடைக்கும் கெட்டித் தயிரே ஶ்ரீகண்ட் செய்ய பயன்படுவது.  (தயிரை வடிகட்டி, அதனை 4-5 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜினுள் வைத்தால் தண்ணீர் முற்றிலும் வடிந்துவிடும்)
க்ரீக் யோகர்ட் இப்படி வடிக்கட்டப்பட்டது என்றாலும் அதிலும் தண்ணீர் இருக்கிறது, அதனால் அதனையும் ஒரு மணி நேரமாவது துணியில் வடிகட்டி பயன்படுத்துவது நலம்.

Tuesday, January 20, 2015

கல்கண்டு பொங்கல்

2015-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்பாய்த் தொடங்கலாமே என பொங்கலுக்கு செய்த ரெசிப்பியுடன் ஆரம்பமாகிறது.  

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1/2கப்
பாசிப்பருப்பு-2டேபிள்ஸ்பூன்
கல்கண்டு-1/4கப்
சர்க்கரை-1/4கப் 
(கல்கண்டு மட்டுமே கூட சேர்த்துக்கொள்ளலாம். அப்படியாயின் அரை கப் கல்கண்டு அல்லது இனிப்பிற்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.
பால்-1/4கப் 
நெய்-3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்-2
முந்திரி-திராட்சை 

செய்முறை
அரிசியை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசம் வர வறுத்து வைக்கவும்.
குக்கரில் அரிசி-பருப்புடன் 21/2 கப் தண்ணீர் விட்டு 3 விசில்கள் வரும்வரை வேகவைக்கவும்.

ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சூடான பாலைச் சேர்த்து பொங்கலை மசித்துக்கொள்ளவும்.
அதனுடன் கல்கண்டு மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து குறைவான சூட்டில் வைத்து கிளறவும். 
கற்கண்டு கரையும் வரை குறைந்த சூட்டில் கிளறவேண்டும். இடையில் ஓரொரு டேபிள்ஸ்பூனாக 2 முறை நெய்யையும் சேர்த்துக் கொண்டு கிளறவும்.
மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி-திராட்சையை பொரித்துக் கொள்ளவும். பொடித்த ஏலக்காய், முந்திரி திராட்சையை பொங்கலில் சேர்த்து கலக்கவும்.
கல்கண்டு பொங்கல் தயார்.
குறிப்பு
அரைக்கப் கல்கண்டைச் சேர்க்காமல் ஏன் கால் கப் மட்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு பதில் தேவைப்பட்டால் அடுத்துள்ள வரிகளைப் படிங்க..அல்லது கமெண்ட் பாக்ஸுக்கு ஜம்ப் பண்ணிருங்க! ;) 
ஏதோ ஒரு காலத்தில் லட்டு செய்வதற்காக வாங்கிய கல்கண்டு கொஞ்சம் இருப்பது நினைவு வரவே க.பொங்கல் செய்ய ஆரம்பித்தேன், வீட்டுக்குள் ஒரு கூகுள் சர்ச் செஞ்சு கல்கண்டு பேக்கட்டைக் கண்டுபிடிச்சு பார்த்தா.....கால் கப் கல்கண்டுதேன் இருக்கு!! அவ்வ்வ்வ்வ்...இதுக்காக முன் வைச்ச காலை பின் வைக்க முடியுமா? மிச்சம் மீதிக்கு சர்க்கரையச் சேத்து பொங்கிட்டேன்.  ஹிஹி...

Wednesday, May 21, 2014

பழக் கச்சாயம்

தேவையான பொருட்கள் 
பழுத்த வாழைப்பழம் -1
ரவை-1/2கப்
மைதாமாவு-1/4கப்
சர்க்கரை -1/4கப்
பேக்கிங் சோடா-1சிட்டிகை
ஏலக்காய்(விரும்பினால்)-1
எண்ணெய் -பொரிக்க 
செய்முறை
நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஒன்றை தோலுரித்து மசித்துக்கொள்ளவும். 
அதனுடன் ரவை-மைதா-பேக்கிங் சோடா-சர்க்கரை-ஏலக்காய்ப் பொடி இவற்றை சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். 
இந்தக் கலவை குறைந்தது 2 மணி நேரங்களாவது ஊறவேண்டும். [அதிக நேரம் ஊறினாலும் சுவை நன்றாக இருக்கும்.  கரைத்து குளிர்சாதனப்பெட்டியில் 8-9 மணி நேரங்கள் வைத்தும் உபயோகிக்கலாம்.]
எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து கச்சாயக் கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போடவும்.
 பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு ஆறவைத்து பரிமாறவும்.
இந்தக் கச்சாயம் அறை வெப்பநிலையில் 1-2 நாட்கள் நன்றாக இருக்கும். பழசானால்தான் சுவை அதிகரிக்கும். முதல் நாள் செய்து அடுத்த நாள் சாப்பிட்டுப் பாருங்க..உங்களுக்கே தெரியும்! :)

குறிப்பு 
வாழைப்பழத்தின் சுவையே போதுமானதாக இருந்ததால் நான் ஏலப்பொடி சேர்க்கவில்லை.
மாவில் சர்க்கரை சேர்த்து கரைத்திருப்பதால் கச்சாயம் சீக்கிரம் சிவக்கும். கவனமாக கருக விடாமல் எடுக்கவேண்டும். 

Monday, April 14, 2014

Wholegrain Bread Pudding with Condensed Milk

பிறந்திருக்கும் "ஜய" வருடம் அனைவருக்கும் நன்மை பயக்க வாழ்த்துக்கள்! தமிழ்ப்புத்தாண்டின் முதல் பதிவாக ஒரு இனிப்புடன் துவங்கலாம். :) 
தேவையான பொருட்கள் 
ரொட்டித்துண்டுகள் -4 (நான் ஹோல்க்ரெய்ன் ரொட்டி உபயோகித்திருக்கிறேன்.)
வெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
கண்டென்ஸ்ட் மில்க்-1/4கப்
முட்டை-2
பால்-1/2கப் 
உலர் திராட்சை- ஒரு கைப்பிடி 
சின்னமன் பவுடர்-1/4டீஸ்பூன் 
சர்க்கரை-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
ரொட்டியை சிறுதுண்டுகளாக நறுக்கி வைக்கவும். 
மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க் + வெண்ணெய் சேர்த்து 30 விநாடிகள் சூடுபடுத்தவும். வெண்ணெய் உருகிவிடும், அதனை கண்டென்ஸ்ட் மில்க்குடன் சேர்த்து நன்றாக கலந்து ஆறவைக்கவும்.  
ஆறியதும் அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி கலக்கவும். 
அதனுடன் பால் சேர்த்து கலக்கவும். 
நறுக்கிய ரொட்டித்துண்டுகள், பட்டை பொடி(சின்னமன் பவுடர்), உலர் திராட்சை இவற்றை பால்-முட்டை கலவையுடன் சேர்த்து கிளறிவிடவும். 

Pudding செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி ப்ரெட் கலவையை ஊற்றவும். 
மேலாக இன்னும் சிறிது கண்டென்ஸ்ட் மில்க்கை ஊற்றி, சர்க்கரையைத் தூவிவிடவும். 
350F ப்ரீஹீட் செய்யப்பட்ட அவன் -ல் Pudding பாத்திரத்தை வைத்து 40-45 நிமிடங்கள் பேக் செய்யவும். 
சுவையான சாஃப்ட்டான Pudding ரெடி. ஆறீயதும் கத்தியால் துண்டுகள் போட்டு ஐஸ்க்ரீம் அல்லது விப்பிங் க்ரீம் இவற்றுடன் பரிமாறவும். 
தட்டில் இருப்பதில் 80% எனக்கு..20%
ஜீனோவுக்கு! 
நீங்களும் செய்து பாருங்க.. நன்றி! :) 

Friday, January 31, 2014

எடிபிள் கம் லட்டு/கோந்து லட்டு

ஒரு சில வருடங்கள் முன்பாகத்தான் "எடிபிள் கம் / சாப்பிடக்கூடிய கோந்து" பற்றி கேள்விப்பட்டேன், அதுவரை கோந்து என்றால் வேப்பமரத்தில் கத்தி கொண்டு கஷ்தப்பட்டு சுரண்டி எடுத்துவந்து நீர் ஊற்றி ஊறவைத்து 'கோந்து வாசனை'யுடன் உபயோகிக்கும் கோந்தும், பிறகு வந்த 'கேமல்' கம்-மும்தான் தெரியும்! :)
மராட்டி நண்பர்கள் வாயிலாகப் பெயர் அறிமுகமானாலும் இதனைப் பார்த்ததோ, சுவைத்ததோ கிடையாது. உடலுக்கு மிகவும் நல்லது, குளிர்காலத்தில் சாப்பிட உகந்தது (உடலுக்கு சூட்டைத் தரும் குணமுடையது இந்த கோந்து), இளம் தாய்மார்களுக்கு முதல் 40 நாட்கள் கட்டாயம் தருவோம். இடுப்பெலும்பு பலமாகவும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் வல்லது இந்த கோந்து  என்ற தகவல்களெல்லாம் தோழிகள் மூலம் அறிந்து கொண்டேன்.  என்னவரிடம் கோந்து வாங்கி வாங்க வாங்க வாங்க வாங்க என்று சொல்லி, ஒரு வழியாக எடிபிள் கம்மை கண்ணால பார்த்து, லட்டும் செய்து சுவைத்துவிட்டேன்! :))))    

உலர் பழங்கள், முந்திரி, பாதாம், வால்நட் மற்ற நட்ஸ் வகைகள், மக்கானா- என்ற பாப்கார்ன் போன்ற ஒரு பண்டம், ஏலக்காய், வெந்தயம் இப்படி ஊட்டச்சத்து மிக்க பொருட்கள், கூடவே தாராளமாக..ஏராளமாக நெய் இவற்றுடன் கடலைமாவு அல்லது கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதே இந்த லட்டு. கடலைமாவு ஜீரணிக்க கடினம் என்பதால் கோதுமை மாவு உபயோகித்து தோழியொருவர் லட்டு செய்துதந்தார் எனக்கு. [அதற்கு முன்பாக ரெசிப்பி கேட்கிறேன் பேர்வழி என்று முக்காமணி நேரம் நான் கேட்ட கேள்விகளில் நொந்து நூடில்ஸ்;) ஆகி அவராகவே லட்டைப் பிடித்துக் கொண்டுவந்து என் வாயை அடைத்தாரா என்பது அந்த "ஊப்பர்வாலா"-வுக்கே வெளிச்சம்! ஹிஹ்ஹிஹி..]

நேரடியாகக் கிடைத்த மீனைச் சாப்பிட்டுப் பசியாறிவிட்டே இருந்தால் எப்படி? நானும் மீன்பிடிக்கப் பழகவேண்டுமே? :) அதனால் வீட்டிலிருந்த பொருட்களோடு களமிறங்கினேன். அங்கங்கே ஷார்ட்கட்ஸ் போட்டு டெஸ்டினேஷனை ஒரு வழியாக ரீச் பண்ணினேன், ஆனால் ஏலக்காய், வெந்தயமெல்லாம் போட மறந்தாச்சு, அதனாலென்ன "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று மனசைத் தேத்திகிட்டு  வாங்க லட்டு செய்யப்போலாம்.. 
தேவையான பொருட்கள்
எடிபிள் கம் - 2 டேபிள்ஸ்பூன்
உலர் பழங்கள், நட்ஸ் வகைகள் -3/4கப்
கோதுமை மாவு-11/4கப்
சர்க்கரை-3/4கப்
நெய்-1/2கப்

செய்முறை
மிதமான சூட்டில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை காயவைத்து கோந்தைப் பொரித்து எடுக்கவும். [கோந்து பார்க்க பனங்கல்கண்டு போல இருக்கிறது, (வேப்ப மர கோந்தைப் போலவும்தான் இருக்கிறது, ஹிஹி..)பெருங்காயம் பொரிவது போல, பாப்கார்ன் பொரிவது போல பொரிகிறது இந்த கோந்து..கவனமாக எல்லாப் பக்கமும் பொரிந்து வரும்படி பொரித்தெடுக்கணும்! ]  
பாதாம்-வால்நட் இவற்றையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். 
திராட்சையையும் வறுத்து எடுக்கவும். 
பேரீட்சையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். 
பொரித்த பண்டங்கள் ஆறியதும், அவற்றுடன் நறுக்கிய பேரீட்சையையும் சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துவைக்கவும்.

கடாயில் இன்னுமிரண்டு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கோதுமைமாவைச் சேர்த்து வாசனை வர வறுக்கவும்.
[இதுக்கப்புறம்தான் நம்ம ஷார்ட்கட் போறோம்..யூஷுவலாக அடுப்பிலேயே வெகுநேரம் மாவை வறுத்துதான் லட்டு செய்வாங்க. நாம மைக்ரோவேவ் யூஸ் பண்ணிக்கலாம்! ;)]
மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் வறுத்த மாவு, சர்க்கரை சேர்த்து கலந்து மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கலந்து 4 நிமிடங்கள் சமைக்கவும். உடனே மைக்ரோவேவ்-ஐத் திறக்காமல் 3-4 நிமிடங்கள் விட்டு பிறகு திறந்து லட்டு கலவையை வெளியே எடுத்து நன்றாக கலந்து விடவும்.

பொடித்த நட்ஸ்-உலர் பழ கலவையைச் சேர்த்து கலந்து மீண்டும் 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
2-3 நிமிடங்கள் கழித்து மைக்ரோவேவ்-லிருந்து லட்டு கலவையை எடுத்து ஆறவிடவும்.
கலவை கை பொறுக்கும் சூட்டுக்கு ஆறியதும் லட்டுகளாகப் பிடித்துவைக்கவும்.
[குறிப்பு: இரண்டு கைகளிலும் நெய் தடவிக்கொண்டு லட்டுக்கள் பிடித்தால் அழகாக வரும். என்னைப் போல அவசரக் குடுக்கை + நளினமாக ஒரே கையில் பிடித்தால் படத்திலிருப்பது போல கோக்குமாக்கான உருண்டைகள் கிடைக்கும்! ;) அது உங்க வசதி!! :)]

தினம் ஒன்று என்ற வீதத்தில் இந்த உருண்டைகளை உண்ணலாம். அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால் கூடவே ஒரு கப் பாலைக் குடித்து லட்டுகளின் சூட்டைத் தணித்துக் கொள்ளவும். நன்றி, வணக்கம்! :)) 

Monday, October 14, 2013

சுரைக்காய் பாயசம்/ Bottle-gourd kheer- Lauki ki kheer-Dudhi kheer

தேவையான பொருட்கள்
துருவிய சுரைக்காய்-1/2கப்
பால்-2கப்
சர்க்கரை-1/4கப்
நெய்-2டேபிள்ஸ்பூன்
முந்திரி-கொஞ்சம்
ஏலக்காய்-2
முந்திரி, பாதாம், ஏலக்காய், சர்க்கரை சேர்த்து பொடித்த பொடி-1டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை
சுரைக்காயைக் கழுவி, தோல் சீவி, விதைகள் இருப்பின் அவற்றை நீக்கிவிட்டு துருவிக் கொள்ளவும். துருவிய காயை நன்றாகப் பிழிந்து, சுரைக்காயின் நீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் காயவைத்து  சிறு துண்டுகளாக உடைத்த முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 
அதே கடாயில் துருவிய சுரைக்காயைச் சேர்த்து மிதமான தீயில் சுருள வதக்கவும். 
பக்கத்து அடுப்பில் 2 கப் பாலை காய்ச்சி, பொங்கியதும் தீயைக் குறைத்து பால் கொஞ்சம் வற்றும்வரை சுண்டவைக்கவும். 
வதக்கிய சுரைக்காயைச் பாலுடன் சேர்த்து கலந்துவிடவும். 
சிலநிமிடங்கள் கழித்து கால்கப் சர்க்கரையைச் சேர்க்கவும். 
சர்க்கரை கரைந்து பாயசம் சற்றே கெட்டியானதும் பாதாம்-முந்திரி-ஏலம்-சர்க்கரை பொடியைச் சேர்க்கவும்.
ஏலக்காய் பொடித்து சேர்த்து, பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கவும். வறுத்துவைத்துள்ள முந்திரியைச் சேர்க்கவும்.
க்ரீமி அண்ட் ரிச் சுரைக்காய் பாயசம் தயார்.
சூடாகவும் பரிமாறலாம், அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில்ல்ல்ல்ல்ல்லென்றும் பருகலாம்.
சூடான பாயசத்தை விடவும் ஜில்ஜில் பாயசம் ரொம்ப அருமையாக இருந்தது. சூடாக சாப்பிடுவது ஒரு ருசி, குளிரவைத்து ருசிக்கையில் இன்னொரு ருசி. எது உங்க ஃபேவரிட் என்று செய்து சாப்பிட்டுப்பார்த்து மறக்காமச் சொல்லுங்க! :) 
நன்றி!

குறிப்பு

  • சம அளவு (1/4கப்) பாதாம், முந்திரி இவற்றையும் ஏலக்காயையும் வெறும் கடாயில் லேசாகச் சூடாக்கி ஆறவிடவேண்டும். ஆறியதும் கால்கப் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொண்டால் இப்படியான பாயசங்கள் மற்றும் மில்க் ஸ்வீட்களுக்கு ஓரொரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.  இனிப்புப் பண்டத்தின் சுவை கூடுவதுடன்,  கொஞ்சம் கெட்டியாகும், க்ரீமியாகவும் இருக்கும். 
  • இந்தப் பொடியைச் சேர்த்து மசாலா பால் கூட செய்யலாம். பாலைக் காய்ச்சி தேவையான அளவு பொடி, தேவைப்பட்டால் சர்க்கரையும் சேர்த்தால் மசாலா பால் ரெடி. 
  • இனிப்புகளுக்கு ஏலக்காயைப் பொடித்துச் சேர்த்தவுடன் சூடாக்காமல் இருந்தால் ஏலத்தின் வாசனை தூக்கலாக இருக்கும். அதனால் அடுப்பிலிருந்து இறக்கும்போது ஏலப்பொடி சேர்க்கவும்.
  • lauki-dudhi என்பன ஹிந்தியில் சுரைக்காயின் பெயர்கள். bottle gourd என்பது ஆங்கிலப்பெயர். [இது கூட எங்களுக்குத் தெரியாதா என நீங்க டென்ஷன் ஆகுமுன் மீ த எஸ்கேப்பூ! ;))))]

LinkWithin

Related Posts with Thumbnails