Showing posts with label செல்லம்'ஸ் கார்னர். Show all posts
Showing posts with label செல்லம்'ஸ் கார்னர். Show all posts

Sunday, June 30, 2019

ஜூன் 2019

நாட்களும் மாதங்களும் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன. மாதமொரு முறையாவது பதிவு போடவேண்டுமென்று நினைத்து, தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு ஜூன் 30-ஆம் தேதி இரவு 10.43க்கு ஒரு பதிவை தட்டிக்கொண்டிருக்கிறேன். :) :) :) 

இங்கே பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை ஜூன் 13ஆம் தேதி முதல் துவங்கியதால் ஸ்கூல் கிளம்(ப்)பும் அவசரம் இல்லை..ஆனால் நாள் முழுதும் 2 குட்டீஸை கட்டி மேய்க்கும் வேலை தூள் பறக்கிறது. கூடவே மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி-யும் சேர்ந்துகொள்ள ஜூன் மாதம் வெகுவேகமாகப் பறந்துவிட்டது, ஜூலை இப்பவே எட்டிப்பார்க்கிறது. ;) 

சரி, இந்தப் பதிவில் மீண்டும் தோட்டத்தில் விளைந்த காய்களைக் காண்போமா?? 
 கேரட்..ஷார்ட் & ஸ்வீட் வகை விதைகள், டிசம்பர் 2018 கடைசியில் நட்டது. ஜூன் மாதம் அறுவடைக்கு தயாரானது. கேரட் கிழங்குகள் குட்டிக்குட்டியாக, கொழுகொழுவென்று இருந்தன. ஷார்ட் வெரைட்டி என்பதால் நீளமில்லை..சுவை நல்ல இனிப்பாக இருந்தது. ஒரு பேக்கட் விதைகள், முதல் அறுவடையில் சுமார் இரண்டரைக்கிலோ கேரட் கிடைத்தது. அதன் பின்னர் தேவைக்கேற்ப பறிக்கிறேன். லயாவின் ஆசிரியைக்கு ஒரு முறை, பக்கத்திலிருக்கும் நண்பிக்கு ஒரு முறை என பறித்திருக்கிறேன். இன்னும் மீதமிருக்கின்றன. நாளைக்கு மீண்டும் கொஞ்சம் பறிக்கலாம் என்று எண்ணம்.

முதன்முறையாக இத்தனை கேரட்டுகள் விளைந்தது, நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமளவு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. இயற்கையன்னைக்கு ஒரு மிகப்பெரிய நன்றி!! :)


 அடுத்து ஃபாவா பீன்ஸ்/ ப்ராட் பீன்ஸ்..ஒரு செடி வாடிப்போயாகிவிட்டது. மீதமுள்ள ஒரு செடியில் பறித்த காய்கள். சுத்தம் செய்வது ஒரு வேலை என்றாலும், சுவை அமோகம். வெண்ணெய் போல வாயில் கரைகிறது.
பீன்ஸ் குழம்பு, சுடச்சுட இட்லியுடன்!! :) 
~~~
இந்த வருடம் என் பிறந்தநாள், திருமணநாளை மிகவும் ஸ்பெஷலாக்கியது கடல் தாண்டி, கண்டங்களையும் தாண்டி, ஆகாயவிமானத்தில் அழகாகப் பறந்து வந்த வாழ்த்து மடல்கள்!! 

இத்தனை சிரத்தையெடுத்து, வெட்டி, ஒட்டி, அழகாக உருவாக்கி, வாழ்த்துகளை தன் அழகுக்கையெழுத்தால் மேலும் அழகாக்கி அனுப்பிய என் அன்புத்தோழிக்கு..நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. I am so blessed to have you as a friend Aunty..Love you!!

இந்த வருடம் கோயில் தரிசனம் மிக நன்றாக இருந்தது. கூட்டமில்லை, குட்டிகள் இருவரும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டு சாமி கும்பிட்டார்கள். திரும்பி வரும் வழியில் இன்னொரு நண்பர் தம்பதி (அவர்களது திருமணநாளும் அதே ஜூன் 25)-யை உணவகத்தில் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி. நல்லதொரு நாளாக அமைந்தது. முகப்புத்தகத்தில் வாழ்த்திய அன்புநட்பூக்கள் இதையும் படிப்பீர்களென்ற நம்பிக்கையில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரிங்க, மணி 11 ஆகிருச்சு..நான் தூங்கப் போறேன்..மீண்டும் ஜூலையில் சந்திப்போம். நன்றி!

Sunday, February 24, 2019

அறுந்த வாலு..குறும்பு தேளு..!!

 ஆனாலும் அவ ஏஞ்சலு!!! :) :D

ஆமாங்க..எங்க வீட்டு குட்டி தேவதை ஒரு அறுந்தவாலு, குறும்புத்தேளு..விஷமக்காரக் குட்டி!! அப்பாவை தன் சுண்டுவிரலில் கட்டிச் சிறை வைப்பதிலாகட்டும்...
அம்மாவை அரை நொடி அக்கடான்னு அமர விடாமல் படுத்துவதிலாகட்டும்..
அக்காவை பார்த்துப்பார்த்து அவள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வதாகட்டும்..
ஜீனோவை "அட்ட்ட்ட்டி (அடி!!)..." என்று செல்ல மிரட்டல் செய்வதாகட்டும்...
அப்பாவோ அம்மாவோ கோபக்குரல் கொடுத்தால் கழுத்தைக்கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்துவதாகட்டும்..
லயாவுடன் சண்டை போட்டு அடி பின்னுவதாகட்டும்...
ஸ்வராக்குட்டியை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது எங்க சின்ன சாம்ராஜ்யத்தில்!!

இப்பத்தான் சின்னூண்டு விரல்களைப் படம் பிடித்த நினைவாக இருக்கிறது..அதற்குள் இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன..அம்மணி இப்ப எங்களையெல்லாம் மிரட்டியது போதாதென்று வருண பகவானையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டார். மழை வரும்போதெல்லாம் "ரெய்ன் ரெய்ன் கோ அவே.." பாடிப்பாடி போரடித்தபின் ஒருநாள் வெளியே பெய்து கொண்டிருந்த மழைக்கு ஒரே மிரட்டல்..."ரெய்ன்...ஸ்டாப்!! அக்கா அண்ட் பாப்ப வான்ட்ஸ் டு ப்ளே..ஸ்டாப்!" என்று கத்த ஆரம்பித்தார்..ஆனாலும் மழை விடலைங்கறது வேற கதை..ஹிஹி..!! 

இரண்டாம் பிறந்தநாளுக்கு முதல்நாள் கொட்டிய மழையில் தானே குடையைப் பிடித்துக்கொண்டு நடப்பதாய் அடம்பிடித்து அக்காவும் தங்கையும் மழையில் கொட்டமடித்து கும்மாளம் போட்டார்கள்..
கூடவே அக்காவுக்கு ஒரு வாரமாய் இருந்த ஜலதோஷமும் தங்கைக்கு ஒட்டிக்கொள்ள பிறந்தநாளன்று நல்ல சளி.. வாங்கிவந்த கேக்கை கட் செய்யவில்லை..எதுவுமே செய்யவில்லை..வாடிப்போன கீரைத்தண்டாய் வதங்கிக்கிடந்தவளைத் தோளில் போட்டுக்கொண்டே பிறந்தநாள் ஓடிவிட்டது.. ஒரு வாரம் படுத்தி எடுத்த ஜலதோஷம் கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே இந்த வருடம் குளிரும் மழையும் கொஞ்சம் அதிகபட்சமாகவே இருப்பதால் சளித்தொந்தரவும் விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது. 

சரி, அவையெல்லாம் போகட்டும்..பதிவில் இறுதியாக ஒரு புது ரெசிப்பி..டிரையல்!! கொஞ்சம் சொதப்பிவிட்டது என நான் முடிவேகட்டி குளிர்சாதனப்பெட்டியில் பூட்டி வைத்த மறுநாள் சில உணவுகள் பழசானாத்தான் ருசி என்பதை நினைவூட்டிய ஆப்பிள் க்ரம்ப் பை ( Apple Crumb Pie)
ரெசிப்பி விரைவில் எங்க குட்டி வாலுங்க, குறும்புத்தேளுங்க ரெண்டு பேரும் அனுமதிக்கையில் வெளியிடப்படும். வழக்கம் போல என் ஸ்வராக்குட்டி-க்கு நீங்கள் வழங்கும் ஆசீர்வாதங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.


Thursday, February 2, 2017

ஐவரானோம்..!!

38 திங்களுக்கு முன்னம் 
எங்களுக்கு ஒரு பதவி உயர்வைத் தந்து 
எங்கள் வாழ்வென்னும் இசைப்பயணத்தில் 
லயம் இணைந்தது! 
:) 
நாட்களும் வருடங்களும் கணப்பொழுதில் ஓடி மறைய...
என் கைக்குள் அடங்கியிருந்த குட்டிக்கை மெல்ல மெல்ல
ஓடி ஆடித் திரிந்து..
சின்னஞ்சிறு குழந்தை 
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து..
எனக்கு நல்லதொரு நட்பாய்ப் பரிமாணமெடுக்க...
இதயத்தின் ஒரு மூலையில் என் குட்டிப் பெண்,
 குழந்தைமை மறைந்து சிறுமியாய் மாறுகிறாளே என்ற சிறு ஆதங்கம் மெல்லியதாய்த் தோன்ற ஆரம்பிக்கையில்..
உன் ஏக்கத்தைப் போக்குகின்றேன்..
உங்கள் வாழ்க்கையில் லயத்துடன் ஸ்வரமும் சேரட்டும் 
என்று இறைவன் புன்னகைக்க..
எங்கள் குடும்பத்தில் தன் குட்டிப்பாதங்களைப் 
பதித்திருக்கின்றாள் எங்கள் இரண்டாவது தேவதை!!!
ஒருவர் இருவரானோம்..
எங்கள் நாலுகால்ப் பிள்ளையுடன் மூவரானோம்...
லயாவுடன் நால்வரானோம்..
இப்போது, 
ஸ்வரா-வுடன் ஐவராகி இருக்கிறோம்!!! 
:)))))) 
மழையின் துளியில் லயம் இருக்குது..
துளிகள் இணைந்து ஸ்வரம் பிரிக்குது!! 
வாழ்க்கை இனி இன்னும் இனிக்கப்போகுது!! 
:))))) 
We are Blessed with Another Beautiful Girl!! 
~~~~~
வழமை போல உங்களனைவரின் ஆசிகளை நாடி..
லயா, ஸ்வரா, ஜீனோ, அருண் 
மகி 

Wednesday, November 16, 2016

ABCD EFG..!!!

ABCD EFG..!!
SOMEONE SWEET HAS TURNED 3!!
:) :D B-)
36 மாதங்கள் ஓடிய வேகம் தெரியவில்லை... 2013, நவம்பர் 15-ல்  பட்டு வண்ண ரோசாவாய்ப் படுத்திருந்த என் "நச்சரிக்கும் சிட்டுக் குருவிக்கு" 3 வயது முழுமையடைந்துவிட்டது.  :)))

சில வசந்தங்கள் காத்திருந்து நான் பெற்ற பொன்வசந்தம் இன்று என் வாழ்க்கையை முழுவதுமாய்க் குத்தகைக்கு எடுத்து விரல் நுனியில் ஆட்டுவிக்கிறாள்.

என் கைக்குள் அடங்கிக் கிடந்த குட்டி மனுஷி இப்போது றெக்கை கட்டிப் பறக்கும் அருவியாய் துள்ளித் திரிகிறாள்.  சில நாட்களாய், பேனாவைக் கொடுத்து அவள் கையில் ஒரு ஸ்மைலியும் என் கையில் ஒரு ஸ்மைலியுமாய் வரைந்து கொண்டு அவ்வப்பொழுது வந்து ஸ்மைலி பத்திரமாய் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறாள். :)))

வாழ்க்கை நதியில் புதிதாய் உதித்த இன்பச்சுழலொன்று நதியின் போக்கையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்களும் சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். :) 

எங்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த எங்கள் பூமகளே...உலாவும் வானம்பாடியாய் வாழ்க கண்ணே!! பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு பல்லாயிரத்தாண்டு நீ நலம் வாழ வாழ்த்துக்கள்! :)) 

Sunday, July 27, 2014

சவலைப் பிள்ளைகள்..

மொத்தமாக கவனம் செலுத்தி கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட முதல் பிள்ளைகள் இரண்டாம், மூன்றாம் பிள்ளைகள் வந்த பின்னர், கவனிப்புக் குறைய கொஞ்சம் ஏங்கிப் போய்விடுவார்கள்.. அந்த சவலைப்பிள்ளைகள் போல என் வலைப்பூக்களும், தோட்டமும் (ஏன் ஜீனோ-வும் கூடத்தான்!) கவனிப்பு குறைந்து என் முழுக்கவனமும் லயா-வின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறது! :)..I miss my blog! avvvv....

முதல் புகைப்படத்தில் பூத்துச் சிரித்தாலும் செடிகள் கொஞ்சம் சுணங்கித்தான் போயிருக்கின்றன. புதினா மிகவும் ஸ்ட்ராங்க்-ஆன செடி என்பதால் தாக்குப் பிடித்துக்கொள்கிறது.  முதல் ஒரு முறை பார்க்கையில் புதினாவில் பூ வந்தது போன்ற தோற்றத்தில் பச்சைநிறத்தில் "ஏதோ ஒன்று" இருந்தது..
பூவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் படமெடுத்தும் வைத்துவிட்டு ஒரு வாரம் வட அமெரிக்காவின் கிழக்குமூலைக்குச்  சென்றுவந்தோம்.

 
Tampa Aquarium-ல் மீன்களைப் பார்க்கும் என் தங்க மீனுக்குட்டி! :) 

திரும்பி வந்த போது புதினாவில் பசுமையாக இருந்த பூக்கள் வெள்ளைப் பூக்களாகிவிட்டிருந்தன. முதல் முறையாகப் புதினாப் பூக்களைப் பார்த்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி.  விதைகள் வருமா என காத்திருக்காமல் அவசரக்குடுக்கையாகப் பூத்திருந்த தண்டுகளைக் கிள்ளி சமைத்துவிட்டேன். அவ்வ்வ்வ்!! 
இது போன வருடம் டாலர் ஷாப்-ல் வாங்கி வந்த மிளகாய்ச் செடி. திடமாக நின்று ஒன்றிரண்டு காய்கள் காய்த்துக்கொண்டிருக்கிறது. காய் குறைவு என்றாலும் நல்ல குண்ண்ண்ண்டு மிளகாய்களாகக் காய்க்கும். ;) ஊருக்குப் போகையில் எல்லாம் பச்சையாக இருந்தார்கள்..வந்து பார்க்கையில் இருவர் "வெயிலில் தண்ணி இல்லாம எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டாயே" என்ற கோபத்தில் சிவந்து போயிருந்தார்கள். எல்லா மிளகாய்களையும் பறித்தாச்சு..
குட்டி ஹெல்ப்பர் புகைப்படத்துக்கு போஸ் குடுக்க யெல்ப்ப்ப் செய்கிறார்..
அப்பாடீ...கை கொஞ்ச நேரம் அமைதியாக நின்னுச்சு..ஒரு ஃபோட்டோ எடுத்தாச்...
ஆக மொத்தம், ஆறு மிளகாயை ஆல்மோஸ்ட் ஆறு படமெடுத்திருப்பேன். ஹிஹி...
ஊருக்குப் போகையில் அமைதியாக இருந்த ரோசாப்பெண்..வந்த போது பூக்களாகப் பூத்து வரவேற்பு அளித்தார். :)
 ஸோலார் டான்ஸிங் ஃப்ளவர்..வெகு நாட்களாகத் தவணையில் இருந்தது, இணையத்தில் பார்த்து வாங்கியாச்சு! :)
என் குட்டிப்பெண் வளர்ந்துட்டே இருக்காங்க..
நாட்கள் மின்னல் வேகத்தில் ஓடுகின்றன..விரைவில் லயமும் ஓட ஆரம்பிப்பாங்க, அவங்க பின்னால் நானும் ஓடுவேன். அப்போதும் அவ்வப்போது இங்கே எட்டிப்பார்க்க காலம் அனுமதிக்கவேண்டும். ;) :) 
ஓவராக மொக்கை போட்டாச்..பிராயச்சித்தமாக ஒரு ஆப்பிள் பை(Apple Pie from Denny's), கடைல வாங்கினதுதான்..தகிரியமாச் சாப்புடுங்க..டாங்ஸூ! ;) 

Sunday, June 1, 2014

ஸ்ருதியும், லயமும்! :)


எங்கள் வாழ்வில் 
லயமும்..
ஸ்ருதியும்..
இணைந்து...
இயைந்து...
இன்ட்ரஸ்டிங்-ஆகப் போய்க்கொண்டிருக்கிறது. என்னடா, கவித மாதிரி எழுத ஆரம்பிச்சு டகால்னு பேச்சுவழக்குக்கு வந்தாச்சேன்னு பாக்கறீங்களா? ஹி...ஹிஹ்...ஹி..கவிதையெல்லாம் எழுத நேரமில்லீங்கோ!

ஸ்ருதியும் லயமும் அப்பப்ப ரெம்ப;) அன்பூ பாராட்டிக்கிறாங்க, அதனால சாக்கிரதையாப் பாத்துக்கவேண்டியிருக்கு ரெண்டு பேரையும். ஏனா ரெண்டுமே பேபீஸ் பாருங்க, எப்ப என்ன பண்ணிப்பாங்கன்னு தெரியாதே..அவ்வ்வ்!
கடந்த பதிவுகளில் எங்களை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகள்! ஸ்ருதி-லயத்துடன் நால்வரும் நலமாக இருக்கின்றோம். :)
மீல் மேக்கர் புளிக்குழம்பு/சோயா புளிக்குழம்புடன் சுடு சோறு..ஒரு வாய் சாப்ட்டுட்டுப் போங்க, நன்றி! குழம்பு ரெசிப்பி படங்களுடன் இங்கே

Friday, March 28, 2014

Precious Foot Prints..

எங்க வீட்டுக் குட்டி தேவதையின் பாதச்சுவடுகள்..
அவள் பிறந்து 3 வாரங்கள் ஆகியிருந்தபொழுது எடுக்கப்பட்டது இந்த அழகுச் சுவடுகள்..
பட்டுப்பூவின் குட்டிப்பாதம் களிமண்ணில் பதிக்கப்பட்டு.. 
Precious hand and foot prints-இன் ஸ்டுடியோவில்..
கிட்டத்தட்ட இரு மாதங்கள் இருந்து மெருகேற்றப்பட்டு..
எங்கள் நினைவுப் பெட்டகத்தில் சேர்ந்திருக்கிறது.
லயா பிறந்த மருத்துவமனையில் ஃப்ரொபஷனல் போட்டோ ஷூட் மற்றும் இந்த hand and foot prints எடுப்பதற்கும் வசதிகள் இருக்கின்றன. பாப்பு பிறந்த அடுத்த நாளில் இருந்தே இவர்கள் நம்மை அணுகி விசாரிக்கிறார்கள். நாங்கள் போட்டோ அங்கேயே எடுத்துக்கொண்டோம், இந்தச் சுவடுகள் பதிக்க நேரம் ஒத்துவராத காரணத்தால் 3 வாரங்கள் கழித்து அவர்களது ஸ்டுடியோவிற்குச் சென்று எடுத்துவந்தோம். 
மேலே படத்தில் உள்ள பாதங்களில் ஒரு பாதத்தின் அச்சு மருத்துவமனையில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசமாக அவர்கள் தருவது. நாங்கள் இரண்டாக வாங்கிக்கொண்டோம். இந்த டிசைன், வடிவம் மட்டுமே என்றில்லாமல் பல்வேறு வடிவங்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை.
அச்சுக்கள் எடுத்த பெண்மணி, மிகப் பொறுமையாக என் கேள்விகளுக்குப் பதிலளித்தார். பாப்புவின் பாதத்தையும் ஜில்ல்ல்ல்ல் களிமண்ணில் சீக்கிரமாகப் பதித்துக்கொண்டார். அச்சுக்கள் 3 வாரம் காயவைக்கப்பட்டு, பிறகு சுடப்பட்டு, வண்ணம் தீட்டி உருவாக்கப்படும். அதனாலேயே 2 மாதங்கள் ஆகின்றன என்று கூறினார்.
ஆர்வமாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளட்டுமா என்று கேட்டதற்கு "Why not?" என்று புன்னகையுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். :)
பொறுமையாகப் படித்து ரசித்துவிட்டீர்கள்..சோறு-வெண்டைக்காய்ப் புளிக்குழம்பு-பீட்ரூட் பொரியல்-கீரைப்பொரியல்-ரசத்துடன் சாப்பிட்டுட்டுப் போங்க. நன்றிகள்! 
:) 

Tuesday, March 18, 2014

தொட்டிச் செடிகள்..

வீடு மாறியதிலும் குளிர்காலத்திலும் தொட்டிச்செடிகள் சொல்லிக்கொள்கிற அளவுக்கு செய்திகள் ஏதும் தரவில்லை. ஆனாலும் சும்மா விடமுடியுமா?- என்று அதையுமிதையும் சொல்லி(உங்களைக்)கொ(ல்)ள வேண்டி ஒரு பதிவு! :) 

இந்த வீட்டுக்கு வந்த பிறகு முதல் பூ மேலே உள்ள மஞ்சள் ரோஜா! எல்லாச் செடிகளும் அமைதியாக இருக்க, இந்த அம்மிணி:) மட்டும் ஒரே ஒரு மொட்டு விட்டு அழகாகப் பூத்துச் சிரித்தாள் புத்தாண்டில்! மற்ற ரோஜாக்கள் எல்லாம் இப்போதுதான் துளிர்விட ஆரம்பித்திருக்கின்றன. 
~~~
ஒரு முறை காய்கறி கடையில் வெங்காயத்தாள் எடுத்துக்கொண்டிருந்தேன்.  ஒரு அமெரிக்கப் பெண்மணி சினேகமான குரலில் சொன்னார், "இவற்றை நட்டு வைத்து வளர்ப்பதற்காகவும் நான் வாங்குகிறேன்!" என்று! ஆஹா என்று நானும் 2 கட்டு வாங்கிவந்தேன். எப்போதும் வெங்காயத்தாள் வாங்கினால், வேர்ப்பகுதியை நீக்கி, குப்பையில் போட்டுவிட்டு, சமைத்துவிடுவது வழக்கம்.  இந்த முறை கவனமாக வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதியை நறுக்கி..
வராது..எதற்கும் நட்டுப்பார்ப்போமே என்று காலியாயிருந்த சில தொட்டிகளில் செருகி (கவனிக்க, நட்டு வைக்கக் கூட இல்லை..சும்மா பேருக்கு போட்டு விட்டேன்!!) வைத்தேன். மறந்தும் விட்டேன்..சில நாட்கள் கழித்து எதேச்சையாகத் தொட்டிகளைப் பார்க்க...
வெங்காயங்கள் அழகாகத் துளிர்விட்டு வந்துகொண்டிருந்தன!! :))) 
நட்டு வைத்த தொட்டிகளில் வெங்காயத்தாள்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. இன்னும் பறிக்கவில்லை..பறித்தபிறகு மீண்டும் ஒரு பதிவைப் பகிர்கிறேன். 

அடுத்து வருவது ஆரஞ்சு! கீழே குடியிருந்த வீட்டம்மா எலுமிச்சை-ஆரஞ்சு என இரண்டு மரங்களை எங்களை நம்பி விட்டுப் போய்விட்டார்..மரங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரளவு பெரிய தொட்டிகள் வேணும் என என்னவர் நான் ஏற்கனவே தயார் செய்திருந்த தொட்டிகளை எல்லாம் மாற்றி, மரங்களுக்கு இடமளித்தார். கடந்த ஓரிரு மாதங்களாகவே ஆரஞ்சு மரத்தில் மொட்டுக்கள் கட்ட ஆரம்பித்தன. மிக மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த மொட்டுக்கள் மலர ஆரம்பித்தபின் ஒரே வேகம்தான்! 
கம்மென்ற சுகந்த மணத்துடன் ஆரஞ்சுப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. காற்றடிக்கையில் சுற்றிலும் நாலைந்து அடிகள் தொலைவுக்கு மணம் கமழ்கிறது இப்பூக்கள்! மரம் இன்னும் செடியாக இருப்பதால் பிஞ்சுகள் நிற்கவில்லை..பிஞ்சு பிடித்துப் பிடித்துப் பூக்கள் உதிர்ந்துபோகின்றன. சரி விட்டுப் பிடிப்போம்! :) 
மரங்களுக்காக தொட்டிகள் மாறியதில், அவற்றில் நிரப்பப்பட்டிருந்த மண்ணும், அதில் நான் நட்டிருந்த கேரட் விதைகளும் அங்குமிங்குமாக இடம் மாறிப் போயின.. இந்த வீட்டுக்கு வந்ததும் பார்க்கிறேன், பூக்கள் வளர்க்கும் தொட்டியில் சில கேரட்டுகள் வளர்ந்துகொண்டிருப்பதை!!
3 மாதங்களுக்கும் மேலாக கேரட்டுகள் வளர்ந்துகொண்டேஏஏஏ இருக்கின்றன. இந்த வசந்தத்துக்கு மலர்ச்செடிகள் வாங்கிவந்த பின்னர்தான் தொட்டிச் செடிகளுக்கு மராமத்து வேலைகள் நடக்கும் என்ற சாக்குச் சொல்லிக்கொண்டு நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கேன். சீக்கிரம் எங்க வீட்டுக்கு வசந்தம் வர வாழ்த்துங்கோ!! ;) 
வாடையில் வாடிக்கிடந்த செவ்வந்திப் பூவக்கா..
திடீரென பளீரென மலர்ந்து சிரிக்கிறாள்! 
~~~
Geno: I buried my coconut macroon in this pot. Mommy is angry at me as I broke one of the onion plants!! ;)) She didn't say anything because she was holding my lil Sister Laya! Yay..having a sis is a bliss!!  :D

LinkWithin

Related Posts with Thumbnails