Tuesday, January 15, 2019

பொங்கல் நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!


புதிய ஆரம்பங்கள்..இந்த வருடத்தில் இந்தச் சிறுநாற்றுகள் செழித்து வளர்ந்து விரைவில் உங்களைச் சந்திக்க இங்கே வரவேண்டும் என்ற நம்பிக்கையோடு தைமகளுக்கு வரவேற்பு! :) 
நன்றி! 

Saturday, January 12, 2019

இரண்டாம் பதிவு 2019


2018 இறுதியில் சென்ற பயணப்பதிவு தொடர்கிறது..முதல் பகுதி இங்கே


 ஒரு வெள்ளிக்கிழமை காலையில் கிளம்பி Rocky Mountain National park  சென்றோம். போகும் வழியெல்லாம் பனி உறைந்து கண்களுக்கு விருந்தளித்தது. பனிப்பொழிவின் காரணமாக பார்க்கின் பெரும்பாலான பகுதிகள் மூடப்பட்டிருந்தன. மூடப்பட்ட பாதைகளின்நுழைவாயில் அருகே காவலர்  வாகனம் பாதுகாப்புக்கு நின்றிருந்தது. சுற்றுலாப் பயணிகள் ஆர்வக்கோளாறில் உள்ளே நுழைந்து பனியில் மாட்டிக்கொள்ளாதிருக்கக் காவலர் காவல்!! பனிபடர்ந்த சாலைகள், பனி போர்த்திய மலை முகடுகள், பனித்துளி சிதறிய பைன் மரங்கள் என எங்கெங்கு காணினும் பனி..ஏரிகளும் ஆறுகளும் பனியில் உறைந்து கிடந்தன. ஏரி மீது ஒரு சிலர் நடப்பதையும் காண முடிந்தது. ஆறுகளில் உறைந்த ஐஸ்கட்டிகளின் ஊடே நீர் ஓடிக்கொண்டும் இருந்தது. மிக அழகான இடம்.
மலையுச்சிகளின் அருகே செல்லச்செல்ல மனித நடமாட்டமில்லாத வெண்பனியைப் பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது..ஓடிச்சென்று கை கொள்ளாமல் அள்ளிக்கொள்ளலாம் போல..படுத்து உருளலாம் போல..எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.!!! எல்லாம் போல தான்...2 குட்டிப்பெண்களை வைத்துக்கொண்டு காரில் இருந்த் பெரிதாக கீழே இறங்கியெல்லாம் ரசிக்க முடியவில்லை..மேலேயுள்ள படத்தில் முதலிரண்டு டென்வரில் நடந்த "Paw Patrol Live" show. லயாம்மாவின் ஃபேவரிட் ஷோ..டென்வரில் லைவ் ஷோ நடந்ததால் அங்கே சென்று பார்த்தோம்.. டிக்கட், பாப்கார்ன், பொம்மைகள் என்று டாலர்களை அள்ளிக் குவிக்கிறார்கள்..பெற்றோர்களும் பிள்ளைகளின் சந்தோஷத்துக்காக நண்டு சிண்டுகளையும் அள்ளிக்கொண்டு ஆஜர்!! :) :) 

 பயணத்தின் இறுதியாக சென்ற இடம் டென்வர் பொட்டானிகல் கார்டன்..குளிர் காரணமாக வெளியில் இருக்கும் செடிகள் எல்லாம் ஏறக்குறைய வறண்டு காய்ந்து போய்க்கிடந்தன..ஆனாலும் அது ஒரு அழகாக இருந்தது..கருப்பும் அழகு, காந்தலும் ருசி போல!! :)
 Denver Botanical Garden-இல் ஒரு இடத்தில் பெரிய கண்ணாடிக்கூரையுடன் கட்டங்கள் கட்டி உள்ளே டிராபிகல் கன்சர்வேட்டரி வைத்திருக்கிறார்கள். அங்கே வெயில் விரும்பும் செடிகொடிகள், மரங்கள், ஆர்க்கிட் பூக்கள் மற்றும் பற்பல பசுமை பூசிய தாவரங்கள்..கண்களுக்கு குளிர்ச்சியாய் இருந்தன. நம்ம வாழைமரம், பப்பாளி, பாக்கு மரம், வெனிலா பீன் கொடி உள்ளிட்டவற்றை காணமுடிந்தது.
மஞ்சக் கனகாம்பரம் குடும்பத்தைச் சேர்ந்த செடிதான் அது என நினைக்கிறேன்..பூக்கள் அழகாக இருந்தன. இன்னொரு புறம் ஆர்க்கிட் செடிகள் மட்டும் ஸ்பெஷலாக வளர்க்கப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் நடக்க இருக்கும் ஆர்க்கிட் கண்காட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தன..பல நிறங்களில் "பாயிண்ட் செட்டியா" செடிகள்..இது வரை சிவப்பு நிறம் மட்டுமே கண்டிருந்த கண்களுக்கு,  ஆரஞ்சு பிங்க் மஞ்சள் வண்ணச்செடிகள் புதிது..அழகும் கூட!
புத்தரின் கை - என்ற பெயருடைய எலுமிச்சை வகை ஒன்றும் காண முடிந்தது..வித்யாசமான உருவுடன் இருந்த எலுமிச்சை உங்கள் பார்வைக்கு. கூடவே இணைப்பு - ஸ்வராவின் குட்டிக்கையின் குறும்பு!! :)

ஆக மொத்தம் சென்று வந்த பயணத்தின் சில துளிகளைப் பதிந்திருக்கிறேன்..பொறுமையாய்ப் பார்த்து/படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

Friday, January 11, 2019

முதல் பதிவின் தொடர்ச்சி - புகைப்படத்தொகுப்பு

முதல் பதிவிற்கு கிடைத்த அமோக வரவேற்பினால்(!!??!) வெகு விரைவாக அடுத்த பதிவு வெளியிடப்படுகிறது..ஹிஹி!! :) :);)  
இந்தப் பதிவு முழுவதும் Key Stone Resort- ல் எடுத்த படங்கள். மேலே உள்ள ஐஸ் ஸ்னோமேன்  ரிசார்ட் நுழைவாயிலில் நிற்கிறார். 
உள்ளே சென்றதும் வரவேற்பருகே இருக்கும் ஹாலில்தான் இந்த சாக்லேட் சிற்பங்கள் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் இப்படி சாக்லேட் சிற்பங்கள் வழக்கமா வைப்பார்களாம். அந்த இடமே கமகமவென சாக்லேட் மணக்க, தகவலைப்படித்து எல்லாமும் சாக்லேட் உருவங்கள் என மூளை புரிந்துகொள்ளும் முன்னமே மூக்கு தன் பணியைச் செவ்வனே செய்து புரிய வைத்துவிடுகிறது! :) படங்களை க்ளிக் செய்து பார்த்தால் தெளிவாக படிக்கலாம்.
குழந்தைகளின் உள்ளங்கவர்ந்த பல்வேறு கேரக்டர்கள், பரிசுப்பொருட்கள் வைத்திருக்கும் பொதிகள், நட் க்ராக்கர், ஆடும் குதிரை, டெடி பேர் என முடிவில்லாத கற்பனைக்கு சாக்லெட்டில் உருவம் கொடுத்திருந்தார்கள். 
கூடவே சாக்லெட் அல்லாத 13 பொருட்கள் இவற்றுள்ளே ஒளிந்திருப்பதாகவும் தகவல் பலகை சொன்னது..பிங்க் மங்கி, கோல்ஃப் பந்து உள்ளிட்ட சில பொருட்களை நாங்களும் கண்டுபிடித்தோம்.


இப்படி இத்தனை இத்தனை சிற்பங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்களே...இவற்றையெல்லாம் என்ன செய்வார்கள்? என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மண்டையைக் குடைந்தால் ஆச்சரியமில்லை..அதற்குப் பதில் அடுத்த படத்தில்!
விருப்பமான உருவை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாமாம்!! கொள்ளை விலை இருக்கும்..அப்படி வாங்கினாலும் அதனை உண்ண மனம் வருமா??! 
சிற்ப அலங்காரத்துக்கு முன் குழந்தைகளுக்காகப் பெட்டிகளில் கேண்டிகேன் மிட்டாய்கள் வைக்கப்பட்டிருந்தன.,இதுங்க 2ம் பூந்து விளையாடுச்சுங்க. ;) ;) 
வீடியோ இணைத்திருக்கிறேன்..ஒர்க் ஆகுமா என்ற சந்தேகம் பதிவு வெளியானதும்தான் தீரும்!

இதனை முடித்துக்கொண்டு உணவகம் சென்றோம்..க்றிஸ்மஸ் தினம் என்பதால் சிறப்பு பஃபே வைத்திருந்தார்கள். விதம் விதம் விதமான கேக் வகைகள், பை, குக்கீ இவற்றுடன் சாக்லட் சான்ட்டா-வும் தரிசனம் தந்தார்.

அப்படியே நடந்தால் சாக்லட் ஃபவுண்டெய்ன்!! அதில் டிப் செய்து சாப்பிட மார்ஷ்மெலோ,ஸ் ட்ராபெரி உள்ளிட்ட பண்டங்கள் அணிவகுப்பு..
கூடவே சூப் வகைகள், சாலட், ப்ரெட்வகைகள் என ஏகத்துக்கும் உணவு..விலை விசாரித்தால் அதிகமில்லை, $55 மட்டுமே என்றார்கள். நமக்கு ஒத்துவராது என்பதால், படங்கள் மட்டும் க்ளிக்கிகொண்டு ப்ளாக் பீன் பர்கரை வாங்கி சாப்பிட்டாச்சு. அப்போது அருகிலிருந்தவர் பேச்சுவாக்கில் "வெளியே ஐஸ் ஸ்கல்ப்ச்சர்ஸ் இருக்கு, பாத்தீங்களா? ரொம்ப அழகா இருக்கு!" என்றார்..சரி, அதையும் பார்த்துடுவோம், வாங்க! :)

க்றிஸ்மஸ் மரம், ரெயின் டீர், ஸ்லெட்ஜ் போன்றவற்றை அழகாக ஐஸ் கட்டியில் செதுக்கி வைத்திருந்தார்கள்.
புகைப்படங்களை ரசித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!! Wednesday, January 9, 2019

முதல் பதிவு 2019

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! 
இந்த ஆண்டின் முதல் பதிவாக, கடந்த ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்..எழுத விஷயங்கள் நிறைய இருந்தாலும் நடைமுறையில் அதை செயலாக்குவதில் இன்னும் தாமதங்கள் தொடர்வதால் இப்போதைக்கு ஃபோட்டோக்களை வைத்து ஒரு பதிவு. இந்த வலைப்பூ என் நினைவுகளைச் சேமித்து வைக்கும் இடமாக இருப்பதில் இது ஒரு வசதி.. :) :) 

வருடக்கடைசியில் ஒரு வாரப் பயணமாக டென்வர் சென்றுவந்தோம். கலிஃபோர்னியாவிலேயே வளரும் குட்டீஸுக்கு ஸ்னோவைக் காட்டிவரலாமென்று திட்டம்..இங்கேயே நார்தர்ன் கலிஃபோர்னியா போயிருக்கலாம்..ஆனால் என்னவர் செலக்ட் செய்தது "டென்வர், கொலராடோ".  கிறிஸ்மஸ் கெட்-டு-கெதர் ஒன்றை முடித்துவிட்டு அவசரஅவசரமாக குழந்தைகளுக்கு குளிருக்கேற்ற ஆடைகள், காலணிகள் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

 டென்வரில் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்த கிறிஸ்மஸ் மரம் மற்றும் அங்கே முதல் நாள் சென்ற Red rock Amphtheater   மற்றும் Keystone ski resort-ல் எடுத்த படங்கள் மேலே.  கீஸ்டோன் ஹோட்டலில் சாக்லேட்களால் செய்யப்பட்ட சிற்பங்கள், சுரங்கப்பாதையில் செல்லும் ரயில்வண்டி, வெள்ளை சாக்லேட்டால் செய்யப்பட்ட க்றிஸ்மஸ் மரம் எல்லாம் அற்புதமாக இருந்தன.
அடுத்த நாள் டென்வர் மிருகக்காட்சி சாலைக்கு போனோம்..நுழைவாயில் அருகே நட்பான இரு மயில்கள் எல்லாருக்கும் முகமன் கூறியவண்ணம் நடைபயின்று கொண்டிருந்தன..ஒருவர் நைஸாக  வெளியே எஸ்கேப் ஆகப்பார்க்க, மிருகக்காட்சி சாலை பணியாளர் செல்லமாக மிரட்டி உள்ளே அனுப்பினார்..மயிலாரும் புரிந்துகொண்டு நாய்க்குட்டியைப் போல உள்ளே ஓடிவந்துவிட்டார். :) அடிக்கிற குளிருக்கு இதமாக ஒட்டகச்சிவிங்கிகள் மட்டும் கட்டிடத்தின் உள்ளே இருந்தார்கள். யானை, சிறுத்தை உள்ளிட்ட மற்ற ஆட்கள் எல்லாம் குளிரில் வெளியே!!

படத்தின் கடைசியில் இருப்பது Denver Capitol Hill ..கொலராடோ மாநிலத்தலைநகர் அமைந்திருக்கும் இக்கட்டிடத்தின் மேலே முகட்டில் பூசப்பட்டிருப்பது சொக்கத்தங்கம்! :) டென்வர் கடல் மட்டத்திலிருந்து ஒரு மைல் உயரத்தில் இருப்பதால் "Mile high city" என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த கேப்பிடல் ஹில்-லில் 13வது படியில் ஏறினால் மிகச்சரியாக கடல்மட்டத்திலிருந்து ஒரு மைல் உயரத்தில் இருப்பீர்கள். 

 அங்கிருந்து டென்வர் ஆர்ட் கேலரிக்கு சென்றோம்..கணேஷா-வுக்கு என்று ஒரு அரங்கம் தனியாக இருந்தது.இந்தியா, கம்போடியா உள்ளிட்ட பலநாட்டுப் பிள்ளையார்கள் அமர்ந்திருந்தார்கள். பிள்ளையாரின் வயிற்றை தடவினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் எழுதியிருந்தார்கள்..அது எனக்குப் புதிது. கூடவே சோழர் கால, சாளுக்கியர் காலச்  சிற்பங்கள், நந்தி போன்றவையும் இருந்தன. ஆர்ட் கேலரிக்கு வரும் குழந்தைகள் போரடித்துப் போகாமலிருக்க அங்கே தனியாக ஒரு ஹாலும், ஹாலில் பேப்பர், க்ரேயான், பொம்மைகள், புத்தங்கள், க்விஸ் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களும் இருந்தன. ஆர்ட் கேலரியில் இருந்து வெளியே வருகையில் மெல்லிய பனிமழை..டென்வர் மிருகக்காட்சி சாலையில் க்றிஸ்மஸ் லைட் அலங்காரம் மிக அழகாக இருந்தது..அதனைப் பார்க்க தனியே ஒரு கட்டணம்..அந்தக் குளிரிலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை கூட்டம் கூட்டமாக வந்து ரசித்தனர். :)
US Mint, Denver விடுமுறைக்காலமாதலால் மூடப்பட்டிருந்தது. நாணயங்கள் அச்சடிக்கப்படும் இடம்..உள்ளே சென்று பார்க்க முடியாதது சிறு ஏமாற்றமே..நினைவுப்பொருட்கள் விற்கும் கடையில் ஒரு சுற்று சுற்றிவிட்டு அடுத்த இடமான Hammond's candy factory சென்றோம். ஏகத்துக்கும் விதம்விதமாக லாலிபாப் மற்றும் மிட்டாய் வகைகள். எங்க வீட்டு சின்னக்குட்டிதான் ரியல் "kid in a candy store"!!  லாலிபாப் சுவைத்தவாறே ஃபேக்டரியின் உள்ளே நடக்கும் வேலைகளை நோட்டமிட்டோம். எல்லா மிட்டாய் வகைகளும் கைகளாலே செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. லாலிபாப், கேண்டி கேன், பலவகை கேரமல், சாக்லேட்டுகள்...கணக்கே இல்லை! டூர் முடிந்து வெளியே வருகையில் எல்லாருக்கும் கையில் ஒரு ஃப்ரீ லாலிபாப் தருகிறார்கள். இதனை முடித்து நாங்கள் சென்ற இடம் Garden of Gods Park. அந்தி மாலைச் சூரியன் மேற்கில் இறங்க, குளிர் காற்று எலும்பைத்துளைக்க கார்டன் ஆஃப் காட்ஸ்-ஐ அருகில் சென்று இறங்கி ரசிக்க இயலவில்லை..பாறைகளில் அழகழகான தோற்றங்கள் இயற்கையாகவே உருவாகியிருக்கின்றன. இன்ஃபர்மேஷன் செண்டரில் அதனைப்பற்றிய விவரங்கள் விளக்கமாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு திரைப்படமும் காட்டிகிறார்கள். அடுத்த முறை செல்லும்போது கோடைக்காலத்தில் செல்லவேண்டும் என்று குறித்துக்கொண்டோம். ;) 

பதிவு நீளமாவதால்...தொடர்ச்சி அடுத்த பதிவில்.. நன்றி! 

LinkWithin

Related Posts with Thumbnails