Showing posts with label ரசித்து ருசித்தவை. Show all posts
Showing posts with label ரசித்து ருசித்தவை. Show all posts

Thursday, May 16, 2019

மா, பலா - மலரும் நினைவுகள்!


மாம்பழம், பலாப்பழம் என்றால் உடனே என் நினைவில் வருவது பள்ளிப்பருவத்து கோடைவிடுமுறை காலங்கள் தான்!! 8ஆம் வகுப்பு வரையிலும் கோடை விடுமுறை வந்தால் பள்ளி முடிந்த அடுத்தநாள் சித்திகள் வந்து என்னை ஊருக்கு (வீட்டிலிருந்து 2 பஸ் மாற்றி போகவேண்டும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொண்டாமுத்தூருக்குப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம்.) என்னவோ ஏழு கடல் தாண்டி போகிற மாதிரி இருக்கும். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் 56-ஆம் நம்பர் பேருந்துக்கு காத்திருந்து பஸ் வந்தவுடனே எல்லாரும் இறங்க காத்திருந்து ஓடிப்போய் ஏறி இடம் பிடித்து உட்கார்ந்தால் என்னவோ ஒரு பெரிய அச்சீவ்மெண்ட் போல இருக்கும். :))))

ஊரில் பஸ் விட்டு இறங்கி, வீடு சேரும்வரை பார்க்கும் ஆட்கள் எல்லாம் "டவுன் புள்ளை"களை நலம் விசாரிக்க வீடு வந்து சேருவோம். அப்புறம் லீவு நாட்கள் எல்லாம் பக்கத்து வீட்டு வாண்டுகளுடன் "பாண்டிங்குழி (பல்லாங்குழி) ஆடுவதும், புளியங்கொட்டைகளைப் பரப்பி வைத்து "ஒட்டி" விளையாடுவதும், தாயக்கட்டம் போட்டு தாயம் ஆடுவதும், மாலையானால் மல்லிகை மொக்குகளை பறித்து கோர்த்துவைப்பதுமாகக் கழியும்.

அப்புறம்  சித்தி ஒரு நாள் உக்கடம் வந்து மாம்பழம், பலாப்பழம் எடுத்துவருவார். எனக்கு நினைவில் இருப்பது  பாலக்காட்டு மாம்பழம், நீல மாம்பழம், கிளிமூக்கு மாம்பழம்!!! அல்போன்ஸா எல்லாம் கேள்விப்பட்டது கூட இல்லை! ஹிஹி...போகவர மாம்பழங்களை எடுத்து கழுவி கடித்து தின்று, கையெல்லாம் மாம்பழச்சாறு வடிய வடிய சுவைத்தது எல்லாம் மன அடுக்குகளில் அழியா நினைவுகளாய்!!!


பலாப்பழத்தை சுத்தம் செய்து சுளைகளை எடுக்கும் வரை பொறுமையாய்க் காத்திருக்க வேண்டும். வீடெல்லாம் மணக்கும், சுத்தம் செய்த பழங்களை சீக்கிரம் தீர்த்திடுதல் நலம். இல்லையென்றால் கோடைச்சூட்டிற்கு ஒரு நாளுக்கு மேல் தாங்காது. அக்கம் பக்கம் வீடுகளுக்கெல்லாம் பகிர்ந்து விட்டு மீதமிருப்பதை வெல்லம் சேர்த்து வதக்கியும் வைப்பார்கள். பலாக்கொட்டைகளை "தண்ணி அடுப்பில்" (குளிப்பதற்கு தண்ணீர் காயவைக்கும் அடுப்பு) போட்டு சுட்டெடுத்து சுவைப்போம். பலாச்சுளைகளை ஓவராகத் தின்று வரும் வயிற்றுவலிக்கு இந்த சுட்ட பலாக்கொட்டை நல்லது என்பார்கள். எவ்வளவு சுளைகளை வயித்துக்குள் அமுக்கினாலும், 2-3 சுட்ட பலாக்கொட்டைகள் தின்றுவிட்டால் எல்லாம் நலமே!!! :)

எதுக்கிந்த மலரும் நினைவுகள் என்றால்..தமிழ்ப்புத்தாண்டுக்கு வாங்கிய பலாப்பழமும், சமீபத்தில் வால்மார்ட்டில் சுகந்தமான மணம் வீசிக்கொண்டிருந்த மாம்பழங்களை வாங்கிவந்து கத்தி கபடா எல்லாம் உபயோகித்து நறுக்கி நளினமாகச் சாப்பிடாமல், சும்மா கழுவிட்டு, தோலை உரித்து துப்பிவிட்டு சுவைத்து தின்னும்போது இதெல்லாம் நினைவு வந்ததுதான். :))))

நன்றி, மீண்டும் சந்திப்போம்! 

Tuesday, April 30, 2019

தோட்டம் 2019

இந்த வருடம் எங்க வீட்டு குட்டி தோட்டத்தின் விளைச்சல்! 

கடந்த வருட இறுதியில் பேக்யார்ட் -ஐ கொஞ்சம் செப்பனிட்டோம்..அப்போது காய்கறிகள் வளர்க்க என்று ஒரு இடத்தில் Raised bed மாதிரி ஒன்றை உருவாக்கினோம். கிறிஸ்மஸ் பயணம் கிளம்புமுன் நர்சரியில் இருந்து வாங்கி வந்த நாற்றுகளை நட்டுவிட்டோம். 

ஜனவரி 30ஆம் தேதி மஞ்சள் நிற காலிஃப்ளவரும், ரொமனஸ்கோ காலிஃப்ளவரும் மொட்டுக்கட்டி வளர ஆரம்பித்தன. 
மடமடவென ஒரு மாதத்தில் இரண்டு காய்களுமே வளர்ந்துவிட்டன. :) 

அந்த காய்களைப் பறித்துச் சிலநாட்கள் கழித்து ப்ரோக்கலி பூக்கள் வளர ஆரம்பித்தன. 

ப்ரோக்கலி இரண்டே வாரங்களில் வெகு வேகமாக வளர்ந்துவிட்டது. அதனுடன் நட்ட காலிஃப்ளவர் தான் கொஞ்சம் ஏமாற்றம்.. ஒரு பூவைத்தவிர மற்றவை சரியாக வளரவில்லை..பிறகு இணையத்தில்  இருந்து காலிஃப்ளவர் வளர ஒரே சீரான சீதோஷ்ணம் தேவை எனத் தெரிந்தது. எல்லாம் ஒரு அனுபவம்தான்! 
நூல்கோல் (knol kohl, kohlrabi) நாற்றுகளும் டிசம்பரிலேயே நட்டு வைத்ததுதான்..6 செடிகளில் சில காய் பெருக்காமல் முழுத்தண்டுமே பெருத்து வளர்ந்தன..ஒழுங்காய் வளர்ந்த ஒரு காயையும் பூப்பூக்கும் வரை விட்டு வைத்துவிட்டேன். அறுவடை எப்பொழுது செய்ய வேண்டும் என்ற அறியாமை..முதல் முறை வளர்க்கையில் பல பாடங்கள்!! இருப்பினும் கிடைத்த ஓரிரு காய்கள் சுவை அலாதியாய் இருந்தன.

அடுத்து வருவது Fava Beans / Broad beans செடி..நான் இதுவரை பார்த்திராத வண்ணம் இலைகளுடன் தளதளவென இருந்ததால் 2 நாற்றுகள் வாங்கிவந்தேன். அமைதியாக அழகாக வளர்ந்து பூக்கள் மலர ஆரம்பித்தன..பிறகு பார்த்தால் செடி பாட்டுக்கு மடமடவென வளர்ந்துவிட்டது. காய்கள் ஒன்றுமே வரக்காணோம்..திடீரென ஒரு நாள் பார்க்கையில் காய்கள் தட்டுப்பட்டன..தண்டின் ஓரத்திலேயே ஒவ்வொரு காயாய், வெண்டைக்காய் போல காய்கள் வளர்கின்றன. நூல்கோல் பறிக்க ஏமாந்துபோனதில் முதல் முறை ஃபாவா பீன்ஸை கொஞ்சம் இளசாகவே பறித்துவிட்டேன். கொஞ்சமாக இருந்ததினால் பிரியாணியில் போட்டு செலவழித்தாயிற்று. 


இரண்டாம் முறை பீன்ஸ் காய்களை பறித்தாயிற்று. கூடவே புழுக்கள் தொந்தரவு நிறைய இருக்கிறதால் பார்த்து பார்த்து அவற்றை பிடித்து நீக்கிக்கொண்டும், புழு தின்ற இலைகளை நறுக்கி வீசிக்கொண்டும் நாட்கள் நகர்கின்றன. 

டர்னிப் - குளிர்கால காய்கறி என்று அதுவும் போட்டிருந்தோம். தப்பிப்போய் தள்ளி விழுந்த ஒரு விதை மட்டும் நல்ல முற்றிய காயாய் விளைய, ஓரே இடத்தில் போடப்பட்ட மற்ற விதைகள் நெருக்கியடித்துக்கொண்டு வளர்ந்தன.
டர்னிப்பும் பூப்பூக்கத் தொடங்கவே சுதாரித்துக்கொண்டு இந்த வாரம் அவற்றையும் பறித்தாயிற்று.
அதிகம் எழுத நேரமில்லாததால் படங்களை நிறையச் சேர்த்து ஒரு பதிவு. இந்தக் காய்கறிகள் வளர்ப்பதைப் பற்றி ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கருத்துப்பெட்டியில் கேளுங்கள்..தெரிந்ததைப் பகிர்கிறேன். நன்றி!! :))) 


Monday, October 24, 2016

ஜெயின் கிச்சடி

மதிய உணவுக்கு அவசரமாக ஏதாவது சுவையாகச் சமைத்து சாப்பிடலாமே என்று தோன்றுகையில், குக்கரில் ஒரே சாதமாக தாளிச்சு விட்டு 3 விசில் விட்டு இறக்கினால் போதும் என்ற உணவுவகைகள்தான் என் சாய்ஸ்..அஃப்கோர்ஸ், வீட்டில் ஒரு பிரியாணி பிரியர் இருப்பதால் வெஜிடபிள் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, கொண்டைகடலை பிரியாணி, தக்காளி பிரியாணி, மீல்மேக்கர் பிரியாணி என போட்டியாளர்கள் நிறைய இருந்தாலும், அதிக காரம்-மசாலா இல்லாத இந்த கிச்சடி இப்ப அடிக்கடி எங்க வீட்டில் இடம்பிடிக்கிறது. பிரியாணி பிரியரே விரும்பி சாப்பிடுகிறார்னா பாத்துக்கோங்க..!! ;) :)

அதுவும் இல்லாமல் பிரியாணி செய்தால் ரைத்தா இருக்கா என ஒரு கேள்வி வேற!! அவ்வப்பொழுது, எனக்கே கை அடங்காம, கத்தரிக்காய் க்ரேவி, மிர்ச்சி கா சாலன் இப்படி எதாவது சைட் டிஷ்-ஐ இழுத்து விட்டுக்கொள்வதும் நடக்கும். அவற்றிலிருந்து எஸ்கேப் ஆக இந்த கிச்சடி கை கொடுக்கிறது. இந்த கிச்சடிக்கு "பத்லா கடி" என்ற நார்த் இண்டியன் மோர் குழம்பு நல்லா இருக்கும் என்று ரெசிப்பில சொல்லிருந்தாலும் எங்களுக்கு அது கூட தேவையில்லை, அப்படியே சாப்பிட்டுடுவோம்! ;) :p

இந்த கிச்சடிக்கு விருப்பமான காய்கள் சேர்க்கலாம் என்றாலும் மிக முக்கியமான காய், குடைமிளகாய்..அதுவும் கலர் மிளகாய்கள் இருந்தால் ருசியும் வாசனையும் அருமையா இருக்கும். குடைமிளகாய் இல்லைன்னா கிச்சடி செய்யவே ஆரம்பிக்காதீங்க! ஹிஹி...!!...

அப்புறம் படத்தில் இருக்க குடைமிளகாய், தக்காளி மற்றும் பீன்ஸ் நம்ம வீட்டில காய்ச்சது..அதனால ருசி இன்னும் கொஞ்சம் அமோகமா இருந்துச்சு!! :))))

தேவையான பொருட்கள்
காய்கறிகள்
கேரட் - 1
பீன்ஸ் - ஏழெட்டு
குடைமிளகாய், சிறியதாக - 1 (அல்லது 2 வண்ணங்களில் பாதி பாதி)
பச்சை பட்டாணி - கால்கப்
உருளை கிழங்கு (சிறியதாக) - 1
தக்காளி (சிறியதாக) -1
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பற்கள்
உப்பு

பச்சரிசி/பாஸ்மதி அரிசி - 1கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்

தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு/லவங்கம் -2
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு- 8
வரமிளகாய் -1
பிரியாணி இலை
கறிவேப்பிலை  - கொஞ்சம்
கடைசியில் சேர்க்க
நெய் -1 டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப சேத்துக்கலாம்!! ;))

செய்முறை 
அரிசி-பருப்பை களைந்து ஊறவைக்கவும். 20 நிமிடங்களாவது ஊறினால் நல்லது.
காய்களை கழுவி ஒரே அளவாக நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி-பூண்டை தட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து சீரகம், மிளகு, பட்டை கிராம்பு தாளித்து, வர மிளகாயையும் கிள்ளி சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு தட்டியது சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு காய்களை சேர்க்கவும்.  சில நிமிடங்கள் வதக்கிவிட்டு, ஊறிய அரிசி-பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ருசிக்கு உப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் விடவும். (ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர்..கொஞ்சம் குழைவாக இருக்கும் இந்த கிச்சடி) 
குக்கரை மூடி , மிதமான தீயில் 3 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். ஆறிய பிறகு சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும். 
இதனுடன் ஜோடியாக பத்லா கடியும் செய்தேன், ஆனால் அது திரும்பி கூட பார்க்கப்படாமல் தங்கிவிட்டது.  ;)

ஒரிஜினல் ரெசிப்பி இங்கே..அதென்னவோ காமாட்சி அம்மாவின் சமையல்கள் எனக்கு கடந்த சில வருஷங்களாக தொடர்ந்து செய்து சுவைக்கும்படியாகவே அமைந்து கொண்டிருக்கின்றன. நன்றிம்மா!! :)
குறிப்பு
டைட்டில்-ல "ஜெயின் கிச்சடி" என இருந்தாலும், இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி அல்ல, இஞ்சி-பூண்டு, வெங்காயம் இவையெல்லாம் சேர்க்காமல் செய்தால் அதுவே ஜெயின் கிச்சடி. விருப்பமுள்ளோர் அப்படியும் செய்து பார்க்கலாம். :) நேரமிருந்தா இங்கேயும் எட்டிப் பாருங்க. இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி - கடி ஜோடி!

Thursday, October 6, 2016

அப்பளாம் போட்ட வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள் 
சுண்டக்காய் வத்தல் (அ) மணத்தக்காளி வற்றல் - கொஞ்சம் 
உளுந்து அப்பளாம்/அப்பளம் - 2 (அ) 3 
நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன் (அ) சின்னவெங்காயம் - 7 
புளி - எலுமிச்சை அளவு 
நசுக்கிய பூண்டு - 4 பற்கள் 
கறிவேப்பிலை கொஞ்சம்
வரமிளகாய் -1
வெந்தயம் -1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன் 
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
ரசப்பொடி - 1 டீஸ்பூன் 
மல்லித்தூள் - 1டீஸ்பூன் 
பருப்பு பொடி -1 டீஸ்பூன் (நான் சேர்க்கவில்லை) 
அரிசிமாவு -1டீஸ்பூன் 
உப்பு 
சர்க்கரை அல்லது வெல்லம் - கொஞ்சம் 
நல்லெண்ணெய் 

செய்முறை 
வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து நீர்க்க கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து வத்தலை பொரித்து, தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்தயம் சேர்த்து கருகாமல் சிவக்க வறுத்ததும் க.பருப்பு -உ.பருப்பு சேர்க்கவும். 
அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.
அப்பளம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு,  உடைத்த மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சாம்பார் பொடி - ரசப்பொடி - மல்லிப்பொடியை சேர்த்து, தேவையான உப்பும் சேர்க்கவும். (வத்தலில் உப்பு இருக்கலாம், கவனமாக உப்பைச் சேர்க்கவும்.)
புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிதமான தீயில் புளிக்கரைசல் பச்சை வாசம் போக கொதித்ததும், பொரித்து வைத்திருக்கும் வத்தலையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் (அ) சர்க்கரையையும் சேர்க்கவும்.
அரிசிமாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். (பருப்பு பொடி சேர்ப்பதாக இருந்தால் அரிசிமாவுடன் சேர்த்து கரைத்து சேர்க்கவும்)
குழம்பு நன்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான அப்பளாம் போட்ட வத்தக்குழம்பு தயார். பருப்பு உசிலி அல்லது பருப்புத் தொகையல் காம்பினேஷனுடன் சுவையாக இருக்கும்.
படத்தில்-- சோறு, வத்தக்குழம்பு, பீன்ஸ் பருப்புசிலி, பைனாப்பிள்-மேங்கோ சாலட். ரசமும் தயிரும் படத்தில் வரவில்லை. :)

குறிப்பு 
இந்த குறிப்பு காமாட்சி அம்மாவின் ப்ளாகைப் பார்த்துச் செய்தது. அவர்கள் மணத்தக்காளி வற்றல் சேர்த்து செய்திருந்தாங்க..என்னிடம் கைவசம் அந்த வத்தல் இல்லாததால் சுண்டவத்தல் சேர்த்தேன்.  அம்மா செய்த அளவு கலர் வரவில்லை..அடுத்த முறை மீண்டும் முயற்சித்துப்பார்க்கவேண்டும், மணத்தக்காளி வற்றலுடன். ;) நாமள்ளாம் ஆரு..கஜினி முகம்மது பரம்பரையில்ல? சீக்கிரமா செய்து அந்தப் படத்தையும் போடறேன் பாருங்க!! :D

Friday, March 20, 2015

காரக்குழம்பு

"சொல்லுகிறேன்"- காமாட்சி அம்மாவின் வலைப்பூவில் பார்த்து செய்த குழம்பு இது. செய்வதற்கு சுலபமாகவும் சுவையாகவும் இருக்கும் இந்தக் குழம்பை நீங்களும் செய்து பார்த்துச் சொல்லுங்களே! :)

தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-1
பூண்டு-5 பற்கள்
மிளகு-8
புளிக்கரைசல்-1/2கப்
சாம்பார்பொடி-1டீஸ்பூன்
வெந்தயப்பொடி-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
நல்லெண்ணெய்
உப்பு
சர்க்கரை(அ) வெல்லம் - சிறிது

செய்முறை
1.வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு இவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
2.புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.
3.புளிக்கரைசலுடன் அரைத்த கலவையைச் சேர்க்கவும். சாம்பார்பொடி, வெந்தயப்பொடி மற்றும் தேவையான உப்புச் சேர்த்து கரைத்துவைக்கவும்.
4.கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை(கைவசம் இல்லை, அதனால் சேர்க்கலை!), வரமிளகாய் தாளிக்கவும்.
5. குழம்புக்கலவையை ஊற்றி தேவையான அளவு நீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
6.குழம்பு நன்றாக கொதித்ததும் அடுப்பை குறைவாக வைக்கவும்.
7.தேவையான பக்குவத்துக்கு குழம்பு சுண்டி, எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
8.சுவையான குழம்பு தயார்...
9.பரிமாறும் கிண்ணத்துக்கு மாற்றி பரிமாறவும்....ஹிஹி...படத்தில நம்பர் போட்டாச்சு...எதுக்குன்னு யோசிப்பீங்களேன்னு 9வது ஸ்டெப்பும் எழுதிட்டேன். ;) :) 
நாங்கள் கீன்வா-பிரவுன் ரைஸ் தோசையுடன் சாப்பிட்டோம். இந்தக் குழம்பு இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக ரொம்ப நன்றாக இருக்கிறது.  சாதத்துடனும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும். சப்பாத்தியும் இதற்கு துணை போகும் என்றே தோன்றுகிறது. செய்து சுவைத்துப்பார்த்துச் சொல்லுங்க. நன்றி! 

சுவையான குறிப்பைத் தந்த காமாட்சிம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! 


Thursday, March 12, 2015

Aaloo Subzi / ஆலூ சப்ஜி / உருளைக்கிழங்கு மசாலா

/// உருளைக்கிழங்கு சப்ஜி செய்வது சுலபம் தான். வெங்காயம், தக்காளி மற்றும் ஜீரகம் ஆகியவற்றை வதக்காமல் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளலாம். Pressure Pan [அ] குக்கரில் கொஞ்சம் எண்ணை விட்டு, கடுகு தாளித்துக் கொள்ளுங்கள். கடுகு வெடித்தபின் அதில் அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பிறகு, உப்பு, கரம் மசாலாப் பொடி, பெருங்காயத் தூள் போட்டு, கசூரி மேத்தி பொடி, [கடைகளில் கிடைக்கும். நம் ஊரில் கிடைக்கிறதா தெரியவில்லை. இது இல்லாவிட்டாலும் தவறில்லை] கூடவே உருளைக்கிழங்கும் போட்டு விடுங்கள். தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி வேக வையுங்கள். நான்கு ஐந்து விசில் வந்தால் போதும். உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி.

சுருக்கமாகச் சொல்லி விட்டேன் என நினைக்கிறேன்! :)///

என்று கிடைத்த ரெசிப்பியைக் கொண்டு செய்த சப்ஜி இது. சுருக்கமாக 7 வரிகளில் திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள் சொன்னதை நான் சும்மா பத்துப்படம் போட்டு தெள்ளத்தெளிவா (பார்ப்பவர்களுக்கு போரடிக்காது, உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்...ஹிஹி..) செய்ததன் விளைவு உங்கள் பார்வைக்கு. அவர் கூறிய ரெசிப்பியில் கடுகு-பெருங்காயப்பொடியை மறந்தேன், பச்சைமிளகாய்-இஞ்சி-மஞ்சள்தூளைச் சேர்த்துக்கொண்டேன். ஆக மொத்தம் வழக்கமாகச் செய்யும் மசாலாவிற்கு மாற்றாக சுவையான உருளைக் கிழங்கு மசாலா ரெடி! :) 

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு-2
வெங்காயம்-1
தக்காளி-2
சீரகம்-1டீஸ்பூன்
பச்சைமிளகாய்-2
இஞ்சி - சிறுதுண்டு
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
கசூரி மேத்தி-1/2டீஸ்பூன் 
சர்க்கரை-1/2டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு 

செய்முறை
வெங்காயம், தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி.. 
சீரகத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
உருளைக் கிழங்குகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
சிறிய குக்கரில் எண்ணெய் காயவைத்து இஞ்சி-பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி, அரைத்த கலவையைச் சேர்க்கவும்.
பச்சை வாசம் போகும் வரை வதக்கி, கரம் கசாலா, மஞ்சள்தூள், கசூரி மேத்தி இவற்றை சேர்க்கவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து, சர்க்கரை மற்றும் உப்பும் சேர்த்து..
தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் 2-3 விஸில்கள் வரும் வரை வைக்கவும்.
ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து..
 நறுக்கிய கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.
குறிப்பு: 
ரெசிப்பியில் காரத்துக்கு கரம் மசாலா மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. ஆனால் எங்கள் நாக்குக்கு இன்னும் கொஞ்சம் காரம் வேண்டும் என நினைத்து 2 பச்சைமிளகாயும், துளி இஞ்சியும் சேர்த்துக்கொண்டேன். 
கடுகு-பெருங்காயம் சேர்க்க சுத்தமாக மறந்துபோய்விட்டது. நீங்க மறக்காமல் சேர்த்து செய்து பாருங்க. 
எல்லா குழம்பு-குருமா-ரசம் வகைகளிலும் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்ப்பது என்பது என் வழக்கமாகி விட்டது. விஷயம் தெரியாமல் ருசிப்போருக்கு சர்க்கரை சேர்த்திருப்பது தெரியாது, மிக மிக லேசான இனிப்புச் சுவை மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. 

நறுக்கென்று ஒரு சுவையான ரெசிப்பியைத் தந்த சகோதரர் வெங்கட் நாகராஜுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!

Tuesday, April 23, 2013

மதுரை சட்னி

 தென்னிந்திய வீடுகளில் பெரும்பாலான நாட்களில் காலை மற்றும் இரவுச் சிற்றுண்டிக்கு இட்லி-தோசை வகைகளே பிரசன்னமாகும். என்னதான் ரவா உப்புமா- சேமியா உப்புமா-பொங்கல்-பூரி-சப்பாத்தி என்று வேறு ஆப்ஷன்ஸ் இருந்தாலும் அவற்றுக்கும் தேவைப்படுவது ஒரு சட்னி!!  அதிலும், எங்க வீட்டில் இட்லிக்கு சட்னி என்பதில்லாமல் சட்னிக்கு இட்லி- என்பதாகத்தான் உணவுப்பழக்கம்! :))

தமிழ்-ஆங்கிலம் இரண்டு வலைப்பூக்களிலும் சேர்த்து ஒரு 25 வகை சட்னி ரெசிப்பிய நானே போஸ்ட் பண்ணியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்ன சட்னி செய்வது என மண்டையப் பிச்சுக்கிற மாதிரிதான் இருக்கும். நான் ஒரு டீஃபால்ட் சோம்பேறி என்பதால் இந்த சட்னி அரைப்பதில் எனக்கு ஸ்டார்டிங் ட்ரபுள். நிறைய சட்னி ரெசிப்பிகள் வெங்காயம்-தக்காளி நறுக்கி, வதக்கி, ஆறவைச்சு, அரைச்சு, தாளிச்சுக் கொட்டுவதா இருக்கும். இம்ம்ம்ம்மாஆஆஆம் பெரிய ப்ராஸஸா என மலைப்பா இருக்கும் எனக்கு!! அதனால அந்த கடேசி தாளிச்சுக் கொட்டற ஸ்டெப் பலநாள் ஆப்ஸெண்ட் ஆகிரும்! :))

தேங்காச் சட்னி சிம்பிளான சட்னி- ன்னு நீங்க சொன்னாலும் அத ஒத்துக்க மாட்டேன். தேங்காயை உடைச்சு, துருவி அல்லது  ப்ரீஸர்ல இருந்து தேங்காய எடுத்து, தேவையான பொருள் எல்லாம் கேதர் பண்ணி, அரைச்சு...அவ்வ்வ்! இட்ஸ் நாட் ஈஸி ஐ ஸே! அப்ப எது ஈஸியான சட்னின்னு கேப்பீங்களே நீங்க..என்னது, இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்க கேக்காட்டியும் நானே சொல்லுவேன். வேர்க்கடலை சட்னி தாங்க இருக்கறதிலயே சிம்பிள்ள்ள்ள்ள்! வறுத்த வேர்க்கடல எப்படியும் ஸ்டாக் வைச்சிருப்பீங்க, ரைட்? கடலை-வரமிளகா-புளி-கொஞ்சூண்டு கொத்தமல்லி(தனியா)-உப்பு எல்லாம் சேர்த்து தண்ணி விட்டு அரைச்சா சூப்பர் க்விக் அண்ட் டேஸ்ட்டி சட்னி ரெடி! ரெசிப்பிய ஆங்கிலத்தில பார்க்க இங்கே க்ளிக்குங்க.

கதை முடிஞ்சது, கத்தரிக்காய் காய்ச்சது..இனி இன்றைய ரெசிப்பிக்கு போகலாம். ஒரு சனிக்கிழம காலைல ப்ரெஷ்ஷா எந்திரிச்சு, ஃபுல் ஆஃப் எனர்ஜியோட என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சுகிட்டே ப்ரவுஸ் பண்ணினப்ப "ஜிங்ங்ங்ங்ங்ங்"- ன்னு "குக்கிங் ஜிங்கலாலா"-ல இருந்து வந்து குதிச்சுச்சு இந்த மதுரை சட்னி. என்னதான் நான் சோம்பேறின்னாலும், இப்படி புதுசா முயற்சிப்பதில ஆர்வம் உண்டு என்பது உங்களுக்கே தெரியும். அதனால செய்து பார்த்தேன், சூப்பரா இருந்துச்சு. கொஞ்சம் வேலை அதிகம்னாலும், இட்ஸ் வொர்த் அ ட்ரை! நீங்களும் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள் 
வதக்கி அரைக்க 
வெங்காயம் - பாதி
வரமிளகாய்-5 (காரத்துக்கேற்ப)
புளி- சிறிது
எண்ணெய்
தாளிக்க
வெங்காயம்- மீதி! :) [அதான் பாதிய நறுக்கி வதக்கீட்டீங்கள்ல..அதில மீதியிருக்கும் அடுத்த பாதி]
தக்காளி-1
கடுகு -1/2டீஸ்பூன்
உளுந்து-1டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய்

செய்முறை
எண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைக்கவும். 
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து உளுந்து சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை பொரியவிட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த கலவையைச் சேர்த்து, உப்பும் சேர்த்து வதக்கிவிட்டு, அரைக் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

5நிமிடங்கள் குறைந்த தீயில் கொதித்ததும் சட்னியை அடுப்பிலிருந்து இறக்கவும். காரசாரமான மதுரை சட்னி ரெடீஈஈஈ! இட்லி-தோசை-பணியாரம் இவற்றுக்கு பொறுத்தமான சட்னி இது. 

இந்தச் சட்னி செய்த அன்று பணியாரம்தான் செய்திருந்தேன். சட்னி ரெசிப்பி குடுத்த ஆளுக்கு அது எப்படியோ தெரிந்திருக்கு போல!  // Adutha murai kuzhi paniyaram kudunga.//  என்று கேட்டிருந்தாங்க..அவரது விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. மங்கள மீனாக்ஷி, என்ஜாய் குழிப்பணியாரம் அண்ட் மதுரை சட்னி!
படம்தான் கொஞ்சம் சரியில்லை, பசியில எடுத்தேனா, பொறுமையா க்ளிக்க முடில, அஜீஸ்;) பண்ணிக்குங்க!
~~~
இலவச இணைப்பு! :))) 
குரங்கு பொம்மையால முகத்த மறைச்சுகிட்டு ஒத்தக் கண்ண மட்டும் காட்டும் எங்க வீட்டுக் க்யூட் குட்டிப் பிசாசு! :))))

Thursday, March 14, 2013

என்ன பெயரிட்டு அழைக்க?..

குறிப்பிட்டுப் பெயரிட முடியாதபடி இந்தப் பதிவில் அதுவுமிதுவாக பல இருப்பதால் என் மனதில் தோன்றிய கேள்வியே டைட்டிலாக அவதாரம் எடுத்துவிட்டது. :) கடந்த வெள்ளியன்று காலையில் எழுந்தபோதே இரவெல்லாம் மழைபெய்து கழுவிவிடப்பட்ட பூமி புதிதாகப் பளபளத்துக் கொண்டிருந்தது. சூரியனும் பளிச்சென்று வரவும், பஸிஃபிக் கடல் பக்கமாய் வானவில்லில் பாதியையும் பார்க்கமுடிந்தது. 
அன்று முழுவதுமே மழை வரும் என்ற வானிலை அறிவிப்பும் ஏற்கனவே வந்திருந்தது.  வண்ணங்கள் குழைத்த வானவில் வந்து கட்டியம் கூற ஆலங்கட்டி மழை வந்து தாலாட்டிப் போனது. :)
முன்பே ஒருமுறை இந்த Hail Stones வந்திருந்தாலும் இவ்வளவு அதிகமாக விழவில்லை, விழுந்தவையும் சில நிமிடங்களில் கரைந்தே போயின. ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட பனிப் பொழிவு போல ஆங்காங்கே  பனிக்கட்டிகள் படர்ந்துகிடந்தன. 
 அன்று மாலை வரையிலும் கூடக் கரையாமல் அப்படியே ஜவ்வரிசிகளைப் போல கொட்டிக் கிடந்த ஹெய்ல் ஸ்டோன்ஸ்...
அடுத்தநாள் காலையில் தொட்டிச் செடிகளைப் பார்க்கிறேன், ஆலங்கட்டிகள் கரைந்து போயிருந்தாலும் அவற்றின் தடம் இந்தச் செடியில் சற்று அழுத்தமாகவே படிந்திருந்தது.
  ~~~
எனக்குப் பிடித்த மஞ்சப் பூ! :) 
பூக்களைப் படமெடுக்க எனக்குச் சொல்லவே வேண்டாம், அத்தனையையும் இங்கே பதிவிட்டு உங்களைப் படுத்தியெடுக்காமல், ரெண்டே ரெண்டு படங்கள்! :)
~~~
கண்ணுக்கு உணவு வழங்கியாயிற்று, அடுத்தபடியாக வயிற்றும் சிறிது ஈந்துவிடுவோம். :)  
இது வடஇந்திய உணவு. "பனீர் மக்கன்வாலா & ரொட்டி"
இது தென்னிந்திய உணவு."செட்டிநாட்டு பக்கோடா குழம்பு, சோறு, உருளைக் கிழங்கு கறி"
இரண்டிற்கும் சமையல் குறிப்புகள் அடுத்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள். நன்றி! :)

Wednesday, January 16, 2013

வடா-பாவ்

 
வடா-பாவ் என்பது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மிகப் பிரபலமான உணவுவகை. மும்பையில் சாலையோரக் கடைகளில் கிடைக்கும் உணவுகளில் மிக முக்கிய உணவு இது. கடந்த கிறிஸ்துமஸ் அன்று எங்க வீட்டுப்பக்கம் இருக்கும் மராத்தி தோழி வீட்டில் வடா-பாவ் செய்து எல்லாருமாக ருசித்தோம். மாலை வாக் போய்விட்டு திரும்புகையில் சடாரென்று வடா-பாவ் ஐடியா உதயமானது. அப்பொழுதே இருட்டவும் ஆரம்பித்தாச்சு, அன்று கிறிஸ்துமஸ் என்பதால் எல்லாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சட்டென்று கடைக்குப் போய் பாவ் வாங்க முடியலை, முன்பே யோசிக்காததால் வீட்டிலேயே பாவ் செய்யவும் வாய்ப்பில்லை. அதனால் வீட்டில் இருந்த வீட் ப்ரெட்(ஹிஹி, wheat breadங்க ;))) உபயோகித்து வடா-பாவ் செய்தோம்.

இதிலே ஸ்வீட் சட்னி-க்ரீன் சட்னி எல்லாம் முன்பே செய்து வைத்துக் கொள்ளலாம். அவற்றின் ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்கவும். நாரியல் (= தேங்காய்) சட்னி எப்படி செய்வது என்பது மட்டும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.

தேவையான பொருட்கள் - நாரியல் சட்னி (தேங்காய் சட்னி) 
கொப்பரைத் தேங்காய்த் துருவல்(Dry coconut flakes) - 1 கப்
வரமிளகாய்- 5
பூண்டு - 4 பல்
உப்பு

செய்முறை 
எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீரில்லாம் அரைத்து எடுத்துவைக்கவும்.

தேவையான பொருட்கள் - வடா
உருளைக் கிழங்கு -5
இஞ்சி பூண்டு துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்- 2 
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன்
உப்பு

மேல்மாவுக்கு 
கடலை மாவு -1 கப்
ஓமம்- 1/2டீஸ்பூன்
கொத்துமல்லித் தூள் - 1/2டீஸ்பூன்
காய்ச்சிய எண்ணெய்- 1டேபிள்ஸ்பூன்
உப்பு
தண்ணீர்

வடாவைப் பொரிக்க எண்ணெய்

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.

கொஞ்சம் எண்ணெய் காயவைத்து, மஞ்சள்தூள்-மிளகாய்த்தூள்- இடித்த பச்சைமிளகாய் சேர்த்து பொரியவிடவும். அதனை மசித்த கிழங்குடன் சேர்க்கவும்.
துருவிய இஞ்சி-பூண்டு, தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சிறிய வடைகளாகத் தட்டி வைக்கவும்.

கடலைமாவை பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். ஓமத்தை பொடித்துக்கொள்ளவும். ஓமப் பொடி, தனியாத்தூள், உப்பு இவற்றை கடலைமாவுடன் சேர்க்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயையும் சூடாக்கி மாவுடன் சேர்க்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கடலைமாவைக் கரைத்துக்கொள்ளவும். 
பொரிக்கத் தேவையான எண்ணெய் காயவைக்கவும். 
ஏற்கனவே செய்து வைத்த உருளைக் கிழங்கு வடைகளை மாவில் தோய்த்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

(பொதுவாக பாவ்(பன்) தான் உபயோகிப்பார்கள். இங்கே ப்ரெட் உபயோகித்திருக்கிறோம்.) ஸ்வீட் சட்னி-க்ரீன் சட்னி-நாரியல் சட்னி மூன்றும் தயாராக வைத்துக்கொள்ளவும். 
பாவ் பன்னின் ஒரு புறம் க்ரீன் சட்னி தடவவும். க்ரீன் சட்னி மீது கொஞ்சம் தேங்காய் சட்னியைப் பரப்பி, ஒரு வடா-வை வைக்கவும். இன்னொரு பாவ் பன்-னில் ஸ்வீட் சட்னியைத் தடவி வடா-வின் மீது வைத்து லேசாக அழுத்திவிடவும். 

இதற்கு பக்க உணவாக,(அதாங்க, சைட்டிஷ்!;)) சில பச்சைமிளகாய்களை லேசாகப் பிளந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிளகாய் சூடாக இருக்கும்போதே அதன் மீது உப்பு தூவிவிடவும். 

அவ்வளவுதாங்க, வடா பாவ் ரெடி! இதனுடன் தேவைப்பட்டால் ஸ்வீட்-க்ரீன்-நாரியல் சட்னிகளை பக்கத்தில் வைத்து தொட்டும் சாப்பிடலாம். 

ப்ரெட்-வடா-சட்னிகள் இவையெல்லாம் கலந்து ஒரு சூப்பர் சுவை, கூடவே துணைக்கு ரெடிமேட் கார்லிக் ப்ரெட், காரசாரமான  பச்சைமிளகாய ஒரு கடி...கண்ணில மூக்கில எல்லாம் தண்ணி வந்தாலும் சும்மா ஜூஊஊப்பர் சுவை! ;) :))))

பி.கு. படங்கள் என் கேமராவில் எடுக்கலை, அதனால் கொஞ்சம் சுமாராகத்தான் வந்திருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. "மீண்டும் நீ வீட்டில் செய்து படமெடுத்துக்கோ" என்று ஆன்டி சொன்னாங்க. ஆனா பாருங்க, இவ்ளோ வேலை எல்லாம் நான் நானா செய்வேனா என்று சந்தேகமா இருந்ததால், இருப்பதால் அதே படங்களை அப்லோட் செய்துவிட்டேன். ;))))

LinkWithin

Related Posts with Thumbnails